பா.ஜ.க. ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission) கீழ் பணியாற்றும் 16 ஆயிரம் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, சேவைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களை அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தி, குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பை சுரண்டி வருகிறது. இந்நிலையில், கடந்த 2023 சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில், ‘மோடியின் வாக்குறுதி’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளிட்ட பா.ஜ.க., ஒப்பந்த சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதியளித்தது.
ஆனால், விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியமைத்து 20 மாதங்களானப் பிறகும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர், சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், துணை முதலமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என அனைவருக்கும் 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 13 அன்று நடந்த கூட்டத்தில், சுகாதார ஊழியர்களின் 10 கோரிக்கைகளில் நான்கை ஏற்பதாக தேசிய சுகாதார இயக்கத்தின் செயற்குழு கூறினாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு பா.ஜ.க. அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை.
இதனையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பணியாற்றும் 16,000 தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முடிவு செய்து, ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதலாக போராடி வருகின்றனர்.
படிக்க: அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு
இன்றுடன், சுகாதார ஊழியர்களின் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது. ஆனால், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் பா.ஜ.க. அரசு அலைக்கழித்து வருவதால், ஊட்டச்சத்து புனர்வாழ்வு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளின் சுகாதார பரிசோதனைகள் போன்ற அத்தியாவசிய சுகாதார வசதிகள் பாதிப்படைந்துள்ளன.
மறுபுறம், போராடும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தி சிறையிலடைக்கப்படுவர், அவர்களின் ஊதியம் பறிக்கப்படும் என்றெல்லாம் பா.ஜ.க. அரசு மிரட்டி போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது.
இந்நிலையில்தான், கடந்த செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று பகல் கனவு கண்டது. ஆனால், இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவரான ஹேமந்த் குமார் சின்ஹா கூறுகையில், “நாங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர விரும்பவில்லை. ஆனால், அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே மாதிரியான கோரிக்கைகளை எதிர்த்துப் போராடும் போது, நீங்கள் ஏன் 25 பேரை மட்டும் பணிநீக்கம் செய்கிறீர்கள்? நாங்கள் எங்கள் வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவோம்” என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 16,000 தொழிலாளர்கள் பணியாற்றிவரும் நிலையில், ஆகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள் ராஜினாமா செய்திருப்பது பா.ஜ.க. அரசிற்கு பீதியூட்டியுள்ளது.
2014-இல் இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்தே, தொழிலாளர்களின் 44 சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாக சுருக்கி தொழிலாளர் உரிமைகளை பறிப்பது; அனைத்து துறைகளையும் அரசு கட்டமைப்பையும் டிஜிட்டல்மயம்-காண்ட்ராக்ட்மயமாக்குவது; தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கணித்து வஞ்சிப்பது என அப்பட்டமான தொழிலாளர் விரோத நடவடிக்கையில் பாசிச பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
ஆனால், சத்தீஸ்கர் மாநில தேசிய சுகாதார இயக்க தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் போராடி வருவது பா.ஜ.க. அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நிரந்தரப் பணிகள் ஒழித்துக்கட்டப்பட்டு அனைத்தும் காண்ட்ராக்ட் பணிகளாக மாற்றப்பட்டுவரும் இன்றைய சூழலில், ஒப்பந்த தொழிலாளர்களின் இப்போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சத்தீஸ்கர் மாநில தேசிய சுகாதார இயக்க தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram