Thursday, July 18, 2024
முகப்புஅரசியல்ஊடகம்அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!

அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!

-

கொலைகார நோக்கியா
நோக்கியா வளாகம்

நோக்கியாவின் நூறு மில்லியன் இலாபவெறிக்காக கொல்லப்பட்ட தொழிலாளி அம்பிகாவின் உடல் நேற்று(1.11.2010) மாலை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.  அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டார்கள். இன்று(2.11.2010) மாலை இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை வளாகம் முழுவதும் தொழிலாளிகள் நிரம்பி வழிந்தார்கள். அம்பிகாவோடு பணியாற்றிய சில பெண் தொழிலாளிகளும் அங்கிருந்தார்கள். அம்பிகாவின் தாயார் இடிந்து போன நிலையில் தரையில் கதறிக் கொண்டிருந்தார்.

எமது தோழர்கள் தொழிலாளிகளிடம் பேசினார்கள். இதற்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவதின் அவசியத்தை எடுத்துரைத்தார்கள். ஆனாலும் நமது எதிர்பார்ப்புக்கிணங்க அங்கு அற்புதம் ஏதும் நடைபெறாது என்பதே யதார்த்தம். தொழிலாளிகளை வழிநடத்தும் தொழிற்சங்கமோ, முன்னணியாளர்களோ இல்லாமல் இருக்கும் தொழிலாளிகள் ஒட்டு மொத்தமாக ஒரு கையறு நிலையில் இருந்தார்கள்.

அவர்களிடம் கோபம் இருந்தது என்று சொல்வதை விட விரக்தியே அந்த வளாகத்தை ஆக்கிரமித்திருந்தது என்று சொல்லலாம். தி.மு.க சார்பில் குப்புசாமி, சி.பி.எம் சார்பில் எம்.எல்.ஏ மகேந்திரன், மற்றும் சில அ.தி.மு.க பிரமுகர்கள் மருத்துவமனையில் வைத்து நோக்கியா நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நிவாரணம், குடும்பத்தினருக்கு வேலை என்ற வழமையான சடங்கு சம்பிரதாயங்கள் பேசப்பட்டன. அதிலும் கூட நோக்கியா தரப்பு எட்டாம் தேதி பதில் சொல்வதாக அறிவித்துவிட்டது.

கொலைகார நோக்கியா
குப்புசாமி (தொ.மு.ச )

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாட்படையாக செயல்படும் தி.மு.வின் தொ.மு.சதான் அதிகாரப்பூர்வமான தொழிற்சங்கம். அந்த சங்கத்தை மயிரளவிற்கு கூட தொழிலாளிகள் மதிப்பதில்லை. தி.மு.க பிரமுகர்களும் மேல்மட்ட அளவில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பொறுக்கி தின்பதோடு தொழிலாளர்களையும் நாட்டாமை செய்யும் உள்ளூர் தாதாக்களாக வலம் வருகிறார்கள். சி.பி.எம் கட்சியோ இதை தகர்க்க முடியாமல் தொழிலாளர்களை போர்க்குணத்தோடு திரட்ட முடியாமல், அரசியல் உணர்வை ஊட்டாமல் சம்பிரதாயமான தொழிற்சங்கவாத்த்தில் மூழ்கி இப்போது அதையும் செய்ய இயலாத அவல நிலையில் இருக்கிறது.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை கட்டியதற்காக சி.ஐ.டி.யு தலைவர்கள் உட்பட பல தொழிலாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போதும் ஒரகடம் பி.ஒய்.டி எனும் நோக்கியாவிற்கு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளிகள் சி.ஐ.டி.யு தலைமையில் போராடுகிறார்கள். அந்த போராட்டத்தை முடக்க நினைத்த நிர்வாகம் கதவடைப்பு செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கும் முயன்று வருகிறது.

தமிழ்நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனைத்திலும் இதுதான் நிலைமை. இங்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் அரசுடன் செய்யும் ஒப்பந்தத்திலேயே தொழிலாளர்களின் உரிமையை பலிகொடுக்கும் விதிகள் பட்டவர்த்தனமாய் இடம் பெறுகின்றன. தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது.

கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த பின்னணியும் சூழலுமே காரணங்கள்.

கொலைகார நோக்கியா
அம்பிகாவின் தாய்

நோக்கியா தொழிற்சாலை முழுவதும் சி.சி.டி.வி காமராக்கள் இருக்கின்றன. தொழிலாளிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதில் பதிவாகின்றன. இந்த கண்காணிப்பை வைத்து தொழிலாளிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அருகாமை தொழிலாளியிடம் பேசினால் கூட இங்கு குற்றம் என்பது சட்டம். எனில் அம்பிகா கொலை செய்யப்பட்ட காட்சி கூட அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என்று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே? உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா?

அம்பிகாவை ஒரு ரோபோ தாக்கியதால் பலியானார் என்றுதான் அநேக ஊடகங்கள் ஒரே மாதிரியாக பேசுகின்றன. அதுவும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போகிற போக்கில் நாளிதழின் மூலையில் தெரிவிக்கப்படுகின்றன. எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம் என்று இன்னமும் பல தொழிலாளிகள் பேசுகின்றனர். ஆனால் இந்த உண்மையை நிர்வாகம் வதந்தி என்கிறது.

பழுதடைந்த அந்த எந்திரத்தை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் புதிய எந்திரத்தை அங்கே வைத்துவிட்டதாக தொழிலாளிகள் கூறினார்கள். ஏதாவது கண்துடைப்பு விசாரணை வந்தால் கூட எந்திரத்தில் பாதிப்பு இல்லை என்று சொல்லிவிடலாம் அல்லவா? எதிர்பார்த்தது போல தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை வைத்து ஒரு விசாரணையை நடத்தப் போகிறதாம்.

