Monday, September 16, 2024
முகப்புஅரசியல்ஊடகம்அண்ணா ஹசாரே - கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

-

 “நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே”  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)

கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில் ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண் கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, “நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்” என்று அவ்வப்போது  அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, “அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக்கொடி, அரசியலையே வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!

ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், “உணவைத் துறப்பேன்” என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, “மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்” என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, “ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்” என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

ஆகஸ்டு 16  ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக  ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது  ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.

என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்”  அதாவது பட்டினிப் போர்  என்று அறிவித்தார் ஹசாரே.

தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன்,  ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.

“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்”  என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.

குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக  வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.

ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே  பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து  அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.

இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும்  இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள்.  இன்று தனியார்மயக் கொள்கைகள்,  ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன.  எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.

ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை  உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.

கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.

_______________________________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்ர் 2011
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. //நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே//

    ஹி…ஹி…இத்தனை நாளா அருந்ததியும் அதே ‘நீலப்படங்களில்’ (பிரச்சாரங்களில்) தோன்றியவர் தானே…

  2. //ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று.//

    வினவும் ஒரு அஃமார்க் ஊடக முதலாளி தான் என்பதினை மறுக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும்..ஊடக முதலாளிகளுக்கு ஒரு அண்ணா ஹசாரேன்னா…உங்களுக்கு ஆயிரம்,

  3. அப்படியா ? அருந்ததி அவர்களை கேள்வி கேட்கும் போதே, நீங்கள் மாவோயிசத்திற்கு ஆதரவு தருகிறீர்கள் என்று குற்ற்ச்சாட்டோடு கேள்வி கேட்பார்கள் உங்கள் நீலப்பட மாமாக்கள். ஆனால் அண்ணா அசாரேவிடம் ஆராதனை தான் – கேள்விகளே இல்லை

  4. (வினவு தோழர்கள் கவனத்திற்கு :- இது சம்மந்தம் இல்லாத பதிவு என்றாலும் இதனை முடிந்தால் தனியாக ஒரு பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் – நன்றி )
    தோழர்களே , பதிவர்களே, பார்வையாளர்களே ,,

    ஒரு அவசியமான மற்றும் அவசரமான செய்தி. இன்று காலையில் பாரத் இஞ்சினியரிங் கல்லுரியில் (சேலையூர் – சென்னை) கடைசி ஆண்டு மாணவர்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தருவதாக கூறி ஏமாற்றிய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பட்டம் மற்றும் வகுப்பு பிறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான வெளிமாநில மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் உணர்வுள்ள சில தமிழக மாணவர்களும் பங்கேற்றனர். குறைந்த பட்சம் 500 மாணவர்கள் பங்கேற்றனர். முதலில் ஆசிரியர்கள் மூலம் சமரசம் பேசிய நிர்வாகம், மாணவர்கள் அதற்கும் மட்டுப்படாததால், ஒரு சில புல்லுருவிகளை மாணவர்கள் மத்தியில் ஊடுறுவ விட்டு மாணவர்களில் முன்நின்றவர்களை வீடியோ படம் எடுத்தது. பின்னர் அதில் சில புல்லுறுவி மாணவர்களை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டது நிர்வாகம். போராட்ட மாணவர்கள் உடனடியாக கோபம் கொண்டு அந்த புல்லுறுவிகளை விரட்டியடித்தனர்.

    நிர்வாகம் எந்த ஊடகத்தையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சமீபத்தில் கிடைத்த செய்தி. ஆத்திரத்தின் உச்சத்தில் போராடிய மாணவர்களில் முன்நின்ற மாணவர்களை தனியாக அழைத்துப் போய் இரும்புக்குழாயால் அடித்து தாக்கியிருக்கிறது நிர்வாகம். இது குறித்து வெளியே செய்திகள் வராதவாறு அமுக்க முயற்சிக்கிறது.

    இவ்விசயத்தை பரவலாக்குமாறு தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்போம்..

    • சமீபத்திய செய்தி:

      தற்போது 150 மாணவர்களை சிறைபிடித்து கல்லூரி வளாகத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள.

      வெளியே போலீஸ் கூட்டம் நிற்கிறது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

  5. வினவு : நீங்க ’சுரண்டல், வரக்போர், ஏகாதிபத்தியம், முதலாளிகள்’ போன்ற தெரிந்த விசியங்கள பற்றி மட்டும் எழதவே ‘தகுதியானவர்கள்’ ; நிகழ்வுகளை ’அர்த்தப்படுத்திகொள்ளும்’ விதம் மற்றும் தர்க்கம் சகிக்கவில்லை. காட்சி ஊடகங்களில் தனியார்கள் அனுமதிக்கபடும் வரை இருந்த நிலை பற்றி எல்லாம் தெரியாது அல்லது அக்கரையில்லை. தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிய காலங்களில் இருந்த நிலையே பரவாயில்லையா அப்ப ? இன்று பலதரப்பட்ட செய்திகள் பல்வேறு சேனல்கள் மூலம் உடனடியாக மக்களை அடைகின்றன. அதில் sensationalism, regionalism, etc இருந்தாலும், முன்பு இருந்த ’அரசு ஏகாதிபத்தியத்திற்க்கு’ இது பல நூறுமடங்கு பரவாயில்லை. சமீபத்தில் ‘புதிய தலைமுறை’ செய்தி தொலைகாட்சி மிக அருமையாக செய்திகளை தரத்துவங்க்யுள்ளது. அருமையான, உருப்படியான பல இதர ப்ரோக்ராம்களும் தான். இதெல்லாம் தனியார்மயமாகாமல் சாதியமில்லை..

