ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டுச் சர்வாதிகாரம் ஆகிய "இரட்டை எதிரிகளை" ஒரே நேரத்தில் எதிர்கொள்ள, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஒரு பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டமைப்பதே காலத்தின் கட்டாயமாகும். இந்த ஐக்கிய முன்னணி என்பது வெறும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல; அது போராடும் வர்க்கங்களின் கூட்டணியாக அமைய வேண்டும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக உறுதியுடன் போராடிவரும் ஈரான் மக்கள்.

ரலாற்றின் மிக இக்கட்டானதொரு அரசியல் சூழலில் ஈரான் சிக்கியுள்ளது. ஒருபுறம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான பொருளாதாரத் தடைகள்; மறுபுறம், அந்தத் தடைகளையே வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தன் சொந்த மக்களைச் சுரண்டும் ஈரானிய மத அடிப்படைவாத அரசின் பாசிச ஒடுக்குமுறை. இந்த இரட்டைத் தாக்குதலுக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் ஈரானிய உழைக்கும் வர்க்கம், இன்று வீதிக்கு வந்துள்ளது. ஈரானிய வரலாற்றில் இது முக்கியமான தருணமாகும்.

“ரொட்டி, வேலை, சுதந்திரம்” என்று ஈரானிய தெருக்கள் தோறும் எழுப்பப்படும் முழக்கங்கள் வெறும் ஆட்சி மாற்றத்திற்கானவை மட்டுமல்ல; அவை நாற்பது ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் ஜனநாயக வேட்கைக்கான எரிமலை வெடிப்பாகும்.

இந்தப் போராட்டங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஈரானின் மதவாத அரசைக் கவிழ்த்து, இலங்கை – வங்கதேச பாணியில் தனது பொம்மை அரசை நிறுவத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். எந்த வகையிலும் இதைச் செய்து முடிக்க வேண்டுமென்ற வெறியுடன் கடற்படைகளைக் கொண்டு ஈரானை முற்றுகையிட்டு வருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் மக்கள் போராட்டத்தின் வேர்களைப் புரிந்துகொள்ள, கடந்த நாற்பது ஆண்டு கால ஈரானின் பொருளாதாரப் பாதையை ஆய்வு செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, மக்கள் சொத்துக்கள் எவ்வாறு மதகுருமார்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றன என்பதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும்.

அரசு-மதத் தரகு முதலாளித்துவம்: ‘போனியாதுகளின்’ ஆதிக்கம்

1979-இல்  ஷா மன்னன் ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதற்கு பிந்தைய காலகட்டத்தில், ஷா மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. மேலோட்டமாகப் பார்க்கும் போது சோசலிசத் திசையிலான நடவடிக்கையாகத் தோன்றிய இது, உண்மையில் மக்கள் சொத்துக்களை மதகுருமார்களின் இரும்புப் பிடிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாகவே முடிந்தது. ஈரானின் ஆளும் வர்க்கம் எப்படி மாறியது என்பதைப் புரிந்துகொள்ள இது மிக அவசியம்.

இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் “போனியாதுகள்” (Bonyads) எனப்படும் மத அறக்கட்டளைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ‘அஸ்தான் குத்ஸ் ரசாவி’ மற்றும் மதத் தலைவரின் நேரடிப் பார்வையில் இயங்கும் ‘செதாத்’ போன்ற அமைப்புகள், ஈரானின் எண்ணெய் அல்லாத பொருளாதாரத்தில் சுமார் 20 முதல் 30 சதவிகிதம் வரை (சில மதிப்பீடுகளில் 40 சதவிகிதம் வரை) கட்டுப்படுத்துகின்றன. இதன் மூலம் அரசுக்குள்ளேயே இயங்கும் ஒரு நிழல் அரசாகவே திகழ்கின்றன.

இந்த அறக்கட்டளைகள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கோ கணக்குக் காட்ட வேண்டியதில்லை; இவற்றுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவை உச்சபட்ச மதத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு ‘கும்பல் பொருளாதாரமாக’ மாறி, நாட்டின் பொதுச் செல்வத்தை ஒரு சிறு கூட்டத்திடம் குவித்துள்ளன.

