மே – 1: உலகத் தொழிலாளர் தினம்! | பறிக்கப்படும் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைவோம்!

மே – 1, உலகத் தொழிலாளர் தினம்!

பறிக்கப்படும் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைவோம்!

விழிப்புணர்வு பிரச்சாரம் – 2025

1. தொழிலாளர் நிலை!

நாட்டில் எந்த ஆலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படுவதில்லை,
படிப்புக்கும் உழைப்புக்கும் பொருத்தமான ஊதியமில்லை,
பாதுகாப்பான பணிச்சூழலுமில்லை,
8 மணி நேர வேலைக்கும் வேலைப்பளுவுக்கும் கட்டுப்பாடில்லை,
ஊதிய உயர்வு – போனஸ் போன்ற சட்ட உரிமைகள் கூட இல்லை.

காண்ட்ராக்ட், CL, அப்ரண்டீஸ், LEAD, NAPS, FTE என்ற பெயரில் தொழிலாளர் வாழ்க்கை அலைந்து திரியும் நாடோடிமயமாகி விட்டது.

ஆலைக்குள் அற்பக் கூலி – அடக்குமுறைக்கு எதிராக கேள்வி எழுப்பினாலே பாதிப்பை சந்திக்க நேரிடும் என அமைதியாக கடந்தும் செல்கின்றனர்.

விலைவாசி உயர்வின் காரணமாக உடல் நலனுக்கு பொருத்தமான உணவின்றி அரை வயிற்றுக்கு தரமற்ற கலப்பட உணவு சாப்பிடுவது என்றும் நாட்டு நடப்புகள் நம்பிக்கை தரும் சூழல் இல்லாததால், யாரையும் நம்ப முடியாத விரக்தியில் இளைஞர்கள் செல்போன் – இணையதளம் – போதையில் மூழ்கி உடல் நலன் – சிந்தனை – ஆரோக்கியத்தை இழந்தும் வருகின்றனர்.

இந்த நிலைமைக்கு காரணம் என்ன?
பிரச்சனைகளுக்கு தீர்வு தான் என்ன?
தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்களுக்கு கார்ப்பரேட்களின் சுரண்டல், இலாப வெறி தான் காரணம் என்று சிலர் புரிந்து வைத்திருக்கலாம். ஆனால் கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறைக்கும் அரசியலுக்கும் சமூகக் கட்டமைப்புக்கும்  இடையிலான தொடர்பினை புரிந்து கொள்வதுதான் இன்றைய மே தின கடமையாக இருக்கும்!

2. சமூகத்தின் நிலை!

குறைந்த கூலியை கொண்டு திருமணம் – பெற்றோர் – குழந்தைகள் – பராமரிக்க முடியாது என்றாகிவிட்டது.  குடும்ப வாழ்க்கையும் கானல் நீராகி வருகின்றது.

கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளிவிட்டனர். குழந்தைகளுக்கு செல்போனும் தனியார் பள்ளிகளும் கதி என்றாகி வருகிறது. அதனால் சமூகத் தொடர்பு, இயல்பு வாழ்க்கை இழந்து எந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொழில்துறை தொடங்கி விவசாயம், சிறு தொழில் என மொத்த பொருளாதாரமும் கார்ப்பரேட்மயமாவதால் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதன் விளைவாக மக்களிடம் நிச்சயமற்ற வாழ்க்கை தன்மையும் பதட்டமும் நிலவுகிறது. ஏமாற்று – திருட்டு, கொலை – கொள்ளை, பாலியல் வன்முறை என சமூகம் வாழத் தகுதி இழந்து வருகிறது.

உற்பத்தியும் மனிதர்களும்!

உற்பத்தியில் ஈடுபடாமல் காய், கனி, இலை, மாமிசம் உண்டு வாழ்ந்த ஆதிமனிதர்கள் விலங்குகளை ஒத்த பண்பாட்டில் குகை, மரம் என வாழ்ந்துள்ளனர். உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியதும் உண்டான உபரி-தனிச்சொத்துடமையுடன் உற்பத்தி உறவால் பண்பாடு, அதிகாரத்துவம் – பெண்ணடிமைத்தனம், சகலமும் பிறந்தது.