நோக்கியா வளாகத்தில் இருக்கும் ஒரு அறை மருத்துவமனை என்ற பெயரில் இயங்குகிறது. ஒரு செவிலியர் அங்கு வரும் தொழிலாளிகளுக்கு ஒரு வெள்ளை மாத்திரை கொடுத்து சர்வ நோய்களையும் குணமாக்கிவருகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் இருக்கும் தொழிற்சாலையில் குறைந்த பட்ச வசதிகள் கொண்ட மருத்துவமனையோ, அவசர சிகிச்சைக்கான வசதிகளோ இல்லை எனும் போது அரசு எதை விசாரிக்க போகிறது?

நோக்கியாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் எல்லா பத்திரிகைகளையும் தொடர்பு கொண்டு தாங்கள் அளித்த, அளிக்க போகின்ற விளம்பரங்களை நினைவுபடுத்தி இந்த கொலையை மறைக்க வேலை செய்கிறார்கள். அதன் விளைவயும் ஊடகங்களில் பார்க்கிறோம்.

கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதை அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் வெளியிட்டன. பொது மக்களிடம் எழும் மனிதாபிமானத்தை மாபெரும் பொது நடவடிக்கையாக மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதே ஊடகங்கள் நோக்கியாவின் கொலையை பார்க்க மறுப்பதற்கு என்ன காரணம்?

அரசியலற்ற மனிதாபிமானம்தான் அவர்களுக்கு தேவை. கோவையில் இரு குழந்தைகளை கொன்ற அந்த கயவனை கைது செய்து விட்டார்கள். கொலை எப்படி நடந்த்து என்று கண்டு பிடித்துவிட்டார்கள். இனி துரித கதியில் விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும்.

ஆனால் அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார்மேலும் எந்த புகாரும் இல்லையே? இது தற்செயலா, இல்லை திட்டமிட்ட தந்திரமா?

காஞ்சிபுரம் கலவைக்கு அருகே உள்ள கிராமத்தில் இந்நேரம் அம்பிகாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டுவிடும். சில நூறு தொழிலாளர்களை தவிர அங்கு வேறு யாருமில்லை. இன்றைக்கு கூட நோக்கியாவில் உற்பத்தி நடக்கிறது. விடுமுறை இல்லை. தொழிலாளிகள் அதை புறக்கணித்துவிட்டு அம்பிகாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருக்கிறார்கள். தூரம் காரணமாக நிறைய பெண்தொழிலாளிகள் வரவில்லை.

தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த இரண்டு கோடி மதிப்புள்ள எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். மதிப்பிட முடியாத நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை தமது வர்க்க கோபத்தால் தொழிலாளிகள் உடைத்தால் இனி வரும் அம்பிகா போன்ற தொழிலாளிகளை காப்பாற்றலாம். இறந்து போன அம்பிகாவுக்கான நீதியையும் பெறலாம்.

___________________________________________________________________________________________

–          வினவு செய்தியாளர்கள், நோக்கியா ஆலை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…..
___________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை! | வினவு!…

  தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்…

 2. //ஆனால் அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார்மேலும் எந்த புகாரும் இல்லையே? இது தற்செயலா, இல்லை திட்டமிட்ட தந்திரமா?//

  நிச்சயமாகக் கவலைப்பட வேண்டும்தான். நீங்கள் சொல்வது போல அவர்களுக்கு அரசியலற்ற மனிதாபிமானம்தான் தேவை. அதை நன்றாகவே அறுவடை செய்கிறார்கள்.

 3. நோக்கியாவும், நிசானும் இந்தியாவில் தொழில் தொடங்கும் நோக்கமே இதற்கு தான். இங்கு ஒரு தொழிலாளியின் உயிரை விலை பேசிடலாம். எந்திரங்களின் மதிப்பை மரியாதையை விட மனிதருக்கு குறைவாக மதிப்பு கொடுத்தால் போதும்.

  பின்லாந்தில் இதே விபத்து மரணம் நிகழ்ந்து இருந்தால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும்.

  நாம் தான் இணைந்து நீதி கிடைக்க செய்ய வேண்டும்.

  • உண்மை… பின்லாந்தில் மட்டுமல்ல.. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் கூட இது போன்று நடந்து ஒரு உயிர் போயிருந்தால் மொத்த நிறுவனத்தையும் சூ… (sue என்று படிக்க) பண்ணியிருப்பாங்க

 4. //அரசியலற்ற மனிதாபிமானம்தான் அவர்களுக்கு தேவை. கோவையில் இரு குழந்தைகளை கொன்ற அந்த கயவனை கைது செய்து விட்டார்கள். கொலை எப்படி நடந்த்து என்று கண்டு பிடித்துவிட்டார்கள். இனி துரித கதியில் விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும்.//

  பதிவர் சஞ்சய் காந்திகூட ஒரு பதிவு எழுதியிருந்தார். அவர் நோக்கியாவில் படுகொலையான அம்பிகாவிற்கு பதிவு வேண்டாம், ஒரேயொரு பின்னூட்டமாவது எழுதுவாரா என்பது சந்தேகமே?

  கோவை கொலையை எழுதினால் மனிதாபிமானி, நல்லவன், சமூக அக்கறையுள்ளவன் என்று பெயர் கிடைக்கும். அதிலும் சுட்டுக் கொல்லனும், தூக்குல போடனும்னு எழுதினால் புரட்சிக்காரன்னு கூட பேர் கிடைக்கும். அம்பிகா கொலையை எழுதினால் என்ன கிடைக்கும்னு கூட அவர் நினைக்கலாம்.

