18.12.2025

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் 19 திரைப்படங்களுக்குத் தடை:
கலைத்துறை மீதான பாசிச ஒடுக்குமுறை

கண்டன அறிக்கை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 187 திரைப்படங்கள் திரையிடப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் 19 திரைப்படங்களைத் திரையிட அனுமதி மறுத்துள்ளது. இதை மக்கள் கலை இலக்கியக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

திரையிட அனுமதி மறுக்கப்பட்ட 19 திரைப்படங்களும் கேரளாவின் சல்சித்ரா அகாடமியின் ஒருங்கிணைப்பில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என அதன் தலைவர் ரசூல் பூக்குட்டி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

இந்தியாவில் வழக்கமாக நடக்கும் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகம் முழுவதும் உள்ள முக்கியமான திரைப்படங்களைத் தேர்வு செய்து வெளியிடும் ஒரு நிகழ்ச்சி. சமூக அக்கறை கொண்ட அநீதிக்கு எதிரான திரைப்படங்கள், இத்துறையில் தங்களை வளர்த்துக் கொள்ள நினைக்கும் இளைஞர்கள் கற்றுக் கொள்வதற்கான திரைப்படங்கள் என பல்வேறு கலைப் படைப்புகளையும் கொண்டு நிகழ்ச்சி நடக்கும்.

187 திரைப்படங்கள் தேர்வாகி இருந்த நிலையில் எவ்வித அறிவிப்போ விளக்கமோ இல்லாமல் டிசம்பர் 15 அன்று 19 திரைப்படங்களை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தகவல் துறை அமைச்சக அதிகாரிகள் ஏன் அனுமதி மறுப்பு என்பது பற்றி எந்த காரணமும் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் வலுவாக எழுந்துள்ளது.

திரையிடாமல் நிறுத்தப்பட்ட 19 திரைப்படங்களில் பாலஸ்தீனம் தொடர்பான நான்கு திரைப்படங்கள், ரசிய புரட்சி பற்றிய படமான போர்க்கப்பல் பொதம்கின், ஸ்பானிஸ் படமான பீப் ஆகியன மிகவும் முக்கியமானவை.

பீப் என்ற திரைப்படம் அந்த பெயருக்காகவே நிறுத்தப்பட்டுள்ளது. பின்பு வலுவான கண்டனங்கள் எழுந்த பிறகு பீப் உட்பட நான்கு திரைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 1925களில் வெளியான போர்க்கப்பல் பொதம்கின் இன்று வரை திரைத்துறை மாணவர்களுக்குப் பல புதிய விஷயங்களை கற்றுக் கொடுப்பதாக இருக்கும் திரைப்படம்; நூறாண்டுகளாகக் கொண்டாடப்படும் திரைப்படம். அதன் கலைநயத்துக்கும் நேர்த்திக்கும் இன்று வரை முதலாளித்துவாதிகளே கொண்டாடக் கூடிய திரைப்படமாக அது உள்ளது. ரசிய புரட்சி பற்றிய திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காகத் திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் தொடர்பான படங்கள், ரசிய புரட்சி தொடர்பான படங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது என்பது ஒன்றிய மோடி அரசின் பாசிச நடவடிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

கல்வி, கலாச்சாரம் தொடங்கி அனைத்துத் துறைகளையும் காவி மயமாக்கி வருவதன் தொடர்ச்சியாகவே தகவல் தொழில்நுட்பத் துறையும் காவிமயமாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய மோடி அரசு தனது பாசிச நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக வெளி முழுவதையும் ஒழித்துக் கட்டும் வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தனது பாசிச சித்தாந்தமான பார்ப்பனிய அடிமைத்தன பண்பாட்டை இந்தியா முழுவதும் நிறுவத் துடித்துக் கொண்டிருக்கிறது.

இதை முறியடிக்க ஜனநாயகத்தை நேசிக்கக் கூடிய கலைத்துறையினர், கவிஞர்கள், திரைத்துறையினர் என அனைவரும் வலுவான கண்டன குரல்களை எழுப்புவதுடன், பாசிசத்தை எதிர்த்து ஜனநாயகப் பூர்வமான பண்பாட்டை உயர்த்தி பிடித்து அதற்கான நிறுவனங்களை உருவாக்குவதற்கான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்கப் போராட வேண்டியுள்ளது.


இவண்,
தோழர்.ப.ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
9791653200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க