அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
சாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம், ஆணாதிக்கம், பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிரான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் எமது தோழமை அமைப்புகளின் போராட்டங்கள் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் அறிந்தவையாகும்.
பார்ப்பனிய ஆதிக்கத்திற்கும், சாதி ஆதிக்கத்திற்கும் எதிராக தமிழ்நாட்டின் போராட்டத்திற்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது. தமிழ் மொழியும் சாதி, மதங்களைக் கடந்த மொழியாகும். கீழடியில் கிடைக்கும் அகழாய்வுகள் தமிழ்நாட்டில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என்பதைப் பறைசாற்றுகின்றன. அந்த தொன்மையிலும் கடவுள், மதம் தொடர்பான கோட்பாடுகள் இல்லை. சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர்கள் மிகுந்திருப்பதானது, ஆண் – பெண் சமத்துவத்தைத் தமிழ்நாடு அதன் தொன்மை காலத்திலிருந்தே போற்றி வந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறாக, தமிழ் மொழியும் தமிழ்நாட்டு மக்களும் தொடக்கக் காலந்தொட்டே, பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்டிருந்தனர். தொல்காப்பியர், வள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் என காலங்காலமாக தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு, ஜனநாயக, சமத்துவ சிந்தனை மரபானது உயர்வானதாகும்.
இந்த வரிசையில், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளுக்கும் தனித்துவமான இடமுண்டு.
ஜனநாயகமான ஒரு சமூக மாற்றத்திற்கு சாதி ஒழிப்பு மிகவும் அவசியமானது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களுக்கு முக்கியமான பங்களிப்பு உள்ளது. அதைச் சரியாக உணர்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகளும் திராவிட இயக்கத்தினரும் தான்.
சாதி மறுப்பு திருமணங்களை 1920-களிலேயே பெரியார் தொடங்கி நடத்தி வந்துள்ளார். அதே வேளையில், கம்யூனிஸ்டுகளுக்கும் அதில் முக்கியமான பங்களிப்பு உள்ளது. தங்களுடைய தோழர்கள் சாதி மதங்களைக் கடந்து மணங்கள் புரிவதை ஒரு விதிமுறையாகவும் ஒரு வழிமுறையாகவும் கம்யூனிச இயக்கம் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளது.
சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!
வர்க்க ஆதிக்கம், சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியவற்றிற்கெதிரான போராட்டம் இணைந்து இருந்ததுதான், தமிழ்நாட்டின் கம்யூனிச இயக்கத்தின் தொடக்கக் காலப் போராட்ட மரபாகும். இந்தப் போராட்ட மரபின் முன்னோடியாக, கீழத்தஞ்சை கூலி ஏழை விவசாயிகளைத் தட்டியெழுப்பிய தோழர் சீனிவாசராவ் விளங்குகிறார். அன்றைய கம்யூனிச இயக்கத்தின், செங்கொடி இயக்கத்தின் தலைமையில், கீழத்தஞ்சையில் எண்ணற்ற தோழர்கள் பண்ணையாதிக்கம், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் புகுந்தனர்.
வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா, சாம்பவான் ஓடை சிவராமன், ஆம்பலாப்பட்டு தியாகிகள், பி.எஸ்.தனுஷ்கோடி, மணலி கந்தசாமி… என அந்தப் போராட்டப் பாரம்பரியத்தின் ஈகியர் பட்டியல் மிக நீண்டதாகும்.
“சாட்டையால் அடிக்காதே! சாணிப்பாலை நிறுத்து!” என்று அன்று செங்கொடி இயக்கம் முழங்கியது. அத்துடன், ”அடித்தால் திருப்பி அடிப்போம்!”, “வாடி போடி என்றால் வாடா போடா என்போம்” போன்றவை அன்றைய முழக்கங்களாகும்.
இந்த கூர்மையான முழக்கங்கள், கூலி ஏழை விவசாயிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் ஒன்று திரட்டின.
1960-களின் இறுதியில், திரிபுவாதத்தைத் திரைகிழித்து எழுந்த நக்சல்பாரி இயக்கமானது, அதன் இயல்பிலேயே பண்ணைக் கொடுமைகளுக்கு எதிரானதாக அமைந்தது. “உழுபவருக்கே நிலம் உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தின் மூலமாக, தலித் மக்களின் உண்மையான விடுதலைக்காகப் போராடியது. “சாதிக் கொடுமை, பண்ணைக் கொடுமை தலைவிரித்து ஆடிடும் தர்மபுரி, வடார்காடு வயல்வெளியும் கிராமமும்” எனும் பாடல் வரிகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தமிழ்நாட்டில் நடத்திய போராட்டங்களை விளக்குகிறது. அப்பு, பாலன், சீராளன் என தொடக்கக் கால நக்சல்பாரி இயக்கம் பல ஈகியர்களை உருவாக்கியது.
