சிறுமி தனம் படுகொலை! இந்தியாவின் வளர்ச்சி தந்த பரிசு !!

22
(மாதிரிப்படம்)

வறுமைக்குள் மூழ்கடிப்பட்ட ஏழைகளை குறிவைத்து நடத்தப்படும் கிட்னி திருட்டுக்குப் பின் இப்போது குறைவான முதலீட்டில் கொள்ளை லாபம் பெறும் வியாபாரமாய் உருவாகியிருப்பது ஏழை பெண் குழந்தைகளை கடத்தி விற்பதுதான். சில மாதங்களுக்கு முன்பு கிரிஜா என்னும் பெண் கடலூர், புதுவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் 10,000 ரூபாய் மட்டுமே கொடுத்து பல குழந்தைகளை வாங்கி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் வரை வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு பணக்கார எஜமானர்களுக்கும் விற்றுள்ளார்.

விழுந்துவிட்ட விவசாயம், பஞ்சாலைத் தொழில், நலிவடைந்து போன சிறு வணிகம், வேலையிழப்பு என்று தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கடும் பஞ்சம் நிலவுகிறது. கடனிலிருந்து மீள உணவுக்காக என கந்து வட்டிக்கு வாங்கும் கடன் கழுத்தை நெறித்து குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3,000 -க்கும் மேல்.

என்னை மிகவும் பாதித்த நிகழ்வு சேலம் காரியப்பட்டியைச் சார்ந்த ஜெயலட்சுமியின் கதைதான். அவர் வறுமை காரணமாக குள்ளம்பட்டியில் உள்ள குளத்தில் தனது மூன்று குழந்தைகளையும் வீசி விட்டு அவரும் குதிக்கிறார். மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட ஜெயலட்சுமி உயிர் தப்பி விடுகிறார்கள். இப்போது அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினீல் வெளி வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

பல லட்சம் கூலித் தொழிலாளர்களின் நிலை இன்று இப்படித்தான் உள்ளது. தனியார்மயமும் தாரளமயமும் இணைந்து ஏழைகளுக்கு வழங்கியிருக்கும் பரிசு இதுதான். மிகக் கொடூரமான வறுமை.

இந்த வறுமை நிலையும் , தற்கொலைகளும்  இரண்டு புதிய வியாபாரங்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்தன, 2004- இல் சுனாமி வந்து எல்லா வாழ்வாதரங்களையும் இழந்த மீனவ மக்களை குறிவைத்து கிட்னி திருடர்கள் கிளம்பினார்கள். தமிழகமெங்கிலும் லட்சக்கணக்கான மீனவ மக்களும் தலித்துக்களும் வறுமை காரணமாக வெறும் நாற்பதாயிரம் ரூபாய்க்கு கிட்னிகளை இழந்தனர். எண்ணூர் சுனாமி நகரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி கிட்னியை இழந்திருக்கிறார்கள்.

இதில் கைது செய்யப்பட்ட மருத்துவர் வெளியில் வந்து இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். சென்னை தி.நகரில் இருக்கும் பாரதிராஜா மருத்துவமனையும் இதில் ஒன்று. இப்போது அந்த மருத்துவமனை வாசலில் கருணாநிதியின் ஆளுயர விளம்பரப்பலகை வைத்து “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் படி இலவச மருத்துவம்” பார்க்கப்படும்” என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு கோடீஸவர மருத்துவமனை, கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை என கிட்னி திருடி ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையை பயன்படுத்தி வாழ்வை பறித்திருக்கிறார்கள். ரகசியமாக விசாரித்த போலீசும் அப்படியே இதை மௌனமாக்கி விட்டது.

தனலெட்சுமி – ஒரு குழந்தைப் படுகொலை!

சிறுமி தனலட்சுமி - சடலமாக
சிறுமி தனலட்சுமி – சடலமாக

அந்த வகையில் இப்போது கூட சேர்ந்திருப்பது பெண் குழந்தை விற்பனை. கடலூரைச் சார்ந்த செல்லப்பன், அஞ்சலையின் 11 வயது குழந்தை தனலெட்சுமி

கொலைகார தம்பதி - வக்கீல் ஜோஸ் சூரியன் - அவரது மனைவி சிந்து
கொலைகார தம்பதி – வக்கீல் ஜோஸ் சூரியன் – சிந்து

என்னும் தனம். வறுமை காரணமாக  தனலட்சுமி ரூபாய் இருபதாயிரத்திற்கு கேரளாவைச் சார்ந்த வக்கீல் குடும்பத்திற்கு வீட்டு வேலைக்காக விற்கப்பட்டிருக்கிறார். வக்கீல் ஜோஸ் குரியனும் , மனைவியான சிந்து என்பவரும் சேர்ந்து குழந்தை தனலெட்சுமியை நாய்க் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். சிறுமி தனத்தை பல நாட்கள் நிர்வாணமாகவே அடைத்து வைத்து உதைத்தும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

கடந்த வியாழன் அன்று ஆலுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி தனம் அன்றே மருத்துவமனையில் இறந்தும் போயிருக்கிறாள். உடல் முழுக்க தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தனத்தின் உடல் ஆலப்புழா மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட போது உடல் முழுக்க எண்பது வகையான காயங்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். வயிற்றில் காயங்கள், தீக்காயங்கள், சிகரெட்டால் சுட்ட வடுக்கள், முதுகில் காயங்கள், என கொழுப்பெடுத்த சைக்கோ தம்பதிகளிடம் ஏழை தனம் சிக்கிக் கொண்டாளோ என்னவோ?

வெள்ளிக்கிழமை IPC 302 (கொலை வழக்கு)இன் படி பதிவு செய்து குரியனையும், சிந்துவையும் கைது செய்திருக்கிறது போலீஸ். தனத்தின் சித்திரவதையான இந்தப் படுகொலையைக் கண்டு மனம் பொறுக்காத ஆலுவா மக்கள் குரியனையும், சிந்துவையும் தாக்கப் பாய்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக ஆயுள் முழுக்க சிறையில் வைக்கப்பட வேண்டியவர்கள்தான் இவர்கள். என்றாலும் வறுமையை ஒழிக்காமல் தனங்களின் கொலைகளை எப்படி சரி செய்ய முடியும்?

வறுமையை ஒழிப்பது என்பது சில பணக்காரர்களின் கருணை மனப்பான்மையால் நடப்பதல்ல. செல்வந்தர்கள் உயர உயர வறுமையும் உயர்கிறது. இந்த வளர்ச்சியைத்தான் இந்தியாவின் வளர்ச்சி என்று தாராளமயதாசர்கள் கூப்பாடு போடுகிறார்கள். நாம் இந்த வளர்ச்சியை கருவறுக்கும்போது மட்டும்தான் தனம் போன்ற ஏழைச் சிறுமிகளை காப்பாற்ற முடியும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்