குஜராத் மாடல் போலிகளின் மாடல்!

புகார்களின் அடிப்படையில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா, டிடர்ஜென்ட் பவுடர் போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0

குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டம் ப்ராந்திஜ் (Prantij) வட்டத்தைச் சேர்ந்த சலால் கிராமத்தில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் (Shree Satya Dairy Products) என்ற பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்கள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால், தயிர் மற்றும் மோர் ஆகியவை பொட்டலங்களில் அடைக்கப்பட்டு சபர்காந்தா மற்றும் மெஹ்சானா மாவட்டக் கிராமங்களில் விற்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் கலப்படப் பால் தயாரிக்கப்படுவதாகச் சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு சபர்காந்தா உள்ளூர்க் குற்றப்பிரிவுப் போலீசார் (Local Crime Branch – LCB), தடயவியல் ஆய்வகம் (Forensic Science Laboratory – FSL), உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரிகள் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா (உரம்), டிடர்ஜென்ட் பவுடர் (சோப்புத் தூள்) போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலையை இயக்கி வந்த ஜிதேந்திர படேல், ஊழியர்கள் சச்சின் மக்வானா, கரன் பார்மர், அஜய்சிங் பார்மர் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட ஐந்து பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் ராகேஷ் என்ற தாமோ படேலைப் போலீசு தேடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 ஆகியவற்றின் கீழ் ப்ராந்திஜ் போலீசு நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போலீசு நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாளைக்கு உண்மையான 300 லிட்டர் பாலைப் பயன்படுத்தி யூரியா, டிடர்ஜெண்ட் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைப் பயன்படுத்தி 1,700 முதல் 1,800 லிட்டர்கள் வரை கலப்படப் பாலைத் தயாரித்துள்ளனர்.

மேலும் பால் தடிமனாகவும், நுரை வருவது போலவும், புரதம் உள்ளது போலவும் தோற்றத்தைக் காட்டுவதற்கு பாமாயில், சோயாபீன் எண்ணெய், பால் பவுடர் மற்றும் புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றைக் கலந்து மக்களை ஏமாற்றியிருப்பதும் அம்பலமாக்கியுள்ளது.

இதையடுத்து 1,962 லிட்டர்க் கலப்பட பால், 1,180 லிட்டர்க் கலப்பட மோர் உள்ளிட்ட 71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேதிப்பொருட்களைப் பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


படிக்க: மீண்டும் பால விபத்து: நாறுகிறது குஜராத் மாடல்!


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தும் பாலில் ரசாயனங்களைக் கலந்து ஐந்து ஆண்டுகளாக விற்று வந்த செய்தியானது குஜராத் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக யூரியா, டிடர்ஜெண்ட் கலந்த பாலை உட்கொண்டால் தோல் எரிச்சல், வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். லாப வெறியால் இத்தகைய நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைப் பாலில் கலந்து விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாசிச கும்பலால் வளர்ச்சி மாடலாக முன்னிறுத்தப்பட்ட குஜராத் மாடல் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. போலி வங்கி, போலி நீதிமன்றம் வரிசையில் தற்போது போலியான பால் தயாரிப்பு நிறுவனம். அதாவது குஜராத் மாடல் என்பது ‘வளர்ச்சி’ மாடல் அல்ல; அது போலிகளின் மாடல் என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க