குறிப்பாக, மலைவாழ் மற்றும் கிராமப்புற நிலவுடமை பகுதி மக்களிடம் நிலவும் பண்பாடு, பழக்க வழக்கம், சிந்தனை, நடை, உடை, பாவனை, மொழி பயன்பாடு, படைப்புகள் இவற்றுடன் நகர மக்களை ஒப்பிட்டு பார்த்தால் இன்றளவும் வேறுபாடுகள் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து உற்பத்தி முறையும் அதனுடன் தொடர்புடைய உறவும் தான் சமூகத்தின் சகலத்தையும் தீர்மானிக்கிறது என்பதை நன்கு அறியலாம்.

ஆக, பொருளுற்பத்தி முறை அதனுடனான மக்கள் உறவில் ஏற்பட்டு வரும் இடைவெளி – வாழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் மனிதப் பண்பில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்வதன் மூலமே மாறிவரும் சமூக அமைப்பையும் மக்களையும் புரிந்துகொள்ள முடியும்!

3. கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறை என்றால் என்ன?

முதலாளித்துவத்தின் வளர்ந்த வடிவம் தான் கார்ப்பரேட் என்பதாகும். அதன் பாசிச உற்பத்தி முறை என்பது தொழிலாளர்களையோ, சமூகத்தையோ கணக்கில் கொள்ளாதது. மாறாக, அதீத இலாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டது.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்ட உரிமைகள் அனைத்தையும் பறிக்கிறது. தொழிலாளர்களின் உடல்நலன், எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் உழைப்பையும் உயிரையும் கசக்கிப் பிழிவதை இலக்காகக் கொண்டது.

12 மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 8 மணி நேரத்தில் செய்ய சதித்திட்டம் தீட்டி நிர்பந்திக்கிறார்கள். பெண் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர உரிமைகள், பாதுகாப்புச் சூழலை உத்திரவாதம் செய்யாமல் தீவிரமாக சுரண்டலை திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வழங்கப்படும் அற்பக் கூலியானது குடும்ப வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லாததால் குடும்பப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

கார்ப்பரேட் சிஸ்டத்தின் அடங்காத இலாப வெறியால் விலைவாசி உயர்கிறது, பணத்தின் மதிப்பு குறைகிறது. மக்களின் வாங்கும் திறனும் குறைகிறது. உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கம் – மந்தம் – வேலை இழப்பில் முடிந்து, நாட்டின் பொருளாதாரத்தை குழி தோண்டிப் புதைக்கிறது. இதைத்தான் முதலாளித்துவ ஊடகங்கள் பணவீக்கம் என்று புரியாத மொழியில் பேசி வருகிறார்கள்.

இந்த கார்ப்பரேட் ஆலையில் உழைப்பால் உருவாகும் உபரியில் – மூலதனத்தோடு அற்பக் கூலியை தவிர்த்து ஒட்டு உறவு, உரிமை ஏதும் தொழிலாளர்களுக்கு கிடையாது. இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி மக்களை உருவாக்குகிறது.

கார்ப்பரேட் கும்பலுக்காக உழைத்து மடிவது தான் வாழ்க்கை என சுருங்கி, தொழிலாளர் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது. தினசரி 12 மணிநேர வேலை, part-time job, side பிசினஸ் என பணத்திற்காக ஓடிஓடி உழைத்து சிந்திப்பதற்கோ, நிதானிப்பதற்கோ நேரமில்லாமல், சமூகத்தொடர்பு குறைந்து, ஓய்வின்றி உழைப்பதன் காரணமாக ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, பொது நலன் என விழுமியங்கள் இழந்து, உதிரிகளாக மாறி, பாசிசத்தின் காலாட்படையாக மனிதர்கள் திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

உதாரணமாக, 1920 – களில் வரலாற்றில் ஜெர்மன் முதலாளிகளின் தீவிர சுரண்டலால் உதிரித்தனமான கும்பல் உருவானது. அந்த கும்பலுக்கு இன வெறி போதையூட்டி, உலகைச் சூறையாடுவதற்காக விழுமியங்களற்ற மனிதர்களை பயன்படுத்தியது ஜெர்மன் முதலாளித்துவம்.  அந்த பாசிச பொருளுற்பத்தியில் உருவான உதிரி சமூக அடித்தளத்தில் இருந்து தான் ஹிட்லரின் பாசிச கும்பலும் உருவாக்கப்பட்டது. (இது மேற்குலகின் பாசிச வரலாறு)

இந்தியாவை பொருத்தமட்டில் 2000 ஆண்டுகளாக உழைக்கும் மக்களை ஜாதிகளாக பிரித்து, மூளைக்கு விலங்கிட்டு சிந்திக்க திறனற்ற அடிமைகூலிகளாக பார்ப்பனியம் வைத்திருக்கிறது. பார்ப்பனியம் என்பது சர்வாதிகார சுரண்டல் சிஸ்டம்; தற்போது அது கார்ப்பரேட் சுரண்டல் கொள்ளையுடன் கைக்கோர்த்து ஆட்டம் போடுகிறது. இந்தக் கேட்டினை ஒருங்கிணைத்து புரிந்து கொள்வது அவசரத் தேவையாகும்.

