தொண்ணூருகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நடத்தப்பட்ட சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக ம.க.இ.க-பு.மா.இ.மு-வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் சாதி-தீண்டாமை மறுப்பு மணவிழா நவம்பர் 22, 1997 அன்று நடத்தப்பட்டது.
அன்றைய பார்ப்பன பாசிசம் இன்று காவி பயங்கரவாதமாக பரிணமித்துள்ளது. இந்த சூழ்நிலையில் சாதி-தீண்டாமை மறுப்பு திருமணங்களை ஓர் இயக்கமாக தமிழகத்தில் கட்டியமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் எமது புரட்சிகர அமைப்புகள் நடத்திய சமுதாயப் புரட்சிப் பிரகடனமாக அரங்கேற்றப்பட்ட “சாதி-தீண்டாமை மறுப்பு மணவிழா”வின் 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்.
அந்த சமுதாயப் புரட்சிப் பிரகடனத்தை பற்றி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த எமது புதிய ஜனநாயகம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையை தற்போது வாசகர்களுக்கு வழங்குகிறோம்!
– வினவு
***
சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!
அகத்திருமண முறை – அதாவது, ஒரே சாதிக்குள் மணமுடிப்பது சாதிய இருத்தலுக்கான அடிப்படைகளுள் ஒன்று. சாதி ஒழிப்புப் பணியில் சாதி மறுப்புத் திருமணங்களின் இன்றியமையாமையை பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் வலியுறுத்தியுள்ளனர். இதை மனதிற்கொண்டு, ம.க.இ.க – பு.மா.இ.மு – வி.வி.மு இம்மூன்று அமைப்புகளும் நடத்தி வரும் சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, “சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழா” நடத்தப் பெற்றது.
கடந்த நவம்பர் 22-ஆம் தேதி விழுப்புரம் நகரமே வியந்து நிற்கும் வண்ணம் சாதி -தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாவில் ஆறு திருமணங்கள் நடந்து முடிந்தன. இதில் மூன்று திருமணங்கள் மறுமணங்களாகவும் அமைந்தது இன்னும் சிறப்பு.
திருமண நிகழ்ச்சி காலையில் கருத்தரங்காகவும், மாலையில் மணமக்கள் ஊர்வலம், மணவிழா வாழ்த்துரை, கலைநிகழ்ச்சி என இரு பிரிவாக நடந்தது. கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய ம.க.இ.க தோழர் கதிரவன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, திருமணங்களில் பார்ப்பன மயம் என்பது பற்றிப் பேசினார். மதுரை வீரன் கதை, முத்துப்பட்டன் கதை என நாட்டுப்புற இலக்கியங்களில் பதிவாகியுள்ள பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி- தீண்டாமை மறுப்புத் திருமணங்களை எடுத்துக் கூறினார். இன்றைக்கோ அனைத்துச் சாதியினரும் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவதை ஒரு கௌரவமாக கருதுவதைச் சாடினார்.
அடுத்து பேசிய ஈரோடு வழக்கறிஞர் தோழர் திருமலைராசன் இந்து திருமணச் சட்டமும் பிற மதங்களின் திருமணச் சட்டங்களும் எப்படி மனிதத் தன்மையற்றுள்ளன என்பதைத் திரைக்கிழித்தார்.
படிக்க : மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !
வரலாற்று ரீதியாக திருமணச் சட்டங்கள் மாறி வந்ததை விளக்கினார். 1968-இல் தி.மு.க ஆட்சியின் போதுதான் பார்ப்பனன் இல்லாமல் நடக்கும் பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப் பட்டதைக் குறிப்பிட்டார். அதற்கு முன்னர் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் இந்து சட்டப்படி செல்லாதவை. பிறக்கும் குழந்தைகள் கள்ளக் குழந்தைகள் என ஆதிக்க சாதிகளோடு அரசும் சேர்ந்து கொண்டு முத்திரை குத்தியதை எடுத்துக் கூறினார்.
