privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!

அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!

-

கொலைகார நோக்கியா
நோக்கியா வளாகம்

நோக்கியாவின் நூறு மில்லியன் இலாபவெறிக்காக கொல்லப்பட்ட தொழிலாளி அம்பிகாவின் உடல் நேற்று(1.11.2010) மாலை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.  அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டார்கள். இன்று(2.11.2010) மாலை இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை வளாகம் முழுவதும் தொழிலாளிகள் நிரம்பி வழிந்தார்கள். அம்பிகாவோடு பணியாற்றிய சில பெண் தொழிலாளிகளும் அங்கிருந்தார்கள். அம்பிகாவின் தாயார் இடிந்து போன நிலையில் தரையில் கதறிக் கொண்டிருந்தார்.

எமது தோழர்கள் தொழிலாளிகளிடம் பேசினார்கள். இதற்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவதின் அவசியத்தை எடுத்துரைத்தார்கள். ஆனாலும் நமது எதிர்பார்ப்புக்கிணங்க அங்கு அற்புதம் ஏதும் நடைபெறாது என்பதே யதார்த்தம். தொழிலாளிகளை வழிநடத்தும் தொழிற்சங்கமோ, முன்னணியாளர்களோ இல்லாமல் இருக்கும் தொழிலாளிகள் ஒட்டு மொத்தமாக ஒரு கையறு நிலையில் இருந்தார்கள்.

அவர்களிடம் கோபம் இருந்தது என்று சொல்வதை விட விரக்தியே அந்த வளாகத்தை ஆக்கிரமித்திருந்தது என்று சொல்லலாம். தி.மு.க சார்பில் குப்புசாமி, சி.பி.எம் சார்பில் எம்.எல்.ஏ மகேந்திரன், மற்றும் சில அ.தி.மு.க பிரமுகர்கள் மருத்துவமனையில் வைத்து நோக்கியா நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நிவாரணம், குடும்பத்தினருக்கு வேலை என்ற வழமையான சடங்கு சம்பிரதாயங்கள் பேசப்பட்டன. அதிலும் கூட நோக்கியா தரப்பு எட்டாம் தேதி பதில் சொல்வதாக அறிவித்துவிட்டது.

கொலைகார நோக்கியா
குப்புசாமி (தொ.மு.ச )

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாட்படையாக செயல்படும் தி.மு.வின் தொ.மு.சதான் அதிகாரப்பூர்வமான தொழிற்சங்கம். அந்த சங்கத்தை மயிரளவிற்கு கூட தொழிலாளிகள் மதிப்பதில்லை. தி.மு.க பிரமுகர்களும் மேல்மட்ட அளவில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பொறுக்கி தின்பதோடு தொழிலாளர்களையும் நாட்டாமை செய்யும் உள்ளூர் தாதாக்களாக வலம் வருகிறார்கள். சி.பி.எம் கட்சியோ இதை தகர்க்க முடியாமல் தொழிலாளர்களை போர்க்குணத்தோடு திரட்ட முடியாமல், அரசியல் உணர்வை ஊட்டாமல் சம்பிரதாயமான தொழிற்சங்கவாத்த்தில் மூழ்கி இப்போது அதையும் செய்ய இயலாத அவல நிலையில் இருக்கிறது.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை கட்டியதற்காக சி.ஐ.டி.யு தலைவர்கள் உட்பட பல தொழிலாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போதும் ஒரகடம் பி.ஒய்.டி எனும் நோக்கியாவிற்கு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளிகள் சி.ஐ.டி.யு தலைமையில் போராடுகிறார்கள். அந்த போராட்டத்தை முடக்க நினைத்த நிர்வாகம் கதவடைப்பு செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கும் முயன்று வருகிறது.

தமிழ்நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனைத்திலும் இதுதான் நிலைமை. இங்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் அரசுடன் செய்யும் ஒப்பந்தத்திலேயே தொழிலாளர்களின் உரிமையை பலிகொடுக்கும் விதிகள் பட்டவர்த்தனமாய் இடம் பெறுகின்றன. தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது.

கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த பின்னணியும் சூழலுமே காரணங்கள்.

