Wednesday, October 9, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?

திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?

-

யத்த ஆடைகள் உருவாக்கத்தின் தொடக்கமென்பது நூல் உள்ளே வந்து இறங்குவதிலிருந்து தொடங்குகிறது.  அதுவே பின்னலாடையாக மாற்றம் பெறுவதற்கு பின்னலகம் என்ற நிட்டிங் எந்திரங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது.  மார்பு அளவுகளைப் பொறுத்து தனித்தனியாக உள்ள எந்திரங்கள் மூலம் தேவைப்படும் அளவிற்கு துணியாக உருவாகின்றது.  இப்போது அந்த துணி இரண்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.  வெள்ளை என்றால் சலவை பட்டறை.  பல நிற வண்ணமென்றால் சாயப்பட்டறைகள்.

வெள்ளையை மட்டும் உருவாக்கி கொடுப்பவர்களுக்கு எளிய மூதலீடுகள் போதுமானது..  வணணமாக்க ஐம்பது லட்சத்தில் தொடங்கி நூறு கோடி வரைக்கும் அவரவர் தகுதியைப் பொறுத்து உருவாக்கி வைத்துருப்பார்கள். 10 கிலோ துணி கொள்ளவு முதல் ஆயிரம் கிலோ வரைக்கும் எட்டு மணி நேரத்தில் விரும்பும் நிறமாக வெளியே தள்ளும் ராட்சச எந்திரங்கள் நவீன எந்திரங்கள் உண்டு. எந்திரங்களுக்கான முதலீடு தவிர தேவைப்படும் மற்ற வசதிகளுக்குத்தான்  பணத்தை வாரி இறைக்க வேண்டும்.

கை படாத ரோஜாவாக பளபளவென்ற பட்டாடை போல அடித்து துவைத்து நிறமாக்கி உலர வைத்து வெளியே தள்ளும்.  வேண்டிய அளவுகளில் விதவிதமாய் ரகரகமாய் ஜொலிப்பாய் மடிப்பு கலையாத புத்தம் புது ரோஜா போல் வந்து சேரும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நவீனம்.  ஆனால் அத்தனையும் வெளிநாட்டு மூளைகளின் நளினம். ஒரே கூரையின் கீழ் மொத்த வசதிகளையையும் வைத்திருப்பவர்கள் விடாத மழை என்றாலும் கவலைப்படாது கப்பலில் 365 நாளும் ஏற்றிக் கொண்டே இருக்க முடியும். அவர்களின் வங்கிக் கணக்கு என்றுமே சொங்கிப் போய்விடாது.

என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல  பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டிருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே.  ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே?  அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்.

நீங்கள் பத்திரிக்கைகள் படிப்பவரா? ஒரு பக்கவாட்டில் இந்த சாயப்பட்டறை குறித்து துணுக்கு செய்திகளாக படித்து இருக்க வாய்ப்புண்டு. திருப்பூரில் ஆயத்த ஏற்றுமதி தொழில் சூடு பிடிக்காமல் இருந்த 1984 ல் இந்த துறையில் சுமாராக 30 நிறுவனங்கள் செயல்பட்டு இருக்கலாம். தொடக்கத்தில் பெரிய அளவிற்கு நவீன உபகரணங்கள் இல்லை. ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும்.  சொந்த இடம், வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து எவர் வேண்டுமானாலும் இந்த தொழிலில் இறங்கலாம் என்ற சூழ்நிலை.

செவ்வக வடிவில் ஒரு இரும்புத் தொட்டி.  70 லிட்டரில் தொடங்கி 700 லிட்டர் முதல் அதிகபட்ச கொள்ளவு வரைக்கும் கிலோ பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு தொட்டியின் மேல் கம்பி உருளைகள்.  இதனை இயக்க மின்சார மோட்டார் மற்ற உபகரணங்கள்.  கம்பி உருளையில் கொண்டு வரப்படும் துணிகள் ஏற்றப்பட்டு, சுழன்று அது தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு சுற்றாக சுற்றி வந்து கொண்டிருக்கும்.

தண்ணீரில் நன்றாக மூழ்கி வந்து கொண்டிருக்கும் துணி தன்னுடன் வைத்திருக்கும் பஞ்சு போன்ற தேவையில்லாத சமாச்சாரங்களை உதறித்தள்ளும்.  நனைந்த துணியில் பிற்பாடு ஊற்றப்படும் வெட்டிங் ஆயில் தான் சாயம் கலப்பதற்கு முன் செய்யப்படும் சடங்கு மந்திரம் போன்றது.

ஆனால் இந்த தொழிலுக்கு முக்கியத் தேவை தண்ணீர் வசதி. சிலருக்கு இயல்பாக நிறுவனங்களுக்குள் ஆழ் குழாய் வசதிகள் இருக்கும்.  வசதி இல்லாதவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நீருக்கு பக்கத்து ஊரில் உள்ள விவசாய கிணற்றில் இருந்தது டேங்கர் லாரி கொண்டு வந்து சேர்க்கும். தொடக்கத்தில் வயல் விவசாயத்தை விட இந்த தண்ணீர் விற்று பணக்காரர் ஆனவர்கள் பலபேர்கள்.

ஆனால் இப்போது எல் அண்டு டி நிறுவனம் உள்ளே வந்து இதற்கென்று ஒப்பந்தம் எடுத்து மிகப் பெரிய தொழிலாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.  ஒரு லிட்டர் ரெண்டு பைசா என்று விற்றுக் கொண்டுருந்தவர்கள் இப்போது ஆறு பைசா வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.  இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு என்பது பூமியில் உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது.  பவானி ஆற்றை நம்பி விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள்.

சாய்பபட்டறைகளுக்குள் பெரிய மூதலீடுகளை போட்டு வராக்கடன்களை வசூலித்து தம் கட்ட வசதியிருந்தால் வாய்ப்புகள் தேடி வரும். இதுவே இந்த தொழில் தொடங்க போதுமானது. முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரைக்கும் தங்களுக்குள் இருக்கும் அனுபவம் மட்டுமே மிகப் பெரிய முதலீடு என்று நம்பி ஜெயித்தவர்கள்.  அதை வைத்துக் கொண்டு தான் சாதித்து மேலேறினார்கள்.

இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப்பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர்,திருவண்ணாமலை,இராமநாதபுரம், மதுரை, சிவகெங்கை, கம்பம்,தேனி,போடி,சுற்றுவட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை உடைய இளைஞர்கள்..படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல் வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரைக்கும்.  மிகப் பெரிய ஆச்சரியம் கடைசி வரைக்கும் உடல் உழைப்பாளியாகவே இருந்து விடுவது தான்.  விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் சிலர் மேலேறி வருகிறார்கள்.   .

சாயமேற்ற வேண்டிய 20 கிலோ நனைந்த துணியை தூக்குவதற்கு சாதாரணமானவர்களுக்கு தனிப் பயிற்சி வேண்டும்.  ஆனால் நம் மக்கள் அட்டாகாசமாக தூக்கிக் கொண்டு விஜயகாந்த் கதையை பேசிக் கொண்டு நகர்ந்து கொண்டிருப்பார்கள்.  பார்க்கும் நமக்கு மூச்சுப் பிடிப்பு வந்து விடும்.

முதலாளிகளும் பெரிய படிப்பு படித்தவர்களோ, கெமிக்கல் இன்ஜினியரிங் அறிவு பெற்றவர்களோ அல்ல. ஒன்று ஏதோ ஒரு இடத்தில் பணிபுரிந்து இருப்பார்கள்.  அல்லது பார்த்துக் கொண்டு வந்து ஆசையில் தொடங்கியிருப்பார்கள். தொடக்கத்தில் உள்ளே வராத நவீனங்கள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. அவரவருக்குண்டான அயராத உழைப்பே அத்தனையும் வெற்றியாக்கியது.
ஒவ்வொரு முதலாளிகளும் பெற்ற வெற்றிகள் அவர்களை பணக்காரர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியது. கல்லு பூமியெல்லாம் இவர்கள் கடைக்கண் பட்டு காசு கொழித்த பூமியாக மாறியது. ஆனால் விவசாய பூமிகளை மட்டுமே நம்பி வாழ்ந்த சமூகத்தின் முகவரியே இன்று மொத்தமாய் மாறி அலற வைத்து விட்டது.

