Saturday, September 21, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

-

“365 நாளும் நடக்கட்டும்
மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில்
அதுவே பேசப்படட்டும்.
ஆட்டங்களில் சூடு பறக்கட்டும்
ஆரவாரங்களில் போதை ஏறட்டும்
விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும்
விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்”

சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் என்பதால் சென்னை அணியின் வீரர்கள் அடிக்கும் போது நான்கும், ஆறும் பறக்காதா என்று உங்கள் வயிற்றில் மெல்லிய பதட்டம். சென்னை அணி வென்ற பிறகும் உங்கள் சிந்தனை அந்தக் காட்சியினைப் பின்தொடர்கிறது. கோப்பை வழங்குதல் முடிந்தாலும் மனதில் வழியும் கேளிக்கை உணர்ச்சி நிற்கவில்லை. என்னமோ, ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. இத்தகைய உணர்ச்சி உண்மையெனில் நீங்கள் கிரிக்கெட்டால் வீழ்த்தப்பட்ட ஒரு விரும்பிப் பறிபோன இந்தியக் குடிமகன்.

காலனிய விளையாட்டு காசு கொட்டும் விளையாட்டாய் ஆனது எப்படி?

இந்தியாவை ஆட்சி செய்து களைத்துப்போன வெள்ளையர்கள் பொழுது போக்கிற்காக ஆபத்தில்லாத விளையாட்டாக கிரிக்கெட்டை விளையாடிதோடு, தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மெக்காலே கல்வி கற்ற இந்தியக் குமாஸ்தாக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். பார்ப்பன மேல் சாதியினரைக் கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கமும், சமஸ்தானத்து மன்னர்களும், பண்ணையார், மிட்டா மிராசுகளும் கிரிக்கெட்டிற்கு இந்திய அஸ்திவாரம் போட்டார்கள்.

அந்தக் காலத்தில் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளை வானொலி மூலம் பெருமைபடக் கேட்கும் கூட்டத்தினர் மேற்கண்டவர்களின் வழியில் கிரிக்கெட்டின் இரசனையை கீழே வரை பரப்பினர். பின்னர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக நேரடி ஒளிபரப்பு சாத்தியமானதும் கூடவே ஒரு நாள் பந்தயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்த மிகப்பெரிய சந்தையும் இணைந்து இதன் வர்த்தக மதிப்பை ஆயிரக்கணக்கான கோடிகளில் எகிற வைத்தன.

உலகக் கோப்பை கிரிக்கெட்டும், இந்தியத் துணைக் கண்டத்தின் சந்தை மதிப்பும், கிரிக்கெட்டை இந்திய முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் தவிர்க்க முடியாத வண்ணம் கொண்டு சேர்த்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்த பட்சம் அரையிறுதிக்காவது தகுதி பெறும் என்று பெரும் மூலதனத்தை முதலீடு செய்திருந்த முதலாளிகள் பின்னர் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் கையை சுட்டுக் கொண்டனர்.

இந்திய அணி எப்போதும் வெற்றிபெறுவது சாத்தியமில்லாதது. வெற்றி பெறும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய முதலாளிகள் ஸ்பான்சர் செய்வதும் இயலாது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் முறையில்தான் கிரிக்கெட்டின் எதிர்கால வர்த்தகம் உண்டு என்பதை உணர்ந்து கொண்ட முதலாளிகளின் ஒரு பிரிவு உருவாக்கியதுதான் ஐ.சி.எல் கோப்பை போட்டி.

21ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி, பிரபலமாகிவிட்ட இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் இந்த விளையாட்டும் மற்ற விளையாட்டுகள் போல ஒரிரு மணி நேரங்களுக்குள் ஆடும்படியான அம்சத்தை கொண்டிருந்தது. இதனால் கிரிக்கெட்டை நேரிலும், சின்னத்திரையிலும் பார்க்கும் கண்களை வகை தொகையில்லாமல் அதிகப்படுத்தலாம் என்று முதலாளிகள் கண்டு கொண்டனர்.

அப்படித்தான் Z டி.வி முதலாளிகள் இருபது ஓவர் போட்டிகளை ஐ.சி.எல் என்று சர்வதேச வீரர்களைச் சேர்த்துக் கொண்டு நடத்த ஆரம்பித்தனர். உலகிலேயே கிரிக்கெட்டை வைத்து அதிகம் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏகபோகத்தை தகர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலே (ஐ.சி.சி)  இந்திய சங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் போது ஐ.சி.எல் எதிர்பார்த்தது போல களை கட்ட அனுமதிக்கப்படவில்லை.

லலித் மோடியின் ஐ.பி.எல்லும் அதன் அசுரவளர்ச்சியும்

ஆரம்பத்திலிருந்தே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தை பெரிய இடத்து மனிதர்கள்தான் நிர்வகித்து வந்தனர். இன்றும் கூட முதலாளிகளும், அரசியல்வாதிகளும்தான் சங்கத்தின் கடிவாளத்தை வைத்திருக்கின்றனர். சரத்பவார், காங்கிரசின் சுக்லா, பி.ஜெ.பியின் அருண் ஜெட்லி, முதலான அரசியல்வாதிகளும் பல்வேறு முதலாளிகளும் சங்கத்தில் உள்ளனர். முக்கியமாக கிரிக்கெட் ஒரு பணம் காய்ச்சி மரமென்று தெரிந்த உடன் இந்த போக்கு எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இப்படி கிரிக்கெட்டிற்கு மக்களிடம் இருக்கும் பேரார்வமும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் என அனைத்து மேல்மட்டப் பிரிவினரிடமும் இருக்கும் செல்வாக்கையும் புரிந்து கொண்ட லலித் மோடி முழுவீச்சில் அறிமுகப்படுத்தியதுதான் ஐ.பி.எல். இதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் பி.சி.சி.ஐ யும் ஐ.சி.சி. யும் செய்து கொடுத்தது. புதிய வழிகளில் கோடிகள் கொட்டப்ப் போகிறது என்பதால் அவர்களும் இதில் ஆதாயமடையலாம் என்பதை மோடி உறுதி செய்தார். ஏற்கனவே மேட்ச் பிக்சிங் போன்ற ஊழல்கள் வெளியே தெரியும்படியாக பரவியிருந்த்தால் கவலைப்பட்ட முதலாளிகளுக்கு அப்படி ஒரு பிக்சிங் தேவைப்படாமலேயே பணத்தை சுருட்டலாம் என்பதை மோடி நிரூபித்துக் காட்டினார்.

விளையாட்டு உணர்ச்சியை வர்த்தகமாக்கிய  கிளப் போட்டிகள்!

பல்வேறு விளையாட்டுக்களில் கிளப் பாணி போட்டிகள் இருந்தாலும் கால்பந்தில் அது மிகவும் பிரபலம். குறிப்பாக ஐரோப்பாவில் நடக்கும் இந்த கிளப் கால்பந்து போட்டிகளில் பல பில்லியன் டாலர் பணம் புரள்கிறது. இதன் மூலமாகத்தான் தேசிய அணிகளின் மோதலாக பிரபலமடைந்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சர்வதேச கால்பந்து சங்கம் ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனம் போல வளர்ந்திருக்கிறது.

முதலாளித்துவ நாடுகளில் கால்பந்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாக இதன் பரிமாணம் பரந்து விரிந்து கிடக்கிறது. நாடுகளுக்காக ஆடும் வீரர்கள் தங்களது திறமையைக் காட்டிவிட்டால் போதும், பிறகு அவர்கள் ஆயுசுக்கும் கஷ்டமில்லை என்பதாக கோடிகளை கிளப்போட்டிகளில் அள்ளலாம். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கிளப் முதலாளிகள் திறமையான வீரர்களை வாங்குவதற்கு போட்டி போடுவர். கிளப்புகளை பின்னணியில் இருந்து கட்டுப்படுத்தும் முதலாளிகளும், கால்பந்தை வைத்து விளம்பரம் செய்யும் பன்னாட்டு முதலாளிகளும் இதன் வர்த்தக மதிப்பை தீர்மானிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் லீக்-களும் கிளப் வகை போட்டிகள்தான். இங்கும் கிளப்புகளை முதலாளிகள்தான் கட்டுப்படுத்துகின்றனர்.

விளையாட்டில் தேசியவெறி மட்டும் இருக்காது கிளப் வெறியையும் உருவாக்க முடியும் என்பதை இந்த சர்வதேச அனுபவங்கள் நிரூபிக்கின்றன. முக்கியமா தேசிய வகை போட்டிகளில் குறிப்பிட்ட அணி வெற்றி பெற்றால்தான் அந்த அணி வீரர்களை வைத்து செய்யப்படும் விளம்பர முதலாளிகள் ஆதாமடையும் என்ற ரிஸ்க் கிளப் போட்டிகளுக்கு இல்லை.  ஐ.பி.எல்லும் முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும். இந்திய அணியை ‘தேசப்பற்றுடன்’ ஆதரித்துக் கொண்டிருந்த இரசிகர்கள் இன்று பிராந்திய அணியினை ஆதரிப்பவர்களாக உடனடியாக மாறினர்,  வெள்ளையர்களும், வேற்று மாநிலத்தவர்களும், நாட்டவர்களும் இருந்தாலும் இந்த ‘நம்ம டீம்’ உணர்வு சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

தொழிற்துறை முதலாளிகளை ஈர்த்த கிரிக்கெட்டின் பெரும் வர்த்தகம்!

இத்தகைய பின்புலத்தில்தான் லலித்மோடியால் ஐ.பி.எல் போட்டிகள் திறமையாக வடிவமைக்கப்பட்டது. எட்டு அணிகள், எட்டு முதலாளிகள், எட்டு முதலாளிகளின் பின்னே உள்ள மற்ற முதலாளிகளின் விவரம் தெரிவிக்கப்படாமை, வீர்ர்களை ஏலம் எடுக்கும் உரிமை, எங்கிருந்து வேண்டுமானாலும் முதலீடு செய்யும் வசதி, அணிகளை ஏலத்தின் மூலம் முதலாளிகள் வாங்கும் வசதி, அந்த ஏலத்தை சிண்டிகேட் அமைத்து நிதானப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, விளம்பரம், போட்டிகள் மூலம் அணி உரிமையாளர்கள் இலாபம் காண்பதற்கு உத்திரவாதம், ஒளிபரப்பும் உரிமை மூலம் ஊடக முதலாளிகள் பணம் அள்ளுவதற்கு வாய்ப்பு, இதையெல்லாம் அனுமதித்து கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு பி.சி.சி.ஐக்கு தரப்படும் கப்பம், என்று ஐ.பி.எல்லின் மூலம் கிரிக்கெட் புரட்சியை லலித் மோடி பிரம்மாண்டமாக விற்பனை செய்திருக்கிறார். Z டிவியின்  ஐ.சி.எல்லை ஒழிப்பதற்க்காக இறக்கப்பட்ட அங்கீகாரிக்கப்பட்ட ஒன்றைப்போல போல தோற்றம் கொண்டிருந்தாலும் ஒரே வருடத்தில்  அதுவே தனியாக தனது சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பத்துவங்கியது.

அமெரிக்காவில் அபின் வைத்திருந்த்தாகவும், ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாளி மைனரான லலித் மோடியின் கிரியேட்டிவிட்டி ஐ.பி.எல்லில் பூத்துக் குலுங்கியதை எல்லா முதலாளிகளும் பாராட்டியிருக்கின்றனர். சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலின் போது போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்ற பிரச்சினை வந்த போது போட்டியையே தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றி வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் மோடி. இனி வருங்காலத்தில் ஐ.பி.எல் போட்டியின் போதுதேர்தல் வந்தால் தேர்தலைத்தான் ஒத்திவைப்பார்கள் எனுமளவுக்கு ஐ.பி.எல் நிர்வாகம் தனி அரசையே நடத்திவருகிறது.

நேரடிப் போட்டிகளைக் காண பன்மடங்கு விலை உயர்த்தப்பட்ட மதிப்பிலான டிக்கெட்டுகள், திரையரங்கத்தில் பல மடங்கு கட்டணம் வாங்கிக் கொண்டு போட்டிகளைக் காண ஏற்பாடு, இணையத்தில் யூ டியூப் உதவியுடன் நேரடி ஒளிபரப்பு, மொபைல் ஃபோன்களில் ரீப்ள்ளே என்று தொழில்நுட்பத்தில் எல்லா சாத்தியங்களோடும் ஐ.பி.எல் தனது வர்த்தக்த்தை வேர்விடச்செய்திருக்கிறது.