 5. //தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//

  இது முற்றிலும் உண்மை! அம்பிகாவின் மரணம் அப்பட்டமான கொலை, இந்த ஒட்டு பொறிக்கி நாய்களுக்கும்! பொறிக்கி தின்னும் பத்திரிகைகாரனுக்கும் இதுபற்றி கவலை இல்லை. தொழிலாளிகள் ஒன்றுபடவேண்டும்.

 6. ரோபார்ட் என்று செய்தி ஊடகங்களுக்கு பொய்யான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
  ஈவிரக்கமில்லாத பண்ணாட்டு கம்பெனி அப்பட்டமான வணிக நோக்கத்தை காட்டியுள்ளது… வெளிவந்த செய்தி இது .வெளிவராதது எவ்வளவோ?

 7. நான் அம்பிகா பேசுகிறேன். போன தலைமுறையின் கனவுக்கன்னி என்று படிக்க வந்திருந்தால் தயவுசெய்து திரும்பிப் போங்கள். கையில் அழுக்கும் முகத்தில் கருப்புமாக கையில் தூக்குப் பாத்திரத்துடன் அதிகாலையில் பயர் ஒர்க்ஸ் கம்பெனிக்கும் ஜின்னிங் பேக்டரிக்கும் ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை அம்பிகா நான்.

  நான் நேற்றைக்கு மரணமடைந்தேன். அது விபத்துதான் என்று எனக்கு ஆதரவாக பேசுபவர்களும் சொல்கிறார்கள். நான் பூமியில் பிறந்த சம்பவம் விபத்தாக இருந்திருந்தால் இதுவும் விபத்துதான். துரதிர்ஷர்டவசமாக நான் அப்படி பிறக்கவில்லை. சாவுக்கு என் பிணம் ஒதுங்கிய அப்பல்லோ மருத்துவமனையில்தான் அந்த கட்டப்பஞ்சாயத்து நடந்த்தாக கேள்விப்பட்டேன்.

  கேள்விப்பட்டேன் என்ற சொல் உங்களுக்கு கிண்டலாக தோன்றலாம். நான் உயிரற்ற சவம், எனக்கு எப்படி தகவல் பரிமாற்றப்பட்டிருக்கும் என நினைக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கும பலருக்கும்தானே நோக்கியா கம்பெனிக்குள் தகவலை பரிமாறிக் கொள்ள முடியவில்லை. உங்களது தலைக்கு மேல் பெரியண்ணன் போல ஒட்டிக் கொண்டிருந்த காமரா வில் எத்தனை பெண்களின் அந்தரங்க பகுதிகளை சில வெறிநாய்கள் ரசித்திருக்கும். திருடர்களும் பொறுக்கிகளும் உள்ள சிறையின் சில பகுதிகளில் கூட இல்லாத அந்த காமராவை வறுமை என்ற சொல்லுக்கு எதிராக முதலாளிகள் நிறுத்தியபோது நாம் வாயடைத்து போய் அடிமைச் சமூகத்தின் அடிமைகள் போலத்தானே நடந்து கொண்டோம். சம்பளத்தை குறைப்பதற்காக இவர்கள் எத்தனை முறை போட்டுக் காண்பித்தார்கள் அந்த காமராவை. என் கழுத்து அறுபட்டதை அந்த காமிரா படம் பிடிக்க மறந்திருக்குமா. தர்க்கரீதியான அறிவு அக்கேமிராவுக்கு இருந்திருக்குமா எச்ஆர் மேனேஜர் போல என எனக்கு தெரியவில்லை.

  எதிர்பாராத ஆயிரத்தில் ஒரு சம்பவம் என வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம். நடந்த்து ஒரு சூதாட்டம் என்றால் அதில் நான் பங்கு பற்றியிருந்தால் ஒத்துக்கொள்வேன் இக்கூற்றை. ஆனால் இது நான் வாழ நினைத்த வாழ்க்கை. நடந்த்து ஒரு சூதாட்டம் என்பது என் தலைக்கும் உடலுக்கும் நடுவில் அந்த கில்லட்டின் இருந்தபோது எனக்கு புரிந்த்து. ஆனால் முரண்நகையாக தொழிலாளி வர்க்கமே தனக்குத்தானே சூட்டிக்கொண்ட அடிமைத்தனத்தையும் யூனியன்வாதம் மாத்திரமே பேசும் சின்ன சின்ன குண்டூசிகளையெல்லாம் எதிர்கொள்ள இயலாத போது பூக்களை மாத்திரமே அணிந்த என் கழுத்துப்பகுதிக்கு கில்லட்டின் சுமையாக தெரியவில்லை.

  நான் அம்பிகா பேசுகிறேன். நேற்றும் அதற்கு முந்தைய நாளுக்கும் முந்தைய நாளெல்லாம் உங்களுக்கு மத்தியில் நடந்து பேசி சிரித்து சண்டையிட்டு விளையாடிய தோழி பேசுகிறேன். காது இருப்பவர்கள் கேட்க கடவர்கள். சிலருக்கு இச்சொற்கள் அயற்சியாக இருக்க கூடும். இன்னும் சிலரோ 500 ரூபா சம்பளத்தில் குறைந்தால் என்ன இதுக்காக ஏன் தலய கொடுத்தாள் என்றும் கேட்க கூடும். என் அப்பாவை என் தாயை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் தந்தையும் தாயும் இவர்களை விட கொஞ்சம் குண்டாக இருந்திருக்க கூடும். ஆனால் உன் அப்பனும் என் அப்பனும் 2500 கோடியில் மும்பையில் வீடுகட்டும் அளவுக்கு வசதியாக இருந்தால் நம்முடைய பாதங்கள் சுங்குவார் சத்திரத்துக்கு பதிலாக பைவ் ஸ்டார் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோத்தேக்களுக்கு போயிருக்கும். சிக்கிய தலை நமது மேனேஜரின் தலையாக இருந்திருந்தால் அல்லது முதலாளியாகவோ இருந்திருந்தால் என்னை மீட்டெடுத்த கதையை இன்று எந்திரன் ரோபோ போல கதை எழுதும் பத்திரிகைகள் என்னிடம் பேட்டி கேட்டு ப்ப்ளிஷ் பண்ணி இருக்கும்.