    அருந்ததி ராய் : சில முக்கிய விசியங்களில் அவரின் கணிப்பு ஆழமாக, நேர்மையாக உள்ளது தான். ஆனால் பல விசியங்களில் அவர் தான் எல்லாம் அறிந்த ’மேதை’ போல் பேசுவார். சமீபத்தில் உலக வங்கியின் ‘சதி’ பற்றியும் பேசினார். World Bankகும் IMFக்கும் அடிப்படை வித்தியாசம் தெரியாதவரின் (இங்கு எத்தனை பேர்களுக்கு தெரியும் இது ?) உளரல் அது. 1991 balance of payments crisis பற்றியெல்லாம் அடிப்படைகளே அறியாதவரின் உளரல். ஊடகங்கள் பற்றிய ‘கருத்துக்களும்’ அப்படியே. தூர்தர்சன் மட்டும் இருந்த காலங்களில் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்.

    by the way : அருந்ததி ராய் உங்க ஆதர்ச தலைவர்களான் ஸ்டாலின், மாவோ பற்றியும், கம்யூனிசம் பற்றியும் கூட திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அதையும் இங்கு எடுத்தியம்புங்களேன் பார்க்கலாம் !! செய்ய மாடீகளே !! :))))

  6. ஊடகங்கள் பற்றிய இதே விவாதத்தை, இப்ப எல்லோரும் மறந்துவிட்ட சமச்சீர் கல்வி விசியத்திற்க்கும் பொருத்தி பார்க்கலாமா ? சில வாரம் முன்பு வரை தமிழக ஊடகங்கள், இணைய தளங்கள், ஆர்வலர்கள் அனைவரும் பெரும் ‘கொந்தளிப்போடு’ விவாதித்து, போராடிய விசியம் இப்ப முற்றாக மறக்கப்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. சமச்சீர் கல்வி அமலாகும் முறைகள் பற்றி, அதன் விளைவுகள் பற்றி, உண்மையில் அது ‘சமத்துவத்தை’ கொண்டு வந்துவிட்டதா என்பதை பற்றி, தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் நிலை பற்றி எல்லாம் ஒரு விவாதமும், பேச்சும் இப்ப இல்லை. இதுவும் ’ஊடக சதியா’ என்ன ? அவ்வளவுதான் அது ?

    Conspiracy theories are usually the symptoms of a mind sick with paranoia and delusion. இங்கும் இது பொருந்தும்..

      • facts and information are different from ‘theories’. ok. get that first. my links usually give info and facts ; interpretations may vary with each one. try to answer to the point if you can. about the monopoly days of DD when it was used as a propaganda arm of the govt of India. அரசுக்கு ‘விரோதமான’ எந்த ஒரு செய்திகுறிப்பையும் அன்று காணவே முடியாது. விளக்கெண்னை மாதிரி, மழுப்புவார்கள். அல்லது மறைப்பார்கள். இன்று அதையெல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

  7. ஜன் லோக்பால் வந்துவிட்டால் ஊழல் ஒழிந்து விடுமா? என்கிற மையமான கேள்விக்கு பதில் அளிக்காமல் விவாதத்தை திசை திருப்பவே சில பின்னூட்டக்காரர்கள் முயலுகிறார்கள்.
    ஜன் லோக்பால் மூலம் ஊழலும் ஒழியாது. சூரியனும் நிச்சயம் கிழக்கே உதிக்கப் போவதில்லை. அன்னாவின் ஆதரவாளர்களே! இதில் உள்ள கேள்விகளுக்கு பதிலைத் தேடுங்கள். உங்களுக்கே புரியும்.

    சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்!
    http://hooraan.blogspot.com/2011/08/blog-post_23.html

    • கார்பொரேட் ஊடகங்களின் மலிவான விளம்பரங்களை குற்றம் சொல்லுபவர்கள் இப்படி ஒவ்வொரு பதிவாக தேடிப்போய் ஒரு வரி எழுதிவிட்டு தன் சொந்த ப்ளாக்குக்கு லிங்க் கொடுப்பதன் மூலம் சுய விளம்பரம் செய்வதை எந்த வகையில் சேர்ப்பது…

      • சுய விளம்பரம் எமது நோக்கம் அல்ல. எமது கருத்துக்கள் வாசகர்களிடம் செல்ல வேண்டும். அவ்வளவே. இங்கே சுயவிளம்பரம் தேடி என்ன ஆதாயம் அடையப் போகிறோம்? ஆதாயத்திற்காக எமது வலைப் பூ நடத்தப்படவில்லை என்பதை முதலில் அறியவும். பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டி விட்டு அன்னா அசாரே குறித்த விவாதத்தை திசை திருப்ப முயல வேண்டாம். இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள வலைப்பூவில் உள்ள பதிவை முதலில் படிக்கவும். அதற்கெல்லாம் தங்களிடம் பதில் இல்லை என்பதற்காக போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதுதான் தங்களின் பணியோ?

        • இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளதை இங்கே காபி பேஸ்ட் செய்வதில் என்ன கஷ்டம்? ஆட்டோ பாட்கள் செய்வது போல லிங்குகளை ஏன் கொட்டுகிறீர்கள்… எந்த கருத்தாயினும் இங்கு பதிந்ததால் பதிலளிக்க ஏதுவாக இருக்கும் அவ்வுளவே…

          • //எந்த கருத்தாயினும் இங்கு பதிந்ததால் பதிலளிக்க ஏதுவாக இருக்கும் அவ்வுளவே…//

            ஏதோ இதுவரைக்கும் பதிவில் உள்ள சாரமான விஷயங்களைப் பற்றி காரமான விவாதம் செஞ்ச மாதிரி… போங்க சார்… ஒரே நகைச்சுவையாப் பேசுறீங்க.

    • AIDS / cancer நோயால் பாதிக்கபட்டவன் எப்படியும் செத்து விடுவான். பின்ன எதுக்கு மருந்து மாத்திரை? அப்படியே விட்டு விடலாமா?
      மொதல்ல இந்த “Jan Lokpal மூலம் ஊழல் முற்றிலும் அழிந்து விடாது” என்ற மொக்கை வாதத்தை நிறுத்துங்க.

      • ஏற்கனவே இருக்கும் மருந்து மாத்திரைகளை ஒன்றாகக் கலக்கி இப்போது அதற்குப் புதுப் பெயர் வைத்துவிட்டால் நோய் குணமாகி விடும் என்று நம்ப வேண்டுமாம். அனாசின், மெட்டாசின், குரோசின், கால்பால் என பல பெயர்களில் வந்தாலும் எல்லாமே பாராசிட்டாமல்தான். தனித்தனியாகக் கொடுத்தாலும் அனைத்தையும் ஒன்றாக உரலில் போட்டு இடித்து கலக்கிக் கொடுத்தாலும் அதுவும் பாராசிட்டாமல்தான். அது அதற்குரிய வேலையை மட்டும்தான் செய்யும்.

        மாத்திரையின் மூலக்கூறும், மாத்திரை கொடுக்கும் மருத்துவரும் அடிப்படையில் மாறாத போது எய்ட்ஸ் நோயாளி மட்டும் எழுந்து நடப்பானாம். நம்புங்கள்! மருத்துவர், மாத்திரை, நோயாளி பற்றி எதுவும் அறியாதவன் வேண்டுமானால் நம்பலாம்.

        அன்பரே,

        புரையோடிப்போன புற்றை வெட்டித்தான் எடுக்க வேண்டும். மேல்பூச்சு பூசினால் புற்று மேலும் வளருமேயொழிய உடலை விட்டு அகலாது.

        இந்த உண்மையும் புரியவில்லை என்றால்….புரிய வைக்க யார்தான் என்ன செய்ய முடியும்?

  8. வஞ்சக நரியின் சீ சீ இந்த பழம் புளிக்கும் பதிவுதான் இது… உங்களின் எண்ணற்ற போராட்டங்கள் மதிப்பற்று, சீண்டுவாரல்லாமல் இருக்கும்போது திடீரென்று முளைத்த யாரோ ஒருவனுக்கு இவ்வுளவு ஆதரவா, அதுவும் போராட்டத்தில் வெற்றியா… மக்களின் ஆதரவு வேறா… போராட்டங்கள் என்றாலே மக்களால் தூற்றப்படல்லவா வேண்டும்… தோல்வியில் அல்லவே முடிய வேண்டும்… எமது போராட்டங்கள் எல்லாம் அவ்வகியினதல்லவா… இவர் யார் போராட்டத்தின் இலக்கணத்தை மாற்றுவது… என்ற முற்போக்குவாதிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் பிற்போக்கு, தாழ்வு மனப்பான்மை உடையவர்களின் பிதற்றல் தான் இது…

    பல ஆண்டுகாலமாக புரட்சியாளர்களும், போராட்டவாதிகளும் சாதிக்க முடியாததை அன்ன ஹசாரே என்ற தொண்டு கிழம் சாதித்து காட்டியுள்ளது… நாட்டின் நாடாளுமன்றத்தையே புரட்டி போட்டது அவருடைய போராட்டங்கள்…

    போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும் தாமே மொத்த குத்தகை என கருதும் முற்போக்குவாதிகள், அப்போரட்ட ஆயுதம் மூலம் வேறு யாரேனும் வென்று விட்டால் அந்த வெற்றியை ஒத்துக்கொள்ள முன் வருவதில்லை… மாறாக அப்போராட்டத்துக்கு களங்கம் கற்பிக்கவே முனைகின்றனர்… இது அண்ணா விடயத்தில் உண்மையாகி உள்ளது…

    முற்போக்குவாதிகள் என தம்மை தாமே கூறிக்கொள்ளும் ஒரு சில சிறு புரட்சிகர குழுவும் அக்குழு சார்ந்த முடிவுறா போராட்டங்களை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பலினரை தவிர, ஒட்டு மொத்த நாடே அண்ணாவின் போராட்டத்துக்கு பின் நின்றது தான் வெற்றிக்கு காரணம்…

    • நாடாளுமன்றத்தை புரட்டிப் போட்டதெல்லாம் இருக்கட்டும்! ஜன் லோக்பால் அமலுக்கு வந்த பிறகும் ஊழல் ஒழிக்கப்பட வில்லை என்றால் உங்களைப் போன்றவர்களை என்ன செய்யலாம் என்பதை நீங்களே பகிரங்கமாகச் அறிவியுங்கள்.

      கொடி அசைப்பதால் ஊழல் ஒழிந்து விடாது. ஊழல் நடக்கின்ற ஒவ்வொரு இடத்திலும் சம்பத்தப்பட்ட நபர்களுக்கு எதிராகக் குறிப்பான போராட்டத்தை நடத்தாமல் ஆயிரம் ஜன் லோக்பால்கள் வந்தாலும் ஊழல் பேர்வழிகளை ஒருக்காலும் தண்டிக்க முடியாது. இதுதான் எதார்த்தம்.

      ஊழலுக்கு எதிராகப் போராடக்கூடிய திராணியும் தெம்பும் உள்ளவர்கள், நீங்கள் எள்ளி நகையாடும் முற்போக்குவாதிகளும் புரட்சியாளர்களும்தான். அதை முதலில் அறியவும். உங்களைப் போன்றவர்கள் இதுவரை எத்தனை ஊழல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள் என உங்களையே கேட்டுப் பாருங்கள். அப்பொழுது புரியும் நீங்கள் உங்கள் பிழைப்பை மட்டும் பார்ப்பவரா அல்லது ஊழலுக்கு எதிராக போராடுபவரா என்று!

  9. //தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி,//

    இந்த வரிகளை படித்துவிட்டு, வாய்விட்டு வெகுநேரம் சிரித்துகொண்டிருந்தேன். ஹசாரேவின் முழுமையாக அறிந்தவர்கள் இந்த கட்டுரையின் சாரத்தில் ஒன்றுபடுவார்கள்.

    ஆனால், லஞ்ச எதிர்ப்பு என்று சொல்வதால், ஹசாரேவை பற்றிய உண்மை விவரங்கள் தெரியாதவர்கள் பலரும் ஆதரிக்கிறார்கள். அவர்களை இந்த கட்டுரையின் தலைப்போ, மொழிநடையோ கட்டுரையை படிக்க வைக்குமா என்ற கேள்வி வந்தது!

    • அண்ணா ஹசரேவை கர்போரேட் கோமாளி என்று சொல்லும் கம்யுனிச கோமாளிகள் முடிந்தால் அவரைப்போல ஒரு போராட்டம் நடத்தி பாருங்களேன்… குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேரையாவது உங்களால் கூட்ட முடியுமா… அப்படியே கூட்டினாலும் அவர்களிடமும் உண்டியல் வசூல் செய்து உங்களை வேலையை காட்டிவிட மாட்டீர்கள்…

      • //அப்படியே கூட்டினாலும் அவர்களிடமும் உண்டியல் வசூல் செய்து உங்களை வேலையை காட்டிவிட மாட்டீர்கள்…//

        மக்கள் போராட்டங்களுக்கு மக்கள் தானேயா நிதி கொடுக்கணும்? டாடா அம்பானி கிட்ட வாங்கனுமா? என்ன பாஸ் யோசிக்கவே மாட்டீங்களா?

        • என்னது மக்கள் உங்களை போராட சொல்லி பணம் கொடுக்கிறீர்களா…? அப்ப யாரு பணம் கொடுத்தலும் போராட்டம் நடத்துவீங்களோ… கூளிப்போராளிகளா நீங்கள்? அது சரி போராடுவதற்கு எதற்கு கோடிக்கணக்கில் நிதி தேவைப்படுகிறது…?

      • நீங்கள் என்ன இந்த நாட்டில்தான் இருக்கிறீர்களா? ஏதெனும் சமூக நடப்பை பார்ப்பதுண்டா? அல்லது கேள்விப்படுவதுண்டா? அல்லது வினவு தளத்தையாவது படிப்பதுண்டா? எதையுமே அறியாமல் பின்னூட்டம் போடுகிறீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கில்லாடிதான்.

  10. //ஒட்டு மொத்த நாடே அண்ணாவின் போராட்டத்துக்கு பின் நின்றது தான் வெற்றிக்கு காரணம்…//

    எதில் வெற்றி பெற்றார்கள் என்று கடைசி வரை சொல்லவே இல்லையே…

    • அவர் எதற்காக போராடினார்… எதற்காக 100 கோடி இந்தியர்கள் மற்றும் 3 கோடி வெளிநாட்டவர் அவரது போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தனர் என்று தெரியாதா… ஜன் லோக்பால் மசோதாவின் மீது பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டி போராடினார்… அதில் வெற்றி பெற்றார்.. 103 கோடி பேரை தன்னுடைய போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தது மாபெரும் வெற்றி தானே… எந்த போராளியும் இது வரை செய்திருக்க முடியாத மா மாபெரும் வெற்றி…

      • boss vidunga boss ivinga verum soundu thaan…

        நாடாளுமன்றத்தை புரட்டிப் போட்டதெல்லாம் இருக்கட்டும்! ஜன் லோக்பால் அமலுக்கு வந்த பிறகும் ஊழல் ஒழிக்கப்பட வில்லை என்றால் உங்களைப் போன்றவர்களை என்ன செய்யலாம் என்பதை நீங்களே பகிரங்கமாகச் அறிவியுங்கள்.

        let us give a try first….what if it eradicates ஊழல்????

        • ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம், “கடவுள் இல்லை என்று தீவிரமாக பிரச்சாரம் செய்கிறீர்களே, கடவுள் உங்கள் முன் நேரிலே தோன்றி தன்னை நிரூபித்து விட்டால் என்ன செய்வீர்கள்” என்று. பெரியார் சிரித்துக் கொண்டே கூறினாராம், “அன்றிலிருந்து கடவுள் இருக்கிறான் என்று பிரச்சாரம் செய்வேன்” என்று. அவ்வளவு தான்.

          • பிரசாரம் பண்ணாமல் பொழுதே போகாது பெரியாருக்கு..

            பெரியவர் ஹசாரே காந்திய வழியில் அரசை வழிக்கு கொண்டுவந்தால் நன்னாயிருக்காது.. புரட்சி.. புரட்சி பண்ணனும்…அருந்ததி ராய் பண்றது மாதிரி..

      • 100 கோடி மக்கள் ஆதரவா! எனக்கு தலை சுத்துகிறது.

        உண்ணா விரதம் தொடங்கும் முன் அவரது கோரிக்கை என்ன?

        அதற்காக வெற்றி பெற்றாரா?

        இவ்வளவு ஆதரவு இருந்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்றுநினைக்கும் பொழுது இதயம் கணக்கிறது கண்கள் பனிக்கின்றன…

  11. அன்புள்ள மோடிக்கு, ஹிட்லர் எழுதுவது…

    நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக்கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

    விளக்குகிறேன்.

    இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள். பல லட்சக்கணக்கானவர்களை நான் கொன்றேனாம். குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் யூதர்களை நான் தேடித்தேடி சிறைப்பிடித்து அழித்தேனாம். என்ன ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு! ஜெர்மனியைச் சுத்தப்படுத்தியவன் நான். கசடுகளைக் கண்டறிந்து களைவது ஒரு குற்றமா? நோயைக் கண்டுபிடித்து அழிப்பது தவறாகுமா? நல்லவேளை, நரேந்திர மோடி, என்னை நீ நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். ஏன், உன் இயக்கத்தில் உள்ள பலரும் என்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்.

    மீடியாவை எப்படி கையகப்படுத்திக்கொள்ளவேண்டும், வலுவான ஒரு பிரசாச வாகனமாக எப்படி அதனை மாற்றியமைக்கவேண்டும் என்பதை உலகுக்குக் கற்றுக்கொடுத்தவன் நான். குழந்தைகள் முயல்களைப் போல் தாவிவந்து பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்பது போலவும், லட்சக்கணக்கான ஜெர்மானிய வீரர்கள் என் தலைமையின் கீழ் உற்சாகத்துடன் களத்துக்குச் செல்வதுபோலவும் பல புகைப்படங்களை வெளியிட்டு என் மக்களை நான் ஈர்த்திருக்கிறேன். ஆஹா ஹிட்லரைப் போன்ற தலைவர் இந்த அகிலத்தில் உண்டா என்று வாய்பிளக்கச் செய்திருக்கிறேன்.

    ஆனால், நீ என்னை மிஞ்சிவிட்டாய், நரேந்திர மோடி. என்னைக் கடந்து நீ வெகு தூரம் சென்றுவிட்டாய். மூன்று நாள்களாக நீ நடத்திய உண்ணாவிரதத்தைக் கண்டு நான் வெலவெலத்துப் போய்விட்டேன். என்னவொரு சாதுர்யம்! என்னவொரு மேதாவிலாசம்! நீ எத்தனை கூர் மதி படைத்தவன் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவம் போதாதா?

    பிப்ரவரி 2002ல் குஜராத் கலவரத்தால் வெடித்தபோது நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன். ‘பாவம் மோடி, இனி அவன் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கமுடியாது!’ உன் ஆசிர்வாதத்துடனும் அங்கீகாரத்துடனும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டபோது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, உயிர் பயத்துடன் முஸ்லிம்கள் குஜராத்தைக் காலி செய்துகொண்டு ஓடியபோது, உன் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருதினேன். காலம் இறுதித் தீர்ப்பெழுதிவிட்டது என்று பயந்தேன்.

    எனக்கு நானே தீர்ப்பெழுதிக்கொண்டுவிட்டது உனக்குத் தெரியும். எந்த மூளையைப் பயன்படுத்தி யூதர்களை அகற்றினேனோ அந்த மூளையை நானே சிதறிடித்துவிட்டேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் யூதர்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. உலகத்தை அல்ல. என் ஜெர்மனி இன்று என்னைக் கைவிட்டுவிட்டது! உனக்கும் இப்படிப்பட்ட நிலைமைதான் வந்துசேரும் என்று நினைத்தேன்.

    எப்படி உதித்தது இந்த உண்ணாவிரத யோசனை? யார் சொன்னது? என் அருமை கெப்பல்ஸால்கூட இப்படியொரு திட்டத்தைத் தீட்டியிருக்கமுடியாது! மூன்று தினங்கள். வெள்ளாடை உடுத்தி தேவகுமாரன் போல் நீ நடந்து வந்தாய். அலங்கரிக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட மேடையில் பாந்தமாக அமர்ந்திருந்தாய். கேள்விக் கணைகளைத் திறமையாகவும் பொறுமையாகவும் எதிர்கொண்டாய். உலகமே உன்னைத் திரும்பிப் பார்த்தது.