ஒரு கிலோ துணியை விரும்பும் நிறத்திற்கு கொண்டு வரவேண்டுமென்றால் எட்டு முதல் பத்து லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு கிலோ என்பது மூன்று அல்லது நான்கு ஆடைகளை உருவாக்க உதவும். துணிகள் நிறமான பிறகு வெளியேற்றப்படும் அந்த நீர் என்பது மற்றொரு போபால் விஷ வாயுவுக்கு சமமானது.  உப்பும், அமிலமும், காரத் தன்மையும் கலந்து சகிக்க முடியாத நாற்றத்துடன் பூமியில் கலக்க வைத்து விடுவார்கள்.

துணிகள் மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலவாணியைத் ஈட்டித் தந்தாலும் இதற்குப் பின்னால் உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு முதல் நரம்பு பிரச்சனைகள் வரைக்கும் உருவாக்கும். இன்று வந்துள்ள நவீனங்கள் முடிந்தவரைக்கும் கட்டுப்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை, சலவைப்பட்டறைக்கு தேவைப்படும் கொதிநீருக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காடுகளில் இருந்து விறகு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. டீஸல் போட்டு நீரை கொதிக்க வைக்க முடியாதவர்கள் அத்தனை பேர்களுக்கும் விறகு தான் வரப்பிரசாதம். சில நிறுவனங்கள் பயன்படுத்தும் இது போன்ற கொதிகலன்கள் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் உயர் அதிக அழுத்தம் உடையது.  ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து வெடித்து சிதறினால் சுற்றிலும் உள்ள இடங்களை சர்வநாசமாக்கி விடும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியில் இருந்த நீதியரசர் கற்பக வினாயகம் பார்வை பட்டபிறகு தான் இங்குள்ள சாயப்பட்டறை முதலாளிகளுக்கு ஜுரம் வரத் தொடங்கியது. இது திருப்பூர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.  கரூர், ஈரோடு வரைக்கும் பரந்து பட்டு இடையில் இருக்கும் அத்தனை விளைநிலங்களையும் பாழாக்கிய பெருமை இந்த சாயம் போன முதலாளிக்கேச் சேரும். தும்பை விட்டு வாலை பிடித்துக் கொண்டு ஓடி இன்று இங்குள்ள பல நிறுவனங்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாகி விட்டது.

சாயப்பட்டறை முதலாளிகளின் கூட்டங்கள். ஏற்றுமதியாளர்களின் சங்கங்கள், எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்று மும்முனை போராட்டமாக முடிவே தெரியாமல் இன்று வரை போய்க் கொண்டே இருக்கிறது. விவசாயிகளின் எதிர்பபால் நீதிமன்றம் வரைக்கும் சென்று கடைசியில் டெல்லி உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்ற போதிலும் எந்த மாற்றமும் இல்லை. சவ்வு போல் இழுவையாக முதலாளிகளும் விவசாயிகளும் இரண்டு பக்கம் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளிகளுக்கு அரசாங்க மானியம் வேண்டும்.  விவசாயிகளுக்கு சாயத்தண்ணீர் பூமியில் கலக்க விடக்கூடாது. அரசியல் வியாதிகளுக்கு ஓட்டுக் கணக்கு வேண்டும்.

திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி. நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

வைரமுத்து சொன்ன எட்டில் பிரித்த வாழ்க்கை போல் துணிகளை சாயமேற்ற எட்டு விதமாக அலசி துவைக்க இறுதியில் விரும்பும் நிறத்தில் வந்து விடுகின்றது.

துணிகளை சாயமேற்ற இரண்டு வகையான உத்திகள் உண்டு.

அதிக நவீனம் இல்லாத வின்ஞ் என்பது ஒரு இயல்பான முறை. சற்று மேம்பட்ட நவீன வசதிகள் என்பது சாப்ட் புளோ, தொட்டிக்குள்  திணிக்கப்பட்ட துணிகள் தண்ணீருடன் கலந்து உள்ளே வெளியே என்று குதியாட்டம் போடும்.  தற்போது வந்துள்ள நவீன உபகரணங்கள் என்பது கணினி வழியே கட்டுப்படுத்தி கனகச்சிதமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வண்ணத் துணியாக மாற்றிவிட முடியும்.

தொட்டியில் நீர் நிரப்பி துணியை நனைக்க வெட்டிங் ஆயில் என்ற வஸ்துவை ஊற்றி தண்ணீர் துணிகளில் நன்றாக ஊடுருவ வைக்கிறார்கள். பிறகு தான் வேதியல் சமாச்சரங்களை அளவோடு கலந்து விடுகிறார்கள். ஒவ்வொரு சாயமாக சேர்த்துக்கொண்டே வரவேண்டும்.

துணியை இளக்க, இளக்கிய துணியை சாயத்தோடு ஒட்ட வைக்க, ஒட்ட வைத்த சாயத்தை உறுதியாக்க, உறுதியான சாயத்துணியை தரமாக்க, வண்ணத்துணியை அதன் தராதரம் பார்க்க இறுதியில் சிறிய அளவிலான துண்டு வெட்டி சரி பார்த்துக் கொள்கிறார்கள். சேர்த்த கலவை சரியில்லை என்றாலோ சேராத சாயங்கள் சிரித்தாலோ எட்டு அலசலுக்குப் பிறகு மேற்கொண்டு இரண்டு அலசலில் அந்த துணி வண்ணமாய் ஈரத்தோடு சிரிக்கும்.

ஓவ்வாரு அலசலுக்கும் பிறகு அந்த தண்ணீர் தேவையில்லாமல் வெளியேற்றப்படுகின்றது. மீண்டும் புதிய தண்ணீர்.  ஒவ்வொரு முறை வெளியேறும் தண்ணீரும் சோடாவாக, ஆசிட்டாக, அடர்வேதியல் சாயமாக, குழாய் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. குழாய்கள் வழியே செல்லும் இந்த சாயத்தண்ணீர் அருகே உள்ள சாக்கடை வழியே சென்று இறுதியில் நொய்யல் ஆற்றில் கலந்து கரூர் வரைக்கும் சென்றடைகின்றது. ஈரோடு என்றால் பவானி தாண்டி பயணிக்கும்..

பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறையால் ஆனது. சில இடங்களில் நூறு அடிகளில் ஆழ் குழாய் இறங்கும். ஆனால் இறக்க உதவும் எந்திரங்கள் கண்ணீர் விடாமலே கதறும். இத்தனை இறுக்கமான பூமியில் மிச்சமான பாறைக்குழி என்ற வட்ட வடிவ குளம் போன்ற குட்டைகள் இங்கு ஒவ்வொரு இடங்களிலும் அதிகம் உண்டு,

இந்த இடம் தான் இன்று வரையிலும் பல சாய நிறுவனங்களுக்கு பொக்கிஷம். கழிவு நீர் வெளியேற்ற எந்த வசதியும் செய்யாமல்  இருக்கும் முதலாளிகள் நடு இரவில் டேங்கர் வண்டியில் சாயத் தண்ணீரை  கொண்டு வந்து ஊற்றி விட்டு காணாமல் போய் விடுவார்கள். அருகே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் விழித்து பார்ப்பதற்குள் அந்த குட்டை நீரில்  வாழ்ந்த உயிர்கள் செத்து மிதந்து கொண்டிருக்கும்.

ஒரத்துப்பாளையம் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும், எதிர்ப்பு காட்டிய விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இன்று பொது சுத்திகரிப்பு நிலையம், தனியாருக்குச் சொந்தமாக சுத்திகரிப்பு நிலையம் என்று பல வசதிகள் வந்து உள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளிலும் இருக்கும் சாயப்பட்டறைகள் தாங்கள் வெளியேற்றும் இந்த கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். சுத்திகரித்த பிறகு உப்பில்லாத சாயமில்லாத தண்ணீராக பயன்படுத்த முடியும்.  ஆனால் செலவு பிடிக்கும் சமாச்சாரம்.  பின்பற்ற விரும்பாமல் கொள்ளை லாபம் வேண்டி இன்று வரைக்கும் பலரும் நடு இரவு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மாதமானால் மாமூல்.  சென்னையில் இருப்பவர்களுக்கு தேவைப்படுவது மாதாந்திர அறிக்கை.

இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர்.