  அந்த புகைப்படத்தை பார்த்தீர்களா அதுதான் என் அம்மா. களை பிடிங்கியும் நாற்று நட்டும் என்னை படிக்க வைத்த தாய். ஆக்கத் தெரிந்த அந்தக் கைகளுக்கு அழிக்கவும் தெரியும். ஆனால் நான் மூத்த மகள். என்னை பிரசவித்த பொழுதை அவள் சபித்துக் கொண்டிருப்பாள். அவளது துயரத்தை யாரால் புரிய முடியும். எனக்கோ திருமணம் முடியவில்லை. தாய்மையின் துயரத்தை என்னால் எப்படி விளக்க முடியும். நேற்று தன் மகளை இண்டர்வியூவுக்கு கூட்டிவந்த தாய் எனக்கு நேர்ந்த்தை கேட்டு அழுதாளாம். ஏழைகளுக்கு மாத்திரம் துயரத்தில் வேறுபாடு இல்லை என்பது அத்தாய்க்கு புரிந்திருக்கிறது.

  எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக நான் பட்டபாடு நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. நோக்கியா கம்பெனியில் வாயிலில் இருந்து இன்னும் நிறைய ஆம்புலன்சில் அம்பிகாக்கள் இனி வெற்றிகரமாக வெளியேறுவார்கள். ஆம் நேற்று உங்களால் அப்பல்லோவில் இருந்து என்னுடைய பிணத்தை தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதமாக மாற்றிட முடியாமல் போனதே.. ஏன் என புரிந்து கொண்டீர்களா.. அரசியல் இன்மைதான் நம்மை தோற்க வைத்த சக்தி என்பதை புரிந்து கொண்டீர்களா. என்ன புரிந்து என்ன பயன் என்கிறீர்களா அல்லது மாண்டவர் மீள்வரோ என கவிதை படிக்கிறீர்களா.. அல்லது என் தம்பிக்கு வேலை தருவார்களா என்பதை நோக்கி உங்களை கவனப்படுத்துகிறீர்களா.. என்னுடைய திருமண பத்திரிகையை என்னுடைய அப்பா உங்களிடம் காண்பித்தாரா… எது எப்படியோ நான் உங்களிடம் இருந்து விடை பெற்று விட்டேன். ஒருவேளை என்னிடம் கடைசியாக சண்டை போட்ட தோழிகளிடம் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க அவகாசம் இல்லாமல் போயிருக்கும். அது என்னை வருத்தவில்லை. நடந்த்து விபத்துதான் என்று பேசும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கும் மண்ணில் சொல்லாமல் போவது ஒன்றும் தப்பில்லை என எனக்கு இப்போது புரிகிறது.

  நான் அம்பிகா பேசுகிறேன். இனிமேல் என்னை நோக்கியா அம்பிகா என்றுதான் அழைப்பார்கள். எங்க குலசாமிக்கு நேர்ந்துவிட்ட செம்மறியாட்டுக்கு தலையில தண்ணிய விட்டவுடன மாலய பாத்துட்டு அதுல உள்ள தழைகள திங்கதுக்கு வாயை சந்தோசமா நீட்டும். அந்த மாலதான் தனக்கு போட்ட சவ ஊர்வலத்துக்கான துவக்கம்னு அதுக்கு தெரியாது. நமக்கு மாலைக்கு பதிலா வேலய கொடுத்தாங்க• வேலக்கு ஒரு டார்கெட் வச்சாங்க• இந்த டார்கெட்தான் திருப்பூரின் பஞ்சாலைக்கு சுமங்கலி திட்டம் என்ற பெயரில் தென்மாவட்ட இளம்பெண்களை 25000 ரூபாய்க்கு கொத்தடிமையாக விற்றது. இலவசமாக ஆஸ்துமா கொடுத்த்து. அப்புறம் நடைபிணமாக்கிய திட்டமான அந்த சுமங்கலித் திட்டத்திற்கு தப்பித்து நான் சிக்கிய இடம் இந்த கில்லட்டின் (நான் வேலைபார்த்த இடத்தில் வரும் போர்டுக்கு பெயர் மதர் ஆம். சிரிப்பாகத்தான் வந்த்து.) சுமங்கலி திட்டத்திற்காக திருப்பூர் போன பக்கத்து வீட்டு தனலட்சுமியும் நானும் வேறு வேறு அல்ல• இருவரும் ஒரே கொள்கையால்தான் அரசின் ஏதோ தவறான கொள்கையால்தான் நன்றாக படித்தும் இப்படி வாடுகிறோம் என தெரிந்த்து. ஆனால் என்ன என்றுதான் தெரியாமல் இருந்த்து. அதனை நம்மை அடிக்கடி பார்க்க வந்த சிஐடியூ காரணும் சொல்லவில்லை என்பதற்காக வருந்தாதீர்கள். அவர்கள் வைத்திருக்கும் பெயர் கட்சிகொடியை வைத்து எதனையும் அளவிட்டு விடாதீர்கள் நோக்கியாவை போல•

