Thursday, December 12, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?

உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?

-

உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?

தென்னாப்பிரிக்காவின்  கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம்.

நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்” என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. “நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.” அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. “நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.”, “நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.”, “புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்” என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை!

போவோர் வருவோரெல்லாம் குரோனியேவைக் காறித்துப்புகிறார்கள். எப்போதுமே கூட்டத்தோடு கூட்டமாக தரும அடி போடுவது மிகச் சுலபமான காரியம். இப்படித்தான் ஒரு விலை மாதுவுக்கு தரும அடி போட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் ஏசு சொன்னார், “உங்களில் பாவம் செய்யாதவர்கள் அவள் மீது கல் எறியுங்கள்.” உடனே அந்த யோக்கியர்கள் அனைவரும் கல்லைக் கீழே போட்டு விட்டார்கள். தானும் பாவிதான் என்றால், கல்லை தன்மீதே எறிந்து கொள்ளலாமே என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? “அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது” என்றார் மாவோ. நெருப்பு மேலே பட்டால் சுடும் என்பது இரண்டாவது பிரச்சினைதான். அந்த நெருப்பை எடுப்பதற்கே நமக்குக் கை வருவதில்லையே, அதுதான் மூல முதல் பிரச்சினை.

குரோனியே நிறவெறி பிடித்த தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஆட்டக்காரன். விளையாட்டையே ஒரு பணம் கறக்கும் தொழிலாகக் கொண்டவர்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இத்தகைய பேர் வழிகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும் பரிசீலனை செய்வதும் நியாயம்தானா என்று சிலர் கருதக் கூடும். நேர்மை, தியாகம், உழைப்பு போன்ற சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு உன்னதமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கற்பது சரியென்றால், இழிந்த பண்புகளைக் களைந்து கொள்வதற்கு இழிந்தவர்கள் எனப்படுவோர் அந்நிலையை எங்ஙனம் அடைந்தனர் என்று அறிந்து கொள்வதும் சரியானதுதான். எனவே, குரோனியே மீதான விசாரணையின் ஊடாக நம்மை நாமே குறுக்கு விசாரணையும் செய்து பார்த்துக் கொள்வோம்.

ஒரு இளைஞனாக தென் ஆப்பிரிக்க அணியில் சேர்ந்தபோது இப்போது கூறுவதைப்போல தேசத்தை, ஆட்டத்தை, அணியை குரோனியே நேசித்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நேசித்திருப்பார். அன்று ஒருவேளை யாரேனும் ஒரு சூதாட்டத் தரகன் தோற்பதற்காகக் காசு கொடுக்க முன் வந்திருந்தால் அதை அவன் முகத்தில் எறிந்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? எறிந்திருப்பார். இன்றோ, அவருடைய பணத்தாசை கூண்டில் ஏற்றப்பட்டவுடன் அவருக்குத் தனது அன்றைய நாட்டுப் பற்று நினைவுக்கு வருகிறது.

கருணாநிதிக்கு அந்த நாளில் அரைக்கால் சட்டையுடன் திருவாரூரில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய காட்சிகள் நினைவுக்கு வருவதைப் போல. காங்கிரசுக்குத் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் போன்றோருக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் அனுபவித்த போலீசு சித்திரவதைகள் நினைவுக்கு வருவதைப் போல. ஒரு மாதிரியாக ஓய்வு பெற்று உறங்கும் முன்னாள் புரட்சிக்காரர்களுக்குத் தாங்கள் ஓய்வு உறக்கமின்றிப் பாடுபட்ட நாட்கள் கனவில் வருவது போல.

தான் இன்னமும் தேசத்தை நேசிப்பதாகத்தான் கருதுகிறார் குரோனியே. “பணத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி” என்று தன்னைத்தானே அவரால் மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. “சூதாடியிடம் கை நீட்டிய அந்தத் தருணம் என்பது கம்பீரமான வாழ்க்கையில் நேர்ந்த ஒரு எதிர்பாராத சறுக்கல். நீண்ட தெளிந்த நீரோடையில் கலந்த சிறு கசடு” என்று அவர் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார். தவறிழைத்தவர்கள் பலரும், “அது தனக்கே தெரியாமல் தன்னில் நிகழ்ந்த விபத்து” என்றே நிரூபிக்க முயல்கிறார்கள். தன்னுடைய இயல்புக்கே முரணான இந்த இழிசெயலை எப்படிச் செய்தேன் என்று தனக்கே புரியவில்லை என்கிறார்கள். இப்படியொரு பதிலால் திகைத்துத் தடுமாறும் மனைவிமார்கள் “எம் புருசன் சொக்கத் தங்கமாச்சே. அந்தச் சிறுக்கி என்ன மருந்து வைத்து மயக்கினாளோ” என்று மந்திரவாதியிடம் ஓடுகிறார்கள். நாம் மந்திரவாதியிடம் ஓடத் தேவையில்லை. அதைவிட சூதாட்டத் தரகனிடம் கை நீட்டிக் காசு வாங்கும்போது குரோனியே எப்படிச் செயல்பட்டிருப்பார் என ஆய்வது பயன் தரும்.

