ரோகித் வெமுலா சட்டம்: எதிர்க்கட்சிகளின் அக்கறையின்மை

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் 2025-ஆம் ஆண்டுதான் “கர்நாடகா ரோகித் வெமுலா மசோதா – 2025” வரைவை தயாரித்துள்ளது. ஆனால், இவை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. தெலுங்கானா காங்கிரஸ் அரசு வரைவு மசோதாவை தயாரிக்கும் நிலையில்தான் உள்ளது. பிற எதிர்க்கட்சிகள் இதுகுறித்து வாய் திறப்பதே இல்லை.

த்துயரம் நிகழ்ந்து ஒரு தசாப்தமாகிவிட்டது, துயரத்திற்கு சிந்திய கண்ணீர் துளிகள் வற்றிவிட்டன, அழுது புலம்பிய குரல்களும் வறண்டுவிட்டன. ஆனால், அவர் மூட்டிய கனல் மட்டும் இன்றும் கனன்று கொண்டிருக்கிறது.

ஆம், ஆதிக்கத்திற்கு எதிராக ரோகித் வெமுலா பற்றவைத்த கனல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது.

ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பின் முன்னணியாளருமான ரோகித் வெமுலா தனக்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட சாதிய ரீதியான கொடுமையால் 2016-ஆம் ஆண்டு, ஜனவரி 17-ஆம் தேதி தனது நண்பரின் அறையில் தூக்கிட்டு ‘தற்கொலை’ செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பாக, அவர் எழுதிய கடிதம் அவரது கனவுகளை கணத்த வார்த்தைகளால் விவரித்தது.

ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தில் இணைந்தது முதல் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து மாணவர்களை திரட்டிப் போராடி வந்துள்ளார். குறிப்பாக, முசாபர் நகர் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். காளிகளின் சதியை அம்பலப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் அவரது அமைப்பு வெளியிட்டது. இதே ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக்கழகத்தில் வெளியிடும் போது காவிக் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை கண்டித்தும், யாகூப் மேனன் தூக்கிற்கு எதிராகவும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக கலாச்சார நிகழ்வில் மாட்டுக்கறி விநியோகித்தனர். இந்த அனைத்து செயல்பாடுகளிலும் ரோகித் வெமுலா முன்னணியில் நின்று செயல்பட்டுள்ளார். ரோகித் வெமுலாவின் இந்த தொடர்ச்சியான செயல்பாடுகளை ஏ.பி.வி.பி., இந்துத்துவ கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஏ.பி.வி.பி. நிர்வாகியை தாக்கியதாகப் பொய் குற்றஞ்சாட்டி ரோகித் வெமுலா உட்பட ஐந்து மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்தியதோடு, அவர்களை விடுதியில் இருந்தும் வெளியேற்றியது, பல்கலைக்கழக நிர்வாகம். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – ஏ.பி.வி.பி கும்பல் இதற்கு மூளையாக செயல்பட்டது. அப்போதைய துணைவேந்தர் சங்கி அப்பாராவின் ஒருதலைப்பட்சமான இந்த உத்தரவை திரும்பபெறக் கோரி ரோகித் வெமுலா உட்பட ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரம் அமைத்து 15 நாட்களாகப் போராடினர்.

ஆனால், சங்கப் பரிவாரக் கும்பல் தொடர்ந்து கொடுத்துவந்த நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஜனவரி 17, 2016 அன்று ரோகித் வெமுலா தனது நண்பரின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – ஏ.பி.வி.பி. சங்கப்பரிவாரக் கும்பலின் “நிறுவனமயப்பட்ட கொலை” ஆகும். தவிர, உயர்கல்வி நிறுவனங்களில் வேரூன்றி உள்ள சாதியப் பாகுபாட்டை ரோகித் வெமுலாவின் தற்கொலை துலக்கமாக எடுத்துக் காட்டியது.

ரோகித் வெமுலாவின் தற்கொலையை அடுத்து நாடு முழுவதிலும் கண்டனங்களும் மாணவர்கள் போராட்டங்களும் எழுந்தன. மேலும், கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் சாதியப் பாகுபாடுகளை களைவதற்கு தனிச் சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது. ஆனால், ரோகித் வெமுலா இறந்து பத்தாண்டுகள் ஆகியும் இந்த கோரிக்கை இன்னும் கோரிக்கையாகவே இருக்கிறது. மறுபுறம், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையாலும் உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகளால் தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.


