நெல்லை பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சிவமதியும் (வயது 18), அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆனந்த கிருஷ்ணனும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு சிவமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் கிருஷ்ணன் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான்.
இந்த எதிர்ப்பினால் இருவரும் பிப்ரவரி 6 ஆம் தேதி பதிவு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். பட்டுச் சேலை எடுப்பதிலிருந்து பதிவுத் திருமணம் செய்து கொள்ள பத்திரிகை அடிப்பது வரை அனைத்து ஏற்பாடுகளையும் இருவரும் இணைந்து செய்து வந்த நிலையில் 01.02.2026 அன்று மாலை சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது பெற்றோரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சிவமதியின் கழுத்தில் காயம் உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து இது தற்கொலை என்கிற கோணத்தில் கொண்டு செல்கிறது.
விரைவில் திருமணம் நடக்கவிருந்த சூழலில் சிவமதியை இழந்த கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் இது கொலைதான் என்றும், இதை தீர விசாரிக்க வேண்டும் எனவும் நெல்லை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆணவப் படுகொலை!
பிப்ரவரி 6-ஆம் தேதி திருமணம் என்று முடிவெடுத்து தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தைரியம் உள்ள சிவமதி பெற்றோர்கள் காதலுக்கு சம்மதிக்காததால் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பத்தகுந்ததல்ல.
சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை என்றே முதலில் அவரது பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிவமதியின் அம்மா ரேவதி பின்னர் கூறும்போது சிவமதியின் காதலுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறியுள்ளார். நடந்ததை மறைத்து நாடகமாடுகின்றனர் சிவமதியின் குடும்பத்தினர்.
சாதிவெறி!
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கும் சிவமதியின் அப்பா பச்சிராஜா சைவ செட்டியார் சாதியைச் சேர்ந்தவர். அம்மா ரேவதி பிள்ளைமார் சாதியைச் சேர்ந்தவர். இருவருமே சாதி கடந்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தன் மகள் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்வதென்பது அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. ஒவ்வொரு படிநிலைக்கும் சாதி ஒவ்வொரு குணநலன்களைக் கொண்டுள்ளது.
ரேவதியின் அண்ணனும், சிவமதியின் தாய்மாமனுமான பழனி என்பவர் இந்த மரணத்தில் சந்தேகப்படும்படியான முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். இவர்தான் சிவமதியின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் சிவமதியிடம் “ஒரு பள்ளப் பயலுக்கு உன்னைக் கட்டிவைக்க நான் சம்மதிக்க மாட்டேன்” என கூறியதை சிவமதியின் போன் மூலம் நேரடியாகவே கிருஷ்ணன் கேட்டுள்ளார். மேலும் பிள்ளைமார் சாதி சங்கத்தில் பழனி முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாதி, பணம், அதிகார மட்டத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்தி சிவமதியின் மரணத்தை தற்கொலையாக மாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார் பழனி.
சாதிவெறி சங்கங்கள்!
சுமார் 1,000 தேவேந்திர குல வேளாளர் குடும்பங்கள் வாழும் இப்பகுதியில் இதற்கு முன் பல காதல் திருமணங்கள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை ஆணவப் படுகொலை என்பது இப்பகுதியில் நடைபெறவில்லை. அந்தவகையில் இதுவே முதன்முறையானது. இது உணர்ச்சிவசப்பட்டு நடந்ததல்ல.
ஏற்கெனவே நெல்லை சி.பி.எம் அலுவலகத்தில் அருந்ததியர், வெள்ளாளர் சாதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் அடைக்கலமான போது பந்தல் ராஜா என்கிற வெள்ளாளர் சாதிவெறி சங்கத்தைச் சேர்ந்த கும்பல் சி.பி.எம் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது. கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டபோது அதை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை வெளியிட்டனர் சாதிவெறி சங்கத்தைச் சேர்ந்த சாதிவெறியர்கள். இதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது.
