Wednesday, October 9, 2024
முகப்புஉலகம்ஈழம்தமிழ்நாட்டில் கரையேறினேன்... அகதியாய்...!

தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!

-

vote-012அகதி. இது வெறும் ஒற்றைச் சொல்லா அல்லது மனமும் சதையும் சேர்ந்த சொந்தமண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதர்களின் ஏதுமற்றவர்கள் அல்லது யாருமற்றவர்கள் என்கிற உணர்வா? அது உணர்வுகள் மட்டுமல்ல. இதையெல்லாம் தாண்டி எங்களின் அடையாளங்களை தொலைத்து புதிய தேசத்தில் புதிதாய் எதையெதையோ தேடி ஓடும் ஓர் வாழ்வியல் போராட்டம்.

அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அது முடியவும் முடியாது. அனுபவங்களை சொன்னால்  மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும். அகதி அனுபவத்தை சொல்ல  எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசித்தால் நான் எப்படி அகதி ஆக்கப்பட்டேன் என்ற கேள்விக்குள் மீண்டும் தள்ளப்படுகிறேன். ஏன் இப்படி என்று காரணகாரியங்களை எல்லாம் ஆராய்வதில்லை என் பதிவின் நோக்கம்.

ஆனால், என் பதிவை தொடர்ந்து படித்தவர்களுக்கு நானும் என் போன்றவர்களும் புலம் பெயர்ந்ததின் காரணம் புரியாமல் இருக்காது. போலி ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள், பேரினவாதம் தத்து எடுத்ததில் தறிகெட்டு போய் உயிர் கொல்லும் ராணுவம், சொந்த குடிகளையே ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளால் சீரழிந்த பொருளாதாரம், ஊழல், நிர்வாக சீர்கேடு, இயற்கை அனர்த்தம் என எனக்குத்தெரிந்து இவையெல்லாம்தான் அகதிகளை உருவாக்கும் காரணிகள்.

ஏதோவொரு காரணத்திற்காய் எத்தனையோ தேசங்களிலிருந்து அகதிகளாய் ஆக்கப்பட்ட மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் ஆங்காங்கே இறைந்து கிடந்தாலும், பேரினவாதம் என்ற சுனாமியில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகத்து வீதிகளிலெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற குப்பைகளில் நானும் ஒருத்தி.

ஈழத்தில் என் பாடசாலை நாட்களில் தமிழ் ஆசிரியர் ஒருமுறை சொன்னார் உங்கள் கற்பனையில் ஓர் சடப்பொருள் பேசினால் எப்படியிருக்கும் என்று ஓர் கட்டுரை எழுதுங்கள் என்று. நானும் ஓர் கடிதாசியின் வாழ்க்கை வரலாறு என்று கட்டுரை எழுதி என் ஆசிரியரின் “கெட்டிக்காரி” என்ற பாராட்டு வாங்கியது ஏனோ இப்போது நினைவில் வருகிறது. இதுவும் அகதி என்ற ஓர் ஜடத்தின் வரலாறு தான். ஆனால், இது பாராட்டுக்காய் எழுதப்படும் கதையோ கற்பனையோ அல்ல.

இன்னும் ஈழத்தமிழன் முட்கம்பிக்குப் பின்னாலும், கடல் நீரால் சூழப்பட்டும் அகதியாய் முடக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.  இந்த பதிவை எழுதும் பொது ஏனோ என்னால் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Oceanic Viking என்ற ஓர் உடையும் தருவாயிலுள்ள கப்பலில் ஈழத்தமிழர்கள் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

காடுகளில் மாதக்கணக்கில் ஒழிந்து கிடந்து, கடல் மேல் நூறு நாட்களையும் தாண்டி குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அங்கீகாரமேனும் கொடுத்து இலங்கைக்கு எங்களை திருப்பி அனுப்பாதீர்கள் என்று சர்வதேசத்திடம் கெஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் மனிதாபிமான கோரிக்கைகள் கூட அலட்சியத்தோடு புறந்தள்ளப்படுகிறது. சாவிலிருந்து மீண்டு வந்தவர்களை  மீண்டும் வாழ்வா, சாவா என்ற அவலத்திற்குள் தள்ளிவிட்டிருப்பதுதான் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து முடித்த இன்னோர் சாதனை.

இந்த கப்பலில் வந்தவர்களில் இருவர் உரிய மருத்துவ வசதி சரியான நேரத்தில் கிடைக்காததால் இறந்தார்கள் என்பது செய்தி. இறந்தவர்களில் ஒருவர் 29 வயது உடையவர். இரண்டுநாட்களாக இரத்தவாந்தி எடுத்தே உயிரை விட்டார். மீதமுள்ளவர்கள் கடல் என்ற தண்ணீர் தேசத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகள் ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறெந்த தவறையும் செய்யவில்லை.