இவ்வாறு கார்ப்பரேட் சிஸ்டத்தின் அதீத இலாப வெறிக்கு பொருளுற்பத்தி முறை பாசிசமயமாவதால் சமூகத்தில் உதிரிகள் அதிகரித்து சமூகமே பாசிசமயமாகி வருகிறது. சுருக்கமாகக் கூறினால் கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறையையும் அதனால் ஏற்படும் பண்புச்சிக்கல் உள்ளிட்ட மொத்த விளைவுகளையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகாரத்துவ, ஆதிக்க மனோபாவ, அறிவியல் பார்வையற்ற, சமூக உணர்வு இல்லாத, சுயநலவாத, கிரிமினல் கும்பல் தொழிற்சங்க அரங்குகளிலும் நிரம்பி வழிவது. சமூக போக்கின் சிறு உதாரணமாகும்.

குவிக்கப்படும் சொத்தும் வளங்களும் கார்ப்பரேட்டிற்கு!
வறுமையும் திண்டாட்டமும் மக்களுக்கு!! என சமூகம் பிரிவதால் ஜனநாயக வழிமுறைகளை இனி அவர்கள் மேற்கொள்ளப்போவதில்லை!

4. அரசியல் நிலை!

மேற்குலகில் மன்னராட்சி – நிலவுடமை உற்பத்தி முறையின் பிற்போக்கு இடிபாடுகளிலிருந்து முதலாளித்துவ சுரண்டல் உற்பத்தி முறை முளைத்தது.

1750: முதலாளித்துவத்தின் துவக்கக் கால கட்டத்தில் 12 – 16 மணி நேர வேலை – அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர்.

மே தின வரலாறு !

1810 களில் ஆஸ்திரேலியாவில் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை தீவிரமடைந்தது.

1848 – ல் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பொதுவுடமை அறிக்கையை கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வெளியிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின்  சிகாகோ நகரில் 8 மணி நேர வேலை உரிமையை 1886, மே – 1 ல் இரத்த வெள்ளத்தில் தொழிலாளர்கள் நிலை நாட்டினர்.

1917: வரலாற்றின் திருப்பு முனையாக லெனின் தலைமையிலான ரசியப் சோசலிச புரட்சி – தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது. உழைப்பால் உருவாகும் உபரியுடனான முதலாளிகளின் தனியுடமை உறவும் மன்னராட்சியும் தகர்க்கப்பட்டது.  உருவான உபரி மதிப்பு – இலாபம் பொதுச் சொத்தானது. அதன் காரணமாக வறுமை ஒழிக்கப்பட்டது. புவிப்பரப்பில் சொர்க்கம் படைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, உலகெங்கும் உழைக்கும் – போராடும் மக்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்ற போராட்ட நிலைமைகள் முதலாளித்துவத்தின் கழுத்தை நெரித்தது.

இந்நிலையில், உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்தது. நிர்பந்தங்களால் காலனி நாடுகள் குடியரசுகளாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் தொழிலாளர்களின் போராட்டக் களத்தை சமாளிக்க
1923 தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்,
1926 தொழிற்சங்கச் சட்டம்,
1936 கூலி வழங்கல் சட்டம் என வரிசையாக தொழிலாளர் நலச் சீர்திருத்தங்களை பிரிட்டன் முதலாளிகள் அறிமுகப்படுத்தத் தொடங்கினர்.

மாண்டேகு- செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலேயர் அரசு கட்டமைப்பில் புதிதாக நாடாளுமன்றம் – சட்டமன்றம் எனும் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் ஜனநாயக – அரசுக் கட்டமைப்பின் வழியாகவே சுரண்டலை நிலைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால், அடுத்த 100 ஆண்டுகளில் நிலைமைகள் தலைகீழாக மாற்றப்பட்டது. உலக அரங்கில் சோசலிச முகாம் இல்லை. முதலாளிகள் வளர்ந்து கார்ப்பரேட்களாக உருவெடுத்து விட்டார்கள். இன்றோ அரசுக் கட்டமைப்பை அவர்களின் கண்ணசைவிலேயே இயக்குகிறார்கள். பெயரளவில் இருந்த சட்ட உரிமைகள் கூட திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர் நலன் பறிக்கப்பட்டு விட்டது.