பின்னாட்களில் அரசு முன்னெடுத்த ‘தனியார்மயமாக்கல்’ நடவடிக்கைகளில், அரசு நிறுவனங்கள் விற்கப்பட்டபோது, அவற்றை வாங்கியது உண்மையான தனியார் முதலாளிகள் அல்ல; மாறாக, இந்த மத அறக்கட்டளைகளும், ஈரானியப் புரட்சிகரப் பாதுகாவலர் படையின் துணை நிறுவனங்களும்தான். இதுபோல, மக்கள் நலனுக்கு பயன்படாத வகையில் செல்வத்தைக் குவித்ததே ஈரானியப் பொருளாதாரத்தின் தேக்கநிலைக்கு முக்கியக் காரணமாகும். இவ்வாறு மதகுருமார்களின் கையில் குவிந்த பொருளாதாரம், அடுத்த கட்டமாக உலக வங்கியின் வழிகாட்டுதலோடு நவதாராளவாதச் சுரண்டலுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது.

‘நவதாராளவாதத்’ தாக்குதல்: ஐ.எம்.எஃப். வழியில் ஈரான்

1988-இல் ஈரான்-ஈராக் போர் முடிவுக்கு வந்த பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. அதுவரை “ஏகாதிபத்திய எதிர்ப்பு” மற்றும் “தற்சார்பு பொருளாதாரம்” என்று பேசிவந்த ஈரானிய ஆட்சியாளர்கள், போருக்குப் பிந்தைய “மறுகட்டமைப்பு” என்ற பெயரில், தங்களது கொள்கையைத் தலைகீழாக மாற்றினர். அரசியல் மேடைகளில் “பெரிய சாத்தான்” என்று அமெரிக்காவை விமர்சித்துக் கொண்டே, பொருளாதாரக் கொள்கையில் அதே அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் விசுவாசமான சீடர்களாக மாறினர்.

1990-களில் அப்போதைய அதிபர் அக்பர் ஹுசைனி ரஃப்சஞ்சானி, ஐ.எம்.எஃப்-இன் “கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டத்தை” ஏற்றுக்கொண்டார். இதன் விளைவாக, மக்களுக்கான உணவு மற்றும் எரிபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, பொருட்கள் சந்தை விலைக்கு விற்கப்பட்டன. 2011-இல் பயனாளிகளுக்கு நேரடியாக மானியத்தைக் கொடுக்கும் ஈரானின் “மானியச் சீர்திருத்தச் சட்டத்தை” உலக வங்கி பாராட்டியது, ஈரான் அரசின் மக்கள் விரோதப் போக்கிற்குச் சான்றாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 44 திருத்தப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. ஆனால், இந்த நிறுவனங்களை “இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாவலர் படை” (IRGC) மற்றும் மத அறக்கட்டளைகள் வாங்கியதன் மூலம், அரசுக்குள்ளேயே ஒரு ‘தனியார் சாம்ராஜ்யம்’ உருவானது.

இந்த நவதாராளவாதக் கொள்கையின் மிகக் கொடூரமான தாக்குதல் தொழிலாளர் வர்க்கத்தின் மீதுதான் விழுந்தது. ஈரானியத் தொழிலாளர் செய்தி நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத் தரவுகளின்படி, இன்று ஈரானில் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பணிப்பாதுகாப்பற்ற தற்காலிக ஒப்பந்தங்களில் உள்ளனர். ஊதியம், பணிக்காலம், சலுகைகள் என எதுவும் குறிப்பிடப்படாத வெற்றுத் தாள்களில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்தும் “வெள்ளை ஒப்பந்தங்கள்” ஒரு நவீனக் கொத்தடிமை முறையாக மாறியுள்ளது.

ஈரானியத் தொழிலாளர் செய்தி நிறுவன அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் பன்மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு தொழிலாளியின் மாதச் சம்பளம், அவரது குடும்பத்தின் 5 அல்லது 6 நாட்களுக்கான செலவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்ற அளவுக்கு மோசமான அவலநிலை நிலவுகிறது.

தடைகளும், ஐ.ஆர்.ஜி.சி. எனும் ‘இராணுவ-வணிக’ ஏகபோகமும்

ஈரானிய மக்களின் துயரத்திற்கு மற்றொரு முக்கியக் காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள். 2012-இல் ஸ்விஃப்ட் (SWIFT) வங்கி அமைப்பிலிருந்து நீக்கம் மற்றும் 2018-இல் டிரம்ப் அறிவித்த “அதிகபட்ச அழுத்தம்” (Maximum pressure campaign) ஆகியவை ஈரானின் பொருளாதார நரம்புகளைத் துண்டித்தன. உயிர் காக்கும் மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால், அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருந்துக் கட்டுகள் கிடைக்காமல், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முரண்பாடாகத் தோன்றினாலும், அமெரிக்கத் தடைகள் ஈரானின் ஆளும் வர்க்கமான ‘இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாவலர் படைக்கு’ (ஐ.ஆர்.ஜி.சி.) ஒரு பொன்னான வணிக வாய்ப்பாகவே அமைந்தது. தடைகளை மீறி வர்த்தகம் செய்வதில் வெனிசுலா மற்றும் கியூபா போன்ற நாடுகளுடன் ஈரானை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. கியூபா போன்ற நாடுகள் ஏகாதிபத்தியத் தடைகளைத் தகர்த்து மக்களின் பசியைப் போக்குவதற்காகப் போராடுகின்றன. ஆனால், ஈரானில் நிலைமை நேர்மாறானது. இங்கு ‘தடைகளை உடைத்தல்’ என்ற பெயரில் நடக்கும் நிழல் வர்த்தகம் மக்களின் நலனுக்கானது அல்ல; மாறாக, ஐ.ஆர்.ஜி.சி-யின் கஜானாவை நிரப்பும் ஏகபோக வணிகமாகும்.

இந்த ஐ.ஆர்.ஜி.சி. என்பது போனியாதுகளைப் போன்றே மதவாத சர்வாதிகாரத்தின் ஒரு தனிச்சிறப்பான சுரண்டல் கட்டமைப்பாகும். ஈரானின் அதிகாரப்பூர்வ இராணுவத்தைக் காட்டிலும் அதிநவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் விரிவான உளவுப் படை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இது, ‘அரசுக்குள் இயங்கும் அரசு’ ஆகும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, உச்சபட்சத் தலைவருக்கு மட்டுமே கட்டுப்படும் இந்த இராணுவம், நடைமுறையில் ஈரானின் பெரும் பொருளாதார ஏகபோகங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கார்ப்பரேட் கும்பலாகச் செயல்படுகிறது.

ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் (2011), ஐ.ஆர்.ஜி.சி-யை “எங்கள் கடத்தல் சகோதரர்கள்” என்று அழைத்தார். அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இரகசியத் துறைமுகங்கள் வழியாக, வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட சொகுசுப் பொருட்களும், தரம் குறைந்த நுகர்வுப்பொருட்களும் உள்ளே வருகின்றன. இது சட்டப்படி வரி செலுத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகர்களின் முதுகெலும்பை ஒடிக்கும் செயலாகும். அமெரிக்கத் தடையைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் போட்டி நிறுவனங்களை விரட்டிவிட்டு, ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளை ஐ.ஆர்.ஜி.சி-யின் கட்டுமானப் பிரிவான ‘காதம் அல்-அன்பியா’ ஏகபோகமாகக் கைப்பற்றியுள்ளது. இந்த நிழல் பொருளாதாரத்தின் லாபம், சிரியா மற்றும் லெபனானில் ஈரானின் செல்வாக்கை நிலைநாட்டவும், தளபதிகளின் தனிப்பட்ட ஊழல் கணக்குகளுக்கும் செல்கிறது.

