privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

-

வங்க தேசம்: கொத்தடிமை தேசம் ! ரெடிமேட் என அழைக்கப்படும் ஆயத்த ஆடைகளைத்தான் இன்று உலகம் முழுவதும் விரும்பி அணிகின்றனர். பல்வேறு வடிவமைப்புகளில் பல பெயர்களில் இவை விற்கப்பட்டாலும், இவற்றைச் சந்தைப்படுத்துவது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களே.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சில்லரை விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் வால்மார்ட், மெட்ரோ, டெஸ்கோ போன்ற மிகப் பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்கள் ஆயத்த ஆடை வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆயத்த ஆடைகளின் மீது ஒட்டப்பட்டிருக்கும் பெயர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் அவற்றைத் தயாரித்துத்தரும் உழைப்பு முழுவதும் ஏழை நாடுகளின் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.

ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இத்துறையில் கோலோச்சும் ஒப்பந்த நிறுவனங்கள் கொழுத்து வளர்வதற்காக, அற்ப கூலிக்கு தினமும் 12 மணிநேரம் வரை, வங்கதேசத் தொழிலாளர்கள் உழைக்கின்றனர். இன்றைய உலகமயச் சூழலில், ஏழை நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் எத்தகையதொரு  சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி அவலத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வாழ்நிலை,  ஒரு வகைமாதிரியாக அமைந்துள்ளது.

ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் தயாரிப்பில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா, சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்றெல்லாம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஏகாதிபத்திய வாதிகள், ஏழை நாடுகளில் இத்தகைய விதிகளை மீறிப் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களைச் சுரண்டுவதைப் பற்றி வாய் திறப்பதில்லை.

ஆண்டுக்கு 900 கோடி டாலர் அளவுக்கு வரவு செலவு நடக்கும் வங்கதேசத்தின் ஆயத்த ஆடைத் தொழிலில் ஏறத்தாழ 35 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். இதர ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் கூலியுடன் ஒப்பிடும்போது வங்கதேசப் பெண் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலி மிகவும்  குறைவானது. 2005ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மணி நேர வேலைக்கு தொழிலாளர்கள் பெறும் கூலி தாய்லாந்தில் ரூ.37; இலங்கையில் ரூ.19.ஆனால் வங்கதேசத்திலோ ரூ.3 மட்டுமே. கூலியில் வஞ்சகம் செய்வதோடு மட்டுமல்லாமல், பணியிடங்களில் தாக்கப்படுவது, பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, வன்புணர்ச்சி செய்து கொலை செய்வது  என அடுக்கடுக்காகக் கொடூரங்கள் இப்பெண் தொழிலாளர்கள் மீது ஏவிவிடப்படுகின்றன.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம் ! இவைமட்டுமன்றி, ஆயத்த ஆடைத் தொழிற்கூடங்களில் தொழிலாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் கூடக் கிடையாது. மிகக் குறுகிய கட்டிடங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அடைத்துவைத்து வேலை வாங்குவதும், அடிக்கடி ஏற்படும் தீவிபத்துக்களில் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கருகிச் சாவதும் இங்கே தொடர்கதை. தீவிபத்தால் மட்டுமன்றி, சிதிலமடைந்த மோசமான கட்டிடங்கள் இடிந்து விழுவதாலும் பல தொழிலாளர்கள் இறக்கின்றனர்.

1990களின் ஆரம்பத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தீ விபத்துக்களாலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 19 வயதுக்கும் குறைவானவர்கள். எதிர்பாராமல் தீப்பற்றிக் கொண்டால் தப்பிப்பதற்காக அமைக்கப்படும் அவசர வழிக் கதவுகள் எந்தத் தொழிற்சாலையிலும் திறக்கும் நிலையில் இருந்ததில்லை. இதனால் கூண்டில் அடைபட்ட பறவைகளைப் போல அத்தொழிலாளர்கள் தீயில் வெந்து கரிக்கட்டைகளாகிப் போயினர். வங்கதேசத் தலைநகர் டாக்காவைச் சுற்றியிருக்கும் 4500க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் அனைத்துமே இப்படிப்பட்ட மரணக் கொட்டடிகளாகத்தான் உள்ளன.