    ‘என் மீதும் குஜராத் மீதும் வீசப்பட்ட கற்களை நான் அமைதியாகச் சேகரித்துவந்தேன். அந்தக் கற்களைக் கொண்டுதான் குஜராத்தை பலமாகக் கட்டமைத்தேன்!’ எவ்வளவு அழுத்தமான வாசகம்! உன் எதிரிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் ஒரு நொடியில், ஒரு வாக்கியத்தில் தகர்த்து உதிர்ததுவிட்டாய், மோடி! அமைதியாக காரியத்தைச் சாதித்துவிட்டாய்!

    உன் சித்தாந்தமும் என்னுடையதும் ஒன்றுதான். உன் அணுகுமுறையும் என்னுடையதும் ஒன்றுதான். ஆனால், உன் செயல்திட்டம் அபாரமானது. யூதர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்பதை முடிவெடுத்தவுடன் நான் என் ராணுவத்தைதான் அழைத்தேன். அவர்களிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தேன். ஜெர்மனியிலும் ஜெர்மனியைத் தாண்டியும் பல வதை முகாம்களை அவர்கள் உருவாக்கினார்கள். வீடுகளில் புகுந்து, இனம் கண்டு யூதர்களை இழுத்து வந்தார்கள். நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாகக் கொன்றார்கள்.

    ஆனால் நீயோ இஸ்லாமியர்களை அழிக்க இந்துக்களைப் பயன்படுத்திக்கொண்டாய். யோசித்துப் பார்த்தால் இதைவிட அற்புதமான ஒரு திட்டத்தை யாராலும் வகுக்கமுடியாது என்றே தோன்றுகிறது. செய்யவேண்டியதைச் செய்துவிட்டு நீ அழகாக ஒதுங்கிக்கொண்டுவிட்டாய். ம், விளையாடு என்று பச்சைக்கொடி காட்டிவிட்டு நீ புன்னகையுடன் பின் நகர்ந்துவிட்டாய்.

    யூதர்கள் ஜெர்மனியின் இதயத்தை அழிக்கவந்த கிருமிகள் என்பதை ஜெர்மானியர்கள் நம்பினார்கள். நம்ப வைத்தேன். ஆனால், அவர்களையே யூதர்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் கலையை நான் கைக்கொள்ளவில்லை. நீ என் சகோதரன் அல்ல, என் குரு என்று நான் அழைத்ததன் காரணம் இப்போது புரிகிறதா?

    மோடி, நீ காந்தி பிறந்த மண்ணில் இருந்து தோன்றியிருக்கிறாய். விமானப் படைகளைக் கொண்டுதான் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை என்னால் வீழ்த்தமுடிந்தது. ஆனால், காந்தி உண்ணாவிரதம் மூலமாகவே பிரிட்டனை விரட்டியடித்துவிட்டாராமே! எப்பேர்ப்பட்ட சாதனை! எனக்கும்கூட மிஸ்டர் காந்தியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அகிம்சையின் முக்கியத்துவம் பற்றி. யூதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது பற்றி. சத்தியத்தின் முக்கியத்தும் பற்றி. யூதர்களுக்கும்கூட அவர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வன்முறையை உதறிவிட்டு, அன்பாலும் நேசத்தாலும் என்னை வீழ்த்தவேண்டுமாம்! ஓவென்று சிரித்துவிட்டு காந்தியை நான் மறந்துபோனேன். ஆனால், நீ மறக்கவில்லை. மூன்று நாள் உணவை மறுத்ததன் மூலம், உன் ஒட்டுமொத்த எதிரிகளையும் நீ வாயடைக்கச் செய்துவிட்டாய்.

    ‘குஜராத்தில் சிறுபான்மையினருக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’ பந்தலில் இந்தக் கேள்வி உன்னிடம் கேட்கப்பட்டபோது நான் கூர்மையாக உன் முகத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அசைவும் இல்லை உன்னிடம். விரிந்த புன்னகை விரிந்தபடியே இருந்தது. உன் கண்கள், புருவம், கன்னம் எதிலும் அசைவில்லை. நீ துடிக்கவில்லை. பதறவில்லை. (ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் நீ தயங்கியும் சீறியும் பயந்தும் நடுங்கியதைப் பார்த்திருக்கிறேன்!)

    நீ உன் உதடுகளை இயல்பாகப் பிரித்தாய். பிறகு சொன்னாய். ‘சிறுபான்மையினருக்காக நான் எதுவும் செய்யவில்லை. பெரும்பான்மையினருக்காகவும் எதுவும் செய்யவில்லை. நான் குஜராத்துக்காக உழைக்கிறேன். குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுகிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை நான் பிரித்து பார்ப்பதில்லை.’

    சொல்லி முடித்துவிட்டு, அடுத்த கேள்வி என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாயே! அந்த இடத்தில் நான் மீண்டும் இறந்துபோனேன். என் அகந்தை அழிந்த சமயம் அது. நீ என்னை உலுக்கியெடுத்துவிட்டாய், நரேந்திர மோடி. என் அத்தனை சாதனைகளையும் நீ துடைத்து அழித்துவிட்டாய். முதல் முதலாகப் பயத்தை நான் தரிசித்தது உன்னிடம்தான்.

