Wednesday, October 16, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்!

பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்!

-

புதுச்சேரி வடமங்கலம் பகுதியில் இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (DETS DIVISION)  என்ற பிரிட்டிஷ் கம்பெனி இயங்கி வருகிறது. இக்கம்பெனியில் சுமார் 515 நிரந்தர தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு மூன்று தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்துஸ்தான் யூனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற மூன்றாவது தொழிற்சங்கம். இத்தொழிற்சங்கம் கடந்த 2008ன் மத்தியில் புரட்சிகர தொழிற்சங்கமான புதியி ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உடன் இணைந்து செயல்பட தொடங்கியது.

தொடங்கிய நாள் முதல் நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் சட்டவிரோத முறைகேடுகளையும் தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும் 2002-06 ஊதிய ஒப்பந்தத்தம் மற்றும் 2007-11 ஊதிய ஒப்பந்தத்திலும் HUL நிர்வாகம் தொழிலாளிகளை ஏமாற்றி நயவஞ்சகமாக வயிற்றில் அடித்ததை அம்பலப்படுத்தியும் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டி அரசியல்ரீதியாக அணிதிரட்டியும் தனது புரட்சிகர கால்தடங்களைப் பதித்தது.

தொழிலாளிகள் தமது பிரச்சினைகளோடு அரசியல் ரீதியில் அணிதிரளத் துவங்கியது இந்துஸ்தான் லீவர் நிறுவனத்துக்கு பெரும் ஆத்திரத்தை அளித்தது. இதன் விளைவாக நிர்வாகம் முதலில் தொழிற்சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த முன்னணித் தோழர் முத்துக்கிருஷ்ணன் அவர்களை வேலை நீக்கம் செய்தது. அடுத்து மற்ற இரண்டு தொழிற்சங்கத்தையும் பு.ஜ.தொ.முவு க்கு எதிராக களம் இறக்கியது. தொழிலாளர்கள் மத்தியில் சாதி ரீதியானப் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தது. எதிர் கிளர்ச்சியை கிளப்பிவிட்டது.

தொடர்ந்து தோழர்கள் நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கும் சதிவேலைகளுக்கும் எதிர் கிளர்ச்சிகளுக்கும் தக்க பதிலடிக் கொடுத்து தொழிலாளர்களை வர்க்கமாக அணிதிரட்டி முன்னேறிக் கொண்டே சென்றார்கள். இதைக் கண்ட HUL நிர்வாகம் அடுத்த முன்னணித் தோழரும் இத்தொழிற்சங்கத்தின் தலைவருமான தோழர் அய்யனாரை அடியாள் வைத்து மிரட்ட ஆரம்பித்தது. பு.ஜ.தொ.மு தொழிற்சங்க பலகையை அடித்து நொறுக்கியது. இதோடு முடிந்தது என்று பெருமூச்சு விட்டது நிர்வாகம் ஆனால் தொழிலாளிகள் முடித்துக் கொள்வதாக இல்லை.

”முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறையும் சுரண்டலும் இருக்கின்ற வரையில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் ஓயாது” என்ற மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் மீண்டும் தோழர்கள் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். தடைகளையும் அச்சுறுத்தல்களையும் காலில் போட்டு மிதித்து நிமிர்ந்து நின்றார்கள். பு.ஜ.தொ.மு தோழர்களின் நெஞ்சுரமும் நேர்மையும் தொழிலாள வர்க்கத்தின் நலனுக்கான இடையறாத போராட்டமும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் விளைவாக மற்ற 2 தொழிற்சங்கங்களும் சரியத் தொடங்கின.

தொடர்ந்து அடிமேல் அடி வாங்கிய நிர்வாகம் இத்தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர் அய்யனாரை பொய்க்காரணங்கள் கூறி 10 நாள் பணியிடை நீக்கம் செய்தது. அடுத்து ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி மெமோ கொடுத்தது. பிறகு அவரது இரு சக்கர வாகனத்தை ஆள் வைத்து உடைத்தது. சில முன்னனி தொழிலாளிகளை பணி மாற்றமும் செய்தது. பிறகு பு.ஜ.தொ.மு தொழிற்சங்கமானது “நக்சலைட் தொழிற்சங்கம், பயங்கரவாத தொழிற்சங்கம், அதற்கு செல்லாதீர்” என பயமுறுத்தியது. பிறகு தொழிலாளிகளைத் தனித்தனியே அழைத்து மிரட்டியது.