ஆண்டுக்கு 80 ஆயிரம் வகையான ஆடைகளை ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளுக்கு சப்ளை செய்து வந்த நாராயண்கஞ்ச் நகரின் ஷான் நிட்டிங் நிறுவனம் 2005 இல் தீப்பற்றியபோது, அந்நிறுவனத்தின் எல்லா வாயில்களும் அடைபட்டுக் கிடந்ததால் அதில் கருகி 23 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் டாக்காவிற்கு அருகில் இருக்கும் சவர் எனும் இடத்தில் 9 மாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்த ஆயத்த ஆடை நிறுவனம் இடிந்து விழுந்து 100 தொழிலாளர்கள் மாண்டனர். இன்னும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கிக் ‘காணாமல்’ போய் விட்டனர்.

2006இல் ஷாயீம் பேஷன்ஸ் எனும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ மூவரைக் கொன்றது. அதே ஆண்டில் டாக்காவில் இரண்டும் , சிட்டகாங்கில் ஒன்றுமாக நடந்த தீவிபத்துகளில் 142 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். தீ விபத்துக்களில் உயிரிழந்தவர்களை விட காயமடைந்தவர்களது நிலைதான் மிகவும் பரிதாபமானது. தீயில் கருகி, உடல் உறுப்புக்களை இழந்து வாழ்நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய இயலாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம் ! இவ்வளவு விபத்துகளுக்கும், ஏற்றுமதி நிறுவனங்களின் இலாப வெறியும், தொழிலாளர் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளிகளின் திமிருமே காரணங்களாகும். ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவித்திருக்கும் இப்படுபாதகச் செயலுக்காக, இதுவரை எந்தவொரு முதலாளி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. தொழிலாளர் நலனில் முதலாளிகளுக்கு மட்டுமல்ல;  அரசுக்கும் கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. 15 ஆயிரம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்திட, வெறும் மூன்றே மூன்று ஆய்வாளர்கள் மட்டுமே அரசால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடி, தொழிலாளர்களின் நலனைக் காத்திட அங்கே வலுவான தொழிற்சங்கங்கள் ஏதுமில்லை. ஒரு காலத்தில் போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டியமைத்த டாக்கா, குல்நா, சிட்டகாங் நகரங்களின் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்தபோது, பொதுத்துறையாக்கப்பட்ட நிறுவனங்களில் இந்தத் தொழிற்சங்கங்கள் வலுவாக இருந்தன. தொடர்ந்து வந்த காலங்களில் இந்தத் தொழிற்சங்கங்களை ஆளும் வர்க்கம் திட்டமிட்டுச் சிதைத்தது. தொழிற்சங்கத் தலைவர்களை, வெளிநாட்டுப் பயணம் போன்ற சலுகைகளைக் காட்டி ஊழல்படுத்தி, தொழிலாளர்களிடமிருந்து தனிமைப் படுத்துவது;  பேரத்திற்குப் பணியாதவர்களை கூலிப்படைவைத்துக் கொல்வது  எனப் படிப்படியாக அனைத்து தொழிற்சங்கங்களும் அழிக்கப்பட்டன.

உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்த, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் திட்டமிட்டு நட்டமடைய வைத்து அவற்றினை மூடிவிடுவது எனும் கொள்கையை வங்கதேச அரசு ஏற்று நடைமுறைப்படுத்தியது. இதனால் பெருமளவு தொழிலாளர்களைக் கொண்டிருந்த பல பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். இதுமட்டுமின்றி, கடனுதவி அளித்த உலக வங்கியின் உத்தரவுப்படி,  மறுசீரமைப்பு என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. இவ்வாறுதான், உலகிலேயே மிகப் பெரிய சணல் ஆலையான ஆதம்ஜீ சணல் தொழிலகம், சணலுற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டாலர்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டு 2002இல் மூடப்பட்டது.

