Sunday, September 19, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாற்றம்

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாற்றம்

-

கோவை அவிநாசி ரோட்டில் சிட்ராவில் இருக்கிறது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி.

govt-polytechnic-kovai“அரசுக் கல்லூரி” என்றவுடன் நம் மனதில் தோன்றும் சித்திரத்திற்கு எந்த வித ஏமாற்றமும் தராமல் இருக்கும் கல்லூரி.

சாலையை பார்த்தவாறு நீளும் அதன் சுவர்களில் புரட்சித் தலைவியின் பெயரும் இன்ன பிற ஆதிக்க சாதி சாக்கடைகளின் பெயர்களும் நெடு நாட்களாக குடி கொண்டிருக்கின்றன.

பல ஆண்டுகளாக மாறிய பல வகையான பருவ நிலைகளுக்கு சாட்சியாக அதன் முகப்பு பலகை உருக்குலைந்து கிடக்கிறது.

“ஆடிட்டோரியம்” எனும் பெயரில் மைதானத்தை பார்த்தவாறு பரிதாபமாக நின்றிருக்கும் மொட்டைச் சுவரும், “பிராக்டிகல் லேப்” எனும் பெயரில் நிலை கொண்டிருக்கும் காய்லாங் கடையும் மேற்கொண்டு விளக்கத் தேவையின்றி அந்த கல்லூரியின் தரத்தையும் எதார்த்தத்தையும் நமக்கு உணர்த்துபவை.

இப்படி ஒரு அசமந்தம் போல இயங்கிக் கொண்டிருந்த அந்தக் கல்லூரிக்கு மின் அதிர்ச்சி (கரண்ட் ஷாக்) அடித்தது போல நடந்தது ஒரு நிகழ்வு. நிர்வாகத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டமே அது.

சும்மா பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கும் அமைப்புகளது போல அல்லாமல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் செலுத்தப்பட்ட போராட்டமானது உயர் அழுத்தத்திலானதுதான் என்பதை நிர்வாகத்திற்கும் பொதுவாகவே நிர்வாகங்களின் அன்புத் துணைவர்களான காவல் துறைக்கும் இன்ன பிற “மஃப்டி”களுக்கு உணர்த்தியது.

பட்டயப் (டிப்ளமோ) படிப்பு என்பது பார்க்க கல்லூரி போல இருந்தாலும் பள்ளியில் பதினொன்றாவது படிப்பவர்களின் வயதையொத்தவர்களே அறுதிப் பெரும்பான்மை. இதில், பள்ளிப் பருவம் முடியும் முன்னரே கல்லூரிக்கும் அதன் சூழலுக்கும் வந்தவர்கள் இன்னும் சிந்தனா ரீதியில் எளியவர்களாகவே இருப்பர். இங்குள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் அவர்களிடம் பக்குவமாக நடந்து சமூக எதார்த்தத்தோடு கற்றுக் கொடுப்பது  இருக்கட்டும், குறைந்த பட்சமாக மாணவர்களாக நடத்துவதே பெரிய விசயமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது அநாவசியமான “ஆப்சென்ட்”. இங்கு வருகை பதிவு குறைந்தால் மாணவர்கள் தேர்வெழுத முடியாது. ஒரு வருடம் வீணாகும். ஆனால் இங்குள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு அந்த பொறுப்புணர்வு சற்றும் அன்றி 5 நிமிடம் லேட்டாக வந்தால் “ஆப்சென்ட்”, நோட் கொண்டுவர வில்லையென்றால் “ஆப்சென்ட்”, வகுப்பில் பேசினால் “ஆப்சென்ட்”, ஆசிரியரிடம் பாடத்தில் சந்தேகம் கேட்டால் கூட கவனிக்காமல் என்ன செய்கிறாய் என “ஆப்சென்ட்”. இப்படி இவர்களின் செயல்களால் வருகைப் பதிவு குறைந்து கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 30 மாணவர்கள் தேர்வெழுத தடை (debarred) செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கல்லூரியில் வகுப்பு அட்டவணை (டைம் டேபிள்) என்பதே கிடையாது. எந்த ஆசிரியரும் தனக்கு பிடித்த வகுப்பறைக்கு எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். எந்த மாணவனுக்கு வேண்டுமானாலும் “ஆப்சென்ட்” போடலாம்.

