Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 579

வினவு தளம் மீது அடக்குமுறை – அஞ்சமாட்டோம் !

14
வினவு

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு தோழர் கோவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் அ.தி.மு.க.வினர், ‘பாடலில் செய்யப்பட்டிருப்பது விமரிசனமே அல்ல அவதூறு’ என்று பேசத்தொடங்குகின்றனர். பிறகு, ‘ஒரு பெண் முதல்வரை இழிவு படுத்தி விட்டார்கள்’ என்று கூறி, டாஸ்மாக் பிரச்சினையை ஜெயலலிதா இழிவு படுத்தப்பட்ட பிரச்சினையாக மாற்றுகின்றனர். பிறகு, ‘ரசனைக்குறைவாகப் பாடியிருப்பது உண்மைதான் எனினும், அதற்காக தேசத்துரோக வழக்கு போடவேண்டுமா’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். உடனே விவாதத்தில் பங்கேற்கும் அம்மாவின் அருள் பெற்ற போலீசு அதிகாரிகள், ‘ஜெயலலிதாவை விமரிசித்தாலே அது தேசத்துரோகக் குற்றம்தான்’ என்று கூறி, இந்தியன் பீனல் கோடுக்கு பதிலாக, அம்மா பீனல்கோடை அறிமுகப்படுத்துகிறார்கள். இறுதியாக, ‘இந்த ஒரு பாட்டை மட்டும் பார்க்கக் கூடாது. வினவு இணையத்தளத்தின் மீது முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இத்தனை நாள் தாமதித்ததுதான் தவறு’ என்று கூறி தங்கள் உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

கோவன்
கோவனைக் கைது செய்தது தவறு என்று தொடங்கிய விவாதம், வினவு தளத்தை இத்தனை காலம் விட்டு வைத்தது தவறு என்ற கருத்தை உருவாக்குவதுடன் முடிக்கப்படுகிறது.

கோவனைக் கைது செய்தது தவறு என்று தொடங்கிய விவாதம், வினவு தளத்தை இத்தனை காலம் விட்டு வைத்தது தவறு என்ற கருத்தை உருவாக்குவதுடன் முடிக்கப்படுகிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாடகத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இது அரங்கேறியிருக்கும் முறையைச் சற்று கவனித்துப் பாருங்கள்.

கோவனைக் கைது செய்யக்கோரும் புகாரைக் கொடுத்தவர் வேளச்சேரியில் இருக்கும் குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலிசுத்துறையின் ஒரு உதவி ஆய்வாளர். அவர் தற்செயலாக இணையத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தாராம். அதில் ஜெயலலிதாவை அவதூறாகச் சித்தரித்துக் காட்சிப்படுத்தி பாடியிருந்தார்களாம். அது வினவு இணையதளத்தின் மூலமாகப் பலருக்கும் போயிருக்கிறதாம். ஒரு முதலமைச்சரை குறிவைத்து இப்படியெல்லாமா பாடுவார்கள் என்று அந்த உதவி ஆய்வாளருக்கு கோபம் வந்து ஒரு புகாரை பதிவு செய்தாராம். உடனே சைபர் கிரைம் போலிசார் திருச்சி சென்று நள்ளிரவில் கோவனைக் கைது செயதார்களாம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரத்திற்காக தோழர் கோவன் பாடியிருக்கும் அந்த இரண்டு பாடல்களும் வினவு இணையத்தளத்தின் மூலமாக சமூக வலைத்தளங்களில் பல லட்சம் மக்களிடம் சென்றுள்ளன. ஜெ-வின் அரசியலை விமரிசிக்கும் கட்டுரைகளும் பாடல்களும் வினவு ஆரம்பித்த காலத்திலிருந்து (2008) வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சான்றாக ஜெயா, சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் என்னும் கொள்ளைக் கூத்தை உணர்த்தும் “கல்யாணக் கதை கேளு” எனும் பாடல் (1996-ல் எழுதப்பட்டது) இதே வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை சில லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மட்டுமல்ல , மோடி, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் – கட்சிகள், இஸ்லாமிய மதவெறியர்கள், அமெரிக்க ஆதிக்கம், மறுகாலனியாக்கம் என்று ஏராளமான விமர்சனக்கட்டுரைகளும், அதிகாரவர்க்கத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைகளும் வினவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எங்களுடன் கொள்கை ரீதியாகத் தீவிரமாக வேறுபடுபவர்கள் கூட எங்களது நேர்மையையும் பக்கச் சார்பின்மையையும் கேள்விக்குள்ளாக்கியதில்லை. எமது விமரிசனங்களின் நோக்கம் மக்கள் நலன் மட்டுமே.

வினவு
ஜெயலலிதா மட்டுமல்ல , மோடி, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் – கட்சிகள், இஸ்லாமிய மதவெறியர்கள், அமெரிக்க ஆதிக்கம், மறுகாலனியாக்கம் என்று ஏராளமான விமர்சனக்கட்டுரைகளும், அதிகாரவர்க்கத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைகளும் வினவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதனால்தான் வினவு தளத்தின் கருத்தை கடுமையாக விமரிசித்தும், வசை பாடியும், ம.க.இ.க உள்ளிட்ட எமது தோழமை அமைப்புகளை கீழ்த்தரமாக விமரிசித்தும் எழுதப்படுகின்ற பின்னூட்டங்களைக் கூட நாங்கள் அப்படியே வெளியிடுகிறோம். மட்டுறுப்பதில்லை.

வினவு தளத்தில் பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக எல்லா அரசியல் கட்சிகளையும் விமரிசித்து எழுதியிருக்கிறோமென்ற போதிலும், ஆர்.எஸ்.எஸ் – அ.தி.மு.க கும்பல்தான் வினவு தளத்தின்மீது கடும் வெறுப்பும் பகையும் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு முகாந்திரத்தில் வினவு இணையத்தளத்தின் குரல்வளையை நெறிப்பதற்கு அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே வினவு இணையத்தளம் பற்றி சைபர் கிரைம் போலிசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கிண்டியிலிருந்த சைபர் கிரைம் போலிசு அலுவலகத்திற்கு தோழர் கன்னையன் ராமதாஸை அழைத்து விசாரித்தும் இருக்கிறார்கள். அப்போது, “நீங்களாவது பரவாயில்ல. ஒரு அட்ரஸ், போன் நம்பர் போட்டு அதுல கூப்புட்டா வந்து பதில் சொல்றீங்க! பல பேர் அனானிமஸ் ஐ.டி-யில எதாவது போடுகிறார்கள். புகார் வருகிறது. அதக் கண்டுபுடிக்க நாங்க படாதபாடு படுகிறோம்” என்றார்கள் சைபர் கிரைம் அதிகாரிகள்.

நாங்கள் எங்கள் கருத்தை முகத்தோடும், முகாந்திரத்தோடும் பகிரங்கமாகவே எழுதிவருகிறோம். மேலும் எங்கள் தோழர்கள் கடந்த 30 ஆண்டுகளில் அரசை கண்டித்து சுவர்களில் எழுதியதற்காகவும், சுவரொட்டி ஒட்டியதற்காகவும், மேடைகளில் பேசியதற்காகவும் நூற்றுக்கணக்கான முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளனர். எனவே எங்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல!!

ஓராண்டுக்கு முன்பு சைபர் கிரைம் அலுவலகத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் மணற்கொள்ளையன் வைகுண்டராஜன் குறித்து வினவு தளம் வெளியிட்டிருந்த கட்டுரைகளை உடனே நீக்குமாறு மிரட்டல் கலந்த தொனியில் அந்த மின்னஞ்சலை ஒரு அதிகாரி அனுப்பியிருந்தார். அகற்ற முடியாது என்றும் வழக்கை எதிர்கொள்வதாகவும் நாங்கள் பதிலளித்தோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்திற்கு வந்த மோடியை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் மேற்கொண்ட பிரச்சாரத்தில் வினவும் பங்குகொண்டது. அது இணைய வாசகர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோல ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு, குன்ஹா தீர்ப்பின் போதும், பின்னர் குமாரசாமியின் தீர்ப்பின் போதும் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்தன. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்த சில பத்திரிகைகளும் தோலுரிக்கப்பட்டன.

வினவு – ஆயிரம்ஊடக முதலாளிகளும், அண்டிப் பிழைப்பு நடத்தும் அறிவுத்துறையினரும் எங்கள் மீது கொண்டுள்ள மாளா வெறுப்பை நாங்கள் அறிவோம். அந்த வெறுப்புதான் நாங்கள் ஈட்டியிருக்கும் மதிப்பு. மற்றப்படி வினவு தளம் என்பது மக்களுக்கான மாற்று ஊடகம் என்ற கருத்து அசைக்க முடியாமல் நிலைநாட்டப்பட்டிருக்கிறதே, அதுதான் நாங்கள் ஈட்டியிருக்கும் கவுரவம்.

அதனால்தான் கருத்துரிமைக்காகப் பேசத் தொடங்குவது போன்ற தோரணையில் தொடங்கும் தொலைக்காட்சி விவாதங்களின் அரிதாரம் வெறும் ஒரு மணி நேரத்துக்குள் கலைந்து விடுகிறது. ஏன் முன்னமே கைது செய்யவில்லை, ஏன் முன்னரே முடக்கவில்லை என்ற பாசிசக் குரலுடன் அவை முடிகின்றன.

இந்தப் பின்னணியில் தான் கோவன் பாடிய பாடல்களுக்கு எதிரான நடவடிக்கை! இதனால் வினவு தளத்தின் ஆசிரியர், உரிமையாளர் என்ற பொறுப்பிலிருக்கும் தோழர்.காளியப்பன் (கன்னையன் ராமதாஸ்) அவர்களை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறார்கள். மற்ற முன்னணியாளர்களையும் அடுத்தடுத்துக் கைது செய்வதற்கு ஏதுவாக முதல் தகவல் அறிக்கையை வடிவமைத்திருக்கிறார்கள்.

வினவு இப்போது ஒரு தனி நபரல்ல! அது தோழர்கள், வாசகர்கள், மக்களால் பிணைக்கப்பட்ட ஒரு வலிமையான ஊடகம். “வினவு, வினை செய் ஒரு வலைப்பூவாக முதன் முதலில் தொடங்கப்பட்ட போது இதன் பெயர். கேள்வி எழுப்பு, செயல்படு என்பதையே தனது பெயராகக் கொண்ட இந்தத் தளத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது, கேள்வி எழுப்பும் உரிமையின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். செயல்படும் உரிமையின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். இது கோவனுக்கும் வினவுக்கும் எதிரான தாக்குதல் மட்டுமல்ல, நம் அனைவரின் ஜனநாயக உரிமையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்.

தோழர் கோவன் கைதுக்கு எதிராகவும் வினவு தளத்தின் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதலுக்கு எதிராகவும் குரல் எழுப்பியிருக்கும் எல்லாக் கட்சியினர்க்கும், ஊடகவியலாளர்களுக்கும், முகநூல், டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு தெரிவித்திருக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி.
SUPPORT US

தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு

6

புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கைதை ஒட்டிய பத்திரிகையாளர் சந்திப்பு

.க.இ.கவின் மைய கலைக் குழுத் தோழர் கோவன் மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக “மூடு டாஸ்மாக்கை” என்று பாடிய குற்றத்திற்காக தேசவிரோத வழக்கில் கைதானதும், அதனை ஒட்டி நாடு முழுக்க கண்டன குரல்கள் எழும்பியுள்ளதும் நாம் அறிந்ததே! இது தொடர்பாக மக்களுக்கு தங்களது நிலையை தெளிவுபடுத்தும் வகையிலும், இதனை எப்படி எதிர்கொள்வது என்ற வகையிலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, மக்கள் அதிகாரத்தை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மீனாட்சி ஆகியோர் நேற்று (31-10-2015) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.

மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
“மீண்டும் ஒரு எமெர்ஜென்சி காலத்தில் நாம் வாழ்கிறோமோ”

வழக்கறிஞர் ராஜூ பேசுகையில், “மீண்டும் ஒரு எமெர்ஜென்சி காலத்தில் நாம் வாழ்கிறோமோ என்பதை நினைவுறுத்தும் வகையில் தோழர் கோவனை கைது செய்துள்ளனர். வினவு இணையதளத்தை சார்ந்த தோழர் காளியப்பனை கைது செய்ய முயற்சித்துள்ளனர். இந்த சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதியான பாசிச நடவடிக்கையை கண்டித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.ஐ தலைவர் ராஜா இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், ஊடக, இணையதளங்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படி பலமான எதிர்ப்பு குரல்கள் எழவில்லை என்றால் ஆந்திரா, மணிப்பூர்களில் நடைபெறுவது போல புரட்சிகர அமைப்பினரை கடத்தி சென்று என்கவுண்டர் செய்திருப்பர்.

கடந்த ஜூலையிலிருந்து டாஸ்மாக்கிற்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாக இயக்கம் நடத்தி வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இப்பாடல் வெளியாகிவிட்டது. ஒவ்வொரு மேடையிலும் இதனை தோழர் கோவன் பாடியுள்ளார். அப்போதெல்லாம் நடக்காத கைது இப்போது ஏன் நடந்துள்ளது? ஏனென்றால் அது மக்களின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்துள்ளது என்பதனால்தான்.

தேசம் என்றால் ஜெயலலிதா, மோடி போன்றோர் தன்னையே தேசம் என நினைத்து கொள்கின்றனர். அதனால்தான் ஆங்கிலேயர் காலத்தில் நிலவியதை போல எதிர்த்து பேசுபவர்களை தேசதுரோக வழக்கில் கைது செய்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த நாட்டு மக்கள்தான் உண்மையான தேசம் என்பது எங்கள் மக்கள் அதிகாரத்தின் கோட்பாடு. அவர்களுக்காக போராடுவது, குரல் கொடுப்பது தேச நலனுக்கானதே!

இது வெறும் கருத்து சுதந்திரத்திற்கெதிரான நடவடிக்கை மட்டுமல்ல. இதைப் புரிந்து கொள்வதானால் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி படுகொலைகளுடன், அணுகுண்டை விட மோசமானது இந்து மத சர்வாதிகாரம் என்று விஞ்ஞானிகளால் கண்டிக்கப்பட்டதையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. தோழர் கோவன் ஏற்கனவே “இருண்ட காலம்“, “ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?” போன்ற பாடல்களை இயற்றியுள்ளார்

கோவன் கைது செய்யப்பட்டதோ, எங்கள் தோழர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பெரிய விசியமல்ல, அதனை விட ஐயா சசிபெருமாள் இறப்பும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டமும், தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருமே மிகப்பெரிது. என்ன காரணத்திற்காக இந்த பாடல் இயற்றப்பட்டதோ அந்த நோக்கமான டாஸ்மாக்கை மூடும் போராட்டம் மீண்டும் தொடங்க வேண்டும். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையான மக்கள் திரள் போராட்டமாக அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அணிதிரண்டு போராடவேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்” என பேசினார்.

மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
“சாதி, மதவெறி அமைப்புகளை தவிர்த்து அனைத்து ஜனநாயக கட்சிகளோடு சேர்ந்து வர்ற திங்கள் கிழமை தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில ஆர்ப்பாட்டம் நடத்துறோம்.”

அதனை தொடர்ந்த பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

கே: உங்கள் பாடல் வரியில் ‘ஊத்தி கொடுத்த உத்தமி’ என்ற வரி முதல்வரைப் பற்றி கடுமையானதாக இல்லையா?

ப: டாஸ்மாக்கால் விதவையான கிராமங்களில் நாங்கள் சென்று பார்க்கும்போது அங்குள்ள பெண்களை சமூகம் கேவலமாக பார்ப்பதாகக் கூறி வேதனைப்படுகின்றனர். ஒரு அவசரத்துக்கு பேருந்துக்கு வண்டியில் ஆண் யாராவது ஏற்றிசென்றால் கூட அதனை சமூகம் தவறாக சித்தரிக்கின்றது. கணவனை இழந்து ஒட்டுமொத்த கிராமமும் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறது. இப்படி பெண்களை ஜெயலலிதா இழிவுபடுத்துகிறார். அவருடன் ஒப்பிடுகையில் நாங்கள் குறிப்பிட்டது கடுமையானதல்ல. அதோடு நாங்கள் குறிப்பிட்டது பெருவாரியான மக்களின் உள்ளக்குமுறலே!

கே: ‘வாழவைச்ச தெய்வம்னு கூவலனா கொன்னுறுவா’னு பாடல் வரி வருது, இதுவரைக்கும் எத்தன பேரை கொன்னிருக்காங்க?

ப: ‘வொய் திஸ் கொலைவெறி’னு கூடதான் பாடல் வரி வருது. அதுல என்ன உண்மையிலேவா கொலைபண்ற வெறியில பெண்கள் இருக்காங்க? ஜெயலலிதா கட்சியில அவுங்கள எதிர்த்து பேசுன எத்தன பேரு பதவியில இருக்காங்க? அவுங்க உடம்பு சரியில்லைனு செய்தி போட்ட பத்திரிக்கைக்காரங்க கூட சிறையிலதான் இருக்காங்க. அதனால கொன்னுறுவாங்கிறதுக்கு அர்த்தம் அவுங்களோட கேள்வி கேட்க முடியாத அதிகாரம்தான்.

கே: அவரை கைது செஞ்சது சட்டவிரோதமா?

ப: பொதுவா கைது செய்றதுக்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி கைது செஞ்சிருக்காங்க. சிவகங்கை சிறுமையை சீரழிச்ச போலிசை இப்படி விரட்டி கைது பண்ணல, கோகுல்ராஜ் கொலைவழக்கு குற்றவாளி யுவராஜ விரட்டி பிடிக்கல, டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கொலைவழக்குக்கு காரணமான எஸ்.பி செந்தில்குமார விசாரணைக்குக் கூட அழைக்கல. ஆனா டாஸ்மாக்கை மூடுனு பாடனதுக்காக நள்ளிரவுல தோழர் கோவனை கடத்திட்டு போற மாதிரி கைது செய்திருக்காங்க. இது ஒரு பாசிச நடவடிக்கை

கே: இப்போ அவரை கைது செஞ்சதுக்கு முதல்வரை திட்டி பாடனதுதான் காரணம்னு ஒரு குற்றசாட்டு இருக்குதே?

