ஏழை மக்களின் உறுப்புகளைத் திருடும் மருத்துவ மாஃபியா

ஏஜெண்டுகள் கேரளாவில் உள்ள லேக் ஷோர் மருத்துவமனைக்கு சிறுநீரகத்தை விற்பதற்கு மக்களை அழைத்து செல்கின்றனர். கந்து வட்டிக்கு கடன் வாங்கிய மக்களை இலக்காக வைத்து அவர்களை மூளைச்சலவை செய்துதான், சிறுநீரகத்தை விற்பதற்கான ஒப்புதலை வாங்குகிறார்கள்.

கேரளாவில் கொச்சி பகுதியில் லேக் ஷோர் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்திய அளவில் பிரபலமான மருத்துவமனையாக உள்ளது. இதன் உரிமையாளர் ஆசிய அளவில் முதலாவது பெரிய ஷாப்பிங் மாலான லூலூவின் (Lulu shopping mall ) உரிமையாளரின் மருமகன் ஆவார்.

கடந்த 29.05.2024 அன்று ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் செய்தியாக வெளியானது. ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி தொழிலில் ஈடுபடும் மக்களும், அன்றாடம் உழைக்கும் மக்களும் கந்துவட்டி கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலையில் உள்ளனர். கந்து வட்டி கடன் தொல்லை மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த கடன் தொல்லையிலிருந்து மீள அவர்கள் சிறுநீரகத்தை விற்று கடனை அடைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதற்காக பல ஏஜெண்டுகள் கேரளாவில் உள்ள லேக் ஷோர் மருத்துவமனைக்கு சிறுநீரகத்தை விற்பதற்கு மக்களை அழைத்து செல்கின்றனர். இந்த ஏஜெண்டுகள் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் கந்து வட்டிக்கு கடன் வாங்கிய மக்களை இலக்காக வைத்து அவர்களை மூளைச்சலவை செய்துதான், சிறுநீரகத்தை விற்பதற்கான ஒப்புதலையே வாங்குகிறார்கள். இந்த சிறுநீரகங்கள் 30 லட்சத்திற்கும் மேல் விலை பேசப்படுகிறது. ஆனால், சிறுநீரகத்தை கொடுப்பவர்களுக்கு 4 லட்சம், 5 லட்சம் என அதிகபட்சமாக 7 லட்சம் வரை கொடுத்துவிட்டு மொத்தத்தையும் அவர்களே சுருட்டிக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் இம்மாதிரியான மருத்துவமனைகள் பெரிய அளவில் இல்லாமல் இருப்பதால் அவர்கள் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். சௌந்தரராஜன் என்ற ஒரு ஏஜெண்டு சிக்கியுள்ளார். அவரிடம் விசாரிக்கும் போது 80க்கும் மேற்பட்ட மக்களை லேக் ஷோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுநீரகம் மற்றும் கல்லீரல் (Kidney & Liver) ஆகிய உறுப்புகளை விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அந்த மருத்துவமனைக்கு வந்த சிலரை பத்திரிகை நிருபர் ஒருவர் அழைத்து விசாரித்துள்ளார். அவர் விசாரித்து வெளியிட்ட வீடியோவில் 40 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்ணும், 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு ஆணும் எதற்காக அவர்கள் சிறுநீரகத்தை விற்றார்கள் என்பதை கேட்கும்போது மனம் பதைபதைக்கிறது.


படிக்க: பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி விடுதி மாணவிகள்


பொதுவாக உறுப்பு தானம் செய்யும்போது சில விதிமுறைகள் உள்ளன. முதலாவதாக, உறுப்பு தானம் செய்பவர் பெறுபவரது குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை, தந்தை-மகன் போன்ற ஒரே குடும்பத்தில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக உறுப்பு தானம் பெறுபவரின் உறவினர்களாக இருக்க வேண்டும். உறவினர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது ஆவணங்களை DME (DIRECTOR MEDICAL EDUCATION) என்ற ஒரு அரசாங்க கமிட்டியின் ஒப்புதல் பெற்ற பிறகு உறுப்பு தானத்தை செய்ய முடியும்.

மூன்றாவதாக குடும்பத்திலோ உறவினர்களிடமோ உறுப்புகள் தானமாக பெற முடியவில்லை என்றால், ஒரே இரத்த வகையை சேர்ந்த வேறு நபர்கள் தானமாக உறுப்புகளை DME இடம் ஒப்புதல் பெற்று வழங்கலாம். இக்கமிட்டியில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் போலீசு துறை அதிகாரிகள் இருப்பார்கள்.

ஆனால் இந்த ஏஜெண்டுகள் போலியான ஆவணங்களை தயார் செய்து இந்த மக்களை சிறுநீரக தானம் செய்ய வைக்கின்றனர். உறுப்பு பெறுபவர் மற்றும் கொடுப்பவர்களை உறவினர்களாக காட்டுவதற்கு போலியான புகைப்படங்கள் மற்றும் போலி ஆவணங்களை தயார் செய்கின்றனர். குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றுவது போன்ற செயல்களை ஒரே நாளில் செய்யும் அளவிற்கு இக்கும்பல் வளர்ந்துள்ளது. இந்த குற்றங்கள் அரசு அதிகாரிகளின் துணையோடு நடக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் மேற்குறிப்பிட்ட இந்த கமிட்டியின் உதவியோடு இக்கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த ஏஜெண்டுகளும் கந்துவட்டிக்காரர்களும் கூட்டாக செயல்பட்டு அப்பாவி ஏழை மக்களை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை விற்கும் நிலைக்கு தள்ளுகிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி என்ற ஒரு நெசவுத் தொழிலாளி கந்து வட்டிக்கு வாங்கிய 3 லட்சத்தை அடைப்பதற்கு சிறுநீரகத்தை விற்பதற்காக இதே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்பொழுது அவரது மனைவி இதை அறிந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து அவரை மீட்டனர். இந்த விசயம் அன்று மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சேலத்தில் கூலித் தொழிலாளியான ஸ்ரீரங்கன் சாலை விபத்தில் சிக்கி சேலம் பெங்களூர் சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மூளைச்சாவடைந்த நிலையில் அவரது இரண்டு சிறுநீரகங்கள் இருதயம் மற்றும் இரண்டு கண்களை வழங்கினால் இரண்டு லட்சம் தருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இல்லையென்றால் 50,000 பணத்தை கட்டி உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். வேறு வழியில்லாமல் குடும்பமும் அதனை ஒப்புக்கொண்டது.


படிக்க: ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!


இரண்டு வருடத்திற்கு முன்பு டெல்லியின் தெற்கு பகுதியில் ஒரு கும்பல் மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், கோவில்வாசல் மற்றும் சாலைகளின் ஓரம் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை மக்களை பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடமிருந்து சிறுநீரகங்களைத் திருடியுள்ளது. மாதம் இரண்டு சிறுநீரகங்கள் என்று திட்டமிட்டு ஆறு மாதங்களில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் வாழ வழியில்லாமல் சிறுநீரகங்களை விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் இந்த போக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் ஒரு பெரிய வலைப்பின்னலாக இருந்து வருகிறது. இரத்தம், எலும்பு, தசை, சிறுநீரகம், கண், கருமுட்டை, தலை முடி, இதயம் போன்ற உறுப்புகளை சட்டத்திற்கு புறம்பாக அனைத்து நாடுகளிலும் உள்ள மாஃபியாக்கள் விற்று வருகின்றனர். இதற்கான சந்தையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.

சிறுநீரக தானம் செய்த நபர்கள் சாதாரண மனிதர்களைப் போல நீண்ட காலம் வாழ முடியும். இந்த நபர்களுக்கு சர்க்கரை வியாதியோ, உயர் ரத்த அழுத்தமும் வர நேர்ந்தால் அவர்களின் வாழ்நாளின் அளவு குறைந்துவிடும். மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாது.

இம்மருத்துவமனையில் உறுப்பு தானம் அளித்தவர்களுக்கு ஒரு வருடத்திற்கான மருத்துவ செலவு உறுப்பு பெறுபவர்கள் ஏற்பதாக உறுதி அளிக்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அதனை ஒருவரும் நிறைவேற்றுவதில்லை. இதனால் இம்மக்கள் மிகவும் உடல் நல பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பெரும்பாலும் வசதி படைத்த பணக்காரர்கள் ஆடம்பர சொகுசான மற்றும் போதை கலாச்சாரத்தினால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு போகும் நிலைக்கு ஆளாகின்றனர். ஆனால் இந்த உறுப்புகளை தானமாக கொடுக்க வரும் நபர்களோ பெரும்பாலும் ஏழை எளியவர்களாகவும் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து கடனாளியாக பொருளாதார ரீதியில் அடித்தட்டில் உள்ளவர்களாக இருக்கின்றனர். மக்களின் வறுமையை இந்த கயவர்கள் தங்களின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஏழை மக்களை குறிவைத்து உறுப்புகளை விற்க வைத்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றனர்.

தொடர்ந்து உறுப்பு மாற்று சிகிச்சை என்ற பெயரில் அப்பாவி உழைக்கும் மக்களை குறிவைத்து சட்டவிரோதமாக உறுப்புகளை வியாபாரம் செய்யும் இது போன்ற மருத்துவமனைகள் மற்றும் இந்த வலைப்பின்னலில் உள்ளவர்கள் கைது செய்யப்பட வேண்டும். உடனடியாக இதுபோன்ற மருத்துவமனைகள் இழுத்து பூட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்த கயவர்களிடம் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க