தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம் மதுரை

வரலாற்று காலத்திற்கு முன்பு இருந்து இன்றுவரை இயங்கும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மாவட்டத்தை உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.

ழுத்து தோன்றிய காலத்தை வரலாற்று காலம் என்றும் எழுத்துக்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைப்பர். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் எழுத்து வடிவம் இல்லை. மேற்பரப்பு மற்றும் அகழாய்வுகளில் பெறப்படும் கற்கருவிகள், புதைப்படிமங்கள், எலும்புகள், உலோக பயன்பாடு, குகை ஓவியங்கள் ஆகியவற்றை வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகளாக கொள்வர். தொல்லெழுத்துகள், இலக்கியங்கள், ஆவணங்கள் ஆகியவை வரலாற்று காலச் சான்றுகள். மனிதன் எழுதப் படிக்கத் தெரிந்து, தனது வரலாற்றைப் பதிவு செய்யத் தொடங்கிய காலம் “வரலாற்றுக்காலம்” எனவும், அதற்கு முந்தைய காலம் “வரலாற்றுக்கு முந்தைய காலம்” எனவும் அழைக்கப்படுகிறது. மனிதகுல வரலாற்றில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை “தொல்பழங்காலம்” என்பர்.

தொல்பழங்காலம்:

தொல்பழங்காலத்தைப் பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் என தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்துவர். இதன் அடுத்த கட்டமாகப் பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலம் அமையும்.

  1. முதல் பழங்கற்காலம் (பொ.ஆ.மு 5,00,000- 2,50,000)
  2. இடைப்பழங்கற்காலம் (பொ.ஆ.மு 2,50, 000 – 30,000
  3. கடைப்பழங்கற்காலம் (பொ.ஆ.மு 30,000-10,000)
  4. நுண்கற்காலம் (பொ.ஆ.மு இடைக்கற்காலம் (10,000-4000)
  5. புதியகற்காலம் (பொ.ஆ.மு 4000-1800)
  6. பெருங்கற்காலம் (பொ.ஆ.மு 1800-500)

என ஆறாக வகைப்படுத்தலாம்

பழைய கற்கால மதுரை:

பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடி, காட்டு பழங்களை சேகரித்து, இடம்பெயர்ந்து குகைகளில் வாழ்ந்தனர். நிரந்தர குடியிருப்பு இல்லை. நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். கற்களை உடைத்து எளிய கற்கருவிகளை (கோடாரி, குத்தாயுதம்) தயாரித்தனர்.

1863-இல் ”ராபர்ட் புரூஸ்புட்” (Robert Bruce Foote) எனும் நிலவமைப்பியல் ஆய்வாளர் தனது தொடர் ஆய்வுகளின் மூலம் தமிழ்நாட்டில் பல இடங்களில் பழங்கற்கால அமைவிடங்களை கண்டறிந்தார். மதுரை மாவட்டத்திற்கு அருகே குண்டாற்றின் ஆவியூர் எனும் இடத்தில் ராபர்ட் புரூஸ்புட் பழங்கற்கருவியைக் கண்டறிந்தார். இவ்வூர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

இடைக் கற்கால மதுரை:

இடைக் கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சிறிய, கூர்மையான கற்களை (Microliths) பயன்படுத்தினர். வேட்டை மற்றும் மீன்பிடித்தல் அதிகரித்தது. விலங்குகளை கால்நடைகளாக பழக்கப்படுத்தத் தொடங்கினர். தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்தனர்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டத்தில் பல இடங்களில் இடைக்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டாற்றின் களிமண் படுகையில் தெ.புதுப்பட்டி என்ற ஊருக்கு அருகிலும் சிவரக்கோட்டை என்ற ஊருக்கு அருகிலும் இவை கிடைத்துள்ளன.

கடைக் கற்கால மதுரை:

வேளாண்மையின் துவக்கக் காலமாக கடைக் கற்காலம் இருந்தது. கால்நடைகளை வளர்த்தனர். நிரந்தர குடியிருப்புகள் மற்றும் ஊர்கள் உருவானது. மண்ணால் பானைகள் செய்தனர். கற்களை உரசி மென்மையாக்கி மேம்பட்ட கற்கருவிகளை கடைக் கற்கால மனிதர்கள் செய்தனர்.