ஒரு நாளைக்கு திருப்பூரில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் தோராயமாக பத்தாயிரம் கோடி லிட்டர். 1400 நிறுவனங்கள் சுறுசுறுப்பாக சாயமேற்றி சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.  நல்ல அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் ராக்கோழி போல திடீர் வருகை தந்து இன்று 700க்கும் குறைவான நிறுவனங்களே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிலர் செலவு செய்ய முடியாமல் இழுத்து மூடி விட்டு சென்று விட்டனர்.  பலர் அதிகாரிகள் எப்போது எந்த பாதையில் வருவார்கள் என்று ஆட்கள் வைத்து தடம் கண்டு கொண்டு இருக்கின்றனர்.

கற்பனையில் கொண்டு வாருங்கள். உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ? இந்த சாய நீர் பயணித்து வரும் பாதை மட்டுமல்லாமல் பயணிக்காத பாதையிலும் இதன் கெமிஸ்ட்ரி உருவாக்கும் கழிவுகள் அத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்?

அகமதாபாத்தில் குடிசை தொழிலாக தொடங்கிய சாயங்கள் தரம் வாரியாக தகுதியான நிறுவனங்களால் முத்திரை குத்தப்பட்டு உள்ளே வந்து கொண்டே இருக்கிறது.  நாளுக்கு நாள் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.  அதுவே இன்று குறிப்பிட்ட சாயங்கள் தான் உபயோகிக்க வேண்டும் என்ற பன்னாட்டு சட்டதிட்டங்களால் ஸ்விஸ் முதல் ஜெர்மனி வரை அத்தனை நாடுகளிலும் இருந்து சாயங்கள் இறக்குமதியாகிக் கொண்டுருக்கிறது.

எத்தனை முறை சிவகாசி வெடி விபத்து நம்மை விசும்ப வைத்ததாலும் பல லட்சம் மக்களின் வயிற்றுப்பிரச்சனையாக இருப்பதால் நாங்கள் பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை ஏதோ பசியில்லாமல் வாழ முடிகின்றது என்ற சமூக அமைப்பால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.

திருப்பூருக்கு என்று ஒரு ராசி. எல்லா ஊர்களிலும் மழை வராதா என்ற ஏக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இங்கோ வந்த மழை எப்போது நிற்கும் என்று ஏக்கமாய் இருக்கும். காரணம் சாயமேற்றப்பட்ட ஆடைகளுக்கு வெயில் இருந்தால் தான் சிறப்பு. மழை தொடர்ந்து கொண்டே இருந்தால் ஈரமாக இருக்கும் ஆடைகளை உலர வைக்க காசு செலவழிக்க வேண்டும்.

மழை தொடர பல ஏற்றுமதி நிறுவனங்களின் வங்கிக் கணக்கும் ஒழுகத்தொடங்கி பல சமயம் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும்,  மழை நிற்கும் போது திருப்பூரைச் சுற்றியுள்ள அத்தனை வயல்பிரதேச தண்ணீரும் ஒன்றாக ஓடி வந்து கால்வாயில் கலக்கும் போது நமக்கு அந்த கலங்கிய சாயத் தண்ணீர் பலவற்றையும் புரிய வைக்கும். சென்னையைப் போலவே திருப்பூரையும் மழை வந்து தான் ஒவ்வொரு முறையும் சுகாதாரப்படுத்தி விட்டுச் செல்கின்றது.

மொத்த நிறுவனங்களின் சாயக் கழிவுக்ளும் கடைசியில் சென்றடையும் இடம் ஓரத்துப் பாளையம் அணை தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக குளித்தலை வரைக்கும் சென்று விடும் போலிருக்கிறது.பல நாட்கள் காத்து இருந்து மழை பெய்ய, வந்து சேரும் நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட அத்தனையும் பாழாகிப் போய்விடுகின்றது..

சாயப்பட்டறை கழிவுநீரால் நிரம்பி வழியும் ஒரத்துப்பாளையம் அணை

ஓரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயர்வு,சாயக்கழிவு கலந்த நீரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

செய்தித்தாளில் படிக்கும் போது பலருக்கும் இதன் விபரீதம் புரிவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வருகின்ற தண்ணீரை தேக்கிவைக்க அனுமதியில்லை. தண்ணீரை நம்பி வாழும் மனிதர்களும், கால்நடைகளும், விவசாய நிலங்களின் தற்போதைய நிலையை விரைவில் நாம் ஆவண படமாக பார்க்க வாய்ப்புள்ளது.

காரணம் மழை நீரை தேக்கி வைத்தாலும் கலந்து வருகின்ற சாய நீரால் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஜீவன்கள் இறந்து உருவாக்கும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டு மக்களும் வாழப் பழகிவிட்டார்கள். அரசாங்கமும் அமைதியாய் இருக்கிறது..

பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமே முதல் குறி.  உள்ளுரில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் வந்து இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பும்படி தனியாகவே குட்டி உற்பத்திக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் விரும்பும் உற்பத்தியையும் தரத்தையும் கொடுக்கின்றார்கள்

ஆனால் உள்ளுரில் இருக்கும் எந்த பெரிய நிறுவனங்களும் இந்த சாயக்கழிவால் அடுத்து வருகின்ற தலைமுறையே அழியப் போகும் அவலத்தை செய்து கொண்டுருக்கின்றோம் என்பதை உணர்வதே இல்லை. டாலர் சிட்டியின் இலாபம் நீரின் சுத்தத்தை அழிக்கும் வில்லனாக உள்ளது.  இங்கே ஒற்றுமையும் இல்லை.  உரக்கச் சொல்ல தைரியமும் எவரிடமும் இல்லை,

___________________________________________________________
– ஜோதிஜி
___________________________________________________________

  1. திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா? | வினவு!…

    உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ?…

  2. வாசிக்க வாசிக்க விரக்தியும் கோபமுமே மிஞ்சுகிறது!
    ஆம்பூர் தோல் பதனீட்டு தொழிற்சாலைகள் பாலாற்றை பாழாக்கியது நினைவுக்கு வருகிறது.

    உண்மை நிலையை அறியத் தந்த ஜோதி அவர்களுக்கும் பகிர்ந்த வினவுக்கும் நன்றிகள்!

  3. I am having agriculture backround and from Erode,
    This problem continued now itself, a company in Bhavani having their factory near by the river, located around 10 feet, they are having pipe connection from the factory to midside of the river, if they release the waste water that will goes directly midside of the river and nobody can’t know the waste water mixing. chennai silks also doing the same but they are not into the river they are mixing the Kalingarayan tunnel, already lot of complaints made against them but there is no result, lot of small factories are doing the same, former minister nkk periyasamy and his son nkkp raja are collecting huge money from the companies to avoid the search and further actitivites, pollution control officiers are behind with them, then where can you file the complaint.

  4. தீர்வு இருக்கா … யாராவது ஒருத்தர் , மனசாட்சியுடன் அந்த கழிவு நீரை வைத்தோ, அல்லது அதை சுத்தமாகி .. புல்லோ , மரமோ , செடியோ உண்டாக்கி இருக்கலாம் . அப்படி உண்டாக்கி இருந்தால் அதை பற்றியும் குறிப்பிடவும் ..இல்லை என்றால் குறைந்த பட்சம் கோவை வேளாண்மை கல்லூரியில் விசாரித்தால் , இது போன்ற நீரில் எந்த மாதிரி மரம் அல்லது செடி வளரும் என்று சொல்லவதற்கு வாய்ப்பு உண்டு ..அந்த விவரங்களை ஏதேனும் பொது தொண்டு நிறுவனம் அல்லது … அரசியல்வாதி … அல்லது சில நல்ல மனிதர்களிடம் தெரிவிக்கவும் ..இது நீங்கள் அல்ல , கட்டுரையை படிக்கும் – சமயம் மற்றும் சந்தர்ப்பம் உள்ள சிலர் கூட செய்யலாம்

    • சில கூடுதல் தகவல்கள்:

      தற்போது நடைமுறையில் உள்ள சுத்திகரிப்பு முறைகள் அத்தனை வெற்றிகரமானவை அல்ல. முதலில் இதில் கழிவுநீரில் உள்ள நிறங்கள் நீக்கப்பட்டு பிறகு அதில் உள்ள அமில அல்லது காரத்தன்மை சமநிலைப் படுத்தப்படுகிறது. இதற்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் இது கூடுதல் திடக் கழிவுகளுக்கே வழிவகுக்கும். திடக்கழிவுகளை வருடக்கணக்கில் மலை மாதிரி இங்கு கொட்டிவைத்திருக்கிறார்கள் (இது மழை நாட்களில் கரைந்து மண்ணுக்குள் போகிறது). இப்போதைக்கு வெளியேற்றப்படும் ஒட்டுமொத்த கழிவுநீருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறனுக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. பெரும்பாலால கழிவுகள் சுத்திகரிரிக்கப்படாமல் திருட்டுத்தனமாகவே வெளியேற்றப்படுகிறன (ஒரு நிறுவனத்தில் தினம் பொக்லைன் மூலம் குழிவெட்டி அதில் கழிவுநீரைக் கொட்டி அன்றே மூடுகிறார்கள்).

