திருவள்ளூர்: பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி – தி.மு.க அரசே குற்றவாளி!

பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா என்பது முறையாகச் சோதிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முன்பே ஆய்வு செய்து இவற்றை புனரமைத்திருந்தால், மாணவனின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.

0

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே உள்ள கொண்டாபுரத்தை சேர்ந்த சரத்குமாரின் மகன் மோகித் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருவதால் டிசம்பர் 16 அன்று தேர்வு எழுதிவிட்டு கைப்பிடிச் சுவர் அருகே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளான்.

அப்போது விரிசலடைந்திருந்த சுவர் தீடிரென்று மோகித் மீது விழுந்துள்ளது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மாணவன் உயிரிழந்த செய்தியைக் கேட்டு பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் மாணவனின் உடலைக் கண்டு கதறி அழுகின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் மனதை உலுக்கியுள்ளது.

தங்களின் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு “பக்கவாட்டு சுவர் விரிசல் ஏற்பட்டிருந்ததை பள்ளி தலைமை ஆசிரியர் ஏன் கவனிக்கவில்லை?” என்றும் “அந்த நடைமேடையில் மாணவர்கள் உணவருந்த அனுமதிக்கப்பட்டது ஏன்?”என்றும் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருத்தணி போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 17 அன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் போராட்டத்திற்குப் பணிந்த அரசு மோகித்தின் அப்பாவிடம் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை வழங்கியது. அதன் பின்னர் உறவினர்கள் மோகித்தின் உடலை வாங்கிக் கொண்டுள்ளனர்.


படிக்க: போராடிய ஒப்பந்த செவிலியர்களைக் கைது செய்த தி.மு.க அரசு! வேண்டும் ஜனநாயகம்!


பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா ஆகியோர் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளனர் என்று கூறி அவர்கள் மீது திருத்தணி போலீசு வழக்குப் பதிவு செய்துள்ளது. பள்ளி நிர்வாகத்தையும் அதிகாரிகளையும் மட்டும் குற்றவாளிகளாக்கி விட்டு, இந்த உயிரிழப்பில் தனது பங்கை தி.மு.க அரசு மறைத்துக்கொள்ள முயல்கிறது.

பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா என்பது முறையாகச் சோதிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முன்பே ஆய்வு செய்து இவற்றை புனரமைத்திருந்தால், மாணவனின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். எனவே, பள்ளி கட்டடங்கள் முறையாகப் புனரமைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனை செய்யத் தவறிய தி.மு.க அரசே குற்றவாளி.

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள அரசுப் பள்ளி கட்டடங்களைப் போர்க்கால அடிப்படையில் தி.மு.க அரசு புனரமைக்க வேண்டும் என்பதை ஆசிரியர் சங்கங்களும், மாணவர் அமைப்புகளும், மக்களும் வலியுறுத்த வேண்டும். இதன் மூலமே, இது போன்ற பலிகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க