இதனால் மாணவர்கள் ஒரு சிலர் லீவு போட்டால் பெற்றோரை அழைத்து வரச் சொல்வது., அழைத்து வந்து வகுப்பறையின் முன் காத்திருந்தால் கண்டு கொள்ளாமல் செல்வது, திமிராக பதில் அளிப்பது என ஆணவத்துடன் நடந்துள்ளனர். எந்நேரமும் ஒரு திகிலிலேயே வகுப்பில் அமர வேண்டிய சூழல்.

கல்லூரிக்குள் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. தண்ணீர் குடிக்க குழாய், சுகாதாரமான கழிவறை, நூலக வசதி என எதுவுமே இல்லை. பிரின்சிபாலின் கார் ஓட்டுநர் கல்லூரி நூலகத்தை நிர்வாகிக்கிறார் எனில் இதை எங்கு சொல்லி அழ? மாணவர்களுக்கு உருப்படியாய் சொல்லிக் கொள்ள ஒரு கலை விழாவோ, நிகழ்வோ இல்லை. “உடற்கல்வி” என்றால் என்னவென்று கேட்கும் நிலைதான் உள்ளது. பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் பேரார்வத்துடன் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இங்கு ஏக்கத்துடன் மைதானத்தை பார்த்தாவறே கடக்கிறார்கள்.

இதே கோவையில் பொள்ளாச்சியில் ராணுவத்தை எதிர்கொண்டு ஏறி மிதித்து இன்னுயிர் ஈந்த மாணவ வர்க்கம் இங்கு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இருப்பது பெரும் துயரம்.

இப்படியான சூழலில் தான் கல்லூரியில் படிக்கும் நமது பு.மா.இ.மு தோழர் ஒருவரின் தகவல் மூலம் மாணவர்களை சந்திக்கலாம் என கடந்த 04.03.2015 புதனன்று  கல்லூரி சென்று காத்திருந்தோம். அப்போது வெளியே வந்த ஒரு மாணவர் குழாமை விசாரித்த போதுதான் தெரிந்தது, அவர்கள் 11 பேர் “ஆப்சென்ட்” போடப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களாம்.

பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு
பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு

இவர்களிடமும், அப்போது அங்கு வந்த மற்ற மாணவர்களையும் சேர்த்து திரட்டி பேச ஆரம்பித்தோம். அருகே இருக்கும் சிறிய சுவரில் ஏறி நின்று பு.மா.இ.மு தோழர் பாபு பேசத் துவங்கினார்.

தோழர் பாபுவின் எழுச்சியுரை மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கையிலேயே அதற்கு வலு சேர்க்கும் விதமாக இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.

கல்லூரிக்குள் இருந்து இரண்டு ஆசிரியர்கள் வெளியே வந்து கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதை எதிர்த்த தோழர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட, இரண்டு ஆசிரியர்களும்  கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவதேன்றே தெரியாமல் பரிதாபமாக நின்றது கண்டு மாணவர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர்.

அந்த நிகழ்வு பெருவாரியான மாணவர்களுக்கு உற்சாகமூட்டியது. வெள்ளியன்று பிரின்சிபாலை சந்தித்து பேசலாம் என மாணவர்களும், தோழர்களும் முடிவு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மறுநாள் எப்படியும் முந்தைய நாள் மாலை நடந்த நிகழ்வுகளுக்கு மாணவர்களை மிரட்டுவார்கள் என நினைத்தது போலவே காலையில் மீண்டும் மாணவர்களிடமிருந்து, “பிரின்சிபாலை பார்க்கச் செல்கிறோம் நீங்களும் வாங்க” என நமக்கு அழைப்பு வந்தது.

வியாழனன்று காலை 11 மணியளவில் கல்லூரிக்குள் நுழைகையில் அங்கு வந்த வாட்ச் மேன்,

“யார் நீங்க..? எதற்காக வந்துருக்கீங்க…” என அதிர்ச்சி காட்டினார்.

“நாங்கள் பு.மா.இ.மு. மாணவர் பிரச்சினை சம்பந்தமாக பிரின்சிபாலை பார்க்க வந்திருக்கோம்” என கூறினோம்.

