காசா அமைதி வாரியத்தில் பார்வையாளராக இந்தியா: பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்த மோடி அரசு!

எஜமான் டிரம்பின் கோபத்திற்கு ஆளாகாமல் காசா அமைதி வாரியத்திற்கு ஆதரவாக பார்வையாளராகக் கலந்து கொண்டு டிரம்பிற்கு தன்னுடைய அடிமை விசுவாசத்தைக் காட்டியுள்ள மோடி அரசு, பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.

0

பாசிச டிரம்ப் தலைமையிலான காசா அமைதி வாரியத்தில் (Board of Peace) இந்திய அரசு இணையக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மோடியின் இஸ்ரேல் பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் சத்ரபதி சம்பாஜி பூங்காவுக்கு அருகிலுள்ள ஜே.எம் சாலையில் பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று “பாலஸ்தீனத்துடன் ஒருமைப்பாட்டில் இந்திய மக்கள்” (Indian People in Solidarity with Palestine – IPSP) என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சங்கி போலீசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒன்று கூடியதாகக் கூறி 23 பேரைக் கைது செய்தது. இவர்களின் மீது டெக்கான் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. கடும் எதிர்ப்புகளுக்குப் பின்பு மாலை 4:45 மணிக்கு அனைவரையும் விடுவித்தது. பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது.

IPSP உறுப்பினர் ஒருவர் கூறுகையில் “டிரம்பின் அமைதி வாரியம் (Board of Peace) என்பது காசாவை முழுமையாக அழித்த பிறகு அதைக் கைப்பற்றும் அமெரிக்க திட்டம். 2025 அக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் இஸ்ரேல் தாக்குதல்களால் பல பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதனால், இந்திய அரசு டிரம்பின் அமைதி வாரிய அழைப்பை நிராகரிக்க வேண்டும். மோடியின் இஸ்ரேல் பயணம் ரத்து செய்யப்பட வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

IPSP ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னஜா லிம்கர் “போராட்டத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே புனே போலீசிடம் அனுமதி கேட்டோம். முதலில் பண்ட் கார்டன் போலீஸ் நிலையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அனுமதி மறுத்தது. பிறகு ஜே.எம் சாலை நடைபாதையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை மக்களை அழைத்து செய்தியைப் பரப்பினோம். ஆனால் முந்தைய இரவே டெக்கான் போலீஸ் நிலையம் அனுமதி இல்லை எனத் தெரிவித்தது.

“இடத்தை மாற்ற நேரமில்லை. அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை அமைதியாக ஒன்று கூடினோம். ஆனால் போலீசார் எங்களைக் கொடூரமாக இழுத்துச் சென்றனர். ஒரு செயற்பாட்டாளருக்குத் தோளில் காயம் ஏற்பட்டது. எங்கள் பெண் தன்னார்வலரின் சேலையும் கிழிந்தது… எங்கள் போராட்டம் ஜனநாயக முறையில் நடந்தது. இருந்தும் 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்—நானும் அதில் ஒருவன்,” என்று போலீசாரின் கொடூரத் தாக்குதல் குறித்துத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 15 அன்று புனே நகரில் “பாலஸ்தீனத்துடன் ஒருமைப்பாட்டில் இந்திய மக்கள்” (IPSP) நடத்திய ஆர்ப்பாட்டம்.

மேலும் IPSP வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாசிச ஆட்சியாளர்கள் எந்தவித எதிர்ப்புக் குரலுக்கும் பயப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது. எங்கள் ஜனநாயக உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், அரசின் மக்கள் விரோத உத்தரவுகளை எதிர்க்கும் உரிமையையும் முழுமையாகத் தாக்கி வருகின்றனர். பா.ஜ.க-வும் மோடியும் கொலைகார நெதன்யாகுவுடன் இணைந்து செயல்படும்போது, மத்திய அரசு இன்னும் அந்த பொய்யான ‘அமைதி வாரிய’த்தில் சேர்வதை ‘பரிசீலித்து’ கொண்டிருக்கும்போது, பொதுமக்களும் இளைஞர்களும் பாலஸ்தீன மக்களுக்கான நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் நின்றதற்காகத் தெருக்களில் கொடூரமாக இழுத்துச் செல்லப்படுகின்றனர்” என்று பாசிச மோடி கும்பலின் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.


படிக்க: காசா: சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்த இஸ்ரேல் அரசு


ஆனால் மக்களின் போராட்டத்தையும் மீறி பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று வாசிங்டன் டி.சி-யில் நடைபெற்ற காசா மறுசீரமைப்பு மற்றும் அமைதித் திட்டத்திற்கான அமைதி வாரிய கூட்டத்தில் இந்தியா பார்வையாளராகப் பங்கெடுத்துள்ளது. இந்தியா சார்பில் இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளரும் துணைத் தலைவருமான (Chargé d’Affaires / Deputy Chief of Mission) நம்க்யா சி. கம்பா (Namgya C. Khampa) பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளார்.

இதனால் பெரும் எதிர்ப்பு எழும் என்று அஞ்சிய பாசிசக் கும்பல் அடுத்த நாளே இந்திய வெளியுறவுத் துறையினன் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மூலம் 1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான பாலஸ்தீன அரசை ஆதரிப்பதாகத் தெரிவித்தது.

மேலும் “இந்தியா வாசிங்டன் டி.சி-யில் நடைபெற்ற அமைதி வாரிய கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்து கொண்டது. அதிபர் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தையும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் 2803-ஐயும் இந்தியா ஆதரிக்கிறது” என்று பாசிச டிரம்பிற்கு ஆதரவான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அதாவது பாசிச டிரம்பின் தலைமையிலான காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக இணைந்தால் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாக நேரிடும். இதுநாள் வரை பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்ட வெளியுறவுக் கொள்கையிலிருந்து விலகியது பொதுவெளியில் மேலும் அம்பலமாகிவிடும்.

எனவே, எஜமான் டிரம்பின் கோபத்திற்கு ஆளாகாமல் காசா அமைதி வாரியத்திற்கு ஆதரவாக பார்வையாளராகக் கலந்து கொண்டு டிரம்பிற்கு தன்னுடைய அடிமை விசுவாசத்தைக் காட்டியுள்ள மோடி அரசு, பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.

இதன்மூலம், காசாவை அழித்து அதன் சுயநிர்ணய உரிமையைப் பறிக்கின்ற டிரம்ப் – நெதன்யாகுவின் இனவெறிப் படுகொலைகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரின் பதிவு உறுதிப்படுத்துகிறது.

எனவே, இனவெறி இஸ்ரேலுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் பாசிச டிரம்ப் – நெதன்யாகுவின் கொலைகாரத் திட்டத்திற்கு ஆதரவுத் தெரிவிக்கின்ற பாசிச கும்பலின் துரோகத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இது சுதந்திரப் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்ற ஒவ்வொருவரின் கடமையாகும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க