அம்பானியும், இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனும், டெக்கான் குரோனிக்கிளின் ராமோஜி ராவும், விஐய் மல்லயாவும் இன்று மக்களின் ஆதரவு பெற்ற ஐ.பி.எல் அணி முதலாளிகளாகப் பரிணமித்திருக்கின்றனர் என்றால் அவர்கள அதற்கு லலித் மோடிக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த முதலாளிகளிடம் பணியாற்றும் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியாத செல்வாக்கை இரசிகர்கள் இம்முதலாளிகளுக்கு கொடுக்க முடியும். மேலும் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, முதலான சினிமா முதலாளிகள் பினாமி வேடத்தில் அணி உரிமையாளர்களாக முன்னேற்றம் அடைந்திருப்பதற்கும் மோடியே காரணம். இதனால் மார்க்கெட்டை பெற்ற, இழந்த எல்லா நட்சத்திரங்களும் பினாமி முதலாளிகளின் முகவராக வலம் வருவர்.

இன்று ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு பற்றி தினசரிகளில் புதிய புதிய கதைகள் நாளொருமேனி பொழுதொரு வண்ணம் வந்த படி இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு 20,000த்தில் தொடங்கி 50,000 கோடிகள் வரை இருக்குமென்று ஊகிக்கப்படுகிறது. 2008இல் சிலநூறு கோடிகளுக்கு எடுக்கப்பட்ட அணிகளின் மதிப்பு இன்று சில ஆயிரம் கோடி என்று உயர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தலா 60 போட்டிகள் என்று மொத்தம் 180 போட்டிகள் நடந்திருக்கின்றன. இந்த 180 ஆட்டங்களுக்கான வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி என்பதை நம்பத்தான் முடியவில்லை. ஒன்றரை மாதமாக நடக்கும் ஐ.பி.எல் போட்டிகள் முதலாளிகளைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் பணத்தை அள்ளிக் கொடுக்கின்றன.

ஆளும்வர்க்கங்களின் ஆசியுடன்தான் ஐ.பி.எல் மோசடிகள்!

இன்று ஐ.பி.எல் மோசடிகளை இந்திய அரசு பயங்கரமாக புலனாய்வு செய்வதாக நடிக்கிறது. எட்டு அணிகளை வைத்தே இவ்வளவு கொள்ளையடிக்க முடியுமென்றால் இன்னும் எத்தனை அணிகளை சேர்க்க முடியுமோ அத்தனையும் கொள்ளை இலாபம்தான் என்பதை முதலாளிகள் உணராமலில்லை. இப்படித்தான் கொச்சி, புனே அணிகள் ஏலமிடப்பட்டு தலா 1,500 கோடிகளுக்கு விலை போயிருக்கின்றன. இனி ஆண்டுக்கு 90 பந்தயங்களாம்.

இதில் கொச்சி அணியை உருவாக்குவதற்கு துணைநின்ற முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் தனது தோழியான சுனந்த புஷ்காருக்கு 70கோடி மதிப்பிலானா பங்குகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கொச்சிக்குப் பதில் அகமதாபாத் அணி வென்றிருந்தால் லலித்மோடிக்கும் வேறு சில முதலாளிகளுக்கும் ஆதாயம் கிடைத்திருக்கும். அந்த ஆத்திரத்தில் ஐ.பி.எல் வளர்ச்சியினால் தன்னை அளவு மீறிய ஆண்டவனாகக் கருதிக் கொண்ட லலித்மோடி கொச்சி அணியின் பினாமி இரகசியங்களையும், சசிதரூரின் பங்கையும் வேண்டுமென்றே வெளியிட்டார்.

இத்தகைய இரகசியங்களை வெளியிடக்கூடாது என்பதுதான் ஐ.பி.எல்லின் சட்டதிட்டம். எனினும் முதலாளிகள் மக்களிடமிருந்து பெறும் இலாபத்தை சண்டை சச்சரவு இல்லாமல் எப்போதும் அமைதியாக பிரித்துக் கொள்வார்கள் என்பது எப்படி ஒரு மூடநம்பிக்கையோ அது போல இதுவும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து வெளிவந்தே தீரவேண்டும். இங்கே அது ஒரு அழகுக்கலை அலங்காரத் தொழிலைச் செய்யும் ஒரு சீமாட்டியை வைத்து வந்திருக்கிறது.

லலித் மோடியால் மந்திரி பதவியைத் துறக்கும் நிலைக்கு ஆளான சசிதரூர் பதிலுக்கு லலித் மோடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கொண்டிருக்கும் பங்கு மற்றும் ஐ.பி.எல்லை வைத்து அவர் ஒரிரு வருடங்களில் சம்பாதித்திருக்கும் சில ஆயிரம் கோடிகளையும் பற்றி கசியவிட்டார். அப்புறம் ஏகப்பட்ட பூனைக்குட்டிகள் வெளிவரத்துவங்கின.

பி.சி.சி.ஐயில் இருக்கும் நிர்வாகிகள் எவரும் கிரிக்கெட்டை வைத்து வர்த்தக ஆதாயம் அடையக்கூடாது என்பது கூட ஐ.பி.எல்லுக்காக தளர்த்தப்பட்டது என்கிறார் ஸ்பிக் முத்தையா. அவரது தொழில் எதிரியான இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன் பி.சி.சி.ஐயில் செயலாளராக இருக்கும்போதே சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். மற்ற நிர்வாகிகளும் கூட பல பினாமிகளின் பெயரில் பல அணிகளின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கலாம்.