பஜார் வர்த்தகர்களின் போர்க்குரல்: கடைசித் தூண் சரிந்தது

ஈரானிய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் தெஹ்ரானின் “பெரிய பஜார்” இருந்துள்ளது. 1979-இல் ஷா மன்னனின் ஆட்சியை வீழ்த்த, மதகுருமார்களுக்குப் பக்கபலமாக இருந்த வர்த்தகர்கள், இன்று அதே மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இது இஸ்லாமியக் குடியரசு தனது கடைசித் தூணையும் இழந்துவிட்டதைக் காட்டுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் நாணய மதிப்புச் சரிவு மற்றும் ஐ.ஆர்.ஜி.சி-யின் நியாயமற்ற போட்டியாகும். டிசம்பர் 2025 இறுதியில், கள்ளச்சந்தையில் ஒரு டாலரின் மதிப்பு 15 லட்சம் ரியால்களைத் தொட்டது. இதனால் வர்த்தகம் செய்வது சாத்தியமற்றதாகிவிட்டது. மேலும், ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, சாதாரண வர்த்தகர்கள் இறக்குமதிக்கு அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஐ.ஆர்.ஜி.சி. தங்களுக்குச் சொந்தமான துறைமுகங்கள் வழியாக வரி ஏதுமின்றி அதே பொருட்களைக் கொண்டு வந்து, சந்தையில் குறைந்த விலைக்கு விற்றுப் பாரம்பரிய வர்த்தகர்களை அழிக்கிறது.

இதன் விளைவாக, வழக்கமாகப் பொருளாதாரச் சலுகைகளுக்காக மட்டுமே போராடும் வர்த்தகர்கள், இம்முறை அரசியல் முழக்கங்களை முன்னெடுத்துள்ளனர். “பீரங்கிகள், டாங்கிகள், வெடிகுண்டுகள் – இனி எதற்கும் பயனில்லை, முல்லாக்களே வெளியேறுங்கள்” என்ற முழக்கம் 2018-க்குப் பிறகு இப்போது 2026-இல் மீண்டும் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

2026 நிதிநிலை அறிக்கை: மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரப் போர்

ஏற்கெனவே கொதிநிலையில் இருந்த மக்கள் கோபத்தை, ஒரு பெரும் எழுச்சியாக மாற்றிய உடனடித் தூண்டுகோல், டிசம்பர் 2025-இல் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான வரைவு நிதிநிலை அறிக்கையாகும். அதிபர் மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான அரசு தாக்கல் செய்த இந்த நிதிநிலை அறிக்கை, ஒரு “வரிப் பயங்கரவாதப் பிரகடனமாகவே” பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு மன்றம் (Middle East Forum) மற்றும் ஐ.எஸ்.டபுள்யூ. (ISW) அறிக்கைகளின்படி, அமெரிக்கத் தடைகளால் எண்ணெய் வருவாய் குறையும் என்பதை உணர்ந்த அரசு, அந்த நட்டத்தை ஈடுகட்ட வரி வருவாய் இலக்கை முந்தைய ஆண்டை விட மிக அதிகமாக உயர்த்த முன்மொழிந்தது. ஏற்கெனவே பணவீக்கத்தால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நடுத்தர வர்க்கம் மற்றும் வர்த்தகர்களிடம், “பாதி வருமானத்தை வரியாகக் கொடு” என்று கேட்பது அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதற்குச் சமம்.

மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், மக்களிடம் அதீத வரியைப் பிடுங்கத் திட்டமிட்ட அதே அரசு, அடக்குமுறைக் கருவியான இராணுவத்திற்கு நிதியை வாரி வழங்குகிறது. மக்கள் நலத்திட்டங்கள் வெட்டப்பட்ட நிலையில், ஐ.ஆர்.ஜி.சி. உள்ளிட்ட இராணுவ அமைப்புகளுக்கான பட்ஜெட் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களுக்கான “விருப்ப நாணய மாற்று விகிதம்” இரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு, உணவுப் பொருட்களின் விலையை ஒரே இரவில் பன்மடங்கு உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

ஈரானிய அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, அது விரும்பும் அதே சுரண்டல் பொருளாதாரத்தைத்தான் உள்நாட்டில் நிறுவியுள்ளது. அதீத வரி உயர்வு கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை மூலம் அரசு சொல்லவரும் செய்தி ஒன்றுதான்: “எங்களுக்குத் தேவை இராணுவமும் அணுகுண்டும் அதிகாரமும் மட்டும்தான். அதற்காக மக்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை.”

