பா.ஜ.க ஆட்சி செய்கின்ற உத்தரப்பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதியில் ஜனவரி 10 ஆம் தேதியன்று 14 வயது தலித் சிறுமி அருகிலுள்ள வயலுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளார். அங்கே இருந்த லாவ்லேஷ் குமார் என்பவன் சிறுமியைப் புதருக்கு அடியில் இழுத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். உதவிக்காக சிறுமி அலறிய போது சாதி குறித்து இழிவாகப் பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
பின்னர் வீட்டிற்குச் சென்ற சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, சாதி குறித்து இழிவான வார்த்தைகளால் வசைபாடியது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் போலீசார் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கான போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவில்லை. மாறாக பாலியல் பொறுக்கியைக் காப்பாற்றுவதற்கு பொதுவான பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. அதன்படி கைது செய்த ஒரு மாதத்தில் ஜாமீனில் விடுவித்துள்ளது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவன் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள கடையில் சந்தித்து “வழக்கை திரும்பப்பெறு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்“ என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறான். பின்னர் வீட்டிற்குச் சென்று சிறுமி பெற்றோரிடம் தான் பயத்தில் இருப்பதாகவும், பெரும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 18- ஆம் தேதியன்று அப்பா விவசாய வேலைக்கும், அம்மா விறகு சேகரிக்கவும் வெளியே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகளின் நிலையைக் கண்டு அழுது துடித்துள்ளனர்.
மகளை இழந்த அப்பா கூறுகையில் “தான் பயந்துவிட்டதாகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் எங்களிடம் கூறினாள். ஆனால் நாங்கள் எதையும் செய்வதற்கு முன்பே, அவள் தீவிரமான முடிவை எடுத்துவிட்டாள்,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
படிக்க: உத்தரப்பிரதேசம்: மீண்டும் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை
அடுத்த நாள் (19.02.2026) மகளை இழந்த பெற்றோர் போலீசில் இரண்டாவது முறையாகப் புகார் அளித்தனர். அதன் பின்னரே பி.என்.எஸ் பிரிவு 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்), எஸ்.சி / எஸ்.டி சட்டம் பிரிவு 3(2)(v) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று காமவெறி பிடித்த மிருகத்தைக் கைது செய்துள்ளது போலீசு. ஆனால் தற்போது வரை முதல் தகவல் அறிக்கையில் போக்சோ சட்டம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனநல மருத்துவர் மூலம் மனநல ஆலோசனையும் உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படவில்லை. சிறுமி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் ஜாமீனில் வெளியே வந்த பாலியல் பொறுக்கி சிறுமியைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால் சிறுமி அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாகி வேறு வழியில்லாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே இது ஆதிக்க சாதிவெறி பிடித்த போலீசு, அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட படுகொலையாகும்.
இதனைப் போன்று கடந்த ஆண்டு டிசம்பர் 30- ஆம் தேதி அன்று அமேதி மாவட்டம், ஃபர்சத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 13 வயது தலித் சிறுமி வயலுக்குச் சென்றுள்ளார். அங்கே இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவன் அவரை வயலுக்கு அருகிலுள்ள இடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். பின்னர் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த பிறகு அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன. சிலர் போலீசில் புகார் அளித்தாலும் சாதி வெறிபிடித்த போலீஸ் உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாத்து வருகிறது.
எனவே இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம் தலித் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே இத்தொடர் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