முதலாளிகளின் நேரடிப் பிரதிநிதியாக அரசியலில் இருப்பவர் சரத்பவார். முன்னாள் பி.சி.சி.ஐயின் தலைவராக இருந்து வேலை செய்த நேரம் போக உணவுத் துறை அமைச்சராக பொழுது போக்கியவர். மேற்கு மராட்டியத்தின் சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்தும்  பெருமுதலாளியான சரத்பவார் லலித்மோடியின் தீவிர ஆதரவாளராவார். சொல்லப்போனால் லலித்மோடி கூட ஓரவளவுக்கு சரத்பவாரின் பினாமி என்றால் மிகையில்லை. சரத்பவாரின் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல்பட்டேல் விமானத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவரது மகள் பூர்ணா ஐ.பி.எல் நிர்வாகத்தின் விருந்தோம்பல் குழுவின் தலைவராம். இவரது செல்வாக்கில்தான் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

காங்கிரசைச் சேர்ந்த எம்.பியான சுக்லாவும், பா.ஜ.கவைச் சேர்ந்த அருண்ஜேட்லியும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். லல்லு போன்ற சமூகநீதி அரசியல்வாதிகள் கூட மாநில அளவிலான கிரிக்கெட் சங்கங்களில் இருந்திருக்கிறார்கள். நாளைக்கு சசிகலாவும், அழகிரியும் கூட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது வெளிவந்த மோசடிகளின் படி இந்தப் பகல் கொள்ளையில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகமுதலாளிகள் எல்லோரும் சேர்ந்தே கூட்டணி வைத்து நடத்தியிருக்கின்றனர். மொரிஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்தால் வரி இல்லை என்பதை வைத்து எல்லா ஐ.பி.எல் அணிகளின் பினாதி முதலீடும் அந்த தீவிலிருந்துதான் வந்திருக்கின்றன. அந்தத்தீவுக்கு வந்த பணம் ஸ்விஸ் வங்கியிலிருந்து வந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்பு பணம் ஸ்விஸ் நாட்டுக்கு போயிருக்கிறது. இதன் அளவு ஐந்து இலட்சம் கோடிகள் என்பது ஏற்கனவே வெளிவந்த விசயம்.

மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை ஒழிக்க மாவோயிஸ்ட்டுகளின் மீதான போர் தொடுத்திருக்கும் இந்திய அரசின் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக இப்போதைக்கு கவலைப்படும் விசயம் ஐ.பி.எல் மோசடிகள். அதுவும் எப்படியோ கசிந்துவிட்ட இந்த ஊழலை இதற்கு மேல் முட்டு கொடுத்து நிறுத்தவதற்கு பிரதமர், ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி, சோனியா எல்லோரும் அல்லும் பகலும் தனியாகவும், சந்தித்தும் வேலை செய்கிறார்கள். மக்களை தற்காலிகமாக ஏமாற்றுவதற்காக வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் ஐ.பி.எல் முதலாளிகளின் அலுவலகங்களை சோதிப்பதாக சீன் போடுகிறார்கள்.

சசிதரூர் கூட தனது வாய்க்கொழுப்பினாலும், வெட்டி பந்தாவினாலும்தான் அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். இந்த மோசடி ஆட்டத்தில் வெளியே தெரியாமல் பணிவாக ஆடவேண்டும் என்ற விதியை அவர் மீறியதால்தான் இந்தப்பதவி இழப்பு. அதே போல இப்போது லலித் மோடி மீது அவருக்கு போட்டியான முதலாளிகள், அரசியல்வாதிகள் குழுவிலிருந்து நிர்ப்பந்தம் வந்திருப்பதால் அவரையும் நீக்கியிருக்கிறார்கள். எனினும் இவ்வளவு அப்பட்டமான ஊழல் மோசடி நாயகனைக் கூட அம்பானி, விஜய் மல்லையா, சரத்பவார் போன்றவர்கள் ஆதரித்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் கூட இந்த மோசடிகளை ஒரு பரபரப்பிற்காக வேறு ஒரு பகைமை காரணமாகவும் வெளியிடுகின்றன. முக்கியமாக இந்த ஆண்டு ஊடகங்கள் செய்தி நேரத்தில் ஐ.பி.எல்லின் பந்தயங்களை நேரடியாக காட்டக்கூடாது, சமீபத்திய பதிவையும் காட்டக்கூடாது என்ற விதிகள் ஊடக முதலாளிகளுக்கு கடுப்பேற்றியிருக்கலாம். லலித்மோடியை அம்பலப்படுத்துவதன் மூலம் எதிர்கால நிர்வாகத்திற்கு தோழமையுடன் தெரிவிக்கக்கூடிய விமரிசனமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இனி புதிய நிர்வாகிகளின் கீழ் ஐ.பி.எல் நிர்வாகம் மாற்றியமைக்கப்படும் என்கிறார்கள். இதன்படி கொள்ளைப் பணத்தை எல்லா முதலாளிகளும் சரிசமமாக பிரித்துக் கொண்டு லலித்மோடி போட்ட ராஜபாட்டையில் அதே போலத்தான் பயணிக்கும். லலித் மோடி போனாலும் அவரது மோடியிசம் என்ற அமைப்பு முறையை இவர்கள் தகர்க்கப் போவதில்லை. இப்போது வெளிநாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலே சென்றிருக்கிறது என்ற தொழில்நுட்பமெல்லாம் புதிய நுட்பங்களால் நிரப்பப்படும். சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணம் மொரிஷியஸ் வழியாக இந்தியா வரும் இரகசிய வழித்தடங்கள் இப்போது போல வெளிப்படையாக தெரியாத வண்ணம் மறைக்கப்படும். மற்றபடி இரசிகனுக்கு தேவை  சிக்ஸரும், விக்கெட்டும் மட்டும்தான் என்பதால் இவையெல்லாம் முதலாளிகளுக்கு ஒரு பொருட்டே இல்லை.

ஐ.பி.எல் மோசடியில் இரசிகனின் பங்கு!

முதலாளித்துவ புரட்சி நிலைநிற்பதற்கு முந்தைய சமூகங்களில் விளையாட்டு என்பது சமூகம் தழுவியதாக இருந்தது. இன்றிருப்பது போல தனித்திறமைகளை வெளிப்படுத்தும் சூப்பர்மேன் வீரர்கள் அன்றில்லை. போட்டிகளும் மக்கள் எல்லாரும் கலந்து கொள்ளுமளவு அனைவரின் வாழ்விலும் விளையாட்டு என்பது இரண்டறக் கலந்திருந்தது. முக்கியமாக அவர்களது வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் அந்த விளையாட்டுகள் தோன்றி வளர்ந்தன.

இன்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் தனது உடலின் அதீத திறமைகளை காட்டும் சூப்பர் வீரர்கள் தோன்றி விட்டார்கள். நூறு மீட்டரை ஒன்பதே முக்கால் விநாடிகளில் கடந்து விட்ட சாதனை எதிர்காலத்தில் ஒன்பது, எட்டு, ஏழு என்று கூட வரலாம். ஆனால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காணும் வசதியைக் கண்டிருக்கும் இக்காலத்தில், அந்த அளவுக்கு விளையாட்டு என்பது சமூகமயமாவதற்குப் பதில் மக்களின் வாழ்விலிருந்து அன்னியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போட்டிகளை உட்கார்ந்தபடி பார்த்து இரசிக்கும் அளவுக்கு பொருத்தமாக நடை, உடலுழைப்பு எல்லாம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படி தமது வாழ்வில் இல்லாத உடல் அசைவுகளின் நேர்த்தியான ஆட்டத்தை பார்க்கும் இரசனையை என்னவென்று சொல்வது?

இந்த உலகிலேயே சிக்கலான ஆட்ட விதிகள், நுணுக்கம் ஏதுமில்லாமல் இரசிக்கப்படும் விளையாட்டும் கிரிக்கெட்தான்.  ஸ்டெம்பு விழுந்தால் அவுட், பந்து பிடித்தால் கேட்ச், எல்லைக் கோட்டை உருண்டு தாண்டினால் நான்கு, பறந்து தாண்டினால் ஆறு என்பதை அறிந்து கொண்டாலே கிரிக்கெட் தெரிந்தமாதிரிதான் .

ஐந்து நாட்கள் போட்டியினை பொறுமையாக அசைபோடும் பெரிசுகள் ஒருநாள் போட்டி வந்தபோது மிரண்டு போனார்கள். இருபது ஓவர் போட்டி வந்தபோது புலம்பத் துவங்கினார்கள். ஆனாலும் கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் முன்பை விட பெரிதாகிக் கொண்டே வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அறிவியல்-தொழில்நுட்ப புரட்சியும், வர்த்தக நோக்கமும் இணைந்து உருவாக்கிய பெரும் சந்தையே. கிரிக்கெட் ஒரு அமுதசுரபி என்று முதலாளிகள் புரிந்து கொண்ட பிறகு அது வெறும் விளையாட்டு என்பதை என்றோ இழந்துவிட்டது.

இன்றைக்கு மைதானத்தில் பார்க்கும் ஆட்டத்தை விட சின்னத்திரையில் பார்ப்பது என்பது விளையாட்டின் இந்திய தேசிய உணர்ச்சியாகி விட்டது. கிரிக்கெட் ஒளிபரப்பும் ஹாலிவுட் படங்களின் நேர்த்தியை விஞ்சும் வண்ணம் வளர்ந்து வருகிறது. கோக்கைக் குடித்தவாறும், லேயிஸ் சிப்ஸை கொறித்தவாறும் பார்ப்பதற்கு பொருத்தமான விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே என்பது இரசிகர்களின் அங்கீகாரத்தைப் பெற்று நாளாகி விட்டது. இவ்வளவு நாள் இந்திய அணியின் வெற்றிக்காக பதட்டப்பட்ட இரசிகர்கள் ஒரு மாறுதலுக்காக மாநில அணிகளுக்காக டென்ஷனாகிறார்கள்.

ஐந்து நாள், ஒரு நாள் போட்டிகளை அசைபோட்ட நேரத்தை விட இந்த குறுகிய காலப்போட்டிகள் அசைபோடப்பட்ட நேரம் அதிகம்தான். இந்த ஒன்றரை மாதமாக நாட்டின் பேசுபொருளாக ஐ.பி.எல் மட்டுமே நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தது. விளையாட்டிலிருந்து ஆட்டம், பாட்டம், இசை, ஆடை அணிவகுப்பு, குடி விருந்து, என்று எல்லா வகையிலும் அவை தொடர்ந்தது. பதிவுலகிலும் ஐ.பி.எல்லுக்காக வரையப்பட்ட இடுகைகள் எத்தனை எத்தனை?

ஏற்கனவே மதமாச்சரியங்களுக்குள் ஆழ்த்தப்ப்ட்ட இந்திய சமூகத்தின் நவீன மதமாக கிரிக்கெட் நிலை பெற்றுவிட்டது. கிரிக்கெட்டின் சமூக பொழுது போக்கு நேரங்களில் ஆழ்ந்திருக்கும் ஒரு இரசிகன் பலவற்றையும் இழக்கிறான் என்பதை அறியமாட்டான். முதலாளிகள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்படி தான் உசுப்பிவிடப்படும் ஒரு உணர்ச்சிகரமான விலங்கு என்பது அவனுக்குத் தெரியாது.

பெப்சி, கோக் போன்ற முதலாளிகள் நினைத்தால் அவன் இந்திய வெறியையும், பால்தாக்கரே போன்ற இனவெறியர்கள் நினைத்தால் அவன் பாக் எதிர்ப்பு வெறியனாகவும், ஐ.பி.எல் முதலாளிகள் நினைத்தால் அவன் தேசிய இனவெறியனாகவும் மாறிவிடுவான். இந்திய அணிக்காக அவனால் பாரட்டப்பட்ட வீரர்கள் இன்று எதிர் ஐ.பி.எல் அணியில் இருந்தால் வெறுக்கப்படுவார்கள். வெளிநாட்டு வீரர்களை இந்திய அணியின் எதிரிகளாக நினைத்துப் பழக்கப்பட்டவன் இன்று அவர்களை வேட்டி கட்டிய தமிழனாகக்கூட அங்கீகரிக்கத் தயங்குவதில்லை.

முதல் ஆண்டு போட்டியில் பாக் வீரர்களை ஆரவாரத்துடன் ஏற்றவன் பின்பு லலித்மோடியின் சதியால் பாக் வீர்ர்கள் சேர்க்கப்படவில்லை என்பதையும் ஏற்றிருக்கிறான். இப்படி விற்பனைக்கேற்ற உணர்ச்சியை மாற்றி மாற்றி தரித்துக் கொள்வதில் அவனுக்கு வெட்கம் ஏதுமில்லை. அவனுக்குத் தேவை நான்கும், ஆறும்தான்.

வாடகைக்கு வீடு கிடைக்காமல் புறநகருக்கும் புறத்தே மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை நகரில் மூட்டை சிமிண்டை நானூறு ரூபாய்க்கு கொள்ளை விலையில் விற்பனை செய்யும் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் சென்னை அணியின் உரிமையாளராக இருப்பதால் அவன் அவர்களை மன்னிக்கவும் செய்கிறான். பேருந்து நிலையத்தில் கருப்பு வெள்ளை போர்டு பேருந்து வந்தால் ஓரிரு ரூபாய்களை மிச்சப்படுத்தலாம் என்று பொறுமையாக காத்திருக்கும் அவன், சென்னை அணியின் இன்றைய மதிப்பு மூவாயிரம் கோடி என்பதை அறியமாட்டான்.