அவர்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மீது “அகதி” என்றதொரு முத்திரையை குத்திவிடுங்கள் நாங்கள் உயிராவது  பிழைத்துக்கொள்கிறோம் என்பதுதான். சர்வதேசத்தின் திரைமறைவு நாடகங்களுக்கும், வாழ்வா சாவா போராட்டத்திற்கும் இடையே இப்படி அவலப்படுவர்களின் வாழ்வும் விடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீராம். உலகமயமாக்கலில் இந்த பூமி ஓர் “Global Village”. ஆமாம். ஆனால், ஈழத்தமிழன் மரண பூமியிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்க இடம் கேட்டால் சர்வதேசத்தின் சகல சட்ட விதிகளும் ஈவிரக்கமில்லாமல் அவன் மீது பாய்கின்றன. இந்த கூற்றுகளுக்கும், கூத்துகளுக்கும் நான் சிரிக்கவா, அழவா தெரியவில்லை? சரி விடுங்கள். ஈழத்திலிருந்து நான் கிளம்பிய கதையைச் சொல்கிறேன்.

போரின் வலிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்கவும், சுமக்கவும் முடியும்? நாங்களும் மனிதர்கள்தானே.எல்லோருக்கும்  அப்போதெல்லாம் குண்டுச்சத்தங்கள் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது. கூடவே, உணவு கூட பேரினவாதத்தின் போராயுதமாய் மாறிய பின் தப்பித்தல் என்பது ஒன்றும் தந்திரோபாயம் என்று தோன்றவில்லை. துன்பங்களிலிருந்து தப்பிக்க நினைப்பது மனித இயல்பு இல்லையா?

வீட்டில் எல்லோருக்கும் எப்படி தப்பிப்பது என்ற கேள்வி பூதாகரமாய் இருக்க எனக்கு மட்டும் “ஏன்” என்ற கேள்வி பதில் தெரிந்திருந்தும் மீண்டும், மீண்டும் என் சிந்தனைகளில் அறைந்து கொண்டே இருந்தது. சினத்தை கிளப்பியது. யாருடனும் பேசக்கூடப் பிடிக்கவில்லை. எல்லாக்காலங்களிலும், எல்லா விடயங்களிலும் என் வீடு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே என் முடிவல்ல. ஆனாலும், என் வீட்டை எதிர்த்துக்கொண்டு எதையும் செய்யத்துணியும் அளவிற்கு வயதோ அல்லது சமூக, பொருளாதார அங்கீகாரமோ இல்லாத சூழலில் எனக்கும் சேர்த்து என் உறவுகள் முடிவெடுக்க அதற்கு வேண்டா வெறுப்பாக கட்டுப்பட்டேன்.

நிச்சயமாக கொழும்பு சென்று அங்கிருந்து உயிர் தப்பி எங்காவது செல்வது என்பது அந்நாட்களில் குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமும் கூட. எங்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு தமிழ்நாடு தான். எப்படி போவது? வேறெப்படி, படகில் தான் (ஈழத்தில் வள்ளம் என்ற சொல் தான் வழக்கம்). படகு பயணம் ஒன்றும் ஆபத்து இல்லாதது அல்ல. எனக்கு மருந்துக்கும் நீச்சல் தெரியாது. படகு நடுக்கடலில் கவிழ்ந்தால் பரலோகம்தான்.

அப்போதெல்லாம், ஊரில் பேசிக்கொள்வார்கள், இன்னார் இந்தியாவுக்கு தப்பி போயிட்டினமாம் என்று. இன்னார் தமிழ்நாட்டுக்கு சென்று சேரவில்லையாம். ஆகவே, படகு நடுக்கடலில் கவிழ்திருக்க வேண்டும் அல்லது சிங்களப்படைகளிடம் மாட்டியிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர் யாராவது நீந்தி வந்தால்தான் உண்மை கரையேறும். உயிர் பிழைத்தால் தமிழ்நாடு இல்லையென்றால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து சுவாசப்பையின் காற்றை கடல் நீருக்கு கொடுத்து, காற்றுக்குப் பதில் கடல் நீரை சுவாசப்பை முழுக்க நிரப்பி மூச்சுக்காற்றுக்கு திணறி, மூச்சடைத்து கைகால்களை உதறி, உதறி செத்துப்போவோம். பிறகு, எங்கள்  உடல் மீனுக்கு இரையாகும். இதெல்லாம், தெரிந்தே சமுத்திரத்தை தாண்டிக் கடக்கும் முயற்சியில் இறங்கினோம். சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரமும் வாய்க்கால் என்பது இதைத்தானோ?

கடற்படையின் கண்களில் இருந்து தப்பிப்பது என்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதனால், படகில் ஏறி தப்பிக்க மாதக்கணக்கில் கரையோரத்தில் ஒவ்வொரு ஊராக அலைந்தோம். அப்படி அலைந்தபோதுதான் எங்கள் மீது வீசப்பட்ட ஓர் விமானக்குண்டில் என் மைத்துனரின் கால் பறிபோனது. குண்டு போட விமானம் செங்குத்தாய் விரைந்து வர எங்கள் மீது தான் குண்டு விழப்போகிறது என்று சுதாகரித்து ஓட, எங்களின் பிடரிக்குப் பின்னால் குண்டுகள் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. கொதிக்கும் இரும்புத்துண்டுகள் எங்களை சுற்றி நெருப்பு மழைபோல் சிதறிக்கொண்டிருந்தது.