ப: இப்போ அ.தி.மு.கவோட கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் அந்த அம்மாவை பேசாத பேச்ச நாங்க பேசிடல. ஆனா இப்போ அவரு இனோவா கார்ல போய்கிட்டு இருக்காரு. உண்மையிலேயே அப்படி ஒரு விசியம் இருந்தா எப்படி இனோவா சம்பத்த சேத்திக்கிட்டாங்க.

கே: உங்க அடுத்தகட்ட நடவடிக்கை

ப: சாதி, மதவெறி அமைப்புகளை தவிர்த்து அனைத்து ஜனநாயக கட்சிகளோடு சேர்ந்து வர்ற திங்கள் கிழமை தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில ஆர்ப்பாட்டம் நடத்துறோம்.

கே: இப்போ பி.ஜே.பி இந்த விசியத்துல அரச எதிர்க்குது அதனோடு கூட்ட வச்சிக்கலாமே!

ப: இல்ல, அவுங்க அடிப்படையா மனித உரிமைகளுக்கெதிரா செஞ்சிட்டு இந்த பிரச்சனையில ஒன்னு சேரலாம்னு சொன்னா நாங்க சேர்ந்துக்க மாட்டோம். எந்த காலத்திலேயும் சாதி, மதவெறி அமைப்புகளோட ஒண்ணு சேர்ரதில்லைங்கிறது எங்களோட அடிப்படை நிலைப்பாடு.

கே: ’போயசுல உல்லாசம்’ங்கிறது ஜெயலலிதாவ இழிவுபடுத்தலயா?

ப: இன்னிக்கு நாட்டுல ஆத்துமணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, இன்னும் டாஸ்மாக்ல இலட்சக்கணக்குல ஜனங்க சாவு இப்படி பிரச்சனைகளெல்லாம் இருக்கும்போது இத தீர்க்காம இருக்குறததான் உல்லாசம்னு சொல்றோம். இதுவும் நாங்க மக்கள் மத்தியில போகிறப்போ அவுங்களோட உள்ளக்குமுறல்தான் இது.

வினவு செய்தியாளர்கள்
சென்னை.

மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு பத்திரிகை செய்தி

kovan-arrest-pp-tamilnadu-poster

டாஸ்மார்க்கிற்கு எதிராகப் பாடல் இயற்றி பாடிய புரட்சிகர மக்கள் பாடகர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் திருச்சி கோவன் அவர்கள் தேசத்துரோக வழக்கில் கைது!

வினவு இணையதள பொறுப்பாளர் தோழர் காளியப்பன் மீது தேடுதல் வேட்டை!

மிழ்நாட்டில் போதையும் போலிசும் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைக் காத்து வருகின்றன. இவ்வுண்மையை தமிழக அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தாக வேண்டுமென்று அரசே இலக்கு வைத்து, போலிசு காவலுடன் சாராயம் விற்பனை நடத்துவது உலகில் வேறெங்கும் இல்லை. “அரசின் டாஸ்மாக் சாராய விற்பனையில் தலையிட முடியாது; அது அரசின் கொள்கை முடிவு” என்கிறது, “எம்.ஜி.ஆர். சமாதியின் நுழைவாயிலில் இருப்பது இரட்டை இலை அல்ல, பறக்கும் குதிரையின் இறக்கைகள்தாம்” என்ற ஆளும் கட்சியின் வாதத்தை ஏற்கும் உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் சாராய கடைகளை மூடச் சொல்லி கடந்த ஜூலை மாதம் முதலாக மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகம் தழுவிய அளவில் பரவலாக போராடி வருகிறது. ஆளும் கட்சி தவிர இங்கு உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், பெண்கள், பள்ளி சிறுவர்கள் முதற்கொண்டு மாணவர்கள்-மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறார்கள். ஆனால், என்ன செய்தாலும் சரி, தனது சாராயக் கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதில் உடும்பு பிடியாக நின்று ஜெயலலிதா – சசிகலா ஆட்சி போலிசு காவலுடன் சாராய வியாபாரத்தை நடத்தி வருகிறது.

ஈழத்தில் மட்டுமல்ல, இங்கும் தமிழக குடிமகன்கள் குடித்து நாளும் செத்தாலும், தமிழச்சிகள் தாலியறுத்தாலும் கவலைப்படாமல் தமிழ்ச் சமூகத்தை சீரழித்து வருகிறது, ஜெயலலிதா அரசு. அரசியல் சட்டப்படி, போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவேண்டிய போலிசும், நீதித்துறையும் அரசின் சாராய வியாபாரத்துக்குத் துணை போகின்றன. டாஸ்மாக் சாராய எதிர்ப்பு என்றாலே, தங்களது வசூல் நின்று போய்விடும் என்று வெறிபிடித்தது போல ஜெயலலிதா ஆத்திரம் அடைகிறார். அதனால்தான் டாஸ்மாக் சாராயக் கடைகளை எதிர்த்து உறுதியுடன் போராடும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் மாணவர்களை தனது பாசிசக் கொடுங்கரங்கொண்டு ஒடுக்குகிறது, அரசு. அவர்களைத் தாக்கிக் கைதுசெய்து போலிசுக் காவலிலும் சிறையிலும் அடித்துச் சித்திரவதை செய்தது. கொலை முயற்சி உட்பட பொய் வழக்குகள் போட்டு, பிணையில் விடுவதற்கே சட்டத்துக்கு மாறாக பெருந்தொகை விதித்து பலநாட்கள் சிறை வைத்தது.

இவ்வாறான ஒடுக்கு முறைகளின் தொடர்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சி பாடகர் தோழர் கோவன் வியாழன் நள்ளிரவு இரண்டே முக்கால் மணிக்கு, திருச்சியில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை கைது செய்வதற்கென்றே சுமார் பத்து பேர் கொண்ட சைபர் கிரைம் போலிசின் தனிப்படை ஒன்று சென்னையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் மீது 124ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், 505/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதேநேரத்தில் தஞ்சையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பனின் வீட்டிற்குள் சுவரேறிக் குதித்து கொல்லைப்புறமாக உள்ளே நுழைந்திருக்கிறது சென்னையிலிருந்து சென்ற இன்னொரு தனிப்படை. வீட்டில் அவர் இல்லை, தனியே இருந்த அவரது மனைவியை மிரட்டிப் பார்த்துவிட்டு பயனில்லாததால் காளியப்பனைக் கைது செய்ய தஞ்சையிலேயே முகாமிட்டிருக்கிறது தனிப்படை.

தனிப்படை அமைத்து நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் அளவுக்கு இவர்கள் செய்த பயங்கரவாதக் குற்றமென்ன? டாஸ்மாக்கை எதிர்த்து இரண்டு பாடல்கள் பாடியதுதான் கோவன் செய்த குற்றம், அவர் பாடிய “மூடு டாஸ்மாக்கை” என்ற பாடலும், “ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்” என்ற பாடலும் வினவு இணையதளம், யு டியூப், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களின் வழியே பல இலட்சம் மக்களை சென்றடைந்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த தமிழக அரசு இபிகோ 124ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக குற்றத்துக்காக, கோவனை கைது செய்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க முயற்சிக்கிறது.

  • டாஸ்மாக் பாடலை பாடிய கோவனைக் கைது செய்து விட்டார்கள்.
  • இனி பரப்பியவர்களைக் கைது செய்வார்களா?
  • பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்வார்களா?
  • இது மக்களின் பாடல், இன்று அனைத்து ஊடகங்கள், உலகம் முழுவதும் ஒலிக்கிறது.
  • இந்தப் பாடல் கோட்டையை எட்டும்.
  • கொடநாட்டையும் எட்டும்.
  • மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும்.

பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை பலரும் கண்டித்துள்ளனர். பலரும் கண்டிக்காவிட்டால், மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் தோழர் கோவனை தமிழ்நாடு போலீசு என்கவுண்டர் செய்திருக்கும். ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் மக்களும் தோழர் கோவன் கைதைக் கண்டிக்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களை தீவிரப்படுத்தி டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும்.

முதற்கட்டமாக, எதிர்வரும் 02-11-2015 திங்கட்கிழமை சென்னை, மதுரை, கோவை, விழுப்புரம், நெல்லை, திருச்சி, தர்மபுரியில் அனைத்துக் கட்சிகளின் ஜனநாயக சக்திகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

அம்மாவின் மரண தேசம் – ஆவணப்படம் வெளியீடு !

6

ammavin marana thesam stillவினவு தளத்தின் முதல் ஆவணப்படமான கருவாடு படத்திற்கு பிறகு இது இரண்டாவது படைப்பாக வருகிறது. அந்த வகையில் நிறையவே மேம்பட்டும் இருக்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பின் “மூடு டாஸ்மாக்கை ” – இயக்கத்தின் வீச்சால் கடலூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்தில் தோழர்களின் துடிப்பான பங்களிப்பாலும், மக்களின் உயிரோட்டமான கதைகளாலும் இந்த ஆவணப்படம் தனக்குரிய கலையழகையும், போராட்ட உணர்ச்சியும் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம்.

இந்த ஆவணப்படத்திற்குரிய வேலைகள் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக நடந்தன. மற்ற வேலைகளோடு சேர்த்து செய்ய வேண்டிய நெருக்கடி, நிதிச் சுமை காரணமாக முழுவீச்சில் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியாத நிலை, வினவு குழுத் தோழர்களே முதன் முறையாக இதன் சகல தொழில் நுட்ப வேலைகளில் ஈடுபட்டதால் வந்த தொழில் நுட்பச்சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி படம் நிறைவடைந்ததே பெரும் போராட்டமாக இருந்தது.

தமிழ்ச்சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் காயடிக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் உண்மையில் அந்த படைப்பாளிகளுக்கு விருது, பணம் என்று நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வழிகாட்டுகிறது. எங்களுக்கோ இது மக்களின் வலியை, வாழ்வை, ஆன்மாவை கண்டடைவதின் மூலம் போராடும் மக்களுக்கு ஒரு ஆயுதமாக பயன்பட வேண்டும் என்பதைத் தாண்டி வேறு ஆசைகளில்லை.ammavin marana thesam still 2

எனினும் இந்தப்படத்தை இரண்டு மூன்று டீசர்கள், முறையான வெளியீட்டு விழா, டிவிடி விற்பனை என்று நாங்களும் திட்டமிட்டிருந்தோம். அதே நேரம் தோழர் கோவன் கைது ஏற்படுத்திய அரசியல் சூழல் இந்த படத்திற்குரிய வெளியீட்டு நேரத்தை தெரிவு செய்து விட்டது. இதை விட இந்த படத்தை வெளியிட வேறு நல்ல தருணம் கிடைக்காது.

தோழர் கோவன் பாடிய பாட்டு பெண்களை இழிவுபடுத்துகிறது, மலிவான ரசனையைக் கொண்டிருக்கிறது, ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது என்று சிலர் இன்னமும் அவதூறு செய்து வருகிறார்கள். பெரும்பான்மையான மக்களும், கட்சிகளும், அறிஞர்களும், ஊடகங்களும் இதை ஏற்கவில்லை என்றாலும், இந்த கருத்து பா.ஜ.க, அ.தி.மு.க, போலிசு, இவர்களை ஆதரிக்கும் ஊடக வட்டாரங்களால் தொடர்ந்து பேசப்படுகிறது.

எனில் பெண்களை இழிவுபடுத்துவது யார், விதவைகளாக்குவது யார், இலட்சக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக்குவது யார், யார் தேச விரோதி, சமூகத்தின் இணக்கத்தை சீர்குலைப்பது யார்? – அனைத்திற்கும் இப்படம் ரத்தமும் சதையுமான வாழ்க்கையின் மூலம் பதில் அளிக்கிறது.

45.50 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை முழுமையாக பாருங்கள். நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள், பகிருங்கள். இதன் டி.வி.டி வெளியாகும் போது வாங்கி ஆதரியுங்கள், இப்போது நன்கொடை தாருங்கள்!

“அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படம் பாசிச ஜெயாவின் ஒடுக்குமுறையை ஒழிக்கும் இடியாக இறங்கட்டும்.

நன்றி

தோழமையுடன்
வினவு

நன்கொடை

 

பாகம் ஒன்று, பாகம் இரண்டு என இரு பிரிவுகளாக ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோழர் கோவன் கைது – பேஸ்புக்கில் குவியும் கண்டனங்கள்

12

குறிஞ்சி நாடன்

‪#‎ஆபாச_பாடலுக்கு_மேடைதோறும்‬
‪#‎ஆராவரிப்பு‬???
‪#‎அடிப்படை_பிரச்சனையை_பாடினால்‬
‪#‎சிறையடைப்பு‬!!!
‪#‎பாசிச_வெறிபிடித்த_ஜெவின்‬
‪#‎முகத்திரையை_கிழித்தெறிவோம்‬!
‪#‎திசையெட்டும்_பாடலை‬
‪#‎ஒலிக்கச்செய்வோம்‬!!!!

தமிழச்சி (Tamizachi)

thamizhachiஜெயாவின் ‪#‎டாஸ்மார்க்‬ அரசியலுக்கு எதிராக ‪#‎விழிப்புணர்வு‬ பிரச்சாரத்தை ‪#‎எழுச்சிப்பாடல்‬ மூலமாக மக்களிடையே கொண்டு சென்றதற்காக ‪#‎தோழர்_கோவன்‬ கைது செய்யப்பட்டிருக்கிறார்.

“கலையும், இலக்கியமும் யாருடைய நன்மைக்காக இருக்க வேண்டும்?” என்று அதிகாரத்தை நோக்கி தோழர் ‪#‎பெரியார்‬ கேள்வி எழுப்புகிறார்.

“கலை / இலக்கியம் யாவும் மக்களுக்கே ” என்கிறார் தோழர் ‪#‎மாவோ‬.

“ஒரு பெரும் சமூக ஜனநாயக எந்திரத்தின் பற்சக்கரங்களாகவும் மறையாணிகளாகவும் கலை / இலக்கியம் இருக்க வேண்டும்” என்கிறார் தோழர் ‪#‎லெனின்‬.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, “கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்” என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் ‘ டூயட் ‘ ஆட்டங்கள் கலையாக இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு சோறு போடாது.

மக்களுக்காக பேசப்படும் கலைகளும் இலக்கியங்களும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் புரட்சிப்பாடகரான தோழர் கோவன் செய்திருக்கிறார்.

எனவே, “ஜெயலலிதாவே டாஸ்மார்க்கை மூடு. தோழர் கோவனை வெளியே விடு.”

‪#‎தமிழச்சி‬
30/10/2015
‪#‎கருத்துரிமை‬ ‪#‎டாஸ்மாக்‬ ‪#‎தமிழ்நாடு‬ ‪#‎தமிழகஅரசு‬ ‪#‎அதிமுக‬ ‪#‎ஜெயலலிதா‬ ‪#‎ADMK‬

Abdul Hameed Sheik Mohamed

டாஸ்மாக்கை எதிர்த்து கலைநிகழ்ச்சி நடத்திய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் கோவன் அவர்களை தேச துரோக வழக்கில் தமிழக காவல்துறை கைது செய்திருப்பதன் மூலம் தனக்கு எதிராக குரல்களை ஒடுக்குவதில் இன்றைய மத்திய அரசுக்கு எந்தவிதத்திலும் தான் சளைத்தல்ல என நிரூபித்துள்ளது. இன்று கோவனுக்கு நேர்ந்தது தமிழக அரசை எதிர்க்கும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனநாய உரிமைகளை பாதுகாக்க கோவனின் பக்கம் நிற்போம். மாற்று கருத்துக்களின் குரல்வளையை நெரிக்கும் கரங்களுக்கு எதிராக நம் கரங்களை உயர்த்துவோம். டாஸ்மாக்கை எதிர்ப்பது தேச துரோகம் என்றால் நாம் தேச துரோகிகளாக இருப்பதைத்தவிர வேறு வ்ழியில்லை.

– மனுஷ்ய புத்திரன்

கோவனின் கைதை கண்டித்து திமுக பொருளாளர் தளபதி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

”தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் உள்ள “மக்கள் அதிகாரம்” என்ற அமைப்பு “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. அந்த ” மக்கள் அதிகாரம்” அமைப்பினர் ” மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு” எனும் பாடலை வெளியிட்டு அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக நடத்தி வந்தார்கள். இந்நிலையில், இந்தப் பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த திரு. கோவன் அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீர் கைது செய்து செய்தனர். அவரை மிக மோசமாக நடத்தியதாகவும், அவரை போலீசார் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதைக் கூறாமல் மறுத்தும் அலைக்கழித்துள்ளனர். இறுதியில் இப்போது திரு.கோவனை அவர்களை தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது
குடும்பத்திற்கு செய்தி சொல்லப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை நீக்கக் கோரி போராடிய சசிபெருமாள் மரணத்திற்கு வித்திட்ட இந்த அதிமுக அரசு, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித் தனமாக தடியடி நடத்தி அவர்களை சிறையில் அடைத்தது. இப்போது திரு. கோவனை அவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அதிமுக அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவி விடுகிறது. அதிமுக படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது. திரு. கோவன் அவர்களின் கைதிற்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அதிமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன்.

