வேண்டாம் நகராட்சி: திருவாரூர் மக்கள் பேரணி

திருவாரூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிவலம், தண்டலை, வேலங்குடி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், அம்மையப்பன், காட்டூர், அலிவலம், இளவாங்கார்குடி, கீழகாவாதுகுடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 18 அன்று நகராட்சி இணைப்பு எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமையில் திருவாரூரிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாகச் சென்று திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

”இந்த ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் சலுகைகள் பறிபோகும். ஊராட்சியில் கிடைக்கும் சலுகைகளைப் பறித்து நகராட்சியாக மாற்றுவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வரிச் சுமையை அதிகப்படுத்துவதற்கு வழிவகுக்கும். ஆகவே, சம்பந்தப்பட்ட திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” எனக் கூறி கிராம மக்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

பேரணியில் அம்மையப்பன் ஊராட்சியின் சார்பாக கலியமூர்த்தி, இளவன்காரக்குடி ஊராட்சியின் சார்பாக முத்து, தேவர்கண்டநல்லூர் ஊராட்சியின் சார்பாக k.லெனின், குரு, பெருந்தரக்குடி ஊராட்சியின் சார்பாக கருணாநிதி, காட்டூர் ஊராட்சியின் சார்பாக சேகர், புலிவலம் ஊராட்சியின் சார்பாக அஜ்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்தப் பேரணியில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத், தோழர் முரளி, சமூக ஆர்வலர் பக்கிரிதாஸ், வி.சி.க-வின் முன்னணி தோழர் சீமா மகேந்திரன், அம்மையப்பன் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் சேகர், ஒ.து.செ தலித் வீரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்,

திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க