சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு - தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன.

சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக,
சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

1997-ல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்கள் பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவ்வளவு விரிவாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. கர்ணன் திரைப்படம் கொடியங்குளம் கலவரம் பற்றிப் பேசியது. அது ஜெயா ஆட்சியின் முதல் கட்டத்தில் நடந்த கொடூரம். அந்த சாதியக் கோரத் தாண்டவத்தின் கொடூரங்கள் மறையும் முன் தி.மு.க. ஆட்சியில் விடுதலைப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதி தீரன் சுந்தரலிங்கனார் பெயரை பேருந்துக்குச் சூட்டியதை முன்வைத்து ஆதிக்க சாதி வெறியர்கள், குறிப்பாக தேவர் சாதி வெறியர்கள் மிகப் பெரும் கலவரங்களை நடத்தினார்கள். அதற்கு முன்னதாக மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது மட்டுமின்றி, பதவியிலும் அமர்ந்த முருகேசன் உட்பட தாழ்த்தப்பட்டவர்கள் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரச் செயலும் ஆதிக்க சாதி வெறியர்களால் அரங்கேற்றப்பட்டிருந்தது.

இந்த சாதி – தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 1997 செப்டம்பர் முதல் நவம்பர் முடிய மூன்று மாத கால இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. பொதுக் கிணற்றில் நீர் அள்ளும் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம், ஊர்த்தெருவில் செருப்பு அணிந்து நடக்கும் போராட்டம் என பல்வேறு வடிவங்களில் சாதி – தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சாதி –  தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்களும் நடத்தப்பட்டன.

ஏனெனில் சாதியின் இருப்பும், இறுக்கமும் அகமண முறையில் கட்டுண்டு கிடக்கிறது. சுய சாதிக்குள் மட்டுமே மண உறவுகள் என்ற மனுதர்மம் சமூகத்தில் நிலைநாட்டப்பட்டிருந்தது. அதை மீறியவர்கள் சண்டாளர்கள், பாவத்தில் எல்லாம் மிகக் கொடிய பாவம் செய்தவர்கள் என கொன்றொழிக்கப்பட்டார்கள். இன்றும்கூட கிராமங்களில் பெருசுகள் ’அடே சண்டாளப் பாவி’ என திட்டுவதை கேட்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு சாதியின் கொடூரமும் வேர்களும் மக்கள் மனங்களில் புரையோடிப் போயுள்ளன.

படிக்க : சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

சாதியை மறுத்து, காதல் மணம் புரிந்தவர்களை சண்டாளர்கள் என நரவேட்டையாடிய அதே கொடூரக் கொலைகளைத்தான் இன்று ‘கௌரவக் கொலைகள்’ என்ற பெயரில் ஆதிக்க சாதி வெறியர்கள் நாடெங்கும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன. 1997ல் நடந்த சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின்போது விழுப்புரத்தில் ஏழு ஜோடிகளுக்கு சாதி – தீண்டாமை மறுப்பு, புரட்சிகர மண விழா நடத்தி, மாட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டது.

பார்ப்பன பாசிசம் தனது கொடுங்கரத்தை விரித்து வரும் வேலையில் இந்த சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்களின் 25ம் ஆண்டை நினைவு கூர்வது பாசிசத்திற்கு எதிரான நமது போராட்ட உணர்வை கூர் தீட்டிக் கொள்ள உதவும் என்ற வகையில், ஒரு நினைவூட்டல் கட்டுரையை வாசகத் தோழர்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

000

இன்றைக்கு யார் சார் சாதி பார்க்கிறார்கள் என பொதுவில் பலரும் பேசுவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சற்றுக் கீறிப்’பார்த்தால் சாதியை எல்லாம் ஒழிக்க முடியாது சார் என அடித்துப் பேசுவார்கள். தற்போது ஆர்.எஸ்.எஸ் – சங்கி கும்பல் ஒன்றிய அரசாங்கத்தில் இருந்து தனது பாசிசப் பேயாட்சியை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் சாதிச் சங்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் சங்கிக் கும்பல் தனக்கான இடம் சாதிச்சங்கங்களில்தான் உள்ளது என சரியாகவே அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில் வன்னியர் சாதிக் கட்சியான பா.ம.க. இயல்பாகவே சங்கி கும்பலின் கூட்டாளியாக தொடர்ந்து கூடிக் குழாவி வருகிறது. அ.தி.மு.க. என்ற கழிசடைக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் கொடியங்குளம் கலவரம் உட்பட பல்வேறு சாதிக் கலவரங்கள் ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டது.

