ஏகாதிபத்திய வேட்டை நாய்கள் குதறிய நாடாக காசா ஒரு நிழல் சாட்சியாகக் காட்சியளிக்கிறது. அமெரிக்க ஆதரவு முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கடந்தாண்டு அக்டோபர் 10-ஆம் தேதியிலிருந்து அமலானது. ஆனால், இந்த போர் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் 1,300 முறை மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களில் இதுவரை 480-க்கும் மேற்பட்ட மக்களை (பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள்) படுகொலை செய்துள்ளது. சமீபத்தில் கூட, காரில் சென்ற மூன்று பத்திரிகையாளர்களை வான்வழித் தாக்குதல் நடத்தி கொன்றது.
இதனூடாகவே, காசாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களை அனுமதிக்காமல் பட்டினிப் போட்டு கொன்று வருகிறது. ஒப்பந்தத்தின் படி வரவேண்டிய 48,000 லாரிகளில், வெறும் 42 சதவிகிதம் மட்டுமே (சுமார் 19,000 லாரிகள்) காசாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
காசாவில் குளிர்காலம் என்பதால் வெப்பமூட்டும் கருவிகள், நகரும் வீடுகள், கூடாரங்கள் போன்றவை அதிகம் தேவைப்படும் இவ்வேளையில் இப்பொருட்களை அனுமதிக்காமல் பாலஸ்தீனியர்களை குளிராலும் கொன்று வருகிறது. இந்த கடும் குளிரால் அதிகம் பாதிக்கப்படுவது பிறந்த பச்சிளம் குழந்தைகளே. இதுவரை எட்டு குழந்தைகள் கடும் குளிரால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காசாவில் உயிர் காக்கும் பொருட்களை வழங்கி வந்த 37 சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் இனவெறிப்பிடித்த இஸ்ரேல் தடை செய்துள்ளது. ஒப்பந்தங்களை மீறி செயல்பட்ட போர்க்குற்றவாளி இஸ்ரேலுக்கும் அதன் பிரதமர் பாசிஸ்ட் பென்ஞமின் நெதன்யாகுவிற்கும் என்ன தண்டனை? இது ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் தீர்வுக் கிடைக்காத கேள்வியாகும்.
ஒப்பந்தத்தின் முதற்கட்டமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, கடந்த வாரம் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இக்கட்டத்தில், “இராணுவமயமாக்கல் நீக்கம், தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆட்சி, மறுகட்டமைப்பு” ஆகியவற்றிற்கு கவனம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹமாஸின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, “காசாவின் நிர்வாகத்திற்கான தேசியக் குழு” (National Committee for the Administrative of Gaza – NCAG) என்கிற அமைப்புதான் இனி காசாவின் அன்றாட விவகாரங்களை கவனிக்கும் என்றும் முன்னாள் பாலஸ்தீனிய அதிகாரியாக இருந்த அலி சாத் என்பவர் இதன் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப் ‘அமைதி வாரியம்’ என்கிற சர்வதேச அமைப்பை தனது பாசிச கூட்டாளிகளைக் கொண்டு தொடங்கியுள்ளார். இது காசாவின் மறுக்கட்டமைப்பிற்காகவும் நிர்வாகத்திற்காகவும் அமைக்கப்படுகிறது என கதையளந்துள்ளார். இந்த அமைதி வாரியத்தின் கீழ் “காசா நிர்வாக வாரியம்” என்கிற நிர்வாக அமைப்பு செயல்படும். இவைதான் “காசாவின் நிர்வாகத்திற்கான தேசியக் குழு”-வின் (NCAG) செயல்பாடுகளை கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வாரியமானது டிரம்பின் 20 அம்ச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்த வாரியத்தில் சேர இந்தியா உட்பட 60 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நிரந்தர உறுப்பினராக சேரும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டணத்தைச் செலுத்த விரும்பாத நாடுகள் மூன்று ஆண்டுகளுக்கு உறுப்பினராக செயல்படும். இந்த அமைப்பு ஐ.நா-விற்கு மாற்றாக அமையும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
படிக்க: டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!
இந்த வாரியத்தில், பாசிஸ்ட் டிரம்ப் நிரந்தரத் தலைவராவர். கூட்டாளிகள் யார்?
டோனி பிளேர், மார்கோ ரூபியோ, அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீப் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜெரட் குஸ்னர் போன்ற இனவெறி இஸ்ரேலின் ஆதரவாளர்களும் கார்ப்பரேட் முதலைகளும்.
நானே திருடன், நானே நீதிபதி, நானே போலீசு என்பது போல் அமைந்துள்ளது, ‘அமைதி வாரியம்’.
இதன் அங்கத்தினரின் பின்னணியை புரிந்து கொண்டாலே இவர்களது நோக்கம் புரிந்துவிடும்.
டோனி பிளேர்
இவர் முன்னாள் பிரிட்டன் பிரதமர். இவரது “டோனி பிளேர் நிறுவனம்” (Tony Blair Institute) சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் தொடர்புடைய மோசடிக்காரர்களிடம் இருந்தும் அமெரிக்காவில் இஸ்லாமிய விரோத குழுக்களிடம் இருந்தும் நிதிப் பெற்றுள்ளது.
இஸ்ரேலின் “யூத தேசிய நிதியத்தின்” (Jewish National Fund) பிரிட்டன் கிளையின் கெளரவப் புரவலராக இவர் பணியாற்றியுள்ளார். இந்த அமைப்புதான் இஸ்ரேலின் மிகப்பெரிய போராளிக் குழு என விவரிக்கப்பட்ட அமைப்புக்கு 1.3 மில்லியன் டாலர் நிதி அளித்தது. தவிர, அதன் அதிகாரப்பூர்வ வரைப்படங்களிலிருந்து பாலஸ்தீனத்தை நீக்கியது. பிளேயரின் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள ஒரு வரைபடமும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா மற்றும் கோலன் குன்றுகளை இஸ்ரேலின் பகுதியாகக் காட்டுகிறது.
ஜேரட் குஷ்னர்
முன்னாள் மத்திய கிழக்கு ஆலோசகரும் டொனால்ட் டிரம்பின் மருமகனுமான ஜேரட் குஷ்னர், டிரம்பின் ஆப்ராகாம் ஒப்பந்தங்களின் முக்கியமான வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.
குஷ்னர் முன்மொழிந்த “நூற்றாண்டின் ஒப்பந்தம்” என்கிற திட்டம் மேற்கு கரையின் 30 சதவிகித நிலத்தை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இராணுவமற்ற ஒரு பாலஸ்தீன அரசு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரியது. குஷ்னரின் குடும்பம் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, காசாவை மத்திய கிழக்கின் ஒரு சொகுசு சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற டிரம்பின் திட்டத்திலும் குஷ்னரின் பங்கு உள்ளது.
பிப்ரவரி 2024-இல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய குஷ்னர், “காசாவின் கடற்கரையோரச் சொத்து மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கலாம். அங்குள்ள நிலைமை சற்றே துரதிஷ்டவசமானதுதான். ஆனால், இஸ்ரேலின் கண்ணோட்டத்தில் பார்த்தால், மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, பின்னர் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என இனவெறியை கக்கியிருந்தார்.
ஸ்டீவ் விட்காஃப்
இவர் டிரம்பின் மத்திய கிழக்கின் சிறப்பு தூதர். நியூயார்கின் ரியல் எஸ்டேடின் முதலீட்டாளரும் ஆவார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பாலஸ்தீனியர்கள்தான் காரணம் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருபவர். அமெரிக்காவின் கெடு நோக்கங்களுக்கேற்ப காசா போர்நிறுத்தத்தை மேற்கொண்டதில் இவரின் பங்கு முக்கியமானது. இஸ்ரேலின் முற்றுகையால் காசா மக்கள் மடிந்துவரும் இவ்வேளையில் மனிதாபிமானப் பொருட்கள் மக்களை சென்றடைகிறது என அப்பட்டமாக பொய்யுரைத்தவர். இஸ்ரேல் பட்டினியை போர் ஆயுதமாக பயன்படுத்திய வேளையில், “கஷ்டமும் பற்றாக்குறையும் இருக்கிறது. ஆனால் பட்டினி இல்லை.” என்று அயோக்கியத்தனமாக கூறியவர்.
மார்கோ ரூபியோ
அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளராக உள்ளார். காசாவின் போர்நிறுத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். இஸ்ரேல், தங்களால் கைப்பற்ற முடிந்த ஹமாஸின் ஒவ்வொரு அங்கத்தையும் அழிப்பதையே தான் விரும்புவதாக கூறினார். காசாவின் பாதுகாப்புப் படையில் இஸ்ரேலுக்கு ‘நம்பிக்கையான’ நாடுகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசியவர்.
காசாவை நிர்வகிப்பதில் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைக்கு எந்த எதிர்காலமும் இருக்காது எனவும் கூறியுள்ளார். பாலஸ்தீன ஆதரவு செயல்பாடுகளுக்கு தீவிர எதிர்ப்பாளராகவும் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்குபவராகவும் இருப்பவர்.
மார்க் ரோவன்
மார்க் ரோவன் அமெரிக்க கோடீஸ்வரரும் முதலீட்டாளரும் அப்பலோ கிளோபல் மேனேஜ்மண்ட்-இன் (Apollo Global Management) துணை நிறுவனரும் ஆவார். வாரியத்தில் உள்ள மிக முக்கியமான செல்வந்தர்களில் ஒருவர். இவரது சொத்து மதிப்பு 8.2 பில்லியன் டாலராகும். யூத ஆதரவை பெறுவதற்காக செயல்படும் அமைப்புகளுக்கு நிதி அளித்து உதவியுள்ளார். காசாவில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வண்ணம் பொருளாதார கட்டமைப்புகளை வடிப்பதில் முக்கியப் பங்காற்றுவார் எனக் கருதப்படுகிறது.
யாகிர் கபே
யாகிர் கபே வாரியத்தில் உள்ள மற்றொரு முக்கிய நபராவார். ஐரோப்பிய ரியல் எஸ்டேட் துறையில் முக்கியப் புள்ளியாக விளங்கும் கபே, காசாவில் வீட்டுவசதி திட்டங்கள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்ப்ஸ் இதழின் படி, ஐரோப்பாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான அரவுண்ட்-டவுன் (Aroundtown) நிறுவனத்தின் சுமார் 15 சதவிகித பங்குகளை கபே வைத்துள்ளார். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர் ஆகும். கபே இஸ்ரேலில் ஆழமான நிறுவனத் தொடர்புகளைக் கொண்டுள்ள குடும்பப் பின்னணியில் இருந்து வருபவர்.
இவ்வாறு காசாவிற்கான, ‘அமைதி வாரியத்தில்’ இஸ்ரேலிய ஆதரவாளர்களும் பெரிய கார்ப்பரேட் முதலைகளும் குழுமியுள்ளனர். பாசிஸ்ட் டிரம்ப் இதற்கு முன்பு முன்மொழிந்த “மத்தியக் கிழக்கின் ரிவேரியா” (Riveria of the Middle East) திட்டத்தை அமல்படுத்தி காசாவை கார்ப்பரேட்டுகளின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்கே இந்த ‘அமைதி வாரியம்’ செயல்படப் போகிறது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது. இதுவே இவர்களது நோக்கமாகும்.
தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் சரிவதை சகித்துக்கொள்ள முடியாமல், டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அடாவடியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. எந்த நாட்டிற்குள்ளும் புகுந்து அந்நாட்டு அதிபரைக் கைது செய்வது; மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை இணைத்துக்கொள்ள துடிப்பது; ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கும் இதுவரை தனது கூட்டாளியாக இருந்த நாடுகள் மீதும் தடாளடியாக வரி விதிப்பது; எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுத்து மக்களை இனப்படுகொலை செய்வது, அதன் செல்வங்களை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்ப்பது என இந்த புதிய உலக நியதிகள் பாசிஸ்ட் டிரம்பால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே காசா மீதான இனப்படுகொலையையும் இந்த போலியான ‘அமைதி வாரியத்தையும்’ புரிந்துகொள்ள வேண்டும். இக்கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து காசாவை மீட்க மிகப்பெரிய மக்கள் எழுச்சியை அனைத்து நாடுகளிலும் கட்டியெழுப்புவோம்.
![]()
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











