போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. அரசு!

முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட, கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை இரவோடு இரவாகப் பேருந்தில் ஏற்றி அலைக்கழித்து, இறுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளது. அங்கேயும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளது தி.மு.க அரசு.

0

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 என உயர்த்தி வழங்க வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அரசு விழிப்புணர்வு பதாகைகளில் சைகை குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி “தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்” தலைமையில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 17 அன்று காலையில், சிவானந்தா சாலையில் கூடி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பது என போராடும் மாற்றுத்திறனாளிகள் திட்டமிட்டிருந்தனர்.

அன்றைய தினம் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடக்கவிருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தில் தாங்கள் அம்பலப்பட்டுப் போவோம் என்பதை உணர்ந்து தி.மு.க. அரசு அஞ்சியது. எனவே, அன்று அதிகாலையிலேயே போலீசு மூலம் ண்டு மாற்றுத்திறனாளிகளைப் பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு அடிப்படை வசதிகளற்ற ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்தது. இருப்பினும், தங்களது கோரிக்கையில் உறுதியாக இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அன்றைய மாலையில் மாற்றுத்திறனாளிகளைக் களைந்து போகும்படி போலீசு தெரிவித்துள்ளது. மேலும், “போராடுவதற்கு திருமங்கலத்தில் மண்டபமும் இரவு உணவும் ஏற்பாடு செய்து தருகிறோம்” என்று கூறியது. ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை பதினெட்டு பேருந்துகளில் ஏற்றி, மண்டபத்திற்குச் செல்லாமல் வெவ்வேறு திசைகளில் கடத்திச் சென்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் என்றும் பாராமல் நடுராத்திரியில் கிண்டி, மதுரவாயில், கோயம்பேடு, கிளாம்பாக்கம் என பிரித்து இறக்கிவிட்டது. பேருந்துகளிலிருந்து இறங்க மறுத்ததால் அவர்களை அங்கேயே விட்டுச் சென்றது. இதனால் மாற்றுத்திறனாளிகள் எந்தவித பாதுகாப்பும் வசதியுமின்றி பேருந்திலேயே இரவை கழித்தனர்.

இதனால் சந்தேகமடைந்து, கடைசியாக இருந்த 50-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏற மறுத்துப் போராடியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசு, அங்குள்ள மின்விளக்கைத் துண்டித்தும், பொதுக்கழிப்பறையை மூடியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இரவு 10:30 மணிக்கு மேல் செய்தியாளர்கள் சென்ற போது உள்ளே அவர்களை அனுமதிக்காமல், “ரிலீஸ் செய்துவிட்டோம் அவர்கள்தான் போக மறுக்கின்றனர்” என்று திமிர்த்தனமாக தெரிவித்துள்ளது.

ஆனால், உள்ளே இருந்த மாற்றுத்திறனாளிகள், “எங்க ஆளுங்கள அங்கங்க நடுத்தெருவுல இறக்கி விட்ருக்காங்க. நாங்க என்ன சாதாரண மனுஷங்களா? நடுத்தெருவுல இறக்கி விட்டா எங்க ஆளுங்க என்னப் பண்ணுவாங்க? இங்கே இப்போ வரைக்கும் நைட்டு சாப்பாடு கொடுக்கல. எங்க ஆளுங்க வெளிய போயி தண்ணீ வாங்கிட்டு வரவும் விடமாட்றாங்க. எங்களுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை கொடுக்கிறாங்க. மகளிர் உதவித்தொகையே 2000 ரூபாய் கொடுக்குறேன்னு சொல்ற ஸ்டாலின் ஐயா எங்களுக்கும் மனசு வச்சு உதவித்தொகையை அதிகப்படுத்தனும்தான் போராடுறோம். அதுக்கு எங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்காம யூரின் போக விடாம கொடுமைப்படுத்துவாங்களா?” என்று குமுறியுள்ளனர்.


படிக்க: மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க அரசு!


பின்னர் சி.பி.ஐ (எம்) கட்சியின் எம்.எல்.ஏ-களான நாகை மாலி, சின்னதுரை ஆகியோர் மைதானத்திற்கு வந்தப் பிறகு செய்தியாளர்களை போலீசு உள்ளே அனுமதித்தது. “போராடும் மாற்றுத்திறனாளிகளுக்கு டீயும் பிரெட்டுமாவது வாங்கிக் கொடுங்கள்” என்று சி.பி.எம். எம்.எல்.ஏ-க்களும், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, “இப்போ எந்தக் கடையும் இருக்காது சார். மவுண்ட் ரோட்ல ரெண்டு பெரிய கடைகள்தான் இருக்கும். அங்க டீ 50 ரூபாய், பன்னு 60 ரூபாய். தலைக்கு ரூ.100-200 ஆகிரும் அவ்வளவு எப்படி சார்?” என்று போலீசு துளியும் மனிதாபிமானமற்று பதிலளித்து மாற்றுத்திறனாளிகளை பட்டினி போட்டு வதைத்துள்ளது.

பின்னர் எம்.எல்.ஏ-க்கள் சென்றவுடன், “கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் விடுகிறோம் அங்கே போராடுங்கள்” என்று போலீசு மாற்றுத்திறனாளிகளிடம் தெரிவித்துள்ளது. ஆனால், “எங்க ஆட்களை இங்கே கூட்டி வாருங்கள். அப்புறம் நாங்கள் வருகிறோம்” என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைச் சகித்துக்கொள்ள முடியாத போலீசு அதிகார வெறி தலைக்கேறி, மாற்றுத்திறனாளிகளை மந்தைகளைப் போல இழுத்து பேருந்தில் ஏற்றியுள்ளது. பெண் மாற்றுத்திறனாளிகளின் மார்பில் கை வைத்தும், இழிவாகப் பேசியும் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளது. சங்கத்தின் தலைவர் ஜான்சி ராணி பேருந்திலேயே மயக்கமடைந்த போதிலும், அதனைக் கூட பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகளை அப்புறப்படுத்துவதிலேயே போலீசு குறியாக இருந்துள்ளது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட, கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை இரவோடு இரவாகப் பேருந்தில் ஏற்றி அலைக்கழித்து, இறுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளது. அங்கேயும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளது தி.மு.க அரசு. இதனையடுத்து பிப்ரவரி 18 அன்று கோயம்பேடு சாலையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் பிற பகுதியிலும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டிலேயே உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கியதை மேடைக்கு மேடை பெருமையாகப் பேசிவரும் தி.மு.க அரசு, மறுபுறத்தில் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடும் மாற்றுத்திறனாளிகள் மீது போலீசைக் கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்துகிறது. இதுதான் தி.மு.க. சொல்லும் சமூக நீதியா என்று போராடுகின்ற மாற்றுத்திறனாளிகளே கேள்வி எழுப்புகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்தியப் போலீசுகாரர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண் மாற்றுத்திறனாளிகளை இழிவாக நடத்திய போலீசு மன்னிப்பு கேட்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனை அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும் வலியுறுத்த வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க