கடந்த டிசம்பர் 9 அன்று அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1975-ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் சத்துணவு பணியாளர், உதவியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் பிறந்த குழந்தை முதல் 6 வயதுடைய குழந்தைகள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவு வழங்குவது, தடுப்பூசி போடுவது, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவது போன்ற தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், சமூக ஆய்வுகள், பிறப்பு-இறப்புகளை பதிவு செய்தல், தேர்தல் காலத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுவது, தற்போது எஸ்.ஐ.ஆர். பணிகளில் இரவு பகலாக ஈடுபடுவது போன்ற ஒன்றிய – மாநில அரசுகள் வழங்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில், 54,000-த்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- 1993-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்
- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
- ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- பள்ளிகளைப் போன்று அங்கன்வாடிகளுக்கும் மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும்.
உள்ளிட்டவை போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் முதன்மையான கோரிக்கைகளாகும்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க., தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் தனக்கு வாக்களித்த அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது.
படிக்க: வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
எனவே, தேர்தல் வாக்குறுதிபடி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த டிசம்பர் 9 அன்று “தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்” தலைமையில், ராணிப்பேட்டை, கரூர், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்குவதற்காக வழக்கம்போல் பேச்சுவார்த்தைக்கு போலீசை அனுப்பி வைத்தது தி.மு.க. அரசு. ஆனால், அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் குறிக்கோளில் உறுதியாக இருந்தனர். இதனால் போராட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை என்ற காரணத்தை கூறி அங்கன்வாடி ஊழியர்களை அடாவடித்தனமாக கைது செய்து மண்டபங்களில் அடைத்தது போலீசு.
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதை தி.மு.க. அரசு பெருமையாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அந்த காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் துரோகமிழைத்து வருகிறது. சமீபத்தில், சென்னையில் காலை உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க தி.மு.க. அரசு முயற்சித்தது, அதன் தனியார்-கார்ப்பரேட்மய நோக்கத்தை வெளிக்காட்டுகிறது. இந்நோக்கத்திலிருந்தே அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்து வெற்றிபெற்ற தி.மு.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது. கவர்ச்சிவாதத் திட்டங்கள் மற்றும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு ஆகியவற்றை மட்டுமே கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று கருதுகிறது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக போராடும் தொழிலாளர்கள் – மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