  நான் நோக்கியா அம்பிகா பேசுகிறேன். ஓ. இந்திய நோக்கியா என்றுதானே சொல்ல வேண்டும். நல்ல வேளை இந்த கம்பெனி தமிழகத்தில் இருந்த்து. இது மேற்குவங்கத்தில் இருந்திருந்தால் என்னை நக்சலைட்டு என்றும் ஆண்துணைக்காக ஏங்குபவள் என்றும் இந்தச் செங்கொடிகளே பேசியும் இருப்பார்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் தன்னையறிதலில் மாத்திரம் வெற்றி இல்லை என்பதை உலகம் முழுவதும் பற்றி எறியும் போராட்டங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன• பின்லாந்தின் காலாவதியான இயந்திரங்களை இறக்கியதுதான் என் கழுத்தை நசுக்கியதற்கு காரணம் என்றுதான் முதல் சில நொடிகளில் எனக்கு புரிந்த்து. ஆனால் செத்த பிறகுதான் தெரிந்த்து. இது உலகப்பிரச்சினை என• நான் மட்டும் பின்லாந்தின் தொழிலாளியாக இருந்திருந்தால், அந்த இயந்திரங்களை உடைத்து அப்பல்லோவுக்கும் அப்பனான சீயஸிடம் போயாவது என்னை காப்பாற்றி இருப்பார்கள். என் தாயும் கைகழுவும் இடத்தில் ஒரு சரவணா ஸ்டோர் பையுடனும் காலி தண்ணீர் பாட்டிலுடனும் சாய்ந்து கிடந்திருக்க மாட்டாள்.

  செத்துப் போன அம்பிகாவாகிய நான் பேசுகிறேன். எனக்கு நட்ட ஈடு தருவது பற்றி பேசிக் கலைந்தீர்களா நேற்று. போலீசாருடன் நமது பக்கம் பேசிய அனைவரும் கை கொடுத்தார்களாமே. இன்னும் யாரை நம்ப போகிறீர்கள். சில லட்சம் வரும் என்பதற்காக தொகையை குறைப்பது பற்றிய பேரங்கள் அங்கே நடந்தபோது நீங்கள் தனித்தனியாக நின்று கொண்டிருந்தீர்களாமே. ஒன்றாக நிற்பதை கூட இன்றுவரை சொல்லித் தராத உதவாத சிஐடியு வை நம்பி இன்னும் என்ன செய்ய முடியும். நட்டாற்றில் விட நிறைய என்ஜிஓ க்கள் அங்கே குவிந்திருந்தார்களாம். பத்திரமாக இருங்கள். அரசியல் புரிதல் இல்லாவிட்டால் வெறும் நமது பிரச்சினையை மாத்திரமே பேசி சக விவசாயியின் பிரச்சினைக்கும் நெசவாளியின் பிரச்சினைக்கும் காரணமான ஒரே எதிரியான அன்னிய நாடுகளின் முதலாளிகளை ஓரணியில் நிறுத்தி எதிர்க்காதவரை அவர்களது செக்யூரிட்டிகளான போலிசார் நம்மை எளிதில் அப்புறப்படுத்தி விடுவார்கள்.

  தொழிலாளிகள் சங்கமாக சேருவது அவசியம் என புரியவைக்க உலக தொழிலாளிகளை பற்றி பேசினேன் இதுவரை. ஆனால் நானாவுத 22 வயது பெண். உங்கள் வீட்டுக் குழந்தைகள் விளையாட வாங்கும் சீனத்தின் பொம்மைகளை உருவாக்கிய சீன குழந்தை தொழிலாளிகள், நைக் சூவின் வேலைப்பாட்டிற்காக கைகளை ரணமாக்கி சிறு தவறு நேர்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கூலியான ஒரு டாலரை பெற முடியாமல் அழுதுகொண்டே வீடு திரும்பும் தாய்லாந்தின் பிஞ்சுக்கைகள் இவையெல்லாம் எனது முறிக்கப்பட்ட மென்னியை விட இளகியவை. சுமங்கலித் திட்டத்திற்காக திருப்பூருக்கு போன தனலட்சுமி யின் பஞ்சடைந்து காசமாக சீரழியப்போகும் அவளது நுரையீரல் அதனை விட இளகியதுதான். தனக்கு என்ன நேர்கிறது என தெரிவதற்கு முன் பூச்சிமருந்தை குடித்து கீழே சாகிறானே விதர்பாவின் பருத்தி விவசாயி அவன் மனம் கூட இப்படி இளகியதுதான். இளகியது ஏமாற வேண்டும் என்பது அறிவியலின் விதி அல்ல•பீலி பெய் சாகாடும்.. என்று சின்ன வயதில் படித்த குறளும் மறக்கவில்லை.

  கவந்தகனுக்கு பசி அடங்கவில்லை. அந்த கவந்தகனான சுங்குவார்சத்திரத்தின் நோக்கியா, தாய்லாந்தின் கைவினைஞர்கள், தென்னமரிக்க மற்றும் ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகள், தண்ணீரை விற்பனை பொருளாக்கி தாகத்திற்கும் விலை நிர்ணயித்த உலக தண்ணீர் மாபியாக்கள், பன்னாட்டு ஹூண்டாய் கார் கம்பெனிகள், அண்ணாச்சிகளை மீண்டும் ஊருக்கே விரட்டும் ரிலையன்சு பிரஷ், விவசாயிகளை உலகத்தை விட்டே அனுப்பும் அரசின் புதிய பொருளாதார கொள்கை அதுதான் அம்பிகாவையும் சவமாக்கியது என புரிய வரும்போது நோக்கியாவில் வேலை செய்யும் தொழிலாளிகள் அந்த மிஷின் மீது கோப்ப்பட மாட்டார்கள். அரசு மிஷின் மீது கோப்ப்பட துவங்குவார்கள். அது வீதிக்கு அவர்களை விரட்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்ப்போம் என பல வண்ணங்களில் மனிதர்கள் வருவார்கள். கவந்தக முதலாளி சாப்பிடுவதற்கு பிள்ளைக்கறி வேண்டும். உங்கள் நாட்டில் குறைந்த விலையில் பிள்ளைக்கறி கிடைக்குமாமே. வரும் எட்டாம் தேதி சுங்குவார்சத்திரம் நோக்கியா கம்பெனியில் இதற்கு பேரம் நடத்த போகிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் அணுக வேண்டிய முகவரி அரசுதான்.