சாதி பார்க்காதவர்களால் இந்த சாதிக் கலவரங்களை அரங்கேற்ற முடியுமா? ஆக, ஒரு பேச்சுக்குக் கூட யாரு சார் சாதி பார்க்குறாங்க என சொல்ல முடியாத சூழல் பாசிச இருளாகப் பற்றிப் படர்ந்து வருகிறது. சீர்திருத்த திருமணச் சட்டம் நடைமுறையில் உள்ள தமிழகத்தில்தான், உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இச்சட்டத்தை கேள்விக்குளாக்கும் வகையிலான தீர்ப்பொன்று வந்துள்ளது; சாதி, சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடக்கும் திருமணங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்பதே அந்தத் தீர்ப்பு!

நீதிமன்றமே சட்டத்தை மீறுவதால்தானோ என்னவோ, சிதம்பரம் தீட்சிதர்கள் தமது சாதிக்குள் நடக்கின்ற குழந்தைத் திருமணத்தை ‘தொன்றுதொட்டு நடந்து வரும் சம்பிரதாயம்’ என அங்கீகரிக்கக் கோரி போராடத் தொடங்கியுள்ளனர். தெரிந்தே சட்டத்தை மீறிப் போராடுகின்ற இந்தத் துணிவு தீட்சிதர்களுக்கு எப்படி வந்தது? அல்லது மக்களுக்கான பொதுச் சட்டம் தமக்குப் பொருந்தாது என தீட்சிதர்கள் முடிவு செய்து விட்டார்களா? சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட அனுமதி மறுக்கும் தீட்சிதர்கள் தமது பிற்போக்குத்தனமான செயலின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்கள். போராடாமல் மக்களின் ஜனநாயக உரிமைகள் ஒருபோதும் கிடைப்பதில்லை. போராடிக் கிடைத்ததுதான் சுயமரியாதைத் திருமணச் சட்டம்.

பெரியார் அவர்களால் 95 ஆண்டுகளுக்கு முன்பே சீர்திருத்தத் திருமணம் என்ற பெயரில் தமிழகம் முழுதும் பார்ப்பன சடங்கு சம்பிரதாயங்களை மறுத்து, ஆடம்பரம், செலவுகள் இன்றி எளிமையான வாழ்க்கை ஒப்பந்தங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. 1968ல் தி.மு.க. ஆட்சியில் முதல்வர் அண்ணாத்துரை அவர்களால், இந்த திருமணங்களுக்கு சுயமரியாதைத் திருமணம் என்ற சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று நீதிமன்றம் இந்த சட்டத்தைக் கேள்விக்குளாக்கும் பிற்போக்கானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பார்ப்பன பாசிசம் அனைத்து அரங்குகளிலும் தனது ஆக்டோபஸ் கொடுங்கரங்களை விரித்து வருகின்ற இந்த தருணத்தில்தான் சாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு அங்கமாக நடந்த புரட்சிகர மணவிழாவை நினைவு கூர்வது முக்கியத்துவம் பெருகிறது.

000

1997 நவம்பர் 7ல் நடத்தத் திட்டமிட்ட புரட்சிகர மணவிழா பல்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு நவம்பர் 22ல் நடைபெற்றது. அமைப்புத் தோழர்களால் பல பகுதிகளிலும் புரட்சிகர மணவிழாக்கள் அவ்வப்போது நடந்துவிட்டதால் இந்த விழாவுக்கு மணமக்களைத் தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதமும் ஒரு காரணம். மொத்தம் ஏழு ஜோடி திருமணங்கள் நடைபெற்றன. அதில் இரண்டு பெண் தோழர்களுக்கு அது மறுமணம். பாதிக்கும் மேற்பட்ட மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை என்பதிலிருந்தே மணவிழா ஏற்பாட்டின் சிரமத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சாதி – தீண்டாமையை, பார்ப்பன பிற்போக்கு சடங்குகளை மறுத்து புரட்சிகர மணவிழா, அதிலும் மறுமணம் என்பது இன்னும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகவே தமிழகத்திலும் நிலவுகின்ற வினோதத்தை எப்படிப் புரிந்து கொள்வது? பெரியார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதிலும் இப்படிப்பட்ட வாழ்க்கை ஒப்பந்த விழாக்களை நடத்தி வந்த சூழலில், இவை இயல்பான ஒன்றாக இல்லாமல் போனது ஏன்? தான், தனது குடும்பம், தனது சுற்றம் என்ற குறுகிய சுய நல வட்டத்தை சமூகம் இன்னும் இயல்பாகக் கடந்துவிடவில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது என்பதைத் தவிர வேறு உண்மை ஏதுமில்லை.

ஒரு மணமகன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகளைத் திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயன்றனர். நீதிபதி குடும்பத்திற்கு, பொறியியல் படிப்பு முடித்த ஒருவர், அதிலும் முதுகலை பொறியியல் படித்தவர் மருமகனாகக் கிடைத்தால்போதும், மணம் முடித்ததும் இருவரையும் மூட்டை கட்டி அமெரிக்காவிற்கு அனுப்பி விடுவது என்ற முடிவிலிருந்து மாப்பிள்ளை தேடுகின்றனர். நமது தோழரோ அது முற்றும் தேசத் துரோகம் என்ற முடிவிலிருந்தும், வர்க்க வேறுபாடு காரணமாகவும் கறாராக மறுத்துவிட்டார். நீதிபதி எளிய விவசாய வர்க்கப் பின்னணி கொண்டவர் என தோழரை ஏற்க வைக்க முயன்றபோது, அது உண்மையாகவே இருக்கட்டும், அந்தப் பெண் ஒரு நீதிபதியின் மகள், அந்த வர்க்க குணம் தனது இயல்புக்கு ஒத்துவராது என மறுத்து விட்டார்.

குடும்பம் எப்படி சிந்திக்கிறது என்பதற்கு இது ஒரு வகைமாதிரி. அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்த அந்தத் தோழர் தனது 39-ம் வயதில் தனது உறவினர்கள் ஊரில் விவாகரத்து பெற்ற ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்தபோது, அந்த தந்தை தம்மை இழிவுபடுத்தவே இந்த திருமண ஏற்பாடு என வர மறுத்துவிட்டார்.

உள்ளூர் தோழரின் குடும்பமும் இந்தத் திருமண ஏற்பாடே தமது குடும்பத்தை இழிவுபடுத்த என்று கூறி, உள்ளூரில் இருந்து கொண்டே வர மறுத்து விட்டனர். திருச்சியில் ஒரு பெண் வீட்டில் திருமணம் பற்றிக் கூறி பேசி வந்தபோது சி.பி.எம். கட்சிக் காரரிடம் அந்த பெண் குடும்பம் ஆலோசித்துள்ளது. அந்த சி.பி.எம்-காரர் தாலி, சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாத இந்தத் திருமணங்கள் எல்லாம் செல்லாது என அன்றே ‘தீர்ப்பு’ சொல்லி, அப்பெண் குடும்பத்தை தடுத்து விட்டார்.

ஆனால் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இல்லாமல் இன்றைக்கு இயல்பாகவே இளைய தலைமுறையினர் சாதி கடந்து மணம் புரிவதும், அதில் சில கௌரவக் கொலைகளில் முடிவதும் நடந்து கொண்டுதான் உள்ளன. புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களுக்கு அமைப்பு பாதுகாப்பு கொடுப்பதால் இந்த சிக்கல் இல்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தப் புரட்சிகரத் திருமணங்களின்போது, தனது குடும்பம் சமூக மாற்றத்திற்குப் போராடும் என உறுதிமொழி ஏற்றுக் கொள்கின்றனர். இது ஒப்புக்கு சொல்வதல்ல என்பதைத் தோழர்கள் நடைமுறையில் நடத்திக் காட்டுகின்றனர். எந்த வர்க்கத்திலிருந்து வந்தவரானாலும் இயல்பாக எளிய பாட்டாளி வர்க்க வாழ்க்கை முறைக்கு தம்மை மறுவார்ப்பு செய்து கொள்வது மட்டுமின்றி, பாட்டாளி வர்க்க விடுதலைக்கான தமது போராட்டங்களைத் தொடர்கின்றனர்.

குடும்ப வாழ்வில் சமரசம் செய்யத் தொடங்கினால், அது பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சிகர நடைமுறையிலும் எதிரொலித்து, ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராகப் போய் விடுவதும் நடக்கிறது. நமது அமைப்பிலும் இது விதிவிலக்கல்ல. மகிழ்ச்சி என்பது என்ன என்ற கேள்விக்கு மார்க்ஸ் கொடுத்த விடை போராட்டம் என எழுதுவது எளிது. போராட்டத்தினூடே வாழ்ந்து காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இப்போது அமைப்பில் உள்ள தோழர்கள் பலரும் இப்படிப்பட்ட எளிய வாழ்விலும் கடுமையான போராட்டத்திலும் வாழ்ந்து கொண்டுள்ளனர். மூத்த தோழர்கள் தமது வாரிசுகளையும் தாம் கொண்ட கொள்கைக்காக போராட வேண்டும் என ஏற்றுக் கொள்ள வைத்துள்ளனர், ஏற்றுக் கொள்ள வைக்க போராடி வருகின்றனர்.

தமது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் இல்லை என சேர்ப்பதே ஒரு போராட்டம்தான். அறிவுத் துறையினர் பலர் இன்றும் இதை ஏற்க மறுத்து வாதிட்டு வருகின்றனர். சாதி, மத, வர்க்கம் அற்ற ஒரு சமூகத்தைப் படைப்பதற்குப் போராடிவரும் ஒருவர் இந்த சாதிய சமூகத்திலேயே அதை மறுத்து வாழ்ந்து காட்டுவதே பெரும் போராட்டம்தான். கட்டிட வேலை செய்யும் ஒரு எளிய பெண் தொழிலாளி, தோழர்கள் குடியிருந்த வாடகை வீட்டில் சில கட்டுமான வேலைகள் செய்ய வந்திருந்தபோது, பெண் தோழர் இயல்பாக உதவிகள் செய்ய, வீட்டிலிருந்து தண்ணீரும் வாங்கிக் குடித்துள்ளார் அந்தப் பெண் தொழிலாளி; மதியம் சாப்பாட்டின்போது பேச்சு வாக்கில் அவர் என்ன சாதி எனக் கேட்க, பெண் தோழரோ எங்களுக்கு சாதி, மதம் இல்லை என்று கூறியபோது, அந்த தொழிலாளியோ ‘அப்ப அண்ணன், தம்பிய கட்டிக்குவிங்களா’ என கோபமாக சண்டை போடத் தொடங்கிவிட்டார். ‘நீங்க செய்விங்க போல’ என தோழர் கேட்க பேச்சுவார்த்தையே முறிந்து போனது. அன்னம்-தண்ணீர் புழங்குவதற்குகூட இங்கு சாதி உள்ளது என்பதையே மேற்படி சம்பவம் காட்டுகிறது.

