இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலை செய்ததைப் போல, பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலுள்ள இலட்சக்கணக்கான மக்களை யூத இனவெறி இஸ்ரேல் அரசு நம் கண் முன்னே இனப்படுகொலை செய்துக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்துக்கொண்டு காசா மீதான போரைத் தொடங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றுவதுதான் தன்னுடைய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. “போர் நிறுத்தத்திற்கு தயார்” என்று ஹமாஸ் பலமுறை தெரிவித்துவிட்டப் போதிலும், அதன் நியாயமான கோரிக்கைகளுக்கு உடன்படாமல், தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு போரைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கப்பட்ட காசா மீதான இன அழிப்புப் போரில் இதுவரை 18,430-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 60,933 பாலஸ்தீன மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். தற்போது காசா மீது இஸ்ரேல் தொடுத்திருக்கும் பட்டினிப் போரால் பாலஸ்தீன மக்கள் சகித்துக்கொள்ள முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் அரசின்
பாலஸ்தீன ஆக்கிரமிப்புத் திட்டம்
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் இப்போரில் காசாவின் 85 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டது. மீதமுள்ள 15 சதவிகிதத்திற்கும் குறைவான (55 சதுர கிலோமீட்டர்) ரஃபா எல்லை, காசா நகரப் பகுதிகளில்தான் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிதலமடைந்த கட்டடங்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் உணவு, குடிநீர் என எந்தவித அடிப்படை வசதியுமின்றி தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் காசா நகரத்தை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றத் தொடங்கியுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிகளை நோக்கி அம்மக்களை கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.
அதாவது, ஹிட்லரின் வதைமுகாம் போன்று, இராணுவக் கட்டுப்பாட்டின் கீழுள்ள குறுகிய பகுதிக்குள் காசா மக்களை அடைத்து வைத்து, பட்டினியாலும் குண்டுவீச்சாலும் அம்மக்களை கொத்து கொத்தாக இன அழிப்பு செய்வதே இஸ்ரேல் அரசின் நோக்கமாக உள்ளது.
மேலும், ஒட்டுமொத்த காசாவின் நிலப்பரப்பையும் ஆக்கிரமிப்பதற்காக காசா மக்களை பிற நாடுகளுக்கு குடியேற்றும் திட்டத்தையும் இஸ்ரேல் அரசு கொண்டிருக்கிறது. இதற்காக, அமெரிக்காவுடன் இணைந்து தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருவது செய்திகளில் அம்பலமாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஜூலை மாதத்தில் இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசட்டில், “காசாவின் ரிவியரா – பார்வையிலிருந்து எதார்த்தத்திற்கு” (The Gaza Riviera – from vision to reality) என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், காசா மக்களை இன அழிப்பு செய்துவிட்டு அங்கு யூதர்களை குடியேற்றுவதற்கான திட்டத்தை இனவெறி பாசிஸ்டுகள் முன்வைத்தனர். காசாவை முழுமையாக கைப்பற்றி அங்கு இரண்டு நகரங்கள், பல்கலைக்கழக வளாகம், தொழிற்துறைப் பகுதி, சுற்றுலாத் தளங்கள் முதலியவற்றைக் கட்டியமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இது, அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் ட்ரம்ப் அறிவித்தபடி, காசாவை மத்தியக் கிழக்கின் ரிவியராவாக (கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சுற்றுலா நகரம்) மாற்றும் திட்டத்தை ஒத்ததாகும்.
அதேபோல, பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நிலப்பகுதியை ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கையிலும் இஸ்ரேல் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று மேற்கு கரையில் இஸ்ரேலியர்களுக்கான 3,400 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “கிழக்கு 1” (E1) என்று அழைக்கப்படும் இத்திட்டமானது ஏற்கெனவே இஸ்ரேலுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசேலமில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் மேற்குகரையில் உள்ள மாலே அடுமிம் குடியேற்ற பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைகிறது. அதாவது, கிழக்கு ஜெருசேலமிலிருந்து மாலே அடுமிம் குடியிருப்புகள் வரையிலான மேற்கு கரைப் பகுதியை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக்கொள்ள விழைகிறது.
தரைமட்டமாக்கப்படும் காசா நகரம்:
காசா நகரத்தை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றத் தொடங்கியதிலிருந்து அந்நகரத்தின் மீது மிகத் தீவிரமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. காசா நகரத்தின் ஜெய்டவுன், சப்ரா, ரெமால், துஃபா ஆகிய பகுதிகள் இத்தாக்குதலின் மையமாக உள்ளன.
விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மக்கள் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசுவது; இராணுவப் படைகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டே முன்னேறுவது; டாங்கிகள் மூலம் வீடுகளை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மக்களை கொன்று குவித்து வருகின்றன. “நகரத்தை விட்டு வெளியேறுங்கள் அல்லது செத்து மடியுங்கள்” என்பதே இஸ்ரேல் இராணுவத்தின் கொள்கையாக உள்ளது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் காசா நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேலும், காசா நகரத்தின் கட்டடங்கள் அனைத்தையும் தரைமட்டமாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இஸ்ரேலிய இராணுவம், குண்டுவீச்சு மற்றும் புல்டோசர்கள் மூலம், தாக்குதல் தொடங்கிய 20 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களை இடித்துள்ளது.
அதேபோல, தன் கட்டுப்பாட்டில் உள்ள 85 சதவிகித காசா பகுதிகளிலும் புல்டோசர்கள் மூலம் கட்டடங்களை இடித்து வருகிறது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் புல்டோசர்களை இயக்குபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான ஆட்சேர்ப்பு விளம்பரங்களை முகநூலில் வெளியிட்டு இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு “மெட்டா” நிறுவனம் உடந்தையாக செயல்பட்டிருப்பதை “தி கார்டியன்” இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறு காசா முழுவதையும் தரைமட்டமாக்கி கைப்பற்றும் நோக்கத்திலிருந்து பாசிச இஸ்ரேல் அரசு செயல்பட்டு வருகிறது.
துப்பாக்கி அல்லது பட்டினி:
இருமுனை தாக்குதலில் காசா மக்கள்
உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை காசாவிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ள இஸ்ரேல் அரசு, பட்டினியை ஆயுதமாக்கி காசா மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது.
காசா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் காசாவிற்குள் அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் அரசு முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தியது. மார்ச் 18 முதல் காசா மீதான போரை மீண்டும் தொடங்கி பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக படுகொலை செய்து வருகிறது. இதற்கெதிராக உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் நடந்ததையடுத்து, மே மாதத்திலிருந்து காசாவிற்குள் சொற்பமான அளவில் அத்தியாவசியப் பொருட்களை அனுமதித்து வருகிறது.
காசா மக்களின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாளொன்றுக்கு 600 லாரி உணவு பொருட்கள் தேவைப்படும் நிலையில், மிகக்குறைந்த அளவில் 84 லாரிகளை மட்டுமே அனுமதித்து, மேலும் நெருக்கடியை உண்டாக்குகிறது.
மேலும், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் காசாவிற்குள் உணவு வழங்குவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்க-இஸ்ரேல் கைக்கூலி அமைப்பான “காசா மனிதாபிமான அறக்கட்டளை” (GHF) மட்டுமே உணவு வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை வெட்டவெளிகளில் உணவு மையங்களை அமைத்து நூற்றுக்கணக்கான குழந்தைகள், மக்களை அங்கு வர வைக்கிறது. அருகில் பதுங்கியிருக்கும் கொலைகார இஸ்ரேல் ராணுவத்தினர் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்கின்றனர். மே மாதத்திலிருந்து இவ்வாறு 1,996 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், காசாவில் கடுமையான உணவு பஞ்சம் உள்ள போதிலும், கொலைபொறியாக செயல்படும் இந்த அறக்கட்டளையை மூட வேண்டுமென உலகம் முழுவதிலுமிருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
ஒருபுறம், இஸ்ரேலின் பட்டினிப் போரால் காசா குழந்தைகள், மக்கள் செத்து மடிகின்றனர். பசிக்கொடுமை தாளாமல், குழந்தைகள் மண்ணைத் திண்ணும் காட்சிகளும், அழுவதற்குக் கூட தெம்பின்றி பச்சிளம் குழந்தைகள் உடல் மெலிந்து இறக்கும் செய்திகளும் நம்மை உலுக்குகின்றன. மறுபுறம், உணவு வாங்கச் செல்லும் அப்பாவி குழந்தைகள், மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஒன்று பசியால் இறக்க வேண்டும் அல்லது துப்பாக்கியால் இறக்க வேண்டும் என்பதுதான் காசா மக்களின் அவல நிலையாக உள்ளது.
குறிவைத்து வேட்டையாடப்படும் பத்திரிகையாளர்கள்
இஸ்ரேலின் இன அழிப்பு வெளியுலகிற்கு தெரியக்கூடாது என்பதற்காக காசாவில் பத்திரிகையாளர்களை குறிவைத்து இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது. “அல் ஜசீரா” உள்ளிட்ட நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் அரசின் முக்கிய இலக்காக உள்ளனர்.
தற்போது, காசாவில் மருத்துவமனைகளில் மட்டும்தான் குறைந்தபட்ச வசதிகள் உள்ளதால், பத்திரிகையாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஹமாஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக பொய் குற்றஞ்சாட்டும் இஸ்ரேல் மருத்துவமனைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10 அன்று காசாவின் அல் ஷிபா மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது தாக்குதல் நடத்தி ஏழு பத்திரிகையாளர்களை படுகொலை செய்தது. அதேபோல், ஆகஸ்ட் 25 அன்று நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கும் கூடிய மீட்புக் குழுவினரையும் பத்திரிகையாளர்களையும் குறிவைத்து மீண்டுமொரு தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
காசாவிற்குள் சர்வதேச பத்திரிகையாளர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள்தான் இஸ்ரேலின் கொடூரங்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றனர்.
தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் இஸ்ரேலால் குறிவைத்து கொல்லப்படுவோம் என்பதை இப்பத்திரிகையாளர்கள் அறிந்துள்ளனர். ஆனால், காசாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பிருந்த போதிலும் காசா மக்களுடனிருந்து வீரதீரத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க ஓநாயின் ஆதரவு
காசா மீதான இன அழிப்புப் போரை அமெரிக்காவின் ஆதரவுடனே பாசிச இஸ்ரேல் அரசு தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் இறக்குமதி செய்யும் ஆயுதங்களில் ஏறக்குறைய 65 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை அமெரிக்க அரசால் வழங்கப்படுவதே.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, “உலகில் நடக்கும் அனைத்து போரையும் நிறுத்திவிடுவேன்” என தம்பட்டம் அடித்தார். ஆனால், தன்னுடைய மேலாதிக்க நோக்கத்திலிருந்து உக்ரைன்–ரஷ்யா போரை நிறுத்துவதற்கு முனைப்புக் காட்டும் ட்ரம்ப், அதே நோக்கத்திற்காக இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்து வருகிறார்.
மேலும், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாகவே உள்ளன. இந்நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றன.
அதேபோல, அமெரிக்க அடிமையான மோடி அரசு, ஐ.நா-வில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்க மறுத்து பாலஸ்தீன மக்களுக்கு துரோகமிழைத்து வருகிறது. மறுபுறம், இஸ்ரேலுக்கு ஏற்றுமதியாகும் அதானியின் ட்ரோன்கள் மூலம் பாலஸ்தீன மக்களை படுகொலை செய்கிறது.
நம்பிக்கையின் ஒளிக்கீற்று!
உலகின் பல நாடுகளில் “காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து” உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து போராட்டக் களத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆஸ்திரேலியாவில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காசா மக்களுக்கு ஆதரவாக நடந்த பேரணிகளில் 3.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தக்கோரியும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் மீட்கக் கோரியும் இஸ்ரேலில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களால் இஸ்ரேலே ஸ்தம்பித்து போயுள்ளது.
காசாவிலும் ஹமாஸ் மக்களுடன் இணைந்து இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பாலஸ்தீன மக்களும் காசா நிலப்பரப்பை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மக்கள் போராட்டங்களால் ஜெர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வுகள் மக்கள் போராட்டங்களே பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை நிறுத்தும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன.
ஆகவே, “அமெரிக்க-இஸ்ரேல் ஓநாய்களே, காசா மீதான போரை நிறுத்து!”, “காசா நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதைக் கைவிடு!”, “காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்ல அனுமதி!” என்று உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஓரணியில் திரண்டு போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது. மேலும், ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு அரசை இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வைக்க நிர்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.
இந்தியாவில் “பாசிச மோடி அரசே, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் தூண்டித்திடு!”, “அதானியின் ட்ரோன்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்!”, “இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடை விதித்திடு!” உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து மோடி அரசை பணிய வைக்கும் போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் நடத்த வேண்டியுள்ளது.
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram