முகப்புஅரசியல்ஊடகம்டாடா குழுமத்தின் கோரமுகம் -1

டாடா குழுமத்தின் கோரமுகம் -1

-

ரத்தன்_டாடா
ரத்தன் டாடா

டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2005-ஆம் ஆண்டு கணக்குப்படி 76,500 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.

தாராளமயம் புகுத்தப்பட்டதற்கு முன்புவரை, லைசென்சு (தொழில் துறையின் மீது உரிமக் கட்டுப்பாடு) ஆட்சியில் முடிசூடா மன்னர்களாக டாடாக்கள் இருந்தார்கள். வாரிக் கொடுக்கும் தாராள வள்ளல் தன்மைகள் மூலம் மனித உரிமை மீறல், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் முறைகேடுகள் ஆகிய அவர்களின் திரைமறைவுச் செயல்களை மூடி மறைத்து வந்தார்கள். உலகமயமாக்கச் சூழலில் இத்தகைய உண்மைகள் சாக்கடைக் கழிவுகளாக வெளிப்படத் தொடங்கியபோது, அவர்களின் விசுவாச ஊழியர்கள் உட்பட மேலும் மேலும் கூடுதலான மக்கள் டாடாக்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

தேசத்தைக் கட்டியெழுப்புவது, கூட்டுப் பங்கு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புகள் ஆகிய டாடாவின் பசப்பு வார்த்தைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். டாடா கம்பெனிகளின் சொந்தப் பங்குதாரர்கள் தவிர, வேறு யாருடைய நலனுக்கும் பொறுப்பானவர்களாக அவர்கள் இல்லை என்பதையும் அறிந்தார்கள். டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் அவர்களின் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்று பின்வரும் தொகுப்புச் செய்திகள் காட்டுகின்றன.

================

கொலைகார கார்பைடுக்கு டாடாவின் உதவி

1984 டிசம்பரில் போபால் நச்சுவாயு பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்த ஒரு சில இந்தியர்களில் ஒருவராக ஜே.ஆர்.டி.டாடா இருந்தார். செலவுகளைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியதாலும், நச்சு ஆலையில் சோதித்தறியப்படாத தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாலும் நிகழ்ந்த பேரழிவுக்கு ஆண்டர்சன் நேரடிப் பொறுப்பாளராகிறார். முக்கியமாக, போபால் நச்சு ஆலையின் கழிவு மற்றும் பயன்பாட்டுச் சாதனங்கள் டாடா பொறியியல் கம்பெனி (Tata Consulting Engineers) யால் கட்டியமைக்கப்பட்டவை.

போபாலில் உள்ள நச்சு ஆலையில் யூனியன் கார்பைடு கம்பெனி விட்டுச் சென்றுள்ள நச்சுக் கழிவுகளை அகற்றும் தர்ம காரியத்துக்குத் தலைமையேற்று யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கும், அதன் புதிய சொந்தக்காரரான டௌ கெமிக்கல்சின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் 2006 நவம்பரில் ரத்தன் டாடா முன் வந்தார். அக்கழிவுகளை அகற்றுவது டௌ கெமிக்கல்சின் கடப்பாடு என்றும், அதற்காக அந்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசு அப்போது வாதாடிக் கொண்டிருந்தது. டௌ கெமிக்கல்ஸ் கடப்பாடுடையது என்கிற சட்டப்படியான முயற்சியைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் டாடாவின் தர்மகாரிய முன் வருகை. மேலும், இந்த முன்வரவின் நோக்கம் இந்தியாவில் டௌ கெமிக்கல்சின் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கமுடையது என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டதுதான். போபால் நச்சுவாயு வெளியேற்றத்துக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான இயக்கத்தால் இந்தியாவில் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தொழில் திட்டங்கள் நிலைகுலைந்து போகும், அதன் எந்தவொரு தொழில் முனைப்பும் அதிகரித்த சிக்கலுக்குள்ளாகும் என்ற பயத்தின் காரணமாக பெருமளவிலான முதலீடுகளை டௌ நிறுவனம் தானே மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.

ஜனநாயகத்துக்கு மாறான கொல்லைப்புற அதிகாரம்

இந்தியக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் டாடாவின் கட்டளை:

2005-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகம் ஆகியவற்றின் கார்ப்போரேட் (கூட்டுப் பங்கு) கம்பெனிகளிடம் நட்புப் பாராட்டும் முனைப்புகளால் தூண்டுதல் பெற்று, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு கும்பலைக் கொண்ட இந்திய-அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை என்ற அமைப்பை அமெரிக்கா மற்றும் இந்தியத் தொழில் – வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கின. “தொழில் வர்த்தகத் துறையில் இரு நாடுகளிடையே அதிகரிக்கும் அளவிலான பங்காளிகளாவது மற்றும் கூட்டுறவுக்கான ஒரு பாதை வரைபடத்தை வகுப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதாக அந்தப் பேரவை இருக்கும்” என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு மேலும் சாதகமான வகையில் தற்போதைய சட்டத்தைத் திருத்தியும், புதிய கொள்கைகளை நிறுவியும், புதிய சட்டங்களை வகுப்பதற்கான பல பரிந்துரைகளை, ரத்தன் டாடாவை இணைத் தலைவராகக் கொண்ட அந்தப் பேரவை செய்துள்ளது. பலவீனமான தொழிலாளர் சட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வசதிகள், பட்ட மேற்படிப்புக்குக் கூடுதலான முனைப்பு, நட்டஈடு கடப்பாடுச் சட்டங்களைத் தளர்த்துவது, சர்ச்சைக்குரிய வழக்குகளை-குறிப்பாக போபால் பேரழிவு போன்ற நிகழ்வுகளை ஒட்டி எழும் வழக்குகளை விரைந்து முடிப்பது ஆகியவற்றைப் பேரவை முன்தள்ளுகிறது. இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் உச்சமட்டத்திலான ஒப்பிசைவு காரணமாக இப்போது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டதாகப் பேரவை மாறியுள்ளது.

கார்ப்போரேட் சர்வாதிகாரப்பிடி

இந்தியாவிலுள்ள ஒரே ஒரு தனியார் நகரை டாடாக்கள் சொந்தமாகக் கொண்டு நடத்துகிறார்கள். 1904-ஆம் ஆண்டு ஜாம்சேத்ஜி டாடா நிறுவிய ஜாம்சேத்பூர் என்ற எஃகு நகர், ஒரு நகராட்சியோ, தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு எந்த உள்ளூராட்சியோ இல்லாத ஒரு சில இந்திய நகரங்களில் ஒன்று. ஆறு லட்சம் மக்களைக் கொண்ட அந்த நகரை டாடா எஃகு நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாம்சேத்பூர் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் கம்பெனிதான் நிர்வகிக்கிறது. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் 74-ஆவது திருத்தம், நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதோடு, அம்மாதிரியான உள்ளூராட்சிகளுக்குக் காலக்கிரமப்படி தேர்தல்கள் நடத்துவதற்கான சட்டங்களை இயற்றுமாறு எல்லா மாநிலங்களையும் வேண்டுகிறது. ஆனால், அம்மாதிரி ஜனநாயகபூர்வ உள்ளூராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் டாடாவின் கட்டுப்பாட்டிலுள்ள நகரை மாற்றுவதற்கு டாடா எஃகு நிறுவனம் கடும் எதிர்ப்பைக் காட்டியது. ஒரு ஜனநாயக அமைப்பைவிட டாடா எஃகு நிறுவனம் போன்றதொரு பரோபகார ஆட்சியின் கீழ் அந்நகரம் இருப்பதுதான் அதிகப்படியாக விரும்பத்தக்கது என்றார்கள். “ஒரு நூறாண்டு காலம் வெற்றிகரமாக இருந்துவரும் மாதிரிக்கு மாற்றாக, எவ்வளவுதான் உயர்ந்த நோக்கமுடையதாக இருந்தாலும் இன்னமும் சோதித்தறியப்படாத வேறொரு மாதிரியைக் கொண்டுவர நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்கிறார், டாடா எஃகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பி.முத்துராமன்.