கொலைகார நோக்கியா
அம்பிகாவின் தாய்

நோக்கியா தொழிற்சாலை முழுவதும் சி.சி.டி.வி காமராக்கள் இருக்கின்றன. தொழிலாளிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதில் பதிவாகின்றன. இந்த கண்காணிப்பை வைத்து தொழிலாளிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அருகாமை தொழிலாளியிடம் பேசினால் கூட இங்கு குற்றம் என்பது சட்டம். எனில் அம்பிகா கொலை செய்யப்பட்ட காட்சி கூட அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என்று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே? உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா?

அம்பிகாவை ஒரு ரோபோ தாக்கியதால் பலியானார் என்றுதான் அநேக ஊடகங்கள் ஒரே மாதிரியாக பேசுகின்றன. அதுவும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போகிற போக்கில் நாளிதழின் மூலையில் தெரிவிக்கப்படுகின்றன. எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம் என்று இன்னமும் பல தொழிலாளிகள் பேசுகின்றனர். ஆனால் இந்த உண்மையை நிர்வாகம் வதந்தி என்கிறது.

பழுதடைந்த அந்த எந்திரத்தை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் புதிய எந்திரத்தை அங்கே வைத்துவிட்டதாக தொழிலாளிகள் கூறினார்கள். ஏதாவது கண்துடைப்பு விசாரணை வந்தால் கூட எந்திரத்தில் பாதிப்பு இல்லை என்று சொல்லிவிடலாம் அல்லவா? எதிர்பார்த்தது போல தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை வைத்து ஒரு விசாரணையை நடத்தப் போகிறதாம்.

நோக்கியா வளாகத்தில் இருக்கும் ஒரு அறை மருத்துவமனை என்ற பெயரில் இயங்குகிறது. ஒரு செவிலியர் அங்கு வரும் தொழிலாளிகளுக்கு ஒரு வெள்ளை மாத்திரை கொடுத்து சர்வ நோய்களையும் குணமாக்கிவருகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் இருக்கும் தொழிற்சாலையில் குறைந்த பட்ச வசதிகள் கொண்ட மருத்துவமனையோ, அவசர சிகிச்சைக்கான வசதிகளோ இல்லை எனும் போது அரசு எதை விசாரிக்க போகிறது?

நோக்கியாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் எல்லா பத்திரிகைகளையும் தொடர்பு கொண்டு தாங்கள் அளித்த, அளிக்க போகின்ற விளம்பரங்களை நினைவுபடுத்தி இந்த கொலையை மறைக்க வேலை செய்கிறார்கள். அதன் விளைவயும் ஊடகங்களில் பார்க்கிறோம்.

கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதை அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் வெளியிட்டன. பொது மக்களிடம் எழும் மனிதாபிமானத்தை மாபெரும் பொது நடவடிக்கையாக மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதே ஊடகங்கள் நோக்கியாவின் கொலையை பார்க்க மறுப்பதற்கு என்ன காரணம்?

அரசியலற்ற மனிதாபிமானம்தான் அவர்களுக்கு தேவை. கோவையில் இரு குழந்தைகளை கொன்ற அந்த கயவனை கைது செய்து விட்டார்கள். கொலை எப்படி நடந்த்து என்று கண்டு பிடித்துவிட்டார்கள். இனி துரித கதியில் விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும்.

ஆனால் அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார்மேலும் எந்த புகாரும் இல்லையே? இது தற்செயலா, இல்லை திட்டமிட்ட தந்திரமா?

காஞ்சிபுரம் கலவைக்கு அருகே உள்ள கிராமத்தில் இந்நேரம் அம்பிகாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டுவிடும். சில நூறு தொழிலாளர்களை தவிர அங்கு வேறு யாருமில்லை. இன்றைக்கு கூட நோக்கியாவில் உற்பத்தி நடக்கிறது. விடுமுறை இல்லை. தொழிலாளிகள் அதை புறக்கணித்துவிட்டு அம்பிகாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருக்கிறார்கள். தூரம் காரணமாக நிறைய பெண்தொழிலாளிகள் வரவில்லை.

தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த இரண்டு கோடி மதிப்புள்ள எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். மதிப்பிட முடியாத நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை தமது வர்க்க கோபத்தால் தொழிலாளிகள் உடைத்தால் இனி வரும் அம்பிகா போன்ற தொழிலாளிகளை காப்பாற்றலாம். இறந்து போன அம்பிகாவுக்கான நீதியையும் பெறலாம்.

___________________________________________________________________________________________

–          வினவு செய்தியாளர்கள், நோக்கியா ஆலை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…..
___________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்