      கடலுக்குள் கழிவுநீரை அனுப்புவது இன்னும் அநியாயம். ஏற்கனவே கடலில் ஊர்பட்ட கழிவுகள் கொட்டப்படுகின்றன. ஈரோடு கரூர் விவசாயியின் வயிற்றில் அடித்தது போதாது என்று கடலையும் குப்பத்தொட்டியாக்க வேண்டுமா?

      மாற்று சுத்திகரிப்பு முறைகள் என்று எத்தனை கொண்டுவந்தாலும் கழிவுகள் ஏதோ ஒருவகையில் நம்மிடம் தங்கியே தீரும். சாயமிடுவதற்கான இடுபொருட்களை குறைப்பதோ அல்லது ஆபத்தில்லாத பொருட்களை பயன்படுத்துவதோதான் சரியான மற்றும் மலிவான தீர்வாக இருக்க முடியும். ஆனால் இந்த பாதையில் நாம் ஒரு அங்குலம் கூட நகரவில்லை.

      இன்னும் சில மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுடன் அதில் தங்கியிருக்கிற ரசாயனங்களில் அளவும் குறிப்பிடப்பட்டாக வேண்டும் (ரீச் ரெகுலேஷன் என்று பெயர்). ஏனெனில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வரும் ரசாயனங்களின் அளவை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இது அவசியம். அதில் ரிலீசபிள் மெட்டல் கண்டெண்ட் மற்றும் மெட்டல் கண்டெண்ட் என்று இரு சோதனைகளை ஆடைகள் கடந்தாக வேண்டும், கூடுதலாக உலோக பொருட்கள் இருப்பின் ஆடைகள் நிராகரிக்கப்படும். இவை முறையே ஆடையை துவைத்தால் வெளியேறும் கன உலோக பொருட்களையும், துணியை தூக்கியெறிந்தால் அங்கு மண்ணில் சேரப்போகும் கழிவையும் கட்டுப்படுத்த கொண்டுவரப்படப்போகும் நடைமுறை. நம் நாட்டு சூழலை இதனுடன் ஒப்பிட்டுப்பாருங்கள், நாம் சூழலியலில் எத்தனை தூரம் பின்தங்கியிருக்கிறோம் என்பது புரியும்.

      • வில்லவன் உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். குறிப்பாக எதிர்காலத்தில் வெளிநாட்டு மக்கள் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பார்கள் என்ற விசயத்தை. நன்றி.

      • ///மாற்று சுத்திகரிப்பு முறைகள் என்று எத்தனை கொண்டுவந்தாலும் கழிவுகள் ஏதோ ஒருவகையில் நம்மிடம் தங்கியே தீரும்.///

        No. there are technologies which exist, as i had already commented here about the pilot project at Tup by a NRI scientist from USA. the intial cost in higher but zero discharge is possible. there is demo DVDs but so far no takers. and PCB is careful to kill this project in spite of it being approved by NEERI (a govt institute at Nagpur).

        and the current technology of RO plants in CETPS is not suitable. RO process is only fit for desalination of saline water into potable water. the govt and PCB and the dyers made a terrible mistake in going in for this technology. there was utter ignorance, cynicisim and corruption is selection of this tech. as you had mentioned, the sludge that gets accumalted as a end product is again toxic and cannot be disposed off easily.

    • சுந்தர் பிரச்சினையின் ஆழம் புரியாமல் மரம் வளரும் செடி வளரும் என்று அடித்து விடாதீர்கள். அந்த தண்ணீரில் ஒன்றும் வளராது. வெட்டி வேர் பயிருடுவதன் மூலம் நீண்ட கால அளவில் அதன் நச்சுத்தன்மையை குறைக்க முடியம் என்கிறார்கள் ஆனால் அதற்கும் நல்ல நீர் வேண்டும். @அதியமான் என்ன தான் zero discharge என்றாலும் கூட அதனால் உருவாகும் திடக் கழிவுகளை எங்கும் கொட்ட முடியாது.
      இப்பொழுது ஆர் .ஒ பிளான்ட் அமைத்தவர்கள் கூட திடக் கழிவுகளை மூட்டைகளில் கொட்டி வைத்துள்ளார்கள். பல்லடம் சாலையில் பயணிக்கும் பொழுது சில சாயப் பட்டறைகளில் இதை பார்க்கலாம்.
      மழை பெய்து நிலத்தில் கலந்தால் அதுவும் நேரடியாக கலப்பதைப் போன்றது தான்.
      இதற்கு ஒரே தீர்வு சவுத் இந்திய விஸ்கோஸ் மூடப் பட்டது போல இந்த தொழிலை மூடுவது தான். ஆனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்று சொல்லி ஒரு நிரந்தர அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.இப்பொழுதே ஈரோடு பகுதிகளில் புற்று நோய் பாதிப்பு அதிக அளவில் உள்ளது
      இதை திரு ஈரோடு கதிர் அவர்கள் எழுதி இருந்தார்.சுட்டி நினைவில் இல்லை.
      இங்கே நடப்பது வளர்ச்சி அல்ல வீக்கம் அது வெடிக்கும் பொழுது தான் அதன் வீரியம் புரியும். நண்பர் ஜோதிஜி அவர்கள் அந்த தொழிலில் இருந்து கொண்டே அதை விமர்சிக்கிறார் அதற்க்கு தீர்வுகளை சொல்லாமல்.அப்படி ஏதேனும் ஒரு தீர்வு இருந்தால் அதை வெள்ளைக்காரன் முன்பே செய்திருப்பான்.இந்தத் தொழிலின் ஒவ்வொரு படியுமே மாசு தான்.
      ஸ்பின்னிங் மில்,நிட்டிங், மற்றும் production ஆகிய நிலைகளில் – பஞ்சு –ஆஸ்த்மா, சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் சாயமிடுதலில்- நீர், நில மாசுபாடுகள். வெள்ளைக் காரனுக்கு இந்த தொழிலெல்லாம் தெரியாமல் இங்கே ஆர்டர் கொடுப்பதில்லை அவனுக்கு அவன் நாடு தூய்மையாக இருக்க வேண்டும் அவ்வளவே. ஆனால் இங்கே என்ன நிலைமை இந்த தொழிலில் இருப்பவர்கள் ஏதோ யாரும் செய்யாத தொழிலை செய்பவர்கள் போல பந்தா காட்டுவார்கள்.வெற்று ஆடம்பரங்களில் மூழ்கி இருக்கிறார்கள்.

  5. நிறைய வருத்தமான தகவல்களைத் தந்த கட்டுரை.
    இந்த அரசியல்வாதிகளும், தொழிற்சங்க வாதிகளும் நகரின் இந்நிலையைக் காக்க அல்லது அழிக்க என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

    நாட்டின் தொழிற்ப் புரட்சி பற்றியும், உலகளாவியம் பற்றியும் (சமீபத்தில் விஜய் டி.வி. நீயா நானாவில் குளோபலைசேஷன் பற்றி பேசினர்) வாய்கிழியப் பேசும் நகரத்து மேல்தட்டு தொழில் வல்லுநர்களும், தொழில்ப் புரட்சிகளே நம் வாழ்க்கையை முன்னேற்றும் என்று நம்புகிற அப்பாவி பொதுசனமும் இருக்கிறவரை திருப்பூர் போன்று புதையும் நகரங்கள் மேலும் மேலும் உருவாகும்.

  6. எல்லோரும் வெள்ளை துணி மட்டும் உடுத்தி நமது எதிர்ப்பைக் காட்டலாம் அல்லது இந்த பிரச்சனையிலிருந்து ஒரு இடைக்காலத் தீர்வாக செய்யலாம்

  7. திருப்பூர் மட்டுமல்ல! எங்கள் கொங்குச் சீமை,முக்கிய நகரங்களான சேலம்,ஈரோடு, திருப்பூர், கருர் சாயக்கழிவுப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு சிறந்த வழி! மாசுப்பட்ட நீரை, ஒரளவு சுத்தம் செய்து, குழாய் வழியாக எடுத்துச் சென்று, கடலுக்குள், சில நூறு கி.மீ தூரம் தள்ளி , கலக்கி விட வேண்டும்!