ஒரு ஊழல் சிந்தனை செயல் வடிவம் பெறும்போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத்துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான். குரோனியே ஒரு தூய கிறித்தவ நல்லொழுக்க சீலர். கிரிக்கெட் அணிக்குள்ளேயே இருந்த பைபிள் குழுவின் தலைவர். எனவே அணியில், தான் மட்டும்தான் சபல புத்திக்காரனா, தனக்கு ‘தோழர்கள்’ இருக்கிறார்களா என்று அவர் அறிய விரும்புகிறார். “இந்த ஆட்டத்தில் தோற்றால் இத்தனை ஆயிரம் டாலர் கிடைக்கும் என்ன சொல்கிறீர்கள்” என்று போகிற போக்கில் ஒரு நகைச்சுவை போல சக வீரர்களிடம் எடுத்து விடுகிறார். இவன் கிண்டல் செய்கிறானா ஆழம் பார்க்கிறானா என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதை சிரித்து ஒதுக்குகிறார்கள், புரிந்தவர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.

இப்போது குரோனியே தனி ஆள் இல்லை. அணிக்குள் ஒரு ஊழல் அணி இருக்கிறது. ஊழல் அமைப்பு ரீதியாகத் திரண்டு விட்டது. இனி அது தன்னுடைய தரும நியாயங்களைப் பேச வேண்டும். “நான் காசு வாங்கியது உண்மை. ஆனால், அதற்காக எந்த ஒரு ஆட்டத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் குரோனியே. அதனால்தான் “தேசத்தை நேசிக்கிறேன் பணத்தையும் நேசிக்கிறேன்” என்று கவிதை சொல்கிறார்.

ஒரு போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு நிர்வாகம் ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறது. ஒரு விசேடச் சலுகையாகத்தான் நிர்வாகம் அதைச் செய்கிறது. ஆனால், அதற்காகத் தொழிலாளர்களின் கோரிக்கை எதையும் அவர் விட்டுக் கொடுத்ததாக நிரூபிக்க முடியாது. விட்டுக் கொடுக்கவில்லை என்றே கொள்வோம். அவ்வாறு விட்டுத் தரவில்லை என்பதே அவர் பெற்ற சலுகையை நியாயமாக்கி விடுமா? மற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்காத அந்தச் சலுகை தனக்கு அளிக்கப்படுவது குறித்து அவர் கூச்சப்படவில்லை; அதைப் பெறுவதற்காக அவர் வெட்கித் தலைகுனியவுமில்லை. தொழிலாளர் கோரிக்கையை விட்டுத் தரவில்லை எனும்போது இந்தச் சலுகையைப் பெறுவதில் தவறென்ன என்று கேட்கிறார். அனைவருக்கும் வேலை என்பதுதானே கட்சியின் முழக்கம், அதில் என் மகன் மட்டும் கிடையாதா என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறார். இப்படிப் பேசுவதற்காக அவர் கடுகளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் அவருடைய தரத்துக்குச் சான்று. ஒரு வரியில் சொன்னால், குரோனியே கூறுவதைப் போல, இவர் சேவையையும் நேசிக்கிறார், சன்மானத்தையும் நேசிக்கிறார். திருவாரூரில் புறப்பட்ட கழகத் தொண்டர் சன் டிவி அதிபரான கதையும் இதுவேதான்.

தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஒரு அடிமட்ட கட்சித் தொண்டனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் தலைவர்களே சுருட்டிக் கொள்கிறார்களென்றும் தன்னைப் போன்ற தொண்டனுக்கு ஆட்சியால் பயனில்லை என்றும் அலுத்துக் கொள்வான். “ஒரு வேலைவாய்ப்பு, ஒரு புறம்போக்கு நிலம், ஒரு காண்டிராக்டு… எதுவுமே இல்லையென்றால் எதற்காகத்தான் பாடுபட்டோம்?” என்று மிக யதார்த்தமாகக் கேட்பான். “தம்பி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதல்லவா உன் லட்சியம்” என்று கேட்டால், “நானும் ஏழைதான்; என்னுடைய சிரிப்பில் இறைவனைப் பார்த்துக் கொள்” என்பான். பதவியை மேல்துண்டு என்றும், கொள்கையை வேட்டியென்றும் உவமானம் சொன்னவர்கள் இன்று ஊரறிய அம்மணமாக நிற்கும்போதும் தங்கள் இடுப்பில் வேட்டி இருப்பதாகத்தான் விளக்கம் சொல்கிறார்கள்.

