காசாவில் குளிர்காலம் தொடங்கி அம்மக்களுக்கு அபாயகரமானதாக மாறி வருகிறது. குளிர் காற்று கூடாரங்களுக்குள் சென்று எலும்புகளை துளைக்கிறது. மெதுமாக பலவீனமானவர்களின் உயிரை பறிக்கிறது. இதற்கு முதலில் பலியாவது பச்சிளம் குழந்தைகளே.
பாசிச இஸ்ரேலின் முற்றுகையால் தெற்கு காசாவில் தொடர்ந்து இடப்பெயர்வு நடைப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, இடப்பெயர்வு கூடாரங்களில் உள்ள பச்சிளம் குழந்தைகள் கடுங்குளிரை எதிர்கொள்ள முடியாமல் விரைத்து உயிரிழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
கடந்த ஜனவரி 17 அன்று ஆயிஷா அல் – ஆகா எனும் 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, கான் யூனிஸில் உள்ள கூடாரத்தில் உறைபனி காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தை எந்தவிதமான நோயுக்கும் உள்ளாகவில்லை எனவும் குழந்தையின் குடும்பம் போதுமான வெப்பமூட்டும் கருவிகளை வைத்திராததால் இரவில் கடும் குளிரின் காரணமாகவே குழந்தை இறந்தது எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் குழந்தை செயல்பாடில்லாமல் இருந்ததைக் கண்டு அருகிலுள்ள நாசர் மருத்துவ வளாகத்திற்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
“தூங்கச் செல்வதற்கு முன்பாக குழந்தை இயல்பாகத்தான் இருந்தது. சிறுது நேரம் கழித்து பார்க்கும் போது அவளின் உடல் குளிரால் விரைத்த நிலையில் இருந்தது” என ஆயிஷாவின் தந்தை கூறியுள்ளார். இடப்பெயர்வு கூடாரம் வாழ்வதற்கு உகந்தது இல்லை; குழந்தைகள் இதற்கான விலையை கொடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். குழந்தையின் உதடுகள் நிறம் மாறியது; இரவு முழுவதும் கதகதப்பாக வைப்பதற்காக பல முயற்சிகள் செய்தும் உடல் இறுகியது என குழந்தை இறந்த கடைசி மணி நேர காட்சிகளை அவளது தாயார் விவரிக்கும் போது நமது கண்களும் கலங்குகிறது.
இனவெறி இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தங்குமிடப் பொருட்கள், நகரும் வீடுகள், வெப்பமூட்டும் கருவிகள் போன்ற குளிர்காலப் பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்காமல் முற்றுகையிட்டு அட்டுழியங்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆயிஷா உட்பட இதுவரை எட்டு பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளனர்.
படிக்க: டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!
சான்றாக, கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, பிறந்து ஒரு வாரமே ஆன மஹ்மூத் அல் – அக்ரா எனும் பச்சிளம் குழந்தை இறக்கும் முன்பு கடுமையான ஹைப்போதெர்மியாவால் (Hypothermia) (உடலின் வெப்பநிலை 35 டிகிரி டெல்சியஸ்க்கு கீழ் குறைவது) பாதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மாத குழந்தையான முகமத் அபு ஹர்பீத்தும் இதன் காரணமாகவே இறந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் உயிரிழப்பிற்கு தொடர்ச்சியான இடப்பெயர்வு, தற்காலிக தங்குமிடங்கள், வறுமை, பசி, ஆகியவை காரணமாக அமைகிறது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை, 1.9 மில்லியன் மக்கள் (80% காசா மக்கள்தொகை) உள்ளுக்குள்ளே இடம்பெயர்ந்து, தற்காலிக கூடாரங்களில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு நவம்பரில் செல்டர் கிளஸ்டர் அறிக்கையின் (Shelter Cluster Report) படி, 1.3 மில்லியன் மக்களுக்கு உடனடியாக தங்குமிடப் பொருட்கள் தேவைப்படுவதாக எச்சரித்தது. மற்றொருபுறம், மவாசி கான் யூனிஸ் போன்ற கடற்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் கடுமையான குளிரை எதிர்கொள்கின்றனர். கூடாராங்கள் கிழிந்தும், சகதி சாலைகள், கழிவுநீர் போன்றவற்றால் நோய் தொற்றுக்கும் ஆளாகியும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், காசாவில் சமீபத்தில் வந்த புயல் காரணமாக நூற்றுக்கணக்கான கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக்கியது. ஏற்கெனவே சிதலமடைந்திருந்த வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கொல்லப்பட்டனர். காசாவில் ஏற்கெனவே அடிப்படை தேவைகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவிவரும் சூழலில் இந்த பேரழிவு நெருக்கடியை தீவிரமாக்கியுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் பெருமளவு குறைமாத, பச்சிளம் குழந்தைகள் கடும் குளிரால் உயிரிழந்துள்ளதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இரத்தவெறி பிடித்த இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் போதுமான வசதியின்றி, தங்கள் கண்முன்னே பெற்றக் குழந்தைகளையும் உறவினர்களையும் பலிக் கொடுத்து வருகின்றனர். அந்தோ, யாரும் கேட்பாரில்லை எனக் கதறுகின்றனர். அனைத்து நாடுகளிலும் மக்கள் எழுச்சி போராட்டங்களை கட்டியமைப்பதே இஸ்ரேலின் கொட்டத்தை அடக்கும்.
![]()
சையத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











