privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தமிழ்நாட்டில் கரையேறினேன்... அகதியாய்...!

தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!

-

vote-012அகதி. இது வெறும் ஒற்றைச் சொல்லா அல்லது மனமும் சதையும் சேர்ந்த சொந்தமண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதர்களின் ஏதுமற்றவர்கள் அல்லது யாருமற்றவர்கள் என்கிற உணர்வா? அது உணர்வுகள் மட்டுமல்ல. இதையெல்லாம் தாண்டி எங்களின் அடையாளங்களை தொலைத்து புதிய தேசத்தில் புதிதாய் எதையெதையோ தேடி ஓடும் ஓர் வாழ்வியல் போராட்டம்.

அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அது முடியவும் முடியாது. அனுபவங்களை சொன்னால்  மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும். அகதி அனுபவத்தை சொல்ல  எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசித்தால் நான் எப்படி அகதி ஆக்கப்பட்டேன் என்ற கேள்விக்குள் மீண்டும் தள்ளப்படுகிறேன். ஏன் இப்படி என்று காரணகாரியங்களை எல்லாம் ஆராய்வதில்லை என் பதிவின் நோக்கம்.

ஆனால், என் பதிவை தொடர்ந்து படித்தவர்களுக்கு நானும் என் போன்றவர்களும் புலம் பெயர்ந்ததின் காரணம் புரியாமல் இருக்காது. போலி ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள், பேரினவாதம் தத்து எடுத்ததில் தறிகெட்டு போய் உயிர் கொல்லும் ராணுவம், சொந்த குடிகளையே ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளால் சீரழிந்த பொருளாதாரம், ஊழல், நிர்வாக சீர்கேடு, இயற்கை அனர்த்தம் என எனக்குத்தெரிந்து இவையெல்லாம்தான் அகதிகளை உருவாக்கும் காரணிகள்.

ஏதோவொரு காரணத்திற்காய் எத்தனையோ தேசங்களிலிருந்து அகதிகளாய் ஆக்கப்பட்ட மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் ஆங்காங்கே இறைந்து கிடந்தாலும், பேரினவாதம் என்ற சுனாமியில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகத்து வீதிகளிலெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற குப்பைகளில் நானும் ஒருத்தி.

ஈழத்தில் என் பாடசாலை நாட்களில் தமிழ் ஆசிரியர் ஒருமுறை சொன்னார் உங்கள் கற்பனையில் ஓர் சடப்பொருள் பேசினால் எப்படியிருக்கும் என்று ஓர் கட்டுரை எழுதுங்கள் என்று. நானும் ஓர் கடிதாசியின் வாழ்க்கை வரலாறு என்று கட்டுரை எழுதி என் ஆசிரியரின் “கெட்டிக்காரி” என்ற பாராட்டு வாங்கியது ஏனோ இப்போது நினைவில் வருகிறது. இதுவும் அகதி என்ற ஓர் ஜடத்தின் வரலாறு தான். ஆனால், இது பாராட்டுக்காய் எழுதப்படும் கதையோ கற்பனையோ அல்ல.

இன்னும் ஈழத்தமிழன் முட்கம்பிக்குப் பின்னாலும், கடல் நீரால் சூழப்பட்டும் அகதியாய் முடக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.  இந்த பதிவை எழுதும் பொது ஏனோ என்னால் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Oceanic Viking என்ற ஓர் உடையும் தருவாயிலுள்ள கப்பலில் ஈழத்தமிழர்கள் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

காடுகளில் மாதக்கணக்கில் ஒழிந்து கிடந்து, கடல் மேல் நூறு நாட்களையும் தாண்டி குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அங்கீகாரமேனும் கொடுத்து இலங்கைக்கு எங்களை திருப்பி அனுப்பாதீர்கள் என்று சர்வதேசத்திடம் கெஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் மனிதாபிமான கோரிக்கைகள் கூட அலட்சியத்தோடு புறந்தள்ளப்படுகிறது. சாவிலிருந்து மீண்டு வந்தவர்களை  மீண்டும் வாழ்வா, சாவா என்ற அவலத்திற்குள் தள்ளிவிட்டிருப்பதுதான் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து முடித்த இன்னோர் சாதனை.

