முகப்புஉலகம்ஈழம்ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

-

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அரசியல், கல்வி, பொருளாதாரம், ராணுவம் என்ற வடிவங்களில்தான் காலங்காலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதார அடக்குமுறை பற்றி என் அனுபவங்கள் மூலம் ஓரளவு சொல்லியிருக்கிறேன். எல்லா அடக்குமுறைகளையும் விட ராணுவ அடக்குமுறை தான் எங்களை நேரடியாகவே பாதிக்கிற என்பதை விட பலி எடுக்கிற அடக்குமுறை வடிவம் என்று சொன்னால் அது மிகையில்லை. ராணுவம் என்பதற்கு ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்குமா?

அதாவது மக்களை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் ராணுவம், நாட்டிற்காக போரிடும் ராணுவம், அமைதிப்படை…. இப்படியாக. ஆனால், இலங்கையில் மட்டும் தமிழினத்தை அழிக்கவென்றே சிங்கள ராணுவத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள். இன்று இலங்கையில் நாட்டின் சனத்தொகைக்கும் ராணுவத்தின் விகிதத்திற்கும்  சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கன்வென்ஷனையும் மீறினாலும், அதையெல்லாம் தாண்டி சிங்கள ராணுவம் விமரிசனத்திற்கு கூட அப்பாற்பட்ட புனிதர்கள் என்கிறார் இலங்கை அதிபர். இலங்கை ஓர் ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்கிறார்கள்.

ஏன் இப்படியொரு ராணுவ கட்டமைப்பு? இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ராணுவ ஆட்சியா என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. இன்று மனித உரிமைகள், தாராண்மை ஜனநாயகம் என்று பேசப்படுகின்ற காலத்திலும் ராணுவ அடக்குமுறையால் வாழ்வுரிமை கூடப்பறிக்கப்படுகிற இனங்களில் ஈழத்தமிழினமும் ஒன்றாகிவிட்டது. ராணுவம், இதன் அர்த்தம் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் சரியாகப் புரியும் என்பது என் அனுபவங்களினூடாக நான் கண்டறிந்த உண்மை.

நான் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் கூட எனக்கு இலங்கை ராணுவம் பற்றிய பயம் என் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. இந்நாட்களில் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை யாராவது அணித்திருப்பவர்களை பார்த்தாலும் எனக்கு ஒரு கணம் என் மூச்சு நின்றுவிடும் போலிருக்கும். மறுகணம் நான் இலங்கையில் இல்லை என்பதையும், நான் பார்க்கும் அந்த உருவம் இலங்கை/இந்திய ராணுவம் இல்லை என்பதையும் எனக்கு நானே மனதிற்குள் சொல்லி தேற்றிக்கொள்வேன்.

ஈழத்தில் ராணுவத்தை நான் நேரில் சந்தித்த நேரங்களிலெல்லாம் என் இதயத்துடிப்பே எனக்கு இடி போல கேட்கும். அப்படியொரு பயம் எனக்கு ராணுவத்திடம். தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கையில் ராணுவம் பற்றிய என் நினைவுகள் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation) இற்கு முற்பட்ட காலங்கள் முதற்கொண்டு இந்திய அமைதி காக்கும் படை (மன்னிக்கவும் எங்கள் அமைதியை அழித்த ராணுவம்) வரை அப்பாவி தமிழர்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளை, செய்த அட்டூழியங்களை மீட்டிப்பார்க்கிறேன்.

ராணுவம் (இலங்கை, இந்திய ராணுவம்) பற்றிய பயத்தினை, கசப்பினை, வெறுப்பினை வெறும் வார்த்தைகளில் வடிக்க முடியுமா தெரியவில்லை. நான் என் வாழ்நாளில் மீட்டிப்பார்க்க விரும்பாத நாட்கள் அவை. மீட்டினாலும், விட்டாலும் அதன் வலி மட்டும் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் ஊரிக்காடு வல்வெட்டித்துறை முகாமிலிருந்து வந்துதான் எங்களுக்கு கஷ்டங்களையும் கொடுத்து, கூடவே எங்கள் அப்பாவி சகோதரர்களையும் கொலை செய்து காணாமற்போகச் செய்தும் கொண்டிருந்தார்கள். இந்த முகாம் பற்றி சொல்லவேண்டுமானால், இது ஆரம்பத்தில் காவல் நிலையமாக இருந்ததாகவும், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் அமுலாக்கப்பட்ட பின்னர் ராணுவமுகாமாக மாற்றப்பட்டதாகவும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ராணுவ முகாமாக மாற்றப்படக் காரணம் இம்முகாம் கடற்கரையை ஒட்டியதாகவும் ராணுவ தளவாட விநியோகங்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதுதான் என்றும் சொல்லப்படுகிறது.

இன்றுவரை இந்த ராணுவ முகாம் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு பாடசாலைகளையும், குடிமனைகளையும் தொழில்வாய்ப்புக்களையும் விழுங்கி ராணுவத்தால் நிரம்பி வழிந்து கொண்டுதானிருக்கிறது. இந்த ராணுவமுகாமில் இருந்து அடிக்கடி அன்றுமுதல் இன்றுவரை ராணுவம் ரோந்து போவது வழக்கம். அண்மையில் வன்னியில் இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த காலங்களில் நடந்த ஓர் சம்பவம். ஊரில் கோவில் திருவிழா என்றால் காலை, மாலை இருவேளைகளிலும் எல்லா வீடுகளிலும் வாசல் தெளித்து, கோலம் போடத்தெரிந்தவர்கள் கோலம் போடுவார்கள்.

என் உறவினர் ஒருவர் வீட்டில் அவர்களின் உறவுகள் வன்னியில் மாட்டிக்கொண்டதால் இவர்கள் திருவிழாக்கால சம்பிரதாயங்கள் எதையுமே செய்யவில்லை. ரோந்து போய்கொண்டிருந்த ராணுவம் இவர்களின் வீட்டில் புகுந்து நீங்கள் ஏன் எல்லோரையும் போல் வாசலை சுத்தம் செய்யவில்லை? உங்கள் உறவினர்கள் யாராவது வன்னியில் இருக்கிறார்களா என்று எகத்தாளமாக கேட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் வன்னியில் என்ன நடக்கிறது என்பது வடமராட்சித்தமிழனுக்கு தெரியாமலேயே ராணுவ அடக்குமுறை மூலம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் வழக்கமாக புலத்திலுள்ள தங்கள் உறவினர்கள் மூலமாகத்தான் வன்னியில் என்ன நடக்கிறது என்று தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ராணுவம் இப்படி கேட்ட நாள் முதல் இவர்கள் இரண்டு வேளையும் வாசல் தெளித்து விட்டு, வீட்டுக்குள் தங்கள் உறவுகளை எண்ணி துடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இது தான் யாழ்ப்பாணத்தில் என் உறவுகளின் இன்றைய அவல வாழ்வு. வெளியுலகுடன் சாதாரண மக்களுக்குள்ள ஊடகத்தொடர்புகள் ராணுவத்தால் திட்டமிடப்பட்ட முறையில் பறிக்கப்பட்டுள்ளன. அநேகமானோர் சொல்வது போல் யாழ்ப்பாணம் ஓர் திறந்த வெளி சிறைச்சாலையாக சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையில் திணறிக் கொண்டுதானிருக்கிறது.

நான் வடமராட்சியில் இருந்த காலங்களில் ராணுவம் முகாமிற்குள் முடக்கப்படுவதற்கு முற்பட்ட காலங்களில் ஊரடங்கு சட்டம் போட்டு ஊருக்குள் ராணுவத்தின் வெறியாட்டங்கள் கேள்விமுறையின்றி அரங்கேறியதும் உண்டு. அந்த பாதகங்கள் எதுவுமே வெளியுலகிற்கு தெரியாமலே போனதும் உண்டு. நான் சிறுமியாக இருந்த நாட்களில் என் அம்மாச்சி (பாட்டி)தான் சொல்வார் “இண்டைக்கு ஆமிக்காரன் சந்தியில நிண்ட பெடியளை பிடிச்சுக்கொண்டு போறாங்களாம்” என்று. ராணுவம் ட்ரக் வண்டிகளில் தான் வருவார்கள். அப்படி வரும்போது ரோட்டில் நிற்கும் இளைஞர்கள் சிலரை அள்ளி தங்கள் வண்டிகளில் போட்டுக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களில் சிலர் வீடு திரும்பியிருக்கிறார்கள். சிலர் இன்றுவரை காணாமற் போனவர்கள் தான்.