அப்படி சிதறிய ஓர் துண்டுதான் எனக்கு முன்னால் தன் சின்னக்கால்களால் ஓடிக்கொண்டிருந்த என் மைத்துனரின் பின் முழங்காலுக்கு கீழே கிழித்து உள்ளே சென்றது. காலிலிருந்து இரத்தம் வழிகிறது என்று நான் நிலைமையை உணருமுன்பே அந்த குழந்தை கால்கள் குத்தி நிலத்தில் விழுந்தது. அருகிலுள்ள சீமெந்து கூரையுள்ள ஓர் மலசல கூடத்தின் உள்ளே காயம் பட்டவரை கிடத்தி கிடைத்த ஏதோ ஒரு அழுக்கு துணியால் காயத்தை இறுக்கி கட்டிவிட்டு, மீண்டும் அவரை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தோம்.

அதன் பிறகு இந்தியா, தமிழ்நாடு செல்லும் முயற்சியை கைவிட்டு செத்தாலும் ஈழத்திலேயே சாகலாம் என முடிவெடுத்து ஊரில் தங்கிவிட்டோம். ஆனால், நிலைமைகள் மிக மோசமான பின் இனிமேல் ஒன்று வாழவேண்டும் அல்லது செத்தே ஆக வேண்டும் என்பது விதியானது. எங்களுக்கு தெரிந்த ஒருவரின் படகில் பருத்தித்துறை முனை கடற்கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம். படகு கிளம்பிவிட்டது. படகு புறப்படத் தொடங்கியதிலிருந்து கடற்கரையும் அங்கேயிருந்த மீதமுள்ள என் இனம், சனம் எல்லோரையும் மிக விரைவில் திரும்பி வந்து பார்ப்பேன் என்று ஏதோ ஓர் நம்பிக்கையுடனும், அவர்கள் நிச்சயமாய் உயிரோடிருப்பார்கள் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

எனக்கும் என் மண்ணுக்கும் இடையேயுள்ள தூரம் என்னை பிரிக்க, என் உயிரும், மனமும் இன்னும், இன்னும் ஆழமாக அதை நேசிக்க, காதலிக்க தொடங்கியது. என் மண்ணோடு எனக்குள்ள பந்தம் எப்படி விடுபட்டுப்போகும்? நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் அலைமேல் படகில் கிடந்தது. என் மண்ணின் எல்லை தாண்டி, கடல் கடந்து  தமிழ்நாட்டு கடற்கரையில் கால்வைத்தவுடன் அந்த மண்ணோடு சேர்ந்து அகதி என்ற பெயர் என்மீது ஒட்டவில்லை. அது முத்திரையாய் குத்தப்பட்டது. இந்த அகதிகளை சிலர் தரம் தாழ்த்தி அற்ப சந்தோசப்பட நினைத்தால் “கள்ளத்தோணிகள்” என்றும் அழைப்பதுண்டு.

பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்கு வைத்த பெயர், “சிலோன் அகதிகள்”. நாங்கள் தமிழ்நாட்டில் கால் வைத்த போது ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல்தான் வரவேற்கப்பட்டோம். என் வாழ்நாளில் மறக்க முடியாதவைகளில் அதுவும் ஒன்றாய்ப்போனது. எங்களை விழிகள் விரியுமளவிற்கு பார்க்கும்படி வேடிக்கைப்பொருள் ஆனோம். எங்களின் பசி, தாகம் பற்றி அக்கறையாய் விசாரிக்கப்படாதது ஏனோ மனதை காயப்படுத்தியது.

அனிச்சை செயலாய் அப்போது தமிழ்நாட்டில் இருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் கண்களில் இடறினோம். “வள்ளம் வந்திருக்கு எண்டு சொன்னாங்கள். அதான் ஆராவது எங்கட ஊராக்கள் இருக்கினமோ எண்டு பாக்க வந்தனான்” என்றார். ஏதோ திக்கு தெரியாத காட்டில் திசைகாட்டி போல் இருந்தது அவரின் ஊர்ப்பாசம். படகில் வந்ததில் ஏறக்குறைய அவரவர் வாந்தியில் அவரவரே நனைந்து, ராட்சத அலைகளில் குளித்து, அதையே குடலை பிடுங்குமளவிற்கு விழுங்கி குற்றுயிராய் தமிழகத்தில் நாங்கள் கரை ஒதுங்கியத்தின் அவலத்தை அவரின் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருப்பார் போலும்.

அவர் முதலில் கேட்ட கேள்வி உண்மையிலேயே என்னை அந்த சந்தர்ப்பத்தில் கண் கலங்க வைத்தது. “களைச்சுப்போய் இருக்கிறியள். ஏதாவது சாப்பிட்டீங்களோ?”. ஓர் அகதியின் வலி இன்னோர் அகதிக்குத்தான் புரியுமோ? பசி வயிற்றை பிடுங்கினாலும், அதை வெளியே சொல்லமுடியாதவாறு தன்மான உணர்வு தடுக்க, இல்லை பசிக்கவில்லை என்று சொல்லிவைத்தோம். அவசரமாய், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னோம். தன் வீட்டுக்கு வாருங்கள் என்று எங்களை அனுமதி கேட்காமலேயே கூட்டிச்சென்றார்.

அவரது வீட்டைப் பார்த்தபோது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ஊரில் எவ்வளவு வசதியாய் வாழ்ந்த மனிதர் இப்போது எலிவளையில் ஒண்டிக் கொண்டிருந்தார். ஒருவாறு, சிரம பரிகாரம் செய்து, உடைமாற்றி மீண்டும் வந்த இடத்திற்கே போகிறோம் என்றவர்களை வற்புறுத்தி ஓர் ரெஸ்டாரண்டில் சாப்பிடவைத்து சந்தோசப்பட்டார். பிறகு, இனிமேல் எங்களுக்கு என்ன நடக்கும் என்பதை அவரின் அனுபவத்தை கொண்டு விளக்கினார்.

மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி, அதிகாரிகளின் வருகைக்காய் காத்திருந்தோம். நீண்ட நேரத்திற்குப்பின், அதிகாரிகள், காவல்துறை இன்னும் யார் யாரோ வந்தார்கள். அவர்களின் சம்பிரதாய அகதி விசாரணையை செய்து முடித்தார்கள். பிறகு, எங்களையும் எங்களோடு வந்த சிலரையும் ஓர் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு இரவிரவாய் எங்கெங்கோ அடித்துப் பெய்யும் மழையில் கொண்டு திரிந்தார்கள். இடையிடையே நிறுத்தி காவல் துறையினர் குளிரைப் போக்க தாங்கள் மட்டும் தேநீரும் குடித்து, சிகரெட்டும் பற்றவைத்துக் கொண்டார்கள். அவர்களும் மனிதர்கள் தானே என்று நினைத்துக்கொண்டேன்.

ஏறக்குறைய ஒரு நாள் முழுப் பொழுது தாண்டியபின்னும் கூட எங்கள் பசி, தாகம் பற்றி ஒற்றைவார்த்தையேனும் கேட்கப்படாதது நெஞ்சை அறுத்தது. ஆனால், ஒவ்வொரு முறை அவர்கள் இறங்கி ஏறும்போதும் எங்கள் தலைகளை பொறுப்புணர்வுடன் எண்ணி, எண்ணிப்பார்த்து தங்கள் கடமையுணர்வால் வேறு எங்களை கண் கலங்க வைத்தார்கள். ஒருவாறு, விடிந்தபின் ஓர் அகதிமுகாமில் வண்டி நின்றது. எனக்கு அதிகம் பிடிக்கும், நான் ரசிக்கும் சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடித்தது. நீண்டநாட்களுக்கு பிறகு அதை உயிர்ப்பயமின்றி, வெடிச்சத்தமின்றி நான் ரசித்த அந்த கணம் இன்றுவரை என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

வண்டியிலிருந்து இறங்கி நின்று என் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும் என்று வெடிமருந்தின் மணமில்லாத அந்த காற்றை சுகமாய் என் சுவாசப்பைகளில் நிரப்பிக்கொண்டேன். ஆனாலும், அடுத்த கணமே என் அவலநிலை என்னை யதார்த்த உலகிற்கு இழுத்து வந்தது. அந்த அற்ப கணநேர சந்தோசமும் எனக்குள் உறைந்து போனது. மறுபடியும் உணர்வுகள் மரத்துப்போக, பார்வையை சுழல விட்டபோது ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழுமாய் கண்களையும், காதுகளையும் வலியாகவும், மகிழ்ச்சியாகவும் இனம்புரியாத ஓர் உணர்வு தீண்டியது.

பொட்டல் வெளியில் என் பார்வை தீண்டிய தூரம் வரையில் நிறைய ஓலைக்குடிசைகள் (கிடுகுகளால் வேயப்பட்டது), அவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் நிறையவே மனித தலைகள். இனிமேல் இழப்பதற்கு ஏதுமில்லாத மனிதர்கள். அந்த ஒற்றை குடிசையை தவிர ஒதுங்க கூட இடமில்லாதவர்கள். சொந்தமண்ணில் எது, எதுக்கெல்லாமோ சொந்தக்காரர்கள், கெளரவ மனிதர்கள். தஞ்சமடைந்த பூமியில் ஏதுமற்ற ஏதிலிகள். இவர்களின் பெயர் அகதிகள். இவர்கள் ஒதுங்கிய இடத்தின் பெயர் தான் அகதி முகாம்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

  1. ஜெயமோகன் இலங்கையை மையமாக்கி உலோகம் என்ற நாவலை துவங்கியுள்ளார் ,

    இந்த அகதி நிலைதான் முதலில் வருவது ,

    படிக்க : http://www.jeyamohan.in/?p=6498

    • கெட்டுது குடி! ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு இப்போ ஈழத்தமிழர் பெரச்சனையுமா, ஏற்கனவே கம்யூனசத்த மோசாமாக்கி காட்டி எழுதியாச்சு. அவ்வப்போது எல்லா முற்போக்கு சமாச்சரங்களையும் நாறடிச்சாச்சு. இப்போ ஐயா கையில அம்புட்டது ஈழப் பிரச்சினையா?

  2. எண்ணற்ற தமிழ்தேசிய,திராவிட இயக்கம் சார்ந்த அமைப்புகளும், இனவாதத்தை இதயமாகவும் மார்க்சிய லெனினியத்தை முகப்பூச்சாகவும் அணிந்திருக்கும்’இடதுசாரி’ அணியினரும் இந்த அவலத்தை பற்றி இப்போதாவது நேர்மையோடு சுயவிமர்சனம் எடுத்துக்கொல்வர்களா?

  3. மனதை வலிக்கசெய்த பதிவு.நெறைய பேரு கிளம்பி வருவான் பாருங்க புலிப்பாசிசம்னு.

  4. ///ஏறக்குறைய ஒரு நாள் முழுப் பொழுது தாண்டியபின்னும் கூட எங்கள் பசி, தாகம் பற்றி ஒற்றைவார்த்தையேனும் கேட்கப்படாதது நெஞ்சை அறுத்தது.///——
    குற்ற உணர்ச்சி மேலிட….
    மனது கனக்கிறது….

    ‘நந்தா’ என்றொரு படம் எப்போதோ முன்பொருமுறை பார்த்தது… ஈழத்தமிழர்களை எல்லாம் “தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு மையத்தில்” வரவேற்று சிறப்பான கவனிப்பு தரப்பட்டுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால், உண்மையோ சுடுகிறது….
    என் ஊர் கடற்கரையிலிருந்து உட்புறம் மிக தூரம் எனினும் யதார்த்த நிலை தெரியாமல் போனதற்கு வெட்கப்பட வேண்டும்.

    ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் நாம் முதலில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்… அது…. மிக இலகுவாக நிறைவேற்றித்தர நம்மால் முடிந்திருக்கும் ஒரு விஷயம்…. உபசரிப்பு!

    ///எனக்கு அதிகம் பிடிக்கும், நான் ரசிக்கும் சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடித்தது. நீண்டநாட்களுக்கு பிறகு அதை உயிர்ப்பயமின்றி, வெடிச்சத்தமின்றி நான் ரசித்த அந்த கணம் இன்றுவரை என் மனதில் பசுமையாய் இருக்கிறது.///

    —இதையாவது தர முடிந்ததே………….

    • தமிழ் தீவிரவாதிக்கு ஒரு முஸ்லீம் தீவிரவாதி சப்போட்டா, எல்லா தீவிரவாதிங்களும் இங்கதான் இருக்கீங்களா. போலீஸ் போலீஸ்

      • க. கா. ச.,

        //தமிழ் தீவிரவாதிக்கு ஒரு முஸ்லீம் தீவிரவாதி சப்போட்டா//. அதென்னவோ தெரியலீங்க எங்க இருசாராரையும் இப்புடி “தீவிரவாதி” ன்னு முத்திரை குத்துறதில ரொம்ப, ரொம்ப ஆர்வமா இருக்கீங்க. இப்புடி அடுத்தவங்கள காயடிச்சு உங்கள நீங்களே அடையாளப்படுத்திறதுல எங்களுக்கெல்லாம் நெம்ப சந்தோசமுங்க. 

        • தென்னாப்பரிக்க கிரிக்கட் வீரர் ஹாஷிம் அம்லா பயங்கரவாதியா?
          http://www.youtube.com/watch?v=mD1Q4lSkQtU&feature=related

          ESPN வர்ணனையாளர் சொல்வதை (௦.58 , ௦.59 ,1.00 ,1.01
          வினாடிகளில் ) செவிமடுங்கள்.

          என்ன செய்வது….சகோதரி…
          all dirty people in the game throughout the world …

          But don’t care such RSS நாய்ஸ்.

      • தீவிரவாதம்னா என்னநு முழுசா படிங்க அப்புறம் காய் அடிக்கலாம் …..தோழரே ….

    • சகோதரர் நெத்தியடி முஹம்மத்,
      எந்த குற்ற உணர்வும் வேண்டாம். அகதியாய் வந்த எங்களுக்கு தமிழ்நாட்டு உறவுகள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அதையெல்லாம் என் அடுத்த பதிவில் சொல்கிறேன். 

  5. அன்புச் சகோதரி ரதி அவர்கட்கு, தங்கள் பதிவுகளை ஆவலாக வாசிக்கும் உங்களில் ஒருவன். அருமையான தமிழ் நடை. தங்கள் பணி தொடர்க. போராட்ட கால ஆரம்பத்திலேயே கல்வி கற்க வெளியேறி விட்டதால் தங்களைப் போன்ற அனுபவம் எனக்கு இல்லை. எப்படியாயினும் மேலே கருத்துக் கூறிய கா.கா.ச போன்ற அற்பப் பதர்கட்கும் தம்மையே தாம் பெரிய அறிஞர்களாக, இருந்த இடம் தெரியாமல் போன பொதுவுடைமைத் தத்துவம் போதிக்கும் நபர்கட்கும் தங்களது நேரத்தை வீணடிக்காமல் ஆக்கபூர்வமான தங்களது எழுத்துப் பணியைத் தொடர்வது நல்லது என்பதே எனது தாழ்மையான கருத்து.

    • உமா,
      நீங்கள் குறிப்பிடும் பதிலை எழுதிய பின் நானும் யோசித்தேன். இப்படி ஒரு பதிலை ஏன் எழுதினேன் என்று. அது போன்ற பின்னூட்டங்களுக்கு பதில் எழுதாது விடுவதே மேல் என்று தோன்றுகிறது. 