இந்த கப்பலில் வந்தவர்களில் இருவர் உரிய மருத்துவ வசதி சரியான நேரத்தில் கிடைக்காததால் இறந்தார்கள் என்பது செய்தி. இறந்தவர்களில் ஒருவர் 29 வயது உடையவர். இரண்டுநாட்களாக இரத்தவாந்தி எடுத்தே உயிரை விட்டார். மீதமுள்ளவர்கள் கடல் என்ற தண்ணீர் தேசத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகள் ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறெந்த தவறையும் செய்யவில்லை.

அவர்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மீது “அகதி” என்றதொரு முத்திரையை குத்திவிடுங்கள் நாங்கள் உயிராவது  பிழைத்துக்கொள்கிறோம் என்பதுதான். சர்வதேசத்தின் திரைமறைவு நாடகங்களுக்கும், வாழ்வா சாவா போராட்டத்திற்கும் இடையே இப்படி அவலப்படுவர்களின் வாழ்வும் விடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீராம். உலகமயமாக்கலில் இந்த பூமி ஓர் “Global Village”. ஆமாம். ஆனால், ஈழத்தமிழன் மரண பூமியிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்க இடம் கேட்டால் சர்வதேசத்தின் சகல சட்ட விதிகளும் ஈவிரக்கமில்லாமல் அவன் மீது பாய்கின்றன. இந்த கூற்றுகளுக்கும், கூத்துகளுக்கும் நான் சிரிக்கவா, அழவா தெரியவில்லை? சரி விடுங்கள். ஈழத்திலிருந்து நான் கிளம்பிய கதையைச் சொல்கிறேன்.

போரின் வலிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்கவும், சுமக்கவும் முடியும்? நாங்களும் மனிதர்கள்தானே.எல்லோருக்கும்  அப்போதெல்லாம் குண்டுச்சத்தங்கள் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது. கூடவே, உணவு கூட பேரினவாதத்தின் போராயுதமாய் மாறிய பின் தப்பித்தல் என்பது ஒன்றும் தந்திரோபாயம் என்று தோன்றவில்லை. துன்பங்களிலிருந்து தப்பிக்க நினைப்பது மனித இயல்பு இல்லையா?

வீட்டில் எல்லோருக்கும் எப்படி தப்பிப்பது என்ற கேள்வி பூதாகரமாய் இருக்க எனக்கு மட்டும் “ஏன்” என்ற கேள்வி பதில் தெரிந்திருந்தும் மீண்டும், மீண்டும் என் சிந்தனைகளில் அறைந்து கொண்டே இருந்தது. சினத்தை கிளப்பியது. யாருடனும் பேசக்கூடப் பிடிக்கவில்லை. எல்லாக்காலங்களிலும், எல்லா விடயங்களிலும் என் வீடு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே என் முடிவல்ல. ஆனாலும், என் வீட்டை எதிர்த்துக்கொண்டு எதையும் செய்யத்துணியும் அளவிற்கு வயதோ அல்லது சமூக, பொருளாதார அங்கீகாரமோ இல்லாத சூழலில் எனக்கும் சேர்த்து என் உறவுகள் முடிவெடுக்க அதற்கு வேண்டா வெறுப்பாக கட்டுப்பட்டேன்.

நிச்சயமாக கொழும்பு சென்று அங்கிருந்து உயிர் தப்பி எங்காவது செல்வது என்பது அந்நாட்களில் குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமும் கூட. எங்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு தமிழ்நாடு தான். எப்படி போவது? வேறெப்படி, படகில் தான் (ஈழத்தில் வள்ளம் என்ற சொல் தான் வழக்கம்). படகு பயணம் ஒன்றும் ஆபத்து இல்லாதது அல்ல. எனக்கு மருந்துக்கும் நீச்சல் தெரியாது. படகு நடுக்கடலில் கவிழ்ந்தால் பரலோகம்தான்.