தமிழர்களை பிடித்துச் செல்லவோ அல்லது தடுத்து வைக்கவோ ராணுவத்திற்கு காரணம் ஏதும் தேவையில்லை. முன்பெல்லாம் பிரதான வீதியால் ரோந்து மட்டுமே சென்ற சிங்கள ராணுவம் பின்னாட்களில் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டது. ராணுவ சுற்றிவளைப்பு என்றாலே ஊர் அமைதியாகி விடும். ஓர் மயான அமைதிதான் இருக்கும். அவ்வப்போது ஊரில் காகத்தின் சத்தத்தோடு துப்பாக்கி வேட்டுச்சத்தமும் கேட்கும். என்/எங்களின் உயிர் எங்களுக்கு மிஞ்சுமா என்று விவரிக்க முடியாத பயத்தோடும் வேதனையோடும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்திருக்கிறேன்/கழித்திருக்கிறோம். அது மரண வேதனை. அதை சொல்லில் புரிய வைக்க முடியாது.

சிங்கள ராணுவம் திபுதிபுவென்று வீட்டிற்குள் நுழைவார்கள். நுழைந்த மாத்திரத்திலேயே “கொட்டியா (புலி) இரிக்கா?” என்பார்கள். வீட்டையே கிண்டி, கிளறி துவம்சம் பண்ணுவதோடு மட்டுமில்லாமல் சிலரது வீடுகளை அவர்களின் கண்முன்னாலேயே கொளுத்திவிட்டும் போயிருக்கிறார்கள். சிங்கள ராணுவத்துக்கு இப்படி செய்வதற்கு காரணங்கள் ஏதும் வேண்டியதில்லை. நாங்கள் தமிழர்களாக இருக்கும் ஒரு காரணம் போதாதா? எங்கள் வீட்டில் சிங்கள ராணுவம் நுழைந்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் இந்த நாசமாப்போனவங்களின் கேள்விக்கெல்லாம் என் பாட்டிதான் பதில் சொல்லியிருக்கிறார். ராணுவம் வீட்டிற்குள் நுழைந்து சோதனை போடும் சந்தர்ப்பங்களில் யாரையாவது தங்களோடு உள்ளே வரச்சொல்லுவார்கள். காரணம், உள்ளே சோதனை போடச்செல்லும் போது உள்ளேயிருந்து தங்களை யாராவது தாக்கிவிடுவார்கள் என்ற பயம் தான்.

அப்படியான சந்தர்ப்பங்களில் என் பாட்டி யாரையும் விடாமல் தானேதான் போவார். தான் வயதானவர்தானே, தன்னை ஆமிக்காரன் சுட்டாலும் பரவாயில்லை என்பார். தவிரவும் யாராவது பெண்கள் உள்ளே சென்றால் அவர்களை என்ன செய்வார்கள் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. என் பாட்டி சிங்கள ராணுவத்தை “ஐயா” என்று தான் விழிப்பார். எனக்கென்றால் கோபம் தலைக்கேறும். ராணுவம் போனபின் நான் என் பாட்டியோடு, அவர் ஏன் சிங்கள ராணுவத்தை ஐயா என்று அழைக்க வேண்டும் என்று மல்லுக்கு நின்றதும் உண்டு.

ராணுவ சுற்றிவளைப்பு என்றால் அந்த நாட்களில் நான் என் வீட்டிற்கு முன்னால் இருந்த என் சிறியதாயாரின் வீட்டில்தான் இருப்பது வழக்கம். ராணுவம் வீட்டுக்குள் நுழைகிறது என்றவுடனேயே என் பாட்டி என் சிறியதாயாரின் குழந்தைகளில் ஒருவரை என் கைகளுக்குள் திணிப்பார். குழந்தையை வைத்திருந்தால் ராணுவம் என்னை ஒன்றும் செய்யாது என்பது என் பாட்டியின் அப்பாவித்தனமான கண்டுபிடிப்பு. இப்படித்தான் ஒருமுறை என் சிறிய தாயாரின் மகனை நான் என் கைகளில் வைத்திருக்க அந்த குழந்தை பாட்டுக்கு சிங்கள சிப்பாய் ஒன்றுடன் தன் பாஷையில் ஏதோ பேசத்தொடங்கிவிட்டது. குழந்தை சிப்பாயுடன் பேச சிப்பாய் என்னைப்பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டிருந்தான். எனக்கு பயம் ஒருபுறமும் எரிச்சல் ஒருபுறமுமாய் ஏறக்குறைய அழுகையே வந்துவிட்டது.

இப்படித்தான் ஒவ்வொரு முறை ராணுவம் சுற்றிவளைக்கும் போதும் செத்து செத்து பிழைத்திருக்கிறேன். என் அம்மாச்சி அந்த நாட்களில் நான் வீட்டிலிருக்கும் சந்தர்ப்பங்களில் என்னை, தலைமுடியைப் பின்னல் போடாதே, குடும்பி வைத்துக்கொள், ராணுவத்தின் பார்வையில் உறுத்துகிற மாதிரி நில்லாதே என்றெல்லாம் எனக்கு அறிவுரை செய்து என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார். இப்போது என் நினைவுகளை மீட்டிப்பார்த்தால்…. இன்றும் எங்கள் பாட்டிகள், தாய்மார்கள் ஈழத்தில் தங்கள் பேத்திகளை, மகள்களை சிங்கள ராணுவம் என்ற வெறிநாய்களிடமிருந்து காப்பாற்ற எப்படி எல்லாமோ போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் இரண்டு அமெரிக்கப் பெண்மணிகள் ஈழத்தமிழ்ப் பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் ஏனோ இந்த சந்தர்ப்பத்தில் என் மனதில் வலியோடு இடறுகிறது. ஒருவர் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றியபோது சொன்னது, இலங்கையில் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறை சிங்கள ராணுவத்தால் ஓர் ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவர் மனித உரிமைகளுக்காக போராடுபவர், எலின் ஷாண்டர், சொன்னது இலங்கையில் வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கும், வன்முறைக்கும் ஆளாவது மட்டுமல்ல அவர்கள் நிர்வாணமாக அலையவிடப்பட்டிருக்கிறார்கள். எங்கள் சகோதரிகள் அம்மணக் கட்டைகளாக அலைந்தாலென்ன? இல்லை, அவர்கள் கரிக்கட்டைகளாய் எரிந்தால் தான் என்ன? நாங்கள் எங்கள் சுயநல சிந்தனையோடும், சுயமோகத்தோடும் சுரணையற்ற ஜென்மங்களாக உலாவருவோம்…… இதற்கெல்லாம் நாங்கள் வெட்கப்படுவோமா என்ன?
யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் முகாமிற்குள் அடைபடுவதற்கு முன்னைய நாட்களில் சுற்றிவளைப்பின் போது அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள் என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை, கொட்டியாவை (புலி) தேடுகிறோம் என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்வது, காணாமற்போகச்செய்வது, அங்கங்கே தமிழர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது, பெண்களை பலாத்காரம் செய்வது, கூட்டமாக வரிசையாக நிற்கவைத்து ஆண்களை சுட்டுக்கொல்வது இவையெல்லாம் தான்.

சுற்றிவளைப்பின் போது ஆண்களை வீடுவீடாக சென்று கைது செய்து மிருகங்கள் போல் கூட்டிச்சென்று தார் ரோட்டில் வெயிலில் உட்காரவைத்து, பிறகு அவர்களில் தரம்பிரித்து சிலரை வீட்டற்கு அனுப்பிவிட்டு மீதம் உள்ளவர்களில் சிலர் காணாமற்போயும், சிலர் படுகொலை செய்யப்பட்டும் பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அரசபயங்கரவாதம் உலகத்தின் கண்களுக்கு தெரியாமலேயே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. என் உறவினர் ஒருவர், எனக்கு சிறிய தகப்பனார் முறை, அவருடைய பதிவுப்பெயர் “பகவத் சிங்”. அவர் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள். இவர் இலங்கை ராணுவத்திடம் மாட்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் இவரின் பெயருக்காகவே தாக்கப்பட்டிருக்கிறார்.