    • ரம்மி கடலில் கலப்பது எல்லாம் தீர்வே அல்ல. கடலில் கலந்தால் கடல் தானே என்று எந்த process இம் செய்யாமலே அப்படியே விட்டு கடலை நாசமாக்கி விடுவார்கள். கடல் உயிரினங்கள், போக்குரவத்து எல்லாமே பாதிப்புக்கு உள்ளாகும். கடலில் கலப்பது என்பது பிரச்சினையை வேறொரு இடத்துக்கு மடை மாற்றுவது தான். ஏனெனில் இங்கு இருக்கும் விவசாயிகள் வழக்கு போடுவதில் வல்லவர்கள் அதனால் அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் ஆனால் மற்ற பகுதிகளில் அவ்வாறு இல்லை எனவே அங்கு அனுப்பி பிரச்சினையை முடித்து விடலாம் என்று பார்க்கிறார்கள்.

  8. திருப்பூரின் அவல நிலையை, அபாய நிலையையும் நன்றாக சுட்டிக் காட்டியிருக்கிறார் ஜோதி.

    தொடர்ந்து எழுதுங்கள் ஜோதி.

  9. //இருந்த 1984 ல் இந்த துறையில் சுமாராக 30 நிறுவனங்கள் செயல்பட்டு இருக்கலாம். தொடக்கத்தில் பெரிய அளவிற்கு நவீன உபகரணங்கள் இல்லை. ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும். சொந்த இடம், வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து எவர் வேண்டுமானாலும் இந்த தொழிலில் இறங்கலாம் என்ற சூழ்நிலை.

    செவ்வக வடிவில் ஒரு இரும்புத் தொட்டி. 70 லிட்டரில் தொடங்கி 700 லிட்டர் முதல் அதிகபட்ச கொள்ளவு வரைக்கும் கிலோ பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு தொட்டியின் மேல் கம்பி உருளைகள். இதனை இயக்க மின்சார மோட்டார் மற்ற உபகரணங்கள். கம்பி உருளையில் கொண்டு வரப்படும் துணிகள் ஏற்றப்பட்டு, சுழன்று அது தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு சுற்றாக சுற்றி வந்து கொண்டிருக்கும்.//

    ஜோதிஜி

    இப்போது ஓரளவு சாயநீர் கலப்பதை ஒடுக்கி விட்டார்கள் மற்றும் கோர்ட் கேசுன்னு அலைகிறார்கள் சாய ஆலைக்காரர்கள்

    ஆனால்
    1.இத்தனைநாள் பாழ்படுத்திய மண்ணுக்கு
    ஒன்றும் செய்ய முடியாது
    2.இதை செய்ய அனுமதித்த அதிகாரிகளுக்கு
    என்ன தண்டனை
    இனிமேல்

    1.சவ்வூடு பரவல் முறையை கண்டிப்பாக
    புகுத்த வேண்டும்
    2.இல்லாத ஆலைகளை மூட வேண்டும்

    அதுவரை
    சுற்று புற சூழல் என்பது முதலாளித்துவத்தின்
    வாய்க்குள் போன மனித தலைதான்

    • தியாகு இதில் நாகரிகம் கருதி சொல்ல முடியாத விசயங்கள் நிறைய உண்டு. பஞ்சாப் ரவி மற்றும் குமரன் அவர்களும் குறிப்பிட்ட விசயங்களையும் பாருங்கள். நீங்கள் இங்கேயே இருப்பதால் உங்களுக்கும் நிறைய தெரியும். நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தங்களுடைய செயல்பாடுகள் தங்களுக்கே உறுத்தாத வரைக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் ஒரு சமூகத்தின் சீரழிவுக்கே காரணமாக இருக்கிறார்கள்.

      • அதில் உங்களின் பங்கும் உள்ளது என்று சொல்லுங்கள் நீங்களும் ஒரு ஏற்றுமதியாளர் தானே. உங்களைப் பற்றி நீங்களே சொன்னால் அது நாகரீகமாக இருக்காது என்று சொல்கிறீர்களா ?

  10. Vinavu, A very well researched and social conscious article.I have worked in a textile mill (IN pUNJAB AS CHIEF ENGINEER) and the cost for TREATING (purifying!) the dye water is around one paise to two paise per litre only. But the pollution control board in connivance with the mill management turns a blind eye to releasing untreated water in to open rivers and ponds…

    THE CONSEQUENCES ARE VERY VERY SERIOUS ; FIRST IT WILL SEEP INTO THE GROUND WATER TABLE THUS CORRUPTING THE WATRE TABLE.PEOPLE DRINKING THIS SHALL HAVE SERIOS HEALTH ISSUES FROM TB TO OTHER SERIOUS SKIN AND BONE DISEASES.

    IF THIS WATER IS PROPERLY (REPEAT PROPERLY) TREATED IT CAN BE USED IN TOILETS,FOR WATERING LAWNS,TREES ETC .

    THE AUTHOR HAS WELL READ AND RESEARCHED THIS TOPIC EVEN BY MENTIONING THE NAMES OF MACHINES THAT ARE USED AND EXPLAINING THE ENTIRE PROCESS… CONGRATS TO jYOTHI JI.

  11. சமூக சிந்தனையுடனான ஒரு கட்டுரையுடன் வினவு தளத்திற்கு வந்ததற்கு ந்ண்பர் ஜோதிக்கு வாழ்த்துக்கள். சாயமே இது பொய்யடா என்பதற்கான அனைத்து விபரங்களுடன் அலசி காயப்போட்டிருக்கிறீர்கள். காரைக்குடி நகரில் நுழைவதற்கு முன்பாக கோவிலூரில் உள்ள ரசாயன ஆலையினால் அந்த இடத்திலிருந்து குன்றக்குடி வரையிலான சுற்றளவிற்கு நிலம் மாசுபட்டுள்ளது, மதுரையில் விமானநிலையம் அருகில் பேயர் என்ற ஒரு கெமிக்கல் கம்பெனியின் கழிவுகளை பூமிக்குள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் இறக்கிவிட்டது இன்றுவரை ஒரு 4 கி,மீ சுற்றளவிற்கு எங்கு நிலத்தடி நீர் தோண்டினாலும் கோக்கோ கோலா கலரில் தண்ணீர் வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு புகாரோ அல்லது மக்கள் இயக்கம் நடந்து ஒரு கடிதம் சென்றால் உடனடியாக குறிப்பிட்ட கம்பெனிக்கு சென்று “கவனிப்பு” பெற்றுச்சென்றுவிடுவார் அந்த வாரியத்தின் அலுவலர்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நொய்யல் ஆற்றில் (தற்போது முனிசிபல் ஆபீசிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் பாலத்தின் கீழ்) பாறைகள், பிளாஸ்டிக் கழிவுகளுடன் சாயத்தண்ணீர் மட்டுமே உள்ள ஆறாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள்- அரசுத் துறைகள் இவற்றையெல்லாம் தாண்டி மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களால் மட்டுமே இவற்றிற்கு தீர்வு வரும் – சித்திரகுப்தன்

  12. ///பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறையால் ஆனது.///

    நண்பர் ஜோதிஜி,
    இது போன்ற gross generalizations உங்களிடம் இருந்தா ? நீங்களும் ஒரு பணம் படைத்த ‘முதலாளி’ தானே ? ஏற்றுமதியாளர்தானே ? இதே சாயப்பட்டரைகளுக்கு job work கொடுத்து வாங்கும் திருப்பூர் முதலாளிதானே ? பணம் இல்லாதவர்கள் எல்லாம் இளகிய மனம் உடையவர்களா என்ன ?

    சில வாரங்களுக்கு முன் நாம் அலைபேசி மூலம் பல மணி நேரங்கள் பேசியதன் விளைவு தான் இக்கட்டுரை என்று தெரிகிறது. நல்ல கட்டுரை. பல உண்மைகளை வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள்.

    சில புதிய தொழில் நுட்பங்கள் உள்ளன. பிரச்சனைக்கு தீர்வுகள் RO plants, pumping the waste water to the coast of TN, CETP இவை தீர்வுகள் அல்ல. ஊரை ஏமாற்றும் சமாசாரம். Hot bed evaporation என்ற தொழில் நுட்பம் மூலம் zero discharge க்கு வழி உண்டு. அமெரிக்காவில் இருந்து திரும்பிய் இந்திய விஞ்ஞானி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு pilot plant அமைத்து நிருபித்தார். ஆனால் ஊழல் மிகுந்த Pollution Contol Board அதை அமலாக்க தடை செய்தது. போதிய அறிவு இல்லாத சாயப்பட்டரை முதலாளிகளிம் அதை உபயோக்கிக்க தெரியாமல், இன்று திண்டாடுகின்றனர். இதை பற்றி விரிவாக பின்பு சொல்கிறேன்.

    By the way, Why don’t you write here about our ‘discusssions’ about communism and Vinavu here !!

    • தலைவா உங்கள் அக்கறைக்கு நன்றி.

      ஆகா அதியமான்க்கிட்டே பாராட்டு வாங்கிட்டோம்ன்னு நினைச்சுகிட்டு கீழே வந்தால் ஆப்பு பெரிசாவுல எடுத்து சொருக பாக்குறீக்,,,,,,,,,,,,,,

      ஆத்தாடி நான் தப்பிச்சேன்,,,,,,,,,,,,,,

      எப்பூடீடீடீடீடீடீடீடீ

    • அதியாமான் இந்த gross generalization போன்ற வார்த்தைகள் பலருக்கு புரியுமா ? “பொதுமைப்படுத்தல்” என்ற எளிய தமிழிலில் கூறலாமே. தமிழ் வலைத்தளங்களில் முடிந்த அளவு தமிழில் வாதிடலாமே? தமிழில் மிக எளிதாக கலை சொல் ஆக்கங்கள் செய்ய முடியுமே. அதை நீங்கள் செய்தால் எல்லாருக்கும் பயன்படுத்தலாமே.ஆங்கில மேட்டிமைத்தனத்தில் உரையும் அற்பவாத இதயம் என்று கட்டுரை இதே வினவில் வரமால் இருந்தால் சரி

  13. பெரிய நகரங்களில் இருந்து வருகிற கழிவு நீர் ஆற்றில் கலந்து அது போகிற இடங்களில் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஆற்றோரங்களில் இருபக்கமும் வெகு தூரத்திற்கு நிலத்தடி நீரில் உப்பு கலப்பையும் இதர கழிவுபொருட்களினால் மாசு கலந்து விடுகிற கிணற்று போர்வெல் நீரையும் காலங்காலமாக தந்து கொண்டு இருக்கின்றன.
    இத்தகைய ஒரு பாதிப்பை கோவையிலிருந்து வருகிற நொய்யல் நதி செல்லுகிற சோமனூர் மங்களம் போன்ற பகுதிகளில் காணலாம்.
    சாயகழிவுகளை போல இந்த சோப்பு மற்றும் ஏராளமான வீட்டு நகர கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு தான் ஆற்றில் விடபடவேண்டும். ஆனால் யார் இதை பற்றி கவலைபடுகிறார்கள்?
    நீங்கள் ஊட்டியில் சென்றால் பார்க்கலாம். அந்த கிறித்தவ ஆலயதற்கு அருகில் கருகரு என்று நாறுகிற வீட்டு கழிவுகளை சுத்திகரிக்கப்பட்டுகொண்டிருபதை நீங்கள் பார்க்கலாம்.
    அரசு இப்படியான பிரச்சனைகளில் தொழில் செய்பவர்களுக்கு உதவி RO போடச்சொல்லி தொழில் நுணுக்க உதவிகளையும் அளிக்க வேண்டும்.

  14. உண்மை நிலையை உரக்க சொன்ன ஜோதி அவர்களுக்கும் பகிர்ந்த வினவுக்கும் நன்றிகள்.திருப்பூர் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…

  15. திருப்பூர் தொழில்நகரம் பற்றிய சமூக பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுதி வரும் நண்பர் ஜோதிஜிக்கு வாழ்த்துகள்.

    இதற்கு தீர்வு:

    சட்டத்தை கடுமையாக நிறைவேற்றும் அரசாங்கம் + ஊழல் செய்யாத அரசியல்வாதிகள் + சமூக அக்கறையுள்ள தொழிலதிபர்கள்

    நம் நாட்டிலா………..???

  16. idhu kandanagalukkum varthathakkum uriya maaberum akkirimam !
    vilakkamaana katturaikku nandri.
    itharku maatraga iyarkai saayangalai ubayoga paduthalama? athu endha alavu nadai muraiyil saathiyam?

  17. YES..There were technologies, There are technologies, and there would we technologies. But why I should follow? Who would punish me for not following it?
    Are you guys aware that last month 3 of the NTADCL plants were polluting and TNPCL board asked them to close.? Mind it NTADCL is a quasi government company with Tamilnadu state and State of India are stake holders.
    Have a look at this link..
    http://news.fibre2fashion.com/

    தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் சிறை சாலைகள் தேவை இல்லை தானே ? அவன் எப்போது திருந்துவான் ?

  18. இந்த வார கல்கி இதழில் இப்பிரச்சனைக்கு இருக்கும் ஒரு நல்ல தீர்வை பற்றி ஞாநி எழுதிய முக்கிய கட்டுரை இது :

    திருப்பூரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் ?
    http://gnani.net.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%8e/

    http://gnani.net.in/

    • ஞானியின் இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து மிக முக்கியமானதாகத் தெரிகிறது (எனது அறிவுக்கெட்டிய அளவில் சரியானதாகவும்). இது பற்றி திருப்பூர் பகுதி பதிவர்களின் கருத்துக்கள் என்ன? முக்கியமாக இக்கட்டுரையை எழுதிய ஜோதிஜியின் கருத்து என்ன?

      • எழில் உங்கள் கருத்தை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன். இப்போது கார்கி களத்தில் இறங்குப்பா என்றதும் உள்ளே வந்துள்ளேன். திருப்பூர் என்ற சமுத்திரத்தில் நான் ஒரு சொட்டு. நானும் இதே தொழிலில் தான் இருக்கின்றேன் என்பதால் எழில் சொல்வது போல் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் மாட்டேன். அதே சமயத்தில் அளவுக்கதிமாக ஆதரிக்கவும் மாட்டேன். எழில் இருக்கும் பத்திரிக்கை துறையில் உள்ள காகிதம் எங்கிருந்து வருகின்றது? காடுகளை வளர்ப்போம் என்ற கோஷம் இப்போது சற்று ஓரமாக உங்கள் காதுகளில் ஒலிக்கும் சப்தம் கேடகிறதா?

        இருங்க மீண்டும் வருகின்றேன்.

      • திருப்பூரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் ? ஞாநி

        முதலில் இந்த வார…இல்லையில்லை இந்த பத்தாண்டுகளுக்கான பூச்செண்டை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோருக்கு அறிவித்துவிடுகிறேன்.

        கடந்த இருபதாண்டுகளாக நொய்யல் ஆற்றை சாயக்கழிவுகளால் கெடுத்து நாசமாக்கி, லட்சக்கணக்கான விவசாய நிலங்களையும் விவசாயிகள் வாழ்க்கையையும் வீணாக்கிய திருப்பூர் சாயப்பட்டறைகளை உடனடியாக மூடிவிட்டு, ஒவ்வொரு பட்டறையும் ஒரு சொட்டுக் கழிவையும் வெளியில் அனுப்பாத நிலையை அடைந்தபின்னரே திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

        அது மட்டுமல்ல. சீரோ டிஸ்சார்ஜ் என்று சொல்லிக் கொண்டு சூழலை இதுவரை மாசுபடுத்தி வந்த பட்டறைகளை இத்தனை வருடம் அனுமதித்த தமிழக அரசின் மாசுக் ‘கட்டுப்பாட்டு’ வாரியத்தின் அதிகாரிகள் பட்டியலைத் தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க்வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
        இதற்கெதிராக மறு பரிசீலனை மனு போடுவோம் என்று வாரியம் சொல்லியிருப்பது வெட்கக்கேடானது.