தெலுங்கானா உழவர் போராட்டத்தைச் சித்தரிக்கும் ‘மாபூமி‘ என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயியின் மகனான கதாநாயகன், விவசாயிகளுக்கு நிலத்தைப் பிரித்து விநியோகம் செய்கிறான். தனக்கும் நிலம் ஒதுக்குமாறு மகனிடம் கெஞ்சுகிறான் தந்தை. ஊருக்கெல்லாம் கொடுத்து முடித்தபின் எஞ்சியிருக்கும் ஒரு துண்டு நிலத்தைத் தந்தைக்குக் காட்டுகிறான் மகன். முதலில் தந்தைக்கு நிலத்தை ஒதுக்கி விட்டு, “நான் தந்தையை நேசிக்கிறேன் மக்களையும் நேசிக்கிறேன்” என்று அவன் கவிதை சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் அந்தக் கவிதை அவனை வில்லனாக்கியிருக்கும். குரோனியேவைப் போல. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குரோனியே பணத்துக்காக நாட்டுக்கும் அணிக்கும் துரோகம் செய்து விட்டதாக இந்தக் கணம் வரை ஒப்புக் கொள்ளவில்லை. அதுவும் இதுவும்தான் என்கிறார்.

காசுக்குப் பாய் விரிப்பவள் காதலி அல்ல, சன்மானத்திற்கு எதிர்பார்த்து செய்யும் வேலை சேவை அல்ல என்று தெரிந்தும் ‘அதுவும் இதுவும்தான்’ என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள். அதுவும் இதுவும் என்ன இன்னும் பலதும் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை. இவற்றில் அதுவா இதுவா என்று தெரிவு செய்ய வேண்டிய தருணங்கள் பல வருகின்றன. பல நேரங்களில் அந்தத் தெரிவு வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது. சிறியதொரு சறுக்கல் என்று நீங்கள் கருதுவது உங்களைத் திரும்ப முடியாத அதல பாதாளத்திலும் கூடத் தள்ளி விடுகிறது. நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.

உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது. ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வின் சோதனைச் சாலை சமூகம். நீங்களோ நோயாளி அல்ல குற்றவாளி.

உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள். ‘அதுவும் இதுவும் தான்’ என்று குரோனியே சொன்னதைப் போல நீங்களும் ஒரு புதிய கவிதை சொல்லக் கூடும்.


சூரியன், புதிய கலாச்சாரம், ஜூலை, 2000

நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்! – வெளியீடு 2006


வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?…

    அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது!…

  2. மிகச்சிறந்த பதிவு
    ///உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள்///
    சரியான வார்த்தைகள்

  3. //கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை//

    //நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல//

    //உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது.//

    எழுதப்படிக்கத் தெரிந்த அனைத்து மானுடருக்குமான கட்டுரை

  4. //பல நேரங்களில் அந்தத் தெரிவு வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது. சிறியதொரு சறுக்கல் என்று நீங்கள் கருதுவது உங்களைத் திரும்ப முடியாத அதல பாதாளத்திலும் கூடத் தள்ளி விடுகிறது. நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.
    //

    முற்றிலும் உண்மை. மகிழ்ச்சி என்பது போராட்டம் என மார்க்ஸ் சொன்ன வரிகளின் வலிமையை உணர முடிகிறது

  5. ஒரு ஊழல் சிந்தனை செயல் வடிவம் பெறும்போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத்துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான்

  6. அவசியமான கட்டுரை. மனிதர்கள் தங்களை எப்போதுமே எடைப்போட்டு கொண்டுயிருக்க‌ வேண்டும். கண்டிப்பாக அதற்கு உதவும் கட்டுரை.அவ்வப்போது இந்த மாதிரி கட்டுரைகளை போடுங்கள்.

  7. அடுத்தவன் செய்யும் தவறை கண்டால் வரும் கோபம் நம்மால் அதை செய்ய முடியவில்லையே என்பதால் தானோ எனும் அளவிற்கு குற்ற உணர்வை தருகிறது இந்த கட்டுரை. பதவி வந்ததும் அதனுடன் வரும் சுகங்கள் எவ்வளவு பெரிய மனிதனையும் மல்லாக்க தள்ளி விடுகிறது.ஆனால் தனி மனிதர்கள் ஒரு பதவியில் அமர்ந்து ஆளாமல் ஒரு செறிவான விதிமுறை ஆட்சி செய்தால் இதற்க்கு வாய்ப்பில்லை . கோக் கம்பெனியும் பெப்சி கம்பெனியும் நம் நாட்டு பட்ஜெட்டை போல் பல மடங்கு பணத்தை பல நாடுகளில் தினந்தோறும் கையாள்கிறார்கள்.ஆனால் ஒரு பைசா கூட யாரும் எடுத்து விடாதபடி ஒரு வழிமுறையை வகுத்து பணத்தை எடுத்து விடுகிறார்கள்.மேலும் பணம் கைக்கு கை மாறும் ஒரு பொருளாக இல்லாமல் அவரவர் கணக்கில் புள்ளிகளாக இருந்தால் பணத்துக்காக மற்றும் பணத்தால் நடைபெறும் அனைத்து குற்றங்களும் குறைந்துவிடும் எவனும் பதுக்க முடியாது கணக்கில் வராமல் ஒரு பைசாவும் இடம் மாறாது.

  8. //தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஒரு அடிமட்ட கட்சித் தொண்டனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் தலைவர்களே சுருட்டிக் கொள்கிறார்களென்றும் தன்னைப் போன்ற தொண்டனுக்கு ஆட்சியால் பயனில்லை என்றும் அலுத்துக் கொள்வான்.//
    சரியான வார்த்தைகள், எத்தனையோ நாட்கள் நானே இதை பற்றி நண்பர்களிடம் புலம்பியிருக்கிறேன். எனக்குள்ளும் ஒரு பிழைப்புவாதி இருந்திருக்கிறான் என நான் சில நாட்கள் முன்பு என்னை நான் அறிந்தேன். தூக்கி வீசினேன் இந்த குடும்ப ஆட்சியை.

    தெளிவாக இருக்கிறேன் வினவு. இனி என் வாழ்நாளில் ஒருபயலுக்கும் ஓட்டுபோட மாட்டேன்.

  9. மிகவும் உண்மை.

    பிழைப்புக்காக கொள்கையையும், நெறிகளையும், ‘இந்த ஒரு தடவை மட்டும்’, ‘இந்த அளவில் மட்டும்’ என்று விட்டுக் கொடுப்பவர்கள் திரும்பி வர முடியாத ஒரு பாதையினுள் நுழைந்து விடுகிறார்கள்.

    ’20 வயதுகளில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் இதயம் இல்லாதவன், 30 வயதுக்கு மேல் கம்யூனிஸ்டாக இருப்பவன் பிழைக்கத் தெரியாதவன்’ என்று ஏதோ சொல்வார்கள்.

    ‘பிழைக்க வேண்டுமானால் மனசாட்சியை விற்று விட வேண்டும்’ என்பதுதான் இன்றைய உலக நடப்பு. ‘உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது’ எளிதல்ல.

    1. குடும்பத்துக்காக விட்டுக் கொடுக்கும் நாத்திகவாதிகள் (சமீபத்திய வலையுலக சர்ச்சை).
    2. ‘காசை வாங்கி வேலையை முடிச்சுக் கொடுத்தா சரி’ என்று லஞ்சம் கொடுக்கும் ‘லட்சியவாதிகள்’.
    3. தன் குழந்தைகள் வாழ்வதற்காக லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்.
    4. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும் திராவிட தலைவர்கள்.
    5. குளுகுளு அறையில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கும் சோஷலிஸ்டுகள்

    என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

    இப்படித்தான் வாழ வேண்டும் என்று வகுத்துக் கொண்டு அதில் உறுதியாக நின்று வாழ்வது மனித வாழ்க்கை, மற்றதெல்லாம் நாயும் பிழைக்கும் இழிபிழைப்புதான்.

    மனிதர்களாக வாழ்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

  10. //நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல//

    மிகவும் அருமை வினவு! கொஞ்சம் பேர் தவறு செய்துவிட்டு சப்பைக் கட்டு கட்டுவார்கள், தவறு செய்வது மனித இயல்பென்றும், அப்படிச் செய்யாதவர்கள் தம்மைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி சுயமாக ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றும்.

  11. சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லா மனிதர்களையும் தவறு செய்ய வைக்கிறது. காந்தியடிகளின் சுயசரித்திரத்தில் சூழ்நிலை அவரின் உணர்ச்சியை எவ்வாறு தூண்டிவிடுகிறது என்று விவரித்திருப்பார். உண்மையில் வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடையே..! நாம் எல்லாரும் நடித்துக்கொண்டு தானே இருக்கிறோம்..! கருணாநிதி அவரின் வாய்திறந்து எல்லா உண்மைகளையும் சொல்லுவர் என்றால், சேற்றில் உழன்றுகொண்டிருக்கும் எருமைமாடு கூட எழுந்துவந்து அவர் முகத்தில் சாணியடிக்கும்..! இது ஏறக்குறைய எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்..!

  12. //கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை//

    //உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள்//

    //நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.//

    கண்ணாடியை போன்றுள்ளது இந்த கட்டுரை. தினமும் பார்த்துகொண்டால் தான் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளமுடியும்.

  13. “உங்களுக்குள் பிழைப்புவாதி இல்லையா” என்ற இந்தக் கட்டுரை வினவில் வரும் இதரக் கட்டுரைகளிலிருந்து முற்றிலும் புதுத் தன்மை கொண்டவை. சமூகத்தின் மீதான மதிப்பீடு பங்களிப்பாகவோ, துரோகமிழைப்பதாகவோ, அல்லது ஒதுங்கியிருப்பதாகவோ வினையாற்றும்போது நாம் ஒவ்வொருவரும் அதன் மீது விமர்சனம் செய்வது என்ற அம்சத்தையே முதன்மையாகக் கொண்டிருப்போம். ஆனால் இது அரை உண்மைதான். அல்லது ஒரு முழுமையின் ஒரு பகுதிதான் என்பதை கட்டுரை மிக அருமைமாயக உணர்த்தியுள்ளது. மோசடியையே திறமையாகவும், பிழைப்புவாதத்தையே மரியாதைக்குரியதாகவும் பார்த்து பழகிவிட்டவர்களுக்கு இக்கட்டுரை நிச்சயமாக அவர்களின் பார்வையை நேர் படுத்தும், அல்லது குற்ற உணர்வுக்கு ஆளாக்கியே தீரும் அவர்கள் மனிதர்களாய் இருந்தால்.
    “இன்னைக்கு நாட்டுல எல்லாமே சுய நலவாதிங்கதான். அப்படித்தான் இருக்க முடியும்” என்று கெட்டிதட்டிப்போய் சிந்திக்கும் உருப்படிகளின் ச்றுக்கல்களின் உளவியல் பின்னணியின் வீரியத்தை சுக்கு நூறாக போட்டு உடைத்திருக்கிறது இக்கட்டுரை. போலியின் குணாம்சம் அது எப்பவுமே உண்மையைக் காட்டிக் கொடுக்காது, ஆனால் உண்மையின் குணாம்சம் அது எப்பவுமே போலி இருக்கும் வரை அதைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதைத்தான் வினவு செய்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது வினவு தளத்தில் விவாதிக்கும் ஒவ்வொருவருக்கும் அது பொருந்தாதா?
    அப்படி நாம் பொருத்திப் பார்க்கும் போதுதான் நாம் புதுக் கவிதையாக மாறுவோம். ஏனெனில் “விமர்சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல; அது உணர்ச்சியின் அறிவு.” -மார்க்ஸ்.

  14. Integrity is doing the right thing when nobody is watching.That is what you are trying to convey. To be honest we tend to fall very easily when we live without values. By constantly seeking God’s guidance we can attain integrity.
    To fear God is true wisdaom and to avoid evil is understanding.

    Each human being is accountable to himself and God. When a person make comprises, even in secret. he looses peace. To lead a righteous life, has to be the goal of every single human being no matter how they make money or live or what game they play.

    The questions is this , Are you doing what God wants you to do ?

    The love of money is the root cause of all evil !

    I appreciate the article, well written.

  15. இப்போதைய சூழ்நிலையில் எனக்கு மிக மிக மிக அவசியமான மீள்வாசிக்க வேண்டிய கட்டிரையை பதித்ததிற்கு நன்றி!

    //கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை//

    //நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல//

    //உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது.//

    //இந்த ஆய்வின் சோதனைச் சாலை சமூகம். நீங்களோ நோயாளி அல்ல குற்றவாளி.

    உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள்.////

    இது குற்ற உணர்ச்சியை மட்டும், அதை மட்டுமே ஏற்படுத்தவில்லை! வெறும் குற்ற உணர்வு எதற்கும் உதவாது என்றும் புரிகிறது!
    இது இன்னும் நான் அறுந்து விழவில்லை என்று மீண்டு வருவதற்கான நம்பிக்கையையும் அளிக்கிறது.

    எத்தனை வகையான சந்தர்ப்பவாதங்கள், பிழைப்புவாதங்கள்! அதிலும் முற்போக்கு கொள்கைகளை பேசிக்கொண்டே நுட்பமாக சுயநலத்தில் புகுந்து கொண்டு அதற்கு முதலில் காரணங்கள் சொல்லி தப்பிக்க நினைப்பது (பின்னர் அதுவே நியாயப்படுத்துவது வரை கொண்டு சேர்க்கும்)…

    அனைத்தையும் என்னளவில் அனுபவித்திருக்கிறேன்! அனைத்திலிருந்தும் மீண்டு வந்து கொண்டிருக்கிறேன்!

  16. //“புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்”//

    இந்த வரிகளில் நான் வெட்கித் தலைகுனிகிறேன்… இதே வரிகளை வேறு வார்த்தைகளில் சொல்லி என்னில் குற்ற உணர்வைத் தூண்டி விட்டார் ஒரு நண்பர். ஆனாலும் சூழ்நிலையின் கைதியாய் இருக்கும்போது வெட்கப் படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.

  17. // குடும்பத்துக்காக விட்டுக் கொடுக்கும் நாத்திகவாதிகள் (சமீபத்திய வலையுலக சர்ச்சை).//

    ஒருமையிலேயே நிறுத்திக்கொள்ளலாம்!
    கள் போடும் அளவுக்கு இங்கே கூட்டம் சேரவில்லை, நண்பர்கள் விவாதம் செய்தோமே தவிர ராஜன் செய்தது முற்றிலும் சரி என்ற நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை!

  18. இரக்க உணர்ச்சியைவிட கடமை உணர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதுபோல விமர்சனத்தைவிட சுய விமர்சனம் முதன்மையானது என்பதை உணர்த்துகிறது இக்கட்டுரை.சுயவிமர்சனமற்ற விமர்சனம் என்பது சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பதற்கே வழிவகுக்கும். சமூகப் பொறுப்பை தாங்கிக்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் ஒரு மனிதன், அவர் எந்த கொள்கையின் பின்னால் இருந்தாலும் அவரின் நம்பகத் தன்மையை எடைபோடுவதற்கான முதன்மையான அளவுகோல் எது? நான் வேறு; என் கருத்து வேறு என்று மேதாவித்தனமாக சொல்லிக்கொண்டுத் திரியும் ஆசாமிகளுக்கு இது விளங்காது அல்லது விளங்கமாட்டார்கள்.
    இக்கட்டுரை வாசகனிடம் மறைக்கப்படும் மௌனத்துடன் பேச விழைகிறது. நாம் ஏற்றுக் கொள்ளும் கொள்கையின் மீது நேர்மையிருந்தால் மட்டும் இந்த மௌனத்தை கலைக்க முடியும். எனினும் அதை கலைக்கும் ஆற்றல் இக்கட்டுரையின் வரிகளுக்கு உள்ளதால் என்னையும் வென்றுவிட்டது இக்கட்டுரை.

  19. //கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை.//

    கட்டுரையின் ஒவ்வொரு வரியும் உள்ளே சென்று ஏதோ செய்கிறது. யாருக்கும் தெரியாதே என்று நினைத்து அவ்வப்போது
    சந்தர்ப்பவாதமாய் செய்து கொள்ளும் சின்னச் சின்ன சமரசங்கள் இப்போது கண் முன்னே பூதாகரமாய் நிற்கிறது –
    கட்டுரை அப்படி நிற்கவைத்து விட்டது. சுயபரிசோதனையையும் சுயவிமரிசனத்தையும் தூண்டும் கட்டுரை. இறுதியில்
    நிச்சயம் ஆயாசம் வரவில்லை – நிலமை மோசமாவதற்குள் இப்போதாவது நாம் நினைவூட்டப்பட்டோ மே என்கிற
    நிம்மதியை ஏற்படுத்தியது.

    முன்பே வாசித்தது தான்… ஆனாலும் இதை வாசிக்க இப்போதைவிட வேறு பொருத்தமான சூழல் இல்லை. கட்டுரையை
    வெளியிட்டதற்கு மிக்க நன்றி தோழர்களே.

    • மீள்பதிவுக்கு நன்றி தோழர்களே
      சரியான நேரத்தில் வந்திருக்கிறது

  20. துணிவும், நேர்மையும் இரண்டற கலந்திருந்தால் மட்டுமே இக்கட்டுரையின் வரிகளுக்கு பதில் சொல்ல முடியும். ஆன்ட்டி பயோடிக்ஸ் மருந்தை எடுத்துக்கொண்டால் எப்படி உடலுக்குள் வினையாற்றி ஒருவித எதிர்ப்பாற்றலைத் தருகிறதோ அது போல் இக்கட்டுரையை உள்வாங்கியவுடன் ஒருவித ரசாயனமாற்றத்துக்கு உள்ளானேன்.

  21. இங்கு ஒருவர் சொன்னது போல் பணம் கை மாறும் ஒரு பொருளாக இல்லாமல் அவரவர் கணக்கில் புள்ளிகளாக இருந்தால் யாரும் அதை பதுக்க முடியாது கணக்கில் வராமல் இடம் மாறாது. பணம் காரணமாக குற்றங்கள் நடைபெறாது.வங்கிகளை இழுத்து மூடி விடலாம்.

  22. // நீங்களும் ஒரு புதிய கவிதை சொல்லக் கூடும்.//
    வினவு க்ரூப்பு!, உங்களுக்குள் எதாவது பிழைப்பு வாத கவிதை இருக்கா?
    //அந்த நெருப்பை எடுப்பதற்கே நமக்குக் கை வருவதில்லையே//
    உங்களுக்குள் என்றாவது நெருப்பு இருக்குதான்னு கையை உங்களுக்குள்ளயே வைத்து பார்க்க
    தோணியிருக்கா?

  23. வினவு கும்பலே பஸ்ஸில் கல்வெட்டு கேட்டிருப்பதற்கு என்ன பதில்

    *************************

    Balloon MaMa – **

    சமரசங்களற்ற வாழ்வு வாழ்கிறேன் என்று இன்றைய உலகில் (சார்ந்து வாழும் வாழ்வியல் நடைமுறை) யாரும் சொல்லமுடியாது சிவா. தனக்கென வகுக்கப்பட்ட கொள்கைக்குள் வாழ்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அந்த கொள்கை மற்றவர்பார்வையில் தவறாகத் தெரியும்.

    *********************
    பிரதர் ,
    நீங்க கோக் குடிக்காதீங்க அது அமெரிக்க பானம்.

    ஆனா அமெரிக்காரன் நடத்தும் பிளாக், ட்வீட்டர், அப்புறம் டொமைன் சர்வீஸ் எல்லாதுலேயும் வெக்கம் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
    கோக் அமெரிக்க பானம் அதைக் குடிப்பவன் மொள்ளமாறி, அமெரிக்கா நாடு சரியில்லை என்று கதறும் இவர்கள் எந்த அடிப்படையில்

    பிளாக்கர் (பல தோழர்களின் பதிவு முகவரி பிளாகர்தான்)

    ஈமெயில் vinavu@gmail.com
    பேஸ்புக் http://www.facebook.com/vinavungal

    அமெரிக்க நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்துகிறார்கள்?

    அப்புறம் வினவு டாட் காமிற்கு டொமைன் சர்வீஸ் செய்யும் அமெரிக்க கம்பெனி
    Registrar: FastDomain Inc.
    Provider Name….: BlueHost.Com
    Provider Whois…: whois.bluehost.com
    Provider Homepage: http://www.bluehost.com/

    Bluehost Inc.
    1958 South 950 East
    Provo, UT 84606

    என்று ..தங்களின் வசதிக்கு ஏற்ப பயன்படுத்துக் கொள்கிறார்கள் .தமிழ்மணமே அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். அதில் இவர்கள் ஏன் இணைந்து உள்ளார்கள்?