அடையாள அட்டையில் இவரின் பெயரைப் பார்த்துவிட்டு ராணுவத்தால் பலமுறை தாக்கப்பட்டு முகம் உடம்பெல்லாம் வீங்கிப்போய் வீடு வந்திருக்கிறார். “என்ர பேரைப் பாத்தவுடனேயே என்னை அடிக்கத் தொடங்கி விடுறாங்கள்” என்று அவர் வேதனையோடு சொன்னதை என் காதுகளால் கேட்டிருக்கிறேன். பாடசாலை முடிகிற நேரங்களில் ராணுவம் ரோந்து போகிறதென்றால் எங்களை அழைத்துப்போக பாடசாலைக்கே வந்துவிட்டிருந்தவர். இறுதியில் ஓர் நாள் சிங்கள ராணுவத்தால் வரிசையாக நிற்கவைத்து சுட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் ராணுவத்தால் சுற்றிவளைப்பின் போது அழைத்துச்செல்லப்பட்டுவிட்டார் என்று தெரிந்தவுடனேயே அவருக்கு என்ன நேரப்போகுதோ என்று பயந்தபடியே இருந்தோம். ராணுவ சுற்றிவளைப்பு முடிந்து இருட்டிய நேரம்தான் சொன்னார்கள் வாசகசாலையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்று. அவர் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கலாம் என்று வீட்டிளுள்ளவர்களோடு நானும் தெருவில் ஓட எத்தனித்த போது யாரோ என்னை தடுத்தார்கள். அங்கே ஒரே ரத்த சகதியாய் கிடக்கு. பெண்கள் அதைப்பார்த்தால் தாங்கமாட்டார்கள் என்றார்கள். என் சித்தப்பாவின் உடல் வீட்டிற்கு இறுதிக்கிரியைக்காக கூட கொண்டுவரப்படவில்லை.

இவரின் மற்ற சகோதரர்கள், ஒருவர் கடற்படையாலும் இன்னொருவர் ராணுவத்தாலும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரரின் பெயர் சுகதேவ். இப்படி ராணுவம் வெறியாட்டம் போட்டுவிட்டு போன பின்பும் ஊர் முழுக்க ஒரே மரண ஒலமாகத்தானிருந்தது. பிள்ளைகளை, கணவன்மார்களை இழந்த தாய்களும், மனைவிமார்களும் சிங்கள ராணுவத்தை சாபம் போட்டு திட்டிக்கொண்டிருப்பார்கள். அழுது, அழுது ஓய்ந்து சக்தியற்றவர்களாக நடைப்பிணமாய் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இப்படித்தான் ராணுவ சுற்றிவளைப்பு நடக்கப்போகிறது என்றாலே எங்களை மரணபயம் ஆட்டிவைக்கும். அப்போதே எங்களுக்கு ராணுவத்தின் கொடுமைகள் தாங்க முடியவில்லை.

ஆனால் இப்போதோ எங்கள் உறவுகள் ராணுவத்தால் சூழப்பட்டு அடிமைகளை விட மோசமாய், மிருகங்களை விட கேவலமாய் நடத்தப்பட்டு தாங்கொணா வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விவரிக்க அகராதியில் சொற்களே இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

இப்படி சாட்சியே இன்றி ராணுவ அடக்குமுறைமூலம் அரசபயங்கரவாதம் எங்களை வதைத்துக் கொண்டிருந்தது. இப்போது இருப்பது போல் தொழில்நுட்ப வசதிகள் ஏதும் அந்த நாட்களில் இல்லாத காரணத்தாலோ என்னவோ எங்களுக்கு சிங்கள ராணுவத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போனது. இப்படிப்பட்ட ராணுவம் முகாமிற்குள் அடைக்கப்பட்டால் நாங்கள் சந்தோசப்படுவோமா, மாட்டோமா? இவ்வாறாக அடைபட்ட ராணுவம் வெளியேற எடுத்த முயற்சி தான் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation).

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -1

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! பாகம் –2

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! – பாகம் -3

பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !- பாகம் -4