கடந்த 2008-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாஷிக் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாலேகான் பகுதியிலுள்ள மசூதியருகே குண்டுவெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இச்சம்பவத்தில் ஆறு அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இப்பயங்கரவாதத் தாக்குதலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜூலை 31 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கைச் சுற்றி பல கதைகளும் பொய் செய்திகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், இத்தீர்ப்பு குறித்துப் பார்ப்பதற்கு முன், இவ்வழக்கின் உண்மை பின்னணியை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
காவி பயங்கரவாதத்தின் கோரமுகம்
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையானது 2008-ஆம் ஆண்டில் “பயங்கரவாதத் தடுப்புப் படை” (ATS – Anti-Terrorism Squad) தலைவர் ஹேமந்த் கர்காரே தலைமையில் தொடங்கப்பட்டது. இவ்வழக்கில் பெண் சாமியாரும் முன்னாள் பா.ஜ.க. மக்களவை உறுப்பினருமான (இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பிறகு பா.ஜ.க-வால் மக்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார்) சாத்வி பிரக்யா என அறியப்படும் பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் இராணுவ அதிகாரிகளான ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித், ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 11 பேர் மகாராஷ்டிரா குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் 4,528 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்த பயங்கரவாதத் தடுப்புப் படை, பல முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு 11 பேர் மீதும் குற்றஞ்சாட்டியது. குறிப்பாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய பிரக்யா, “ஏன் கொஞ்சம் பேர்தான் இறந்தார்கள்? நீ ஏன் கூட்டம் நிறைந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை?” என்று கேட்ட கேட்பொலி வெளியாகி கேட்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மாலேகான் குண்டு வெடிப்பு இந்து மதவெறியர்களால் திட்டமிட்டே இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்பதை இது நிரூபித்தது.
மேலும், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தின் முழுநேர ஊழியர்கள், முக்கிய இந்துமதத் தலைவர்கள் மற்றும் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் ஒன்றிணைந்து, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இவர்கள் அனைவரும் “அபினவ் பாரத்” எனப்படும் இந்துமதவெறி அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதும் இந்த அமைப்பானது நேபாளம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலுள்ள மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதக் குழுக்களுடன் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு வருகிறது என்பதும் அம்பலமானது.
மேலும், இந்திய இராணுவத்தின் முக்கியப் பொறுப்புகளிலிருந்த பிரசாத் புரோகித், ரமேஷ் உபாத்யாய் ஆகியோர் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்ததுடன், அதிநவீன ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் வழங்கியுள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமாகி இந்திய இராணுவத்தின் யோக்கியதையை திரைக்கிழித்துக் காட்டியது.
2008 மாலேகான் குண்டுவெடிப்பு போன்று, 2006-இல் மாலேகானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல், 2007-இல் சம்ஜௌத்தா விரைவு ரயில் குண்டுவெடிப்பு, அதே ஆண்டு மே மாதத்தில் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, நவம்பரில் ராஜஸ்தானின் அஜ்மர் தர்கா குண்டுவெடிப்பு உட்பட பல குண்டுவெடிப்புச் சம்பவங்களை காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சிகர உண்மையும் அம்பலமானது.
இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் அம்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், இஸ்லாமிய வெறுப்பு தீவிரப்படுத்தப்பட்டு, எவ்வித ஆதாரமுமின்றி இஸ்லாமியர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
ஆனால், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு காவி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்களையும், அவர்களின் இராணுவ மற்றும் சர்வதேச வலைப்பின்னலையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்திய முக்கிய வழக்காக அமைந்தது. அந்தவகையில் இவ்வழக்கானது “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற ஒருதலைபட்ச பார்வையைத் தாண்டி “காவி பயங்கரவாதம்” என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
இவ்வாறான முக்கியத்துவம் பெற்ற வழக்கை விசாரித்துவந்த பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரி ஹேமந்த் கர்காரே, 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் காவி கும்பலால் திட்டமிட்டு படுகொலைச் செய்யப்பட்டார். அதன்பிறகு காவி கும்பலின் ஆதிக்கத்தால் பயங்கரவாதத் தடுப்பு படையின் விசாரணை நிறுத்தப்பட்டு, 2011-இல் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இவ்வழக்கு மாற்றப்பட்டது.