இலாப வெறியின் காரணமாக விவசாயம் – சிறு குறுந்தொழில், கல்வி – மருத்துவம், பொதுத்துறை – தொழில்துறை என மொத்த அரசியல் – பொருளாதார கட்டமைப்பையும் கார்ப்பரேட்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று விட்டனர்.

இலாபத்திற்காக அதிகமான உற்பத்தி செய்து உலகையே திணறடித்தும் வருகின்றனர். இதற்கு அமெரிக்க மக்களும், அமெரிக்கப் பொருளாதாரமும் கூட தப்பவில்லை. வேலைவாய்ப்பு சுருங்கி விட்டது. தற்போது, கார்ப்பரேட்கள் – நிதி மூலதன சூதாடி கும்பலை மீறி அமெரிக்க அரசு கூட செயல்பட முடியாது என்பது அம்பலமாகி விட்டது.

இலாபத்திற்காக இயற்கை வளக் கொள்ளை அதாவது காடு, மலை, விளைநிலங்கள் பாழடிக்கப்பட்டு சுற்றுச்சூழலை உயிர் வாழத் தகுதி இல்லாத நிலைமைக்கு தள்ளிவிட்டனர்.

குறிப்பாக, மனித குலத்திற்கு எதிரான இந்த கார்ப்பரேட் போக்கை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கும் அடிமை – வேலையாட்களை உருவாக்கும் கல்வி – பாடத்திட்டம் வகுத்தும் உலகளவில் வலைப் பின்னல் உருவாக்கி செயல்பட்டும் வருகின்றனர்.

மேலும் ரசியப் புரட்சி – யின் அனுபவத்திலிருந்து குறிப்பாக, இந்திய தொழிலாளர் வர்க்கம் எந்தக் காலத்திலும் எழுச்சி பெற்று விடக் கூடாது என்பதற்காக, பார்ப்பனிய மூடநம்பிக்கை, ஜாதி, மத வெறுப்பு, நுகர்வு வெறி, போதை, சீரழிவு கலாச்சாரம் போன்றவை அரசு – ஆளும்வர்க்கத்தால்  திட்டமிட்டு தீவிரப்படுத்தப்படுகிறது.

அடுத்து, ஆங்கிலேயர்கள் வெளியேறி 75 ஆண்டுகளாகி விட்டது. ஆனாலும் சுரண்டலும் சொத்துக்குவிப்பும் தடுக்கப்படவில்லை. இதன் விளைவாக வறுமையும் திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் மக்களின் நிலையும் நாட்டின் எதிர்காலமும் சோமாலியா நோக்கி செல்கிறது.

கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறையின் சுரண்டலுக்கு ஏற்றதாக 44 தொழிலாளர் சட்டங்கள் தொடங்கி, சிவில் – கிரிமினல் சட்டங்கள், நிதி – நீதி தொடர்புடைய சட்டங்கள் மொத்தமும் திருத்தப்பட்டுவிட்டன..

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வாதங்கள் பயனற்று போய்க்கொண்டிருக்கிறது. சட்ட உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.

பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனிக்கு பதிலாக குஜராத்தின் அம்பானி – அதானி தலைமையிலான கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆட்சி நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் அரசு அமைப்பும் மாற்றப்படுகிறது.

கார்ப்பரேட் கொள்ளையையும் அதற்குக் கவசமாக பாசிச அரசுக் கட்டமைப்பை தக்கவைப்பதற்காக ஜாதி, மத, இன வெறுப்பு அரசியலை பார்ப்பன பனியா RSS – BJP கும்பல் திட்டமிட்டு திணித்து திசைதிருப்புகின்றனர்.

சமூகம் பாசிசமயமானால் தான் பாசிச ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தி, பாசிச சுரண்டலை தக்க வைக்க முடியும் என்பதை சர்வதேச அனுபவங்கள் வாயிலாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக உரிமைகளைப் பறித்து நிச்சயமற்ற வாழ்க்கைத் தன்மையை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் பிரச்சனைகளை பட்டியலிட்டு போராடும் அதே சமயம், பிரச்சனை மற்றும் அதன் விளைவுகளின் தத்துவார்த்த அடிப்படைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் மக்களின் எதிர்காலம் இருண்டு வருகிறது!