சிவமதியின் மரண விசயத்திலும் சாதிவெறி சங்கங்கள் விசத்தைப் பரப்பி வருகின்றன. யாதவ மகாசபை என்கிற சாதிவெறி அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட பதிவில் “மரணமடைந்த சிவமதி உடலுக்கு உடற்கூறு செய்யும்போது கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும், அதனடிப்படையில் தவறு நடந்து இருக்கும் பட்சத்தில் மேற்படி ஆனந்த கிருஷ்ணன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றும் வன்மத்தைக் கக்கியதோடு, பிரச்சினையைப் பாதிக்கப்பட்டவர் மீதே திருப்பும் சதிச் செயலும் சேர்ந்தியங்குகிறது.
இதைப் போலவே சிவமதி தரப்பில் கிருஷ்ணனிடம் பேசியவர்கள், “பெற்றவர்களுக்குப் பெண் இல்லாமல் போய்விட்டாள். அவர்கள் மகளை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் நீ ஏன் பிரச்சனை செய்கிறாய்” என ஒரு மரணத்திற்குக் காரணமாக இருந்துவிட்டு எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி ‘நியாயம்’ பேசியுள்ளனர்.
சிவமதியின் தாய்மாமா பழனி தேவேந்திர குல வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் வாங்கி அவர்களுக்கு அருகிலேயே வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டைக் கட்டிய கொத்தனார் முதல் அனைத்து தொழிலாளர்களும், அவருக்கு அவ்வப்போது ஓட்டுநராக இருப்பதும் தேவேந்திர குல வேளாளர் மக்கள்தான். ஆனால் அவரது வீட்டிற்குள் இம்மக்களால் நுழைய முடியாது. பழனியின் இந்த சாதி வெறியே சிவமதியை பலி வாங்கியிருக்கிறது.
போலீசின் திசைதிருப்பல்!
சிவமதியின் மரணம் தற்கொலையல்ல என்று தனது ஊரோடு சென்று கிருஷ்ணன் பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை வாங்க மறுத்து பிரச்சினையை மூடிமறைக்க முயன்றனர். அதன் பிறகே கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று புகாரளித்துள்ளனர் கிருஷ்ணன் தரப்பினர். பிரச்சினை வெளியே தெரிய ஆரம்பித்ததும் டவுண் உதவிக் கமிஷனர் விசாரிக்க கமிஷனர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.
ஆனால் விசாரணை முடிந்து பிரேதப் பரிசோதனை வருமுன்பே “போலீஸ் விசாரணையில் இது தற்கொலை என்றே தெரிய வருகிறது” என்று தீர்ப்பெழுத ஆரம்பித்துள்ளது.
தொடர்ச்சியாக நடைபெறும் சாதிவெறித் தாக்குதலை மூடிமறைத்து, அவற்றைத் திசை திருப்புவதன் மூலம் தென்தமிழகம் சாதிப் பிரச்சினை ஏதுமின்றி இருக்கிறதென்ற தோற்றத்தை மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் காட்ட முயல்கின்றன. இதில் சாதி, வர்க்கம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த போக்கானது இப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் – இந்துத்துவ கும்பல் மேலும் வளரவே வழிவகை செய்யும்.
ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல், குறிப்பாக தென்மாவட்டங்களில், சாதி சங்கங்களின் கொட்டம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தலித் மக்கள் மீதான ஆதிக்கச் சாதி வெறியர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணனின் ஊரான உடையவர்புரம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கபடிப் போட்டி தேவர் சாதி உள்ளிட்ட அனைத்து சாதியினரும் இணைந்து விளையாடும் போட்டியாக உள்ளது. வளரும் தலைமுறை சாதி கடந்து வளரவே விரும்புகிறது. அதற்கான சூழலை பின்னுக்கு இழுக்கும் பிற்போக்கு சக்திகளை நாம் அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்.
ஜனநாயக சக்திகள் பிரச்சினைக்குள் சிக்கிக் கிடக்கும் உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் முறியடிக்க களமிறங்கும் போதுதான் சாதி வெறியாட்டத்தின் பலிகளை நம்மால் தடுத்திட முடியும். சிவமதிகளின் ஆணவப் படுகொலைகளுக்கு அப்போதுதான் உண்மையான நீதி கிடைக்கும்.
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