அரசின் துணையுடன் காவி பயங்கரவாதிகள் விடுதலை
2014-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பாசிசத்தை அரங்கேற்றுவதற்கு ஏதுவாக அரசுக் கட்டமைப்பு முழுவதையும் மறுவார்ப்பு செய்து வருகிறது. அந்தவகையில், தன்னாட்சி அதிகாரமுடையதாகச் சொல்லப்படும் என்.ஐ.ஏ-வும் பா.ஜ.க-வின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பிரக்யா சிங் தாக்கூர், பிரசாத் புரோகித் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று என்.ஐ.ஏ. புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இது, 2016-இல் பயங்கரவாதத் தடுப்பு படை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கும், ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனான சுவாமி அசீமானந்த் (மேற்குறிப்பிட்ட குண்டுவெடிப்புகளுக்கு இலக்குகளை தீர்மானித்து வழிகாட்டியவன்) அளித்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் முரணாக இருந்தது.
இந்நிலையில்தான், கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டதற்கும், மோட்டார் வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி “சந்தேகத்தின் பலனின்” அடிப்படையில் பிரக்யா சிங் தாக்கூர், பிரசாத் புரோகித் உள்ளிட்ட குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார் (ஏற்கெனவே நான்கு பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்).
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பேசிய பிரக்யா சிங் தாக்கூர், “பகவான், சனாதனம் மற்றும் ராஷ்டிரியத்திற்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள பா.ஜ.க. தலைவர்கள் பலரும், “எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல காவி பயங்கரவாதம் என்ற ஒன்று இல்லை”, “ஒரு இந்து ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது” போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பாசிச மோடி ஆட்சியில் கலவரங்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் இந்து மதவெறியர்கள் நீதிமன்றத்தின் ஆசியுடன் விடுதலையாகி வெளியே வருவதும், அக்குற்றவாளிகள் சங்கிகளால் சாதனையாளர்கள் போல மாலையிடப்பட்டு மேளத்தாளத்துடன் வரவேற்கப்படுவதும் ஒரு போக்காக உருவெடுத்துள்ளது.
காவி குண்டர்களை விடுதலை செய்வது ஒருபுறமிருக்க, எந்தவொரு குற்றமும் செய்யாத சிறுபான்மையினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலடைத்து சித்தரவதை செய்வதும் படுகொலை செய்வதும் பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் உமர் காலித்
டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரான உமர் காலித், ஊபா கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் சதித்திட்டத்துடன் கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அணித்திரட்டி போராடியதுதான் உமர்காலித் செய்த ‘குற்றம்’.
2020-இல் சி.ஏ.ஏ-விற்கு எதிராக டெல்லியில் அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்தில், திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியது காவி கும்பல். ஆனால், கலவரத்தைத் தூண்டினார்கள் என்ற பொய் குற்றச்சாட்டில் மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட 18 பேரை ஊபா கருப்புச் சட்டத்தில் கைது செய்தது டெல்லி போலீசு. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் காலித், காலித் சைஃபி, சர்ஜீல் இமாம், குல்ஃபிஷா ஃபாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேர் பிணை கூட கிடைக்காமல் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், ஐந்து ஆண்டுகளாகியும் இதுநாள்வரை இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கூட தொடங்கப்படவில்லை.

