ஜாகிர் உசேன் படுகொலை: களம்காணப் போகிறோமா? கடந்துசெல்லப் போகிறோமா?

பாசிச மோடி அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தி.மு.க. அரசு, வக்ஃப் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய ஜாகீர் உசேனை பாதுகாக்கத் தவறியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் டவுன் தொட்டிப்பாலத் தெருவைச் சேர்ந்த, விருப்ப ஓய்வுபெற்ற போலீசு உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் பிஜிலி (வயது 60). இவர் 18.03.2025 அன்று காலை பள்ளிவாசலில் ரமலான் தொழுகை முடித்து வரும்போது கிருஷ்ணமூர்த்தி என்கிற தவ்ஃபீக் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தன் வீட்டின் அருகில் 36 சென்ட் வக்ஃப் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று சிலர் தகராறு செய்ய, இந்த நில மோசடி குறித்து திருநெல்வேலி டவுண் போலீசு நிலையம் முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு மனு அனுப்பினார். தவ்ஃபீக் உள்ளிட்ட 30 பேர் கொண்ட கும்பலால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜனவரி மாதமே பொதுவெளியில் காணொளி வெளியிட்டிருந்தார். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்பாளர்களாலேயே ஜாகீர் உசேன் கொல்லப்பட்டிருப்பது, குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் மிகப்பெரும் அச்சத்தையும், பாதுகாப்பின்மை உணர்வையும் விதைத்திருக்கிறது‌.

தி.மு.க-வும் போலீசுதுறையுமே முதன்மைக் குற்றவாளிகள்:

தான் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜாகீர் உசேன் வெளியிட்ட காணொளியில், டவுண் போலீசு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோரும் மேற்படி வக்ஃப் நில ஆக்கிரமிப்பாளருக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள் எனக் குற்றம் சுமத்தியிருந்தார்‌. அப்போதே இதுகுறித்து போலீசு தீர விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் ஜாகீர் கொலை செய்யப்படுவதைத் தடுத்திருக்க முடியும். வக்ஃப் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு போலீசு உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளனர் என்பது இந்தப் படுகொலையின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஏற்கெனவே இரண்டரை சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் போலி பத்திரத்தின் மூலமாக அபகரித்துக்கொள்ள முயல, அதை நீதிமன்றத்தின் மூலமாக மீட்டுள்ளார் ஜாகீர். அதன்பின் ஜாகீர் 36 சென்ட் நிலத்தைக் கூரை போட்டுப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது தவ்ஃபீக் தகராறு செய்துள்ளார். அது தற்போது கொலையில் முடிந்துள்ளது.

தவ்ஃபீக், ஜாகீருக்கு கொலைமிரட்டல் விடுத்த கேட்பொலி மற்றும் காணொளிப் பதிவு இருந்த போதும், தவ்ஃபீக்கின் மீது வழக்கு போடாத போலீசுதுறை, சட்டத்தை மீறி ஜாகீர் மீது பி.சி.ஆர். வழக்குப் பதிந்துள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இந்து தலித் பிரிவிலிருந்து இஸ்லாமியராக மதம் மாறி இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தவ்ஃபீக், தன்னுடைய பழைய பெயரான கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரில் கொடுத்த வழக்கை முன்வைத்து ஜாகீர் மற்றும் அவரது மனைவியின் மீது பி.சி.ஆர். வழக்கை பதிவு செய்துள்ளது போலீசுதுறை. இவ்வழக்கில் ஜாகீர் நீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் பெற்றுள்ளார். மேலும் இவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்குத் துணை ஆணையர் லஞ்சம் கேட்டதாகவும் ஜாகீர் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை! திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!


இஸ்லாமியராக மதம் மாறிய பின்னும் தவ்ஃபீக் கொடுத்த புகாரை ஏற்று ஜாகீர் மீது பி.சி.ஆர். வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு. இதன் மூலம் வக்ஃப் நில ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து போலீசும் கூட்டுக் களவாணித்தனம் செய்ததும், தலித் மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை போலீஸ் எந்தளவு முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்பதும் அம்பலமாகியுள்ளது‌.

வக்ஃப் வாரிய சொத்துக்கள் மட்டுமல்ல, தலித் மக்களுக்குரிய பஞ்சமி நிலங்களும் இவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்படுகிறது‌. தலித் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பி.சி.ஆர். வழக்கு, ஜாகீர் போன்ற போராடக்கூடிய சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மீது போலீசால் போடப்படுகிறது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் மீன் கழிவு ஆலைகளுக்கு எதிராகப் போராடக்கூடிய முன்னணியாளர்கள் மீது, ஆலை நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபர் கொடுத்த புகாரை ஏற்று பி.சி.ஆர். வழக்கைப் பதிவு செய்தது போலீசு. இவ்வழக்கில் மக்கள் அதிகாரம் தோழர்கள் உதவியுடன் நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த போராட்டக்குழுத் தோழர்கள் தற்போது இவ்வழக்கை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

எனவே, ஜாகிர் உசேன் படுகொலையில், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் போன்ற போலீசு அதிகாரிகள் உட்பட இன்னும் யார் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என விசாரித்து அவர்களையும் தண்டிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. அரசு இதை செய்வதாக தெரியவில்லை. ஜாகீர் உரிய ஆதாரங்களுடன் காணொளி வெளியிட்ட போதும், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனை அதே பதவியில் நீடித்திருக்கும்படி செய்ததுடன் செந்தில்குமாரை கோவை நுண்ணறிவுப் பிரிவில் வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருந்தது தமிழ்நாடு அரசு.

இக்கொலை வழக்கில் போலீசுதுறையின் மீது குற்றச்சாட்டுக்கள் திரும்பியிருக்க, இரண்டு போலீசுகளை மட்டும் சஸ்பென்ட் செய்துவிட்டு, இப்பிரச்சினை ஜாகீர் மற்றும் தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேருக்கு இடையிலான நிலத் தகராறு என போலீசு எழுதிக்கொடுத்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வாசித்துவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டார் போலீசுதுறை அமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

இக்கொலைக்கு தி.மு.க. அரசும், போலீசுதுறையுமே பொறுப்பு. இவர்களே முதன்மைக் குற்றவாளிகள்.

களப்போராட்டம் ஒன்றே தீர்வு!

ஜாகீரின் குடும்பத்தினர் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அவரது உடலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

  1. இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நபரைக் கைது செய்ய வேண்டும் (தற்போது மூவர் (தவ்ஃபீக், கார்த்திக், அக்பர்ஷா) கைது செய்யப்பட்டுள்ளனர். தவ்ஃபீக் மனைவி நூர்நிஷா தலைமறைவாகி உள்ளார்).
  2. கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய போலீசுகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. வழக்கை சி.பி.சி.ஐ-டிக்கு மாற்ற வேண்டும்.
  4. தமிழ்நாடு முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துக்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன, வாரிய தலைவர் இதனை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

“வக்ஃப்” என்றால் இறைவனுக்கு அளிப்பது என்று பொருள். இஸ்லாமியப் பெரியோர்கள் தங்களிடம் உள்ள சொத்துக்களை ஏழைகளுக்கு உதவும் வகையில் தானமாக வழங்குகின்றனர். அப்படி கொடுக்கப்படும் சொத்துக்களைப் பராமரிக்க வக்ஃப் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இது அரசின் கண்காணிப்பின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பு‌. இதுபோக தங்களுடைய நிலத்தை வக்ஃபுக்கு தானமாக்கி அதை தங்களுடைய வாரிசுகள் பராமரிக்க வேண்டும் என கையளிப்பதும் உண்டு. இப்படிப் பராமரிக்கும் வாரிசுகளுக்குப் பெயர் “முத்தவல்லி”. அப்படி இந்த 36 சென்ட் நிலத்தை பராமரிக்கும் முத்தவல்லிதான் ஜாகீர் உசேன். இதன்மூலம் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்திற்காக ஜாகீர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகிறது‌.

தமிழ்நாட்டில் வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை வக்ஃப் வாரியம் தடுக்க வேண்டும் என்ற ஜாகீர் குடும்பத்தினரின் கோரிக்கை மிக முக்கியமானது‌. ஆனால் ஜாகீர் உயிரோடிருந்து அவர் போராடியபோது வக்ஃப் வாரியம் இதில் தலையிடவில்லை‌. இவ்விவகாரத்தில் வக்ஃப் வாரியம் உரிய நேரத்தில் தலையிட்டிருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய மக்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் எண்ணமாக உள்ளது.


படிக்க: ஜாகீர் உசேன் கொலை: வக்ஃப் வாரிய சொத்திற்காக அரங்கேறிய கொடூரம் | தோழர் வெற்றிவேல் செழியன்


நீதிக்காகப் போராடிய ஒருவர் கொல்லப்பட்டார் என்பதுடன் கூடவே, “நான் கொல்லப்படுவேன், இவர்களால்தான் என் உயிருக்கு ஆபத்து” என ஜாகீரால் அடையாளப் படுத்தப்பட்டவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். இதில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட தவ்ஃபீக் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். கொலை செய்யத் தூண்டியவர்கள் அதிகார வர்க்கத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஜாகீர் தான் வெளியிட்ட காணொளியில், “மரணிக்கும் போதும் சட்டத்தை மதித்தவனாக மரணிக்க வேண்டும்” என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் ஜாகீர் மதித்த சட்டம் ஜாகீரை கைவிட்டுவிட்டது. அவர் புதையுண்ட இடத்தில் அவர் நம்பிக்கையும் சேர்ந்து புதையுண்டு விட்டது‌‌.

தவ்ஃபீக் போன்ற தனிநபர்களால் மட்டுமே வக்ஃப் நிலத்தை அபகரித்துவிட முடியாது. ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பின் உதவியுடன்தான் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஏழைகளுக்கான வக்ஃப் சொத்துக்களை மொத்தமாகப் பிடுங்கி பெருமுதலாளிகள் வசம் ஒப்படைப்பதற்கு ஏதுவாக பாசிச மோடி கும்பல் வக்ஃப் திருத்தச் சட்டத்தை இயற்றுகிறது‌. வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாத்துவரும் வக்ஃப் வாரியத்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, வக்ஃப் சொத்துக்களை அபகரித்து அம்பானி, அதானிகளுக்கு தாரைவார்க்க எத்தனிக்கிறது காவிக்கும்பல்.

பாசிச மோடி அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தி.மு.க. அரசு, வக்ஃப் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய ஜாகீர் உசேனை பாதுகாக்கத் தவறியதுடன் இக்கொலையில் போலீசு உள்ளிட்ட குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது.

இயற்கைவளத்தைக் காக்கப் போராடிய ஜெகபர் அலி கொல்லப்பட்டார். தற்போது வக்ஃப் நிலத்தைப் பாதுகாக்கப் போராடிய ஜாகீர் கொல்லப்பட்டுள்ளார். ஜாகீர் பேசியபோது மௌனமாக இருந்தவர்கள் நாமும்தான். நிலத்துக்காகவும், இன்னபிறவற்றிற்காகவும் பல ஜாகீர்களும் ஜெகபர் அலிகளும் கொல்லப்பட இருக்கிறார்கள். இதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

உணர்வுள்ளவர்கள் களத்தில் இறங்குவார்கள். இதோடு கடமை முடிந்தது என நினைப்பவர்கள் ஜாகீர் பிணத்தின் மீது ஒருபிடி மண்ணை அள்ளிப் போட்டதோடு தங்களது கடமையை முடித்துக்கொள்வார்கள்.


மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க