இராணுவ சர்வாதிகார கும்பலுடன் – தொழில் வர்த்தகக் கூட்டு

அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக உலகே வெறுத்து ஒதுக்கிய மியன்மார் இராணுவ சர்வாதிகார அரசாங்கம் இந்தியாவில் ஒரு நண்பனைக் கொண்டிருக்கிறது-அவன்தான் டாடா. ஜனநாயக சக்திகளுக்கு வழிவிட வேண்டுமென்று மியன்மார் இராணுவ அரசாங்கத்தை நிர்பந்திக்கும் ஒரு முயற்சியாக, பெப்சி கம்பெனி போன்ற பல பன்னாட்டுத் தொழில்கழகங்கள், அந்நாட்டில் இருந்து வெளியேறிய ஒரு சமயத்தில், அந்த ஒடுக்குமுறை ஆட்சிக்கு கனரக மற்றும் மோட்டார் வாகனங்கள் வழங்குவதாக டாடா மோட்டார் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரவலான பாலியல் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், மியன்மாரின் செழிப்பான இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளில் கட்டாயப்படுத்தித் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகவும், மியன்மார் சர்வாதிகார இராணுவக் கும்பல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கிறது. இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக இராணுவ சர்வாதிகார கும்பலுக்கு எதிராகப் பழங்குடிக் குழுக்கள் கடுமையான வன்முறைப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். (தற்போது விடுவிக்கப்பட்டுள்ள – வினவு) நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி, 1989 முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட இராணுவ பாசிச சர்வாதிகாரக் கும்பலுடன்தான் டாடாக்கள் தொழில் வர்த்தகக் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

பழங்குடி மக்களின் நிலங்களை களங்கப்படுத்தும் டாடாக்கள்

பூமியைத் தீக்கிரையாக்கும் தந்திரங்கள்

டாடா எஃகு நகரம் உருவாக்கப்பட்ட இடம், சில வளமிக்க இரும்புக் கனிமங்களின் குவியல்களைப் பெற்றுள்ள, அடர்ந்த காட்டு நிலங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது. அந்த நிலங்களுக்கு முன்போ, இப்போதோ உரிமைப் பட்டா, பத்திரங்களைப் பழங்குடியின மக்கள் பெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் சில கிராமங்களை உள்ளடக்கிய 364 ஏக்கர் நிலங்களை 46.32 கோடி ரூபாய்க்கு டாடா கம்பெனி விலைக்கு வாங்கியது. நோவா முடியில் உள்ள இரும்புக் கனிமச் சுரங்கத்துக்காகவும், ஜாம்சேத்பூர் நகரியம் அமைக்கவும் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய அரசாங்கம் டாடாக்களுக்கு நிலங்களைக் கையளித்தபோது பழங்குடி மக்கள் அகற்றப்பட்டார்கள்.

1907-ஆம் ஆண்டு இரும்புக் கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்காக நோவாமுடி பகுதியை டாடாக்கள் கையகப்படுத்தியபோது, உள்ளூர்ப் பழங்குடி மக்கள் இரும்புச் சுரங்கங்களில் வேலை செய்ய மறுத்தனர். அவர்களை அடக்கித் தம் வழிக்குக் கொண்டு வருவதற்காக குசும்காஜ் (கோசம்) என்ற அரக்கு மரங்களை டாடாக்கள் வெட்டிச் சாத்தார்கள். இந்த மரங்களில் கூடு கட்டும் அரக்குப் புழுக்களிடமிருந்து அரக்கு சேகரிப்பதை பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு, இம்மரங்களைத்தான் நம்பி இருந்தனர். நம்பிக்கை இழந்ததனாலும், வாழ்க்கைத் தேவைகளுக்கு வேறு வழியில்லாமல் போனதாலும் பழங்குடி மக்கள் மேலும் மேலும் அதிகமாக டாடாக்களுக்காக இரும்புக் கனிமங்களைத் தோண்டத் தொடங்கினர். 2000-ஆம் ஆண்டு பூமியைத் தோண்டும் புல்டோசர் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியிலிருந்த ஒரு நீரூற்றை டாடாக்கள் அழித்து விட்டார்கள்; அந்த நீரூற்றுதான் டாடாக்களது நிலக்கரி சுரங்கத்தின் விளிம்பில் உள்ள 22 குடிகளைக் கொண்ட குக்கிராமமான அகாடிய தோலாவின் பழங்குடி மக்களுடைய ஒரே நீராதாரமாக இருந்தது. அவர்களுடைய நீராதாரமாக விளங்கியதோடு, அந்த நீரூற்று அருகிலுள்ள கிராமத்தவர்களுக்கான சமூக உறவாடுதலுக்கான மையமாகவும் இருந்தது.

குரோமிய நச்சு

சுகிந்தா பள்ளத்தாக்கை உச்ச அளவுக்கு மாசுபடுத்தப்பட்ட பகுதியாக அங்குள்ள குரோமைட் சுரங்கங்கள் ஆக்கிவிட்டன என்று இந்திய அரசாங்கத்தின் பொதுத் தணிக்கை அதிகாரி தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறார் என்று ‘டவுன் டு எர்த்’ என்ற பத்திரிக்கை எழுதியுள்ளது. அந்தப் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய அளவுக்கு குரோமைட் வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் ஒன்று டாடா கம்பெனியாகும். அளவுக்கு அதிகமாகக் குவித்து வைத்துள்ள கிடங்குகளில் இருந்து கசியும் ஹெக்சாவேலண்ட் குரோமியம் என்ற நச்சு இரசாயனத்தால், அபாய அளவுக்கு மேல் மாசுபட்ட தோம்சாலா ஆறு மற்றும் 30 ஓடைகள் இப்பள்ளத்தாக்கு வழியாக ஓடுகின்றன. சுவாசக் குழாயில் எரிச்சல், மூக்குக் குழலில் புண், எரிச்சலுடன் தோல் புண், மூச்சுத் திணறல், நிமோனியா காச்சல் ஆகியவை ஹெக்சாவேலண்ட் குரோமியத்தால் ஏற்படுகின்றன. ஒரிசா சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் நார்வே அரசாங்க நிதி உதவியுடன் நடந்த ஆய்வுப்படி அப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் 25 சதவீத மக்கள் இந்த மாசுபடுதலால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் புகலிடத்தில் அமைந்துள்ள சொகுசு விடுதி

1990-களில், கர்நாடகா மாநிலம்-நகராஹோல் தேசியப் பூங்கா மற்றும் புலிகளின் புகலிடம் அமைந்துள்ள பகுதியின் மத்தியில் ‘கேட்வே டஸ்கர் லாட்ஜ்’ என்ற சொகுசு விடுதி கட்டுவதற்காக டாடாவுக்குச் சொந்தமான தாஜ் ஓட்டல்கள் குழுமம் ஒரு பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. ஒரு வனமுகாம் என்ற முன்மொழிதலைக் காட்டி, ஆனால் முழுமையான சுற்றுலா வசதிகள், மின்உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டர் மற்றும் கலந்துரையாடல்களுக்கான அறைகள் ஆகியவற்றுடன் கூடிய ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்காகத் திட்டமிடப்பட்டது. ஒரு தேசியப் பூங்காவிற்குள் எந்த நடவடிக்கைக்கும் மிகவும் கண்டிப்பான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவே இல்லை. இத்திட்டத்துக்குப் பெருமளவு பழங்குடி மக்களின் எதிர்ப்பு மற்றும் அதற்கு எதிரான சட்டமுறைப்பாடு காரணமாக இறுதியில், புலிகளின் புகலிடத்திலிருந்து டாடாக்கள் பின்வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.

டாடாக்களின் வன்முறைகளும் படுகொலைகளும்:

கலிங்கா நகர் நந்திகிராமம்

குவா படுகொலைகள்

பழங்குடி மக்களுக்கு எதிரான அரசு வன்முறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவின் சுரங்கத் தொழில் மாவட்டங்களில் சர்வசாதாரணமானது. நோவாமுடியில் டாடாவின் விமான நிலையம் ஒன்றுக்கு இடமளிப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1980 செப்டம்பர் 7 அன்று, நிலத்தைப் பறி கொடுத்த கிராமத்தவர்கள், டாடா எஃகு நிறுவனத் தலைவர் ரூசி மோடியை எதிர் கொண்டு மனு அளிப்பதற்காக விமான நிலையத்துக்குப் போனார்கள். கும்பலைப் பார்த்ததும், மோடியினுடைய விமானம் அங்கே தரையிறங்காமல் ஜாம்சேத்பூருக்குத் திரும்பியது. இவையெல்லாம் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த, பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியைத் தனிப் பழங்குடி மாநிலமாக்குவதற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நடந்தது. பழங்குடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசாங்கத்தை டாடாக்களும் பிற சுயநலக் கும்பல்களும் நிர்பந்தப்படுத்தின. செப்டம்பர் எட்டாம் நாளே அவ்வாறான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; பழங்குடியினரின் கொந்தளிப்பை அடக்குவதற்காக குவா நகரின் சந்தையில் வைத்து அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; தொடர்ந்து மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நிராயுதபாணிகளான எட்டுப் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

கலிங்காநகர் படுகொலை

2006, ஜனவரி 2 அன்று, ஒரிசா மாநிலம் கலிங்கா நகரில், கொடூரமாக ஆயுதமேந்திய ஒரு போலீசுப் படை பழங்குடி கிராம மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பன்னெடுங்காலமாக பழங்குடியினருக்குச் சொந்தமான நிலத்தில் டாடா எஃகு நிறுவனம் சட்டவிரோதமாக சுற்றுச்சுவர் கட்டியதற்கு எதிராகப் பழங்குடி மக்கள் கண்டனப் போராட்டம் நடத்தியபோது தான் இது நடந்தது. டாடா எஃகு நிறுவனம் அங்கு வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அந்தப் படுகொலைக்கு முன்புதான் டாடா எஃகு நிறுவன நிர்வாகத்தினர் மூன்றுமுறை ஒரிசா முதலமைச்சரைச் சந்தித்தனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என்று சிதைக்கப்பட்ட எட்டு உடல்கள் போலீசாரால் பிரேதப் பரிசோதனைக்கு தரப்பட்டன. இறந்து போயிருந்த ஒரு பெண்ணின் மார்பு அறுத்தெறியப்பட்டிருந்தது; துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு சிறுவனின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. எல்லா உடல்களிலும் இருந்து உள்ளங்கைகள் வெட்டி வீசப்பட்டிருந்தன. “இச்சம்பவம் தீவினைப்பயனானது (துரதிருஷ்டவசமானது)” என்று சொன்ன டாடா, “எதிர்ப்பிருந்தபோதும் அதே இடத்தில் திட்டமிட்டபடி ஒரு எஃகு ஆலை நிறுவுவது தொடரும்” என்று அறிவித்தார்.

சிங்கூர் ஒடுக்குமுறை

2006-ஆம் ஆண்டு டாடாவுக்கு ஒரு பெரும் கொடை கிட்டியது. கொல்கத்தாவுக்கு அருகாமையில் உள்ள சிங்கூரில் 900 ஏக்கர் வளமான பூமி மேற்கு வங்க அரசாங்கத்தால் டாடா மோட்டார் நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது. அங்கே லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் என்ற அறிவிப்புடன் கார் உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதுதான் திட்டம். கட்டாயமாக நிலங்களைப் பறித்து, அவற்றை டாடாவுக்குக் கையளிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். டாடாக்கள் தார்க்குச்சி போட்டதால், மேற்கு வங்க அரசாங்கம் சிங்கூர் விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தது; ஒரு காலத்தில் அமைதி தவழ்ந்த சிங்கூர் கிராமம் போர்க்களமாக மாற்றப்பட்டது; டாடா மோட்டார் நிறுவன இடத்தையும் அதன் ஊழியர்களையும் பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. (தொடரும்)

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

 1. டாடா குழுமத்தின் கோரமுகம் -1…

  டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்பதை விளக்கும் செய்தித் தொகுப்பு…

 2. தனது முழு தொழில் வாழ்க்கையிலும் இத்தகதைய கிரிமினல் ரவுடி முதலாளிகளாக இருந்த டாட்டாக்கள் குறித்து இப்போது ஊடகங்களில் வரும் செய்தி என்ன?

  ரத்தன் டாடா விமான சர்வீஸ் ஆரம்பிக்க நினைத்தாராம். அப்போது மத்திய மந்திரியாக இருந்தவர் 15 கோடி லஞ்சம் எதிர்பார்த்தாராம். லஞ்சம் கொடுத்து ஆரம்பிக்க வேண்டென்று நினைத்த டாடா அந்த திட்டத்தையே கைவிட்டாராம்.

  இப்போது யார் அந்த மந்திரி என்று கேட்டால் அப்படி யாரும் கேட்கவில்லை என்று ஒரு சமாளிப்பு வேறு. தனது இமேஜை உயர்த்துவதற்காக டாடா அப்படி ஒரு பில்டப்பை எடுத்து விட்டிருக்கிறார்.

  அது உண்மை என்று வைத்துக் கொண்டால் இப்போது இருக்கும்பல்வேறு டாடா நிறுவனத்தின்தொழில்களை ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக லஞ்சம் கொடுத்திருக்க வேண்டுமென்றாகிறது.

  ம்… பொய் சொல்வதையும் பொருந்தச் சொல்ல வேண்டும்.

 3. அருமை…….. டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்பதை விளக்கும் செய்தித் தொகுப்பு

 4. இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தும் தொழில் குழுமமாக டாட்டாவை முன்நிறுத்தும் வெகுஜன ஊடகங்கள் மறைத்த பல தகவல்களை வெளியிடும் சிறந்த கட்டுரை.

  இந்தியாவின் பெருமையாகப் பேசப்படும் அனைத்து நிறுவனங்களும், நாட்டையும், அதன் மூலம் ஏழை மக்களுக்கு சேர வேண்டிய வரிப்பணத்தையும் ஏய்த்துத்தான் முன்னேறியிருக்கின்றன என இவர்களைப் பற்றி பெருமை பேசுபவர்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்.

  நன்றி

 5. டாட்டா நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவிகிதத்தை டிரஸ்ட்களே வைத்துள்ளன.
  மேலும், TIFR மற்றும் IISC போன்ற உயர் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தவர்கள்.
  இவிங்களே இப்படியா?
  எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

 6. >>டாட்டா நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவிகிதத்தை டிரஸ்ட்களே வைத்துள்ளன.

  இதை நம்பி ஏமாந்து போகாதீர்கள். டிரஸ்டுகளின் டிரஸ்டிகள் எல்லாம் tata extended family உறுப்பினர்கள். கம்பனிகள் எல்லாம் குட்ம்பப் கட்டுப்பாட்டில் தான். இந்நிறுவனத்தின் கிராஸ் ஹோல்டிங் மிகச் சிக்கலானது. யார் எதற்கு முதலாளி என்று புரிந்து கொள்வதற்கு ஒரு பெரிய வரைபடம் போட வேண்டும். டாட்டாக்களுக்கும் அம்பானிகளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்திருக்கும் புனிதப் பசு பிம்பம் மட்டுமே

 7. டா டா குழுமத்தின் உண்மை முகத்தை போட்டு உடைத்து அவர்கள் முகத்திரையை கிழித்து விட்டீர்கள். டா டா மட்டும் அல்ல இன்னும் நாட்டில் இருக்கும் பல தரகு முதலாளிகள் பற்றி உண்மைகளை பற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

 8. ஆனால் டாட்டா குழுமத்தினால் பயன் பெறுவோர் பல லட்சங்கள் / கோடிகள் இறுக்கும் அல்லவா? அதற்காக மற்றவர்கள் ஏமாற்றப்படுவதை எந்த விதத்திலும் சரி என்று சொல்லவில்லை.. ஒருவகையில் எல்லா பெரிய கம்பனிகளும் எதோ ஒரு வகையில் தவறு செய்தே இப்போது உள்ள நிலையை எட்டி இறுக்கும்!!! பயன் பெறுவோர் Vs எமாற்றப்படோர் இதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க? வினவு விளக்க வேண்டும்..

