திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பருவாய் கிராமத்தைச் சார்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகள் தண்டபாணி, தங்கமணி. இவர்களின் மகள் வித்யா (22) கோவை அரசுக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலை படிப்பு பயின்று வந்துள்ளார்.
திருப்பூர் விஜயாபுரத்தைச் சார்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட குலாலர் சமூகத்தைச் சேர்ந்தவர் வெண்மணி (22). வித்யா பயின்றுவரும் அதே கல்லூரியில், முனைவர் பட்ட ஆய்வுக்காக தேசிய தகுதித் தேர்வு எழுதி (JRF) திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளார். இருவரும் கடந்த 2022 முதல் காதலித்து வந்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன் இருவரும் காதலிப்பது பற்றி, வித்யாவின் வீட்டிற்குத் தெரிய வந்ததையடுத்து வெண்மணி அவரது குடும்பத்துடன் வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டுச் சென்றுள்ளார். வெண்மணி பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர் என்பதாலும் மாற்றுச் சாதி மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் (வித்யா குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள்) வித்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பெண் தரமுடியாது எனக் கூறி அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து வித்யாவின் பெற்றோர்கள் “வெண்மணியை மறந்துவிடு; அவனைத் திருமணம் செய்துவைக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். இனி அவனிடம் பேசக்கூடாது; எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” எனக் கண்டித்து மிரட்டியுள்ளனர்.
வித்யாவுக்கு சரிவர உணவு கொடுக்காமல், அவருடைய கல்லூரி செலவுகளுக்குப் பணம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். வித்யா தன்னுடைய கல்விச் செலவுகளுக்காக பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஒரு கடையில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு கல்லூரிக்குச் சென்று படிப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
30/03/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வித்யாவின் பெற்றோர்கள் இருவரும் சர்ச்சுக்கு சென்றுள்ளனர். சுமார் 11:30 மணியளவில் வித்யா தனது காதலர் வெண்மணியிடம் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த வித்யாவின் அண்ணன் சரவணன், கொடுவாளின் பின்புறத்தைத் திருப்பி வித்யாவின் தலையில் அடித்ததில் வித்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
படிக்க: கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்
மாலை 3.00 மணியளவில் வித்யாவின் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியபோது, வித்யாவின் மீது பீரோ விழுந்த நிலையில் பேச்சு,மூச்சு இல்லாமல் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த செவிலியர் வித்யாவின் உடலைப் பரிசோதனை செய்ததில் வித்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
நடந்த உண்மைச் சம்பவத்தை வித்யாவின் அண்ணன் சரவணன் பெற்றோரிடம் இரகசியமாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் பிரேதப் பரிசோதனையில் உண்மை வெளிவந்துவிடும் என்பதால் வித்யாவின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமலும், போலீசுக்கு தகவல் கூறாமலும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் கூறிவிட்டு அவசர அவசரமாக பருவாய் கிராம இடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு வித்யாவின் மீது பீரோ விழுந்து இறந்துவிட்டதாக குடும்பத்துடன் நாடகமாடியுள்ளார்.
வித்யா இறந்த தகவல் தெரியாத வெண்மணி பல முறை வித்யாவிற்கு போன் செய்துள்ளார். செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. வித்யா குறித்து அக்கம்பக்கம் நண்பர்களிடம் விசாரித்தபோது வித்யா உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது. பதறிப் போன வெண்மணி மறுநாள்
31/03/2025 பல்லடம் காமநாயக்கன்பாளையம் போலீசு நிலையத்தில் தனது காதலியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கைப்பட எழுதி எழுத்துப்பூர்வமான மனுவைக் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர், காமநாயக்கன்பாளையம் போலீசார், பருவாய் கிராமம் நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பருவாய் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையில் சுடுகாட்டிலேயே வித்யாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் வித்யாவின் தலையில் பலத்த காயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்பிறகு வித்யாவின் குடும்பத்தினரிடம் போலீசு நடத்திய விசாரணையில், வித்யாவின் அண்ணன் சரவணன், தனது தங்கை மாற்று சாதியைச் சேர்ந்த ஆணை காதலித்ததால் கொடுவாளால் அடித்துக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
சாதிவெறி தலைக்கேறி, உடன்பிறந்த தங்கையையே ஆணவப் படுகொலை செய்தது அம்பலமானது.