தனியார்மய  தாராளமயக் கொள்கை இவ்வாறு லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலையற்றோராக்கியபோது, வங்கதேச அரசு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட ஆயத்த ஆடைத் தொழிலை ஊக்குவித்து முதலாளிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கியது. ஆயத்த ஆடைகள் போன்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் அந்நிய மூலதனத்தை 100 சதவீதம் அனுமதித்தும், இத்தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரியில் 50 சதவீதத்தைத் தள்ளுபடி செய்தும் இத்தொழில்களை ஊக்குவித்தது. இதனால் உருவான ஆயிரக்கணக்கான ஏற்றுமதி சார்ந்த ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெண்கள் என்றால் சங்கம் கட்டி போராட மாட்டார்கள், அவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்தால் போதும் என்று  ஆண்களைத் தவிர்த்து பெரும்பாலும் பெண்களையே வேலைக்கு அமர்த்தின.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம் ! தங்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் கிடைக்கப் பெறாத இப்பெண் தொழிலாளர்கள்,  தங்களது பணிப்பாதுகாப்பின்மை, சம்பள உயர்வு போன்றவற்றைக் கோரிப் பெற சங்கமாய்த் திரள முயன்றபோதெல்லாம், அவர்கள் மீது கூலிப்படையைக் கொண்டு வன்புணர்ச்சியை ஏவிவிடும் கொடுமைகளையும் ஆயத்த ஆடைத் தொழில் முதலாளிகள் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். இருப்பினும் இக்கொடுமைகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் குமுறிக்கொண்டுதான் இருந்தது. நூற்றுக்கணக்கான சகதொழிலாளர்களைப் பலிவாங்கிய தொடர்ச்சியான விபத்துக்களும், அடக்குமுறைகளும் சேர்ந்து, சட்டப்பூர்வ தொழிற்சங்கம் ஏதுமில்லாத அத்தொழிலாளர்களைத் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு உந்தித் தள்ளியது.

2006இல் நடந்த தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டம் 14 ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளைத் தீயில் பொசுக்கியது. 70 தொழிற்சாலைகளை நொறுக்கித் தள்ளியது.  இதற்குப் பழி தீர்க்க அரசு 3 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது. நூற்றுக்கணக்கானோரைத் தாக்கிப் படுகாயப்படுத்தியதுடன்,முன்னணியாளர்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது.  அதேபோல ஊதிய உயர்வு கேட்டு 2008  இல் 358 இடங்களில் தொழிலாளர்களின் போராட்டங்கள் நடைபெற்றன. போலீசும் முதலாளிகளின் கூலிப்படைகளும் நடத்திய தாக்குதலில் 2395 தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஊதியம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய தொழிலாளர்கள் ஆறு பேரை 2009 இல் போலீசு சுட்டுக் கொன்றுள்ளது. 2010இன் முதல் பாதியில் மட்டும் 988 பேர் அரசுப் படைகளால் தாக்கப்பட்டுப் படுகாயமுற்றனர்.

இத்தகைய தொடர் போராட்டங்களின் நிர்ப்பந்தத்தினால் அரசும் ஆயத்த ஆடை முதலாளிகளும் சேர்ந்து 2006இல் ஒருமுறை குறைந்தபட்சக் கூலியை நிர்ணயித்தனர். 1993இல் வழங்கப்பட்ட கூலியை ஒப்பிடுகையில் 2006இல் நிர்ணயிக்கப்பட்ட கூலி உயர்வோ வெறும் 2.9 சதவீதம் மட்டுமே. அதே காலகட்டத்தில், உணவுப் பொருட்களின் விலையோ 50%க்கும் மேல் அதிகரித்திருந்தது. அரிசியின் விலை மட்டும் இருமடங்குக்கும் அதிகமாகி இருந்தது. இந்த அற்பத்திலும் அற்பமான ஊதிய நிர்ணயத்தை உயர்த்தக் கோரி 4 ஆண்டுகளாகப் போராடிய பின்னர் 2010 ஜூலை 29 அன்று, குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.2000 (3000 டாக்கா) ஐ நிர்ணயித்தனர். போராடிய தொழிலாளர்கள் முன்வைத்த  கோரிக்கையில் வெறும் 60 சதவீத அளவிலான தொகைதான் இது.  2010இல் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்சக் கூலியானது, உலகிலேயே மிக அற்பமான கூலியாகும். 1993ஆம் ஆண்டின் ஊதியத்தை ஒப்பிடும் போது தொழிலாளர்களின் உண்மை ஊதியமானது, 2010இல் மேலும் குறைந்துள்ளது என்பதைப் பல்வேறு புள்ளிவிவரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