அதுவரை, வர்க்கப் போராட்டமும், சாதி, மத, இன, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தன.
1980-களின் தொடக்கத்தில், பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாட்டிற்கு எதிராகவும் நக்சல்பாரி அரசியலை உயர்த்திப் பிடித்து, கலை, இலக்கியம், பண்பாட்டுத் தளத்தில் செயல்படத் தொடங்கியது மக்கள் கலை இலக்கியக் கழகம்.
அது தொடங்கிய நாள் முதல், பண்பாட்டுத் தளத்தில், பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராகவும் போலி ஜனநாயகத்தின் முடை நாற்றத்தைத் திரைகிழித்தும் பாடிய புரட்சிகரப் பாடல்கள், நடத்திய போராட்டங்கள், இப்போராட்ட மரபின் புதிய உச்சத்தைத் தொட்டது.
1980-களின் பிற்பகுதியிலேயே, ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல் அரசியல் அரங்கில் மேலெழுந்து வரும் போதே, அதனைச் சரியாக அடையாளம் கண்டு அரசியல் இயக்கங்களை எடுக்கத் தொடங்கியது ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும். அன்றைக்கு, சங்கப் பரிவாரக் கும்பலால், பகல்பூரில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டு காலிஃபிளவர் தோட்டங்களில் புதைக்கப்பட்ட கொடுமைகளை தமிழ்நாட்டில் வெளிக்கொணர்ந்த ஒரே அமைப்பு ம.க.இ.க. தான்.
பாபர் மசூதி இடிப்புக்காக, பார்ப்பன இந்து மதவெறியர்கள் நாடு முழுவதும் ரதயாத்திரைகளை நடத்தத் தொடங்கிய போது, போரிசையாக ம.க.இ.க.-வின் புரட்சிகரப் பாடல்கள் ஒலித்தன.
1992, டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. “நாமெல்லாம் இந்துக்கள், இசுலாமியர்கள் வந்தேறிகள், ஆக்கிரமிப்பாளர்கள்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் பிரச்சாரம் செய்தபோது, “ஆயிரங்காலம், அடிமையென்றாயே, அரிஜனன்னு பேரு வைக்க யாருடா நாயே” என்ற புரட்சிகரப் பாடல் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது. “திருவரங்கம் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்” முன்னெடுக்கப்பட்டது. “இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின்னே செல்லாதே!” போன்ற கூரிய முழக்கங்கள், தலித்திய, திராவிட, தமிழ்த் தேசிய ஜனநாயக சக்திகளுக்கு பெரும் நம்பிக்கையும் உற்சாகமூட்டும் ஊட்டுவதாக அமைந்தது.
1997-இல் தென்மாவட்டங்களில் சாதிவெறியாட்டங்கள் அதிகரித்த போது, “வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவளவுலே, வெந்துமடிந்தோமடா வெண்மணியிலே” என்ற புரட்சிகரப் பாடல், தலித் மக்களின் துன்பங்களை எடுத்துக்காட்டியது.
அன்று, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.) சார்பாக, “சாதித் தீண்டாமை ஒழிப்பு இயக்கம்” முன்னெடுக்கப்பட்டது. இளையராஜா பிறந்த பண்ணைய புரத்தில், எமது அமைப்புகளின் சார்பாக, இரட்டைக் குவளை அடித்து நொறுக்கப்பட்டது.
இதன் அங்கமாக, சாதி மறுப்புப் புரட்சிகர மணவிழா விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. இதில் நான்கு ஜோடி தோழர்கள் புரட்சிகர மணமுடித்தனர். இது தமிழ்நாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் நடத்தப்பட்ட “தமிழ் மக்கள் இசைவிழா”வின் குறியீடாக, பறையிசைக்கும் இளைஞனின் படம் அமைக்கப்பட்டு, உழைக்கும் தமிழ் மக்களின் – தலித் மக்களின் கலை, இலக்கியங்கள் அரங்கேற்றப்பட்டன.
பாசிச ஜெயலலிதாவின் ஆட்சியில் இசுலாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு எதிராகவும் பின்னர், இந்துமதவெறியர்கள் கலவரங்களை நடத்தியதற்கு எதிராகவும் “காவி இருள்” பாடல் தொகுப்பானது பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழியை பாடல்கள் மூலமாகப் பரப்பியது.
தில்லை நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடுவதற்கான போராட்டம், நந்தன் நுழைந்த வடக்குவாசலைத் தகர்ப்பதற்கான போராட்டம், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கான போராட்டம் என ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டங்கள் நீண்ட நெடியவை.
பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக கலை, இலக்கியங்கள் மூலமாகவும் களத்திலும் எமது தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் தனித்துவமானவை.
பெரியாருக்குப் பிறகு, பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்ட மரபை உயிர்ப்பித்தது மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் தான் என்பதை உண்மையான திராவிட இயக்க, தலித்திய இயக்க, கம்யூனிச இயக்கத் தோழர்கள் இன்றளவும் நினைவுகூர்வதை நாம் பார்க்க முடியும்.
***
ஒன்றியத்தில் பாசிச சக்திகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், 2019-இல் எமது அமைப்பின் தலைமையிலிருந்த ஆளும் வர்க்கக் கைக்கூலிகளாக மாறிய சில சக்திகள் அமைப்பைப் பின்னோக்கி இழுக்க முயன்று தோல்வியுற்றன. இதனால், அவை எமது அமைப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டன. அந்தக் கழிவுகள் நீக்கப்பட்ட பின்னர், பார்ப்பனியத்திற்கும் சாதி ஆதிக்கத்திற்கும் எதிரான எமது போராட்டங்கள் அரசியல் கூர்மையுடன் தொடர்ந்து வருகின்றன.
“ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்” என்ற மைய முழக்கத்தின் கீழ், எமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து, தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். 2023-இல், மதுரையில், “சுற்றி வளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு துவளாது போராடு” என்ற முழக்கத்தின் கீழ் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்தினோம்.
மதுரை, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இந்து முன்னணி சங்கிக் கும்பலுக்கு எதிராக உழைக்கும் மக்களைத் திரட்டி வருகிறோம். “முருகனை மீட்போம், கருப்பனைக் காப்போம்”, “இந்து முன்னணி – பா.ஜ.க. பாசிசக் கும்பலை விரட்டியடிப்போம்” என்ற முழக்கத்தின் கீழான இயக்கமும் அவற்றின் துண்டுப் பிரசுரங்களும் எமது அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்களும் உழைக்கும் மக்களைத் தட்டியெழுப்பி வருகின்றன.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக மட்டும் அடையாளப்படுத்தப்பட்ட பகத்சிங் பிறந்த நாளில், 2023-இல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு. இயக்கத்தை முன்னெடுத்தது.
அதே ஆண்டில், நாங்குநேரி சம்பவத்திற்கு முன்னதாகவே, தென்மாவட்டங்களில் சாதி வெறி தாக்குதல்கள் அதிகரித்து வந்ததை ஒட்டி, அத்தாக்குதல்களை எதிர்த்து, பு.மா.இ.மு. மூலமாக, “லவ் ஆல் – நோ கேஸ்ட்” – “Love All No Caste” என்ற முழக்கத்தின் கீழ் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
எமது தோழமை அமைப்பான சிவப்பு அலை கலைக்குழுவின் மூலமாக, 2023 – இல், “சனாதனம் ஒழிப்போம்!”, “பேன் பேன் ஆர்.எஸ்.எஸ். – பேன் பேன் பி.ஜே.பி.” (ஆர்.எஸ்.எஸ்.ஐத் தடை செய், பா.ஜ.கவைத் தடை செய்), “இவங்க எல்லாம் சங்கிங்க” போன்ற புரட்சிகரப் பாடல்கள் அவ்வப்போதைய சூழலுக்கேற்ப கொண்டுவரப்பட்டன. சமூக ஊடகங்களின் மூலமாக, பல லட்சக்கணக்கான மக்களிடம் இந்தப் பாடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
எமது தோழமை இதழான புதிய ஜனநாயகம், “தலித் மக்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற சிறுவெளியீட்டை 2023 நவம்பரில் கொண்டுவந்தது. இது, பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சாதிவெறியாட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், “லவ் ஆல் – நோ கேஸ்ட்” “Love All No Caste” என்ற இயக்கம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. “அனைவரையும் நேசிப்போம், சாதியை மறுப்போம், ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்! பாலின சமத்துவத்தைப் படைப்போம்” என்கிற முழக்கத்தின் கீழ், 2025, காதலர் தினம், மகளிர் தினம், பகத்சிங்-இராஜகுரு-சுகதேவ் தூக்கிலிடப்பட்ட தினம், அம்பேத்கர் நினைவு தினம் ஆகிய நாட்களைத் தழுவி, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, மூன்று மாதங்கள் இந்த இயக்கம் மாணவர் மத்தியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கூர்மையான முழக்கங்களைக் கொண்ட துண்டுப்பிரசுரம் பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. கல்லூரிகளில் பரப்புரைகள், பேருந்துப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள் என தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஊடாக இவ்வியக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இயக்கத்தின் பிரசுரத்தை வாசித்த பலரும், இக்கால மாணவர்கள், இளைஞர்களின் தன்மையையும் உணர்வையும் சரியாகத் தொட்டு மேற்கொள்ளப்பட்ட இயக்கம் என வாழ்த்தி வரவேற்றனர்.