    நாளை இவர்களும் கோக் குடித்தால் அதை நியாயப்படுத்த அது செந்நிறமாக உள்ளது என்று நியாயப்படுத்துவார்கள்.

    ***************

    சிவா,
    நீங்கள் பஸ்ஸில் போனாலும், இரயிலில் போனாலும் அல்லது ஆட்டோவில் போனாலும் உங்களையும் மீறி உங்கள் கொள்கைக்கு எதிரான பிறரின் சேவையை நேரடியகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். இது சார்பு நிலை :-(((

    நீங்கள் பயணம் செய்யும் பஸ்ஸிற்கு போடப்படும் பெட்ரோல் அல்லது ஆட்டோவிற்கு போடப்படும் பெட்ரோல் ரிலையன்ஸ்லிருந்து போடப்பட்டதா என்று கேட்டு ஏறுவீர்களா?

    நீங்கள் வாங்கும் பாலின் பாக்கெட் “பாலி எத்திலீன்” மூலம் எது என்று தேடிப்பாருங்கள். அது அப்படியே அம்பானியின் ஜாம்நகர் பெட்ரோலியம் ரிபைனரியில் நாப்தாவாக ஆரம்பித்து ஹஜிரா பிளாண்டில் உள்ள “பாலி எத்திலீன்” பிளாண்டில் இருந்துவரும்.

    நீங்கள் போடும் சட்டைக்க்கு மூலமான “பாலி டெரிப்தாலிக் ஆசிட்” ஏகபோக இந்திய மார்கெட் அம்பானிகளின் கையில் என்ன செய்யப் போகிறீர்கள்?

    அவரவர் அவர்களுக்கான அளவுகோளை வைத்துள்ளார்கள்.

    சமரசம் அற்ற வாழ்க்கை என்பது செத்தால்கூட இல்லை. சாகும்போது எரிக்கப் பயன்படும் மின்சாரம் , ஏதோ ஒரு கிராமத்தை மூழ்கடித்து கட்டப்பட்ட அணையில் இருந்து வந்திருக்கலாம்.

    **

    • ///உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள்.//////

      🙂 🙂

      • /////உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள்.//////

        🙂 🙂 //

        பாலூன் மாமாவின் புதிய ஒழுக்கத்துக்கு இன்னொரு பெயர் உண்டு. அது ‘பக்கத்துக்கு இலைக்கு பாயாசம்’

  24. நம்ம அண்ணன் ஆன வரைக்கும் பார்த்தார்… பருப்பு வேகலைன்னதும் குடுகுடுன்னு பஸ்ஸுக்கு ஓடிப்போய் பலூனை தூக்கிக் கொண்டு வந்துள்ளார். வந்தது தான் வந்தார், சொந்த
    பேரிலேயே வந்திருக்கலாம். இதுக்கும் போலியா? இதுவும் ஒரு பிழைப்பா? சொந்தப் பேரில் வந்து ‘சூரியன் நல்லா எழுதறார்; மத்தவங்களும் அப்படியே எழுதுங்களேன்’ என்று
    நீட்டி முழக்கி விட்டு முக்காடைப் போட்டுக் கொண்டு எங்கோ ஏதோ ஒரு @#$@# உளரியதை தூக்கிக் கொண்டு வந்துள்ளார்.

    கம்யூனிஸ்ட் என்பவர்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்து, பூமியிலிருந்து இரண்டடி மேலே மிதந்தவாறே, இந்த சமூகத்தைக் ‘காப்பாற்றி’ கடைத்தேற்றும் அவதாரங்கள் அல்ல என்பது
    பலூன்மாமாவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இங்கே அதை எடுத்துப் போட்டிருக்கும் ‘முக்காடுக்கு’ தெரிந்திருக்கும் – அப்புறம் ஏன் எடுத்துக் கொண்டு இங்கே ஓடிவந்துள்ளார்?
    எல்லாம் Fat தான் காரணம். கொலஸ்ட்ரால் தான் காரணம்! நான் கல்வெட்டு aka பலூன் மாமாவை விமர்சிக்கவில்லை – ஏனெனில் அவர் எப்போதும் தன்னை கம்யூனிஸ்டு என்று
    அறிவித்துக் கொண்டவரல்ல.

    ஒரு சமூகம் அதன் தற்போதைய நிலை மறுத்து புதிதாய் ஒழுங்கமைவதை – அதாவது ஒரு புதிய சமூகம் பிறப்பதற்கு உதவும் மருத்துவச்சி தான் கம்யூனிஸ்டு. அதற்கு அவர் அந்த
    சமூகத்தில் வாழ வேண்டும் முதலில். இங்கே பலூன் குறிப்பிடும் நவீன பொருட்களெல்லாம் (கூகிள், டிவிட்டர் தொடங்கி லேட்டஸ்ட் மாடல் செல்போன், சட்டை வரை) தொழிலாளிகளின்
    உழைப்பு இன்றி சாத்தியமாகியிருக்காது. நுகரும் எந்த பௌதீகமான பொருளும் இயற்கையின் வளம் ஏதோவொன்றிலிருந்து உருவானது தான் – அந்த வளங்கள் எல்லோருக்கும்
    பொதுவாக்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்டு கோருவது.