    நடைபெற்றதை ‘கலவரம்’ என்று அழைக்கும் துணிச்சல் உனக்கு மட்டும்தான் இருக்கிறது. சடலங்கள் புதைக்கப்பட்ட கையோடு தேர்தலில் நின்று, வாக்கு சேகரித்து, வெற்றி பெறும் தீர்க்கமும் தீரமும் உன்னிடம் மட்டும்தான் இருக்கிறது.

    நான் கேள்விப்பட்டது நிஜமா என்று தெரியவில்லை. குஜராத்துக்கு மட்டுமின்றி முழு இந்தியாவுக்கும் நீ தலைமை தாங்கப்போகிறாயாமே! உண்மைதானா? அதற்கான முன்னோட்டம்தான் இந்த உண்ணாவிரதமா? நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் நரேந்திர மோடி. ஆரிய ரத்தம் தூய்மையானது. உலகை ஆளும் திறன் கொண்டது. நீ மெய்யான ஆரியன். நீ வெல்வாய்!

    குஜராத்தைப் போலவே இந்தியாவையும் மோடி வளர்த்தெடுக்கவேண்டும் என்று பலர் என் காதுபடப் பேசிக்கொண்டார்கள். நான் சிரித்துக்கொண்டேன். நீயும் சிரித்துக்கொண்டுதான் இருப்பாய் அல்லவா?

    அன்புடன்
    அடால்ஃப் ஹிட்லர்

    0

    நந்தன்

    • இப்போதும் கூட, மோடியின் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தாங்க முடியாத அவரது எதிரிகள் ‘தொப்பிக்கதைகள்’ மூலமாக அவரைச் சிறுமைப்படுத்த முனைகின்றனர். உண்ணாவிரத நிகழ்வுக்கு வந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர் அணிவிக்க முயன்ற முஸ்லிம் தொப்பியை ஏற்க மறுத்து அவமதித்து விட்டதாகக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. உண்மையில் இச்சம்பவம் நிகழவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு நடந்தாலும் அதில் தவறு காண ஏதும் இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.

      ஒவ்வொருவரும் தங்கள் மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாகக் கடைபிடிக்கட்டும்; பிறர் மீது அதைத் திணிப்பதுதானே பிரச்னைக்குக் காரணமாகிறது? இஸ்லாமியரின் தொப்பியை மறுத்து சால்வையை மோடி அணிந்தார் என்பது உண்மையானால், அது அவரது உள்ள உறுதிக்கும், நேர்மைக்கும் தானே அடையாளம்? ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுடன் மூக்கு முட்டச் சாப்பிட்ட அரசியல் தலைவர்கள் ஒருங்கே அமர்ந்து ‘இஃப்தார் விருந்து’ என்ற பெயரில் கஞ்சி குடிப்பதுதான் மதச்சார்பின்மை என்று கற்பிக்கப்படும் சூழலில் மோடியின் துணிவு போலித்தனத்தைத் துகிலுரிப்பதாக அமைந்திருக்கிறது என்று பாராட்டவல்லவா வேண்டும்?

  12. Anna Hazare க்கு இப்படி ஒரு விளம்பரமா என்ற வயிதெருச்சல் தான் தெரியுது.
    மக்களுக்கு நன்மை செய்யுமாயின் அந்த போராட்டத்தில் கை கோர்பதை விட்டு அதை குறை சொல்வதால் என்ன பயன்?
    செங்கொடி காதல் தோல்வியால் தற்கொலை என்று உங்கள் போராட்டத்தில் சாணியை வாரி இறைத்ததால் எப்படி உணர்ந்தீர்களோ அதேதான் மற்றுமொரு மக்கள் போராளிக்கு என்பதை மறக்க வேண்டாம். அந்த ஊடகத்திற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

    Anna வின் போராட்டம் தொடங்கும் பல மாதம் முன்பும் ஏன் இப்போதும் கூட இணையத்தளத்தில் Jan Lokpalன் draft இருந்தது. யார் வேண்டுமானாலும் அதில் மாற்றங்களை முன் வைக்கலாம் என்றிருந்த போது இப்போது தூற்றுபவர் எத்தனை பேர் அதை ஒரு முறை பார்க்கவேணும் செய்தீர்கள்?

    AIDS / cancer நோயால் பாதிக்கபட்டவன் எப்படியும் செத்து விடுவான். பின்ன எதுக்கு மருந்து மாத்திரை? அப்படியே விட்டு விடலாமா?
    மொதல்ல இந்த “Jan Lokpal மூலம் ஊழல் முற்றிலும் அழிந்து விடாது” என்ற மொக்கை வாதத்தை நிறுத்துங்க.

  13. //பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே” ///

    இந்தியாவில் நீலப்படங்களை ஒலிப்படரப்ப சட்டபடி முடியாது. (ஒரு சில மேலை நாடுகளில் பே சேன்லக்ளில் இது உள்ளது). எனவே முதலில் விசியம் தெரியாத உளரல் இது.