  6. இருந்த இடம் தெரியாமல் போன பொதுவுடைமைத் தத்துவம் போதிக்கும் நபர்கட்கும் …என்ன அது…? இலங்கை தமிழர்கள் அகதியாய் சீரழிந்தர்த்கு தமிழர் விடுதலை கூட்டணி ,தமிழீழம் கேட்டு போராடிய காவாலிகளும் தான் கரணம் என்று இன்னுமா புரியவில்லை?
    “போராட்ட கால ஆரம்பத்திலேயே கல்வி கற்க வெளியேறி விட்டதால் தங்களைப் போன்ற அனுபவம் எனக்கு இல்லை. ” ஆகா…என்ன சமாதனம் ?
    சங்கமாடிய தமிழ் என பேசிய
    தமபிமார் எல்லாம் கடல் கடந்தனர் !
    துப்பு கேட்டவர் நாயிலும் கீழவர் ..
    தப்பி ஓடி கனடாவில் நக்கட்டும் ! – புதுவை இரத்தினதுரை
    பொதுவுடைமைத் தத்துவவத்தை ஆதரிக்கின்ற வெப் சைட் இல் எழுதுவதற்கு இடம் கொடுத்திருந்தும் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக உமா என்ற கழிசடைக்கு என்ன திமிர் ?

  7. “போராட்ட கால ஆரம்பத்திலேயே கல்வி கற்க வெளியேறி விட்டதால் தங்களைப் போன்ற அனுபவம் எனக்கு இல்லை. ”
    இதன் அர்த்தம் என்னவென்றால் நான் எல்லாம் அகதி கிடையாது “கல்வி கற்க” வந்து தங்களை அகதிகளை விட உயர்வாக எண்ணி திரிந்த அற்பர்களின் சிந்தனை !!

  8. கண் கலங்குகிறது ரதி. சிரிப்பும் வளமும் அமைதியும் நிறைந்த வாழ்வு உங்களுக்கும் உங்கள் உற்றாருக்கும் கிடைக்க வேண்டும். இலங்கையில் இத்தனை காலம் நிகழ்ந்த அநீதிகள் இனி எப்போதும் மீண்டும் நிகழவே கூடாது.

  9. தோழி ரதியின் எழுத்தில் அகதிகளின் வலியை உணர முடிகிறது,  நாட்டில் பலர் அகதிகள் முகாம் என்பது நந்தா படத்தில் தோன்றுவது போல் காதலும், நகைச் சுவையும் நிறைந்தது என்றுதான் எண்ணியிருக்கின்றனர்,  அவர்கள் இதை படிக்க நேர்ந்தால் உண்மை சுடும்.  என்னால் இயன்றது இதை பல நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி பரவச்செய்வது. நான் வினவின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  அதில் மறுமொழி என்ற பெயரில், மாற்றுக் கருத்து சொல்பவர்களையும் தெளிவுபடுத்தும் வகையில் பலர் மறுமொழி எழுதாமல் நையாண்டி செய்வது போல் முகம் சுளிக்க வைக்கும் விதத்தில் எழுதாமல் மாற்றுக் கருத்துக்களையும் ஆரோக்கியமாக வரவேற்று அதற்கு தக்க விதத்தில் பதிலளிப்பதன் வழிதான் உண்மையான கருத்துக்களை உலகறிய செய்ய முடியும்.  சரி புனைப்பெயர் தேவைதான் அதற்காக மறுமொழியில் வரும் புனைப் பெயர்கள் ,,இப்படியா?,,,, வினவு குழுவினரால் எங்கள் விமர்சன கடிதங்களை நீக்க முடியும் என்றால் ஆரோக்கியமற்ற பதிவுகளை நீக்குங்கள் தவறில்லை, தொடரட்டும் தோழியின் பதிவுகள்சித்திரகுப்தன்

    • மறுமொழி தொடர்பாக உங்கள் கருத்துக்கள் சரிதான் சித்திரகுப்தன். உங்கள் கோரிக்கையை நாங்களும் வழிமொழிகிறோம், விவாதிக்கும் நண்பர்கள் அதை பரிசீலீத்து மாற்றிக்கொள்ளட்டும்.