        இது தேர்தல் நேரமென்பதால், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறையில் நீர்த்துப் போகச் செய்து சாயப்பட்டறை அதிபர்களை சந்தோஷப்படுத்தும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் இறங்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ‘சூழலைக் கெடுத்தவன்தான் இழப்பீட்டைக் கொடுக்க வேண்டும்’ என்ற தெளிவான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக, தமிழக அரசு பொது மக்களின் வரிப்பணத்தை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தியவர்களுக்கு மான்யமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 320 கோடி ரூபாய் மக்கள் பணத்தை அளித்திருக்கிறது. இது போதாது, இன்னும் வேண்டும் என்று நதி முழுங்கி சாயக்காரர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆற்றை மட்டுமல்ல, கடலையும் கெடுப்போம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.( கல்கி நவம்பர் 2010 ஓ பக்கங்கள்)

        உடனடியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்; உற்பத்தி பாதிக்கப்படும்; அந்நியச் செலாவணி சம்பாதிப்பது பாதிக்கப்படும் என்ற கூக்கூரல்களை எழுப்பி நீதி மன்ற உத்தரவை நீர்க்கச் செய்யும் வேலைகளில் தொழிலதிபர்கள் இறங்குவார்கள். இந்த மிரட்டல்களுக்கு மக்களோ அரசோ அடிபணியக் கூடாது. தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி பூச்சாண்டி காட்டி ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயக் கூலிகளையும் விவசாயிகளையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் இவர்கள். திருப்பூரில் கோடி கோடியாக சம்பாதித்தாலும், விவசாயத்தை சாகடித்துவிட்டு, டைனிங் டேபிளில் தட்டில் சாயப் பட்டறையின் சோடா உப்பையும் குளோரைடையும் பரிமாறினால் உணவாக யாரும் சாப்பிடமுடியாது. நெல்லும் பருப்பும் உற்பத்தி செய்தே ஆகவேண்டும்.

        நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோரின் உத்தரவில் உள்ள முதல் முக்கியமான அம்சம் பற்றி கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். ஒரு சொட்டு கூடக் கழிவை வெளியேற்றாமல் சீரோ டிஸ்சார்ஜ் நிலையை சாதித்தால் மட்டுமே ஒரு சாயப்பட்டறையை திரும்பவும் இயங்க அனுமதிக்கலாம் என்பதே நீதிபதிகளின் உத்தரவு.
        இப்போதுள்ள சுத்திகரிப்பு நிலையங்களால் சீரோ டிஸ்சார்ஜ் நிலையை எட்டவைக்க முடியவே முடியாது என்பதே அறிவியல்படியான உண்மை நிலை.சாயக் கழிவுகளில் வரும் நீரை மட்டுமே இவை சுத்தப்படுத்துகின்றன. ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்.ஓ நிலையங்கள் இவை. நீரை எடுத்த பிறகு திடக் கழிவுகளை சாக்குப் பைகளில் கட்டி, பட்டறை வளாகத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அப்படித்தான் வைத்து வருகிறார்கள்.சோடா உப்பு, குளோரைடுகள், இதர ரசாயனங்களின் திடக்கழிவுகள் இவை.

        ஆர்.ஓ முறையில் பயன்படுத்தும் சவ்வுகள் இரு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காதவை. உண்மையில் இவை கடல் நீரில் இருக்கும் உப்பை அகற்றி நல்ல நீராக்கும் வேலைக்கே சாலச் சிறந்தவை. துணிகளுக்கு சாயம் போடும் பட்டறைகளில், துணியை வெளுப்பதிலிருந்து ( பிளீச்சிங்), வண்ணம் ஏற்றுவது வரைப் பயன்படுத்தும் பல்வேறு ரசாயனங்களுக்கு உகந்தவையே அல்ல.

        இது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பட்டறை அதிபர்களுக்கும் தெரியாதது அல்ல. அதனால்தான் புத்திசாலித்தனமாக நீதிமன்றம் முன்பு வைக்கும் ஆவணங்களில் தொடங்கி, எல்லா இடத்திலும் சீரோ டிஸ்சார்ஜ் என்று சொல்லாமல் சீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது திரவக் கழிவு மட்டும் நிறுத்தப்படும். திடக்கழிவு ? கோணிப் பையில் கட்டிக் கட்டி வாரிசுகளுக்கு சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.

        அப்படியானால் திடக்கழிவையும் வெளிவிடாமல் சுத்திகரிக்கும் முறை இல்லையா? இருக்கிறது என்று தமிழகத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானியே பைலட் ப்ளாண்ட் வைத்து செய்து காட்டியிருக்கிறார். தற்போது 77 வயதாகும் டாக்டர் எஸ்.ஆர்.ராமசாமி அமெரிக்காவில் விஞ்ஞான தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார். தன் உருவாக்கங்களுக்காக ஐந்து அமெரிக்க காப்புரிமைகள் ( பேடண்ட்டுகள்) பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கரக்பூர் ஐ.ஐ.டி, லூயிவில்லி பல்கலைக்கழகம், லண்டன் பலகலைக்கழகங்களிலெல்லாம் படித்தவர்.

        நேரடி ஆவியாக்கும் முறைப்படி இவர் உருவாக்கியிருக்கும் சுத்திகரிப்பு முறையில் திரவக்கழிவு சுத்தமாகி நல்ல தண்ணீராக்கப்படுகிறது. திடக்கழிவுகளில் இருந்து வண்ணமும், மாசுகளும் நீக்கப்பட்டு, சோடா உப்பும், குளோரைடுகளும் மறுபடியும் பயன்படுத்தத் தயாரான நிலையில் மீட்டெடுக்கப்படுகின்றன.

        ஒரு சோதனை ஓட்டமாக, கோவை வசுந்தரா, கரூர் கே.பி.ரங்கசாமி ஆகிய தொழில் முனைவர்களின் ஏற்பாட்டில், திருப்பூர் அருகே சுல்தான்பேட்டையில் ஒரு சாயப்பட்டறையில் இந்த நேரடி ஆவியாக்கல் முறை சுத்திகரிப்பை விஞ்ஞானி ராமசாமி செய்து காட்டினார். வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த முயற்சியில் தினசரி 10 ஆயிரம் லிட்டர் கழிவு சுத்திகரிக்கப்பட்டது.

        இதை நிர்மாணிப்பதற்கு ஆகக்கூடிய செலவு சுமார் 80 லட்சம். ஆனால் இதுவரை போடப்பட்டிருக்கும் ஆர்.ஓ சுத்திகரிப்பு முறையில் இல்லாத ஒரு பெரும் லாபம் இதில் உள்ளது என்று இந்த முனைவர்கள் தெரிவிக்கின்றனர். சோடா உப்பு, குளோரைடுகளை மீட்டெடுப்பதால், ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது. எனவே சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ போட்ட முதலீட்டை இரண்டே வருடங்களில் எடுத்துவிடலாம். அதன்பிறகு சுத்திகரிப்பினால் வருடத்துக்கு 40 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது !
        ஆனால் ஏற்கனவே ஆர்.ஓ முறையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்துவிட்டிருந்தபடியால், மாற்று வழிகளில் அது அக்கறை காட்டவில்லை. தமிழகத்துக்கு வந்து இந்த முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ராமசாமியும் சோர்வுற்று திரும்ப அமெரிக்காவுக்குப் போய்விட்டார்.

        இப்போது தெளிவான, கறாரான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்திருக்கும் நிலையில், இனி வெறுமே சீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் என்றில்லாமல் சீரோ ஆல் டிஸ்சார்ஜை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான தொழில்நுட்பத்தில் ஏன் மாசுக் கட்டுப்பாடு வாரியம் இதுவரை அக்கறை காட்டவில்லை என்று விசாரிக்க வேண்டும். இனி அக்கறை காட்டும்படி உத்தரவிடவேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்றமே ஓர் உயர்நுட்ப வல்லுநர் குழுவை நியமித்து எந்த தொழில்நுட்பம் உகந்தது என்று குறிப்பிட்ட காலத்துக்குள் பரிந்துரைக்கும்படி உத்தரவிடலாம். விஞ்ஞானி ராமசாமியின் தொழில்நுட்ப முறையை அரசோ, சாயப்பட்டறை உரிமையாளர்களின் சங்கமோ சோதனை ஓட்டமாக நிறுவி, மற்றவர்களுக்கு நம்பிக்கை வரச் செய்து காட்டலாம்.
        இதுவரை இருந்த அரைகுறை சுத்திகரிப்பையே பல பட்டறைகள் செய்யாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன. இனி சுத்திகரிப்பை செய்யத் தொடங்கினால் பழைய தவறுக்கு தண்டனை இல்லாமல் அவர்களை அனுமதித்துவிடலாம் என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். அவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து அந்த அபராதத்தொகைகள் நொய்யல் மாசினால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு செலவிடப்படவேண்டும்.