படிக்க: தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் ஆணவப்படுகொலைகள்!
இந்நிலையில் 02/04/2025 அன்று வித்யாவை நன்றாகப் படிக்குமாறு சரவணன் அறிவுறுத்தி வந்ததால், 2 மாதங்களாக சரவணனுடன் வித்யா சரியாகப் பேசவில்லை என்றும், காதலைக் கைவிட்டு படிக்குமாறு கூறியபோது வித்யா மறுத்துப் பேசியதால் ஆத்திரத்தில் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி அவரை கொலை செய்ததாகவும் இது ஆணவக் கொலை இல்லை எனவும் பிரச்சினையை திசை திருப்பும் வகையில், சாதி வெறிப் படுகொலைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார், திருப்பூர் எஸ்.பி கிரிஷ் குமார்.
திருமணம் செய்து கொள்ளும் சரியான வயதில் தனக்கு விருப்பமான இணையரை வித்யா தேர்ந்தெடுத்துக் கொண்டதில் என்ன தவறு இருக்கிறது?
பெற்றவர்கள் என்பதனாலேயே ஆண் என்பதனாலேயே ஒரு பெண்ணின் உணர்வுகளை, உரிமைகளை மதிக்காமல் அவளை தனக்குரிய ஒரு பொருளாக பாவிக்கும் சாதி ஆணாதிக்கம் நிறைந்த இக்கொடிய சமூக அமைப்பில் பெண்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சமூகச் சீர்திருத்தம், பெண்ணுரிமை என்று பேசும் ’திராவிட மாடல்’ அரசு, தொடர்ந்து நடைபெறும் சாதி ஆணவக் கொலைகளை, சாதியப் படுகொலைகளைத் தடுக்க வக்கற்று இருக்கிறது. சபாநாயகர் அப்பாவு தென்மாவட்டங்களில் சாதியப் படுகொலைகளே இல்லை என்று பேசுகிறார். ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியான சாதிவெறியன் யுவராஜ் பரோலில் வெளிவந்த போது, கதாநாயகன் போலக் கொண்டாடப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தி.மு.க அரசு.
சாதிப் பெருமை பேசுவதும், கலவரங்களில் ஈடுபடுவதும், கொலை செய்வதும்தான் வீரம், பெருமை என்ற கருத்தை மாணவர்கள், இளைஞர்களிடம் சாதிவெறியர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கோ, சாதி வெறியர்களைத் தண்டிப்பதற்கோ உரிய நடவடிக்கை எதுவும் இல்லை.
ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே சாதியக் கண்ணோட்டத்துடனும் ஆதிக்க சாதிவெறிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில்தான் செயல்படுகிறது.
சாதிவெறியைத் தூண்டி ஆணவப்படுகொலையை ஊக்குவிக்கும் திரௌபதி, கவுண்டம்பாளையம் போன்ற திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்யும் காதலர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சாதிவெறியைத் தூண்டுகின்ற ஆதிக்கச் சாதிச் சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
மேலும் சாதிச் சங்கங்களில் ஊடுருவி சாதிவெறிப் படுகொலைகளை, ஒடுக்குமுறைகளை நிறுவனமயப்படுத்தத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலைத் தடை செய்யாமல் இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியாது. சாதி மறுப்பு, சமத்துவ சிந்தனைகளை சமூகத்தில் பரப்பும் வகையிலான கட்டமைப்புகளை எல்லாத் தளங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை முன்வைத்து, உழைக்கும் மக்களும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து அரசை நிர்ப்பந்திக்கும் வகையிலான வலுவான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
யாழன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram