கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் போராடும் மக்களின் அச்ச உணர்வை போக்கிய பிறகு மின் உற்பத்தியை தொடங்கலாமென்ற நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதன்படி முத்து விநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இதுவரை மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது கூடங்குளம் போராட்டக்குழுவினர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வரும் நிபுணர் குழுவினர் நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.

அதன்படி நேற்று 31.01.2012 செவ்வாயன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிபுணர் குழுவும், கூடங்குளம் போராட்டக் குழுவினரும் வருகை தந்தனர். அப்போது இந்து முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் ரவுடி ஜெயக்குமாரின் தலைமையிலான குண்டர்கள் கூடங்குளம் போராட்டக்குழுவினரை வெறி கொண்டவாறு தாக்கியிருக்கின்றனர். தாக்குதலை வேடிக்கை பார்த்த போலிசார் பின்னர் இந்து முன்னணி குண்டர்கள் பத்து பேரை வேறு வழியின்றியும், போராட்டக் குழு பெண்களது போராட்டம் காரணமாகவும் கைது செய்திருக்கின்றனர்.

	கூடங்குளம் : இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம் !

காவிக் கிரிமினல்களின் ரவுடித்தனம்

ஜனநாயக முறையில் போராடுவதைக்கூட இவர்கள் அனுமதிக்கவில்லை, இந்து முன்னணி போன்ற மதவெறி குழுக்களின் வெளிப்படையான தாக்குதலை வைத்து பார்க்கும்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நிபுணர் குழுவிடம் மனுக் கொடுக்க வந்ததாகவும், போராட்டக் குழுவினர் தேச விரோதிகளென்றும், 140க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் உதயக்குமாரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றும் ரவுடி ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டி கொடுக்கின்றான். இந்து முன்னணி காலிகள் தாக்கிய இந்த சம்பவத்தைக்கூட இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக பொய்ச்செய்தியிட்டு அதற்கு ரகளை என்றும் தலைப்பிட்டு மகிழ்கிறது பார்ப்பன தினமலர்.

கூடங்குளம் போராட்டக்குழுவினரை அன்னிய சதி, வெளிநாட்டு பணம், தேச துரோகிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க வந்த நாசகார சக்தி என்றெல்லாம் பொய்ச்செய்தியை வெளியிட்டு தனது வாசகர் வட்டத்தை உசுப்பி வந்ததும் இதே தினமலர்தான். கூடங்குளம் பிரச்சினைக்காக தனிப்பெரும் வெறுப்பு இயக்கத்தையே பல்வேறு முனைகளில் தினமலர் எடுத்து வருகின்றது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாயும், பாயப்போகிறது என்று பீதியூட்டியதோடு, அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்களை மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை செய்தது, உதயகுமாரின் செல்பேசி எண்ணை வெளியிட்டு அனைவரும் அவரை செல்பேசியில் அழைத்து மிரட்ட வேண்டுமென்பது வரை தினமலர் தனது விசமப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்டவிழத்து வருகிறது.

இடிந்தகரை மக்கள் கிறித்தவ மீனவர்களாக இருப்பதை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல்  மதவெறி ஊட்டி குளிர்காய நினைக்கிறது. இந்தியாவை சீர்குலைக்க கிறித்தவ பாதிரியார்களின் சதியாக மக்களிடம் வன்மத்தை விதைத்து ஆதாயமடையவும் நினைக்கிறது இந்தக் கும்பல். கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் இருக்கும் தமிழக காங்கிரசோ தனது ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை நிலை நாட்ட அன்னிய நாட்டுப் பணம் கூடங்குளம் போராட்டக்குழுவினருக்கு வருகிறது என்று கிடைக்கும் காசுக்கு மேல் கூவுகிறது.