திருமங்கலம் வட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, தே. கல்லுப்பட்டி, சென்னம்பட்டி, கருவேலம்பட்டி, உசிலம்பட்டி வட்டத்தில் திடியன், மதுரை வட்டதில் கோவலன், பொட்டல் ஆகிய ஊர்களில் மலைக்குன்றின் அடிவாரங்களிலும் கடைக்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதிய கற்கால மதுரை:

கடைக் கற்காலத்தின் இறுதி பகுதியாக புதிய கற்காலம் அமைந்தது. மதுரை மாவட்டத்தில் மதுரைக்குத் தெற்கில் புதிய கற்காலக் கருவிகளை வெள்ளாங்குளம் என்னுமிடத்தில் ராபர்ட் புரூஸ்புட் கண்டறிந்துள்ளார். அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மதுரை மாவட்டம் துவரிமான் என்னும் ஊரில் வைகைக் கரையில், புதிய கற்காலக் கருவிகள் சிலவற்றைக் (கோடாரிகள் ) கண்டறிந்தார்கள். கோவலன் பொட்டல் அகழாய்வில் உடைந்த ஒரு புதிய கற்காலக் கருவி வெளிப்பட்டது.

பெருங்கற்கால மதுரை:

பெருங்கற்காலம் என்பது புதிய கற்காலத்திற்கு பிந்தைய காலமாகும். இந்த காலத்தில் மக்கள் பெரிய கற்களை பயன்படுத்தி ஈம நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்லறைகளை அமைத்தனர். கல்பதுக்கை, கற்திட்டை, கல்வட்டம், நெடுங்கல் அமைத்து இறந்தவர்களை புதைத்து நினைவுச் சின்னங்கள் அமைத்தனர். இதனை பெருங்கற்படைச் சின்னங்கள் என்பர். மலைக்குன்றுகள் உள்ள இடங்களில் பெருங்கற்படை சின்னங்கள் காணப்படுகின்றன. சமவெளிகளில் ஊருக்கு வெளியே முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

மதுரை மாவட்டத்தை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் இம்மாவட்டத்தில் எல்லா ஊர்களிலும் ஒரு தாழி இருப்பிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர் என மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு நூல் தெரிவிக்கிறது. பெருங்கற்படைச் சின்னங்கள் என்பது சங்க கால மக்களின் ஈமக்காடு அல்லது புதைப்பிடம் என்கிற கருத்தும் ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.

மேலூர் நரசிங்கம்பட்டி, கருங்காலக்குடி, பால்குடி, குன்னங்குடிபட்டி, வஞ்சிநகரம், வாடிபட்டி குலசேகரன்கோட்டை, உசிலம்பட்டி அல்லிகுண்டம், திருமங்கலம் செங்குளம், பேரையூர் ஆகிய பகுதிகளில் பெருங்கற்படை சின்னங்கள் காணப்படுகின்றன. பரவை, துவரிமான், தாதம்பட்டி, அனுப்பானடி, திருமங்கலம் ஆகிய ஊர்களில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொன்மையான குகை ஓவியங்கள்:

புதிய கற்கால மற்றும் இரும்புகால பண்பாட்டை விளக்கும் தொன்மையான குகை ஓவியங்கள் என்றழைக்கப்படும் பாறை ஓவியங்கள் மதுரை மாவட்டத்தில் பல்வேறு மலைகளில் கண்டறியப்பட்டுள்ளன. புலிபட்டி, அழகர்மலை கிடாரிபட்டி, கீழக்குயில்குடி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, திருவாதவூர், கல்லூத்து மேட்டுப்பட்டி, நடுமுதலைக்குளம், கருங்காலக்குடி, கீழவளவு, மூன்றுமலை வகுரணி, புத்தூர்மலை மலைப்பட்டி, தேவன்குறிச்சிமலை, தே.கல்லுப்பட்டி, பூசாரிபட்டி, பரங்கிரி பேரையூர், மூலிக்கல், பேரையூர், வாசிமலை தொட்டப்ப நாயக்கனூர், மேலவளவு ஆகிய பகுதிகளின் மலைப் புடவுகளில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