அப்போதெல்லாம், ஊரில் பேசிக்கொள்வார்கள், இன்னார் இந்தியாவுக்கு தப்பி போயிட்டினமாம் என்று. இன்னார் தமிழ்நாட்டுக்கு சென்று சேரவில்லையாம். ஆகவே, படகு நடுக்கடலில் கவிழ்திருக்க வேண்டும் அல்லது சிங்களப்படைகளிடம் மாட்டியிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர் யாராவது நீந்தி வந்தால்தான் உண்மை கரையேறும். உயிர் பிழைத்தால் தமிழ்நாடு இல்லையென்றால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து சுவாசப்பையின் காற்றை கடல் நீருக்கு கொடுத்து, காற்றுக்குப் பதில் கடல் நீரை சுவாசப்பை முழுக்க நிரப்பி மூச்சுக்காற்றுக்கு திணறி, மூச்சடைத்து கைகால்களை உதறி, உதறி செத்துப்போவோம். பிறகு, எங்கள்  உடல் மீனுக்கு இரையாகும். இதெல்லாம், தெரிந்தே சமுத்திரத்தை தாண்டிக் கடக்கும் முயற்சியில் இறங்கினோம். சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரமும் வாய்க்கால் என்பது இதைத்தானோ?

கடற்படையின் கண்களில் இருந்து தப்பிப்பது என்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதனால், படகில் ஏறி தப்பிக்க மாதக்கணக்கில் கரையோரத்தில் ஒவ்வொரு ஊராக அலைந்தோம். அப்படி அலைந்தபோதுதான் எங்கள் மீது வீசப்பட்ட ஓர் விமானக்குண்டில் என் மைத்துனரின் கால் பறிபோனது. குண்டு போட விமானம் செங்குத்தாய் விரைந்து வர எங்கள் மீது தான் குண்டு விழப்போகிறது என்று சுதாகரித்து ஓட, எங்களின் பிடரிக்குப் பின்னால் குண்டுகள் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. கொதிக்கும் இரும்புத்துண்டுகள் எங்களை சுற்றி நெருப்பு மழைபோல் சிதறிக்கொண்டிருந்தது.

அப்படி சிதறிய ஓர் துண்டுதான் எனக்கு முன்னால் தன் சின்னக்கால்களால் ஓடிக்கொண்டிருந்த என் மைத்துனரின் பின் முழங்காலுக்கு கீழே கிழித்து உள்ளே சென்றது. காலிலிருந்து இரத்தம் வழிகிறது என்று நான் நிலைமையை உணருமுன்பே அந்த குழந்தை கால்கள் குத்தி நிலத்தில் விழுந்தது. அருகிலுள்ள சீமெந்து கூரையுள்ள ஓர் மலசல கூடத்தின் உள்ளே காயம் பட்டவரை கிடத்தி கிடைத்த ஏதோ ஒரு அழுக்கு துணியால் காயத்தை இறுக்கி கட்டிவிட்டு, மீண்டும் அவரை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தோம்.

அதன் பிறகு இந்தியா, தமிழ்நாடு செல்லும் முயற்சியை கைவிட்டு செத்தாலும் ஈழத்திலேயே சாகலாம் என முடிவெடுத்து ஊரில் தங்கிவிட்டோம். ஆனால், நிலைமைகள் மிக மோசமான பின் இனிமேல் ஒன்று வாழவேண்டும் அல்லது செத்தே ஆக வேண்டும் என்பது விதியானது. எங்களுக்கு தெரிந்த ஒருவரின் படகில் பருத்தித்துறை முனை கடற்கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம். படகு கிளம்பிவிட்டது. படகு புறப்படத் தொடங்கியதிலிருந்து கடற்கரையும் அங்கேயிருந்த மீதமுள்ள என் இனம், சனம் எல்லோரையும் மிக விரைவில் திரும்பி வந்து பார்ப்பேன் என்று ஏதோ ஓர் நம்பிக்கையுடனும், அவர்கள் நிச்சயமாய் உயிரோடிருப்பார்கள் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