   • காக்கா கடியாக இருந்தாலும் பயன் பெறுவோர் எண்ணிக்கை கோடிகளை தொடும்… மறைமுக பயனாளர்கள் (குடும்பம்) கணக்கில் சேர்த்தால் இது அதிகமே.. ஒன்றுமே செய்யமால் பல ஆயிரம் கோடிகளை விழுங்கும் அரசியல் முதலைகள் இறுக்கும் நாட்டில் குறைந்த பட்ச (காக்கா கடி) % ஆவது டாட்டாவிடம் இருந்து மக்களுக்கு கிடைப்பது மகிழ்ச்சியே…

    • நானும் சீதாவோட கட்சிதான்,

     //காக்கா கடியாக இருந்தாலும் பயன் பெறுவோர் எண்ணிக்கை கோடிகளை தொடும்… //

     காக்கா கடியா இருந்தாலும் பிரிடிஷ்க்காரன் ஒழுங்காக் கொடுத்தான். கோடிகளை மொத்தமாக சுருட்டும் இன்றைய அரசியல்வாதிகளை தூக்கிவிட்டு மீண்டும் பிரிட்டிஸ் காலனி ஆட்சி வரவேண்டும்என்று கோருகிறேன்

    • சகோதரி சீதா,
     உங்கள் கணக்குப்படியே ஒரு டாடாவால் பயன்பெறுவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிகளைத் தொடும் போது, நம் நாட்டில் உள்நாட்டு டாடாக்கள், வெளிநாட்டு டாடாக்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே தொழில் நடத்தும்போது இந்தியாவில் எண்பது சதவீத மக்கள் ஏன் ஒரு நாள் தினக் கூலி இருபது ரூபாய்க்கே கஷ்டப்பட வேண்டும்? வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாட வேண்டும்?
     அடுத்து ஆயிரம் கோடிகளை விழுங்கும் அரசியல்வாதிகளைவிட டாடாவின் ‘சேவை’ எவ்வளவோ பரவாயில்லை என்கிறீர்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் நேரடியாக ஆதாயம் அடைந்தது இந்திய தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளா? இல்லை அரசியல்வாதிகளா? அரசியல்வாதிகள்தான் என்று நமது சந்தைப் பத்திரிக்கைகள் நம்மை நம்பச்சொல்கின்றன. ஆனால் உண்மை என்ன? தரகு முதலாளிகள், மற்றும் பன்னாட்டு முதலாளிக்களுக்காக நடத்தப்பட்ட ஊழல்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல். இவர்கள்தான் அரசியல்வாதிகளை இயக்குகிறார்கள்.

  • http://www.myjamshedpur.com/making-township

   “Even though Jamshedpur is not technically a metropolis, the reason why its residents do not wish to shift to bigger cities is the quality of life Jamshedpur has to offer”

   The town’s drinking water is considered to be of the highest quality compared to that supplied in the towns and cities in the country today, and has been available on tap for the past 60 years. The drinking water here is popularly known as Aqua Tis. It comes from the Dimna reservoir and the Subarnarekha. Jamshedpur is kept almost clinically clean, with over 120,000 tonnes of garbage a year removed from the town by conservancy vehicles run by Tata Steel. Providing electricity to the town and maintaining electrical installations is the responsibility of the Town Electric Department. The Jubilee Park owes its privileged position of being one of Jamshedpur’s main tourist attractions entirely to the Town Electric Department. Three times a week and on selected national and State holidays the whole park is lit up. Maintenance of Jamshedpur, however, is expensive. “To run Jamshedpur, Tisco incurs an average annual expenditure of around Rs.139 crores,” said Sahai.

   The Tatas have contributed immensely to the development of education in Jamshedpur. Today the industrial city can boast of a literacy rate as high as 75 per cent, which, according to the company, is unparalleled in eastern India. Tata Steel runs eight primary schools, nine high schools and a college. Apart from this, the town has five company-aided schools and six schools supported indirectly by Tata Steel. Further, the company extends Millennium Scholarships – unlimited number for engineering – and 50 scholarships for other professional courses. For the uplift of women in the region, the company provides 20 scholarships exclusively for them, and also organises domestic management programmes. It also undertakes awareness programmes on relevant issues such as AIDS (Acquired Immune Deficiency Syndrome), alcoholism and drug abuse