சங்க கால ஊர்கள்:

வரலாற்றுக் காலத்தின் துவக்கமாக தமிழ்நாட்டில் சங்க காலம் அமைந்தது என்பர். கி.மு. 300 முதல் கி.பி. 300-க்கு இடைப்பட்ட காலத்தை சங்க இலக்கிய காலம் என்று கூறி வந்தனர். கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள் தமிழியின் காலத்தை கி.மு. 600 வரை எடுத்துச் சென்று இருக்கிறது. கீழடி சங்க கால ஊர் என்பதை அகழாய்வு சான்றுகள் பகிர்கின்றன்.

ஈராயிரமாண்டு பழைமையான தமிழிக் கல்வெட்டுகள் காணப்படும் சித்தர்மலை, முதலைக்குளம், விக்கிரமங்கலம், புளிங்குன்றூர், குயில்குடி, நாடாற்றுப்புறம், மாங்குளம், அரிட்டாபட்டி, ம.குன்னத்தூர், திருவாதவூர், கீழவளவு, கருங்காலக்குடி, திருமலை ஆகிய மலைக் குன்றத்து ஊர்களையும் சங்க கால ஊர்களாக கொள்ளலாம்.

கூடல், மதுரை, பரங்குன்று, பறம்பு, மாலிருங்குன்றம், மோகூர், தேனூர் ஆகிய ஊர்கள் குறித்து சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இவகுன்றம் (யானைமலை), விந்தையூர் (வண்டியூர்), நாகப்பேரூர் (நாகமலை), வெள்ளறை (வெள்ளரிப்பட்டி), எருக்காட்டூர், மதிரை (மதுரை), திடியில் (திடியன்), பாங்காடு (பனங்காடி), ஏழையூர் (கருங்காலக்குடி) ஆகிய ஊர்களின் பெயர் மதுரையைச் சுற்றியுள்ள மலைக் குன்றுகளின் தமிழிக் கல்வெட்டுகளில் இடம் பெறுகின்றன. இவ்வூர்கள் ஈராயிரமாண்டுகளாக இயங்கிவரும் மதுரை வட்டார சங்க கால ஊர்களாக அறிய முடிகிறது.

மதுரை:

ஈராயிரமாண்டுகளுக்கு மேலாக இயங்கும் உலகின் ஒரு சில நகரங்களில் மதுரையும் ஒன்று. துவக்கத்தில் ஆலவாய், கூடல், நடுவூர் ஆகிய மூன்று ஊர்களின் தொகுப்பு மதுரை என்று அழைக்கப்பட்டது. பண்பாட்டுத் தலைநகரம், கோயில் நகரம், தூங்காநகரம் என பல சிறப்பு பெயர்களை தாங்கி நிற்கிறது. இலக்கியங்களில் மதுரை என்றும், தமிழிக் கல்வெட்டுகளில் மதிரை எனவும் குறிப்பிடப்படுகிறது. தாமரை இதழ் போன்ற அடுக்கடுக்கான தெருக்கள், அத்தெருக்களின் மையத்திலிருந்த கோயில் பற்றி பரிபாடல் பாடுகிறது. பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள பழையக் கோட்டை வாசலின் எச்சம், கீழவாசல் அருகேயுள்ள விட்டவாசல், ஆவண வீதி, காவற்கூடத் தெரு, அக்காசு தெரு, பாண்டியன் அகழ் தெரு ஆகியன கோட்டைக் கொத்தளங்களுடன் விளங்கிய பழைய மதுரையை நினைவூட்டுகின்றன.