கோவனின் கைதை கண்டித்து தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி அவர்களின் அறிக்கை:

”டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் அதை நடத்தும் அரசு நிர்வாகத்தையும் எதிர்த்து பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் கோவன் என்பவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் பற்றி தி.மு.கழக பொருளாளர் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்களும் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள்… எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை காலத்தை நினைவூட்டும் வகையில் இருப்பதாக தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கோவன் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், மேலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்திருக்கின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பாடியது தேச துரோகக் குற்றமா?

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட் கலைஞர் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் அந்த கார்ட்டூனிஸ்ட் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.
நாட்டுப்புறக் கலைஞர் கோவன் கைது சம்பவத்தில் இருந்து… அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறையை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த சில மாதங்களில் பல சமூக ஆர்வலர்கள், தன்னார்வை அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புகள் என பலரும் தமிழக அரசின் மதுக்கொள்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகே பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருப்பதை சுட்டிக்காட்டி நேரடியாக களப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி சசிபெருமாள் தனது போராட்டத்தின்போதே உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக அரசு அவரது பத்து வயது மகளைக் கைது செய்து தனது ‘பொறுப்புணர்வை’ வெளிப்படுத்தியது. இதேபோல மதுவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர்.

கடந்த நான்காண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்… அரசை விமரித்தற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் பத்திரிகையாளர்கள் மீதும், அரசியல் ரீதியான எதிர்க்கட்சியினர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது ஒருபடி மேலேபோய் மதுவை எதிர்த்துப் பாட்டிய நாட்டுப்புற கலைஞரை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அரசு என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தமிழக அரசின் இந்த அதிகார அத்துமீறலுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் பெலிக்ஸ்

“மூடு டாஸ்மாக்கை மூடு” போன்ற சமூக பிழையான பாடல்களை பாடாமல்…..

“டாடி மம்மி வீட்டில் இல்லை…………………………”,
“நேத்து ராத்திரி எம்ம்மா……………………………….. ”
“கட்டிபுட்டி கட்டிபுடி டா…………………………………. ”

போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை பொதுமக்கள் பாடும்படி சமூகம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது..

//மது ஒழிப்பிற்காக “டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. -செய்தி//

Tamil Aman
ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ டோன்ட் குளோஸ் தி டாஸ்மாக் மா
அட்லீஸ் ஓபன் தி பேக் டோரூ மா ஏக் தோ தீன் சார்–

என்கிற பாடல்தான் இன்று தேசிய பாதுகாப்பகவும் , இரு குழுவிற்கு இடையே நல்லுறவு போற்றும் ஒற்றுமை கீதமாகவும் இருக்கிறது…. வாழ்க சனநாயாகம்

‪#‎let_us_condemn_illegal_custody__of_makkal_paadagar_kovan‬
‪#‎மக்கள்_பாடகர்_கோவன்_அவர்களின்_சட்டவிரோத_கைதை_கண்டனம்_செய்வோம்‬

Feroz Babu

எங்களின் (மக்களின்) உண்மையான நாயகன் யார் என்பதை பரவலான மக்கள் அறிந்துகொள்ள ஒரு சந்தர்பம் அமைத்துக் கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி நன்றி நன்றி…
இன்னும் மற்ற நாயகர்களையும் சீக்கிரம் எமக்கு காட்டுங்க..

‪#‎let_us_condemn_illegal_custody__of_makkal_paadagar_kovan‬
‪#‎மக்கள்_பாடகர்_கோவன்_அவர்களின்_சட்டவிரோத_கைதை_கண்டனம்_செய்வோம்‬

==
எவண்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடச்சா செத்தான், வை திஸ் கொலவெறி என பெண்களை இழிவு படுத்தி பாடினால் மரியாதை. ஓபன் த டாஸ்மாக் எனும் பாடலுடன் வரும் படத்துக்கு வரி விலக்கு (இத்தனைக்கும் அதுல சின்னதா குடி குடியை கெடுக்கும் எனும் வாசகத்துடன்)

ஆனால் மூடு டாஸ்மாக்கை என பாடினால் சட்ட விரோத கைது.

என்னாங்கடா உங்க ஜனநாயகம் டேய்ய்ய்

‪#‎let_us_condemn_illegal_custody__of_makkal_paadagar_kovan‬
‪#‎மக்கள்_பாடகர்_கோவன்_அவர்களின்_சட்டவிரோத_கைதை_கண்டனம்_செய்வோம்‬

கா. தமிழரசன்

ம.க.இ.க பாடகர் கோவன் அவர்களை மதுக்கடை எதிப்பு பரப்புரை பாடலுக்காக தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனது உணர்வோடு கலந்து போன குரலுக்கு சொந்தக்காரர்
இசைவடிவத்தை பாடலை மக்களுக்கானதாய் பயன்படுத்தியதில் முதன்மையானவர்.

‪#‎கைதை‬ கண்டிப்போம்

திருமுருகன் காந்தி

தோழர் கோவனின் பாடல்கள் 1990களில் ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியின் பொழுது பெரும் எழுச்சியை கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தது. அப்பாடல்களில் தெரித்த கோபமும், நிமிர்ந்து நிற்கவைக்கும் குரலும் போராடும் உழைக்கும் மக்களின் குரல் என்பதில் எவ்வொரு சந்தேகமும் இல்லை.

மக்களுக்கான கலைஞர்கள் மீது அரச வன்முறை கட்டவிழ்க்கப்படும் பொழுது , ஒட்டுமொத்த சமூகமும் எழுந்து நின்று அரசின் கட்டுமிராண்டி ஒடுக்குமுறையை தனிமைப்படுத்தி மக்களிடத்தில் அம்பலப்படுத்தவேண்டும். அவரின் குரல் மக்களிடத்தில் மீண்டும் முழங்குவதற்குரிய சுதந்திரத்தினை மீட்டெடுக்க வேண்டும். கலைஞர்கள் மீது பாஜக செய்யும் அடக்குமுறைக்கும், அதிமுக அரசின் அடக்குமுறைக்கும் வித்தியாசமில்லை.

இந்தக் கலைஞர்களின் குரல்கள் இத்தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது என்றால், இத்தேசம் எம்மக்களுக்கு எதிரானது என்பதுதான் உண்மை.

தோழர். கோவனின் மீது அரசு செலுத்தி இருக்கும் வன்முறையை ஒட்டுமொத்த முற்போக்கு சமூகமும் எதிர்த்து ஒரே குரலில் பேசுவோம். அரசு எங்கள் மீது வன்முறை செலுத்துகிறது. அரசை அம்பலப்படுத்தும் கலைஞர்கள் தாக்கப்படுவது, ஒடுக்கப்படுவது சனநாயகம் செத்து தொலைந்து விட்டது என்பதற்கான அடையாளம்.

தோழர். கோவன் சார்ந்திருக்கும் இயக்கமான ம.க.இ.கவின் மீது உடன்பட முடியாத சில நிலைப்பாடுகள் எமக்கிருந்தாலும், அரசின் வன்முறை கட்டவிழ்க்கப்படும் பொழுது எமது ஆதரவு மக்கள் இயக்கத் தோழர்களுடனேயே இருக்கும். இந்திய அரசோ, ஏகாதிபத்தியமோ, இவற்றினை எதிர்த்துப் போராடும் இயக்கங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை நாம் ஒன்றாக நின்றே எதிர்த்திடல் வேண்டும்.

தோழர் கோவனின் கைது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய அரசவன்முறை.

Bharathi Thambi

’மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு.
‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு.
சாராயக் கடையை மூடச் சொல்வது தேசத் துரோகம் என்றால் ஊற்றிக்கொடுப்பதுதான் தேசபக்தியா?

Alagesa Pandian

டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாட்டுப் பாடுவது தேசத்துரோகமாம். “ஓபன் த டாஸ்மாக்” என்று பாட்டுப்பாடுகிற சினிமா கோமாளிகள் வரிவிலக்கு பெறுவார்களாம். “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாட்டை எழுதிய கோவன் அவர்களை வாழ்த்தும் அதே சமயத்தில், அவரை கைது செய்த ஜெயலலிதாவின் சாராய சார்பு அரசுக்கு நமது கண்டனங்கள்!

vijii-ambedkarVijii Ambedkar

முதுகு வளைந்தவனெல்லாம் மந்திரினு வெள்ளையும் சொல்லையுமா சுத்தும்போது, நிமிர்ந்து நிக்கிற மண்ணின் மைந்தன் சிறைக்கு தான் போகனும்…

மக்கள் பாடகர் கோவனை கைது செய்த ஜெயாவின் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்…

இதிலும் ஒரு நன்மை இருக்கதான் செய்கிறது. அண்ணன் கோவனை பற்றி தெரியாதவர்களிடமும், அவரது பாடல்களும், கருத்துகளும் அதிக அளவில் போய் சேரும்…. தமிழக அரசின் இலவச புரோமோசன்….

Chandran Veerasamy

ஜெயா ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்
படுகிறது . மதுவிலக்கு கோரி பாடல்
பாடிய தோழர் கோவன் கைது செய்யப்
பட்டதைக் கண்டித்தும் , அவரை உடனடியாக
விடுதலை செய்யக் கோரியும் தமிழக காங்கிரஸ்
சார்பில் வரும் 2 ஆம் தேதி மாநிலம் முழுதும்
ஆர்ப்பாட்டம் !

## ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அறிவிப்பு !

sundarrajanSundararajan LawyerSundar

மதுபானம் ஆட்சிக்கும் , அதிகாரத்துக்கும் நல்லது.
மதுவிலக்கு கோரிக்கை ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும் எதிரானது.
ஆட்சியும், அதிகாரமும்தான் தேசம் என்பதால் மதுவிலக்கு கோரிக்கை தேசத்திற்கு எதிரானது.

Balan Guru

“மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை சில ஆயிரம் மக்களுக்கு மட்டும் சென்றுடடைந்த பாடலை லட்சக்கணக்காகன மக்களுக்கு கொண்டு சென்ற அம்மா ஆட்சியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை .

159_ஏ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளதாம் , (சமூகத்தில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டிவிட்டுவது )

அரசாங்கமே நம்மளை இரு சமூகமாக பிரித்துவிட்டது , குடிக்கிற சமூகம் , குடிக்காத சமூகம் .

alaudeenAlaudeen L. Alaudeen

சமூகத்தை சீரழிக்கும் அம்மா சாராயக் கடைளுக்கு எதிராக பாடல் பாடி தமிழகம் முழுவதும் பிராச்சாரம் செய்த மக்கள் பாடகர், தமிழகத்தின் கத்தார், மகஇக மைய கலைக்குழு தோழர் கோவன் பாசிச ஜெயலலிதா அரசால் 30.10.2015ம் தேதி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். “மூடு டாஸ்மாக்” , “ஊத்தி கொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்” ஆகிய பாடல்களை பாடியதால் தேச துரோக வழக்கு என்பது அளவுக்கு மீறிய ஒடுக்கு முறை என்று விமர்சனம் வந்தாலும், பாசிச வெறி பிடித்த, மாற்று கருத்துடையோர்களின் விமர்சனத்துக்கு முகம் கொடுத்து பதில் சொல்ல துணிவு இல்லாத மாவீரர், அடிமைகளின் தலைவி பாசிச ஜெயா அங்கம் வகிக்கும் பெருபான்மை மக்களுக்கு எதிரான இந்த அரசமைப்பிற்கு எதிராக துரோகம் செய்யாமல் நன்மையா செய்ய முடியும்?

பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !

9

பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு

எத்தனை கைது… எத்தனை சிறை…
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு

எதிர்த்துக் நிற்க ஏன் தயங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்

போதை தெளிய தமிழனுக்கு
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத்துரோக வழக்கெதற்கு
தேடித்தேடி கைது எதற்கு
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய் பூட்டு  போட முடியாது

பூட்டணும்னா கடைய பூட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு

பாடல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

SUPPORT US

சாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா – PRPC பத்திரிகை செய்தி

3

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர்,
மதுரை – 20, தொடர்புக்கு 9865348163

பத்திரிகை செய்தி

  • டாஸ்மாக்கிற்கு எதிராக பாடல் இயற்றிப் பாடிய புரட்சிகர மக்கள் பாடகர் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் திருச்சி கோவன் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!
  • டாஸ்மாக்கை நடத்துவது தேசப்பற்று எதிர்ப்பது தேசத் துரோகமா?
  • சாராய ஆலை அதிபர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஜெயலலிதா அரசின் மாபெரும் மனித உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

தமிழகத்தில் அரசே திட்டமிட்டு மக்களிடம் குடிவெறியைத் திணித்து, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து பெண்களின் தாலியறுத்து, சமூகத்தை சீரழிப்பதற்கு எதிராக “மூடு டாஸ்மாக்கை!” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த நான்கு மாதங்களாக தமிழகமெங்கும் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான இடங்களில் சுவர் எழுத்துக்கள், பல லட்சம் துண்டறிக்கைகள், பேருந்து, ரயில், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை எனப் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்து போராடி வருகின்றனர். டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடியதை மிகப்பெரிய குற்றமாகக் கருதிய தமிழக அரசு மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து ஒரு மாதம் சிறையில் அடைத்தது.

கோவன் கைதுடாஸ்மாக்கிற்கு எதிரான இயக்கத்தில் “மூடு டாஸ்மாக்கை மூடு“, “ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்கள் மக்கள் அதிகாரம் அமைப்பால் வினவு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேற்கண்ட பாடல்களைப் பாடிய பாடகர் திருச்சியைச் சேர்ந்த திரு.கோவன் ஆவார். கோவன் அவர்கள் தமிழக மக்கள் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் புரட்சிகர முற்போக்கு இசைக் கலைஞர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சமூக அநீதிகளுக்கு எதிராக தனது பாடல்கள் மூலம் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி வருபவர்.

30-10-2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் உள்ள புரட்சிகரப் பாடகர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை சைபர் கிரைம் பிரிவு போலிசார் அவரைத் தர தரவென்று இழுத்து கடத்திச் சென்றுள்ளனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தபின் பாடகர் கோவன் மீது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய 124- ஏ (தேசத்துரோகம்), 153-அ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். புரட்சிகரப் பாடகர் கோவனைக் கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல மறுத்து தமிழ்நாடு போலீசு அலைக்கழித்துள்ளது. வழக்கறிஞர்கள், உறவினர்கள் பாடகர் கோவனைச் சந்திக்க முடியவில்லை. இதுதவிர, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலர் திரு.காளியப்பன் அவர்களின் வீட்டிற்கு நள்ளிரவு 2 மணிக்குச் சென்ற போலீசு அவரது மனைவியை மிரட்டியுள்ளது. இணையதளத்தில் டாஸ்மாக் பாடலை பதிவேற்றியவர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக அச்சுறுத்துகிறது.

கொடநாட்டில் ஓய்வெடுத்தாலும் டாஸ்மாக்கையும், சாராய ஆலை அதிபர்களையும் பாதுகாப்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்டி வரும் அக்கறை தனித்துவமானது. 17-வயதான சிவகங்கைச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஏ.டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், ஆய்வாளர் சிவக்குமார், கோகுல்ராஜைக் கொலை செய்த யுவராஜ், டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா மரணத்துக்குக் காரணமான எஸ்.பி.செந்தில் குமார் ஆகியோரைப் பிடிப்பதில் தமிழக முதல்வரும், காவல்துறையும் காட்டும் ‘பிரமிப்பான வேகம்’ மக்களால் ‘பாராட்டப்பட்டு’ வரும் நிலையில் தனது ”ஆபரேசன் டாஸ்மாக்” நடவடிக்கையைத் தொடங்கியுள்ள தமிழக போலீசு புரட்சிகரப் பாடகர் கோவனை பயங்கரவாதியைப் போல் நள்ளிரவில் கடத்தி,ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க தேச துரோகப் பிரிவின் கீழ் வழக்கும் பதிந்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது.

டாஸ்மாக்கைக் காப்பதே தேசப்பற்று- டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுவது தேசத் துரோகம் என்னும் தமிழக அரசின் இந்நடவடிக்கை கருத்துரிமை, கலைஞர்கள், இணையதள உரிமை மீதான கடும் தாக்குதலாகும். நாடு முழுவதும் சங்க பரிவாரங்கள் அரங்கேற்றி வரும் தாக்குதல்களும், கொலைகளும்- மாற்றுக் கருத்துக்கள், விமர்சனங்களை முடக்கிவரும் சூழலில் தமிழகத்தில் அரசே கருத்துரிமையின் மீது நடத்தியுள்ள இத்தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது; மாபெரும் பாசிச நடவடிக்கை..

காலம் காலமாக தேசத் துரோகப் பிரிவு அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் கருவியாகவே பயன்பட்டுள்ளது. 1908-ல் வ.உ.சி, 1922-ல் காந்தி, பின் பகத்சிங் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2010-ல் மருத்துவர் பிநாயக்சென்னிற்கு இதே பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு வந்தது.

இந்திய அரசியல் சட்டம் 1950-ல் அமலுக்கு வந்து, கருத்துரிமை அடிப்படை உரிமையாக்கப் பட்ட பின்பும் இக்காலனியாதிக்கப் பிரிவின்கீழ் போலீசு வழக்குப் பதிவு செய்வது தொடர்கிறது. தனக்குப் பிடிக்காத ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைக்க தேசத் துரோகம் போன்ற கடும் சட்டப் பிரிவுகள் உதவுகின்றன. இதோடு தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது தடுப்புக் காவல் சட்டமாகும். இதன்மூலம் விசாரணை, ஜாமீன் இல்லாமல் ஓராண்டுவரை யாரையும் சிறையில் வைக்கலாம்.