  • நோக்கியாவின் நோக்கம்
   அம்பிகாக்களை ரோபோக்களாக கருதுவது.
   ரோபோக்களை அம்பிகாக்களாகக் கருதுவது.
   திரை மாயை ரோபோக்களின் போதையில்
   பொதுமக்களின் கழிவிரக்கதைக் கூட
   இங்கு எதிர்பார்க்க முடியவில்லை.
   – புதிய பாமரன்.

  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தொழிலாளி வர்க்கத்தின் துயரத்தை அம்பிகாவா நீங்கள் பேசிய எழுத்து நடை நெஞ்சை அடைக்கிறது.

  • ”நேற்று தன் மகளை இண்டர்வியூவுக்கு கூட்டிவந்த தாய் எனக்கு நேர்ந்த்தை கேட்டு அழுதாளாம். ஏழைகளுக்கு மாத்திரம் துயரத்தில் வேறுபாடு இல்லை என்பது அத்தாய்க்கு புரிந்திருக்கிறது.”

   ஏழைகளின் வாழ்க்கை துயரத்திலேயே தோய்ந்திருப்பதால்தானோ என்னவோ பிறரது துன்பத்தையும் தங்களது துன்பமாகப் பார்க்கிறார்கள். இதைத்தானே வர்க்கப் பாசம் என்கிறோம். வர்க்கப் பாசம் வர்க்க உணர்வாய் மாறும் போது அப்பிகாக்களின் துயரம் முடிவுக்கு வந்தே தீரும்.

   ஊரான்.

 8. அரசியலற்ற மனிதாபிமாளமும், அரசியலற்ற தொழிற்சங்க வாதமும் வெறும் புலம்பலையும், விரக்தியையும் வெளிப்படுத்துமே அன்றி காரியத்துக்கு உதவாது என்பதை நோக்கியா தொழிலாளர்களின் கையறு நிலை உணர்த்தியுள்ளது. எனினும் தீவிரமடைந்து வரும் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி இத்தொழிலாளர்களை அரசியல் ரீதியாக கிளர்ந்தெழுவதை சந்தித்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம்.

 9. […] This post was mentioned on Twitter by வினவு and டிபிசிடி, ஏழர. ஏழர said: RT @vinavu: அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை! https://www.vinavu.com/2010/11/02/nokia-ambika/ […]

 10. மறைந்த அம்பிகாவின் குடும்பத்துக்கு எனது அழ்ந்த அனுதாபங்கள்

  நோக்கியாவில் வேலைக்கு ஆள் எடுகின்றார்கள் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் உங்கள் கல்வி மற்றும் ஏனைய சான்றிதழ்களை காண்பித்து நேர் முக தேர்வில் கலந்து கொள்ள தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் அறிவிப்பு வந்ததும் கண்மூடித்தனமாக கொதடிமைதனமான வேலைக்கு இளம் சிறுமியரும் சிறார்களும் செல்லும் காட்சி என் கண்முன்னே வருகின்றது

  அடுத்ததாக கணிசமான சம்பளம் , சீருடை , பயணம் செய்ய பேரூந்து, மதிய உணவு இவையனைத்தும் இன்றியமைய தேவைகளாக நினைத்து தங்களுடைய எல்லா வகையான பாதுகாப்பையும் மறந்து விடுகின்றார்கள்

  இனியாவது இவர்கள் விழிப்புடன் செயல்படுவார்கள் என்று எண்ணுகின்றேன்

  • //அடுத்ததாக கணிசமான சம்பளம் ,//

   4 பேர் வேலை பார்க்கும் ஒரு சிறிய பட்டறை கூட இன்று 5000 ரூபாயாவது சம்பளம் தருகிறான். நோக்கியாவில் 4000லிருந்து 5000ம்தான் சம்பளமே… இது கணிசமான சம்பளம் அல்ல.

 11. The backround of this incident to the labout ambika making me to cry. It is fate to the citizen who is living below the poverty line in all the countries. They always facing (losing) challenges in their life. All the Govt. engines not caring about the people’s safety in many situations (Ex: Bopal, etc…) and supports only to the Money makers.

  With very hard physical work and mental torcher, labour earning less money. that less money too easily getting spent over the “Price hike, many more indirect taxes (due to corruption by politicians), bribe, etc” 🙁

