ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!

பாதிரியார் முகத்தில் குங்குமத்தைப் பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக இழுத்துச் சென்று கிராமத்திலுள்ள அனுமன் கோவிலில் கட்டிவைத்து சாக்கடை நீரையும், மாட்டுச் சாணத்தையும் பாதிரியாரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தியுள்ளது, பஜ்ரங் தள் கும்பல்.

0

பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தில் தேன்கனல் (Dhenkanal) மாவட்டத்தில் உள்ளது பாலுமுண்டா கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார் பிபின் பிஹாரி நாயக் ஜனவரி 4-ஆம் தேதியன்று பர்ஜாங் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் பிரார்த்தனை நடத்துவதற்காகத் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். காலை 11 மணிக்கு கிருஷ்ணாவின் வீட்டில் பிரார்த்தனை தொடங்கியுள்ளது.

பாதிரியார் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி 20–க்கும் மேற்பட்ட பஜ்ரங் தள் குண்டர்களைக் கொண்ட கும்பல் பிரார்த்தனை நடைபெறும் வீட்டிற்குச் சென்று பாதிரியாரை வெளியே வரும்படி கூச்சலிட்டுள்ளது. பிரார்த்தனை முடிந்தவுடன் வெளியே வருவார் என்று அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத மதவெறிக் கும்பல் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் குடும்பம் உள்ளிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஏழு கிறிஸ்தவ குடும்பத்தினரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

பின்னர் பாதிரியாரை வெளியே இழுத்து வந்த மதவெறி கும்பல் மூங்கில் குச்சிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்துவதற்கு பாதிரியார் முகத்தில் குங்குமத்தைப் பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் கிராமத்தின் தெருக்கள் வழியாக இரண்டு மணி நேரம் ஊர்வலமாக இழுத்துச் சென்று கிராமத்திலுள்ள அனுமன் கோவிலில் கட்டிவைத்து சாக்கடை நீரையும், மாட்டுச் சாணத்தையும் பாதிரியாரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தியுள்ளது. ஆனால் பாதிரியார் இறுதிவரை வலியைப் பொறுத்துக் கொண்டு சங்கிகளின் அந்த கலவர முழக்கத்தை எழுப்பவில்லை. மிருகத்தனமான இக்கொடூரச் செயலை தடுக்க வேண்டிய மக்களும் பாதிரியாரைத் தாக்கியதுதான் வேதனைக்குரியதாகும்.

தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதிரியாரின் மனைவி வந்தனா உடனடியாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவிகளின் கரசேவகர்களாக மாற்றப்பட்டுள்ள போலீசார் உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நேரத்தைக் கடத்தியுள்ளார். வந்தனாவின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மதியம் 1:30 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர் அனுமன் கோவிலில் கட்டிவைக்கப்பட்டிருந்துள்ளார்.

உடனடியாக பாதிரியார் மீட்கப்பட்டு அருகிலுள்ள அங்குல் நகர மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. பின்னர் பாதிரியார் குடும்பத்தினர் மாவட்ட போலீஸ் கன்பாணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரே தாக்குதல் நடத்தியவர்களில் ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி கொடூரத் தாக்குதலுக்கு ஆளான பாதிரியார் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு. இதற்குப் பின்னரே இக்கொடூர சம்பவம் வெளியாகி நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.


படிக்க: நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் – தேவாலயங்களில் அத்துமீறல்கள்!


“தற்போது உடல் அளவில் தேரியுள்ள போதிலும் அந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு நாயக்கால் தூங்க முடியவில்லை” என்று பாதிரியாரின் மனைவி தெரிவித்துள்ளார்.

பிரார்த்தனைக்காகத் தொடர்ந்து பயணம் செய்யும் பாதிரியார் “இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஒடிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்களின் கொடூரங்கள் குறித்து எச்சரிக்கிறது.

குறிப்பாக பர்ஜாங் கிராமம் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமமாகும். அதில் ஏழு கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இதனை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்து மக்களிடம் மதவெறி ஊட்டி “ஏழு குடும்பங்களின் வீடுகளை எரித்து விடுவோம்” என்று காவி கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் அனைவரும் பல்வேறு இடங்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும், காவி கும்பல் பாதிரியார் குடும்பத்தினரையும் அவர்களது வீட்டையும் எரித்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. இதனைக் கண்டு பாதிரியார் அச்சம் கொள்ளாததால் வாடகை வீட்டில் வசித்து வந்த பாதிரியாரை ஒரு வாரத்திற்குள் வீட்டைக் காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் மூலம் கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளது பாசிச கும்பல்.

இதுகுறித்து பாதிரியாரின் மூத்த சகோதரர் உதயநாத் ஜேம்ஸ் “எந்த பிரச்சனையும் இல்லாமல் என் சகோதரர் எட்டு வருடங்கள் வாழ்ந்தார். வீட்டின் உரிமையாளர் எங்களை வெளியேறச் சொன்னார்; நாங்கள் வெளியேறினோம். ஆனால் ஒருவர் தனது சொந்த நம்பிக்கையைப் பின்பற்றுவது பாவமா? இந்த நாட்டில் அது ஒரு அடிப்படை உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு


2024 ஆம் ஆண்டு ஒடிசாவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 26-ஆம் தேதியன்று பாலசோர் மாவட்டத்தில் இந்து இளைஞரை இரண்டு பழங்குடியினப் பெண்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகக் கூறி காவி கும்பல் இருவரையும் மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியது. தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கிறிஸ்தவ மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதல் நடந்து ஒருவருடம் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளைச் சாலையோர வியாபாரிகள் விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சங்கி ஒருவன் “இது இந்துராஷ்டிரம் இங்கு கிறிஸ்துமஸ் பொருட்களை விற்க அனுமதியில்லை. ஒடிசாவில் ஜெகநாதர் பொருட்களை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள்” என்று தெரிவிப்பதெல்லாம் இந்து மதவெறியர்கள் கட்டற்ற முறையில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதைக் காட்டுகிறது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்பட்டுள்ள ஒடிசாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. பிரார்த்தனை நடத்துவதற்கும், தன்னுடைய மதத்தைப் பரப்புவதற்கும் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் குப்பையில் வீசிவிட்டு இந்துராஷ்டிர சட்டத்தினை அமல்படுத்தி வருகிறது பாசிச கும்பல். மறுபக்கம் கணிசமான இந்து மக்களிடம் மதவெறி ஊட்டி அம்மக்களை தன்னுடைய அடித்தளமாக மாற்றி வருகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க