விதர்பாவில் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்திருக்கும் விவசாயிகளின் மண்ணில் புனே அணி 1500 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது என்பதும், ஒரிரு ஆண்டுகளில் அந்த அணியின் முதலாளி அதைப் போல பலமடங்கு சுருட்டப்போகிறார் என்பதையும் அவன் அறிய மாட்டான். உலகப் பணக்காரர்களின் வரிசையில் அணிவகுக்கும் முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன் அணிக்குச் சொந்தக்காரர்தான், தொழில் மோசடியில் நம்பர் ஒன் முதலாளி என்பது அவனுக்குத் தெரியாது.

ரப்பர் இறக்குமதியால் பால்வெட்டும் தொழிலாளிகள் பட்டினி கிடக்க, பாமாயில் இறக்குமதியால் தென்னை விவசாயிகள் காய்ந்து கிடக்க, தொழிலாளிகள் வரத்து இல்லாத்தால் கிராமப் புற டூரிங் தியேட்டர்கள் மூடப்படும் கேரள மண்ணில்தான் 1500 கோடிக்கு கொச்சி அணி வாங்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு கேரள அணி இடம்பெற்றிருப்பதே அவனுக்கு கிடைத்திருக்கும் ஜன்மசாபல்யம்.

ஐ.பி.எல்லின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்பது அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பணம்தான் என்பது அவனுக்குத் தெரியாது.

ஃபோரும் சிக்ஸரும் மட்டுமே எண்களில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 32 கோடி மக்களும், ஊட்டச்சத்து இல்லாமல் சாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவும், ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடை செல்லும் ஒரு கோடி தமிழகக் குடும்பங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக துரத்தப்படும் மத்திய இந்தியாவின் பல்லாயிரம் பழங்குடி மக்களும், அவர்களுக்காக தங்களது உயிர்களை அன்றாடம் பலிகொடுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் கூட எண்களாகத்தான் செய்திகளில் பதிக்கப்படுகிறார்கள்.

ஆயினும் இந்த அழுக்கான இந்திய எண்களை விட ஐ.பி.எல்லின் அலங்காரமான ஃபோரும். சிக்ஸரும் உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது என்றால், ஐ.பி.எல் மோசடிகளின் ஊற்று மூலம் உங்கள் பலத்தில்தான்.

இப்போது ஐ.பி.எல் முடிந்துவிட்டது. அடுத்து உலகக்கோப்பை ட்வெண்டி 20 போட்டி, சாம்பியன்ஸ் லீக், ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி என்று அடுத்த திருவிழாக்கள் வரப்போகின்றன. இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

  1. அருமையான பதிவு . ஐ பி ல் பின்னால் இருந்து இயக்கும் சுரண்டும் முதலாளிகளை அம்பலபடுதியதற்கு வாழ்த்துக்கள் .

  2. நல்லா சொன்னீங்க!, மிகவும் அருமை, ஆனா எந்தனை பேர் இதை புரிந்து கொள்வார்கள்??, இந்த பதிவை வாசிபதட்கு முன் அவர்கள் குலதெய்வம் ஐ பி எல் அவர்கள் கண்முன் வருமே!!

  3. அணைத்து ஊடகங்களும் அரைத்து போட்ட மாவை மீண்டும் வித்தியாசமாக அரைத்ததற்கு நன்றி.

    • என்ன மூ டூ …. வஞ்சப் புகழ்ச்சி அணி யா ?.. மற்ற ஊடகங்கள் இந்த விஷயத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டன என்று உனக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை … இந்த பார்பார வேலை எல்லாம் ரொம்ப தெளிவா செய்கிறாய் நீ .. பெரிய பார்பார பருப்பு தான் நீ போ .. ஒரு விஷயத்தை , சப்பையாக்கி .. தன் (தன் இனம் , சார்ந்த அணி ) மேல் சொன்ன குற்றங்களை இருட்டடிப்பு செய்து விடலாம் என்று கணக்கு போடாதே .. அரைத்துப் போட்ட மாவை வித்தியாசமாக அரைகிறார்களா ?.. உன்னைப் போன்ற பரதேசிகளுக்கு அப்படி தான் தெரியும் …

      • சார் நீங்க யாரு? ஜெகத்தீ யா? இல்ல யாரு? என்னோட பேர யூசு
        பண்றீங்க? ஐ தினக் நீங்க ஒரு பொறம்போக்குன்னு நெனைக்குறேன்.

  4. சென்னை அணியின் லாபத்தை எப்படி ஓவ்வொரு தமிழனுக்கும் கொண்டு சேர்க்கமுடியும்… என்று சிந்தித்தால் என்ன… இந்த விளையாட்டை எப்படியும் தவிர்க்க முடியா து..

    • இந்திய சிமெண்ட் கம்பெனி காரன் ஆள் விட்டு உங்களை தேடுறானாம் ?.. நடக்குறத பேசுங்க சார் …

  5. // தங்களது உயிர்களை அன்றாடம் பலிகொடுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் ///

    மாவோயிஸ்ட் எடுத்த 72 பேர் உயிர் கூட கணக்கில் வருமா?

    • மாவோயிஸ்ட் எடுத்த ௭௨ உயிர்கள் … என்னமோ அந்த ௭௨ பேரும் காட்டுக்குள்ள ஓடி பிடிச்சி விளையாட போனவனுங்க மாதிரி பேசுறியே மதன் குமார் .. உள்ளே போய் .. பன்னாட்டு முதலாளிகள் போடும் எலும்புத் துண்டிற்கு வாலாட்டும் சிதம்பரம் போன்ற நன்றி கெட்ட பன்றிகளின் இச்சையை நிறைவு செய்ய சென்ற அரசாங்க கூலிப் படைகள் அவர்கள் .. இதில் மாவோயிஸ்ட்டுகளின் மேல் என்ன குற்ற கண்டீர் ?.. உள்ளே புல் பிடுங்க சென்றார்களா ?.. கொஞ்சி அனுப்புவதற்கு .. மக்களையும் , மக்களுக்காக போராடும் போராளிகளையும் கொன்று குவிக்க சென்றவர்களை கொன்றிருகிரார்கள். தவறேதும் இல்லை … உள்ளே சென்று அவர்களை (மக்களையும் போராளிகளையும் ) கொல்ல அனுப்பி வைத்த ப.சிதம்பரத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை வினவு வில் கேட்கிறாய் நீ ..
      போ .. தம்பி .. போய் .. செய்திகளை தெளிவாக படித்து வா … மேப்புல் மேயாதே ..

      • சிதம்பரத்தை ஆட்சியில் உட்காரவைத்து இந்த மக்கள் தானே? மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும், எத்தனை பட்டாலும் நம் மக்கள் திரும்ப திரும்ப இந்த பன்னாடைங்கள தான தெரிந்தெடுக்கிறார்கள்.

  6. //முதலாளிகள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்படி தான் உசுப்பிவிடப்படும் ஒரு உணர்ச்சிகரமான விலங்கு என்பது அவனுக்குத் தெரியாது//
    ரொம்ப சரி ..

  7. சில முறை கவனித்திருக்கிறேன். வினவிலும் என்னிலும் ஒரே கருத்துக்கள் உதயமாவதுண்டு.
    நான் பதிவிட்டு அரை மணி நேரத்தில் உங்கள் பதிவு. ஒரே கருத்து என்ற போதும் நீங்கள் விலாவாரியாக எழுதி அசத்தி இருக்கிறீர்கள்.

    அருமை!!!

  8. மூளை சலவை செய்யப்பட்ட கூட்டத்தை எத்தனை முறை அரைத்தாலும் திருத்த முடியாது .நல்ல பதிவு.

  9. மோடிக்கு இதனை எப்படி சமாளிப்பது என்பது தெரியும், ஆனாலும் திருந்துவார்கள் என்ற நப்பாசை எல்லோருக்கும் இருக்கிறது

  10. “பார்ப்பன மேல் சாதியினரைக் கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கமும், சமஸ்தானத்து மன்னர்களும், பண்ணையார், மிட்டா மிராசுகளும் கிரிக்கெட்டிற்கு இந்திய அஸ்திவாரம் போட்டார்கள்”

    > இப்பவும் ஐயருங்கோ எல்லாம் கிரிக்கெட் என்னமோ அவுங்க ஜாதி விளையாட்டு மாதி வெத்து சீன போட்ரானுங்கோ.

    “வாடகைக்கு வீடு கிடைக்காமல் புறநகருக்கும் புறத்தே மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை நகரில்”

    > நானெல்லாம் சொந்த வீடு வாங்குனா “ஒன்லி நான்-பிராமின்ஸ் அல்லொடு” அப்பிடின்னு போர்டு மாட்டுவேன்.

  11. அருமை…. கிரிக்கட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரம்.. ஏனைய விளயாட்டுகளுக்கு கிடக்காமலிருப்பதுவும் ஊடகங்களின் கைங்கரியம்தான் என்பதும் மறுக்கமுடியாதல்லவா?

  12. இதனைப் பற்றி எத்தனை முறை விளக்கினாலும், ‘விரும்பி போய் பலியாகும்’ இந்திய குடிமகன்கள் சொல்லும் – யாரைக் கேட்டாலும் சொல்லும் விடயம் – “so what ? அவர்கள் ஊழல் செய்தால் அது அவர்கள் விடயம். ஆனால் நாங்கள் எல்லாம் ஒரு எண்டர்டெயின்மெண்டுக்காகவும், ஒரு விளையாட்டாவாகவும்தான் அதனைப் ப்பார்க்கிறோம். ” இதனைதான் மாவு மாதிரி அரைத்து அரைத்து சொல்கிறார்கள்.

    இந்த மக்காள் டிவியில் மேட்ச் பார்க்கும் போதும், அதனை விவாதிக்கும் போதும் ஏதோ மிகப் பெரிய (தேசப் பக்தி) காரியம் செய்வது போல, மிகவும் பரவசமாகவும், பெருமையாகவும் பேசுகிறார்கள். காதில் இரத்தம் வழிகிறது.

  13. அருமையான பதிவு.ஒரு சாமியாரும் கிரிக்கட் வீராரும் சந்திச்சு போசுவது மாதிரி ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் அதில் சாமியார் கிரிக்கேட் வீரரை பார்த்து ஏம்பா விளம்பரத்த மட்டும் விழுந்து விழுந்து கரேக்ட கேட்ச் புடுக்கிற விளையாட்டுல மட்டும் எல்ல கேட்சயும் விட்டுறியப்பன்னு கேட்பார் அதற்கு அந்த வீரர் என்ன சாமி செய்ய சொல்றிக அங்கே புடிச்ச காசு இங்கே விட்ட காசு 

  14. 14 வங்கிகளிடம்(including ICICI) கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் அவதிபட்ட இந்தியா சிமெண்ட் சீனிவாசன் CDR (Corporate Restructuring) மூலம் கடனை அடைப்பதாக கூறி கடனில் மிகப் பெரிய தள்ளுபடி பெற்று, (இது விவசாய தள்ளுபடி அல்ல)  இன்று சாந்தோமிலிருந்த ICICI 9 மாடி கட்டிடத்தை 150 கோடிக்கு வாங்கிய மன்னர்.  இந்த ஐபில் CSK (Chennai Super King) 200 கோடிக்கு ஏலம் எடுத்தது இந்த இரண்டு ஆண்டுக்குள் 2000 கோடி மதிப்பில் இருப்பதாக பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கின்றன. இப்படியே விளம்பர நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்கள் (சன் டிவியும் சேர்த்து) பார்த்த பணம் கோடி, கோடி

  15. //ஐ.பி.எல்லின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்பது அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பணம்தான் என்பது அவனுக்குத் தெரியாது.//

    அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அத்தனை பேருக்கும் அப்படிதான், அதனால்தான் கேதான் தேசாய் ஆயிரத்து எண்ணூறு கோடி பணமாகவே வைத்திருந்தான் 

  16. என் நண்பர்களிடம் விதர்பா பற்றி கேட்டேன் அவர்களுக்கு புரியவில்லை அப்படி என்றால் என்றனர்

    • இந்த ஐபிஎல் சீசனில் பிரீத்தி ஜிந்தா வீரர்(!?)களை எத்தனை தடவ கட்டி பிடித்தார்ன்னு கேட்டிருந்தா கரீக்ட்டா சொல்லி இருப்பாங்க!