இடிந்தகரை மக்களுக்கு சொந்தமான தேவாலய இடத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், ஏனைய சில்லறை செலவுகளுக்கும் முதலில் பெரும் பணம் எதுவும் தேவையில்லை. மேலும் அத்தகைய செலவுகளுக்கும் அப்பகுதி மக்களே குறிப்பாக மீனவர்கள் தங்களது வருமானத்திலிருந்து நிதியுதவி அளிக்கின்றனர். இதை போராட்டக்குழுவினர் பலமுறை விளக்கியபிறகும் அப்படி ஒரு அபாண்டத்தை காங்கிரசு, காவி, தினமலர் காலிகள் தொடர்ந்து ஊளையிடுகின்றனர். கார்ப்பரேட் மீடியாவின் டார்லிங்காக இருந்த அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதக்கூத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தது போல கூடங்குளத்தில் நடக்க வில்லை, நடைபெறவும் முடியாது.

சரி காங்கிரசு கயவாளிகள் சொல்வது போல இந்தப் போராட்டத்திற்கு அன்னிய நாட்டு பணம் வந்தால் அது எந்த அன்னியா நாடு என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே? அமெரிக்காவா, ஜெர்மனியா, இத்தாலியா, பிரான்சா, ஜப்பானா என்று அந்த நாட்டைக் கண்டுபிடித்து தூதரக உறவை துண்டித்துக் கொள்ளலாமே? அதை விடுத்து பொதுவாக அன்னிய நாட்டுப் பணமென்று நாடகமாடுவதன் நோக்கமென்ன? ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் இங்கு அன்னியப்பணம் சட்டப்பூர்வமாக எப்படி வர முடியும்?

உண்மையில் மக்களது போராட்டங்களை சீர்குலைப்பதற்கு இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு காசு வரவழைத்து குளிப்பாட்டுவதெல்லாம் காங்கிரசு, பா.ஜ.க அரசுகளே தரகர்களாக முன்னின்று செய்யும் நடவடிக்கைகள்தான். அதிலும் வெளிநாட்டிலிருந்து அதிக பணம் பெறும் நிறுவனங்களாக விசுவ இந்து பரிஷத்துதான் முதலிடத்தில் இருக்கிறதென்பது பல வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்ட விசயம். அதிலும் கணக்கு வழக்கில்லை என்பதும் ஆதாரத்துடன் தோலுரிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.

இதற்கு மேல் இந்த நாட்டின் அன்னியக் கைக்கூலிகளாக நடந்து கொள்வது யார்? தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசும், முன்னர் இருந்த பா.ஜ.க கூட்டணி அரசும்தான் முதன்மையான அன்னியக் கைக்கூலிகள். பாரத மாதாவை பன்னாட்டு நிறுவனங்கள் கதற கதறக் கற்பழித்து வருவதற்கு மாமா வேலை பார்த்தது ஆதாயமடைந்தவை இந்தக் கட்சிகள்தான். மன்மோகன் சிங்கை விட ஒரு சிறந்த அன்னியக் கைக்கூலியை இந்தியாவில் யாரும் சொல்லிவிடமுடியுமா என்ன?

இப்படி இருக்கும் போது பீஸ் போன பல்புகளான இளங்கோவும், தங்கபாலுவும், ஞானசேகரனும், கோபண்ணாவும், அன்னிய சதி என்று பேசினால் அவர்கள் பல் இருக்க வேண்டுமா இல்லை உடைக்கப் படவேண்டுமா?

கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!

அணு உலைக்கு ஆதரவாக காவிக் கிரிமினல்களும் கதர் கிரிமினல்களும்

அடுத்து தினமலர் முதலான பார்ப்பன ஊடங்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதற்கு உதவி செய்யும் என்றொரு பொய்யை விரித்து நடுத்தர வர்க்கத்தையும், ஏன் பொது மக்களையும் உசுப்பி விடுகின்றன. ஏதோ கூடங்குளத்தில் தயாரிக்கப் போகும் மின்சாரம் வராததினால்தான் தமிழக கிராமங்களில் ஐந்து மணி நேர மின்தடை இருப்பதாக இவர்கள் கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.

தற்போதைய மின்தடைக்கு காரணமென்ன? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பட்டணத்து பேரங்காடிகளுக்கும் தடையின்றி அளிக்கப்படும் மின்சாரம்தான் மக்களுக்கு மின்தடையாக மாறுகின்றது. சிறு, நடுத்தர தொழில்கள் செய்யும் முதலாளிகள் உட்பட பாமர மக்கள் வரை இந்த மின்தடையினால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மின் உற்பத்தி பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தாலும் இன்னும் 40 இலட்சம் கிராமங்களில் மின்சாரமில்லை. எனில் உற்பத்தியாகும் இலட்சக்கணக்கான மெகாவாட் மின்சாரம் எங்கே போகிறது?

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார தேவை என்பது இத்தனை இலட்சம் மெகாவாட்டுகளாக இருக்குமென்று பட்டியல் போடுகிறார்களே, அந்த தேவையில் நாம் இல்லை. ஆக பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளது தேவையை இந்தியாவின் தேவையென்று மடை மாற்றிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இது தெரியாத சிறுமுதலாளிகளெல்லாம் கூடங்குளம் மின்னுற்பத்தி ஆரம்பித்தால் தங்களது அவலம் மாறுமென்று அப்பாவியாக நம்புகிறார்கள். மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் தினமலரின் பலம். இந்தியா வல்லரசானால் முதலாளிகளுக்குத்தான் ஆதாயமே அன்றி ஏழை மக்களுக்கு அல்ல. அவர்களது வல்லரசு வளர்ச்சியில் பெரும்பான்மை மக்கள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இதற்கு மேல் அணுமின்சாரத்தில் சில பத்து மெகாவாட்டுகளைக்கூட தாண்டும் நிலையில் உற்பத்தி இங்கில்லை. வெளிநாடுகளில் காலாவதியான ரியாக்டர்களை பெரும் செலவில் நமது தலையில் சுமத்தும் கொள்ளைதான் கூடங்குளத்திலும், மற்ற இடங்களிலும் நடக்கப் போகிறது. அதுதான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தானே புயலால் நிலை குலைந்த கடலூர் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசா அணு விபத்தால் அழியும் நமது மக்களை காப்பாற்றும்?

ஆகவே கூடங்களும் அணுமின்நிலையத்திற்காக பொதுக்கருத்தை ஆதரவாக பல முனைகளில் உருவாக்கிவிட்டு பின்னர் போராட்டக்குழுவினரையும், மக்களையும் ஒடுக்கும் பாசிச தந்திரம்தான் இவர்களிடம் இருக்கிறது. அதன்படி வரும்நாட்களில் இவர்களது பாசிச தர்பார் படம் விரித்து ஆடும். அதன் முன்னோட்டம்தான் இந்துமுன்னணியின் ரவுடி தாக்குதல். இந்தபடிக்கு போனால் இவர்கள் உதயகுமாரை கொல்வதற்கு கூட முயல்வார்கள். அத்தகைய தாக்குதலை உளவுத்துறைகளே கூட வடிவமைத்தால் கூட ஆச்சரியமில்லை. கைது, சிறை, வழக்குகள் என்று மிரட்டினால் எந்த மக்களையும் பணியவைக்க முடியுமென்பது ஆளும் வர்க்கத்தின் பாலபாடம்.

ஆயினும் இந்த பாடத்தை நாம் உடைக்க முடியும். போராடும் மக்களுக்கு நமது ஆதரவை கருத்திலும், களத்திலும் தெரிவித்து இந்த வேடதாரிகளை முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும்தான் கூடங்குளத்திலும் மக்களது எதிரிகளாக வலம் வருகின்றன. ஏற்கனவே முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு காரணமான இந்த காங்கிரசு கயவாளிகள் தண்டனை பெறாமலேயே தெனாவட்டாக திரிகிறார்கள். ஆக பழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு என்றொரு கட்சி இனி இருக்கக் கூடாது.

அதே போல காவி வெறிக் கும்பலையும் தகுந்த பாடம் புகட்டி தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். எல்லாப் பிரச்சினையிலும் மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ரத்தவெறி பிடித்த ஓநாய்கள்தான் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. ஆரம்பத்திலேயே இந்த ஓநாய்களை வேட்டையாடி அழிப்பது நமது கடமை. இல்லையென்றால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்