பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!

இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

0

பிப்ரவரி மாத தொடக்கத்தில் பாசிச டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்திய–அமெரிக்கா இடையிலான ‘இரகசிய’ ஒப்பந்தம் குறித்து அறிவித்தார்.

அதில் எரிசக்தி பொருட்கள், விமானங்கள், தொழில்நுட்ப பொருட்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட 500 பில்லியன் டாலர் மதிப்பிலானப் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். அதற்காக இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைத்துள்ளேன் என்றும் அமெரிக்கப் பொருட்களுக்கு 0 சதவிகிதம் வரி அளிக்கப்படுவதாக நம்புகிறேன் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

பாசிச டிரம்பின் இந்த அடாவடித்தனமான அறிவிப்பு இந்திய மக்களையும் விவசாயிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், 56 இன்ச் மார்பு கொண்ட மோடி ஒப்பந்தம் குறித்து சிறிதும் வாய் திறக்காமல் டிரம்ப்க்கு ‘நன்றி’ மட்டும் தெரிவித்து வழக்கம் போல தன்னுடைய அடிமை விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை மக்களுக்கு இழைக்கும் துரோகம் என்று கண்டித்துள்ள “சம்யுக்த கிசான் மோர்சா” (Samyuktha Kisan Morcha- SKM), “அமெரிக்கப் பொருட்களுக்கு 0 சதவிகித இறக்குமதி வரியை அனுமதிப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்துக்கு முழு சரணடைதலாகும்” என்று கண்டித்துள்ளது. அதேபோல், கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி “விவசாயிகள் நலன்களைப் பாதுகாக்கத்தான் தனிப்பட்ட முறையில் பெரிய விலை கொடுக்க தயார்” என்று வாய் சவடாலடித்ததை மோடிக்கு நினைவூட்டியுள்ளது.

மேலும், “மோடி அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டளைகளுக்கு அவமானகரமாக தலைவணங்கி, அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்திய சந்தையில் சுதந்திரமாக அனுமதிக்கிறது. இதனால் மிக அதிக மானியம் பெறும் அமெரிக்க விவசாயப் பொருட்கள் இந்திய சந்தையை நிரப்பும். இது இந்திய விவசாயிகளை முற்றிலும் அழித்துவிடும்.” என்று எச்சரித்துள்ளது.

குறிப்பாக, 2024-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 18.8 லட்சம் விவசாயிகள் மட்டுமே உள்ளனர். ஆனால், 2015-ஆம் ஆண்டின் விவசாயக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 14.65 கோடி செயல்பாட்டு நில உடைமைகள் (operational holdings) உள்ளன. இந்தியாவில் 48 சதவிகித பணியாளர்களும் (work force), 65 சதவிகித மக்கள் தொகையும் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளைச் சார்ந்துள்ளனர்.

இச்சூழலில், அமெரிக்க மானியம் பெற்ற பொருட்களை அனுமதித்தால் ஏற்கெனவே மானியம் இன்றியும், உரிய விலை கிடைக்காமலும் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வருமானத்தைக் குறைக்கும்; கடன் சுமையை அதிகரிக்கும்; அதிலும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களின் ஆப்பிள், அன்னாசி, தேங்காய், உலர் பழங்களைப் பயிரிடுகின்ற விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று சம்யுக்த கிசான் மோர்சா எச்சரித்துள்ளது.


படிக்க: எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!


குஜராத்தைச் சேர்ந்த பால் விவசாயி தலைவர் தயாபாய் கஜேரா கூறுகையில், “உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்ததால் பால் துறை நெருக்கடியில் உள்ளது. பால் மற்றும் பால் பொருட்களுக்கு விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. இப்போது பால் பொருட்கள் இறக்குமதி அதிகரித்தால், கால்நடை விவசாயிகளுக்குப் பெரிய அடி விழும். மிக அதிக மானியம் பெறும் இறக்குமதி பொருட்கள் சந்தையை நிரப்பும். எங்கள் விவசாயிகள் மற்றும் பதப்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவர். நுகர்வோர்கள், விவசாயிகளை ஆதரிக்க வேண்டும், இறக்குமதி பொருட்களை ஊக்குவிக்கக்கூடாது.” என மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அனைத்திந்திய கிசான் சபா” (All India Kisan Sabha – AIKS) அமைப்பு தெரிவிக்கையில், “இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கட்டற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTAs) முழு விவரங்களையும் நாடாளுமன்றத்தில் வைத்து, மாநிலங்களுடன் விரிவான விவாதம் நடத்த வேண்டும். இந்த அரசு கையெழுத்திட்டுள்ள அனைத்து தொழிலாளர் விரோத, விவசாய விரோத, மக்கள் விரோத கட்டற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளை இரத்து செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், வணிக அமைச்சர் பியூஷ் கோயல் விவசாயம் மற்றும் பால் துறைகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகக் கூறியவை பொய் என்றும் அவர் பதவி விலக வேண்டுமெனவும் விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

எனவே, இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து சம்யுக்த கிசான் மோர்சா (SKM), அதன் அகில இந்திய கிசான் சபா (AIKS) உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. இப்போராட்டத்தில் இணைந்து போராட, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகளுக்கு சம்யுக்த கிசான் மோர்சா அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் மக்களும் ஆதரவளிக்க வேண்டும். டெல்லி சலோ போன்ற மாபெரும் போராட்டத்தின் மூலமே பாசிசக் கும்பலைப் பணிய வைத்து இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க