“1968 சட்டத்திலும் பல ஓட்டைகள் உள்ளன. தற்போது இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். சாதி – தீண்டாமை மற்றும் மத மறுப்புத் திருமணங்களை இச்சட்டம் இன்னும் அங்கீகரிக்கவில்லை” எனத் தெளிவுபடுத்திய அவர், “சொத்துரிமை அடிப்படையிலேயே திருமணச் சட்டங்கள் நிலை கொண்டிருப்பதை”க் கோடிட்டுக் காட்டினார்.
சாதி மறுப்புத் திருமணமும் புரட்சிகர நடைமுறையும் என்ற தலைப்பில் பேசிய தோழர் மருதையன் ஆதிக்க சாதியினர் தென் மாவட்டங்களில் நடத்துகின்ற கலவரங்களைக் குறிப்பிட்டு இங்கும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் திருமணங்கள் மூலம் சாதி – தீண்டாமைக்கு எதிராக கலகம் செய்கிறோம் என்றார்.
பெரியார் தொடங்கிய சுயமரியாதைத் திருமணங்களை இந்த அளவு பிரச்சாரம் செய்து நடத்த வேண்டிய வெட்கக் கேடான நிலையில் நாமிருக்கிறோம் என்பது அவமானகரமானது. சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் பிற மாநிலங்கள் பலவற்றில் இல்லை. சட்ட அங்கீகாரமிருந்தும் இப்போக்கு ஏனிங்கு வளரவில்லை? ஏனிங்கு சாதிய மோதல்கள்? அனைத்தும் பார்ப்பனமயமானதுதான் காரணம். பெரியார் பண்பாடு பரவவில்லை. மாறாக, ஆடம்பரமும் பார்ப்பனியச் சடங்குகளும் பரவியுள்ளன என்றார்.
“கிராம அளவில் நிலவிய சாதிய உறவுகள் மாநில அளவிற்கு வளர்ந்து, உறுதிப்பட்டுள்ளன. சாதிச் சங்கங்கள் இவற்றுக்கு உரமிடுகின்றன. இங்கு நடக்கும் திருமணம் புரட்சிகரமானது. மேடையோடு முடிவதில்லை. இப்போதுதான் தொடங்குகிறது. வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக திகழும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும். குடும்பத்தினுள் சுயநலத்தை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். அமெரிக்க குடும்பங்கள் சிதைவதற்கு சுயநலன் மேலோங்கியதே காரணம்.”
“விஞ்ஞான வளர்ச்சியில் மூட நம்பிக்கை ஒழிகிறது. ஆனால் சாதியம் ஒழியாது. இது சுரண்டலுடனும் ஆதிக்கத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தே திட்டமிட்டு சாதி பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது நடக்கும் சாதி – தீண்டாமை மறுப்பு மணங்கள் எங்கோ ஒன்றிரண்டு என உள்ளன. இவை பல்கிப் பெருகும். அன்று சாதிக்குள் நடக்கும் திருமணங்கள் காட்டுமிராண்டித்தனம் என்றாகி, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். இது நிச்சயம் எனக் கூறி, தோழர் மருதையன் தனது உரையை முடித்தார்.
மாலையில் பெரியார் சிலையில் இருந்து மணமக்கள் ஊர்வலம் தொடங்கி, சென்னை நெடுஞ்சாலை வழியாக திருமண மண்டபத்தை அடைந்தது. ஊர்வலத்தில் சாதி அரக்கன் இருவரை செருப்பால் அடித்துச் செல்ல, அதன் பின் பறைமுழக்க கருவிகள் எழுச்சிமிகு இசையெழுப்ப மணமக்களும், அதன்பின் திரளான கூட்டமுமாக வந்த மண விழா ஊர்வலம் விழுப்புரம் நகரையே உலுக்கியது. சாதி – தீண்டாமை மறுப்பு முழக்கங்கள் மக்களின் செவிகளில் எதிரொலித்தன.
உத்தமபாளையம் வட்ட வி.வி.மு செயலர் தோழர் மோகன் மணவிழாவிற்கு தலைமை, ஏற்றுப் பேசினார். அதன் பின் திருமுதுகுன்றம், பு.மா.இ.மு தோழர் ஜெயகாந்த் சிங், ஆண்டிபட்டி வி.வி.மு செயலர் செல்வராசு, சங்கராபுரம் வி.வி.மு தோழர் கதிர்வேலன், விழுப்புரம் வழக்கறிஞர் தயாநிதி, தமிழக கலப்புமணத் தம்பதிகள் சங்க மாநிலத் தலைவர் திரு. ஆர். வைத்தியநாதன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தூய தமிழ் சொல்லாக்க அகர முதலிகள் துறை தலைவர் தோழர் ப. அருளி, சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் சத்யா, ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆர். வைத்தியநாதன், ‘சாதி – தீண்டாமை மறுப்பு மணம் புரிபவர்களை சாதியற்றவர்கள் என அரசு பதிவு செய்து அங்கீகரிக்க வேண்டும். இவர்களுக்கு சலுகைகள், ஒதுக்கீடுகள் வழங்கி சாதி ஒழிப்புக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும் எனப் பலத்த கரவொலிக்கிடையே வேண்டுகோள் விடுத்தார்.
படிக்க : தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
தோழர் ப. அருளி பேசும் போது, ‘பார்ப்பனர்கள் மக்களுக்குப் புரியாத தேவபாடையில் திருமண மந்திரங்களை உச்சரிக்கிறார்களே அதன் ஆபாச, வக்கிர, மோசடிகளைத் திரை கிழித்தார். இது தமிழனின் பண்பாடுமல்ல என்று விளக்கினார். இத்திருமணங்கள் கண்கொள்ளாக் காட்சி; இதைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; பெரியாரின் சீர்திருத்தத்தையும், பெருஞ்சித்தரனாரின் தமிழுணர்வையும் இங்கு பார்க்கிறேன்’ எனக் கூறி மணமக்களை வாழ்த்தினார்.
வாழ்த்துரைக்குப் பின் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மேடையில் அமரவைக்கப் பட்டனர். அவர்கள் முன்னிலையில் மணமக்கள் தோழர் மோகன் தலைமையில் மணவிழா உறுதிமொழி ஏற்று மாலை மாற்றிக் கொண்டனர். தாலி, சடங்கு, சீர் ஏதுமின்றி எளிய விழாவாக, கூடிநின்ற மக்களின் வாழ்த்தொலிகளிடையே மணவிழா இனிது முடிந்தது. மணமக்களுக்கு போராட்டக் குழு வாழ்த்து மடல் அச்சிட்டு வழங்கியது. மண்டபத்தில் தமிழகமெங்கும் வந்து கூடிய 3500-க்கும் மேற்பட்டோர் தமது வீட்டுத் திருமணம் என உற்சாகமாக மணவிழாவில் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி.
இதைத் தொடர்ந்து ம.க.இ.க மையக் கலைக்குழு வழங்கிய புரட்சிகர கலை நிகழ்ச்சி, மக்களின் புரட்சிகர உணர்வுகளைத் தட்டி எழுப்பியது.
முத்தாய்ப்பாக மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. ‘முற்போக்கு முகாம்’ என்போர் உட்பட பலரிடமும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது அழைப்பிதழின் இறுதியில் அச்சிடப்பட்ட இவ்வரிகள் தான்.
பார்ப்பனியக் கருத்தியல், சாதி – தீண்டாமைக்கெதிரான கலகம் சரியான முறையில் நடந்தேறியது.
1998-ஆம் ஆண்டு வெளிவந்த புதிய ஜனநாயகம் (தொகுதி-13; இதழ்1-4) இதழிலிருந்து…