புகைப்படம் எடுத்ததால் அவமானப்படுத்திய நிர்வாகம்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைந்துள்ளது தனியார் கல்வி நிறுவனமான “அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி”. இந்தக் கல்லூரியில் சிவகாசியிலுள்ள ஆசாரி காலனியைச் சேர்ந்த 19 வயதான சோலைராணி என்பவர் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை தவறிய நிலையில், சோலைராணியின் தாயார் ஒற்றைப் பெற்றோராகக் குடும்பத்தைப் பராமரித்து வந்திருக்கிறார்.
இந்த மாணவி, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தாண்டு கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவன்று அந்த மாணவருடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும், அதில் இருவரும் இணைந்து (கல்லூரி வளாகத்திற்கு வெளியே) எடுத்த புகைப்படத்தை நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அந்தப் பதிவைப் பார்த்த சக மாணவி ஒருவர், தனது நண்பரான கல்லூரி அலுவலகப் பணியாளர் மணிமாறனுக்கு அனுப்பியுள்ளார். இந்தப் புகைப்படத்தைக் கல்லூரி முதல்வரிடம் காட்டிய மணிமாறன், சோலைராணி மீது நடவடிக்கை எடுக்குமாறு தூண்டியுள்ளார். இதனையடுத்துப் பெற்றோருடன் வந்து கல்லூரி முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்று அந்த மாணவிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் தனது தாயாரை அழைத்துச் சென்ற அந்த மாணவியைக் கல்லூரி நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. காலை முதலே காத்திருந்தவர்களை மாலையில்தான் கல்லூரி முதல்வரைச் சந்திக்க அனுமதித்துள்ளனர். மேலும் மாணவியையும் அவரது தாயாரையும் கல்லூரி முதல்வரான அசோக் மற்றும் பணியாளர் மணிமாறன் ஆகியோர் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் அந்தக் கல்லூரி மாணவர்கள் கூறுகின்றனர். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த போதிலும், அதில் முதல்வர் கையெழுத்திடுவதற்கு அலைக்கழித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி கல்லூரியில் இருந்து செல்லும்போதே, “பெயர்களை எழுதி வைத்துவிட்டுத்தான் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று கூறிச் சென்றுள்ளார்.
நீதி கேட்டுப் போராடி வரும் மாணவர்கள்!
இதனையடுத்து கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, சோலைராணியின் தாயார் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில், அவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தெரியவந்த பிறகு அந்தக் கல்லூரி மாணவ-மாணவியர் கல்லூரி வாயில் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இறந்து போன மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறி உறுதியாகப் போராடினர். மாணவர்களின் இந்தப் போராட்டம் சமூக வலைதளங்களில் பரவி #JusticeforSolairani என்கிற ஹேஷ்டேக் வேகமாகப் பரவியது. இதனால் மாணவியின் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுக்குரலை எழுப்பத் தொடங்கினர். ஆனால், இந்தச் சம்பவம் குறித்து எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை என்று ஊடக ‘அறத்தின்’ மீது காரி உமிழ்ந்து வருகின்றனர் இளைஞர்கள்.
விசாரணையின்றி நடவடிக்கை – கல்லூரி நிர்வாகமே முதல் குற்றவாளி!
முதலாவதாக, அந்த மாணவி காதலிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். கல்லூரி வளாகத்திற்குள் வைத்து ‘ஒழுங்கு விதி’களை மீறினால் ஒழிய, மாணவர்களின் காதல் அல்லது நட்பு விவகாரத்தில் நிர்வாகம் தலையிட முடியாது; தலையிடக்கூடாது.
ஆனால், இந்த மாணவி கல்லூரி வளாகத்திற்கு வெளியே வைத்து மூத்த மாணவருடன் எடுத்த புகைப்படத்தை, “கல்லூரியின் உள்ளே வைத்து எடுத்தது” என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்து மாணவியை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டுள்ளார் கல்லூரிப் பணியாளர் மணிமாறன்.