படிக்க: ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி


சமீபத்தில், பல்கலைக்கழக மானியக் குழு, நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அளித்த தரவுகளின் படி, உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு குறித்தப் புகார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 118.4 சதவிகிதம் அதிகரித்துள்ளன, இவை பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. இதன் மூலமே உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான சாதியப் பாகுபாட்டின் தீவிரத்தை புரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், சாதியப் பாகுபாடுகளை களைவதற்கு தனிச்சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கையை ரோகித் வெமுலாவின் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில், “ரோகித் வெமுலா நம்மை பிரிந்து இன்றுடன் 10 வருடங்களாகிறது. ஆனால், ரோகித்தின் கேள்விகள் நமது நெஞ்சை இன்னும் தட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில், அனைவரும் கனவு காண்பதற்கு சமமான உரிமைகளை பெற்றுள்ளனரா?

“ரோகித் படிப்பதற்கு, எழுதுவதற்கு மற்றும் அறிவியல், சமூகம் மற்றும் மனிதநேயத்தை புரிந்துகொண்டு நாட்டை வளப்படுத்துவதற்கு விரும்பினார். ஆனால், இந்த கட்டமைப்பால் தலித் முன்னேறுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை.” என்றார்.

மேலும், “தலித் இளைஞர்களின் நிலை இன்று மாறிவிட்டதா? கல்வி வளாகங்களில் அதே அவமதிப்பு, விடுதிகளில் அதே தனிமைப்படுத்துதல், வகுப்பறைகளிலும் அதே தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துதல், அதே வன்முறை – சில சமயங்களில் அதே மரணம். ஏனெனில், நமது நாட்டில் கல்லூரி சேருவதில் சாதி மிகப்பெரிய தகுதியாக உள்ளது.

“ரோகித் வெமுலா சட்டம் என்பது முழக்கமாக இல்லாமல், தேவையாக உள்ளது. கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு குற்றமாக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் தெலுங்கானாவிலும் இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன?

தெலுங்கானா, கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியிலும் “ரோகித் வெமுலா சட்டம்” கொண்டு வரப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் 2025-ஆம் ஆண்டுதான் “கர்நாடகா ரோகித் வெமுலா மசோதா – 2025” வரைவை தயாரித்துள்ளது. ஆனால், இவை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. தெலுங்கானா காங்கிரஸ் அரசு வரைவு மசோதாவை தயாரிக்கும் நிலையில்தான் உள்ளது. பிற எதிர்க்கட்சிகள் இதுகுறித்து வாய் திறப்பதே இல்லை.

ஆனால், கடந்த ஜனவரி 17-ஆம் தேதி ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலாவின் பத்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 2023-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே-வில் மர்ம மரணமடைந்த மாணவர் தர்சன் சோலன்கியின் தந்தை, மும்பை மருத்துவக் கல்லூரியில் சாதியப் பாகுபாட்டால் தற்கொலை செய்துகொண்ட பழங்குடியின – இஸ்லாமிய மருத்துவ மாணவி பயல் தாத்வியின் தாய் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், முக்கியமாக, ரோகித் சட்ட பிரச்சாரக் குழுவின் கர்நாடகப் பிரிவு தயாரித்த “ரோகித் வெமுலா சட்டம் – மக்கள் வரைவை” வெளியிட்டனர். இந்த மக்கள் வரைவு அறிக்கையானது ரோகித் வெமுலா சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டம் கொண்டு வரப்பட்டால் உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மீதான சாதியப் பாகுபாட்டைத் தடுக்க முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், சட்டம் கொண்டுவருவதற்கு ஏன் இந்த காலதாமதம்? மக்களின் கோரிக்கைகளை தேர்தலில் வெல்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே எதிர்க்கட்சிகள் கருதுகின்றனரே ஒழிய, அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற அக்கறை இல்லை என்பதே உண்மையாகும்.

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்பு சட்டம், நீட் தேர்வு இரத்து, தூய்மைப் பணியார்களுக்கு நிரந்தரப் பணி என தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளும் இதையே உணர்த்துகின்றன.

ஆனால், இந்திய அரசமைப்பை ஆக்கிரமித்துள்ள அனகோண்டா பாம்பான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல், தனது இந்துராஷ்டிர திட்டத்திற்கு ஏற்ப இந்த கட்டமைப்பை மறுவார்பு செய்து வருகிறது. பாசிசம் அரங்கேறிவரும் இச்சூழலில் சட்டக் கோரிக்கைகள் தீவிரமாக எழுவதும் அதனை நிறைவேற்றக் கோருவதும் அதிகரித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரும் எதிர்கட்சிகள், தாங்கள் ஆளும் மாநிலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சியமாகவும் மக்கள் விரோதமாகவும் செயல்படும் போக்கே உள்ளது. இந்த போக்கும், மாற்று குறித்து மக்களை சிந்திக்க விடாமல் கட்டமைப்புக்குள்ளே தீர்வு தேட வைப்பதும் பாசிசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்களை தள்ளுவதன்றி வேறில்லை.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க