அற்பக் கூலியுடன் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள இயலாமல் தொழிலாளர்கள் அரைப்பட்டினி நிலையில் இருத்தப்பட்டுள்ளனர். மிக அற்பமான இந்த ஊதிய உயர்வு, தொழிலாளர்களின் வாழ்நிலையை எவ்விதத்திலும் உயர்த்தவில்லை என்பதையும், ஊட்டச் சத்தின்மையால் தொழிலாளர்கள் தீராத பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பதையும் பல்வேறு சமூகநல அமைப்புகளின் ஆய்வுகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.  சொல்லொணாத் துயரில் வங்கத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, உலகமயமாக்கல் கொள்கை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து ஏழை நாடுகளிலும் இதுதான் நிலைமை.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம் ! பன்னாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களுடன் வங்கதேசத் தரகுப் பெருமுதலாளிகளும் கைகோர்த்துக் கொண்டு  வங்கதேசத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டிக் கொழுப்பது போதாதென்று, ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களின் மூலம் கோடிகோடியாக மேலை நாடுகளின் அரசுகள் வரி வருவாய் மூலம் கொழுக்கின்றன. பின்வரும் எளிய கணக்கு இந்த உண்மையைப் புரியவைக்கும்.

ஸ்வீடன் நாட்டில் சாதாரண கம்பளிச் சட்டை (ஸ்வட்டர்) விலை ஏறத்தாழ 300 சுவீடிஷ் குரோனர் (ஏறத்தாழ 2700 டாகா). கிறித்துமஸ் பண்டிகை காலத்தில் பெரும்பாலோர் புத்தாடை வாங்குவதையொட்டி இவற்றின் விலை மேலும் அதிகமாக இருக்கும். எனவே பெரும்பாலான மக்கள் பண்டிகை காலம் முடிந்து  விலை குறையும் போது இவற்றை வாங்குவர். சாதாரண காலங்களில் ஒரு ஸ்வட்டரின் விலை 150 சுவீடிஷ் குரோனார் எனில், சுவீடன் அரசு வாட் வரியின் மூலம் அதில் 25 சதவீதத்தை (அதாவது 37 குரோனர்)  நோகாமல் வருவாயாகப் பெற்றுக் கொழுக்கிறது. ஆடையை இறக்குமதி செய்து விற்கும் வர்த்தகர்  பெறும் லாபம் 77 குரோனர்கள்.  ஆனால் இந்த ஆடையை உருவாக்கிய வங்கதேசத் தொழிலாளி பெறும் ஊதியமோ வெறும் அரை குரோனர் (ஏறத்தாழ நாலரை டாகா). அதாவது சுவீடன் அரசு உறிஞ்சும் வாட் வரியில் 75இல் ஒரு பங்குதான் வங்கதேச ஏழைத் தொழிலாளியின் உழைப்புக்குக் கூலியாகத் தரப்படுகிறது. இப்படித்தான் ஏழை நாடுகளின் தொழிலாளர் உழைப்பின் மூலம் வரிவருவாயைப் பெற்று அமெரிக்க  ஐரோப்பிய அரசுகள் கொழுக்கின்றன.

2008 ஆம்ஆண்டில் 800 கோடி டாலர் மதிப்புள்ள ஆயத்த ஆடைகளை வங்கதேசம் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நாடுகள் வங்கதேசத்துக்கு அளிக்கும் கடனுதவியை விட, வாட் வரியின் மூலம் இந்த நாடுகள் அடைந்த வருவாய் மிக அதிகமாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், வங்கதேசத்தைப் போன்ற ஏழை நாடுகளின் தொழிலாளிகள்தான் மேற்கத்திய நாடுகளின் அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்றனர். ஆனால் அந்தத் தொழிலாளர்களோ, அற்பக்கூலியில் அடிமைகளாக உழல்கின்றனர்.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம் ! இத்தகைய கொடிய சுரண்டலும் அடக்குமுறையும் அந்நியச் செலாவணியின் பெயராலும், வேலைவாய்ப்பின் பெயராலும் ஏழை நாடுகளில் நியாயப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்கள் தமது கூலியைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், ஏற்றுமதி ஒப்பந்தங்கள் இதர ஏழை நாடுகளுக்குப் போய்விடும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்ற மிரட்டிப் பணியவைக்கும் உத்தியைத்தான் வங்கதேசத்தின் தரகு முதலாளிகளும் இதர ஏழை நாடுகளின் முதலாளிகளும் பின்பற்றுகின்றனர்.

வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிற்துறைச் சுரண்டலின் இந்திய வடிவம்தான் திருப்பூரும் குர்கானும். உலகமயம் எனும் நச்சு வளையத்தின் மீப்பெரும் சுரண்டல், அடக்குமுறை, அடிமைச் சங்கிலியில் இறுகப் பிணைக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளின் தொழிலாளி வர்க்கம், தமது பொது எதிரியான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளான உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியத்தை இன்றையை உலக நிலைமைகள் உணர்த்துகின்றன. குறிப்பாக, இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் முதலான ஏழை நாடுகளின் தொழிலாளர்கள் தெற்காசிய வட்டார அளவில் ஐக்கியப்பட்டுப் போராட வேண்டிய அவசியத்தை வங்கதேசத் தொழிலாளர்கள் மீதான சுரண்டலும் அதற்கெதிரான போராட்டங்களும் வலியுறுத்துகின்றன.

______________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. ஏன் இது போன்ற அடக்குமுறை நெரித்துக் கொல்லும் நிலையிலும் மக்களுக்கு ஏன் ஆளும் வர்க்கத்தை ஒன்று சேர்ந்து எதிர்கொள்ளும் தன்மை ஏற்படவில்லை.
    தொழிற்சங்கங்கள் ஏன் வலுவிழந்துகொண்டே தேய்ந்துகொண்டே இருக்கின்றன?

    இப்போது உண்டாயிருக்கும் வால்ஸ்டிரீட்டை ஆக்கிரமிப்போம் போராட்டத்தில் கூட தொழிற்சங்கங்கள் பெரும் பங்கு ஆற்ற முடியவில்லை.

    ஏனெனில் அடிப்படையில் தொழிலாளி என்கிற தனிமனிதன் தான், தனது என்கிற சுயநல அடிப்படையில் தான் இன்னும் சிந்திக்கிறான்;சிந்திக்கும்படி பயிற்றுவிக்கப்டுகிறான். தொழிற்சங்கங்கள் பின்புலம் இன்றி வெறுமனே போராட முயல்வது நீண்ட நாள் போராட்டங்கள் நடக்க இயலாமல் எளிதில் சிதறடிக்கிறது. தொழிலாளி தான் எப்போது முதலாளியாவது என்கிற கனவும் ஊட்டப்பட்டே வளர்க்கப்படுகிறான். அதனால் தான் தொழிற்சங்கங்களில் இடதுசாரி சிந்தனை பரவவேயில்லை.

    இந்த நிலை மாற இடதுசாரி இயக்கங்கள் மாற்று வழிமுறைகள் காணாத வரை இது போன்ற எந்த மாபெரும் மக்கள் எழுச்சியையும் பயன்படுத்த இயலாமல் போகும் நிலை ஏற்படும். வழி ஏதாவது காணப்பட்டிருக்கிறதா ?

  2. It happens in all nations. Even in British, USA and Pakistan..there’s low employment and HR issues. Pakistan, Bangladesh, Indonesia and India were all very populated nations and all extra resources will get this much salary only. That is business. No body is doing charity and it’s all money over there. Even VINAVU.COM was asking for donations. Only the name differs, but the fact, “they all need money” remains same. Even in China the people suffer a lot, but VINAVU team won’t write anything about them, bcoz china is ruled by stupid communists. The world is full of problem and we cannot solve each and every issue. Once ISLAM is founded, people starting giving birth to crores of children all over the globe. They should make family planning mandatory for ALL males (irrespective of religions) who got one or two children. Arresting the global population in the only way to tackle poverty. Instead of addressing the problem, there is no pointing in shouting like a “Piles” affected patient. (Juz like LK’s “VINAVU). JAI HIND

    • //Even in China the people suffer a lot, but VINAVU team won’t write anything about them, bcoz china is ruled by stupid communists.//

      சீனாவில் இருப்பது போலி கம்யூனிசம் என்று தான் வினவின் பதிவுகளில் சொல்லப் பட்டிருக்கிறது. சீனாவின் கொத்தடிமைக் கூடாரங்கள் பற்றிய கட்டுரையையும் வினவில் படித்த நியாபகம்.

  3. 1830களில் அய்ரோப்பாவில் தொழிலாளர்களின் நிலை மற்றும் வாழ்க்கை தரம் இதை விட படு மோசமாகவே இருந்தது. அதை நேரில் கண்டு ஆய்வு செய்தே மார்க்ஸ் தமது ‘உபரி மதிப்பு’ கோட்பாட்டை உருவாக்கினார். ஆனால் இன்று அதே அய்ரோப்பா தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது. (மார்கிசின் கணிப்பை பொய்யாக்கி).

    அதே போலவே வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் இன்றைய நிலையும் படிப்படியாக உயர வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்க்கு சில அம்சங்கள் உடன் தேவை : பங்களாதேஸ் தான் உலகிலேயே மிக மிக ஊழல் அதிகம் உள்ள நாடு. அரசு எந்திரம் முற்றிலும் ஊழல் மயமானது. தேவையில்லாத ராணுவ செலவுகள் மற்றும் ஊழல்களினால், அதன் அடிப்படை பொருளாதாரம் பிந்தங்கியே உள்ளது. தாய்லாந்தை ஒப்பிட்டால் விளங்கும். மேலும் ஜனத்தொகை அடர்த்தியும் மிக அதிகம். பணவிக்கமும் அதிகம். இவற்றை கட்டுபடுத்தாமல், வறுமை ஒழிப்பு சாத்தியமில்லை. கொடுமையான வறுமையில் இருந்து மீண்டு, வளர்ந்த நாடுகளாக 40 வருடங்களில் மாறிய தென் கொரியா, தைவான், ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளின் வரலாற்றையும் ஒப்பிட வேண்டும்.

    பங்களாதேஸ் தொழிலாளர்களின் நிலை 30 ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் கொடுமைகாகவே இருந்தது. இந்தியாவை விட்டு பிர்ந்து, பின் தங்கியதற்க்காக வருந்தும் சிந்தனையாளர்கள் பலரும் உண்டு.

    எதையும் கருப்பு, வெள்ளையாகவே பார்க்கும் வினவு போன்றவர்களிடம் ஓரளவுக்கும் மேல் ‘விளக்க’ முடியாது. அன்னிய செலவாணி பற்றி பெரும் அறியாமை அதிகம்..

    • //(மார்கிசின் கணிப்பை பொய்யாக்கி).//

      மார்க்சீயம் நடைமுறைத் தத்துவம். இன்று உலகமயமாக்க காலகட்டம். பிற நாட்டு தொழிலாளியின் உழைப்பால் உருவாகும் உபரியை சுரண்ட முடியாது என்று, எந்த …………..சொன்னான்.

      • ////இன்று உலகமயமாக்க காலகட்டம். பிற நாட்டு தொழிலாளியின் உழைப்பால் உருவாகும் உபரியை சுரண்ட முடியாது என்று, எந்த …………..சொன்னான்./////

        ஏற்கெனவே மேலைநாடுகளில் பலரும் சொன்னதை தான் தமிழில் நான் எளிமையாக சொல்லியிருக்கிறேன், இந்த பதிவில் :

        http://www.tamilpaper.net/?p=4350
        லாபம் என்றால் சுரண்டலா?

        • //லாபம் என்றால் சுரண்டலா?//

          முதலில் கூலி என்றால் என்ன? கூலி எதனடிப்படையில் வரையறுத்து கொடுக்கப்படுகிறது என்பதையும் கொஞ்சம் விளக்குங்கள்.

  4. அதியமான் மற்றும் அம்பேதன்

    வேறு முனை என்ற போதிலும் இரண்டுமே யோசிக்க வேண்டிய விசயங்கள்.

    வினவுக்கு என் தனிப்பட்ட பாராட்டுரை.

