நெல்லை ஆரோக்கியநாதபுரம்: மக்கள் நிலத்தை மோசடியாக அபகரித்த ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம்!

எங்கேயோ சொகுசாக இருந்து கொண்டு ஜோன்ஸ் நிறுவன முதலாளி உள்ளிட்டோர் ஆட்டுவிக்க, உழைக்கும் மக்களை வீதியில் இழுத்து உட்கார வைத்துவிட்டு மாவட்டத்தை நிர்வாகம் செய்கிறோம் என மக்களை ஏய்த்து நிலக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி ஆரோக்கியநாதபுரம் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசித்து வரும் கிராமமாகும். 1967-ல் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இனாம் ஒழிப்பு மூலம் தமிழ்நாடு அரசு நிலங்களை வழங்கியது.

இம்மக்களின் நிலங்கள் சிலவற்றை ஏமாற்றி வாங்கிக் கொண்ட பீமா ராஜா என்பவர் மோசடியாக பல ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பத்திரம் போட்டுக் கொண்டார். அதன்பின் 2022-ல் ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது பீமா ராஜாவிடமிருந்து 29.5 ஏக்கர் நிலத்தைக் கிரயம் செய்து கொண்டது. அதன்பின் இதே பகுதியில் உள்ள விவசாயிகளின் 86.5 ஏக்கர் நிலத்தினை (குளம் சுடுகாடு, புறம்போக்கு நிலம் உள்ளிட்டு) மோசடியாக அபகரித்து வருவாய்த்துறை, போலீசு, சாதிய தலைவர்கள், ரௌடிகள் மூலம் முழு பலத்துடன் மக்களை அப்புறப்படுத்தி அந்நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துக் கொண்டது.

மூன்று தலைமுறையாக பட்டா, EC, பத்திரம், தீர்வை ரசீது எல்லாம் சட்டப்படியாக இம்மக்கள் வைத்துள்ளனர். இருந்தும் மக்களின் விவசாய நிலத்தினை அரசியல் பெரும் புள்ளிகள் பின்புலத்தோடு அபகரித்துள்ளது ஜோன்ஸ் நிறுவனம்.

விவசாயிகள், ஊர்மக்கள், ஜனநாயக சக்திகள், மக்கள் அதிகாரக் கழகம், சி.பி.எம் ஆகியோரின் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, இப்பிரச்சினை தொடர்பான வழக்கு DRO விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஜோன்ஸ் நிறுவனம் மக்களின் நிலங்களை மோசடியாக அபகரித்தது என்பது ஊரறிந்த விசயம். இதற்கு DRO விசாரணை என்பதே ஒரு ஏமாற்று வேலைதான். இருந்த போதிலும், உழைக்கும் மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாகவே இவ்விசாரணையானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த வழக்கு DRO விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ஜோன்ஸ் நிறுவனத்திற்கு தாசில்தார் இசைவாணி, தலைமை சர்வேயர் சிவக்குமார் ஆகியோர் மோசடியாகப் பட்டா வழங்கினர்.

தனது உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்ட தாசில்தார், தலைமை நில அளவையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற மாவட்ட நிர்வாகம் இதை கைக்கட்டி வேடிக்கை பார்த்தது. இதன்மூலம் மேற்படி மோசடி கும்பலுக்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதாகவே பார்க்க முடிகிறது.

இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து கைது செய்து, சிறையிலடைக்கக் கோரி சி.பி.எம் தலைமையில் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பங்குத்தந்தை அருட்திரு. ஞானப்பிரகாசம் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் ஆட்சி கழகம் மாநில துணை பொதுச் செயலாளர் மங்கள்ராஜ் பாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை தலைவர் வே.ச.முத்துக்குமார், இந்தியப் பொதுவுடைமை கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சுந்தர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆரோக்கியநாதபுரம், வள்ளுவர் நகர், தெற்கு அரிய குளம், குத்துக்கல், நொச்சிக்குளம், முன்னீர்பள்ளம் (முல்லை நகர், மருதம் நகர்), தெற்கு வெட்டியபந்தி, வி.எம் சத்திரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நெல்லை வண்ணாரப்பேட்டையில் 16.02.2026 அன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு அதன்பின் காத்திருப்பு போராட்டமாக மாற்றப்பட்டு நடைபெற்றது. வெயிலையும், குளிரையும் தாங்கிக் கொண்டு மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இப்போராட்டத்தினால் அம்பலப்பட்டுப் போன தமது ஊழல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ள அன்று நடைபெறவிருந்த DRO விசாரணையை மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக ரத்து செய்தது. முறையாகப் பதில் கூறி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக போலீசைக் கொண்டு பெண்கள் உள்ளிட்டோரைக் கைதுசெய்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது‌. இதில் நிர்வாகிகள் 45 பேர், 231 பெண்கள் உள்ளிட்டு 276 பேர் கைது செய்யப்பட்டனர். நில அபகரிப்புக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கேயோ சொகுசாக இருந்து கொண்டு ஜோன்ஸ் நிறுவன முதலாளி உள்ளிட்டோர் ஆட்டுவிக்க, உழைக்கும் மக்களை வீதியில் இழுத்து உட்கார வைத்துவிட்டு மாவட்டத்தை நிர்வாகம் செய்கிறோம் என மக்களை ஏய்த்து நிலக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள்.

ஆரோக்கிய நாதபுரம் நிலத்தில் மட்டும் இந்த கும்பல் கைவரிசையைக் காட்டவில்லை. அருகிலிருக்கும் ராஜகோபாலபுரத்தில் ஏற்கனவே நிலங்களை மோசடியாக அபகரித்து வீடு கட்டி விற்றுள்ளது. சிவந்திபட்டியில் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு தாசில்தார் இசைவாணி, தலைமை நில அளவையர் சிவகுமார் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து கைது செய்து, சிறையிலடைக்க வேண்டும். மோசடிக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும்.

உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கியநாதபுரம் மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை அபகரிக்கும் நில மாஃபியா கும்பல்கள், துணை போகும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான களப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்.
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க