 12. அம்பிகாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். எல்லாரும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்,அதிகார வர்க்கம்,அடக்குமுறை என்று தங்கள் உள்ளக்குமுறலை பதிவு செய்தார்கள்.
  அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளிகிறேன். ஆனால் ஏன் பன்னாட்டு நிறுவனங்கள் இப்படி செய்கின்றன? என்ன தைரியத்தில் அவர்கள் அப்படி செய்கிறார்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் இது போன்று நடக்கின்றன? பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியான அரசியல்வாதிகள் மீது தவறு? உடந்தையாக இருக்கும் காவல்துறையினரின் மீது தவறு? தவறு மக்களிடம். இப்போதெல்லாம் அரசியல் ஒரு வியாபாரம். அரசியல்வாதிகள் தான் முதலாளிகள். அவர்கள் தேர்தல் என்னும் பங்குச்சந்தையில் பணத்தை மக்கள் என்னும் நிறுவனங்கள் மீது முதலீடு செய்கிறார்கள். போட்ட முதலை எடுக்கவேண்டும். அதற்கு எப்படியாச்சும் பதவியை பிடிக்க வேண்டும். பிடித்துடனே போட்ட பணத்தை திருப்பி எடுக்க வேண்டும். அதுவும் வட்டியோடு. சாதாரண மனிதனை கடவுளாக்கி, பின்பு அதே கடவுளிடம் கை கூப்பி கும்பிடும் மனிதனின் நிலை தான். அந்த கடவுள் தவறு செய்தல் பின்பு அவரை கும்பிட்ட அதே கை பின் அவரை துதிக்கிறது. கடவுளை குறை சொல்லி என்ன ஆகபோகிறது?. ஏமாறும் வரை ஏமாற்றுபவன் இருக்க தன் செய்வான். நான் இன்னொருவரை குறை கூறும் போது நான் என குறைகளை திருத்தி இருக்க வேண்டும் என அந்த இன்னொருவர் எதிர்பார்க்கிறார். அதை விட்டு விட்டு என்னைக்கு காசு வாங்கிட்டு ஒட்டு போட ஆரம்பிச்சோ அன்னிக்கே அரசியல்வாதிகளை குறை சொல்லும் தகுதி போய்விட்டது. அந்த தைரியத்தில் தான் அவர்கள் தவறு செய்கிறார்கள். இன்னிக்கு முதலாளியை,அரசியல்வாதிகளை குறை சொல்லும் மக்கள், நாளைக்கு நம்மையும் குறை சொல்வார்கள். ஆம்புலன்ஸ்கே வழிவிட மனமில்லாதவர்களிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்? இப்படிப்பட்ட மக்களிடமிருந்து என்னை தனித்து காட்டிகொள்ள என்னாலான சுய ஒழுக்க கட்டுபாடுடன் இருக்க முயற்சி செய்கிறேன். இது என கருத்து. தவறாக இருப்பின் சுட்டிகாட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.

 13. //தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//

  இது முற்றிலும் உண்மை! அம்பிகாவின் மரணம் அப்பட்டமான கொலை, இந்த ஒட்டு பொறிக்கி நாய்களுக்கும்! பொறிக்கி தின்னும் பத்திரிகைகாரனுக்கும் இதுபற்றி கவலை இல்லை. தொழிலாளிகள் ஒன்றுபடவேண்டும்.

 14. கண்முன்னே ஒரு கொலை நடந்துள்ளது. பச்சைப் படுகொலை. நாம் எல்லோரும் பார்த்திருக்க அதை விபத்து எனும் போர்வையில் மூடி மறைக்கும் வேலைகளும் நடக்கிறது…
  எனக்கு அம்பிகா அந்த இருபது நிமிடங்களில் துடித்த துடிப்பு எப்படியிருக்கும் என்பது திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அய்யோ.. அந்த இயந்திரத்தில்
  தலை சிக்குண்டு கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு உயிர் பரிதவித்துப் பரிதவித்து இறந்த கொடுமையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.. நமக்கெல்லாம் கையிலோ காலிலோ
  சின்ன வலி வந்தாலும் எத்தனை துடித்துப் போவோம். இதோ ஒரு பெண் தன் சக தொழிலாளிகளின் கண் முன்னே சிறுகச் சிறுக மாண்டுபோயுள்ளார். அந்தத் தொழிலாளிகளின்
  தவிப்பு எப்படி இருந்திருக்கும்.

  கையறு நிலையால்; கையாளாகாத் தனத்தால் உடல் கூசுகிறது நன்பர்களே. இந்த நாட்டில் ஒரு உயிரின் மதிப்பு இவ்வளவு தானா…? நாமெல்லாம் ஒரு நாகரீக உலகத்தில் தான்
  வாழுகிறோமா..? எதுவுமே செய்ய முடியாமல் எல்லாம் கண்முன்னே கடந்து போகிறதே… நேற்றைய செய்தித்தாளில் இது ஒரு மூலையில் இடம் பிடித்தது – இன்று நான்கு வரிச்
  செய்தியாகச் சுருங்கியது நாளை வரவே வராது. இந்தச் சம்பவம் இன்னும் சில நாட்களில் நமது நினைவுகளில் இருந்து மெல்ல மெல்ல கரைந்து ஒரு நாள் வெறுமனே ஒரு செய்தி
  எனும் அளவுக்குச் சுருங்கிப் போகும். ஆனாலும் நாம் இந்த சம்பவம் தோற்றுவித்த வலியையும் நாம் இன்று அனுபவிக்கும் துன்பத்தையும் விடாமல் நமது சிந்தனைகளில் பாதுகாத்து
  வரவேண்டும். அம்பிகாவின் ரத்தத்திற்கும் அவர் தாயின் கண்ணீருக்கும் ஒரு நாள் கணக்குத் தீர்க்க வேண்டும்..

 15. அம்பிகா மர்ணம் துக்ககரமான தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்தான் ,ஆனால்

  சீனாவின் செல்போன் கம்பனிகளின் லாபம் , இந்தியாவில் தொழில் நடத்த முடியாத நிலையை உருவாக்கி , மேனுபேக்சரிங் நிறுவனங்களை சீனாவிற்க்கு இழுப்பது போன்ற பல நோக்கங்கள் சீன கையூட்டு புரட்ச்சி தொழிலாளிகளுக்கு இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

  சீன நிறுவனங்களின் டார்ச்சர் தாங்காமல் அடுக்குமாடியிலிருந்து குதித்து சாகும் உலக தொழிலாளிகளுக்காக இந்திய புரட்ச்சியாளர்களின் குரல் ஒலிப்பதேயில்லை .

  • நக்சல்பாரிகள் நாட்டை ஆளுவது ஒன்றே இத‌ற்கு தீர்வு. புதிய ஜனநாயகம் தொழிலாளர் சங்கம் அங்கே இன்னும் ஏன் கட்டப்படவில்லை. அதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது இப்போது எந்த கட்டத்தில் எவ்வளவு தூரத்தில் உள்ளது.