  10. ரதி உங்கள் பதிவுகளை ஒவ்வொரு முறையும் படிக்க கூடாது என்றே முடிவுசெய்வேன் ஆனால் எல்லாமுறையும் படித்துவிடுவேன்… படித்து முடித்தவுடன் மனதில் எழும் அந்த வலியும்,குற்ற உணர்ச்சியும் எழுத்துகளால் சொல்ல முடியாது தோழி.. உண்மைகளை உணர்ந்து போராடவோ, புரட்சிசெய்யவோ நாங்கள்(தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்க தமிழர்கள்) பயிற்றுவிக்கப்படவில்லை தோழி.. இதை உணர்ந்து நாங்கள் போராட எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் எங்களை சுற்றி எமது பெற்றோராலோ, உற்றோராலோ ஒரு வட்டம் வரைய படுகிறது தோழி.. எங்களுக்கு ஒவ்வொரு முறையும் “நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இரு, ஊர் வம்பு உனக்கு எதுக்கு?” , “நீ நல்ல இருக்கியா? உன் குடும்பம் நல்ல இருக்கானு மட்டும் பாரு? மத்தவுங்க எப்படி போன உனக்கு என்ன?” “நாமலே நம்ம கடன அடைக்கமுடியாம இருக்கிறோம் இதுல நாம போயி யாருக்கு உதவ முடியும்?” “அதிகாரம் உள்ளவங்களே சும்மா இருக்கும் போது, உன்னால மட்டும் என்ன பண்ண முடியும்?” இப்படி பல கற்பிதங்கள்,பல கட்டளைகள் எங்களுக்கு விதிக்கபடுகிறது, நாங்களும் நல்ல பிள்ளைகள் என பேரெடுக்க உங்கள் உண்மைகளையும், வலிகளையும் சில வருத்தங்களோடு கடந்து சென்று எங்களின் அடுத்த வேளையில், அடுத்த பிரச்சனையில் அல்லது அடுத்த கேளிக்கையில் கலந்து போகிறோம் அல்லது கரைந்து போகிறோம்…நான் ஒப்புகொள்கிறேன் இது பச்சை சுயநலவாதம், ஆனால் இது தான் தோழி என்னோடு சேர்ந்து மென்பொருள் எனும் அடிமைத்தொழில் வேலை செய்யும் பலரின் சிந்தனை, கொஞ்சம் அழுத்தம் தந்தாள் காசுதரேன் அநாதை ஆசரம்துக்கு கொடு..இப்படிப்பட்ட செக்கு மாட்டு சிந்தனைகளில்யிருந்து விலகி ஈழம் பற்றி விவாதித்தால் மண்டையை ஆட்டிக்கொண்டே சொல்லுகிறார்கள் “உண்மை தான் அவர்கள் பாவம், கண்டிப்பாக கடவுள் தீயவர்களை தண்டிபாரென்று” கயவர்கள், நாம் எல்லோரும்தான் ஒருவகையில் இந்த இனபடுகொலையின் பங்குதாரர்கள் என்றால் என்னை பைத்தியம் என்கிறார்கள், இவ்வளவு பெரிய பேரழிவுக்கு இந்தியா மிகமுக்கிய காரணம் என்றால் நான் தேசவிரோதியாம்…. இப்போது சொல்லுங்கள் இவர்களை அல்லது இவைகளை என்ன செய்ய? உங்கள் வலி எனக்கு புரிகிறது ஆனால் என் கேள்வி இதற்கு என்ன தீர்வு?

    • தோழர் மோகன் உங்கள் பிரச்சாரத்தின் பலனை ஐ.டி துறையில் மட்டும் தேடாதீர்கள். மேலும் ஈழம் என்றில்லை எல்லாப்பிரச்சினைகளிலும் கூட தமிழ்நாடு போராடி வெற்றி கண்டதில்லை. இதற்கு நமது பிரச்சாரத்தை மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் போன்ற தரப்பினரிடத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதும், ஒத்த கருத்து உள்ள அரசியல் அமைப்புகளில் சேர்ந்து செயல்படுவதன் மூலம்தான் நமது எண்ணங்களைக்கூட காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

    • தோழர் மோகனின் உணர்ச்சி உண்மையானது, இதே போன்ற கொந்தளிப்பில் பலநாள் நிம்மதியிழந்த வேளையில்தான் புரட்சிகர் அமைப்பின் தோழர் ஒருவரின் அறிமுகம் என் வாழ்க்கையையே மாற்றியது.

      தோழர் மோகன் உடனிடியாக வினவு செல்பேசிக்கு அல்லது புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு உங்களிடம் கோறுகிறேன்… உங்களின் பல கேள்விகளுக்கு தீர்வு தோழர்களிடம் உள்ளது

  11. என்ன நீங்கலும் மெகா சீரியல் மாதிரி தொடரும்நு போடுறீங்க …….ஒரு வலியை பதிய வைக்க முயற்சி செய்யும் போது தமிழ் சினிமா மாதிரியும் தொலைகாட்சி மாதிரியும் நடகாதிங்க …..  

    • சி.சீ உங்களுக்கு ஏன் இத படிக்கும் போது மெகா சீரியல் நினைவுக்கு வருது 😉 போங்க சார் போய் மொத 9 பகுதியையும் படிச்சிட்டு அப்புறமா வந்து கேள்விய கேளுங்க

  12. எனது கருத்தை வழி மொழிந்த வினவு குழுவிற்கு நன்றி.  ஈழத்தின் வலி குறித்த இது வரை வந்த 10 பதிவுகளையும் நகல் எடு்க்க ஏதுவாக PDF கோப்பாக இணைத்தால் இணையதளம் பார்க்க வசதி இல்லாதவர்கள்- அதற்கென்று நேரம் ஒதுக்க இயலாதவர்கள்- பு.ஜ‌- பு.க இதழ்களை வாசிக்க கொடுத்தால் தீவிரவாத இதழ்களாக பார்த்து வாசிக்க தயங்குகிற அலுவலக நண்பர்களிடம் இது போன்ற கட்டுரை பதிவுகளை வெள்ளைத்தாளில் அலுவலக அச்சு இயந்திரத்தில் அடித்து கொடுத்து படிக்க வைப்பதன் முலம் பலரிடம் தயக்கத்துடன் ஒளிந்து கொண்டிருக்கும் ஈரக்கசிவை வெளிக்கொணர முடியும் என நம்புகிறேன்.  அவ்வப்போது வரும் சிறந்த பதிவுகளை PDF கோப்பாக மாற்றியும் இணைக்க வேண்டுகிறேன்.