      ஐபிஎல் தொடரை முற்போக்கு வேடமிடும் சிலரும் கூட பார்பது தான் கடுப்பை பல மடங்கு ஏற்றுகிறது!

  17. மிக நல்ல பதிவு.  இன்று பணம் கொழிக்கும் எதுவாக இருந்தாலும் அது ஓட்டுகட்சி அரசியல்வாதியை சார்ந்து இருக்கிறது. சாராயக்கடை, கிரிக்கெட் வாரியம்,  சினிமா விநியோகம், கேபிள் ஒலிபரப்பு, பொது பணித்துறை ஒப்பந்தங்கள். கல்வி, குடி தண்ணீர் (மினரல்) , தியான மண்டபங்கள்  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.  பிறகு அங்கு கொள்ளை வராமல் எங்கே போகும்.  ஒருபுறம் IPL மறுபுறம் BPL (பிலோ பவார்ட்டி லயன் ) என்ற தலைப்பில் இன்று தினமணியில் ஒரு கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது – இந்த கட்டுரைகள்ளலாம் பிறரை குறை சொல்வதற்காக இல்லை. மக்கள் விழிப்புணர்வு பெற்று அணி திரள வேண்டும் என்பதர்க்ககவே

  18. ஐபிஎல் போட்டிக‌ளில் க‌ள்ள‌ப்ப‌ண‌ம்
    விளையாடிய‌து ப‌வுண்டிரி என்றால்,
    சித‌ம்ப‌ர‌ம் ஷேர் மார்க்க‌ட்டில் 2007ல்
    `பார்டிசிபேட்ட‌ரி நேட்` ச‌லுகை மூல‌ம்
    அடித்த‌து சிக்ஸ்ச‌ர்.
    இத‌னால் வ‌ந்த‌ க‌ள்ள‌ ம‌ற்றும் தீவிர‌வாதிக‌ள்
    ப‌ண‌த்தால், ஷேர் குறியீடு எண் 16000
    இருந்து 27000க்கு எகிறிய‌து என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள்.
    யுஎஸ் டால‌ர் ம‌திப்பு 47.00 இருந்து 37.00 ச‌ரிந்த‌து.
    திருப்பூர் போன்ற சிறு ம‌ற்றும் ம‌த்திய‌
    ஏற்றும‌தியாள‌ர்க‌ள் இந்த‌ திடீர் வீழ்ச்சியால்,
    மிக‌வும் ந‌ட்ட‌ம‌டைந்து திண்டாடுகிறார்க‌ள் இன்ற‌ள‌வும்.
    த‌வ‌றை சுட்டிய‌ எம்கே நாராய‌ண‌னை
    பாதுகாப்பு துறையிலிருந்து, இவ‌ர்க‌ள் பாதுகாப்பு
    க‌ருதி மே.வ‌ங்க‌ கவ‌ர்ன‌ராக்கி க‌வ‌ர் செய்து விட்டார்க‌ள்.
    இந்த‌ ப‌ண‌ பாய்ச்ச‌லால் இ‌வ‌ர்க‌ள், ஷேரில் வாரிய‌ ப‌ண‌ம்,
    ப‌ல‌ ப‌ல‌ தலைமுறைக‌ளுக்குப் போதுமாம்.
    இப்போது சாண‌லுக்கு சாண‌ல் க‌த்தும் இந்த‌
    டி.வி க்க‌ள் ஒன்று கூட‌ பெரிதாய் வாய் திற‌க்க‌வில்லை.
    சிறு முணுமுணுப்பு ம‌ட்டும் க‌சிந்த‌து.

  19. அவர்களுடைய நலன் தான் இதில் குறிக்கோள், நாம் எந்த விசயத்தில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு லாபமோ அந்த விசயத்தில் நாம் சேர்ந்திருக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுவோம். பிரிந்திருப்பது லாபமென்றால் அந்த விசயத்தில் பிரிந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவோம். இது தான் இங்கு எல்லா விசயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் உட்பட.

    செங்கொடி 

  20. ipl போட்டிகள் முதலாளிகள் கயில் என்பது சரி
    ஆனால் கால்பந்துக்கும் கம்முநிசம் என்ன சம்பந்தம்? புரியவில்லை . விளக்கவும்
    ச செஷன்

  21. !//போட்டிகளை உட்கார்ந்தபடி பார்த்து இரசிக்கும் அளவுக்கு பொருத்தமாக நடை, உடலுழைப்பு எல்லாம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படி தமது வாழ்வில் இல்லாத உடல் அசைவுகளின் நேர்த்தியான ஆட்டத்தை பார்க்கும் இரசனையை என்னவென்று சொல்வது?//

    சூப்பர் கேள்வி

  22. தமிழ்நாட்டிற்காக மற்றும் சென்னைக்காக கிரிக்கெட் விளையாடுபவர்கள் பார்ப்பன ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே. மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடையாது.

    வெங்கட்ராகவன்
    ஸ்ரீகாந்த்
    ராமன்
    சடகோப்பன் ரமேஷ்
    முரளி கார்த்திக்
    அனிருத்
    அஷ்வின்
    முரளி விஜய்
    தினேஷ் கார்த்திக்
    பாலாஜி
    பத்ரிநாத்.

    ராபின் சிங்க்-க்கு ஓய்வு பெரும் போது தான் வாய்ப்பு கிடைத்தது.

    ஆனாலும் வெட்கம் கெட்ட பிற ஜாதி காரர்கள் (தேவர், வன்னியர், தலித், நாடார், கவுண்டன், …..) சேப்பாக்கம் சென்று கிரிக்கெட் பார்ப்பார்கள்.

  23. கிரிக்கெட் ரசிகர்கள் கொஞ்சம் இந்தப் http://tamilpaper.net/?p=6371 பதிவையும் வாசிக்கணும். வேட்டியை உருவுபவனிடம் கோவணத்தையும் கழட்டிக் கொடுப்பது தான் தேசபக்தியை வெளிக்காட்டும் செயலாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உண்மையில் BCCI தன்னை இந்திய அணின்னு சொல்லிக்க ஏதாவது நியாயங்கள் இருக்கிறதா.. விளையாட்டில் உணர்ச்சிகளை கலந்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது தான் கற்றரிந்தோர்க்கு அழகா? ஏமாளிகளாக இருப்பதில் பெருமிதமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க