எனக்கும் என் மண்ணுக்கும் இடையேயுள்ள தூரம் என்னை பிரிக்க, என் உயிரும், மனமும் இன்னும், இன்னும் ஆழமாக அதை நேசிக்க, காதலிக்க தொடங்கியது. என் மண்ணோடு எனக்குள்ள பந்தம் எப்படி விடுபட்டுப்போகும்? நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் அலைமேல் படகில் கிடந்தது. என் மண்ணின் எல்லை தாண்டி, கடல் கடந்து  தமிழ்நாட்டு கடற்கரையில் கால்வைத்தவுடன் அந்த மண்ணோடு சேர்ந்து அகதி என்ற பெயர் என்மீது ஒட்டவில்லை. அது முத்திரையாய் குத்தப்பட்டது. இந்த அகதிகளை சிலர் தரம் தாழ்த்தி அற்ப சந்தோசப்பட நினைத்தால் “கள்ளத்தோணிகள்” என்றும் அழைப்பதுண்டு.

பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்கு வைத்த பெயர், “சிலோன் அகதிகள்”. நாங்கள் தமிழ்நாட்டில் கால் வைத்த போது ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல்தான் வரவேற்கப்பட்டோம். என் வாழ்நாளில் மறக்க முடியாதவைகளில் அதுவும் ஒன்றாய்ப்போனது. எங்களை விழிகள் விரியுமளவிற்கு பார்க்கும்படி வேடிக்கைப்பொருள் ஆனோம். எங்களின் பசி, தாகம் பற்றி அக்கறையாய் விசாரிக்கப்படாதது ஏனோ மனதை காயப்படுத்தியது.

அனிச்சை செயலாய் அப்போது தமிழ்நாட்டில் இருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் கண்களில் இடறினோம். “வள்ளம் வந்திருக்கு எண்டு சொன்னாங்கள். அதான் ஆராவது எங்கட ஊராக்கள் இருக்கினமோ எண்டு பாக்க வந்தனான்” என்றார். ஏதோ திக்கு தெரியாத காட்டில் திசைகாட்டி போல் இருந்தது அவரின் ஊர்ப்பாசம். படகில் வந்ததில் ஏறக்குறைய அவரவர் வாந்தியில் அவரவரே நனைந்து, ராட்சத அலைகளில் குளித்து, அதையே குடலை பிடுங்குமளவிற்கு விழுங்கி குற்றுயிராய் தமிழகத்தில் நாங்கள் கரை ஒதுங்கியத்தின் அவலத்தை அவரின் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருப்பார் போலும்.

அவர் முதலில் கேட்ட கேள்வி உண்மையிலேயே என்னை அந்த சந்தர்ப்பத்தில் கண் கலங்க வைத்தது. “களைச்சுப்போய் இருக்கிறியள். ஏதாவது சாப்பிட்டீங்களோ?”. ஓர் அகதியின் வலி இன்னோர் அகதிக்குத்தான் புரியுமோ? பசி வயிற்றை பிடுங்கினாலும், அதை வெளியே சொல்லமுடியாதவாறு தன்மான உணர்வு தடுக்க, இல்லை பசிக்கவில்லை என்று சொல்லிவைத்தோம். அவசரமாய், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னோம். தன் வீட்டுக்கு வாருங்கள் என்று எங்களை அனுமதி கேட்காமலேயே கூட்டிச்சென்றார்.

அவரது வீட்டைப் பார்த்தபோது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ஊரில் எவ்வளவு வசதியாய் வாழ்ந்த மனிதர் இப்போது எலிவளையில் ஒண்டிக் கொண்டிருந்தார். ஒருவாறு, சிரம பரிகாரம் செய்து, உடைமாற்றி மீண்டும் வந்த இடத்திற்கே போகிறோம் என்றவர்களை வற்புறுத்தி ஓர் ரெஸ்டாரண்டில் சாப்பிடவைத்து சந்தோசப்பட்டார். பிறகு, இனிமேல் எங்களுக்கு என்ன நடக்கும் என்பதை அவரின் அனுபவத்தை கொண்டு விளக்கினார்.

மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி, அதிகாரிகளின் வருகைக்காய் காத்திருந்தோம். நீண்ட நேரத்திற்குப்பின், அதிகாரிகள், காவல்துறை இன்னும் யார் யாரோ வந்தார்கள். அவர்களின் சம்பிரதாய அகதி விசாரணையை செய்து முடித்தார்கள். பிறகு, எங்களையும் எங்களோடு வந்த சிலரையும் ஓர் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு இரவிரவாய் எங்கெங்கோ அடித்துப் பெய்யும் மழையில் கொண்டு திரிந்தார்கள். இடையிடையே நிறுத்தி காவல் துறையினர் குளிரைப் போக்க தாங்கள் மட்டும் தேநீரும் குடித்து, சிகரெட்டும் பற்றவைத்துக் கொண்டார்கள். அவர்களும் மனிதர்கள் தானே என்று நினைத்துக்கொண்டேன்.

ஏறக்குறைய ஒரு நாள் முழுப் பொழுது தாண்டியபின்னும் கூட எங்கள் பசி, தாகம் பற்றி ஒற்றைவார்த்தையேனும் கேட்கப்படாதது நெஞ்சை அறுத்தது. ஆனால், ஒவ்வொரு முறை அவர்கள் இறங்கி ஏறும்போதும் எங்கள் தலைகளை பொறுப்புணர்வுடன் எண்ணி, எண்ணிப்பார்த்து தங்கள் கடமையுணர்வால் வேறு எங்களை கண் கலங்க வைத்தார்கள். ஒருவாறு, விடிந்தபின் ஓர் அகதிமுகாமில் வண்டி நின்றது. எனக்கு அதிகம் பிடிக்கும், நான் ரசிக்கும் சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடித்தது. நீண்டநாட்களுக்கு பிறகு அதை உயிர்ப்பயமின்றி, வெடிச்சத்தமின்றி நான் ரசித்த அந்த கணம் இன்றுவரை என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

வண்டியிலிருந்து இறங்கி நின்று என் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும் என்று வெடிமருந்தின் மணமில்லாத அந்த காற்றை சுகமாய் என் சுவாசப்பைகளில் நிரப்பிக்கொண்டேன். ஆனாலும், அடுத்த கணமே என் அவலநிலை என்னை யதார்த்த உலகிற்கு இழுத்து வந்தது. அந்த அற்ப கணநேர சந்தோசமும் எனக்குள் உறைந்து போனது. மறுபடியும் உணர்வுகள் மரத்துப்போக, பார்வையை சுழல விட்டபோது ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழுமாய் கண்களையும், காதுகளையும் வலியாகவும், மகிழ்ச்சியாகவும் இனம்புரியாத ஓர் உணர்வு தீண்டியது.

பொட்டல் வெளியில் என் பார்வை தீண்டிய தூரம் வரையில் நிறைய ஓலைக்குடிசைகள் (கிடுகுகளால் வேயப்பட்டது), அவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் நிறையவே மனித தலைகள். இனிமேல் இழப்பதற்கு ஏதுமில்லாத மனிதர்கள். அந்த ஒற்றை குடிசையை தவிர ஒதுங்க கூட இடமில்லாதவர்கள். சொந்தமண்ணில் எது, எதுக்கெல்லாமோ சொந்தக்காரர்கள், கெளரவ மனிதர்கள். தஞ்சமடைந்த பூமியில் ஏதுமற்ற ஏதிலிகள். இவர்களின் பெயர் அகதிகள். இவர்கள் ஒதுங்கிய இடத்தின் பெயர் தான் அகதி முகாம்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்