    நிச்சயம் இதைப்பற்றி இந்த நாட்டைப்பற்றி என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது. இன்னும் கூட நிறைய விசயங்களை தொட்டு எழுதியிருக்கலாம். காரணம் இங்கே 100 ரூபாய் பொறுமான ஒரு விசயங்கள் அங்கே நாலில் ஒரு மடங்கு விலைக்கு தான் விற்கப்படுகின்றது.

    வரிச்சலுகை என்ற போதிலும் அடிப்படையில் ரொட்டி கொடுத்தால் போதுமானாது என்ற அவலநிலையில் தான் முக்கால் வாசி தொழிலாளர்கள் அங்கே பணிபுரிகின்றார்கள்.

    இது தான் திருப்பூருக்கு சவாலான விசயம். திருப்பூர் மக்கள் பலரும் அங்கே போய் தான் வெற்றிகரமாக (உங்கள் பாணியில் சுரண்டல்) தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    • நண்பர் ஜோதி,

      நீங்களும் அந்த ‘சுரண்டல்வாதிகளில்’ ஒருவர் தான். பெரிய ’முதலாளி’ நீங்க, இப்படி எல்லாம் பேசலாமா ? :)))

      ’இந்தியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி’ : வங்க தேச நாளிதல் ஒன்றில் செய்தி !!! அந்த அளவு அங்கு வறுமை மற்றும் அவலம். ஜவுளி தொழிலில் இந்த வேலைகளாவது இல்லாவிட்டால், பட்டினி தான். அதற்க்கான காரணங்கள் விரிவானவை. நிலைமையை மேம்படுத்து வினவுவின் வழிமுறைகள் சரியாக இருக்காது. தென் கொரியா, தாய்லாந் போன்ற நாடுகளின் வழிமுறை தான் சரி.

  5. //உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்த, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் திட்டமிட்டு நட்டமடைய வைத்து அவற்றினை மூடிவிடுவது எனும் கொள்கையை வங்கதேச அரசு ஏற்று நடைமுறைப்படுத்தியது///

    ‘திட்டமிட்டு’ பொதுதுறை நிறுவனங்களை நட்டமடைய வைத்து என்று நீங்க மட்டும் தான் சொல்லுகிறீர்கள். இந்திய பொதுத்துறை நிறுவனங்களை பற்றியும் அப்படி தான் ‘கருதுகிறீர்கள்’ :)))))

    ஆரம்பித்த நாளில் இருந்தெ நஸ்டத்தில் நடக்கும் பொது துறை நிறுவனங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் ? 1991க்கு முன்பு, உலகமயமாக்களில் இந்தியா கலந்து கொள்ளாத காலங்களிலும், பெரும் நஸ்டம். ஏன் ? அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் சொந்த ஜமின் போல் பல நிறுவனங்கள் நடந்தன். தொழிற்சங்களின் பொறுப்பற்ற செயல்களினால, தொழிலாளர்களின் அடிப்படை நேர்மை மற்றும் பணித்திறனும் சீரழிந்தது. இதற்கான அடிப்படை காரணிகளை பற்றி யோசிக்காமல், தொடர்ந்து பொத்தாம் பொதுவாக, ‘சதி’ என்றே பேசினால், பேசிக்கிட்டே இருக்கலாம்..

    இந்த ‘வெள்ளை யானைகளில்’ பெரும் பணத்தை (கடன் வாங்கி) வெட்டியாக கொட்டியதற்க்கு பதில் அரசு தொழிலே துவங்காமல், அன்றே தனியார்களை ‘தாரளமாக’ அனுமதிதிருந்தால், மலேசியா அளவாவது வளர்ந்திருப்போம். இத்தனை ஊழல்களும் உருவாகியிருக்காது. விலைவாசி உயர்வையும், வறுமையும் கட்டுபடுத்தி குறைத்திருக்கலாம்.

  6. தனியார்மயம் தாரலமயம்-உலகமயம் சுலலில் தொலிலார் போரட்டம் தவிர்க்கயிலதது.

  7. […] வங்கதேசத்தில் 1,89,000 பேர் வால்மார்ட் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். 5.30க்கு எழுந்து கைவிரல்களால் பல் தேய்த்து காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்கிறார்கள். மணிக்கு 13 சென்ட் முதல் 17 சென்ட் வரை கிடைக்கிறது. […]

Leave a Reply to Indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க