இதனை எந்த முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல், தனிப்பட்ட முறையில் மாணவியை அழைத்து அவமானப்படுத்தியுள்ளார் அசோக். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி சோலைராணி, “அம்மாவையும் என்னையும் ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க; நான் இல்லனா அம்மாக்கு நல்லது” என்று உருக்கமான குறுஞ்செய்தியைத் தனது ஆண் நண்பருக்கு அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
அந்த வகையில் பார்த்தால், எந்த ஒரு முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் மாணவியை இழிவுபடுத்தி, தவறே இல்லாத ஒரு விசயத்திற்கு மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்து, மாணவியையும் அவரது தாயாரையும் அலைக்கழித்த கல்லூரி நிர்வாகமே முதல் குற்றவாளி!
மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுவதாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் எவையும், கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தாராளமாகப் புழங்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் ஏன் எடுப்பதில்லை? ஏனெனில், போதைப்பொருள் வணிகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ, உள்ளூர் அதிகார மையங்களாகவோ உள்ளனர். அங்கே கைவைத்தால் அந்தக் கொள்ளைக் கும்பலின் வருமானம் பாதிக்கப்படும்; அவர்களோடு மோத வேண்டி வரும் என்று அஞ்சுகின்றன கல்லூரி நிர்வாகங்கள். ஆனால், எளிய மாணவர்களின் தனிப்பட்ட காதலில் மூக்கை நுழைத்தால், பெற்றோர்களின் ‘சாதிய – கௌரவ’ பயத்தைப் பயன்படுத்தித் தங்களை ‘ஒழுக்கக் காவலர்களாக’ காட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் கல்லூரியின் ‘கறாரான’ பிம்பத்தைக் கட்டமைத்து, அடுத்த ஆண்டு அட்மிஷனில் கல்லா கட்டலாம். இதுதான் இந்தத் தனியார் ‘கல்வித் தந்தைகளின்’ அற்பத்தனமான வியாபார உத்தி!
மேலும், இந்தக் கல்லூரி சர்ச்சையில் சிக்குவது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் சரியாக முடிவெட்டாத காரணத்தால் ஒரு மாணவருக்கு டி.சி. கொடுத்து வெளியேற்றியது உள்ளிட்ட பல அராஜக நடவடிக்கைகளால் மாணவர்களின் கல்வியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. கல்வியைக் காசுக்கு விற்றுவரும் தனியார் நிறுவனங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
போலீசின் அராஜகம்!
தனது கல்லூரியில் படித்த மாணவியைக் கொலை செய்துவிட்டுச் சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி, குடியரசு தினத்தைக் கொண்டாடி வருகிறது அய்ய நாடார் கல்லூரி நிர்வாகம். குற்றவாளிகளான மணிமாறன் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தனர். ஆனால் மாணவியின் (தற்)கொலைக்கு நீதி கேட்டு, நேற்று (27/01/2026) காலை, கல்லூரி முன் போராட்டம் நடத்திய “இந்திய மாணவர் சங்கத்தினர்” உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தக் குடியரசு தின விழாவில் போலீசு அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். “விசாரணை நடத்தி குற்றவாளியைக் கைது செய்வோம்” என்று உறுதியளித்த போலீசின் யோக்கியதை இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையிலிருக்கும் சூழலில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் விசாரணை அதிகாரிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்பது எந்தச் சட்டத்தில் உள்ளது?
இவ்வாறான வழக்குகளில் மக்களின் அழுத்தம் காரணமாக விசாரணை நடத்துவது போல பாசாங்கு காட்டிவிட்டு, கொல்லைப்புறத்தில் கொலைகாரக் கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து கூத்தடித்து வருகிறது அதிகார வர்க்கம். இதனால்தான் அதிகார வர்க்கத்தை நம்பிக் கொண்டிருப்பது வீண் என்று வீதியில் இறங்கி “இந்திய மாணவர் சங்கம்” உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் மாணவர்களைத் திரட்டிப் போராடி வருகின்றன. போராடும் மாணவர்களுக்கு டி.சி கொடுத்துவிடுவோம் என்று மிரட்டி வருகிறது கல்லூரி நிர்வாகம்.
மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக கல்லூரி முதல்வர் அசோக் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு விரைவாக ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கே அதிகார வர்க்கம் முயலும். எனவே தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
தனியார் எனும் அரக்கன்!
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தொடங்கி கோவை அனுப்பிரியா (தற்)கொலை வரை எத்தனை உயிர்களைக் காவு வாங்கியுள்ளன தனியார் கல்வி நிறுவனங்கள்!