எனவே, ஈரானிய மக்கள் இன்று நடத்துவது வெறும் அமெரிக்கத் தடைக்கு எதிரான போர் மட்டுமல்ல; அந்தத் தடையையே முதலீடாக வைத்துத் தங்கள் இரத்தத்தைச் சுரண்டும் உள்நாட்டுச் சுரண்டல் கூட்டத்திற்கு எதிரான போரும் கூட. ஷாவின் ஆட்சியை வீழ்த்தப் பயன்பட்ட அதே ‘பஜார் சாவி’, இன்று இஸ்லாமியக் குடியரசின் பூட்டை உடைக்கத் திரும்பியுள்ளது. எதிரி மாறியிருக்கிறான்; ஆனால், போராட்டம் ஓயவில்லை. இந்த ‘வரிப் பயங்கரவாதப் பிரகடனம்’தான் ஈரானியத் தெருக்களைப் போராட்டக்களங்களாக மாற்றியது. மக்களின் இந்த வாழ்வாதாரப் போராட்டத்தை எதிர்கொள்ள வழியில்லாத மதவாத அரசு, தனது அடக்குமுறைக் கரங்களை ஏவி இரத்த ஆறாக ஓடச் செய்தது.

அரசின் பாசிசப் பேயாட்டம் மற்றும் படுகொலைகள்

பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்த மக்களை, ஈரானிய அரசு எதிர்கொண்ட விதம், வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமாக மாறியுள்ளது. ஈரானிய மக்களின் நினைவில் “கருப்பு ஜனவரி” என்று இரத்தம் தோய்ந்த எழுத்துக்களால் பொறிக்கப்படும் அளவுக்கு அரசின் கொடிய அடக்குமுறை வெளிப்பட்டுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் உண்மையை இருட்டடிப்பு செய்தாலும், கள நிலவரம் பதைபதைக்க வைக்கிறது. “தி கார்டியன்” இதழ் வெளியிட்ட கள ஆய்வின்படி, மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளிலிருந்து மருத்துவ ஊழியர்கள் மூலம் கசியும் இரகசியத் தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இணைய முடக்கம் காரணமாக முழுமையான விவரங்கள் வெளியுலகுக்கு இன்னும் வராத நிலையில், நாடு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் ஒடுக்குமுறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் சொந்த மக்கள் மீது நிகழ்த்திய இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்த, ஈரானிய அரசு வழக்கம் போலத் தனது கோயபல்ஸ் பாணியிலான பிரச்சார இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ஜனவரி 2026 இறுதி நிலவரப்படி, ஈரான் அரசுத் தொலைக்காட்சியும், ‘தியாகிகள் அறக்கட்டளை’யும் வெளியிட்ட அறிக்கையில், வன்முறையில் மொத்தம் 3,117 பேர் மட்டுமே இறந்ததாகக் கூறியுள்ளன. அதிலும் பெரும்பான்மையானவர்கள் பாதுகாப்புப் படையினர் என்றும் மற்றவர்கள் ‘வன்முறையாளர்கள்’ என்றும் முத்திரை குத்தியுள்ளது. ரொட்டிக்காகவும் வேலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராடும் சாமானிய மக்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது, அந்த அரசின் பாசிச மனநிலையைத்தான் அம்பலப்படுத்துகிறது.

அரசுப் படைகள் மக்களைக் கலைப்பதற்காகச் சுடவில்லை; மாறாக, அவர்களைக் கொடூரமாகத் தண்டிப்பதற்காகவே சுட்டுள்ளனர் என்பதற்கு மருத்துவர்கள் அளிக்கும் சாட்சியங்களே ஆதாரம். “தி கார்டியன்” மற்றும் “அம்னஸ்டி இன்டர்நேஷனல்” அறிக்கைகளின்படி, ஜனவரி 9-க்குப் பிறகு மருத்துவமனைக்கு வந்த காயமடைந்தோர் பலரும், நெஞ்சு, கண்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் மிக அருகில் வைத்துச் சுடப்பட்டுக் குண்டுக் காயங்களுடன் வந்துள்ளனர். இது தற்செயலானது அல்ல.