தோழர்கள் போராடி சிறை செல்லும்போதும் இந்த சாதிச் சண்டை விடுவதாயில்லை. தடிக் கம்பை வைத்துக் கொண்டு, ‘அப்ப உன் அப்பன் சாதி என்ன’ என கேள்வி சீறிக் கொண்டு வரும். நீங்கள் ஏப்ப சாப்பையாகவோ, தனியாகவோ இருந்தால் தடியடி நிச்சயம். பார்ப்பன பாசிசத்தின், மனுவின் கொடூரத்தை நீங்கள் ஒவ்வொரு கணமும் எதிர்த்துப் போராடியே ஆக வேண்டும். பொதுவில் பார்த்தால் நகரத்தில் அவ்வளவு வெளிப்படையாக சாதியின் கோரத்தைக் காண முடியாதுதான். ஆனால் அது மேலோட்டமான பார்வை.

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த நேரத்தில் விழுப்புரத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சமூகத்தில் இட ஒதுக்கீட்டு சலுகைகளுக்காக BC, MBC என சொல்லிக் கொள்ளும் சாதியினர்தான் சமூகத்தில் தங்களை ‘சத்ரிய வம்சம்’, ‘ஆண்ட பரம்பரை’ என பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.

படிக்க : சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!

அதே விழுப்புரத்தில் சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாவினை நடத்தியபோது அந்தப் பெரிய மண்டபம் நிரம்பி வழிந்ததோடன்றி, மணவிழா உரைகளை சலசலப்பின்றி கூட்டம் உள்வாங்கியது. டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்திய ஒரு ஓட்டுனர், கடைசிவரை உரைகளைக் கேட்டது மட்டுமின்றி, நிதியும் கொடுத்து ஆதரவு தந்தார். மண்டபத்தை சுத்தம் செய்யும் பெண் ஒருவர் துவக்கத்தில் எல்லா திருமணங்கள் போல இதுவும் ஒரு விழா என வேலைகள் செய்து வந்தவர், உரைகளைக் கேட்கக் கேட்க ஆர்வமாகி முழுமையாக கவனிக்கத் தொடங்கினார். கூட்டம் முடிந்த பின் நமது தோழர்களை அணுகி, ‘எங்கள் வீட்டிலும் ஒரு பெண் உள்ளார், உங்கள் தோழர்கள் யாராவது திருமணம் செய்து கொள்வீர்களா’ என்ற கேள்வியாக கேட்டார் என்பதில் இந்த மண விழாவின் இலக்கைக் காண முடிந்தது.

மாட்டுக்கறி விருந்து பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இன்றைக்கு பசு வளையப் பகுதிகளில் தெருவிலேயே அடித்துக் கொல்லும் கோரங்களை சங்கி கும்பல் அரங்கேற்றி வரும் வேளையில், அன்றைக்கு தமிழகத்தில் இது ஒரு சிக்கலே இல்லை. ஆனால் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் விருந்துண்டார்கள் எனச் சொல்லி விட முடியாது என்பதுதான் உண்மை. வந்திருந்த உறவினர்களில் பலபேர் முதல் முறையாக சுவைத்துச் சாப்பிட்டனர் என்பதும் மறுக்கவியலாத உண்மை.

பார்ப்பன பாசிசம் ஒரு நொடியில் வீழ்ந்து விடும் என்ற கற்பனை அமைப்பில் உள்ள யாருக்கும் இல்லை. பார்ப்பன பாசிசத்தின் வேர் ‘சண்டாளப் பாவி’ என்ற வசைச் சொல் வரை ஆழமாக ஊடுருவி இருக்கின்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பும் இதையே வேறு வார்த்தைகளில் உறுதிப்படுத்துகிறது. பார்ப்பன பாசிசக் கொடூரம் இன்று காவி – கார்ப்பரேட் பாசிசமாக கோலோச்சும் போது சாதி – தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்களின் தேவை இன்னும் கூடுதலாகிறது. நாம் சுவாசிப்பதைப் போல இவற்றை அன்றாட நிகழ்வாக மாற்றுவதில்தான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் சாதனையும் நிற்கிறது. சாதி – தீண்டாமையின் வேர்களை அகமண முறைகள் பாதுகாக்கின்றன. அவற்றைத் தகர்த்தெறியும் வரை போராட்டங்களைத் தொடர உறுதி ஏற்போம்!


அசுரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க