பு.மா.இ.மு
“நாங்கள் பு.மா.இ.மு. மாணவர் பிரச்சினை சம்பந்தமாக பிரின்சிபாலை பார்க்க வந்திருக்கோம்”

“அதெல்லாம் அனுமதியில்லாமல் பார்க்க முடியாது” என தடுக்க முயன்றதோடு, அக்கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் நம்முடன் நிற்பதைப் பார்த்து,

“ஏய், நீ காலேஜ் போகாம கண்டவங்க கூட சுத்திக்கிட்டு இருக்கியா” என அதட்டியவாறே ஐ‌டி கார்டை பிடுங்கிக் கொண்டார். இதை நமது தோழர்கள் கேட்கப் போய் வாக்குவாதம் முற்றிவிட்டது.

“தம்பி, நீங்க பிரின்சிபால் கிட்ட பேசிக்கங்க” எனக் கூறியவாறு ஓட்டமும் நடையுமாக தனது விசுவாசத்தை காட்ட விரைந்தார். பிரின்சிபால் அறைக்கு சென்றோம். அங்கு வேறு ஒரு காட்சி. புகார் கொடுக்கச் சென்ற 20 மாணவர்களை ஆசிரியர்களும் பிரின்சிபாலும் சுற்றி வளைத்து தத்தமது வாதத் திறமையை காண்பித்துக் கொண்டிருந்தனர்.

நம்மைப் பார்த்தவுடன் பிரின்சிபால் தனது இயலாமையின் வெளிப்பாடை சத்தமாக வெளிக் காட்டினார். “நீங்க, யாரு எல்லாம் மொதல்ல வெளிய போங்க….!” என ஹை பிட்சில் அவர் , அதற்கு ஈடு கொடுத்து நம்மை அறிமுகப்படுத்துவதற்குள் தொண்டை தண்ணீர் தீர்ந்து போனது. “நீங்க யாரா இருந்தாலும் உங்க கூட பேச நான் தயாராக இல்லை“ எனக் கூறியவாறே., தனது ரூமுக்குள் புகுந்து கதவை சார்த்திக் கொண்டார்.

பு.மா.இ.மு
“ஐயா வர வரைக்கும் பொறுமையாக இருங்க. வந்ததும் பேசிக்கலாம்”

அதற்குள் அனைத்து ஆசிரியர்களும் நம்மை சுற்றி வளைத்து, “எங்க காலேஜ் பிரச்சினையை நாங்க பாத்துக்கறோம் நீங்க முதல்ல கிளம்புங்க” என வலுக்கட்டாயமாக நம்மை துரத்த முயன்றனர். தோழர்களும் வலுவான வாக்கு வாதத்தில் இறங்க., உடனே நிர்வாகங்களின் மனதுக்கு நெருக்கமான நாட்டாமையான காவல் துறைக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்குள் அங்கிருந்து மாணவர்களை கீழே அழைத்து வந்து அமர்த்தியிருந்தோம். காவல் துறையும் ஒரு டஜன் போலீசை கூட்டிக் கொண்டு வேனுடன் உள்ளே வந்து மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அதில் ஒரு சிலர் வந்து நம்முடன் பேச்சு வார்த்தை எனும் பெயரில் குழப்படிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தனர். பின் அவர்களும் சலித்து போய் , “ஐயா வர வரைக்கும் பொறுமையாக இருங்க. வந்ததும் பேசிக்கலாம்” எனஒரு இண்டர்வெல் விட்டனர்.

kovai-rsyf-govt-college-7இன்னும் பல துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் வந்து கீழே அமர்ந்திருக்கும் மாணவர்களிடம் தேன் தடவிய சொற்களால் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தனர். மாணவர்கள் இவர்களை கவனியாமல் அமர்ந்திருப்பினும் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போன்ற அவர்களது ஸ்டாண்ட் – அப் காமெடி மிகவும் சுவாரசியமாக இருந்தது.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போன்ற அவர்களது ஸ்டாண்ட் – அப் காமெடி

“என்னை கேட்டிருக்கலாம்லா டா…? நான் உங்களுக்காக பேசியிருக்க மாட்டேனா…? எதுக்கு யார் யாரையோ கூட்டி வந்திருக்கீங்க…?” என அவர்களது ஒவ்வொரு வசனமும் தனித்துவம் வாய்ந்தவை.