இந்தியாவில் பாசிச கொலைபாதக வரலாற்றை தொடர அனுமதிக்கப் போகிறோமா? யோசியுங்கள்.

உலகெங்கும் உள்ள 800 கோடி மக்களும் சந்திக்கும் கார்ப்பரேட் பேரழிவை முறியடிப்பதற்கான சமூக அறிவியலே மார்க்சிய தத்துவமாகும்!

5. முடிவாக:

பொருளுற்பத்தி முறை மற்றும் அதனுடன் நிலவும் உற்பத்தி உறவுக்கும் – மனிதப் பண்புக்கும் உள்ள தொடர்புகள் கணக்கில் கொள்ளப்படாததால் மக்களிடையே கருத்து முரண்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதை புரிந்து கொண்டால் மட்டுமே மக்களைத் திரட்ட முடியும்!

மற்றொரு பக்கம், இந்தியாவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் கர்மா – விதி – தலையெழுத்து காரணமென்று அறிவியலை சிந்திக்க விடாமல் முடக்கி விடுகிறது பார்ப்பனியம்!

கார்ப்பரேட் சிஸ்டத்தின் எடுபுடி அரசுகள் வழங்கும் கல்வி – பாடத்திட்டமானது இந்தச் சூழலை புரிந்து சிந்திக்க அனுமதிப்பதில்லை. குறிப்பாக, அடிமையாக வேலை செய்யும் ரோபோ மாதிரியான மனிதர்களை உருவாக்குகிறது!

கார்ப்பரேட் சிஸ்டத்தின் அதீத இலாபவெறியால் உற்பத்தி முறை பாசிசமயமாகி விட்டது, அதன் விளைவாக சமூகமும் பாசிசமயமாகிக் கொண்டிருக்கிறது, இந்தச் சூழலைத் தக்க வைக்க மொத்த அரசு கட்டமைப்பும் பாசிச மயமாக்கப்பட்டுள்ளது.

அதி தீவிர சுரண்டல் சமூக கட்டமைப்பில் எந்த வகையிலும் வாழ முடியாது என்பதையும் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

உற்பத்தி முறை, உற்பத்தி உறவு, பண்பு, அரசியல், சமூகம் இவற்றின் சார்பியல்பு குறித்த ஒருங்கிணைந்த புரிதலும் சிந்தனையும் தான் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் என்பதை மே நாளில் உரக்கச் சொல்வோம்!

பாசிசத்தால் பறிக்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட மக்களை திரட்டி வீதியில் இறங்குவோம்!

  2025 மே நாளில் முழங்குவோம்!

  • தொழிலாளர்களை நாடோடிகளாக்கும் காண்ட்ராக்ட், CL, NAPS, FTE சுரண்டல் திட்டங்களை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
  • பணிகள் அனைத்தும் நிரந்தரம், ஆலைக்கு ஒரு சங்கம், நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகள் நேரடி ஒலிபரப்பு என்பதை உயர்த்திப்பிடிப்போம்!
  • நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு இணையான ஊதியம் – VDA, போனஸ், சரி விதித சத்தான உணவு என்று முழங்குவோம்!
  • தினசரி OT-யை நிராகரித்து, 8 மணி நேர வேலை எனும் உரிமையை நிலைநாட்டுவோம்!
  • அரசமைப்பு ஆர்டிக்கிள் 39 படியும் சம வேலைக்கு – சம ஊதியம் என்ற சட்ட உரிமையை நிலைநாட்டுவோம்!
  • காண்ட்ராக்ட், கேசிவல் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ35,000 அத்துடன் விலைவாசி உயர்வை சமாளிக்க Variable DA சட்ட உரிமையை நிலைநாட்டுவோம்!
  • 44 தொழிலாளர் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறும்வரை போராடுவோம்!
    PF சேமிப்பான 12 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து கார்ப்பரேட்டுகள் கபளிகரம் செய்வதை தடுப்போம்!
  • பார்ப்பனிய அடக்குமுறைகள் முதல் கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறை வரை திட்டமிடப்படும் சதி, சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடிப்போம்!
  • 150 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேளாண் நிலங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு அனுமதிப்பதை எதிர்ப்போம்!
  • இயற்கை வளங்கள், காடு மலைகளை பாதுகாப்போம்!
  • முஸ்லிம், தலித் வெறுப்பு அரசியலை முறியடிப்போம்!
  • வேண்டும் ஜனநாயகம்!
    வேண்டாம் பாசிசம்!!

தொழிலாளர் ஒருங்கிணைப்பு சிந்தனைகள்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க