இதற்குப் பின்னர், இந்த ஆண்டு ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் எமது அமைப்பின் சார்பாக, “சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்” என்ற தலைப்பில் இயக்கம் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பிரசுரங்கள், அரங்கக் கூட்டம் என இந்த இயக்கம் வீச்சாக மேற்கொள்ளப்பட்டது. அதுவரை தேவேந்திர குல வேளாளர் எனும் பள்ளர் சாதி மக்களின் தலைவராக முன்னிறுத்தப்படும் இமானுவேல் சேகரன், எமது அமைப்பின் சார்பாக, சாதி ஒழிப்புப் போராளியாக முன்னிறுத்தப்பட்டார்.
எமது இந்த பெரும் முயற்சியானது, தென்மாவட்ட மக்களிடமும் ஜனநாயக சக்திகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இத்துடன், தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக எமது அமைப்பும் தோழமை அமைப்புகளுடன் இணைந்தும், ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் முழுமையாகப் பதிவு செய்து, மக்களுக்கு எடுத்துக்காட்டிவரும் முற்போக்குத் தளமாக, எமது தோழமை வலைத்தளமான வினவு விளங்குகிறது. இத்துடன், இந்தியா முழுவதும் நடந்தேறும், தலித் மக்கள், இசுலாமிய மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களையும் அவற்றின் தன்மைக்குட்பட்டு தொடர்ந்து வினவு வலைத்தளம் பதிவு செய்து வருகிறது. இத்துடன், சாதி ஒழிப்புப் போராளிகளின் வரலாற்றையும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு, சமத்துவ உணர்வூட்டும் பெரியார், அம்பேத்கரின் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது.
***
இவற்றின் தொடர்ச்சியாகத்தான், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலாக, “சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக, தோழர்கள் ராதிகா – ரவியின் மணவிழாவை முன்னிறுத்தி இயக்கம் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த மணவிழா இயக்கத்தின் அழைப்பிதழே இந்த இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துக்காட்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் எமது அமைப்புகளை அறிந்த, அறியாத பலரும் இந்த மணவிழாவை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர். இந்த மணவிழாவில் கலந்து கொள்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
***
சாதி சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய், நம்மைப் பீடித்திருக்கும் நோய்.
இன்றைய காலத்தில், சாதி ஒழிப்புப் போராட்டமும் வர்க்க விடுதலைப் போராட்டமும் வேறுவேறல்ல.
சாதி ஒழிப்புப் போராட்டமும் பெண் விடுதலைப் போராட்டமும் வேறுவேறல்ல, வர்க்க, சாதி, மத, இன, மொழி, பாலின அடக்குமுறைகளை எதிர்க்காமல், ஜனநாயகமும் சமத்துவ சமநீதியும் சாத்தியமில்லை.
சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, இன விடுதலை, வர்க்கப் போராட்டங்கள் என ஜனநாயகத்திற்கான அனைத்து போராட்டங்களும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்புப் போராட்டமாக முன்னேற வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.
சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஓர் அங்கம்தான், சாதி மறுப்பு மணங்களாகும். இந்த சாதி மறுப்பு மணங்களை ஊக்குவிப்பது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
சாதிவெறியர்கள், பார்ப்பன இந்து மதவெறியர்கள், இனவெறியர்கள் அனைவரும் பாசிச சக்திகளில் பாதந்தாங்கிகளாக செயல்பட்டு வருகின்றனர். அதிகார பலத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி, உழைக்கும் மக்களுக்கு எதிராகப் போரைத் தொடுத்து வருகின்றனர். கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட்டும், பண்பாடு ரீதியாகவும் உழைக்கும் மக்களைப் பிரித்து ஒடுக்குகின்றனர்.
இக்கொடிய காலத்தில், பாசிசத்திற்கும் பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கும் எதிரான போரை, பண்பாட்டுத் தளத்திலும் தொடுப்பது மிக மிக இன்றியமையாத கடமையாகும்.
பண்பாடு ரீதியாக முன்னேறாத எந்தப் படையும் எதிரிக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்ட முடியாது.
ஆகையால், ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்!
இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா – ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.
அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்!
முழங்குவோம், சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமான நமது போர் முழக்கத்தை!
தொடங்குவோம், சாதிவெறி, மதவெறிக்கு எதிரான நமது பண்பாட்டுப் போரை!
![]()
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
99623 66321.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











