privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சென்னை ஹூண்டாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

சென்னை ஹூண்டாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

-

ந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக கார்களை உற்பத்தி செய்யும் ஹூண்டாய் நிறுவனம் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு பிரபலமானது. ஏற்கனவே தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக சி.பி.எம் சார்ந்த சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்த பன்னாட்டு நிறுவனத்திற்காக தமிழக வளங்கள் நிலம், மின்சாரம், குடிநீர், அனைத்தும் மலிவான விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மூலதனத்தில் லாபத்தை எடுத்துச் செல்லும் ஹூண்டாய் நிறுவனம் தொழிலாளர்களை சுரண்டுவதில் எப்போதும் கண் கொத்திப் பாம்பாய் இருக்கும்.

ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் தென்கொரியாவைச் சேர்ந்த முதலாளிகளே அதிகம். அங்கேயும் தொழிலாளர் ஒடுக்குமுறை அப்படியே பின்பற்றப்படுகிறது.

மேலும் ஹூண்டாய் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு நிரந்த தொழிலாளிகளுக்கு இருக்கும் சம்பளமோ, இதர உரிமைகளோ இருக்காது. இவர்களின்றி உற்பத்தி இல்லை எனுமளவுக்கு எண்ணிக்கை அதிகம்.

அதில் டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 1,800 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். உற்பத்தியின் முக்கியமான பிரிவுகளில் இவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் நான்கைந்து ஆண்டுகளாய் வேலை பார்த்தாலும் சம்பளம் என்பது நான்காயிரத்து எண்ணூறு மட்டும்தான். அதில் பல்வேறு பிடித்தங்கள் போக நான்காயிரம் மட்டுமே கிடைக்கும். ஐந்து இலட்சத்திற்கு காரை விற்கும் ஒரு நிறுவனம் ஒரு தொழிலாளிக்கு நான்காயிரம் ரூபாயை மட்டும் கொடுக்கிறது என்றால் இதன் சுரண்டல் அளவை விவரிக்கத் தேவையில்லை. இந்த சம்பளத்தை வைத்து இன்றைய விலைவாசியில் எப்படி குடும்பம் நடத்த இயலும்?

மேலும் இந்த தொழிலாளிகளுக்கு உணவு கூட நிர்வாகம் கொடுப்பதில்லை. சில போராட்டங்களுக்கு பிறகுதான் மதிய உணவு மட்டும் வழங்குகிறார்கள். அதற்கும் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்கள். தீபாவளி போனஸ் இவர்களுக்கு இல்லை. அதுவும் மே மாத இறுதியில் ஒரு மாத சம்பளத்தை மட்டும் முன்பணமாக கொடுத்து விட்டு பின்பு சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள்.

5,6 வருடம் வேலை பார்த்தாலும் இன்க்ரிமெண்ட் என்பது ரூ.250 அல்லது ரூ.300 மட்டும்தான். இவையும் கூட தொழிலாளர்கள் ஓரிரு முறை வேலை நிறுத்தம் செய்த பிறகே அளித்திருக்கிறார்கள். ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து டி.வி.எஸ் நிறுவனம் ஒரு தொழிலாளிக்கு என்று எவ்வளவு பணம் வாங்குகிறது என்பது தொழிலாளிகள் அனைவருக்கும் தெரியாத இரகசியமாகும்.

ஹூண்டாய் ஆலையில் ஒரு ஷிப்ட்டிற்கு 250 முதல் 350 கார்கள் உற்பத்தியாகின்றன. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள். வருடத்திற்கு நான்கு இலட்சத்திற்கு அதிகமான கார்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தையைக் கொண்டிருக்கும் ஹூண்டாய் நிறுவனம் எவ்வளவு இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதை வாசகர்கள் கணித்துக் கொள்ளலாம்.

ஆனால் இங்கு அந்த காரை உற்பத்தி செய்ய தனது உடலுழைப்பை அளிக்கும் தொழிலாளிக்கு உணவு இல்லை, மருத்துவ வசதி இல்லை, பண்டிகை நாட்களில் போனஸ் இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை. இந்த ஒப்பந்த தொழிலாளிகளில் முப்பது சதவீதம்பேர் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்தும், ஏனையோர் தமிழகம் முழுவதும் இருந்து வந்து வேலை செய்கிறார்கள். இவர்களில் பிளஸ் 2, டிகிரி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், முதுகலை படித்தவர்கள் உண்டு.

இத்தனை நாளும் இந்தக் கோரிக்கைகளுக்காக ஓரிரு முறை போராடினாலும் நிர்வாகம் அதை தட்டிக் கழித்து வந்தது. அதன் விளைவாக இன்று ஜூன் 8 புதன்கிழமை அன்று தொழிலாளிகள் அனைவரும் திரண்டு வந்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஹூண்டாய் ஆலை முன்புறம் அனைவரும் காலை முதல் தண்ணீர் பாக்கெட்டுகள் தவிர வேறு எதுவுமின்றி போராடி வருகிறார்கள். டி.வி.எஸ் முதலாளிகள் காலையில் வந்து பார்த்து விட்டு “ஆகட்டும் பாக்கலாம், ஒரு மூன்று மாதம் டைம் கொடுங்கள்” என்று இழுத்தடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

தொழிலாளிகளது வேலை நிறுத்தத்தினால் லைன் நின்று அதாவது உற்பத்தி முடங்கி விட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சுரண்டும் ஹூண்டாய் நிறுவனம் தற்போது கையைப் பிசைந்து வருகிறது. தொழிலாளிகளது கோரிக்கை சம்பளம் ரூ,10,000, உணவக வசதி, எட்டு சதவீத போனஸ் ஆகியவையாகும். இந்த முறை இதை அடையும் வரை போராடுவதாக சொல்லுகிறார்கள். ஆனாலும் இவர்கள் தற்போது எந்த சங்கத்திலும் அணிதிரண்டு போராடவில்லை. தன்னிச்சையாகவே போராடுகிறார்கள். இவர்களது எண்ணிக்கைதான் இவர்களது பலம். அதைக் கண்டுதான் நிர்வாகம் பயப்படுகிறது.

ஆலையில் இருக்கும் சி.பி.எம் சார்ந்த சி.ஐ.டி.யு சங்கமும் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் போராடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையே என்று சட்டவாதம் பேசுகிறது. தொழிலாளர் போராட்டத்தை நிறுத்துவதற்கு இவர்களும் முயல்வதாக தொழிலாளிகள் கூறுகிறார்கள். ஏற்கனவே ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் சிறை, கைது என்று சென்றிருந்த படியால் நிரந்தரத் தொழிலாளிகள் யாரும் இந்த போராட்டத்தில் பங்கு பெறவில்லை. இதுதான் சி.பி.எம் உருவாக்கியிருக்கும் தொழிற்சங்கவாதம்.

பாசிச ஜெயா ஆட்சிக்கு வந்திருக்கும் நேரம் இந்த அப்பாவித் தொழிலாளிகளது போராட்டம் மிருகத்தனமாக ஒடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாமரம் வீசும் வேலையில் தி.மு.க, அ.தி.மு.க என்று வேறுபாடு இல்லை.

ஆயினும் இத்தகைய பாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் இனியும் அடங்க மாட்டோம் என்று உறுதியாயிருக்கும் தொழிலாளிகள் இன்றில்லை என்றாலும் என்றாவது தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பார்கள்.

தற்போது இரு ஷிப்டுகள் முடங்கிய நிலையில் மூன்றாவது ஷிப்ட்டுக்கு தொழிலாளிகள் செல்வார்கள் என்று தெரிகிறது. நிர்வாகம் இந்தக் கோரிக்கை குறித்து வரும் 13-ம் தேதி பேசுவதாக வாக்களித்திருக்கிறதாம். மேலும் போராடிய தொழிலாளிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், அதே நேரம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகளுக்கு சம்பளப் பிடித்தம் உண்டு என்றும் கூறியிருக்கிறது. இதையெல்லாம் எழுத்துப்பூர்வமாக தொழிலாளிகள் பெற்றிருக்கிறார்கள்.

சுமார் 2000 தொழிலாளிகள் வேலை நிறுத்தம் என்பதால் அஞ்சிய நிர்வாகம் தற்போது ஆசுவாசப்பட்டிருக்கும். தொழிலாளிகள் ஒரு அரசியல் சக்தியாக எழாதவரை முதலாளிகள் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனினும் தங்களது பலத்தினால் உற்பத்தியை முடக்கும் வல்லமையை அவர்கள் உணரும் பட்சத்தில் இந்த கோரிக்கைகளை அவர்கள் வென்று காட்டுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

போராடும் தொழிலாளிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

_____________________________________________________________

– வினவு செய்தியாளர், ஹூண்டாய் ஆலையிலிருந்து
_______________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஒப்பந்த முறை என்பதே சுரண்டுவதற்கு உள்ள சட்டபூர்வ உரிமை. அரசாங்கமே இந்த உரிமையை முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது. தனியார் மட்டுமன்றி அரசுத் துறை, பொதுத்துறை என எங்கும் வியாபித்துள்ளது ஒப்பந்த முறை.ஒப்பந்த முறை ஒழிக்கப்பட வேண்டும். இது சவாலான ஒன்றுதான். ஒப்பந்தத் தொழிலாளர்களை அமைப்பாக்குவது இன்றைய முதுல் தேவை.

  2. தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் டிவிஎஸ் கம்பெனி ஒரு தொழிலாளி
    பெரும் தொகையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்

  3. சென்னை குண்டாய் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்துக்கள்.மேலும் புதிய

    ஜனநாயக தொழிலாளர் முன்னனி போன்ற தொழிலாளர் அமைப்புகள் இதற்கு உதவ

    வேண்டும்.டிவிஎஸ் இன் தரகு வேலை இதில் உள்ளதை அம்பலப்படுத்தவேண்டும்.

  4. இதில் மட்டுமல்ல ஒப்பந்த முறை பாஸ்போர்ட் சிவில்சப்ளை என எங்கும் உள்ளது

  5. சென்னை குண்டாய் கார் தொழிற்சாலை போராட்டம் எந்தநிலையில் உள்ளது.அது பற்றி

    மேலதிகமான செய்திகள் எழுதவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க