பாசிச மோடி அரசு இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் நோக்கில் 2019-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act – CAA) அமல்படுத்தியது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் இந்தியா முழுவதும் பற்றிப் பரவி பாசிச கும்பலை நெருக்கடிக்குள் தள்ளியது.
இதனைச் சகித்துக்கொள்ள முடியாத சங்கி கும்பல் டெல்லியில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமீயா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவத் தலைவர்கள், செயற்பாட்டாளர்களை ஊபா கருப்பு சட்டத்தில் பாசிச மோடி அரசு கைது செய்தது.
இவர்களில் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் ஆகிய இரண்டு பேருக்கு முன்பே ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. ஐந்தாண்டுகளாக விசாரணை கூடத் தொடங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற ஏழு பேரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். டிசம்பர் மாதத்தில் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 5-ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய ஐந்து பேருக்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. ஆனால், உமர் காலித் மற்றும் ஹர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.
“உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க உரிமை இல்லை. இருவரும் விசாரணை இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதை தண்டனையாகக் கருத முடியாது. ஏனென்றால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதற்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 43D உட்பிரிவு 5-இன் படி ஜாமீன் வழங்குவதற்கான மற்ற பொதுவான விதிகளிலிருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் குற்றவாளிகளையும் ஒரே மாதிரி பார்க்க முடியாது. உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கலவரங்களுக்குத் திட்டமிட்டு வியூகம் வகுப்பதில் ஈடுபட்டிருந்ததாக இவ்வழக்கின் முதல் கட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் எதிரான முதன்மையான குற்றச்சாட்டுகளுக்கு அரசு வழங்கியிருக்கக் கூடிய ஆதாரங்கள் திருப்பியளிப்பதாக இருக்கின்றன. எனவே, இருவருக்கும் ஜாமீன் மறுத்து இருவரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்” என்று அயோக்கியத்தனமாகத் தீர்ப்பளித்துள்ளது.
ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்காமல், ஜாமீன் வழங்காமல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் அடைத்து வைக்கலாம் என்று தீர்ப்பளித்த அதே உச்சநீதிமன்றம், “குற்றத்தின் தன்மையைக் காரணம் காட்டி விசாரணை இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைப்பது தண்டனை வழங்குவதற்குச் சமம்” என்று மறுநாளே (டிசம்பர் 6) மற்றொரு வழக்கில் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது பாதுகாக்கப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை முடிந்த பிறகே, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகிய இருவரும் மீண்டும் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் பாசிசத்தனமாக தீர்ப்பளித்துள்ளது. மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஐந்து பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் இருவரையும் நிரந்தரமாகச் சிறைக் கொட்டடியில் அடைக்க வேண்டும் என்கிற பாசிச கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்பவே தீர்ப்பு வழங்கியுள்ளது. பா.ஜ.க. கூடாரத்தைச் சேர்ந்த பாலியல் பொறுக்கிகளை வெளியில் சுற்றித்திரிய அனுமதித்துவரும் நீதிமன்றம், மக்கள் போராளிகளைச் சிறைக் கொட்டடியிலேயே படுகொலை செய்ய எத்தனிக்கிறது.
மக்கள் விரோத பாசிச திட்டங்களுக்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாகவும் போராடுகின்ற சமூக செயற்பாட்டாளர்கள் பாசிச மோடி அரசால் சிறையிலடைக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். இவர்களில் மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த சமூக செயற்பாட்டாளர்கள் ஸ்டான் சுவாமி, பேராசிரியர் சாய்பாபா ஆகியோரை சிறைக் கொட்டடியில் அடைத்து சொல்லொண்ணா சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தது பாசிச மோடி அரசு. அதற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாகச் செயல்பட்டது. தற்போது உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவர்களை சித்திரவதை செய்வதில் பாசிசத்தின் அங்கமாக மாறியுள்ளதை வெளிக்காட்டியுள்ளது.
எனவே, சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குகின்ற பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், அதன் அங்கமாக மாறியுள்ள உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைக் கண்டித்தும், சமூக செயற்பாட்டாளர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாமை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போராட்டம் அநியாயமாகா சிறையிலடைக்கப்பட்டுள்ள போராளிகள், பாசிச எதிர்ப்பு சக்திகளை விடுதலை செய்வதை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