        எப்படியானாலும் இந்த முறை சீரோ ஆல் டிஸ்சார்ஜ் இல்லாமல் மறுபடியும் சாயப்பட்டறைகளை இயங்க அனுமதிக்கவே கூடாது. ராமேஸ்வரம் மீனவர்களை சிங்களப் படைகள் கொல்கின்றன. தமிழ் விவசாயிகளை தமிழ் தொழிலதிபர்களே சித்ரவதை செய்து கொன்றுகொண்டிருப்பதும் கூடவே நிறுத்தப்படவேண்டும். நம் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் பணம் சம்பாதிக்கும் மன நிலை வந்தால்தான் உண்ஐயில் திருப்பூரைக் காப்பாற்றமுடியும். இல்லாவிட்டால் ஒரு பக்கம் பண மூட்டையும் மறுபக்கம் திடக்கழிவு மூட்டையுமாக அழிவோம்.

        கல்கி 5.2.2011

  19. 1. நான் எழுதத் தொடங்கிய சில மாதங்களில் வேர்ட்ப்ரஸ் இடுகையில் ஆகஸ்ட் 2009 அன்று இந்த சாயப்பட்டறை குறித்து எழுதி இருக்கின்றேன். அப்பா சாமிகளா? தயாநிதி மாறன் ஆட்சிக்கு குறிப்பாக இந்து துறைக்கு வந்துள்ளார். தெளிவான கொள்கை விரைவில் உருவாகபட்சத்தில் விரைவில் மூடுவிழாவை நோக்கி நகரும் என்றேன். அதுவே தான் இப்போது நடந்துள்ளது. 4500 நிறுவனங்கள் இருந்த இடத்தில் இன்று பாதி அளவுக்குத்தான் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
    பஞ்சு நூல் ஏற்றுமதி ஒரு பக்கம் மறுபக்கம் சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சனைகள்.

    2, தீர்வு சொல்லாமல் இருக்கின்றேன் என்று எழில் சொல்லி உள்ளார். நான் என்ன தீர்வு சொல்லி விடமுடியும்? என்னால் செய்யக்கூடியது ஒன்று மட்டும் உண்டு. ஆரோ ப்ளாண்ட் போட்டுள்ள நிறுவனங்களுடன் தான் என்னுடைய தொழில் தொடர்புகள் கடந்த மூன்று வருடங்களாக இருக்கிறது. கிலோவுக்கு ரூபாய் ஐந்து அதிகம் உண்டு என்றபோதிலும். இதை விட வேறொன்றும் என்னால் இந்த விசயத்தில் செய்து விட முடியாது.

    3. எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடலாம்? பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. இதைச் சார்ந்துள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் தெரியப்படுத்துங்கள்.

    4. ஞாநி சொல்லியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து. ஒரு வகையில் என் நண்பர் அதியமான் அப்பா திரு ரங்கசாமி இந்த சுத்திகரிப்பு விசயத்தில் ஆர்வமாக பல விசயங்களை முன்னெடுத்து செல்வது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியே.

  20. ஜோதிஜி,

    ஞானியின் பதிவில் ஏற்கனவே அரசு முதலாளிகளுக்கு சாய நீரை சுத்திகரிப்பு செய்ய மானியம் வழங்குவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    எனது கேள்வி என்னவென்றால், இப்போது புதிதாக அந்த விஞ்ஞானி ( அவர் அதியமானின் அப்பாவா?) சொல்லும் முறையில் செலவு குறைவு என்பதும் இரண்டு வருடத்திலேயே போட்ட காசை எடுத்து விட முடியும் என்கிற உத்திரவாதம் இருப்பது போல் தெரிகிறது. அப்படி இருக்கும் போது, லாபத்தை மட்டும் சுருட்டும் முதலாளிகள் ( நீங்கள் அல்ல என்று நம்புகிறேன் 😉 ) அதில் ஒரு பகுதியை சுத்திகரிப்பு செய்ய செலவிட ஏன் மறுக்கிறார்கள்?

    எனில், லாபம் முதலாளிக்கு – சுமை மக்களுக்கா? (அரசு மானியம் என்றாலும் அது மக்கள் வரிப்பணம் தானே?)

    நீங்கள் இத்தொழிலில் இருப்பதால் இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன் –

    1)ஞானியின் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விடயம் டெக்னிக்கலாக சாத்தியமா?
    2) இத்தனை ஆண்டுகளாக லாபம் பார்த்தவர்கள் இப்போது இந்த விஷயத்தில் ஒரு சின்ன முதலீட்டை செய்யத் தயங்குவது ஏன்? ( இதில் முதலீடு செய்த பணமும் கூட திரும்ப எடுத்து விட முடியும் என்பதாக சொல்லப்பட்டுள்ளதே?)

    • கார்கி,

      ///1)ஞானியின் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விடயம் டெக்னிக்கலாக சாத்தியமா?///

      சாத்தியம். ஒரு pilot plant உருவாக்கி நிருபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுதான் உண்மையில் zero effluent discharge செய்ய ஒரே வழி. ஆர்.வோ கண்டிப்பாக உதவாது. நேற்று திருப்பூர் எம்.எல்.ஏ சட்டசபையில் பேசினார் : ஆர்.ஓ impractical and will not solve the problem என்று.

      ///2) இத்தனை ஆண்டுகளாக லாபம் பார்த்தவர்கள் இப்போது இந்த விஷயத்தில் ஒரு சின்ன முதலீட்டை செய்யத் தயங்குவது ஏன்? ( இதில் முதலீடு செய்த பணமும் கூட திரும்ப எடுத்து விட முடியும் என்பதாக சொல்லப்பட்டுள்ளதே?///

      காரணம் அவர்களின் அறியாமை மற்றும் முட்டாள்தனம். புரிந்து கொள்ள மறுத்தார்கள் / மறுக்கிறார்கள். ஆட்டு மந்தை போல அரசு ஆர்.ஓ டெக்னாலஜி போட சொன்னவுடன் செய்தனர். விஞ்ஞானி திரு.ராமசாமி அவர்களின் சங்க கூட்டத்தில் தெளிவாக இது உதவாது என்று பேசியும், புரிந்து கொள்ளவில்லை. காது கொடுத்து கேட்கவில்லை. இன்று நீதிமன்றம் அவர்களை முற்றாக தடுத்து வைத்துள்ளது. எப்படியாவது லஞ்சம் கொடுத்து, சரி கட்டி, மீண்டும் சாயபட்டறைகளை முன்பு போல நடத்திவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இம்முறை நீதிமன்றம் strict ஆக இருக்கபோகிறது என்றே நம்புகிறேன். பார்க்கலாம்.

  21. இயற்கை சாயங்களை பயன்படுத்தலாம் என்று கூட ஒரு கருத்து முன் வைக்கப்பட்டதாக நினைவு.சென்னையில் உள்ள முருகப்பா ஆராய்ச்சி மையம் சில முன்னேற்றங்களை இதில் கண்டுள்ளதாகவும் படித்தேன். அவர்களுக்கு சுற்றுசூழல் போன்றவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இதே தொழிலில் இருக்கும் எனது நண்பரிடம் நேற்று பேசினேன் அவர் கோர்ட் ஆப்படித்துவிட்டது என்று தான் சொன்னாரே தவிர பிரச்சினையை புரிந்திருக்கவில்லை. இப்பொழுது பங்களாதேஷ் இல் இருந்து துணியை வாங்கி இங்கே தைத்து மட்டும் அனுப்புகிற வேலையும் நடக்கிறது. இது கூட ஒரு வகையில் நல்லது ஆனால் பங்களாதேஷ்க்கு கெட்டது.

  22. வண்ண வண்ண ஆடைகள் தேவைதானா?
    பரிசீலிக்கலாமே! நீண்ட கால நோக்கில்.

    ஆடைகளில் மின்னுவது வண்ணங்களா – இரத்தச் சுவடுகளா?

    http://hooraan.blogspot.com/2011/02/blog-post_06.html

    திருப்பூர்: சாயப்பட்டறைகளின் இரட்டைப் படுகொலை!

    http://hooraan.blogspot.com/2011/02/blog-post.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க