இப்படியே நேரம் கழிய, நாம் பிரின்சிபாலை பார்த்தே ஆக வேண்டும் என உறுதியாக நிற்க, இவ்வளவு நேரம் சமாதானப்படுத்திய ஆசிரியர்கள் “இப்போது அவர் மீட்டிங் போய்ட்டார்” எனக் கூறினர்.

“ஏங்க, இவ்ளோ நேரம் நாங்க இங்கதானே இருக்கோம் எங்களுக்கு தெரியாம அவர் எப்படி போயிருக்க முடியும். ஒரு வேளை பிரின்சிபால் ரூமுக்கும் காலேஜ் கேட்டுக்கும் சுரங்கப் பாதை எதுவும் போட்டுருக்கீங்களா…?” என மேலும் துருவிய போது தான் தெரிந்தது. பிரின்சிபால் பின் வாசல் வழியே தப்பித்திருந்தார் என்ற கதை.

“அவர் வர ஆறு மணியானாலும் சரி ஆறு நாளானாலும் சரி நாங்க இங்கதான் இருப்போம். அவர்கிட்டதான் பேசுவோம். என்ன பண்ணுவீங்களோ பண்ணிக்கங்க” என நாம் கூறிவிட்டோம்.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
எஸ்‌.ஐ ஒருவரும் மஃப்டி போலீஸ் ஒருவரும் வந்து அவர்கள் பங்குக்கு சிறிது நேரம் பேச்சு பயிற்சி.

பின்னர், “இது சரிப்பட்டு வராது ஐயாவ (அதிகாரியாமா..!) கூப்பிடுங்க,” என ஒரு காவலர் சொல்ல எஸ்‌.ஐ ஒருவரும் மஃப்டி போலீஸ் ஒருவரும் வந்து அவர்கள் பங்குக்கு சிறிது நேரம் பேச்சு பயிற்சி எடுத்து பார்த்துவிட்டு சரி இது வேலைக்காகாது என பின் வாங்கி விட்டனர். இதில் யாருடன் தொலைபேசி தொடர்பில் பிரின்சிபால் இருந்தார் எனத் தெரியவில்லை. மூணு மணி வாக்கில் அவர்கள் பின் வாங்கியவுடன் மீட்டிங் போன பிரின்சிபால் வந்தார்.

அவர் தான் அதுவரை நடந்த விவரங்களை துல்லியமாக விரல் நுனியில் வைத்திருக்கிறாரே. அதனால் நேரடியாக விசயத்துக்கு வந்தார். நமது கோரிக்கைகளை எழுதி வாங்கிக் கொண்டு அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பதாக கூறினார். அத்துடன் உள்ளிருப்பு போராட்டம் முடிவடைந்தது.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பதாக கூறினார். அத்துடன் உள்ளிருப்பு போராட்டம் முடிவடைந்தது.

கோரிக்கைகளில் ஒன்று, மாணவர்களை தரக்குறைவாக நடத்திய ஆசிரியைகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது. அதை கேட்டவுடன் ஒரு ஆசிரியர்,

என்னது, “குரு மாணவன்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா…?” என ஏதோ கேட்கக் கூடாதததை கேட்பது போல சகலமும் பதறி அதிர்ச்சியடைந்தார்.

டெல்லி பாலியல் வன்முறை வழக்கில் தண்டனை பெற்ற முகேஷ் சிங், அந்த நிகழ்வை பற்றிய ஆவணப்படத்தில் கருத்து கூறுகையில், “ஒழுக்கமான பெண்களுக்கு 9 மணிக்கு மேல ரோட்டுல என்ன வேல…? பெண்களும் ஆண்களும் எப்போதும் ஒன்றல்ல. அவர்களது வேலை வீட்டில் இருப்பதும் அங்கு வேலை செய்வதுமே.” எனக் கூறியுள்ளார். இத்துணை மக்கள் போராட்டத்திற்கு பிறகும் தூக்குத் தண்டனை உறுதியான பின்பும் சிறிதும் குற்றவுணர்ச்சியின்றி அவர் கூறும் கருத்தை செலுத்தும் சிந்தனை எது…? அது இந்த சமூகத்தில் ஊறி உறைந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனை.