  • எந்தப் பிரச்சனையிலிருந்தும் எசமானர் சார்பாகக் கவனத்தைத் திசைதிருப்ப ஆற்றல் தேவையில்லை. மனச்சாட்சி என்று ஒன்று இல்லாவிட்டால் போதும்.
   இவர் போல மனிதாபிமானிகள் உள்ளதால் தான் இந்தியாவில் வெள்ளம் போடுகிறது.

 16. please try to take this issue to the finnish media. only then ambika’s family can get justice. and finnish media is faaaaar more better than indian media. these european moghuls can be in great trouble only when the issue is dealt by european media alone

 17. அம்பிகாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  நாம் அனைவரும் அறிந்த ஒருவகையான உழைப்புச் சுரண்டல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நடக்கிறது. இங்கு பணி (சேவை) செய்யும் பெரும்பாலான பெண்கள் மாதம் 2000 ரூபாய்க்கு வேலை செய்கிறார்கள். அதற்கு அவர்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. எனக்கு தெரிந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் வேலை செய்கிறார். வேறு விசயமாக அங்கு சென்ற என்னை பார்த்து எந்த பெண் சிரிக்ககூட இல்லை. அப்புறம் ஒரு நாள் நான் அது பற்றி கேட்டபோது அவர் அங்கு நடக்கும் அடிமைத்தனத்தையும் குறைவான ஊதியம் பற்றியும் கூறினார். இதற்கு வினவு ஏதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா?

 18. இந்த வர்க்கங்கள் நினைவில் கொள்ளட்டும்…
  “எரிமலைகள் எப்போதும் உறக்கத்திலேயே ஆழ்ந்து விடுவதில���லை என்று” …

 19. நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு படுகொலை நடந்திருக்கிறது, அதை விபத்து, தொழிலாளியின் அலட்சியம், ரோபோ தாக்குதல் என்று பல குரல்கள் அதை மூடி மறைக்க முயல்கின்றன….

  பல கனவான்கள் இதை வெறும் செய்தியாக படித்து கருத்து கூட தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்…

  அதிலும், நடுத்தர வர்க்கம் நடந்து கொள்ளும் விதம் சகிக்கவில்லை!

  நேற்று அலுவலகத்தில் ஒரு புழு (எனது சக ஊழியர்) ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்திதாளை பார்த்து கொண்டிந்தார். அவர் பார்த்த பக்கத்தில் தான் நோக்கியா சம்பவம் பற்றி செய்தி வந்திருந்தது. அதை பார்த்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் கடந்து சென்றுவிட்டது அந்த புழு…
  ஆனால் அடுத்த பக்கம் திருப்பி ‘ஓபாமா எப்ப இந்தியா வர்ராராம்?’ என்றது…….. அதற்கு பதிலளிக்காமல், நோக்கியா விடயத்தை சுருக்கமாக கூறினேன்! அதன் பின்னும் ஒன்றும் சொல்லாமல் செய்தி தாளின் ‘Sports, Entertainment’ பகுதிகளில் வாசிப்பை தொடந்தது!

  இவர்கள் அப்படியே கருத்து தெரிவித்தாலும் அரசியலற்ற மனிதாபிமான வகையில் ஒரு உச் கொட்டி விட்டு நகர்ந்து விடுகின்றனர்.

  இவ்விடயத்தை அரசியல் ரீதியாக தொழிலாளர் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டும். தொழிலாளர்களை வர்க்கமாக ஒன்றினைக்க இதை ஒரு ஆயுதமாக்க வேண்டும்.

 20. ///அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என்று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே? உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா?/////

  இதை வெளியிடச் சொல்லி போராட்டம் நடத்த வேண்டும்!
  ஸ்ரீபெரும்பத்தூர் – சுங்குவார் சத்திரம் பகுதி தொழிலாளர்களை ஒருங்கினைத்தால் இது முடியும்!

  போலி கம்யூனிஸ்டுகள் (சிஐடியு) போராட முன்வருவார்களா??

  • சி.ஐ.டி.யு நிவாரணத்துக்காக போராட முன் வரும்; ஆனால் நீதிக்காக போராட முன் வராது. ஏனெனில் அப்படியொரு அனுபவம் இதுவரை நடந்ததில்லை.

 21. // கட்டைப்பஞ்சாயத்து செய்து பொறுக்கி தின்பதோடு தொழிலாளர்களையும் நாட்டாமை செய்யும் உள்ளூர் தாதாக்களாக வலம் வருகிறார்கள் //

  அதிகார வர்க்கத்தின் கேடு கேட்ட அரசியல், இந்நாட்டையும் மக்களையும் கூறு போட்டு அயல் நாட்டு முதலாளிகளுக்கு விற்றுக்கொண்டிருப்பதை யாரும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. இந்த கையால் ஆகாத கூட்டத்தில் நானும் ஒருவன் என்னும் பொது மிகவும் அவமானமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. என்னோடு சேர்த்து பிறர்க்காகவும் வாழும் வாழ்வு கொடு இறைவா…!!!

 22. every one sorry for the tragedy of Selvi. Ambika, but this tragedy shows us some dangerous spot in the Foreign company working style.
  the government permit the foreign companies ,only for the increasing the direct employment for the local people.
  But so many accidents are raising in this companies affecting the local people.
  The N.G.Os and the Human Right bodies must take this problem for their action.
  1. The government must come forward to open its labor welfare office in the all foreign companies factory itself, to check the worker working condition in the factory.
  2. the government must compel all companies to post a Medical officer in every factory premises with sufficient Ambulance vans.
  3. the government must compel every companies to give insurance cover for all working people at least Rs.20 lakhs.
  4. the government make arrangement to give pension to the deceased person families by the companies. and suitable employment to their family.
  5 the workers must start a welfare association for them self out of the factory premises to look after their welfare and securities matter, to prevent the management to interfere in their mater.
  the death of selvi. Ambika is a serious mater, some N.G.Os must take this mater to fight it legally and get justice to her.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க