ஏற்கெனவே 2022-இல் நடந்த “ஹிஜாப் எதிர்ப்பு” போராட்டங்களின் போதும், இத்தகைய பாலியல் வன்முறை சார்ந்த பாசிச உத்தி பாதுகாப்புப் படையினரால் கையாளப்பட்டது அம்பலமாகியிருந்தது. அன்று பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல், இன்று ஒட்டுமொத்த மக்கள் மீதான ஒரு “திட்டமிட்ட குற்றமாக” விரிவடைந்துள்ளது.

மறுபுறம், ஈரானில் மக்கள் இரத்தம் சிந்திப் போராடிக் கொண்டிருக்கும் அதேவேளையில், இந்தத் துயரமான சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கழுகுக் கண்களோடு காத்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அமெரிக்கக் கழுகின் ஆதரவு: ஜனநாயக ஆதரவா? ஆட்சி மாற்றச் சதியா?

ஈரான் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக நடத்தும் போராட்டத்தின் முதுகில் சவாரி செய்து, தனது நீண்டகாலக் கனவான “ஆட்சி மாற்றத்தை” நிகழ்த்தத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய மக்களின் மரணங்களுக்கு வருந்துவது போலத் தோன்றினாலும், அவரது வார்த்தைகளில் அதிகார வெறியே நிரம்பி வழிகிறது.

போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் அரசு தனது சொந்த மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், ஈரான் இதுவரை கண்டிராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று நேரடியாக மிரட்டல் விடுத்தார். ஒருபுறம் பொருளாதாரத் தடைகளால் மருந்து கூட கிடைக்காமல் மக்களைச் சாகடிப்பது, மறுபுறம் அதே மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பது ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்ட நாடகமாகும்.

ஜனவரி 8-ஆம் தேதி முதல், ஈரான் அரசு இணையத்தைத் துண்டித்து வெளியுலகத் தொடர்பைத் துண்டித்தபோது, எலான் மஸ்க், தனது “ஸ்டார்லிங்க்” செயற்கைக்கோள் ஈரானில் இலவசமாக இணையச் சேவையை செயல்படுத்துவதாக அறிவித்தார். ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் தகவல் ஆதிக்கத்தை நிறுவுவதும், போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து மேற்கத்தியச் சார்புள்ள தலைமையை உருவாக்குவதுமே இதன் நோக்கம்.

இணைய உதவிகளைத் தாண்டி, அமெரிக்கா தனது இராணுவக் கொடுங்கரங்களை ஈரானை நோக்கி நீட்டியுள்ளது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை குவிக்கப்பட்டு, ஒரு அறிவிக்கப்படாத முற்றுகை நடந்து வருகிறது. இது ஈரானிய அரசை மிரட்டுவதற்காக மட்டுமல்ல; தேவைப்பட்டால் இராணுவ ரீதியாகத் தலையிட்டு, தனக்கு விசுவாசமான ஒரு பொம்மை அரசை நிறுவுவதற்கான தயாரிப்புப் பணியாகும்.

அமெரிக்காவின் ‘மூலவுத்தி’: ஈரானை வீழ்த்தி சீனாவை முடக்குவது

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா காட்டுவது வெறும் “ஜனநாயகக் கரிசனம்” அல்ல; இது ஒரு ஆழமான ஏகாதிபத்தியச் சதி. வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் “செயல்தந்திர ரீதியான இலக்குகள்” மட்டுமே; அதன் உண்மையான “போர்த்தந்திர ரீதியான இலக்கு” சீனா மற்றும் ரஷ்யாவாகும். சீனாவுடன் நேரடியாகப் போரிடுவதோ அல்லது வர்த்தகத் தடைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்துவதோ இனி சாத்தியமில்லை என்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, சீனாவின் “தொழிற்துறை நுரையீரலை” தாக்கும் உத்தியை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட வெனிசுலாவையும், ஈரானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம், சீனாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகக் கட்டமைப்பைத் தனது பிடிக்குள் வைப்பதே அமெரிக்காவின் திட்டம். தற்போது சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் கணிசமான பகுதி ஈரானிலிருந்து செல்வதைத் தடுக்கவே இந்த முற்றுகையைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அதைவிட முக்கியமாக, சீனாவின் புதிய “பட்டுச் சாலைத் திட்டத்தின்” (Belt and Road Initiative – BRI) மிக முக்கியமான புவிசார் இணைப்புப் பாலமாக ஈரான் திகழ்கிறது. ஈரானில் தனக்கு விசுவாசமான ஒரு பொம்மை அரசை நிறுவுவதன் மூலம், சீனாவின் ஐரோப்பிய வர்த்தகப் பாதையைத் துண்டிப்பதும், ரஷ்யாவின் தெற்கு வாசலான “வடக்கு-தெற்கு தாழ்வாரத்தை” அடைப்பதும் அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டமாகும். இது தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான ஒரு வெறித்தனமான முயற்சியாகும்.