அது போல, குரு-மாணவன் என ஆசிரியர் என்றாலே அடிப்பவரும் அதட்டல் பேச்சை கொண்டவருமாகவே இந்த சமூகம் கருதுகிறது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஜனநாயகத் தன்மை கொண்ட நட்புணர்வின் அடிப்படையில் இருப்பது என்பதை இவர்கள் ஏற்பதில்லை. இப்படி ஆண்டான் அடிமை கருத்து கொண்ட போன்ற பிற்போக்குவாதிகளே பல கல்லூரிகளில் பணியாற்றுகிறார்கள் என்பது வேதனையான உண்மை.

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
குரு-மாணவன் என ஆசிரியர் என்றாலே அடிப்பவரும் அதட்டல் பேச்சை கொண்டவருமாகவே கற்பனை.

போராட்டம் நிறைவடைந்த பின், மாணவர்கள் நம்மை தாயின் மடி அறிந்த கன்றுகள் போல சூழ்ந்து அரவணைத்து அழைத்துச் சென்று அந்தக் கல்லூரியில் இருக்கும் ஒரே ஒரு பாடாவதி கேண்டீனில் அமர்த்தினர். முதன்முறையாக அராஜகம் செய்து வந்த நிர்வாகத்தையும், அடிமைத்தனத்தை செலுத்தி வந்த ஆசிரியர்களையும் வென்று காட்டிய ஜனநாயகப் பூவின் நறுமணத்தில் மாணவர்கள் திளைத்திருந்தார்கள். அடிமைகளாக இருந்த மாணவர்கள் சுயமரியாதையைக் கற்றுக் கொண்டு போராடிய முதல் தினம் இது.

வாசல் திறந்து விட்டது. இனி தமது உரிமைகளுக்காக போராடும் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களும், நிர்வாகமும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

 1. அரசு நடத்தும் கல்லூரியின் லட்சணம் இது தான். தனியார் கல்லூரிகளே தேவலை என சிவப்புக் கொடி வினவுப் பதிவர் சொல்கிறாரா?

  • விஞ்ஞானி,

   இதுதான் இந்தியாவின் லட்சணம் என்பதுதான் சிவப்புக் கொடி வினவுப் பதிவர் சொல்வது. இது விஞ்ஞானிக்குப் புரியாததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

   ஆமாம், குளத்தில் கல்விட்டெறிய மட்டும் தான் தெரியுமா. விவாதத்திற்கெல்லாம் வரமாட்டீர்களா.

   அப்புறம், தனியார்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளை நடத்துவது குறைவு. அதற்கு பதிலாக கிட்டத்தட்ட அதே முதலை வைத்தே ‘எஞ்சினியரிங்’ கல்லூரிகளையே நடத்துவது லாபகரமானதாகவும் கௌரவமானதும் இருக்கிறது.

  • தனியார்மயத்தை கொள்கையாக வரிந்துக் கட்டிக் கொண்டு இருக்கும் ஒரு அரசில் அதன் கட்டுமானங்கள் இப்படி தான் இருக்கும் என்பதே இதன் சாரம்.

    • அர்ஜுன்,

     எல்லா ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு வருகிறார்களா. எல்லோருக்கும் சில காரணங்களால் காலதாமதம் ஏற்படுவது இயல்புதான். ஆசிரியர்களின் தாமதத்திற்கு ஏதேனும் கட்டுப்பாடு உண்டா என்றால் இல்லவே இல்லை என்று தான் சொல்லமுடியும்.

     ஆசிரியர் சரியான நேரத்திற்கு வந்து பாடம் எடுத்தால் சில மாணவர்கள் சிறிது காலதாமதமாக வந்தாலும் மற்ற மாணவர்களின் பாடம் பாதிப்பதில்லை. ஆனால் ஆசிரியர்களே தாமதமாக வரும்போது எல்லோருடைய பாடமும் நேரமும் வீணாகிறது. ஆசிரியர்கள் எடுத்துக்காட்டாக விளங்கட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க