ஏற்கெனவே ஆண்-பெண் இருபாலரும் நட்பாகப் பழகுவதைக் கூட ஜனநாயகமாகப் பார்க்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் கல்வி நிறுவனங்கள் ‘விதிமுறைகள்’, ‘ஒழுங்கு கட்டுப்பாடு’ என்ற பெயரில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்வதற்கே பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இயற்கையின் நியதிக்கு எதிரான இந்த விதிகளை எவராலும் பின்பற்ற முடியாது என்பதே நிதர்சனம். இதனால் தனிப்பட்ட முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே இந்தக் கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத்தவிர சாதி, மத ரீதியாகவும் மாணவர்களை ஒடுக்குவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் மணிமாறன் செயல்பட்டதையும் இந்தக் கோணத்திலேயே இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
சுற்றுவட்டாரத்திலேயே தனது கல்லூரியை மிகவும் கட்டுப்பாடான கல்லூரியாகக் காட்டுவதற்கும் – சாதி, மத ரீதியாகவும் காதலுக்கு எதிரான மனநிலையை இயல்பாகக் கொண்ட பெற்றோர்களிடம் நன்மதிப்பைப் பெறுவதற்கும் – தனியார் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலானவை ‘ஒழுங்கில்லாத காதல்’ என்ற ஒற்றை அம்பை வைத்துக்கொண்டு மாணவர்களின் கல்வியையும் உயிரையும் பறித்து வருகின்றன. இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்டால் மதிப்பெண்களில் கை வைத்துவிடுவோம் என்று மாணவர்களை மிரட்டி வருகின்றனர் நிர்வாகத்தினர்.
காதல் என்பது மனித இயல்பு என்கிற புரிதலை மாணவர்கள் மனதில் ஒருபோதும் இவர்கள் விதைக்க மாட்டார்கள். “மாணவர்களை ஜனநாயகப்படுத்துவதற்கே கல்வி; மனித இயல்பைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு அல்ல”. ஆனால் லாபத்தை ஈட்டுவதற்காக நிறுவப்பட்டு வரும் இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களால் மாணவர்களுக்கு ஒருபோதும் சமூகத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த முடியாது.
எனவே தனியார்மயத்தை ஒழித்துக்கட்டி பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் “அரசுடைமை” ஆக்காமல் இது போன்ற சம்பவங்களுக்கு முடிவு கட்ட முடியாது. கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான மாணவர்களின் இந்த உறுதியான போராட்டத்தைத் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியது சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கடமை!
நமது கோரிக்கைகள்:
குற்றவாளிகளுக்குச் சிறை; குடும்பத்திற்கு இழப்பீடு!
மாணவியின் தற்கொலைக்குக் காரணமான முதல்வர் அசோக் மற்றும் பணியாளர் மணிமாறன் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும். கல்லூரிச் சொத்திலிருந்து மாணவியின் குடும்பத்திற்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கு வேண்டும்.
மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்
நீதி கேட்டுப் போராடியதால் கைது செய்யப்பட்ட 17 மாணவர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். குற்றவாளிகளோடு கைகோர்த்துக்கொண்டு மாணவர்களை ஒடுக்கிய ்்போலீசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரியை அரசுடைமையாக்க வேண்டும்
தொடர் சர்ச்சைகளுக்கும் மாணவர் விரோதப் போக்கிற்கும் பெயர்போன அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியை உடனடியாக அரசுடைமையாக்க வேண்டும். நிர்வாகத்தின் அராஜகங்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
ஜனநாயக உரிமையை வேண்டும்
‘ஒழுக்கம்’ என்ற பெயரில் ஆணும் பெண்ணும் பேசுவதைத் தடுக்கும் பண்ணையார்த்தனமான தடைகளை நீக்க வேண்டும். மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கல்லூரி வளாகத்திற்குள் ‘மாணவர் சங்கம்’ அமைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
தனியார்மயக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும்
கல்வியைக் காசுக்கு விற்று, மாணவர்கள் உயிரை ‘கௌரவத்திற்கு’ பலிவாங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் அராஜகத்தைக் கட்டுப்படுத்தத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
![]()
ஆதினி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