உமர் காலித் இஸ்லாமியர் என்பதைத் தாண்டி, சமூகத்தை நேசிக்கக்கூடிய, உண்மையான ஜனநாயகத்தை விரும்பக்கூடிய முற்போக்காளர் என்பதுதான் காவி கும்பலை மிகவும் அச்சுறுத்துகிறது. இளைஞர்களிடத்தில் சமூக உணர்வு பற்றிப் படருவதானது, பாசிச அரங்கேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், உமர் காலித் போன்ற செயற்பாட்டாளர்களை சிறைக்குள் அடைத்து சித்திரவதை செய்து வருகிறது, பாசிச மோடி அரசு.
2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில், ஊபா கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 8,719 பேரில் 223 பேர் மட்டுமே குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊபா வழக்கின் குற்ற விகிதம் வெறும் 2.8 சதவிகிதமே ஆகும். அப்படியெனில், கைது செய்யப்படும் 100 பேரில் அதிகபட்சம் 3 பேர் மட்டுமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். (அதாவது 97 சதவிகித கைது நடவடிக்கைகள் சட்டவிரோதமாகவே மேற்கொள்ளப்படுகின்றன).
இந்தப் புள்ளிவிவரத்திலிருந்தே மோடி கும்பல் தன்னுடைய பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கான ஆயுதமாகவே ஊபா கருப்புச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறது என்பது புலனாகிறது.
இதற்கு நீதிமன்றங்களும் உறுதுணையாக செயல்பட்டு வருகின்றன. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு, உமர் காலித் வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் நீதிமன்றம் கையாளும் முறையே இதனை மெய்பிக்கிறது. அரசுக் கட்டமைப்பு பாசிசமயமாகிவரும் சூழலில், நீதிமன்றங்கள் சனாதனத்தின் விதிகளையே தீர்ப்புகளாக வழங்கி வருகின்றன.
000
இதன் அடுத்தக்கட்டப் பாய்ச்சலே, கடந்தாண்டு இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள். இப்பாசிச சட்டங்கள் போலீசுக்கு கட்டற்ற அதிகாரம் அளிக்கிறது. அதாவது, இனிமேல் ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் போலீசின் கரங்களில் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரை எந்தவொரு விசாரணையுமின்றி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் போலீசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது போன்ற வரம்பற்ற அதிகாரங்கள் போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், இந்துராஷ்டிரத்தைக் கட்டியமைக்கத் துடிக்கும் பாசிச கும்பலின் பாதையில் தடையாக இருக்கும் – சமூகத்தை நேசிக்கக் கூடியவர்கள், செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி சாதாரண உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் – அனைவரும் எந்தவொரு தகுந்த காரணமுமின்றி எந்த நேரத்திலும் போலீசால் கைது செய்யப்படுவதற்கான பேரபாயம் உள்ளது.
மறுபுறம், தற்போது உள்ளதை விடவும் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் எந்தத் தங்குதடையுமின்றி செயல்படுத்த அனுமதிக்கப்படும். இதனால், முன்னெப்போதையும்விட இஸ்லாமிய, கிறிஸ்தவ, தலித் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மதவெறி, சாதிவெறிக் கலவரங்கள் ஆர்.எஸ்.எஸ்-ஆல் மூர்க்கமான வகையில் தீவிரப்படுத்தப்படும். ஒருபுறம் பயங்கரவாதப் பேய் தலைவிரித்தாடும், இன்னொருபுறம் உரிமைக்குரல் நசுக்கப்பட்டு கிடக்கும்.
இந்த அபாயகரமான நிலைமை பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. “ஊபா கருப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்”, “என்.ஐ.ஏ. போன்ற அடக்குமுறை கருவிகள் கலைக்கப்பட வேண்டும்”, “மூன்று குற்றவியல் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும்”, “எந்த ஒரு குற்றமும் செய்யாத, குற்றம் நிரூபிக்கப்படாத இஸ்லாமியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மக்கள் போராட்டங்களை கட்டிமையக்க வேண்டும். அப்போராட்டங்களை சமூக – அரசியல் – பொருளாதார ரீதியாக ஒரு மாற்று கட்டமைப்பான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு உருவாக்குவதை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும்.
ஜென்னி லீ
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram