privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா ?

கோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா ?

-

ந்த மார்ச் மாத முதல் வாரத்தில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அநாவசியமான ஆப்சென்ட் போட்டு தேர்வெழுத தடை (de-barred) போடும் அக்கிரமத்துக்கு எதிராக மாணவர்களை திரட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தோம்.  அதன் பிறகு இத்துணை நாட்களாக அமைதியாய் இருந்த GPT (Government Polytechnic College) நிர்வாகம், இப்போது தேர்வு நெருங்கும் நேரத்தில் ஒளித்து வைத்திருந்த தனது அதிகாரத் திமிரை வெளிக்காட்டத் துவங்கியிருக்கிறது.

kovai-gpt-strike-1

போராட்டத்துக்கு பின் ஆப்சென்ட் போடும் பிரச்சினை இல்லையெனினும், இதற்கு முன்பு பல மாதங்களாக இவர்கள் ஆப்சென்ட் போட்டதான் விளைவாக ஏற்கெனவே வருகை பதிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் இப்போது தேர்வெழுத தடை எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்டியலில் சுமார் 32 மாணவர்கள் உள்ளனர்.

போராட்டத்தின் போது, மாணவர்களை நேர்கொண்டு பதில் சொல்ல துணிவின்றி புறவாசல் வழியே தப்பித்த பிரின்சிபால் “வைரம்” முதலில் தமது படை பரிவாரங்களான ஆசிரியர்களை அனுப்பி, பின்னர் போலீசை அனுப்பி, பின்னர் அவர்களாலும் நம்மை சமாளிக்க இயலாமல் இறுதியில் வந்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அனைத்து மாணவர் மத்தியிலும் உறுதி மொழி அளித்து விட்டு தற்போது கொஞ்சம் கூட நாணயம் இன்றி நடக்கிறார். அது சரி, அதிகார வர்க்கத்தின் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்கள் பெயரே வைத்திருந்தாலும் கூட “வைரமாக”வெல்லாம் இருக்க மாட்டார்கள். கரிக்கட்டையாக தான் இருப்பார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் பிரின்சிபாலை பார்த்து நியாயம் கேட்கச் சென்றிருக்கிறார். “சார், நீங்களே வாக்குறுதி கொடுத்தது போல செய்து கொடுங்கள். இல்லையெனில் நாங்கள் மீண்டும் பு.மா.இ.மு அமைப்பில் முறையிடுவோம்” எனக் கூறியிருக்கிறார்.

பிரின்சிபால், “நீ பத்து பேரை கூட்டிட்டு வந்தா….! நானும் பத்து பேரைக் கூட்டிட்டு வருவேன்” என பேசியுள்ளார்.

“சார், என்ன சொல்லுறீங்க…..? நான் மாணவர் அமைப்புல முறையிடுவேன்னு சொன்னா… நீங்க ரவுடிகளை கூட்டிட்டு வரன்னு சொல்லுறீங்க….!” என மாணவர் திருப்பிக் கேட்க,

“உன்கிட்டெல்லாம் பேச முடியாது” என திருப்பி அனுப்பியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களை அவரவர்தம் பெற்றோர்களை அழைத்து வர சொல்லி “உங்க பையன் பண்றது சரியில்ல. காலேஜுக்குள் ரவுடித்தனம் பண்ணுறான்” என புகார் சொல்லி உரிமைக்காக போராடிய மாணவர்களுக்கு எதிராக அவரவர்களின் பெற்றோர்களையே திருப்பும் வேலையையும் நரித்தனமாக நிர்வாகம் செய்துள்ளது. இது போக, தினசரி வகுப்பில்  மாணவர்களிடம், “போராட்டங்களுக்கு செல்வது தவறு. உங்களுக்குத்தான் பாதிப்பு” என்கிற ரீதியிலான கவுன்சிலிங்குகளும் வழமையாகிவிட்டன.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அனைத்து மாணவர் மத்தியிலும் உறுதி மொழி அளித்த முதல்வர்

ஒரு மாணவரின் தந்தையிடம், நமது போராட்டம் வினவுவில் வந்த செய்தியை எடுத்துக் காட்டி “உங்க பையன் ஏதோ மக்கள் விரோத அமைப்பில், தீவிரவாத அமைப்பில் சேர்ந்துட்டான். அவனை போலீஸ்  முடிச்சுருவாங்க…” என கூற, அந்த கிராமத்துப் பெரியவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது மகனுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு கூட்டிச் செல்லும் முயற்சியில் இறங்கி விட்டார்.

எவ்வளவு குரூர புத்தியுடன் இந்த பிரின்சிபால் வைரமும் இந்த கல்லூரி நிர்வாகமும் நடக்கின்றனர், என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

இப்படி ஒரு மாணவன் மீது குற்றம் சுமத்தி பழிதீர்க்கும் இந்த நிர்வாகத்திடம் என்ன நியாயவுணர்வு இருக்க முடியும்? 32 மாணவர்கள் என்பது அவர்களுக்கு அடிபணியாத தொந்தரவுக்குரிய வெறும் எண்ணிக்கையாக தெரிகிறது. சுயமரியாதையும், ஒழுக்கமும் கொண்டு விடாப்பிடியாக போராடும் இம்மாணவர்கள்தான் எதிர்கால இந்தியாவை தூக்கி சுமப்பார்கள் என்ற அருமை இந்த கற்பூர வாசனை இல்லாத கனவான்களுக்கு எப்படி புரியும்?

இது டிப்ளமோ கல்லூரி. 95 விழுக்காடு மிக அடித்தட்டு மக்களின் பிள்ளைகளே வருகிறார்கள். 10-ம் வகுப்புக்கு பின்னர் அவர்கள் காணும் அதிகபட்ச படிப்பு பெரும்பாலும் இங்கேயே முடிந்து விடுகிறது. இங்கு ஒரு வருடம் தேர்வெழுத தடை (de-barred) என்று வந்தால், பெரும்பான்மையான மாணவர்கள் குடும்ப சூழ்நிலை இன்ன பிற கடன் நெருக்கடிகள் காரணமாக மீண்டும் படிப்பை தொடர்வதே இல்லை. அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். ஒரு வருட இடைவெளியில் அவர்கள் வேலைகளுக்குச் சென்றால், சீரழிவுகள் அவர்களை எண்ணிலடங்கா வழிகளில் சுற்றி நின்று சுண்டி இழுக்கிறது. இது போக கல்லூரியில் இப்படியான நெருக்கடி என்றால், அந்த எளிய மனது “இது போதும் படிச்சது”, என்றே முடிவெடுக்கும்.

இப்படி மாணவர்களின் வாழ்வை, எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வேலையை செய்கிறோம் என்பதை உணராத கரிக்கட்டையாக இருப்பது அந்த கல்லூரியின் பிரின்சிபால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நிர்வாகத்தின் பிரச்சனையும்தான்.

“மரங்கள் ஓய்வைத் தேடினாலும் காற்று விடுவதில்லை.,
கல்லூரி நிலை அப்படியிருப்பினும் களம் கண்டவர்கள் ஓய்வதில்லை…!“

இவர்கள் இப்படி இல்லாவிடில் தான் ஆச்சரியம். இதை முறியடிக்க அங்கு மாணவர் போராட்டத்துக்குக்கான தயாரிப்புகள் முன்னிலும் வேகமாக நடைபெறுகிறது.

தீவிரவாதி பீதியூட்டி பெற்றோரை அச்சுறுத்தி தொடர்ந்து மாணவர்களை அடிமையாக நடத்தலாம் என்று நிர்வாகமும், பிரின்ஸ்பாலும் மனப்பால் குடித்தால் பேதி உறுதி. இது மாணவர் சக்தி. புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படும் போராட்ட சக்தி. திருந்துங்கள்; இல்லையேல் திருத்தப்படுவீர்கள்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

கோவை
தொடர்புக்கு : பாபு | 8220840468

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க