    ஒரு சமூதாயத்தின் மாற்றத்தில் கம்யூனிஸ்டின் பங்கு கிரியாஊக்கி போன்றதே; அதற்கு அவர் அந்த சமூகத்தில் வாழ்வது அவசியம். பேஸ்புக், ட்விட்டர்… சட்டை பனியன் போன்றவைகளை
    முதலாளிகளின் உழைப்பு என்று உரிமை கொண்டாடுவது அடிப்படையற்றது. அது முதலாளிக்குச் சொந்தமானதுமல்ல அவரது உழைப்புமல்ல – அது இலட்சக்கணக்கான தொழிலாளிகளின்
    உழைப்பில் இருந்து உருவானது. அது சமூகமயமான உழைப்பிலிருந்து கிளைப்பது.

    சமூகமயமான இந்த உழைப்பின் பலன் தனிமனித சுவீகாரத்தில் சென்று தீர்வது முதலாளித்துவத்தின் அடிப்படை – அதன் பலன்கள் சமூகத்தைச் சேர வேண்டும் என்பது கம்யூனிஸ்டின்
    திட்டம். நடப்பு சமூகத்தில் கிடைக்கும் வசதிகளை ஒரு கம்யூனிஸ்டு நுகர்வது அதன் வசதிகளை அனுபவித்து அதில் மூழ்கிக் கிடப்பதற்கல்ல – அந்த வசதிகளைப் பயன்படுத்தி அதை
    அனைவருக்குமாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கே.

    நம்ம அண்ணன் சில நாட்களுக்கு முன் ஒரு பஸ் விட்டார் “வினவு பேசுவது கம்யூனிசம்- ஆனால் வினவின் சர்வர் அமெரிக்காவிலிருந்து ஹோஸ்ட் ஆகிறது” என்று. இதைத் தான்
    டோண்டு நாலு வருசத்துக்கு முன் கேட்டார் – “கம்யூனிஸ்ட்டுகள் விண்டோ ஸும் மௌசும் பயன்படுத்துகிறார்களே” என்று. இப்போது தான் அண்ணன் நாலுவருசத்துக்கு முந்தைய
    டோண்டுவின் அறிவு வளர்ச்சியை அடைந்துள்ளார். இன்னும் பயனிக்க வேண்டியது நிறைய உள்ளது – வாழ்த்துக்கள் கங்கானி சார்!

  25. “நாமும்,நம் தினமணியும் திருத்தி கொள்ளமுடியுமா – இத் தவறை”???

    கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள்!!!

    “அரசு எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி.”-

    தினமணியில் வரும் கவர்ச்சி நடிகையின் -Face Book Login: லோகோ படங்களை பார்த்து/ ரசித்து தானே பதிலளித்து வருகின்றோம் -முதலில் நாமும், நம் தினமணியும் திருத்தி கொள்ளமுடியுமா – இத் தவறை???

    நடிகை ரச்சனா மவுரியா Eg:Dinamani – Tamil Daily News Paper,epaper,latest tamil news,politics,tamil movies,Photo Gallery) -38 people recommend this.

    http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=549536&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

    http://www.dinamani.com/edition/default.aspx

  26. “இந்த முதல்வன் கதையையே எனக்காகத்தான் ஷங்கர் பண்ணார்… ஆனா நான் நடிக்க முடியாம போச்சு!”

    நாலடியார் அவர்கள் – நாலாம் வகுப்பு மாணவருக்கான ” நாலடியார்” பாடல்களை படித்து பக்குவமடையவேண்டும். ஹி..ஹி..ஹி.. நம்ம …….ள அடிச்சுக்கணும்.
    ஆசை யாரைத் தான் விட்டு வைத்துள்ளது???

  27. “இந்த முதல்வன் கதையையே எனக்காகத்தான் ஷங்கர் பண்ணார்… ஆனா நான் நடிக்க முடியாம போச்சு!”- விஜய்

    நாலடியார் அவர்கள் – நாலாம் வகுப்பு மாணவருக்கான ” நாலடியார்” பாடல்களை படித்து பக்குவமடையவேண்டும். ஹி..ஹி..ஹி.. நம்ம …….ள அடிச்சுக்கணும்.
    ஆசை யாரைத் தான் விட்டு வைத்துள்ளது

  28. நான் இந்த கட்டுரையை பலமுறை வாசித்துள்ளேன்-மிக நேர்த்தியான கட்டுரை. பல தோழர்கள் உண்மையுடன் வாழ்வதையும் சில தோழர்கள் பிற்போக்குதனமாக இருப்பதையும் கண்கூடாக கண்டபின் என்னை நான் செதுக்கி கொள்ள சரியான பாதையில் செல்ல இந்த கட்டுரையும் பயன்பட்டது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க