    சரி, டி.ஆர்.பி ரேட்டிங் படி ப்ரோக்ராம்களை உருவாக்குவது என்ன பெரிய குற்றமா என்ன ? மாற்றாக அதுதான் மிக ஜனனாயகதன்மை கொண்டாதாகும். அதாவது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதற்க்கு தக்கவற்றை சட்டதிற்க்கு உட்பட்டு அளிப்பது. (உடனே சினிமா பற்றி ஒப்பிட வேண்டாமே. நான் சொல்ல வந்தது 24 x 7 செய்தி சேன்ல்கள் பற்றிய அருந்ததி ராயின் ‘விமர்சனம்’ பற்றி தான்). Free to Choose என்ற அருமையான நூல் உள்ளது. அதன் சாரத்தை அதன் தலைப்பே சொல்கிறது. இன்று நூற்றுகணக்கான சேனல்கள். பி.பி.சி போன்ற வெளிநாட்டு சேனல்களும் இப்ப தாரளாமக கிடைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசி டி.டி மட்டும் தான். தனியார் மயம் தான் இந்த choiceகளை மக்களுக்கு அளித்திருக்கிறது. Let the people choose. no one has any right to stop this basic freedom. ok.

    • சினிமாவே இல்லாமல் முற்றிலும் தமிழில் பல சிறப்பான நிகழ்சிகள் வழங்கி மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ள மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்சிகளில் பல தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக வருவதாகும் அங்கே ரேட்டிங் நோக்கோடு நிகழ்சிகள் தயாரிக்கப்படுவதில்லை அவர்களுடைய கட்சி தலையீடும் இல்லை அதே வழியில் இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பயணிக்கிறது.வீட்டிற்க்குள் அரசியலையும் ஆபாசத்தை கொண்டு வரும் சேனல்களை புறக்கணித்தால் அவர்களையும் மக்கள் வழிக்கு மாறவைக்கலாம்.

  14. இந்த கட்டுரைக்கு கருத்து சொலகிரேன் என்ற பெயரில் விசத்தை கக்கும்
    பாபம்புகள் ஆதரிப்பது அண்ணா ஹசாரேவை- அல்ல- அம்பிகளை தான் என்பது தெளிவாகிறது…

  15. இந்த கட்டுரைக்கு ஆதரவாக கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கருத்துக்களை கக்கும் நண்பர்கள் எதிர்ப்பது அன்னா ஹசாரவை அல்ல அம்பிகள் என்ற கண்ணுக்கு தெரியா மாய வலையை எனபது உங்கள் கருத்தினின்று தெளிவாகிறது…
    வழக்கம் போல வினவின் இந்த கட்டுரையும் அம்பி மாய வலை எதிர்ப்பு கட்டுரை என்று எண்ணி பல மாய வலை எதிர்ப்பாளர்கள் பின்னோட்டம் போடுகின்றனர் என்பதும் தெளிவாகிறது… இந்த கட்டுரை ஏன் பலவாறு ஹசாரவின் இந்த போராட்டத்தினை குறை சொல்லுகிறது என்றே உங்களுக்கு புரியவில்லை என்பதும் தெளிவாகிறது… இந்த கட்டுரைக்கும் அம்பிகள் எதிர்ப்பிற்கும் தொடர்பில்லை என அறிக.. அதற்கு வேறு பல கட்டுரைகள் உள்ளன.. உங்கள் ஓலங்களை அங்கே இடவும்…

  16. தேவையான அளவு அண்ணா ஹசாரேவை பற்றி கட்டுரை வினவிடம் இருந்து வந்துவிட்டது. இந்த கட்டுரையில் விவாதப் பொருள் ஒன்றும் இல்லை.

  17. அன்னா ஹசாரேயின் வேஷம் கலைந்தது!

    http://www.sinthikkavum.net/2011/12/blog-post_26.html

    ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.

    1) ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் என்பவரின் செயலராக பணியாற்றி உள்ளார் அன்னா ஹஸாரே

    2) 1983-ல் உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி பாசறையில் பங்கு கொண்டுள்ளார்.

    3) 1965 ல் இந்தியா, பாகிஸ்தான் யுத்தம் நடக்கும் போது அதில் பங்கெடுக்காமல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டார்.

    4) நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே.

    அன்னா ஹஸாரேவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கதான் என்ற திக்விஜய்சிங்கின் குற்றச்சாட்டை இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

    இந்த செய்திகளை பார்பன தினமணி, தினமலர் போன்றவை இருட்டடிப்பு செய்கின்றன. “தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்” என்பதை மறைக்க ஆயிரம் பொய் சொல்கிறார் அன்னா ஹஸாரே. இதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதுதான் என்ன? இப்படி பட்ட ஒரு பெய்யரை நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். அன்னா ஹஸாரே தனது வேஷத்தை கலைத்து வெளியே வருவாரா! தன்னை யாரென்று அறிவிப்பாரா!

    நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

  18. புதுதில்லி, டிச.28: அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் 2-ம் நாளான இன்று போதிய ஆதரவாளர்கள் வராததால் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.
    30 ஆயிரம் பேர் அமரக்கூடிய ராம்லீலா மைதானத்தில் இன்று சுமார் 200 பேரே உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். உண்ணாவிரதப் போராட்ட பாதுகாப்பிற்காக வந்த பாதுகாப்புப் படையினரையே மைதானத்தில் அதிக அளவில் காணமுடிந்தது.
    கடந்த ஆகஸ்டில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை மைதானத்தில் குழுமியிருந்தனர். தற்போது அதற்கு நேர்மாறாக இருந்தது.
    கடும் குளிர் காரணமாகவும், அண்ணா ஹசாரே இல்லாததாலும் கூட்டம் குறைவாக இருப்பதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
    இன்று போராட்டம் 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விரல்விட்டு எண்ணக்கூடிய ஆதரவாளர்களுடன் போராட்டம் தொடங்கியது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க