அதே சமயம், ஈரானிடம் ரஷ்யாவின் “எஸ்-400” வான்பாதுகாப்பு அமைப்பும், சீனாவின் நவீன ஏவுகணைகளும் இருப்பதால், ஒரு முழுமையான போரைத் தொடங்குவதை விட, அமெரிக்கா ஒரு “முட்டுக்கட்டை” நிலையை உருவாக்க விரும்புகிறது.

ஜனவரி இறுதியில் டிரம்ப் அனுப்பிய இரண்டு கடற்படைத் தொகுப்புகள் மூலம் ஒரு “கடற்படை முற்றுகையை” உருவாக்கி, ஈரானின் கழுத்தை நெரித்து, சீனாவைக் கச்சா எண்ணெய்க்காக அலைய விடுவதுதான் டிரம்பின் “ஸ்லோ பாய்சன்” உத்தி. ஈரானிய மக்கள் பசியால் சாகும்போது ஏற்படும் உள்நாட்டுக் கலவரத்தைப் பயன்படுத்தி, போரில்லாமலேயே ஆட்சியை மாற்றுவதே இந்தத் திட்டத்தின் சாராம்சம்.

சர்வதேசப் போர்க்களம்: வல்லரசுகளின் சதுரங்கம்

ஈரானின் உள்நாட்டுப் போராட்டம் என்பது தனியொரு நாட்டில் நடக்கும் நிகழ்வல்ல; அது உலகளாவிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை மையமாக வைத்து வல்லரசுகள் நடத்தும் சதுரங்க ஆட்டம் இப்போது பகிரங்கமாகத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் கடற்படை நகர்வுகளைச் சீனா உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஜனவரி 29 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய சீனத் தூதர் ஃபூ காங், அமெரிக்காவின் பெயரைச் சுட்டிக்காட்டாமல், “எந்தவொரு இராணுவச் சாகசமும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்” என்று மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். சீனாவின் இந்தக் கோபம் ஈரானிய மக்கள் மீதான பாசத்தினால் அல்ல; மாறாக, ஈரானில் போர் வெடித்தால் தனது எரிசக்தி விநியோகம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தின் வெளிப்பாடே ஆகும்.

மறுபுறம், ஐரோப்பிய நாடுகள் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தக் காத்திருக்கின்றன. ஜெர்மன் சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஈரான் அரசுக்கு ஆட்சி செய்யத் தகுதியில்லை; இந்த ஆட்சி கவிழ்வது இன்னும் சில வார கால விவகாரமே” என்று கூறியிருப்பது, ஐரோப்பிய வேட்டைநாய்களும் ஈரானின் வீழ்ச்சியை எதிர்பார்த்துத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.

இவ்வாறு ஈரான், வல்லரசுகளின் சதுரங்க ஆட்டக்களமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கான உண்மையான தீர்வு வெளியிலிருந்து வராது; அது ஈரானிய மக்களின் சுயேட்சையான போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும்.