 9. 1957 ஆம் ஆண்டு டைம்ஸ் இதழ் டாட்டா குழுமத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவின் போது வெளியிட்ட கட்டுரையில் அனைத்து இந்தியர்களுக்கும் (கம்யூனிஸ்டுகள் நீங்கலாக) டாட்டா வெற்றியின் அடையாளம் என்று எழுதியிருந்தது. இக்கட்டுரை வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகியும் டாட்டா வெற்றிகரமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸம்தான் உலகில் பூதக்கண்ணாடி வைத்து தேடவேண்டிய நிலையில் இருக்கிறது.

  To steelmen and to all Indians (except Communists), Tata symbolizes one of the world’s great success stories.

  Read more: http://www.time.com/time/magazine/article/0,9171,891398,00.html#ixzz16A702tyR
  http://www.time.com/time/magazine/article/0,9171,891398,00.html

  • //to all Indians //

   யாருங்க அந்த ‘all Indians’?

   அமெரிக்காவுக்கு போயிட்டு மன்மோகன் சிங் சொன்னாரே-
   “இந்தியர்கள் அதிபர் புஷ்ஷை ஆழமாக நேசிக்கின்றனர்” – அப்படின்னு.

   அந்த இந்தியர்களா?

 10. சென்னை முதல் உசிலம்பட்டி கண்மாய் வரை தண்ணீர் வரண்டு காய்ந்து வரும் நிலையில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் என மக்கள் அலைக்களிக்கப்படும் சூழலில் ‘சாதாரண தண்ணீர் குடித்து உங்கள் தாகத்தை வீணாக்காதீர்கள்’ என்றும் ஆரோக்கியமாக தாகம் தீர பருகுவீர் டாடா வாட்டர் ப்ளஸ் என டாடா விளம்பரம் கொடுக்கிறது.

  ஏற்கனவே சமையலுக்கு ஒரு குடம் ரூ 5 முதல் ரூ 10 செலவு செய்வது, குடிப்பதற்கு கேன் வாட்டர் ரூ 25 முதல் ரூ 30 செலவு செய்வது என பெரிய நகரம் முதல் சிறிய நகரம் வரை பரவிவிட்ட நிலையில் 3பேர் கொண்ட குடும்பம் மாதம் தண்ணீருக்கே ரூ 700 முதல் ரூ 1000 வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.

  இப்படி குடிக்கின்ற தண்ணீருக்கே அதிகம் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் கிராமம் வரைக்கும் பரவி வருகிறது.

  இச்சூழலில் பலசரக்கு முதல் தங்கம், கார், இரும்பு என அனைத்து தொழில்களையும் செய்துவரும் முதலாளி ரத்தன் டாடா குடிக்கின்ற தண்ணீரை ஊட்டச்சத்து கலந்தது என ஒரு லிட்டர் ரூ 16 என கடைவிரிக்கிறார்.

  அதுவும் சாதாரண தண்ணீரை குடித்து உங்கள் தாகத்தை வீணாக்காதீர்கள் எனவும் அதனை டாடாவுக்கு மொய்’ வைக்கவும் நாங்கள் ஜிங்க் கலந்த தண்ணீர தருகிறோம் என்கிறார். தாகம் என்பது ஆரோக்கியத்திற்கான வாய்ப்பு என புதிய விளக்கம் வேறு எழுதுகிறார்.

  ஒரு ரூபாய் இட்லிக்காகவும் 20 ரூபாய் அரிசிக்காகவும் ஏழை, நடுத்தர மக்கள் வரிசையில் காய்ந்து நிற்கும் போது அவர்கள் தாகத்தை தீர்க்க ஒரு பாட்டில் தண்ணீர் ரூ 16 தான் என சொல்லும் டாடா வின் லாபவெறியினை என்னவென்பது.

  மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது என சொல்லும் சூழல் இன்று உருவானதற்கு தண்ணீரை காசுக்கான பண்டமாக முதலாளித்துவம் மாற்றி வருவது தான் காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.

  அதன் உச்சபட்சம் தான் டாடாவின் இந்த விலைபேசும் அறிவிப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க