அரசு மருத்துவமனைகளில் கட்டணம்: மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசின் பாசிசம்

உழைக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டணம் விதித்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசு, எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற உயர் வகுப்பினருக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

0

காராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அயோக்கியத்தனமான அறிவிப்பை ஜனவரி 16 அன்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. தற்போது அதற்கான விலை அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள மக்களிடம் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு, இலவச மருத்துவ சிகிச்சையினால் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சேவைகளை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மருத்துவ சேவைகளைப் பராமரிப்பதற்காக கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வசூலிக்கும் முறை மாவட்ட மருத்துவமனைகள், உள் மாவட்ட மருத்துவமனைகள், நகர்ப்புற-கிராமப்புற மற்றும் பெண்கள் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளது.

விலை அட்டவணையின் படி, மருத்துவமனைகளுக்கு வருகின்ற வெளி நோயாளிகளுக்கு ரூ.5 என்றும் உள் நோயாளிகள் சேர்க்கைக்கு ஒரு நாளைக்கு ரூ.10 என்றும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைகள் உள்ளிட்ட ஆய்வகப் பரிசோதனை ஒவ்வொன்றுக்கும் ரூ.15 கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

சிறுநீரகங்கள் தொடர்பான இன்ட்ராவெனஸ் பைலோகிராம் (Intravenous pyelogram) போன்ற ஸ்கேனுக்கு ரூ.100, சி.டி. ஸ்கேன் தலைப்பகுதிக்கு ரூ.300, மார்பு, கழுத்து மற்றும் முதுகெலும்பிற்கு ரூ.400, எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ரூ.1,600 எனக் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

மயக்க மருந்துடன் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.60 முதல் ரூ.160 வரை கட்டணமும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (joint replacement) போன்ற பெரிய அறுவைச் சிகிச்சைக்கு ரூ.40,000 வரை கட்டணமும் நிர்ணயித்துள்ளது.

ஹீமோ-டையாலிசிஸ் சிகிச்சைக்கு ஒரு அமர்வுக்கு ரூ150, தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.100, குளிர்சாதன அறைக்கு ரூ.150, சாதாரண அறைக்கு ரூ.75 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அரசு வழங்குகின்ற ஆம்புலன்ஸ் சேவைக்கு கிலோமீட்டருக்கு 5 ரூபாயும், 8 மணி நேரத்திற்குப் பிறகு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ரூ.30 காத்திருப்பு கட்டணமும் வசூலிக்கப்படும். தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உடல்களை எம்பாமிங் (Embalming) செய்ய ரூ.1,500 செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கெல்லாம் உச்சமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் பிரசவம் மட்டும் இலவசமாகப் பார்க்கப்படும், இரண்டாவது பிரசவத்திற்கு ரூ.50 மற்றும் அதற்கு பிந்தைய பிரசவங்களுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


படிக்க: மகாராஷ்டிரா: கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்ற விவசாயி


அடித்தட்டு, உழைக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டணம் விதித்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசு, எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற உயர் வகுப்பினருக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

பா.ஜ.க. அரசின் கட்டண அறிவிப்பை விமர்சித்துள்ள சுகாதார ஆர்வலர் ஷரத் செட்டி, “மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தக் கட்டணங்கள் மிகக் குறைவாகத் தோன்றலாம். ஆனால், அரசு மருத்துவமனைகளை நாடுபவர்கள் பெரும்பாலும் மிகுந்த துன்பத்தில் இருப்பவர்கள் அல்லது சமூகத்தின் மிகக் கீழ் தட்டைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான சமயங்களில், அவர்களுக்கு சிகிச்சையை விட ஒரு நாள் கூலி மிக முக்கியமானதாக இருக்கும். அரசு இதற்குப் பணம் வசூலிப்பது அவர்களுக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும்.

“இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், அந்த அரசாணையில் (GR) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs), சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் நீதிபதிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஒருபோதும் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதில்லை. இந்த முடிவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் சிகிச்சை முற்றிலும் இலவசமாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் மக்களின் வருகை அதிகரிக்கின்றதெனில், அதனைத் தீர்ப்பதற்கு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; அதிகளவிலான மருத்துவர்களையும், ஊழியர்களையும் நியமிக்க வேண்டும். ஆனால், அதற்கு துப்பில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போன்று கட்டணம் விதிக்கிறது மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு.

மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதானது, மகாராஷ்டிராவில் கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமாகியுள்ளதையே காட்டுகிறது. ஆனால், பா.ஜ.க. அரசோ மருத்துவக் கட்டணத்தையும் அறிவித்து அம்மக்களைப் பேரழிவிற்குள் தள்ளுகிறது.

இவ்வாறு கட்டணம் விதித்தால் நோயாளிகள் வருவதைக் கட்டுப்படுத்தி அரசு மருத்துவமனைகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சதியும் இதில் ஒளிந்துள்ளது.

உழைக்கும் மக்களுக்கான பொது மருத்துவத்தை ஒழித்துக்கட்டிவிட்டு மருத்துவத்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு, அதன் அங்கமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதுவரை கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இலவச மருத்துவ சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பதற்கான அறிவிப்பைத் திரும்பப்பெற வலியுறுத்தி அம்மாநில மக்கள் வீதிகளில் திரள வேண்டும். இதன் மூலமே குறைந்தபட்சம் கிடைக்கின்ற மருத்துவத்தையாவது காப்பாற்றிக்கொள்ள முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க