பாடகர் கோவன் டாஸ்மாக்கிற்கும், அக்கடைகளை நடத்தும் தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு எதிராகப் பாடினார் என்பதே குற்றச்சாட்டு. பாடுவது கருத்துரிமை எனும் நிலையில் தமிழக போலீசின் செயல் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. கேதர் நாத் சிங் (AIR 1962 SC 955 Kadar Nath Singh – Vs – State of Bihar)-பல்வந்த்சிங்(1995) 3 SCC 214-பிலால் அகமது கால்(1997) 7 SCC 431-வழக்குகளில் உச்சநீதிமன்றம், “ஒருவரது பேச்சு, எழுத்து, செயல் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் மட்டுமே தேசத்துரோகப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது. புரட்சிகரப் பாடகர் கோவனின் டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல் எந்த வகையில் பொது அமைதியைக் குலைக்கிறது என்பது தமிழக காவல்துறைக்கே வெளிச்சம்.

இன்று நாடு முழுவதும் இந்து மத வெறியர்கள் நிகழ்த்திவரும் பாசிசத் தாக்குதலும் அதற்கு மோடி அரசு துணை நிற்பதும் நாம் அறிந்ததே. நாட்டின் பன்முகத்தன்மை, கருத்துரிமையை அழிக்கும் செயல்களுக்கு எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கலைஞர்களின் கருத்துரிமை, மக்களின் இணையதள மற்றும் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடும் ஜனநாயக உரிமை ஆகியவற்றிற்கெதிரான பாசிச நடவடிக்கையை ஜெயலலிதா அரசு பாடகர் கோவன் கைது மூலம் தொடங்கியுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கடுமையாக ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும் என்பதுடன் பாசிசத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடவும் முன்வர வேண்டும். மக்களுக்காக டாஸ்மாக்கை மூடச் சொல்லிப் பாடிய புரட்சிகரப் பாடகர் கோவன் விடுதலைக்கு மக்கள்தான் போராட வேண்டும். அக்கிரமம், அராஜகமாக நடக்கும் ஜெயலலிதா அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். இதோடு டாஸ்மாக்கிற்கு எதிராக மீண்டும் தமிழக மக்கள், மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடி டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடுவதே நம்முன் உள்ள முக்கியப்பணி, கடமை.

சே.வாஞ்சி நாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்

 

கல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் !

10

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பழமையான கன்னட இலக்கியங்களின் ஆய்வறிஞர், கல்வெட்டு அறிஞர் என பன்முகத் தன்மை கொண்டவருமான எம்.எம்.கல்புர்கி ஆகஸ்டு 30-ம் தேதியன்று இந்துவெறி காட்டுமிராண்டிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்துத்துவத்தையும் லிங்காயத்து சாதிவெறியையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து நின்ற பார்ப்பன எதிர்ப்புச் சிந்தனையாளர் கொல்லப்பட்டிருப்பது நாகரிக சமுதாயத்துக்கு பேரழிப்பாகும்.

எம்.எம். கல்புர்கி
இந்துவெறி காட்டுமிராண்டிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்.எம். கல்புர்கி

கர்நாடகத்தில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் உருவாக்கிய வீரசைவம் அல்லது லிங்காயத்து மதக் கொள்கை என்பது இந்து மதத்தின் கொள்கைக்கும் வழிபாட்டு முறைக்கும் முற்றிலும் எதிரானது. பசவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பார்ப்பன சாதியப்படியில் மேல்நிலையில் இருந்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அவரது மதத்தில் இணைந்து அவர்களுக்கிடையே திருமண உறவும் நிலவியது. இருப்பினும், குமரி மாவட்டத்தில் அய்யா வைகுந்தரை தன்னுள் அடக்கிக் கொண்டதைப் போலவே, பசவரையும் லிங்காயத்துகளையும் பார்ப்பனியம் காலப்போக்கில் உட்செரித்துக் கொண்டது. இந்துத்துவ சாதிய அமைப்பை எதிர்த்து உருவாகிய லிங்காயத்துக்கள் பின்னாளில் பார்ப்பனியத்துடன் சங்கமித்து தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாக ஒடுக்கும் ஆதிக்க சாதியாக மாறிப் போயினர்.

பசவரின் வீரசைவம் என்பது பார்ப்பனியத்தின் வேதங்களையும் சாதியமைப்பு முறையையும் நிராகரித்ததையும், பசவர் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்டவராகவும் உருவ வழிபாட்டை நிராகரித்தவராக இருந்ததையும், அவரது கொள்கைகளை ஏற்று அவரது புதிய மதத்தில் இணைந்தவர்களே லிங்காயத்துகள் என்பதையும் தனது ஆய்வு நூலான “மார்கா” வில் கல்புர்கி நிரூபித்துக் காட்டினார். பசவரின் வச்சனா எனும் இசைக்கவிதைகளை ஆய்வு செய்த கல்புர்கி, லிங்காயத்துகளின் இன்னொரு கடவுளான சென்னபசவர், தாழ்த்தப்பட்டவருக்கும் பசவரின் சகோதரிக்கும் பிறந்தவர் என்றும் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் 1989-ல் வெளியானதும் லிங்காயத்துகள் போராட்டங்களை நடத்தி அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டியது போலவே கல்புர்கிக்கும் நெருக்குதல் கொடுத்து அவருடைய நூலின் சில பகுதிகளை நீக்கம் செய்ய வைத்தனர். என் சாதியை கல்புர்கி இழிவுபடுத்திவிட்டார் என்று கிளம்பிய லிங்காயத்து சாதிவெறியர்களைத் திரட்டிக் கொண்டு இந்துவெறியர்கள் தமது நோக்கங்களை ஈடேற்றி வருகின்றனர்.

கல்புர்கியின் இறுதி ஊர்வலம்
இந்துவெறி காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து தார்வாட் நகரில் பெருந்திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற கல்புர்கியின் இறுதி ஊர்வலம்

லிங்காயத்துகளின் பார்ப்பனமயமாதலைத் தொடர்ந்து விமர்சித்து வந்த கல்புர்கி, கர்நாடகத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், கல்புர்கியின் வீட்டின் மீது இந்துவெறியர்கள் கல்வீசித் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். கடந்த ஜூன் மாதத்தில், பிரபல கன்னட எழுத்தாளரும் ஞானபீட பரிசு பெற்ற பேராசிரியரும் பார்ப்பன எதிர்ப்பாளருமான யு.ஆர். அனந்த மூர்த்தியின் நினைவுநாள் கூட்டத்தில் பேசிய கல்புர்கி, பார்ப்பனியத்தின் உருவ வழிபாடு, சிலை வழிபாட்டுக்கு எதிராக உரையாற்றினார். இவற்றின் தொடர்ச்சியாகவே அம்முதியவரை கோழைத்தனமாக நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றுவிட்டு இந்துவெறியர்கள் தப்பியோடியுள்ளனர்.

கல்புர்கி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மங்களூரு சிறீராம் சேனா குண்டர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியுள்ளனர். “இந்து மதத்தை விமர்சித்தீர்கள் என்றால், நாயின் சாவை ருசியுங்கள்” என்று பஜ்ரங் தள நிர்வாகியான புவித் ஷெட்டி என்பவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்தே இக்கொலைக்கு யார் காரணம் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் மடாதிபதிகளுக்கு எதிராகவும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் முன்னாள் பேராசிரியரும் கன்னட எழுத்தாளருமான கே.எஸ்.பகவானுக்கு, “அடுத்த இலக்கு நீங்கள்தான்” என்று அவன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளான். கொலைகாரர்களான இந்துவெறி அமைப்புகள் பின்னணியில் இருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், கல்புர்கியைக் கொன்ற இருவரை மட்டுமே பிடிக்க சிறப்புக் குழுக்களை அமைத்து தேடுதல் நாடகமாடுகிறது கர்நாடக அரசு.

தபோல்கர் - பன்சாரே
இந்துவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் (இடது); மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோவிந்த் பன்சாரே.

கல்புர்கி கொலைக்கு முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ஆகஸ்டு 20 அன்று மோட்டார் சைக்கிளில் வந்த இரு இந்துவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். “அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி” என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி தொடர்ந்து இயக்கிவந்த தபோல்கர், அந்த இயக்கத்தின் மூலமாக போலி சாமியார்கள், பாபாக்கள், மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தினார். பிள்ளையார் சிலை பால் குடிக்காது, பேய்-பிசாசு என்று எதுவும் கிடையாது என்று ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்த அவர், “சாதனா” என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு பத்திரிகையையும் தொடர்ந்து நடத்திவந்தார். மூட நம்பிக்கைகள் மற்றும் போலி சாமியார்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் அறிமுகம் செய்யவேண்டியதொரு கட்டாயத்தை மாநில அரசுக்கு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்தான் தபோல்கர். அதனாலேயே அம்மூத்த பகுத்தறிவாளர் இந்து வெறியர்களால் கொல்லப்பட்டுவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 16 அன்று மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் 82 வயதான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். “சிவாஜி யார்?” என்ற பன்சாரேவின் நூல், சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாகக் காட்டும் சிவசேனா – ஆர்.எஸ்.எஸ். புரட்டல்களைத் தோலுரித்துக் காட்டியது. இந்து மதத்தையும் சாதியையும் இழிவுபடுத்திவிட்டதாக மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு வழக்கு தொடுப்பதோடு, வெளிப்படையாக மிரட்டல்கள் – தாக்குதல்களையும் நடத்தி வரும் “சனாதன் சன்ஸ்தா” என்ற இந்துவெறி பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளையும், கோட்சேவுக்கு சிலை எழுப்புவதையும் எதிர்த்து நின்றவர்தான் பன்சாரே. பன்சாரே கொலையையொட்டி சனாதன் சன்ஸ்தா என்ற இந்துவெறி அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் என்பவனை மகாராஷ்டிர போலீசு கைது செய்துள்ளபோதிலும், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கைது செய்யவோ, அப்பயங்கரவாத அமைப்பைத் தடை செய்யவோ முன்வரவில்லை.

 மலையாள எழுத்தாளர் எம்.எம்.பஷீர்
அனுமன் சேனா எனும் இந்துவெறி அமைப்பின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள மலையாள எழுத்தாளர் எம்.எம்.பஷீர்

இவர்கள் மட்டுமல்ல, பிரபல மலையாள எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான எம்.எம்.பஷீர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். கேரளத்தில் பின்பற்றப்படும் இராமாயண மாதத்தில், “மாத்ருபூமி” நாளிதழில் இராமாயணம் பற்றிய படைப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். இந்நாளேட்டில் இராமாயணம் குறித்து எம்.எம்.பஷீர் தொடர் கட்டுரை எழுதிவந்த நிலையில், அவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே இந்துவெறியர்கள் அவர் இராமாயணத்தைப் பற்றி எழுதக் கூடாது என்று மிரட்டினர். “அனுமன் சேனா” என்ற பெயரில் இந்துவெறியர்கள் இவருக்கு எதிராகச் சுவரொட்டிகளை ஒட்டி ஊர்வலம் நடத்தி, நாளிதழ் நிர்வாகத்துக்கும் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பஷீரின் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் இந்துவெறிக் கும்பல் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து, பிரபல ஐரோப்பிய எழுத்தாளரான வென்டி டோனிகரின் “இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” மற்றும் “இந்துயிசம்” ஆகிய நூல்கள் பென்குயின் பதிப்பகத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், பாடத்திட்ட மாற்றம், அதிகார வர்க்கத்தில் சங்கப் பரிவாரத்தினரைத் திணிப்பது – என இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை ஆளும் கும்பல் வேகமாகச் செயல்படுத்தி வரும் அதேநேரத்தில், பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படும் இந்துவெறி அமைப்புகள் பசுவதைத் தடுப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை, பிள்ளையார் ஊர்வலம், ரக்ஷா பந்தன் – எனப் பலவற்றிலும் புகுந்து, அதன் வழியே இந்துவெறியைத் தூண்டி வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே இந்துவெறியை எதிர்க்கும் முற்போக்கு அமைப்புகளையும் சிந்தனையாளர்களையும் அச்சுறுத்தியும் படுகொலை செய்தும் வருகின்றன.

நாத்திகப் பிரச்சாரம் செய்தாலோ, வரலாற்று வகைப்பட்ட கேள்விகளை எழுப்பினாலோ, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக இந்துவெறியர்கள் அலறுகிறார்கள். அரசு பதவியில் இருக்கும் இந்துவெறியர்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு விரோதமாக அரசு நிகழ்ச்சிகளையே மதச் சடங்குகளாக்குகிறார்கள். மத நம்பிக்கையை அரசு மேடையில் நின்று பிரச்சாரம் செகிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை உண்டாம். ஆனால் கல்புர்கியும், பன்சாரேவும், தபோல்கரும் தங்களது நாத்திகக் கருத்தை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டுமாம். வெளியே பேசினால் அது இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துமாம். மதத்தை தனிப்பட்ட நம்பிக்கையாக வைத்துக் கொள்வதும், பொது நடவடிக்களை அறிவியல் கண்ணோட்டத்துக்கு உட்படுத்துவதும்தான் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் சாரம். ஆனால் அறிவியல் வழிபட்ட நாத்திகக் கருத்தை தனிப்பட்ட நம்பிக்கை போல வைத்துக் கொள்ளச் சொல்லி, இந்துத்துவக் கருத்துக்களை தாராளமாக வெளியில் பேசுவதையே மதச்சார்பின்மையாக மாற்றிவருகிறது பார்ப்பன பாசிசம்.

சாதி என்ற நிறுவனத்தையும் உணர்வையும் பராமரித்துவரும் பார்ப்பன பாசிசம், இந்துவெறிக்கு சமூக அடித்தளமாக சாதிவெறியர்களைச் சேர்த்துக் கொள்கிறது. கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறியர்களின் ஆதரவும் அடித்தளமும் இல்லையேல், இந்துவெறியர்களால் இத்தனை வீரியத்தோடு மாதொரு பாகன் நூலை எழுதிய பெருமாள் முருகனை எதிர்க்க முடியாமல் போயிருக்கும். இந்துவெறியும் சாதிவெறியும் இணைந்து நின்று தாக்குதல் தொடுக்கும் இந்தப் போக்குதான், கர்நாடகத்தில் லிங்காயத்து சாதிவெறியர்களை சமூக அடித்தளமாகக் கொண்டு முற்போக்கு சிந்தனையாளரான கல்புர்கியைக் கொல்லத் துணிந்திருக்கிறது.

இப்படித்தான் பல்வேறு மாநிலங்களிலும் தமது தேர்தல் உத்திக்கேற்ப சாதிவெறியர்களால் நடத்தப்படும் ஆதிக்க சாதிச் சங்கங்களுடன் இந்துவெறியர்கள் கூட்டணி அமைக்கின்றனர். இவர்களின் சமூக அடித்தளமாக சாதிவெறியர்களால் நடத்தப்படும் சாதிய சங்கங்களும் சாதியக் கட்சிகளும் மாறிப் போயுள்ளன. வர்க்கப் போராட்டத்துக்கு மாற்றாகவும், சாதியை ஒழிப்பதற்கான மண்ணுக்கேற்ற வழிமுறையாகவும் முன்வைக்கப்பட்ட சமூகநீதி அரசியல் என்ற பெயரிலான சாதிய அடையாள அரசியல்தான், மக்கள் மத்தியல் மங்கிவரும் சாதிய உணர்வை மீண்டும் புதுப்பித்துக் கிளறிவிடுகிறது. பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை பற்றி பேசித் திரிந்த எல்லா சாதியப் பிழைப்புவாதிகளின் சாயமும் வெளுத்துப் போய், சாதியத்தைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற பார்ப்பனியக் கொள்கையே சமூகநீதிக் கொள்கையாக மாறியிருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் தங்களது அரசியல் பிழைப்புவாதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக நீதி பேசும் ஓட்டுக் கட்சிகள், அவர்களது பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதில்லை. மாறாக, பார்ப்பனியத்தின் நவீன அடியாட்படையாக மாறி நிற்கிறார்கள்.

சில எழுத்தாளர்கள், கல்புர்கியின் கொலையை கருத்துரிமைக்கு எதிரான செயலாகவும், மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ள முடியாத சகிப்புத்தன்மையற்ற செயலாகவும் சித்தரிக்கின்றனர். பெருமாள் முருகன் விவகாரத்திலும் இப்படிப்பட்ட சரணாகதி வாதம்தான் வைக்கப்பட்டது. பார்ப்பனியத்தையும் கொங்கு வேளாளக் கவுண்டர், வன்னியர், தேவர், லிங்காயத்து சாதிவெறியையும் எதிர்க்க முன்வராமல், இப்படி கருத்துரிமை பற்றி சண்டமாருதம் செய்வதன் மூலம் சாதிவெறியும் இந்துவெறியும் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இத்தகைய சரணாகதியும் சந்தர்ப்பவாதமும்தான் இந்துவெறியர்கள் மேலும் மூர்க்கமாகவும் வெளிப்படையாகவும் தாக்குவதற்கு வாய்ப்பாக அமைகின்றன.

அண்மைக் காலங்களில் நாம் இழந்திருக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களின் உயிர்கள் விலை மதிப்பற்றவை. இந்துவெறி பாசிஸ்டுகளுக்கும் அவர்களது அடியாட்படையாக உள்ள சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்கப் போராடுவதுதான் நாம் இத்தகையோருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

– குமார்.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

புதுதில்லி : மாணவர்கள் மீது மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல் !

2

பல்கலைக்கழக மானியக்குழு முற்றுகை! மாணவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்! கண்முன்னே காலியாகும் கல்வித்துறையை காப்பது எப்படி?

கல்வி கடைச்சரக்கல்ல!
கல்வி கடைச்சரக்கல்ல!

டந்த 23.10.2015 வெள்ளிக்கிழமையன்று, மோடி கும்பல் இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இதுவரை வழங்கிவந்த தேசியத் தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகையை (Non-National Eligibility Test Scholarship) நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதனால் இந்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்.டி ஆய்வு செய்யும் பொருளாதாரீதியாக பின்தங்கிய கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி உடனடியாக இன்னும் இரண்டே மாதங்களில் முடிவிற்கு வருகிறது.