  13. அகதிமுகாமும் அகதி வாழ்க்கையும் சித்திரவதைதான். அகதி முகாம்களில் 15 தொடக்கம் 20 வருடங்களை கடந்து வாழ்கின்ற அகதிகளின் வாழ்க்கை ஆயுள் கைதிகளின் வாழ்க்கையாகத்தான் கிடக்கிறது. காவல்துறையின் கண்காணிப்பிலும், உளவுப்பிரிவினரின் கழுகுப்பார்வைகளிலும் 24 மணிநேரமும் கவனிக்கப்படுகிறார்கள்.
    ஐ.நா. அங்கீகரித்த அகதிகள் அந்தஸ்து என்கிற வரைமுறை சட்டங்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கின்ற அகதிகளுக்கு கிடையவே கிடையாது. இதற்காக பேச இந்த எந்த அமைப்புகளும் இல்லை. இந்த அகதிகளால் எப்பவும் ஆபத்து என்கிற பார்வை மக்கள் மத்தியில் திட்டமிட்டே பரப்பபடுகிறது.
    இலங்கை விடுதலை அமைப்புகளில் செயற்பட்டோர், ஆதரித்தோர் எல்லாம் ஐரோப்பிய மற்றும் மேலை நாடுகளில் தஞ்சம் கோரியவர்கள் சாதாரணமாக இந்தியா மற்றும் மேலை நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள அகதிகள் விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப்போல் முட்கம்பிகள் இல்லாத முகாம்களுக்குள் தான் இந்திய அரசு அவர்களை வைத்திருக்கிறது. 20 வருடங்களுக்கு மேல் அகதிகளாக வாழ்கின்றவர்கள் இலங்கைக்கு போக விரும்பாதவர்கள் ஆனால் அகதிகள் தமிழ்நாட்டில் சொத்துகள் வாங்கக்கூடாது என்று கலைஞர் அவர்கள் 19/6/2008 அன்று கலெக்கடர்களுக்கும் காவல்துறைக்குமான மாநாட்டில் அறிவித்தல் விடுத்துள்ளார். வேலைவாய்ப்பு, பணிநிரந்திரம், சமூக பாதுகாப்பு, சுதந்திர உணர்வு எதுவுமே இங்குள்ள அகதிகளுக்கு இல்லை என்பதை அறிவிக்ககூட முடியால் அகதிகள் இருக்கிறார்கள்.
    குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கின்ற அகதிகளில் 90% உடல்லுழைப்பாளர்கள்தான். அகதிகள் முகாமை சுற்றியுள்ள முதலாளிகள் குறைந்த கூலிக்கு இவர்களின் உழைப்புசக்திகளை உறிஞ்சிக்கொள்கின்றனர். தினக்கூலிகளாக இருக்கின்ற இந்த அகதிகளால் எந்த உரிமைகளையும் தட்டிக்கேட்க சட்டங்கள் இல்லை ஆனால் தண்டிக்கமட்டும் சட்டங்கள் உண்டு.
    அகதிகள் நலன்கள், அகதிகளின் சுதந்திரங்கள், அகதிகள் வாழ்க்கை முறைகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள விரும்பினால் பக்கத்தில் இருக்கின்ற முகாம்களுக்கு சென்று பாருங்கள். சிலநேரம் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்.

    அகதி முகாம்களில் வாழ்கின்ற அகதிகளின் பிரச்சனைகளை அதுசார்ந்த லாப நோக்கங்கள் இல்லா பட்சத்தில் எந்த ஊடகங்களும் கவனிப்பதில்லை.
    தங்கள் சுதந்திரமற்ற வேதணையையும், ஏக்கங்களையும் தேக்கிக்கொண்டே வருகிறார்கள்.
    ரதி அவர்கள் குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் இருக்கின்ற அகதிகளின் நிலையை தன்னுடைய அனுபவமாக எழுதியதில் மகிழ்ச்சி. ஆனால் எழுதவும் தெரியாமல் சொல்லவும் முடியாமல் அகதிகள் மனதுக்குள் கிடக்கிற அனுபவங்கள் சுனாமியைவிட கொடுமையானவைகளாக இருக்கின்றன.

    அகதிகள் பற்றி இந்திய அரசு கொண்டுள்ள கொள்கைகள் பற்றி தெரிந்துகொள்ள இந்த link ஒரளவு உதவும் என்று எண்ணுகிறேன்.
    http://www.hrdc.net/sahrdc/resources/refugee_protection.htm#policy

  14. ஆரோக்கியமான கருத்துக்களை நாகரீகமாக சொன்னவர்கள் எல்லோருக்கும் நன்றிகள். 

    தோழர் மோகன், உங்கள் உணர்வுகள் புரிகிறது. ஏதாவது ஒரு விடயத்தில் ஆரம்பியுங்கள். நியாயமான, ஜனநாயக முறையில் ஏதாவதொரு உங்களுக்கு ஆர்வமுள்ள அமைப்புடன் சேர்ந்து செயற்படலாம் என்பது என் கருத்து. அது ஈழத்தில் மறுக்கப்படும் குழந்தைகளின் உரிமைகளுக்காக கூட இருக்கலாம். இது ஒரு உதாரணம் மட்டுமே. நன்றி. 

  15. ரதி எழுதுற கதை எல்லாம் சூப்பர் ..அடுத்த புலிட்சர் பரிசு அவங்களுக்கு தான்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க