வரலாற்றுப் பாடமும் ஐக்கிய முன்னணியின் தேவையும்

ஈரானின் இன்றைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பது என்பது வெறும் உணர்ச்சிவேகமான முழக்கங்களால் சாத்தியமாகாது; கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்பதன் மூலமே சரியான அரசியல் திசையைத் தீர்மானிக்க முடியும். 1979-இல் ஷா மன்னனுக்கு எதிரான எழுச்சியின் போது கொமேனியை இடதுசாரிகள் ஆதரித்தனர். ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, கொமேனி தலைமையிலான இஸ்லாமிய அரசு இடதுசாரிகளை வேட்டையாடியது. சொந்த மக்களை ஒடுக்கும் ஓர் அரசால், ஒருபோதும் அந்நிய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை வரலாறு நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகிறது. எனவே, இந்த அரசுக்கு வால்பிடிக்கும் பழைய தவறை இடதுசாரிகள் மீண்டும் செய்யக்கூடாது.

ஈரானிய அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவோ, அமெரிக்காவை உண்மையாக எதிர்க்கவோ விரும்பினால், முதலில் சொந்த மக்கள் மீதான போரை நிறுத்த வேண்டும். சிறைக் கதவுகளைத் திறந்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நாட்டு மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் வழங்க வேண்டும். ஏனெனில், ஏவுகணைகளை விட சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் மக்களால் மட்டுமே ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட முடியும். ஆனால், தன் சொந்த மக்களையே எதிரிகளாகக் கருதி ஒடுக்கும் இந்த அரசு, நடைமுறையில் நாட்டை அமெரிக்கக் கழுகுகளுக்கு இரையாக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. எனவே, தீர்வு அரசின் கையில் இல்லை; போர்க்களத்தில் நிற்கும் மக்களின் கைகளிலேயே உள்ளது.

இன்றைய சூழலில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டுச் சர்வாதிகாரம் ஆகிய “இரட்டை எதிரிகளை” ஒரே நேரத்தில் எதிர்கொள்ள, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஒரு பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டமைப்பதே காலத்தின் கட்டாயமாகும். இந்த ஐக்கிய முன்னணி என்பது வெறும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல; அது போராடும் வர்க்கங்களின் கூட்டணியாக அமைய வேண்டும். மதவாத அரசின் ‘பணப்பையை’ காலி செய்யும் வல்லமை கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைத் தொழிலாளர்கள், ஈரானின் ஜனநாயகத்திற்காகப் போராடும் பெண்கள், மாணவர்கள் மற்றும் அடக்குமுறைக்கு உள்ளாகும் குர்து, பலுச் உள்ளிட்ட தேசிய இனச் சிறுபான்மையினர், ஆளும் வர்க்கங்களில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரிவு ஆகிய அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த முன்னணி அமைய வேண்டும். மதவாத சர்வாதிகாரத்தை எதிர்ப்போரும், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போரும் இந்த ஐக்கிய முன்னணியின் கீழ் ஓரணியில் திரள்வதே வெற்றிக்கான வழியாகும்.

ஈரானிய வீதிகளில் இன்று ஆக்ரோஷமாக எதிரொலித்துக் கொண்டிருக்கும், “ஒடுக்குமுறை செய்பவருக்கு மரணம்; அவர் ஷாவாக இருந்தாலும் சரி அல்லது உச்சத் தலைவராக இருந்தாலும் சரி!” என்ற முழக்கமும், “அமெரிக்க ஏகாதிபத்தியமே வெளியேறு! மதவாதச் சர்வாதிகாரமே ஒழிக!” என்ற அறைகூவலும், நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாக உருவாகியுள்ள ஈரானிய மக்களின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

இறுதியாக, “எங்களுக்குத் தேவை – ரொட்டி, வேலை, சுதந்திரம் மற்றும் மக்கள் அதிகாரம்!” என்ற புரட்சிகர முழக்கத்தை முன்னெடுத்து, உழைக்கும் மக்களைப் போர்க்களத்தில் அணிதிரட்டுவதும், அவர்களுக்குச் சரியான அரசியல் தலைமை வழங்குவதும் ஈரானிய புரட்சிகர – ஜனநாயகச் சக்திகளின் முன் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடனடிக் கடமையாகும். அவ்வாறு வர்க்க ரீதியாகத் திரட்டப்படும் மக்கள் சக்தியே, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் உள்நாட்டு மதச் சர்வாதிகாரத்தையும் ஒரே நேரத்தில் முறியடிக்கும் தகர்க்க முடியாத இரும்புக் கோட்டையாகும்!


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க