இதை எதிர்த்து வாழ்வா சாவா எனும் நிலையில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவை (யு.ஜி.சி) முற்றுகையிடும் (Occupy UGC) போராட்டத்தை அறிவித்து சமரசமற்று போராடிவருகிறார்கள். இதுதவிர மும்பையிலும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இரவில் தொடர்ந்த யூ.ஜி.சி முற்றுகை போராட்டம்

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் இத்தொடர் போராட்டம் நேற்று ஆளும் வர்க்கத்த்தின் கொலைவெறித்தாக்குதலாக வடிவெடுத்திருக்கிறது.

27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போலீசு வேனில் ஏற்றப்பட்டு வேனிற்குள்ளேயே வன்முறையை அவிழ்த்துவிட்டிருக்கிறது ஆளும் வர்க்கம். மாணவிகள் மீது காவல் துறை தடியடி நடத்தில் பலர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்] (படங்கள் : நன்றி countercurrents.org)

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு தோள்கொடுப்பதோடு கையறு நிலையில் நிற்கும் ஒவ்வொரு மாநிலத்தின் (இங்கு தமிழ்நாட்டின்) பல்கலைக்கழக மாணவர்களும் அணிதிரளவும் போராடவும் மிகவும் அவசியமான அவசரகாலநிலையை எதிர் நோக்கியிருக்கின்றனர். ஏனெனில், மோடி கும்பல் கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கிவரும் கல்விக்கான மானியத்தை 48% வெட்டிச் சரித்திருந்தது. இதுதவிர சென்ற பட்ஜெட்டில் ஒட்டுமொத்த கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டையும் 25% மோடி கும்பல் வெட்டியிருக்கிறது.

ஜே.என்.யு மாணவர் சங்க துணைத்தலைவர் ஷேலா ரஷீத்
ஜே.என்.யு மாணவர் சங்க துணைத்தலைவர் ஷேலா ரஷீத் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

நம் நாட்டில் மாணவர்களுக்கு கல்வி என்பது பார்ப்பனிய சாதிய கட்டுமானத்தாலும் தனியார்மய கொடூரத்தாலும் முற்றிலும் சிதைந்து கானல் நீராகத்தான் இருக்கிறது. பள்ளிக்கல்வியையே தாண்ட முடியாத சூழ்நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பிற்கு வருகின்றவர்கள் மிகச்  சொற்பமானவர்களே. இதில் தேசிய தகுதிதேர்வு மூலம் உதவித்தொகை பெறுபவர்கள் ஒட்டுமொத்த ஆய்வு மாணவர்களில் வெறும் 5% மட்டுமே. இத்தேர்வல்லாது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் துறைவாரியாக ஆய்வுப்படிப்பிற்கு வருகின்ற மாணவர்கள், பல்கலைக்கழகம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இம்மாணவர்கள் தங்களது குடும்பங்களை நம்பியிராது 5 வருட ஆய்வுக்காலத்தை தக்காட்டுவதற்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ 5000-8000 அளவிலான தொகையில்தான் இந்த பாசிசக்கும்பல் கைவைக்கிறது என்றால்  இந்தப் பிரச்சனை பொருளாதாரப் பிரச்சனையல்ல! நாடு எதிர்கொண்டிருக்கும் கட்டமைப்பு நெருக்கடி பிரச்சனை!

மாணவர் சங்கம் யூ.ஜி.சிக்கு அனுப்பிய கடிதம்
மாணவர் சங்கம் யூ.ஜி.சிக்கு அனுப்பிய கடிதம்

வரும் டிசம்பரில் உலகவர்த்தக் கழக மாநாடு முன்வைக்கும் “காட்ஸ்” (GATS) பரிந்துரைகளை அமல்படுத்தும் தீவிரப்போக்கில் நாட்டின் எஞ்சியிருக்கும் மீதித் துறைகளையும் வேரோடு பிடுங்கி எறியும் முயற்சியாகவே மோடியின் பாசிசக்கும்பல் அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது.

கடந்த 72 மணி நேரங்களில் மட்டும் இதுவரை இச்சமூகம் கட்டியமைத்த கல்வி நிறுவனங்களை நிர்மூலமாக்கும் மூன்று முடிவுகளை அறிவித்துவிட்டார்கள்.

  1. இதன்படி யு.ஜி.சி வழங்கும் தேசியத் தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நிறுத்தப்படுகிறது என்பது முதல் இடி.
  2. இரண்டாவதாக, அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இனி அந்த அந்த ஆய்வு நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவை வணிகமயமாக்கப்படுவதன் மூலமாக தனக்கான நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மோடியின் பாசிச அரசு அனைத்து ஆய்வு நிறுவனங்களையும் விற்றிருக்கிறது.
கொடும்பாவி எரிப்பு
பிரதமர் மோடி, யூ.ஜி.சி தலைவர் வேத் பிரகாஷ் கொடும்பாவி எரிப்பு
  1. மூன்றாவதாக, இந்தியப் பல்கலைக்கழகங்கள், சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்கள் அல்லாது அனைத்து ஐ.ஐ.டி.க்களின் ஆராய்ச்சித்துறையும் தனியார் மயமாக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதனால் வணிக நோக்கிலான ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்ளும்படி இந்திய அறிவியல் நிறுவனங்கள் மாற்றியமைக்கப்படுவது மட்டுமல்ல இதுவரை மக்களின் வரிப்பணத்தில் பொதுச்சொத்தாக இயங்கி வந்த இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் கேள்வி கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.

மூன்று முடிவுகளின் படி பார்த்தால் இந்தியக் கல்வித்துறை அடியோடு காலி!

இத்தகைய கட்டமைப்பு நெருக்கடியை எதிர்த்து களமிறங்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதை இச்செயல்கள் தீவிரமாக உணர்த்துகின்றன.

ஆகையால் பல்கலைக்கழக மானியக்குழு போராட்டத்திற்கு மாணவர்களுக்கு ஆதரவு தரவேண்டியது முதல் வேலை! தமிழ்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இதில் இணைய வேண்டியது இரண்டாவது வேலை.

“அனைவருக்கும் கல்வி கொடுக்க முடியாத அரசை தூக்கி எறிவோம்” மாணவர்களின் முழக்கப் போராட்டம்

இவையிரண்டும் கட்டமைப்பு நெருக்கடியை வீழ்த்துகிற அரசியலாக இல்லாமல் போனால் கல்வித்துறை கைவிட்டுப்போவதை நம்மால் தடுத்துவிட இயலாது என்பதை புரிந்துகொள்வது இன்றைய நிலையில் அவசரமான அவசியமான மூன்றாவது வேலையாகும்.

– இளங்கோ

இது தொடர்பான செய்திகள்

சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

2
REFILE - CORRECTING BYLINEATTENTION EDITORS - VISUALS COVERAGE OF SCENES OF DEATH OR INJURYA young migrant, who drowned in a failed attempt to sail to the Greek island of Kos, lies on the shore in the Turkish coastal town of Bodrum, Turkey, September 2, 2015. At least 11 migrants believed to be Syrians drowned as two boats sank after leaving southwest Turkey for the Greek island of Kos, Turkey's Dogan news agency reported on Wednesday. It said a boat carrying 16 Syrian migrants had sunk after leaving the Akyarlar area of the Bodrum peninsula, and seven people had died. Four people were rescued and the coastguard was continuing its search for five people still missing. Separately, a boat carrying six Syrians sank after leaving Akyarlar on the same route. Three children and one woman drowned and two people survived after reaching the shore in life jackets. REUTERS/Nilufer Demir/DHAATTENTION EDITORS - NO SALES. NO ARCHIVES. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. TURKEY OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN TURKEY. TEMPLATE OUT

சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குர்து சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அய்லானின் பெற்றோர்கள் தமது குடும்பத்துக்கு கனடாவில் தஞ்சம் கோரியதை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்துவிட்டதால், ஐரோப்பாவில் ஏதாவதொரு நாட்டில் தஞ்சம் புக அக்குடும்பம் கள்ளத்தனமாக படகில் சென்றபோதுதான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. சிறுவன் அய்லானைப் போலவே இன்னும் பல நூறு பேர் கடந்த சில மாதங்களில் கடலில் மூழ்கி மாண்டு போயுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்துள்ள புலம் பெயர்வுகளிலேயே மிகப் பெரியது என்று குறிப்பிடுமளவுக்கு சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் குவிந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் மத்தியத் தரைக்கடலைக் கடந்து இதுவரை 4 லட்சத்துக்கும் மேலான சிரிய மக்கள் அகதிகளாக, வெட்டவெளியில் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் துவண்டு கிடக்கின்றனர்.

அய்லான்

உலகின் கார்ப்பரேட் முதலாளிகள் பிற நாடுகளில் மூலதனமிட்டு அந்நாட்டையும் மக்களையும் கொள்ளையிடலாம், மூலதனம் உலகம் முழுவதும் எவ்விதத் தடையுமின்றி பாயலாம் என்ற உலகமயமாக்கக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் ஏகாதிபத்தியவாதிகள், மறுபுறம் ஏழை நாடுகளின் மக்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் நுழைவதை எதிர்க்கின்றனர். அந்நாடுகளின் போலீசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டு அகதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். தனது நாட்டின் எல்லையில் உள்ள சுரங்க ரயில் பாதையில் அகதிகள் நுழைவதைத் தடுக்க கோடிக்கணக்கில் பிரிட்டிஷ் அரசு செலவிட்டு வருகிறது. ஹங்கேரி அரசானது, செர்பியாவை ஒட்டிய எல்லையில் ஏறத்தாழ 12 அடி உயரமுள்ள முள்வேலியை அமைத்து அகதிகள் நுழைவதைத் தடுக்கிறது. ஐரோப்பாவின் நவ நாஜிக் குழுக்கள் அகதிகளான அந்நியரை வெளியேற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டங்களை நடத்தி நள்ளிரவில் தீ மூட்டி அச்சுறுத்துகின்றன. இத்தனைக்கும் நடுவிலும் ஐரோப்பிய உழைக்கும் மக்களும் தன்னார்வ நிறுவனங்களும் தப்பியோடிவரும் அகதிகளுக்கு மனிதாபிமான உள்ளத்தோடு உதவிகளைச் செய்து வருவதோடு, அகதிகளை அனுமதித்து மறுவாழ்வளிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அகதிகள் மீது நாளும் தொடரும் அட்டூழியங்கள் – அடக்குமுறைகள், எல்லைகளிலுள்ள முள்வேலிகளை முறித்துக் கொண்டு உள்ளே நுழையும் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடிக்கும் கொடூரம், கண்டெய்னர் லாரிகளில் இரகசியமாக தப்பிக்க முயற்சித்தவர்கள் மூச்சுமுட்டி மாண்டுபோகும் அவலம், மத்தியத் தரைக்கடலில் பிணங்கள் கொத்துக்கொத்தாக மிதந்து கரை ஒதுங்கும் கோரம் – என முதலாளித்துவ உலகின் மனிதாபிமானமற்ற கொடூரத்தைக் கண்டு உலகமே காறி உமிழ்கிறது. அகதிகளின் அவலங்களும் ஐரோப்பிய நாட்டு அரசுகளின் அடக்குமுறைகளும் உலகெங்கும் அம்பலமாகத் தொடங்கி, குறிப்பாக சிறுவன் அய்லான் பிணமாக மண்ணில் புதைந்துள்ள புகைப்படம் வெளியாகி கண்டனங்கள் வலுத்த பிறகுதான், ஐரோப்பிய அரசுகள் வரம்புக்குட்பட்ட அளவுக்கு அகதிகளைத் தற்காலிகமாக ஏற்பதாக அறிவித்துள்ளன.

சிரிய அகதிகள்
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயன்று, படகு கவிழ்ந்து மத்தியத் தரைக்கடலில் தத்தளிக்கும் சிரிய அகதிகளை மீட்கும் கிரேக்க போலீசார்.

சிரியாவிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பியோடுவது ஏன், அந்நாட்டில் எதற்காகப் போர் நடக்கிறது, அதற்கு யார் காரணம் என்பதைப் பற்றி ஊடகங்கள் அரைகுறை உண்மைகளையே கூறிவருகின்றன. இஸ்லாமிய நாடுகள் என்றாலே அங்கு ஜனநாயகமோ, அமைதியோ இருக்காது, அராஜகமும் இனக்குழுக்களின் வன்முறைத் தாக்குதலும்தான் இருக்கும் என்ற கருத்து மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் இடம் கொடுத்து உதவலாம் என்றாலும், இத்தனை இலட்சம் பேர் அகதிகளாக வந்தால் ஐரோப்பிய நாடுகளால் எப்படிச் சமாளிக்க முடியும் என்று வாதிட்டு, இது நாகரிகமற்ற இஸ்லாமிய நாடுகள் ஏற்படுத்திய பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், சிரியாவில் கூலிப்படைகள் நடத்தும் போருக்கும், பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அல்லற்படுவதற்கும் முழுமுதற் காரணம் அமெரிக்காதான். நிலையான அமைதிக்கும் ஜனநாயகத்துக்கும் நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்தான் சிரியாவில் அதிபர் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்து தமக்கு விசுவாசமான ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் கைக்கூலிகளைக் கொண்டு மத, இன மோதல்களைத் தூண்டிவிட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து, மனிதப் பேரழிவைத் தோற்றுவித்த கிரிமினல் குற்றவாளிகளாவர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகை மேலாதிக்கம் செய்யும் வெறியோடு புறப்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, போக்கிரி அரசுகளைத் தண்டிப்பது, மனித உரிமை – ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் மேற்காசியாவை மறு காலனியாக்கும் தமது திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

இதன்படி, ஆப்கானில் அன்றைய சோவியத் வல்லரது தனது படைகளை விலக்கிக் கொண்டு வெளியேறியதும், அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத தாலிபான்களின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்டது. இருப்பினும் தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் தத்தமது நலன்களையொட்டி முரண்பாடுகள் எழுந்ததால், பின்லேடனின் அல்-கய்தா இயக்கம் வளரத் தொடங்கி தாலிபான்களும் அதனுடன் இணைந்ததும், அல்-கய்தா இயக்கம் ஆப்கான் மட்டுமின்றி, உலகையே அச்சுறுத்தும் கொடிய பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டு, அமெரிக்காவின் போர்த்தாக்குதல்களால் ஆப்கான் சிதைக்கப்பட்டு அமெரிக்காவின் மேலாதிக்கம் நிறுவப்பட்டது.

சிரிய அகதிகளின் அவலம்
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல துருக்கி எல்லையில் அனுமதிக்காகக் காத்திருக்கும் சிரிய அகதிகளின் அவலம்.

அதன் பிறகு, இராக்கில் சதாம் உசைனின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு, தனது நோக்கங்களுக்குச் சேவை செய்யும் வகையிலான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தலைமையில் ஒரு பொம்மை அரசை உருவாக்கி, ஜனநாயகத்தையும் அமைதியையும் நிலைநாட்டிவிட்டதாக அமெரிக்கா கூறிக் கொண்டாலும், சன்னி பிரிவு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் நடத்தும் எதிர்தாக்குதலால் இன்று அந்நாடே குருதிச் சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது.

அதைத் தொடர்ந்து லிபியாவைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர 2011-ல் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. லிபிய அதிபர் கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதிகாரத்தைக் கைப்பற்ற அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட போட்டி குழுக்களுக்கிடையிலான மோதல்கள் உள்நாட்டுப் போராக முற்றி, இரத்தக்களறியின் நடுவே பல்லாயிரக்கணக்கான லிபிய மக்கள் அகதிகளாக மத்தியத் தரைக்கடல் வழியே ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

மேற்காசியாவுக்கான உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத்தின் ஒரு அங்கமாக, அதன் பிறகு சிரியாவில் ஆட்சி மாற்றம் செய்து தமக்கு விசுவாசமான அரசை நிறுவ இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. இராக்கில் நேரடி ஆக்கிரமிப்புப் போரை நடத்திய அமெரிக்கா, இப்போது சிரியாவில் அதுபோல் நேரடி ஆக்கிரமிப்பு செயாமல் வான்வழித் தாக்குதல்களை நடத்துவது, கைக்கூலிகளான உள்நாட்டு தீவிரவாதக் குழுக்களைத் தூண்டிவிடுவது என்ற உத்தியுடன் தனது மேலாதிக்கத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

சிரியா என்பது அரபு ஷேக்குகள் ஆளும் நாடல்ல. இதர அரபு நாடுகளை ஒப்பிடும்போது கல்வியறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட நாடாகும். ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியாகவும் ஏகாதிபத்தியங்களுடனான உறவில் இரட்டைத் தன்மை கொண்டதாகவும் இருந்தபோதிலும், சிரியாவின் அல் அசாத் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாகவே இருந்து வருகிறது. பல்வேறு மத, இன குழுக்கள் இருந்த போதிலும், அந்நாட்டில் மத, இன மோதல்கள் நடந்ததில்லை.

சிரிய அகதிகள்ஆனால், இன்று அந்நாட்டில் கைக்கூலி இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களைக் கொண்டு, இந்த மோதலைத் தீவிரப்படுத்தி அந்நாட்டை குருதிச் சேற்றில் மூழ்கடித்ததே அமெரிக்காதான். முழு சர்வாதிகார நாடான சவூதி அரேபியாவும், கத்தாரும் இதற்கு நிதியும் ஆயுத உதவியும் செய்து ஆதரித்தன. ஜனநாயகத்தை ஏற்காத இந்த நாடுகள்தான், சிரியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அமெரிக்காவுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு கைக்கூலி இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களை ஊட்டி வளர்த்தன. இத்தீவிரவாதக் குழுக்கள் இணைந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கமாக வளர்ந்து அக்கும்பலின் அட்டூழியங்களும் கொலைவெறியாட்டங்களும் தீவிரமடைந்ததும், அத்தீவிரவாத இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் சிரியாவில் வான்வழித் தாக்குதலை ஏவின. அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கும் சவூதி அரேபியாவும், கத்தாரும் நிதியுதவி செய்கின்றன.

இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களைக் கைக்கூலிகளாகக் கொண்டு மேற்காசியாவைத் தனது மேலாதிக்கத்துக்கேற்ப மாற்றியமைக்கும் அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தின் விளைவாக, இன்று பல்வேறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் மேற்காசிய நாடுகளின் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டன. அமெரிக்காவாலும், சவூதி அரேபியா, கத்தார் முதலான நாடுகளாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் இணைந்து இன்று ஐ.எஸ். என்ற மிகப்பெரிய சன்னி பிரிவு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமாக வளர்ந்து, அதன் அட்டூழியங்களும் கொலைவெறியாட்டங்களும் தலைவிரித்தாடுகின்றன.

சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போர்தானேயன்றி, அமெரிக்கா கூறிக்கொள்வது போல அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது அதன் நோக்கமல்ல. எண்ணெய் வளமிக்க மேற்காசியப் பிராந்தியம் தனது மேலாதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்பதற்காகவே, மத – இனப் பிரிவுகளுக்கிடையே மோதலைத் தூண்டி, இத்தகைய முறுகல்நிலையும் போர்த்தாக்குதல்களையும் தொடர்ந்து நீடிக்கச் செய்து, நிரந்தரமாகத் தலையிடுவதற்கான முகாந்திரத்தை உருவாக்கிக் கொள்வதென்பதே அமெரிக்காவின் உத்தியாக உள்ளது.

இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, சிரியாவில் உள்நாட்டுப் போர் நடப்பதால்தான் அகதிகள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அகதிகள் குவிவதால் ஐரோப்பிய கண்டமே நெருக்கடியில் சிக்கி இக்கட்டான நிலைமைக்கு ஆளாகி நிற்பதைப் போலவும் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் கூசாமல் புளுகி வருகின்றன.

– பாலன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

புதுவை பல்கலையில் மாட்டிறைச்சி போராட்டம் – ஆர்.எஸ்.எஸ் அடாவடி

7

மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை–மறையாத மனு நீதிக்கு முடிவுகட்டுவோம்!

  • புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
  • ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க காலிகளின் அடாவடி
  • மாணவர்களின் பதிலடி!

மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியைச் சார்ந்த முகமது அக்லாக் என்ற முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுத் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார், அவரது மகன் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
நாம் “மாடு தின்போர்” என்று உரக்கச் சொல்வோம்!

மாட்டுக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காகவே இவ்வாறான பல்வேறு வன்முறைகளும் கொலைவெறித் தாக்குதல்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நித்தமும் அரங்கேறி வருகின்றன. இவ்வன்முறைகளில் உயர்சாதி இந்துக்களை ஈடுபடுத்தி அவர்களை இசுலாமிய மக்களுக்கு எதிராக நேரடியாகவும், தலித் மக்களுக்கு எதிராக மறைமுகமாகவும் அணிதிரட்டி வருகிறது இந்தியாவை ஆளும் இந்துத்துவ கும்பல்.

ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் உழைக்கும் மக்களை மதரீதியில் பிளவுபடுத்த ஓர் ஆயுதமாக மாட்டுக்கறி பயன்படுத்தப் படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, நம் உணவு எதுவாக இருக்கவேண்டும் என்பதை ஒரு சிறு கூட்டம் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது!

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
மாட்டுக்கறியின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்துவெறிக்கு முடிவுகட்டுவோம்!

“மாடுதின்னும் புலையர்” என்று இதே மாட்டுக்கறியின் பெயரால்தான் வரலாறு நெடுகிலும் கோடானகோடி தலித் மக்களும் ஆதிவாசிகளும் தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். தற்போது அதே ஆயுதம் சிறுபான்மையினருக்கு எதிராக சாதி இந்துக்களை அணிதிரட்ட ஏவப்படுகிறது.

  • தீண்டாமையையும் சாதி வேற்றுமையையும் காத்துநிற்கும் இந்துமதத்தைப் புறக்கணிப்போம்!
  • நாம் “மாடு தின்போர்” என்று உரக்கச் சொல்வோம்!
  • தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான இந்துவெறிப் பாசிசத்தை அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் பிறந்த இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவோம்!
  • மாட்டுக்கறியின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்துவெறிக்கு முடிவுகட்டுவோம்!

என்ற முழக்கங்களை முன்வைத்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 13 அக்டோபர் 2015 அன்று பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான மாணவர்களும், முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் / கட்சிகளின் பிரதிநிதிகளும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள், மற்றும் பெரியார் அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ஆனந்தன், பல்கலைக்கழக ஆய்வாளர் சத்தியராஜ் உள்ளிட்ட மாணவர்கள் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இம்முன்னணியாளர்களும், பிற மாணவர்கள் பலரும் கண்டன உரையாற்றினர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள், மற்றும் பெரியார் அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இவ்வார்ப்பாட்டத்தின் இறுதியில் கூடியிருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி வழங்கப்பட்டது. அனைவரும் மாட்டுக்கறியை உண்டு சாதி ஒடுக்குமுறை, பார்ப்பனக் காவிகளின் சிறுபான்மையினருக்கு எதிரான இந்து மதவெறி ஆகியவற்றிற்கு எதிரான தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இதுபற்றி அறிந்த இந்து காவி வெறியர்கள் அடுத்தநாள் (14 அக்டோபர் 2015) அதே இடத்தில் மாட்டுக்கறிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி மாட்டுக்கறி விருந்து நடத்திய மாணவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வசைபாடினர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் காலிகள் திரண்டு தலித் மற்றும் முசுலீம் மக்களை மிக மோசமான, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.

“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல். இதுதான் பாரம்பரியம் மிக்க இந்து மதத்தின் பண்பாடு என்பதை நன்கு உணர்த்துவதாக இருந்தது அந்த இந்து வானரங்களின் வசைமொழிகள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அப்போது அங்கு திரண்டு அவர்களின் பேச்சுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தி இந்து வெறியர்களின் காலுக்குச் செருப்பாய்ச் செயல்ப்பட்டது போலீசு. மாட்டுக்கறி உண்ணும் தலித் மக்களை இழிவுபடுத்தியும், நேரடியாக மிரட்டியும் பேசிய காவிக் கிரிமினல்களுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்யவேண்டிய காவல்துறை, “அவன் இன்னிக்கு மைக் போட்டுத் திட்டுறான், நீ நாளைக்கு திருப்பித் திட்டு. நான் இப்போ அவன ஏன் இப்டி பேசுற-னு கேக்க முடியாது.” என்று வெட்கமில்லாமல் கூறியது.

புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்அதனைத் தொடர்ந்து ஒரு கொந்தளிப்பான சூழல் வளாகத்தில் உருவானது, 16 அக்டோபர் அன்று மீண்டும் தொடர் முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என்று முடிவுசெய்தனர் மாணவர்கள். இதனை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கீழ்க்காணும் முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வளாகத்தினுள்ளும் புதுவை நகர் முழுவதிலும் ஒட்டப்பட்டன:

“The saffron snake sneaking to poison Pondicherry University!

Govt. of Pondicherry and Police!

  • Arrest the RSS & BJP saffron fanatics who made shabby remarks on the basis of caste and religion against the students of Pondicherry University who came out in support of the nutritious and working class food of beef!

Students and people of working class!

  • Let us root out the RSS and ABVP Hindu fascists trying to polarise the united students of PU belonging to various faiths and cultures on caste and communal lines!
புதுவை பல்கலைக் கழகம் மாட்டுக்கறி போராட்டம்
தடையை மீறி தொடர்முழக்கப் போராட்டம்

It is absolutely ridiculous for the Brahmins who consumed bulls and horses during Yagas to advocate beef-banning!

Let us give a fitting reply to the saffron fascists who issued murder threats against the beef-eating Dalits and Muslims!”

மாணவர்களின் வேகத்தையும் எழுச்சியையும் கண்டு மிரண்டுபோன போலீசு அனுமதி மறுத்தது, போராட்டம் எதுவும் இதுகுறித்து இருதரப்பிலும் நடத்தக் கூடாது என்று கூறியது. இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் தடையை மீறி தொடர்முழக்கப் போராட்டம் நடத்தத் தயாராகினர்.

செயலில் இறங்கிய போலீசு, இரவோடு இரவாக ஒலிபெருக்கி வைக்கவோ வேறந்த ஏற்பாடுகளும் செய்யவோ முடியாதபடி அனைத்தையும் தடுத்தது. திட்டமிட்டபடி மாணவர்கள் 16-ம் தேதி காலை கூடி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.

ஆங்கிலத்தில் சுவரொட்டிகளைப் படித்த காஷ்மீர், மராத்தி, வட இந்திய மாணவர்களும் தமிழ் மாணவர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்துவெறியை முறியடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எழுச்சியுடன் பேசினர். புரட்சிகர அமைப்புகளின் தோழர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தமது ஆதரவை மாணவர்களுக்கு நல்கினர்.

செய்வதறியாது திகைத்த போலீசு உடனே கலைந்துசெல்லும்படி மிரட்டிப் பார்த்தது. மாணவர்கள் முடியாது என்று மறுத்து கைதுசெய்துகொல்லுமாறு கூறவே சற்று பின்வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது!

காஷ்மீரி மற்றும் பிற வட இந்திய மாணவர்கள் தமிழ் மாணவர்களோடு இணைந்து இன, மொழி எல்லைகளைக் கடந்து நடந்த எழுச்சிகரமான போராட்ட நிகழ்வாக இது அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதுவை அமைப்புக்குழு.

கருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி ?

2
gnani
பத்திரிகையாளர் ஞாநி

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பத்திரிகையாளர் ஞாநி மீது கருப்பு மை வீசுவேன் என்று மிரட்டியுள்ளது ஒரு கூலிப்படை இந்துத்துவ வானரம்.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் கருப்புமை வீசுவது, கிரிக்கெட் சங்கத்தில் மிரட்டுவது போன்ற சிவசேனா கட்சியினரின் சமீபத்திய ‘லீலைகள்’ குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் அனாதையாக இருக்கும் இந்துத்துவா கும்பலை மக்களிடம் பிரபலப்படுத்தும் புதியதலைமுறை, தந்தி தொலைக்காட்சிகளின் வழக்கப்படி இவ்விவாதத்திற்கும் தமிழக சிவசேனா பிரமுகர் என்று ஏதோ ஒரு கூமுட்டையை அழைத்திருந்தனர்.

இவ்விவாதத்தில்தான் “இந்துத்துவத்திற்கு எதிராக பேசினால் ஞாநி மீதும் மை வீசுவோம்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது அந்த வானரம். சிவசேனாவைச் சேர்ந்த இதன் பெயர் ராதாகிருஷ்ணனாம். ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் ஒரு ஊடகத்தில், காமிராவின் முன்னால், வில்லன் போன்றதொரு உடல் மொழியில் வன்முறையில் ஈடுபடுவேன் என்று அந்த ஜன்மம் பேசுவது இங்கே கவனிக்கத்தக்கது.

ஏதோ பெயர் தெரியாத கட்சிக்காரனின் சவடால் பேச்சு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது. இத்தகைய ஊர் முகவரி இல்லாத ஜந்துகள்தான் தற்போது இந்தியாவெங்கும் பொதுவெளியில் மிரட்டல்களை செய்கின்றனர். இதற்கு அரசும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆசி அளிக்கின்றன. கல்புர்கியையும், பன்சரேவையும் கொன்ற சனாதன் சன்ஸ்தாவை எத்தனை பேருக்கு தெரியும்?. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களா? அல்லது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்பதல்ல பிரச்சனை. காலம் காலமாக எதிர்க்குரலை நசுக்கியே பழக்கப்பட்ட பார்ப்பனிய சித்தாந்தம் அவர்களின் சிந்தையில் இருக்கிறது. அதை ஆளும் வர்க்கம் அங்கீகரித்திருப்பதால் சிந்தையில் ஏறிய சித்தாந்தம் வன்முறையாக வெளியே தெறிக்கும் போது இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.

பேரழிவு ஆயுதங்களைவிட கொடிய பார்பனிய பயங்கரவாதம், ‘தங்களுடைய ஆட்சி மலர்ந்துவிட்டது இனி தங்களை கேட்பதற்கு யாருமில்லை’ என்ற சூழலில் அதன் திமிர் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுதான் தாத்ரியிலும், ஹரியானாவிலும், திருச்செங்கோட்டிலும், புதிய தலைமுறை அரங்கத்திலும் எதிரொலிக்கிறது.

பிரச்சார இயக்கம் போஸ்டர்-3
பாசிஸ்டுகளை போர்க்குணமிக்க முறையில் எதிர்க்க வேண்டும் – 2103-ம் ஆண்டின் சுவரொட்டி

கொலையே செய்தாலும் தங்களை தண்டிக்க முடியாது என்ற இவர்களது நம்பிக்கையை போலீசும், நீதிமன்றங்களும் ஜனநாயகத்தின் இதர தூண்களும் பாதுகாக்கின்றன. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும்படி தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக பகிரங்கமாக அம்பலப்படுத்தினார் அரசு வழக்கறிஞர் ரோஹினி சலியன். தாங்கள் இஸ்லாமியர்களை கொன்றதையும், பாலியல் வன்முறை செய்ததையும், அப்போதைய குஜராத் மோடி அரசு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் சரிக்கட்டி தன்னை காப்பாற்றியதையும் காமிராவின் முன்னால் பேசினார் பாபு பஜ்ரங்கி. அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போட்ட இந்திய நீதித்துறை குற்றவாளி பாபு பஜ்ரங்கியை நலமாக பராமரிக்கிறது.

2002 குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளியான அமித்ஷா உள்ளிட்ட பலருக்கும், அரசு வழக்கறிஞருக்கும் மற்றும் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தினார் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட். அரசு அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ்-ம் எத்தனை ஆயிரம் இழைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதில் அமித்ஷாவிற்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் அமித்ஷாவுக்கு ஆதரவான குருமூர்த்தி மற்றும் அவரது வழக்கறிஞர் ஜெத்மலானியோடு சேர்ந்து வாதங்களை முன்வைக்கிறார், கலந்தாலோசிக்கிறார்.

அதாவது அமித்ஷாவுக்கு எதிராக தான் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவை ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திக்கு அனுப்பி சரிபார்க்க சொல்கிறார், அரசு வழக்கறிஞர். திருத்தங்கள் செய்த குருமூர்த்தி அதை அமித்ஷாவின் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு அனுப்பி மீண்டும் ஒரு முறை சரி பார்க்கக் கூறுகிறார். இதைக் கேட்டு உச்சநீதிமன்றம் பதறவில்லை. “குற்றம் சாட்டப்பட்டவரும், அரசும் கூட்டுசதியா” என்று கவலைப்படவில்லை. குறைந்தபட்சம் நித்யானந்தா கூறியது போல போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று கூட மழுப்ப முயற்சிக்கவில்லை. மாறாக, “மூன்றாம் நபரிடம் கருத்து கேட்பது சட்டத்தில் தடைசெய்யப்படவில்லை, அதனால் குருமூர்த்தியிடம் கருத்து கேட்டது சரிதான்” என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்; நீதிமன்றத்தை நாடிய சஞ்சீவ் பட்டை குற்றவாளியாக்குகிறது. இது குறித்து சஞ்சீவ் பட்டின் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இ-மெயில்ஆதாரங்களை பகிரங்கமாக வெளியிட்டு தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

இந்து மதவெறியர்களை போலீஸ் காப்பாற்றுவதும், போலிஸ் விட்டுவிட்டால் நீதிமன்றமே முன்வந்து அவர்களை காப்பாற்றுவதும், இத்தனையும் மீறினால் பாராளுமன்றம் அவர்களை காப்பாற்றுவதும்தான் இங்கு நடைமுறையாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது தான் நடைமுறை. சனாதன் சன்ஸ்தாவை தடை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதும், அப்சல் குருவை தூக்கிலிட்டதும் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

sliderஇந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தோற்றுவிக்கும் அதிகாரம் தான் சிவசேனாவின் வாள்களாகவும், கருப்பு மையாகவும், சனாதன் சன்ஸ்தாவின் துப்பாக்கி தோட்டாக்களாவும் வெளிவருகின்றன. கூடவே கட்சியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவும், முன்னேறவும் பெரிய சம்பவங்களை அரங்கேற்ற வேண்டிய தேவையும் பல்வேறு வானரப்படை ஜந்துக்களுக்கு இருக்கிறது. ஆயிரக்கணக்கில் கொலை செய்தால் கட்சித் தலைவர் பதவி, நூற்றுக்கணக்கில் செய்தால் அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி.

அத்வானிகளும், அமித்ஷாக்களும், மோடிகளும் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும், மும்பை கலவரத்தில் விசாரணை கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்கரே அரச மரியாதையோடு சமாதியானதும், முசாபர் நகர கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பதும் சமீபத்திய சான்றுகள்.

இதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து போலீசில் புகார் செய்து, நீதிமன்றங்கள் மூலம் தண்டித்து, அதன் மூலம் இந்துமத வெறியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் வன்முறையை அடக்கிவிடலாம் என்று முயல்வது கொக்குதலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பதற்கு ஒப்பானது.