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, பத்துதூண் வீதி, ராயர் மண்டபம், புது மண்டபம், இராணி மங்கம்மாள் எழுப்பிய அரண்மனையும் (காந்தி அருங்காட்சியகம்), தமுக்கம் மைதானமும் மதுரை நகரின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டடக்கலை தொடர்ச்சிக்கு சான்றாக உள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில், கூடல் அழகர் கோயில் மதுரையின் தொன்மையான கோயில்களாகும்.

தமிழிக் குன்றுகள்:

தமிழி என்பது தமிழில் எழுதப் பயன்படுத்தப்பட்ட மிகப் பழைமையான எழுத்து முறையாகும். இது அசோகர் பிராமி எழுத்தில் இருந்து தோன்றியது எனக் கருதி “தமிழி பிராமி” என்று அழைத்து வந்தனர். அசோகர் காலத்திற்கு முன்பே தமிழ்நாடு தனித்துவமான எழுத்துமுறையைக் கொண்டிருந்ததால், அசோகர் பிராமியை விட தமிழி எழுத்துமுறை தொன்மையானது என்பதை கீழடி அகழாய்வு உறுதி செய்தது.

தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த தமிழி எழுத்து முறை கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. பானை ஓடுகள், நடுகல், மலைகுன்றுகள், நாணயங்கள், தங்கக்கட்டிகள், மேலை நாட்டு கல்லறைகள் ஆகியவற்றில் தமிழி எழுத்துமுறை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 30 மலைக்குன்றுகளில் தமிழி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதில் 15 மலைக்குன்றுகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன.

நரசிங்கம் யானைமலை, மாங்குளம் கழுகுமலை, அரிட்டாபட்டி கழிஞ்சமலை, கிடாரிப்பட்டி அழகர்மலை, கருங்காலக்குடி பஞ்சபாண்டவர் மலை, கீழவளவு பஞ்சபாண்டவர் மலை, திருவாதவூர் ஓவாமலை, ம.குன்னத்தூர் மலை, புளிங்குன்று, திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி சமணர் மலை, முத்துப்பட்டி பெருமாள்மலை, நடுமுதலைக்குளம் பெரிய உண்டங்கல், விக்கிரமங்கலம் சின்ன உண்டங்கல், கல்லூத்து சித்தர்மலை உள்ளிட்ட 15 மலைக்குன்றுகளில் 61 தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த 15 மலைக்குன்றுகளையும் ஒரு தொகுப்பாக ”மதுரை தமிழிக் குன்றுகள்” என்னும் பெயரில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.

மதுரையின் நடுகற்கள்:

தங்களுக்காக உயிர்நீத்தோரை வணங்கி வழிபடும் மரபு சங்க காலம் முதல் இக்காலம் வரை நீடிக்கும் தமிழ் மரபாகும். போரில் வீர மரணம் எய்திய வீரர்கள், செயற்கரிய செயல் புரிந்த சான்றோர்கள், வடக்கிருந்து உயிர்நீத்தவர்கள் என பிறருக்காக வாழ்ந்து உயிர் துறந்தவர்கள் நினைவாக நடுகல் ஊன்றி, நன்னீராட்டி, மலர்கள் மற்றும் மயில் தோகையால் அலங்கரித்து, நெய் ஊற்றி விளக்கேற்றி, நறுமணப் புகை போட்டு, பூசை செய்து, ஆடு அறுத்து குருதிப் பலி கொடுத்து தமிழர்கள் வழிபட்ட செய்திகளை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

எழுத்துடை நடுகல் (எழுத்துடைய நடுகல்) குறித்து சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நிலக்கோட்டை அருகே தாதப்பட்டியிலும், உசிலம்பட்டி அருகே கெங்கம்பட்டியிலும் தமிழிக் கல்வெட்டுக் பொறித்த இரண்டு நடுகற்கல் கிடைத்துள்ளன. கி.பி. 10-11 நூற்றாண்டைச் சேர்ந்த வீரன் சிலையுடன் காணப்படும் நடுகற்கள் கொட்டாம்பட்டி வெள்ளிமலையில் காணப்படுகின்றன. போரில் இறந்த வீரனோடு, அவனது மனைவியும் உடன்கட்டை ஏறியதை கூறும் 16, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “சதிகற்கள்” மதுரையில் விரவிக் கிடக்கின்றன.

பல்சமயங்களின் கூடல் மதுரை:

தாய் தெய்வ வழிபாடு, முருக வழிபாடு, சைவ, வைணவ, சமண, பௌத்த, இசுலாமிய, கிறித்துவம் உள்ளிட்ட பல சமயங்களின் கூடலாக மதுரை விளங்குகிறது. சங்க காலத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அதில் நடந்த விழா குறித்தெல்லாம் அகநானூறு பாடல் (59 & 149) குறிப்பிடுகிறது. சங்க கால திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது. தாமரையின் இதழ் போன்று மதுரை நகரின் தெருக்களும், தாமரை மலரின் நடுவில் உள்ள குவிந்த பொகுட்டு போன்று அண்ணல் கோயிலும் இருந்தது எனவும், அம்மலரில் காணப்படும் தாதுக்களை போல தமிழ் குடிகள் நிறைந்து இருந்தனர் எனவும் பரிபாடல் (30) குறிப்பிடுகிறது. அண்ணல் கோயில் என்பதை இன்றைய மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்று ஒருசாரரும், பாண்டியனின் அரண்மனை என்று ஒருசாரரும் கருதுகின்றனர். பரிபாடல் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட இலக்கியம் என்றும் தமிழறிஞர்களிடைய கருத்துகள் நிலவுகின்றன.

மதுரை மாவட்ட உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள கல்லூத்து சித்தர்மலையில் காணப்படும் “அமண உதயணச” என்ற பெயர் பொறித்த தமிழிக் கல்வெட்டைச் சான்றாக கொண்டு, மதுரையில் கி.மு. 1-2-ஆம் நூற்றாண்டில் சமண சமயம் வந்துவிட்டது எனக் கருதுவர். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை இயற்றிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பௌத்த மதத்தை தழுவினார். சங்க கால புலவரான சீத்தலை சாத்தனார் காலத்தில் மதுரையில் பௌத்த சமயம் புகழ்பெற்றிருந்தது என்பர்.

அழகர் மலை ஆதியில் பௌத்தக் கோயிலாக இருந்தது என தொ.பரமசிவன் தனது “அழகர் கோயில்” நூலில் குறிப்பிடுகிறார். பாண்டிக் கோயிலில் இருக்கும் பாண்டி முனி சிலை பௌத்த சிலை என்று மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு தெரிவிக்கிறது. பாண்டிய மன்னனின் கோட்டையில் காவல் வீரர்களாக யவனர்கள் இருந்தனர் என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். யவனர்கள் என்பவர்கள் ரோமானியர்களாக அல்லது அரேபியர்களாக இருக்கலாம்.

சமணத் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள்:

தமிழி கல்வெட்டுகள் காணப்படும் யானைமலை, சமணர் மலை, கீழவளவு, திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, அழகர்மலை, கருங்காலக்குடி, பொய்கைமலை (தமிழிக் குன்றல்ல) உள்ளிட்ட ஒன்பது மலைகளில் கி.பி. 9-10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 46 சமணத் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வடுகபட்டி, முத்துபட்டி, கீழ உப்பிலிகுண்டு, காரைக்கேணி, செங்கமேடு, கவசக்கோட்டை, வேளாம்பூர் ஆகிய பகுதிகளில் மகாவீரர் சிலைக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புத்தூர் மலையில் சமண தீர்த்தங்கர் போன்ற தோற்றத்தைக் கொண்ட மூன்று புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.

மதுரை மாவட்ட குடைவரைக் கோயில்கள்:

குடைவரை கோயில்கள் என்பது மலைகள் அல்லது பாறைகளை உள்ளே குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கற்களை ஒன்று சேர்த்து கட்டிய கோயில்கள் அல்ல; இயற்கை மலைப்பாறைகளில் செதுக்கப்பட்டவை. பீகார் மாநிலத்தில் உள்ள பாராபர் ஆஜீவக குடைவரை கோயில் இந்தியாவின் பழைமையான குடைவரைக் கோயில் ஆகும். இது கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு குடைவரை கோயிலும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில்கள் தமிழ்நாட்டின் பழைமையான குடைவரைக் கோயில்கள் ஆகும். கி.பி. 770-இல் நரசிங்கம் பெருமாள், குடைவரை கோயிலும், கி.பி. 773-இல் திருப்பரங்குன்றம் சிவன் கோயிலும் மதுரை மாவட்டத்தின் பழைமையான கோயில்கள் ஆகும். அரிட்டாபட்டி, ம.குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளையும் சேர்த்து ஒன்பது குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன.

மதுரையில் இசுலாம்:

மதுரைக் கோட்டையில் யவனர்கள் காவல் வீரர்களாக இருந்த செய்தியை சிலப்பதிகாரம் கூறிகிறது. 1850-களில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நெல்சன் எழுதிய குறிப்புகளில் இருந்து கி.பி. 1050-களில் இசுலாம் மார்க்கம் மதுரைக்கு வந்துவிட்ட செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. போகர் சித்தர் எழுதிய “சத்தகாண்டம் ஏழாயிரம்” பாடலின் வழியே சிக்கந்தர் என்னும் இசுலாமிய துறவி கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றம் வந்திருக்கலாம் எனக் கருதலாம். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் காஜிமார் பள்ளிவாசலுக்கும், கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்கும் பாண்டிய மன்னர்கள் ஆதரவளித்து இருக்கிறார்கள் என்கிற செய்தியை அப்பள்ளிவாசல்களில் காணப்படும் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. பிற்படுத்தபட்ட மற்றும் பட்டியலின மக்கள், இசுலாமியர்களை மாமா, மருமகன், பங்காளி, மானான், அப்பு, சீயான் என உறவு பெயர் சொல்லி அழைக்கும் வழக்கும் மதுரையின் தனி சிறப்பு.

மதுரையில் கிறித்துவம்:

வீரப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1572-1595) போர்த்துக்கீசிய நாட்டிலிருந்து மதுரைக்கு வந்த பெர்னாண்டஸ் பாதிரியார் தலைமையில், கி.பி. 1592 அளவில் மதுரை சமயப் பணிக்கழகம் துவங்கப்பட்டுள்ளது. வீரப்ப நாயக்கரின் அனுமதியுடன், மதுரையில் மாதா கோயில் ஒன்றைக் கட்டியதோடு, குருமார்கள் குழுவை உருவாக்கி பணி செய்த பெர்னாண்டஸ் பாதிரியார் 14 ஆண்டுகள் மதுரையில் தங்கி இருந்தார். முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சியிலிருந்த காலத்தில் (1601 – 1609) இத்தாலி நாட்டைச் சேர்ந்த இராபர்ட்-டி-நொபிலி, நேப்பில்ஸ் நகரிலிருந்த ஏசு சபையில் கிறித்துவ சமயக் கல்வியைப் பயின்று, 1606 அளவில் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாராக மதுரைக்கு வந்து கிறித்துவ சமயத்தைப் பரப்பினார். கீழவாசல் புனித மேரி அன்னை திருத்தலம், புதூர் லூர்து அன்னை திருத்தலம், புனித ரோசரி அன்னை திருத்தலம், புனித ஜார்ஜ் திருத்தலம் ஆகியவை மதுரையின் பழைமையான கிறித்துவ திருத்தலங்கள் ஆகும். 1812-1828 காலப்பகுதியில் மதுரை கலெக்டராக இருந்த ரௌஸ் பீட்டர் (Rous Peter) பரிசளித்த தங்கக் காலணிகள் (பாதுகம்) சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு அணிவிக்கப்படுகின்றன என்பது மதுரையின் சிறப்புகளில் ஒன்று.

வரலாற்று காலத்திற்கு முன்பு இருந்து இன்றுவரை இயங்கும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மாவட்டத்தை உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.


தமிழ்தாசன்,
பண்பாட்டு சூழலியலாளர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க