இதைக் கண்டித்து பு.ஜ.தொ.மு  தொழிற்சங்கம் வாயிற்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், சுவரொட்டி, பிரசுரம் என தொழிலாளர்களை அணிதிரட்டவும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும் களத்தில் இறங்கியது. இதையொட்டி கடந்த 25.11.2010 அன்று நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும், தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. ஆனால் நிர்வாகம் இக்கண்டன ஆர்ப்பாடம் நடக்க்க் கூடாது என்று முடிவு கட்டியது.

இதன் விளைவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த இடத்தில், HUL  நிர்வாகத்திற்கு சொந்தமில்லாத அரசுக்கு சொந்தமான இடத்தில், 20திற்கும் மேற்பட்ட நிர்வாகத்தின் லாரிகளை நிறுத்தி வைத்து தடையை ஏற்படுத்தியது. தோழர்கள் போலீசிடம் முறையிட்டு அவ்விடத்தில் இருந்த லாரிகளை அப்புறப்படுத்த கோரினார்கள். போலிஸ் சென்று நிர்வாகத்திடம் பேசியும் நிர்வாகம் மயிரளவும் போலீசை மதிக்கவில்லை.

எனவே தோழர்கள் நிர்வாகத்தின் அதிகாரிகளது கார்கள் மட்டும் செல்வதற்கு இருந்த வழியை மறித்து கூட்டத்தை நடத்த தயாரானார்கள். ஒன்று திரண்ட தொழிலாளிகளது உறுதியை கண்டு அஞ்சிய நிர்வாகம் வேறுவழியின்றி லாரிகளை அப்புறப்படுத்தியது. கூட்டம் ஆரம்பித்த நேரம் மழை பொழிய ஆரம்பித்தது. மழையில் கூட்டம் நடைபெறாதென சந்தோஷத்தில் நிர்வாகம் குதூகலமிட்ட்து. ஆனால் தொழிலாள வர்க்க உணர்வு நிர்வாகத்தின் தடையை மட்டுமல்ல இயற்கையின் தடையையும் அலட்சியப்படுத்தியது.

கொட்டும் மழையிலும் கூட்டம் நடக்கத் தொடங்கியது. தொழிற்சங்கத்தின் பொருளாளர் தோழர் லோகு தலைமை தாங்கினார். இவரைத் தொடர்ந்து புதுச்சேரி பு.மா.இ.மு வின் அமைப்பாளர் தோழர் கலை அவர்கள் புதுவை மாநிலத்தின் இன்றைய தொழிலாளர்கள் நிலைமைகளைப் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசினார். இக்கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின்,HRPC யின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ அவர்கள் நிர்வாகத்தின் சட்டவிரோத போக்குகளையும் அதற்கு ஆதரவாக இருக்கும் அரசின் மெத்தனப் போக்கையும் அதை எதிர்கொண்டு எப்படித் தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.

நிர்வாகத்தின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் மழையில் நனைந்து கொண்டே இக்கூட்டத்தினை பெரும்பாலான தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு கலந்துகொண்டு சிறப்பித்தனர். மழையில் நனையாமல் ஒதுங்கியிருந்த சில தொழிலாளர்களின் மத்தியிலும் இனி இந்த போராட்டத்திலிருந்தும், இந்த சங்கத்திலிருந்தும் ஒதுங்கியிருக்க கூடாது என்ற உறுதியை அந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றியைக் கண்டு அஞ்சிய நிர்வாகம் எங்கு தோற்றுவிடுவோமோ என்று மறுநாளே தொழிலாளர்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டது. மேலும் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் பலத்தை குறைக்க தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களை மிரட்டி இத்தொழிற்சாலையில் இயங்கிவரும் தனது கைப்பாவைத் தொழிற்சங்கமான WEL’S யூனியனில் இணையக் கூறி HUL  நிர்வாக அதிகாரிகளே நேரடியாக தொழிலாளர்களிடம் சென்று கையழுத்து வாங்கி உறுப்பினர் சேர்க்கின்றனர்.

இப்படிச் செய்வதின் மூலம் HUL  நிர்வாகம் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளது.
1. முதல் தொழிற்சங்கத்திற்கும் பு.ஜ.தொ.மு தொழிற்சங்த்திற்கும் மோதலை உருவாக்க முயலுகிறது.
2. WEL’S யூனியன் அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக மாற்றினால் 2007-11 ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை ஏமாற்றியதுபோல் 2011ல் போடப்போகிற ஊதிய ஒப்பந்த்த்திலும் ஏமாற்றி விடலாம் எனத் திட்டம் தீட்டுகிறது.
3. தொழிலாளர்களுக்குள் பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதன் மூலம் தொழிலாளர்களுக்குள் பிளவை ஏற்படுத்தி வர்க்க ஒற்றுமையை சீர்குலைத்து பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தை ஒழிக்க முடிவு செய்துள்ளது.

ஆயினும் இந்த அடக்குமுறைகளை மீறி தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வை வளர்ப்பதிலும், போராடுவதிலும் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கள் உறுதியாக இருக்கிறது. இந்தியாவில் மிகப்பெருமளவில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் இந்துஸ்தான் யூனிலிவர் கம்பெனி, நூற்றுக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டும் பகாசுரக் கம்பெனி இங்கே தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுவதிலும் முனைப்பாக இருக்கிறது. ஆயினும் கோலியாத்துக்கள் வீழ்த்தப்படுவார்கள். தொழிலாளர்கள் வெல்வார்கள்!

பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்! -பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்! -பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்! -

_____________________________________

புதிய ஜனநாயகம் செய்தியாளர், புதுச்சேரி
_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. பாண்டிச்சேரி : இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்!…

    மிகப்பெருமளவில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் நூற்றுக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டும் இந்துஸ்தான் யூனிலிவர் கம்பெனி, தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகிறது….

  2. […] வினவு! இக்பால் செல்வன்எனது பெயர் இக்பால் செல்வன். புதுவையை பூர்விகமாக கொண்ட நான். கல்வி கற்றது சென்னையில். தற்போது வசிப்பது கனடா தேசத்தில். சமூகம், அறிவியல், விந்தைகள் மற்றும் தமிழ் சார்ந்த விசயங்களை எழுதுவதில் ஆர்வம் உடையவன். […]

  3. […] This post was mentioned on Twitter by வினவு and sandanamullai, ஏழர. ஏழர said: #Pondicherry – Against Hindustan Unilever's Anti-Labour Policy http://j.mp/efrrsg #Unilever #Retweet #Vinavu […]

  4. பறையடித்து, தெருவைக்கூட்டி, பேசத் தொடங்கினால்
    கரை வேட்டிகளும், பாக்கெட்டுகளும் கலகம் செய்யும்.
    கலகம் அடக்கிப் பேசி முடித்துத் திரும்ப முனையும் போது புதிதாய் நான்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் உடன் நடக்கும்

    நன்றி தோழர் மருதையன
    நூல்: போராடும் தருணங்கள்

  5. தனக்கு அநீதி இழைக்கப்படும் போது எவன் ஒருவன் போராடுகிறானோ அவனே மனிதன். எறும்புகூட தனக்கு ஆபத்து எனில் எதிர்த்துப் போராடுகிறது. தீங்கிழைப்பவனை கடித்து விரட்டுகிறது. எறும்புக்கு எத்தனை அறிவு என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆறறிவு கொண்ட மனிதன் போராடவில்லை என்றால் அது வெட்கக்கேடு. கோழைத்தனம்.

    கோழைத்தனத்தைத்தான் பிழைப்புவாதிகள் மக்களுக்கு போதிக்கிறார்கள்.

    ஆனால் அநீதிக்கு எதிராக போராடும் ஆற்றலை பு.ஜ.தொ.மு வளர்க்கிறது. இறுதிவரை போராடுபவர்கள் தோற்பதில்லை.

    போராடும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

  6. indha mathiriyana katturaigal thaan vinavu thalathirkku vara pidithirukiradhu! ungal pani thodarattum. vaazthukkal! idhu pondra katturaigalukku mukiathuvam kodukkumar kettukollugirom!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க