டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

0
பிப்ரவரி 20, 2026 அன்று ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள டிஐடி முகாமில் அதிகாரிகள் அறிவிப்பு மற்றும் ஒதுக்கீட்டுப் பத்திரத்தை ஒட்டினர்.

டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இல்லத்திற்கு அருகே பாய் ராம் முகாம், மஸ்ஜித் முகாம் மற்றும் டி.ஐ.டி (DID Camp) என்ற பெயரில் மூன்று குடிசைப் பகுதிகள் அமைந்துள்ளன. தினக்கூலி வேலையினை நம்பி 717 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன.

இந்நிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மூலம் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “மார்ச் 6 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என்று அடாவடித்தனமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில் “மத்திய டெல்லியிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள சவ்தா கெவ்ராவில் குடியிருப்பாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் (DUSIB – Delhi Urban Shelter Improvement Board) கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

மறுவாழ்வுக் கொள்கையின் கீழ், நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மற்றும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) ஜனவரி 2024 இல் நடத்திய கூட்டு ஆய்வைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிசைப் பகுதியினை சுற்றியே அன்றாடம் கூலி வேலைகள் செய்து தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்ற மக்களுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அவர்களின் கல்வியையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக குடிசைப் பகுதியில் வசித்து வரும் தாமு, கூறுகையில் “இங்கே பலருக்கு நிலையான வேலைகள் இல்லை. அவர்கள் தினசரி கூலியை நிர்வகிக்கின்றனர்; உணவுக்காகப் போராடுகின்றனர். ஊரடங்கின் போது, பலர் பசியால் வாடினர். எங்களை 40–45 கிலோமீட்டர் தூரம் அனுப்பினால், மக்கள் வேலைக்காக எப்படிப் பயணிப்பார்கள்? அவர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பல வயதான குடியிருப்பாளர்களுக்கு இந்த வெளியேற்ற அறிவிப்பு, பல தலைமுறையாக அந்தப் பகுதியில் வாழ்ந்த வாழ்க்கை திடீரென வேரோடு பிடுங்கப்படுவது போல் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் 25 வருடங்களாகக் குடிசைப் பகுதியில் தனது வீட்டை மூன்று குடும்பங்கள் பகிர்ந்து கொண்டு வசித்து வரும் 48 வயதான அஞ்சு “தொலைதூரத்தில் உள்ள ஒரு சிறிய பிளாட்டில் நாங்கள் எப்படி அனுசரித்துச் செல்வோம்? எங்கள் குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள், எங்கள் கணவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள். நாங்கள் வெகுதூரம் அனுப்பப்பட்டால், அவர்கள் தினமும் எப்படிப் பயணம் செய்வார்கள்? யாராவது எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: டெல்லி: தமிழர்களின் குடியிருப்பை தரைமட்டமாக்கிய பா.ஜ.க அரசு


இடமாற்றத்தின் நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள குடியிருப்பாளர்களில் ஒருவரான கமலா கூறுகையில், “நான் இங்கே எனது வீட்டைக் கட்ட நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளேன். இப்போது அந்தப் பணத்திற்கு என்ன நடக்கும்? அவர்கள் ‘ஜஹான் ஜுக்கி, வஹான் மகன்’ என்று சொல்வார்கள். தலைவர்கள் வாக்கு கேட்டு வந்து வாக்குறுதிகளை அளித்தனர். இப்போது யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை.” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நோட்டிஸ் வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மக்களை வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து குடிசைப் பகுதி மக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் “குடிசைப் பகுதி மக்களைச் சரியான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியேற்றக் கூடாது. இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு ஜனவரி 13 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அன்றைய தினம், அரசு மேலும் நான்கு மாதம் அவகாசம் கேட்டதன் அடிப்படையில் மே 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகதியில் மக்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

முக்கியமாக ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைப் பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டு, அங்கிருந்து மக்கள் துரத்தி அடிக்கப்பட்டுவருவது தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அதாவது குடிசைகள் உள்ள இடத்திலேயே வீடுகள் கட்டித்தரப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்தது மட்டுமல்லாமல், மறுவாழ்வுக் கொள்கை என்ற பெயரில் மக்களுக்குக் கிடைத்து வருகின்ற குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையும் அழிக்கின்ற நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பாசிச மோடி அரசு.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க