ஆனால், ஞாநியோ அந்த அளவிற்கு கூட செல்லவில்லை. புதிய தலைமுறை நிறுவனத்திடம் நியாயம் கேட்டு புகார் செய்திருக்கிறார். அவர்கள் சரியான முடிவெடுப்பார்கள் என்று நம்புவதாக அப்புகார் கடிதத்தின் இறுதியில் அவரே கூறுகிறார். இன்று வரை பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் பாரிவேந்தர் பச்சமுத்துவின் வியாபார சாம்ராஜ்யத்தில் ஒன்று தான் புதிய தலைமுறை. ஒரு வேளை வெண்ணெய் உருகி கொக்கின் கண்ணை மறைக்கும் போது ஞாநி வெற்றி பெறலாம். வானரங்களையும், கூலிப்படைகளையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அழைத்து வருவது ஒன்று, நிர்வாகம் சார்ந்தது. அதன்படி கூட்டணிகட்சி தலைவரான பச்சமுத்து தனது இந்திய அளவிலான தொழில் விரிவாக்கத்திற்கு இத்தகைய “பிரைம் டைம்” பிச்சைகளை இந்துமதவெறி கும்பலுக்கு போடவேண்டும். பதிலுக்கு அந்த கும்பல் இவருக்கு தொழில் பிச்சையை போடும். இப்படி பரஸ்பர ஆதாயம் உள்ளது. இரண்டாவது, இத்தகைய கூலிப்படை கோஷ்டிகளை கூட்டி வந்து இப்படி மிரட்டுவதால் தமது சானலின் ரேட்டிங் எகிறும் என்பது. அதே நேரம் இத்தகைய மிரட்டலை இந்துமதவெறியர்கள் விடுவது போலத்தான் அவர்கள் அனுமதிக்க முடியும்.

தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை. அங்கே பணியாற்றும் ஊழியர்களோ, செய்தியாளர்களோ தமது பாதுகாப்பிற்கு கூட நிர்வாகத்தை நம்பியிருக்க முடியாத சூழ்நிலை. இதில் தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும் என்று பச்சமுத்துவின் மகனுக்கு கடிதம் எழுதுகிறார் ஞாநி. ஏன்? மோடிக்கே எழுதலாமே?

கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஞாநிக்கு பின்வருமாறு எழுதியிருந்தோம். மீண்டும் நினைவூட்டுகிறோம்.

“இத்தகைய மதவெறி பாசிஸ்ட்டுகளை எதிர்த்த போராட்டம் தெருவிலும், மக்கள் களங்களிலும் சித்தாந்த ரீதியிலும், போர்க் குணமிக்க முறையிலும் நடக்க வேண்டும். இதன்றி இவர்களை வேரறுக்க வேறு வழியில்லை. அப்படி இருப்பதாக ஞாநி போன்றவர்கள் காட்டும் ‘ஜனநாயக’ நம்பிக்கைதான் அபாயகரமானது.”

இதனால் ஞாநி போன்றவர்கள் கம்புச்சண்டை போடவேண்டும் என்று பொருளில்லை. ஆனால் இந்துமதவெறியை வளர்த்து பாதுகாக்கும் ஊடகங்கள், அரசு, நீதிமன்றம், போலிசு மேல் அவரைப் போன்றவர்கள் கொண்டிருக்கும் மாயைதான் ஆர்.எஸ்.எஸ்-இன் பலம்.

அமைப்பு ரீதியில் கட்டமைக்கப்பட்டு நாடெங்கிலும் பல ஆயிரக்கணக்கான ஷாகாக்களுடன் அடிமுதல் நுனி வரை மதவெறியூட்டப்பட்டு இந்துமதவெறியர்கள் செயல்படுகிறார்கள். இவர்களை எப்படி வீழ்த்துவது என்று ஜனநாயக சக்திகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க:

குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு !

0

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா ‘தற்கொலை’ : குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு!

னிதர்களின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கும் வக்கிர டிராகுலாவாகிய கிரிமினல் குற்றக் கும்பலின் நெருங்கிய கூட்டாளிதாம் போலீசார் என்பதற்கு கண்முன்பாக வெளிவந்திருக்கும் சான்றுகள்: கோகுல்ராஜ் மற்றும் விஷ்ணுப்பிரியா சாவுகள் குறித்த  திருச்செங்கோடு வழக்குகள்; மேலூர், கீழவளவு – சின்னமலம்பட்டி கிராமத்தில் சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் தோண்டத் தோண்ட வரும் நரபலி செய்யப்பட்டவர்களின் பிணங்கள்- எலும்புக் கூடுகள். கோகுல்ராஜ்-அவருக்கு முன்பு இளவரசன், விஷ்ணுப்பிரியா-அவருக்கு முன்பு முத்துக்குமாரசாமி, கீழவளவு கிரானைட் கொள்ளைகளுக்கு நடுவில் நடந்த நரபலிக் கொலைகள் மட்டுமல்ல, மணற்கொள்ளைகளுக்கு இடையே நடக்கும் கொலைகள் – இவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய போலீசார் மட்டுமல்ல, நீதிமன்றங்களும்  அநேகமாக அனைத்து அரசுத் துறைகளும் ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகவும் கூட்டாளிகளாகவும் செயல்படுகிறார்கள்.

விஷ்ணுபிரியா
‘தற்கொலை’ செய்து கொண்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா

இத்தகைய போக்குகள் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் நெருக்கடிகளில் சிக்கி, நிலைகுலைந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்மறைச் சக்திகளாக மாறிப்போயுள்ளதையும் அது சமூத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் விளங்குவதையும் காட்டுகின்றன. இந்த உண்மையை கோகுல்ராஜ், விஷ்ணுப்பிரியா சாவுகள் குறித்த  திருச்செங்கோடு வழக்குகள் மற்றும் கிரானைட் கொள்ளை-நரபலிக் கொலைகள் துலக்கமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளைப் பரபரப்பூட்டும் தகவல்களாகவும் கிசுகிசுக்களாகவும் வெளியிட்டு வியாபாரம் பார்ப்பதோடு ஊடகங்கள் பெரும்பாலும் நின்றுவிடுகின்றன. இந்த விவகாரங்கள் எல்லாம் நிலவும் அரசியல், சமூக சீரழிவின் வெளிப்பாடுகள்தாம். இவற்றுக்கான அடிப்படைகளை ஆழமாக ஆய்வு செய்து, தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அரசியல், சமூக சிந்தனையாளர்கள்கூட ஈடுபடுவதில்லை.

“பணி நெருக்கடி, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக மேலதிகாரிகளின் நிர்ப்பந்தம், மன அழுத்தம் போன்றவை காரணமாக விஷ்ணுப்பிரியா தற்கொலை” நேர்ந்துவிட்டது என்ற மேலெழுந்தவாரியான ஆராய்ச்சிகளில் மக்கள் மூழ்கடிக்கப்படுகிறார்கள். இலஞ்ச-ஊழல், வசூல்வேட்டை, அதிகார முறைகேடுகள், சாதி ஆதிக்கம், இயற்கை வளக் கொள்ளை, இலாபவெறி முதலானவற்றை நோக்கமாகக் கொண்ட இறுக்கமான வலைப் பின்னலாக அரசுக் கட்டுமான அமைப்பு செயல்படுகிறது. அதனுடன் ஒத்துப்போக முடியாதவர்கள், குறிப்பாக அரசுப் பணிகள் மக்கள் சேவைக்கான உன்னதமானவை என்று உருவாக்கப்பட்டிருக்கும் பொய்த் தோற்றத்தை நம்பும் புதிய அலுவலர்கள் பலியாக்கப்படுகிறார்கள்.

‘விஷ்ணுப்பிரியா தற்கொலை’க்குக் காரணமானவர் என்று கை காட்டப்படுபவர் அவரது மேலதிகாரி நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார். விஷ்ணுப்பிரியா மரணச்செய்தி எட்டிய உடனே இரவு ஏழு மணிக்குள் அவர் தூக்கில் தொங்கிய அறைக்குள் புகுந்த செந்தில்குமார் உள்ளேயிருந்தவர்கள் அனைவரையும் வெளியே விரட்டிவிட்டார். தற்கொலை செய்துகொண்டவரின், அதுவும் ஒரு உயர் போலீசு அதிகாரியின் உடலை மீட்கும் போது போலீசார் கட்டாயம் செய்திருக்க வேண்டிய கடமை – அதை வீடியோவாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிப் பதிவு செய்ய வந்த போலீசு வீடியோ பதிவாளரை அதெல்லாம் வேண்டாமென்று வெளியேற்றிவிட்டு, செய்தி ஊடகத்தாரையும் உள்ளே விடாமல் தடுத்துவிட்டார். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு உயர் அரசு அதிகாரி ஆதலால், முதலில் ஒரு ஆர்.டி.ஓ. அல்லது வட்டாட்சியர் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாமல் அந்த அறைக்குள் தனக்கு விசுவாசமான ஒரு போலீசுக்காரரை மட்டும் வைத்துக்கொண்டு வேறு சில வேலைகளைச் செய்திருக்கிறார். தூக்கை அறுத்து சடலத்தைக் கீழேபோட்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம், என அவரது செல்போன்கள், மடிக்கணினி, கேமரா முதலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். கடிதத்திலிருந்த தான் சம்பந்தப்பட்ட பக்கங்களை மறைத்திருக்கிறார். அதன் பிறகுதான், போலீசு டி.ஐ.ஜி., ஐ.ஜி. முதலானோர் வந்திருக்கிறார்கள். குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கில், அரசே, யாரும் கோராமலேயே தனக்கும் மிகவும் விசுவாசமானதும் செந்தில்குமாரின் நெருங்கிய சகாக்களைக் கொண்டதுமான சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டது. சி.பி.சி.ஐ.டியோ, வழக்குக்கு அவசியமான ஆதாரங்களை எல்லாம் நீக்கிவிட்டு, சிலநாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் மேற்படிப் பொருட்களைத் தாக்கல் செய்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்ட கையோடு, அந்த மாவட்டத்தில் விஷ்ணுப் பிரியாவுக்கு உதவியாகப் பணியாற்றி வந்த ஏ.டி.எஸ்.பி. சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி உட்பட சில போலீசார் வேறு இடத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசுக்கேயுரிய கிரிமினல் புத்தியோடு, குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததோடு, கைக்கூலி ஊடகங்களைக் கொண்டு பொய்யான வதந்திகள் பரப்பப்படுகின்றன. எல்லாக் கோணங்களிலும் புலனாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு திசைதிருப்பும் வகையில் வழக்கு முடுக்கி விடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மீதே, குறிப்பாக, பெண்களானால் அவர்கள் மீதே  பழிபோட்டு, அவதூறுகளும் வதந்திகளும் பரப்பி, குணக்கேடு விளைவிக்கும் போலியான, கோமாளித்தனமான சாட்சியங்களை சோடிக்கும் வழக்கமான, போலீசு உத்திகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசு ஈடுபடுகிறது.

சட்ட ஆணையர்  சகாயம்
சட்ட ஆணையர் சகாயத்திற்கு வந்த “சோதனை”! : சின்னமலம்பட்டி கிராமத்தில் நரபலியிடப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் படுத்துறங்கும் சகாயம்.

விஷ்ணுப்பிரியா விசாரித்து வந்த வழக்குகளில் முக்கியமானது கோகுல்ராஜ் கொலை வழக்கு மட்டுமல்ல, குமாரபாளையம் தொழிலதிபர் ஜெகந்நாதன் கொலை வழக்கும் அடங்கும். அதில் இரண்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு கொலைகளையும் செய்தது தூத்துக்குடியைச் சேர்ந்த பாயாசம் எனப்படும் பேச்சிமுத்து தலைமையிலான கூலிக்கொலை கும்பல்தான். அக்கும்பல் விஷ்ணுப்பிரியாவைக் கொல்லவும் முயன்றிருக்கிறது. ஜெகந்நாதன், கோகுல்ராஜ் கொலை வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பில் இருந்த விஷ்ணுப்பிரியாவை அவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளோடு, வேறுபிற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளையும் நெருங்கவிடாமல் மேலதிகாரியான செந்தில்குமார் தடுத்து, நெருக்கடிகள் கொடுத்து வந்தார். இத்தகைய புகார்கள் நம்பத்தகுந்தனவாக இருந்தும் இவை மீது, இந்தக்கோணங்களில் இந்தக் கூலிக்கொலைக் கும்பலையும் சாதிவெறிக் கொலைக் கும்பலையும் பிடிப்பதிலோ, இவற்றின் கூட்டாளியான செந்தில்குமாரைத் தீர்க்கமாக விசாரிப்பதிலோ சி.பி.சிஐ.டி. போலீசு பாரிய அக்கறை காட்டவோ இல்லை.

செந்தில்குமாருக்கு மாமியார் வீட்டு மரியாதைகளுடன் உபசரிப்புகள் காட்டிய அதே சமயம், ‘விஷ்ணுப்பிரியா தற்கொலை’க்கு காரணம் காதல் விவகாரங்கள்தாம் என்பதற்கான ஆதாரங்களை சோடிப்பதிலே சி.பி.சிஐ.டி. போலீசு முனைப்புக் காட்டுவது அனைவரும் அறிந்த பகிரங்கமான உண்மை. ‘விஷ்ணுப்பிரியாவின் காதலர்கள்’ என்று சித்தரிக்கப்படுபவர்கள், போலீசு மிரட்டலுக்குப் பயந்து தலைமறைவாக இருக்கும் சிவகங்கை கோயில் குருக்கள் விஜயராகவன், மதுரை வழக்கறிஞர் மாளவியா. விஷ்ணுப்பிரியா இவ்விருவரிடம் தொலைபேசியில் அடிக்கடி பேசினார் என்பது போலீசு கூறும் ஆதாரம். (இப்படித்தான் கர்நாடகாவில் அதிகாரி ரவி மரண வழக்கில் போலீசு இட்டுக்கட்டிய புளுகுமூட்டை அம்பலப்பட்டுப் போனது.) செந்தில்குமார் மீது புகார் கூறிய மாளவியா, கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி ஆகியோரிடமிருந்து விசாரணை என்ற பெயரில் பொய்யான வாக்கு மூலங்களைப் பெறவும் ஆதாரங்களைப் பறித்துக் கொள்ளவும்தான் போலீசு  எத்தனித்தது. ஜெயா-சசி சொத்துக் குவிப்பு வழக்கில் பிறழ் சாட்சியம் முதல் பவானி சிங் நியமனம் ஈறாக ஜெயாவின் பொறுப்பிலுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசு செய்த தில்லுமுல்லுகள் எல்லோரும் அறிந்ததே. அதனால்தான் தனக்கு முக்கியமான வழக்குகளை, தமக்கு விசுவாசமான சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஜெயா-சசி கும்பல் ஒப்படைக்கிறது. அதேபோன்று அக்கும்பலுக்கு விசுவாசமான சாதியின் வாக்கு வங்கியையும் அதன் பிரதிநிதிகளான தனது இரு அமைச்சர்களையும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியைப் போலத் தனக்காக வசூல் வேட்டைகளை நடத்தும் எஸ்.பி. செந்தில்குமாரையும் காப்பதற்காகவே சி.பி.சி.ஐ.டி.யிடம்  இந்த வழக்குகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என்று அரசியல் முட்டாள்கள்தாம் நம்புவார்கள்.

– ஆர்.கே.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

பத்து நாள் ஜெயில்ல இருந்தா என்ன ?

8

“பத்து நாள் ஜெயில்ல இருந்துட்டுப் போனா என்ன குடிமுழுகிடப் போகுது…!” – போராட்டம் ஏற்படுத்திய மாற்றங்கள்

“டாஸ்மாக்கை மூடு” என்ற முழக்கத்துடன் கடந்த ஆகஸ்ட் 3 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி நடத்திய போராட்டத்தில் அக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. அப்போராட்டத்தில் பங்கேற்று, சாராய பாட்டிலை உடைத்ததற்காக 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்த 13 மாணவர்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

டாஸ்மாக் போராட்டம் - சிறை சென்ற மாணவர்கள்
சிறை சென்ற மாணவர்கள்

சிறை சென்றவர்களில் செல்வம், தினேஷ், நினைவேந்தன் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்; கனிமொழி சட்டக்கல்லூரி மாணவி; நிவேதிதா, வாணிசிறீ, ஜான்சி ஆகியோர் ராணிமேரிக் கல்லூரி மாணவிகள்; மாரிமுத்து பள்ளி மாணவர்; மணி ஐ.டி.ஐ. மாணவர்; சாரதி, ஆசாத், திருமலை மற்றும் ரூபாவதி ஆகியோர் பு.மா.இ.மு. அமைப்பின் முன்னணியாளர்கள். போராட்டம், போலீசின் அடக்குமுறை, சிறை அனுபவம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினோம்.

“டாஸ்மாக் கடையை இழுத்து மூடனும்ற உணர்வோடதான் போராட்டத்துல கலந்துகிட்டேன். ஆனா, ஜெயில்ல போடுவாங்கனெல்லாம் நினைக்கல. ஜெயிலுக்குள்ள வந்த முத நாளே அழுதிட்டேன். தோழர்கள் புத்தகம் படித்து விவாதிப்பதும் அமைப்பு பாட்டு பாடிகிட்டும், மத்த கைதிங்ககூட அரசியல் பேசிகிட்டும் இயல்பா இருந்தாங்க. இவங்களால மட்டும் எப்படி இருக்க முடியுதுன்னு யோசிச்சேன்…” என்கிறார், பச்சையப்பன் கல்லூரி மாணவரான தினேஷ்.

“யார்கூடவும் சகஜமாக பேசமாட்டேன்; பத்து மணிவரைக்கும்கூட வீட்டுல தூங்குவேன். ரேஷன் அரிசியில சமைச்சிருந்தா மூனு நாளானாலும் சாப்பிடாம அடம்பிடிப்பேன். புக் படிக்கற பழக்கமே இருந்ததில்லை. ஆனா, ஜெயிலுக்கு வந்தப்பிறகு எல்லாமே மாத்திகிட்டேன்…” என்கிறார், பச்சையப்பன் கல்லூரி மாணவரான நினைவேந்தன்.

“ஜெயில்ல அம்மா வந்து என்னை பாத்தப்ப வீட்டை காலி பண்ணவச்சிட்டாங்கனு சொல்லி அழுதாங்க. அப்போ மனசு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சி” எனும் மாரிமுத்து, மதுரவாயல் அரசு மேநிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர். அப்பாவின் ஆதரவில்லாத குடும்பம் அவருடையது. கல்லூரி செல்லும் அக்கா; பத்தாம் வகுப்பு பயிலும் தம்பி; சிற்றாள் வேலை செய்து ஒற்றை ஆளாய் நின்று மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றும் தாய். மூன்றுமாதங்களாக வீட்டுவாடகை செலுத்தவியலாத அளவுக்கு வாட்டும் குடும்ப வறுமை. எந்நேரமும் வீட்டைக் காலி செய்து வீதியில் துரத்தியடிக்கப்படலாம் என்ற நெருக்கடியான அந்தச் சூழலிலும் மனம்தளராமல் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர் மாரிமுத்து.

மணி
மணி

“இந்த சமூகத்தில் பெண்கள் போராட வருவதே அரிது. அமைப்பு கற்றுக்கொடுத்த அரசியல் உணர்விலிருந்து இளம்பெண்களாக இருந்தபோதிலும் நாங்கள் போராட்டக் களத்தில் முன்னிற்கிறோம். இப்போராட்டங்களின் பொழுது, எங்களை கைது செய்ய முயன்ற போலீசார் மாணவிகளாகிய எங்களிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டனர். கண்ட இடங்களில் கையை வைத்து எங்களைத் தூக்குவதும், உடைகளைக் கிழித்துவிடுவதும், பேண்ட் நாடாவை அவிழ்த்துவிடுவதும் என சொல்ல நாக்கூசும் அளவிற்குக் கீழ்த்தரமான முறையில்தான் எங்களை போலீசார் நடத்தினர்.” என்கிறார் சட்டக்கல்லூரி மாணவியான கனிமொழி.

“ஏட்டய்யாவ பத்தி எஸ்.ஐ. கிட்ட கம்ப்ளைண்ட் பன்னினா என்ன ரெஸ்பான்ஸ் இருக்குமோ, அதுமாதிரித்தான், போலீசோட டார்ச்சர பத்தி ஜட்ஜ் கிட்ட சொன்னப்பவும் இருந்துச்சி. போலீசு அடிச்சாங்கன்னு சொன்னா, ‘அடிச்சு கை-கால் உடைஞ்சிருச்சா, இல்ல இரத்தம் வந்திச்சான்னு’ எங்களையே திருப்பிக் கேட்குது கயல்விழின்னு எழும்பூர் ஜட்ஜ். காக்கிச் சட்டை போட்ட போலீசும், கருப்பு கோட்டு போட்ட நீதிபதியும் எங்களுக்கு ஒன்னாதான் தெரிஞ்சாங்க…” என்கிறார் ராணிமேரிக் கல்லூரி மாணவியான வாணிசிறீ.

“மூனுநாள்ல வெளிய வந்திருவோம்னுதான் முதல்ல நினைச்சோம். அப்புறம் ஒருமாசம்கூட ஆகலாம்னு தெரிஞ்சப்ப, கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்திச்சி…” என்று ராணிமேரிக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பயிலும் மாணவி ஜான்சி சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த, அவரது சீனியரான நிவேதிதா, “பொய் கேசு போட்டு போலீசு ஸ்டேசன்ல மூனு நாளா முழுநிர்வாணமா வச்சே கொடுமைப்படுத்துனாங்கன்னு ஒரு பெண் கைதி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிச்சப்ப அதிர்ச்சியில் நாங்க உறைஞ்சி போனோம். பொய் கேசுலேயும், சின்ன சின்ன தப்பு செஞ்சதுக்காகவும் ஜெயிலுக்கு வந்திருக்க சாதாரண மக்களே இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கும்பொழுது, போராட்டம் நடத்தி அரசியல் கைதியாக உள்ள வந்திருக்கோம், பத்துநாள் இருந்துட்டு போனா என்ன குடிமுழுகிடப் போவுதுன்னு தோணுச்சி…” என்கிறார், அவர்.

“டாஸ்மாக் குடியினால் பல பெண்களின் தாலியறுக்கப்படுகிறது. அன்றாடம் குடிகார கணவன்களின் சித்திரவதைக்குள்ளாகிறார்கள் தமிழகத்தின் தாய்மார்கள். இவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளுடன் ஒப்பிடும்போது, போராட்டத்தின் பொழுதும் சிறைக்குள்ளும் நாங்கள் அனுபவித்த அடக்குமுறைகள் ஒன்றும் பெரிதாகப் படவில்லை.” என்கின்றனர் சிறை சென்ற மாணவர்கள்.

“இந்த சவாலான நெலமைய மாத்தனும்னுதானே போராடுறோம்…”

“போலீசையும், ஜெயில் வாழ்க்கையும் கூட சமாளிச்சிட்டேன். பெயில் கிடைச்சு வீட்டுக்குப் போனா, மொத்தக் குடும்பமும் சேர்ந்து என்ன அடிச்சது. ‘பொட்டபுள்ள ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வர்றீயே, இனி உன்னை எவன்டி கட்டிக்குவான்?’ னு கண்டபடி பேச ஆரம்பிச்சிட்டாங்க…” என்று கூறும் ரூபாவதி, எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்.

ரூபாவதி
ரூபாவதி

“கல்லூரி மாணவியல்லாத நீங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றது எப்படி?” என்று கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே, பேசத் தொடங்கினார் ரூபாவதி. “பு.மா.இ.மு. அமைப்புல உறுப்பினர் என்பதையும்தாண்டி, டாஸ்மாக் குடியினால் சொந்தமுறையில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. குடியினாலேயே 29 வயதில எங்க அண்ணனை இழந்திருக்கேன். எங்கப்பாவும் மொடா குடிகாரர்தான். சம்பாத்தியம் முழுசையும் குடிச்சே அழிக்கிறவரு. நினைவுக்கு தெரிஞ்ச நாள் வரையில் பல இரவுகள் சாப்பிடாம பச்ச தண்ணிய மட்டுமே குடிச்சிட்டு தூங்கியிருக்கேன். குடிக்கலைன்னா எங்கப்பா எங்க மேல அவ்ளோ பாசமா நடந்துப்பாரு. அதே குடிச்சுட்டு வந்துட்டாருன்னா அப்படியே ஆப்போசிட்டா மாறிடுவாரு. அம்மா சமைச்சு வச்ச சாப்பாட்டுல உப்பையோ, மண்ணையோ அள்ளிப் போட்டுருவாரு. அது மட்டுமில்லாம, அந்தச் சாப்பாட்டை நாங்க எல்லாம் சாப்பிடனும்னு அடிப்பாரு. அப்பாவோட அடிக்கு பயந்தே பல நாளு மண்ணள்ளிப்போட்ட சொத்தை மொத்தக் குடும்பமும் சேர்ந்து சாப்பிட்டிருக்கோம். இப்படி, குடியினால சொந்த முறையில அதன் பாதிப்ப உணர்ந்த என் குடும்பமே எனக்கு ஆதரவா இல்லையேனு நினைக்கிறப்போ வருத்தமாத்தான் இருக்கு. ஆனாலும், இந்த சவாலான நிலைமையை மாத்தனும்னு தானே பு.மா.இ.மு. தோழர்கள் போராடுறாங்க.” என்கிறார், ரூபாவதி.

“நல்ல விசயத்துக்குத்தான் எம்புள்ள ஜெயிலுக்குப் போயிருக்கான்…”

அமுதம்
அமுதம்

“என் வீட்டுக்காரனால பைசா காசு பிரயோசனம் இல்லை. இவனயும் வயசுக்கு வந்த பொம்பள புள்ளையும் வச்சிகிட்டு வீட்டுவேலை செஞ்சி ஒத்த ஆளா நின்னு நாந்தான் கஷ்டபடுறேன். கொழந்த கால்ல மாட்டியிருந்த கொலுசு, காமாட்சி விளக்குனு வூட்ல இருக்க ஒரு பொருள் வுடாம அடகு வச்சு குடிச்சுருவான் எம் புருசன். அந்த ஆளு குடிச்சிட்டு வந்து பிரச்சினை பண்றதாலேயே வீட்டு ஓனருங்க துரத்திவுட்டு, இதுவரைக்கும் எட்டு வீட்டுக்கு மேல மாறிட்டோம். புருசன்தான் சேத்திக்கில்லைனா, புள்ளைனாச்சும் உருப்படுமானு பார்த்தா இவனும் இந்த நாசமத்த குடியைத்தான் குடிச்சுட்டு வந்து நிக்கிறான். 17 வயசுல குடி என்ன வேண்டியிருக்கு?

இவன் போராட்டத்துக்கு போயி ஜெயில்ல புடுச்சி போட்டுட்டாங்கனு புள்ளைங்க (பு.மா.இ.மு. தோழர்கள்) சொன்னப்ப நான் மண்ண அள்ளி தூத்தாத குறையா புள்ளைகள திட்டிபுட்டேன். அப்புறம் புள்ளைங்க எடுத்து சொன்னிச்சிங்க. ‘சாராயக்கடையை மூடனும்னு நல்ல விசயத்துக்குத்தான் எம்புள்ள போராடி ஜெயிலுக்குப் போயிருக்கானு நினைக்கிறப்ப ஒருபக்கம் சந்தோசமாத்தா இருக்கு’. ஆனா, இவன் முதல்ல திருந்தனுமே?” எனக் கேள்வியெழுப்புகிறார், இப்போராட்டத்தில் சிறை சென்றவர்களுள் ஒருவரான ஐ.டி.ஐ. மாணவர் மணியின் தாயார் அமுதம்.

குடிப்பழக்கமுள்ள ஒரு மாணவர் டாஸ்மாக்கிற்கு எதிரானப் போராட்டத்தில் பங்கெடுத்திருப்பது வியப்பைத் தரலாம். இதைவிட ஆச்சரியமானது, பச்சையப்பன் கல்லூரியில் தன் நண்பனைப் பார்க்கச் சென்ற மணி இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகியிருப்பது. மக்கள்திரள் போராட்டங்கள் எப்பொழுதுமே இப்படிப்பட்ட ஆச்சரியங்களை உருவாக்கக் கூடியவைதான்!

– இளங்கதிர்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : ஜெயா வழங்கிய “மானாடா.. மயிலாட…”

2

ன்னாட்டு முதலாளிகளே வாருங்கள், உங்கள் விருப்பம் போல தமிழகத்தையும் தமிழக மக்களையும் கொள்ளையடித்துச் செல்லுங்கள் என்று அறைகூவியழைத்து, பார்ப்பன பாசிஸ்டுக்கே உரித்தான அருவருக்கத்தக்க சுயவிளம்பரத்துடன் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற ஒரு ஆபாசக் கூத்தை அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடத்தியிருக்கிறார்.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு
சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழகத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்க பாசிச ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க சுயவிளம்பரக் கூத்து.

ஏற்கெனவே பல மாநில அரசுகள் இத்தகைய மாநாடுகளை நடத்தியுள்ளபோதிலும், நாலாந்தர நடிகைக்கே உரித்தான ‘அறிவுக்கூர்மையுடன்’, ஆபாசக் குத்தாட்டங்களுடன் இம்மாநாட்டில் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுத்து ஜெயலலிதா வரவேற்றுள்ளார். தனது இச்சாதனையை அங்கீகரித்து, தன்னைப் போற்றிப் புகழ வேண்டுமென்ற வக்கிரத்துடன், மின்னணு தொழில்நுட்பத்தில் பறக்கும் குதிரை ஜெயலலிதா காலில் மண்டியிடுவது போன்ற காட்சியைத் தனது அடிமைகளைக் கொண்டு ஏற்பாடு செய்து ரசித்துப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

உலகெங்கும் சுற்றி ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பிரதமர் மோடி கொண்டுவந்தார் என்றால், உள்ளூரில் இருந்துகொண்டே ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவந்துவிட்டதாகவும், மோடியைவிட லேடிதான் டாப் என்றும் அவரது துதிபாடிகள் மார்தட்டுகின்றனர். இம்மாநாட்டையொட்டி தற்போது ஆரவாரமாக அறிவிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் என்ற புள்ளிவிவரக் கணக்கு அடிமைகளால் நடத்தப்பட்ட இன்னுமொரு கேலிக் கூத்து. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 என்பதை வைத்து 24,2 என்று வருமாறு இத்தொகையை நிர்ணயித்துள்ளனர்.

ஆனால், கடந்த 2008-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்க – ஐரோப்பிய பொருளாதாரங்கள் தேக்கத்திலும் நெருக்கடியிலும் சிக்கி, சந்தை வற்றிப்போய் அந்நாடுகளின் ஏகபோக ஆளும் வர்க்கமே தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அந்நாடுகளின் ஏகபோக முதலாளிகள் தமிழகத்தில் வந்து முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கேழ்வரகில் நெய்வடிந்த கதைதான்.

ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி ஆட்சியை விஞ்சும் வகையில் தொழிலாளர் சட்டத் திருத்தம், காடுகளையும் கனிமவளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் தடையின்றிச் சுரண்டுவதற்கேற்ப சுற்றுச்சூழல் விதிகள் திருத்தம், வங்கி, காப்பீடுதுறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தாராள அனுமதி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைள் – என இந்தியாவைத் தாரைவார்த்துக் கொடுப்பதாக மோடி கும்பல் உலகமெங்கும் சுற்றி கூவிக்கூவி அழைத்த போதிலும், எதிர்பார்த்தபடி அந்நிய முதலீடுகள் வரவில்லை. மோடி கும்பலால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டமே புஸ்வாணமாகி நிற்கும்போது, மோடி கும்பலையே விஞ்சிவிட்டதாக மாய்மாலம் செய்கிறது ஜெ.கும்பல்.

எல்லாவற்றுக்கும் மேலாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் வரும், ஆனா வராது கதைதான். புரிந்துணர்வுதானே தவிர, உடனே யாரும் முதலீடு செய்யப் போவதில்லை. ஏன் முதலீடு செய்யவில்லை என்று யாரும் கேட்கவும் முடியாது. செயலாக்கத்துக்கு வருமா என்று யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் ஜெயா ஆட்சியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்று பார்த்தாலே இதன் யோக்கியதை விளங்கிவிடும்.

2011-ல் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக ஜெ. அரசு அறிவித்தது. ஆனால், அவற்றில் வெறும் 238 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெறும் 0.3 சதவீதம்தான்.

2012-ல் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கப்படவுள்ளதாகவும் பிரம்மாண்ட அறிவிப்பு செய்தது ஜெ. கும்பல். அப்புறம் அந்த அறிவிப்பு காற்றோடு கலந்துவிட்டது.

ஏற்கெனவே தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெரும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் நோக்கியாவும் ஹூண்டாயும். சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டை பகுதியில் விவசாய நிலங்களைப் பறித்து, தடையற்ற மின்சாரத்துடன் வரிச்சலுகைகளை வாரியிறைத்தும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளையும் பறித்தும் கொண்டுவரப்பட்ட இந்நிறுவனங்களால் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. ஏரிகள்-குளங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் இத்தகைய அந்நிய முதலீட்டாளர்களால் பேரழிவுகளும் பகற்கொள்ளையும்தான் நடந்திருக்கிறது.

நோக்கியா, பி.ஒய்.டி. போன்ற நிறுவனங்களின் சட்டவிரோதக் கதவடைப்பால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இன்னும் பல சிப்காட் தொழிற்பேட்டைகளில் எவ்வித உரிமையுமின்றி, தொழிலாளர்கள் சட்டவிரோதமாகக் கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றிப் பணியாற்ற வைப்பதன் மூலம் பலர் படுகாயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து நிற்கும் கொடுமையும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நோக்கியா இயங்கிய 8 ஆண்டுகளில் பல ஆயிரம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சுரண்டிக் கொழுத்ததோடு, வரி ஏய்ப்பு செய்து பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிக் கொண்டது. பிறகு சட்டவிரோதமாக ஆலையை மூடி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்தது. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட அந்நிய முதலீட்டின் மகிமை.

நோக்கியாவுக்கு முன்னதாக 2013-ல் மோட்டரோலா தனது சூறையாடலை முடித்துக் கொண்டு தனது நிறுவனத்தை மூடிவிட்டது. சென்னையில் தனது பிரிவை மூடிவிட்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம், தனது ஆலையின் விரிவாக்கத்தை உ.பி. குஜராத் மற்றும் ஆந்திராவுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமும் மூடப்படும் நிலையில் உள்ளன. தமிழ்நாடு பெட்ரோப்ராடக்ஸ் நிறுவனம், திருச்சி டிஸ்டிலரீஸ் நிறுவனம், தூத்துக்குடி அல்கலின் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆகியன ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. இவற்றின் விளைவாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.

தமிழகத்தைச் சூறையாடுவதற்காக கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் கொள்வதைப் போலத்தான், அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதி, தமிகத்தின் தொழில்வளர்ச்சி – வேலைவாய்ப்புக்காக நான்தான் நோக்கியாவைக் கொண்டுவந்தேன் என்று மார்தட்டிக் கொண்டார். நோக்கியாவால் தமிழத்துக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதைப் பற்றி வாய்திறக்க மறுக்கும் கருணாநிதி, கடந்த நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது திடீரென சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி ஒரு நாடகத்தை நடத்துவதாக ஜெ. கும்பலைச் சாடுகிறார்.

தமிழகத்தைச் சூறையாடும் இத்தகைய பேரழிவுப் பாதையைத்தான் எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நியாயப்படுத்தி வருகின்றன. ஏதோ ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மையால்தான் அந்நிய முதலீடுகள் வராததைப் போலவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைவிட இன்னும் அதிகமாக அந்நிய முதலீடுகளை கொண்டுவந்து தமிழகத்தை வளப்படுத்தப் போவதாகவும் ஜெயா ஆட்சிக்கு எதிராகப் புழுதி அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

– மனோகரன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________