Wednesday, November 13, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுல்லைப் பெரியாறு: குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!

முல்லைப் பெரியாறு: குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!

-

கடந்த 11-ம் தேதி முன்மாலை நேரத்தில் கே டி.வியில் பதிவு செய்யப்பட்ட பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. மேடையின் முன்னே தெலுங்கு, கன்னட திரையுலகத்தினரோடு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினரும் முகத்தில் ஒட்டவைத்த ஒரு உறைந்து போன போலிச் சிரிப்போடு அமர்ந்திருந்தனர். மேடையில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றுக்காக கவிஞர் தாமரைக்கு விருது வழங்கிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆர்வலரான கவிஞர் தாமரை படத்தின் இயக்குனர் பற்றி ஏதோ போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தார்.

சரியாக அதே நேரத்தில் தமிழக கேரள எல்லையான தேனி -கம்பம் -கூடலூர்-  குமுளி பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தமிழக மக்களோ தங்களது உரிமைக்காக அணையை நோக்கி போர்க் கோலத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சி.பி.எம் இறுதியாக ஒளிந்து கொள்ள எத்தனிக்கும் முழக்கம் தான் “கேரளாவுக்கு பாதுகாப்பு – தமிழகத்துக்குத் தண்ணீர்”. தற்போதைய நிலையில் கேரள மக்களின் பாதுகாப்பிற்கு முல்லைப் பெரியாறு அணையால் எந்தவிதமான பங்கமும் இல்லையென்பது பல்வேறு வல்லுனர்களின் ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த முழக்கத்தின் உண்மையான நோக்கம் புதிய அணை கட்டுவதை தமிழக மக்கள் ஏற்கச் செய்ய உளவியல் ரீதியில் தயாரிக்கும் நரித்தனமான நோக்கம் தான்.

புதிய அணை கட்டினாலும், தமிழகத்திதற்கு நீர் வராது. மேலும் பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது காங்கிரசு, சி.பி.எம் கட்சிகளுக்கு வாழ்வா சாவா எனுமளவுக்கு ஒட்டுப்பொறுக்கும் சண்டையாக நடைபெறுகிறது. ஏற்கனவே நூலிழையில் ஆளும் காங்கிரசு கும்பல் இதில் தோற்றால் ஓரிரு எம்.எல்.ஏக்களை வளைத்து சி.பி.எம் ஆட்சியைப் பிடிக்கும் என்பதால் இரு கட்சிகளும் வெறி கொண்ட முறையில் மலையாயள இனவெறியை கட்டவிழ்த்து வருகின்றன. முல்லைப் பெரியாறு எனும் அணை தமிழகத்தின் நீராதாரம் என்பதும் கூட இவர்களைப் பொறுத்தவரை ஓட்டுப் பொறுக்கும் சாக்கடை சண்டைக்கு பயன்படும் பொருள்தான்.

கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டே தமிழகத்தில் முரண்பாடு வேண்டாம், சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று சிபிஎம் நடத்திக் கொண்டிருக்கும் பித்தலாட்ட நாடகத்திற்கும் பிற தேசியக் கட்சிகளான காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்களுக்கும் பெரியளவில் வேறுபாடு ஏதுமில்லை. அது காவி, கதர் போட்ட தேசியமென்றால் இது சிவப்பு கட்டிய தேசியம் – வண்ணங்கள்  வெவ்வேறாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்று தான். அது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது தான்.

தமிழனவாத அமைப்புகளோ முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்ட மேடைகளை சி.பி.எம், சி.பி.ஐ கொலு பொம்மைகளால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாய் பேசி பேச்சுமாத்து செய்யும் போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசியக் கட்சி சந்தர்ப்பவாதிகளை தமிழகத்தில் யாரும் கண்டிக்க முடியாத நிலையில் சாமானிய மக்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு அணையை கைப்பற்ற போர் முரசு கொட்டியிருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு: குமுளியில் 1 இலட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!

கடந்த ஓரிரு மாதங்களாகவே கம்பம், தேனி, கூடலூர், குமுளி, ஆகிய தமிழகப் பகுதிகளை ஒட்டிய கேரளப் பகுதிகளிலும், கேரளத்தின் பிற பகுதிகளிலும், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையை ஒட்டிய பகுதிகளிலும் சி.பி.எம், காங்கிரசு பாரதியஜனதா போன்ற ‘தேசிய’ கட்சிகள் முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என்கிற பயபீதியூட்டும் பிரச்சாரங்களையும் தமிழர்களுக்கு எதிரான மலையாள இனவெறிப் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

அணை போனால் வாழ்க்கையும் போகும் என்பதை உணர்ந்திருந்த தமிழகப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஏழெட்டு நாட்களாகவே கம்பம் – குமுளி பகுதியில் கேரளா செல்லும் சரக்கு லாரிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கிடையே இதில் தலையிடும் தமிழக உள்ளூர் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின்  தலைவர்கள், எல்லைக்கு அந்தப்புறம் இருக்கும் தங்களுக்குத் தெரிந்த கேரள வியாபாரிகளுக்காகப் பரிந்து பேசி, அவர்களுக்கான வாகனங்களை மட்டுமாவது  விடுவிக்க வேண்டுமென்று போராடும் மக்களை அணுகியிருக்கிறார்கள். மக்களோ இந்த நரித்தனத்துக்கு பலியாகாமல் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.

செவி வழிச் செய்திகளை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் இருந்து காய்கறிகள் செல்லாததால் குமுளி மற்றும் இடுக்கி மாவட்டத்தில் அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. தக்காளி கிலோ ரூ. 150, வெங்காயம் ரூ. 50, பச்சை மிளகாய் ரூ. 65, மாட்டுக்கறி கிலோ ரூ. 400 முதல் 500 வரை விற்பதாக தெரிகின்றது. இடையில் செங்கோட்டை வழியாக காய்கறிகளை கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்றது. எனினும் அங்கும் தடை விதிக்கும் பட்சத்தில் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் விலைவாசி விண்ணை முட்டுவது உறுதி. முல்லைப் பெரியாறு பிரச்சினையை ஊதிப்பெருக்கி குளிர்காய நினைக்கும் கேரள ஓட்டுப்பொறுக்கிகளால் கேரள மக்கள்தான் துன்பங்களை அடையப் போகிறார்கள். அச்சுதானந்தனுக்கோ, உம்மன் சாண்டிக்கோ ஒரு பாதிப்புமில்லை.

இந்நிலையில் சிலநாட்களுக்கு முன் தமிழகப் பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் கேரளப் பகுதிக்குள் கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் 3000 பேர் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஜீப்புகள் சிறைபிடிக்கப்படுகின்றது. வேறு வழியின்றி பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட எல்லா கூலித் தொழிலாளர்களும் கேரள பகுதியிலிருந்து கால் நடையாகவே தமிழகப் பகுதியை நோக்கி பயணமாகிறார்கள்.

இடையே குறுக்கிடும் மலையாளி இனவெறி மற்றும் பொறுக்கி கும்பல் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்த அப்பாவிப் பெண் தொழிலாளர்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டது. தமிழர்களை இழிவு படுத்தி கேலி பேசிய அவர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாகக் குறிவைத்திருக்கிறார்கள். அத்தனை அவமானங்களையும் பொறுமையாக சகித்துக்  கொண்டு தமிழகப் பகுதிக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு நேர்ந்த அவமானங்களை தமிழகத்தில் உள்ள மக்களிடம் சொல்லிக் குமைந்திருக்கிறார்கள்.

அதுவரை கேரள இனவெறியர்களின் இடைவிடாத பிரச்சாரத்தால் தமிழகப் பகுதியிலிருந்த மக்களில் ஒரு சிலர் “அணை தானே கட்டப் போகிறான். கட்டி விட்டுப் போகட்டுமே” என்றே இருந்திருக்கிறார்கள். ஆனால், தங்கள் பெண்களுக்கு நேர்ந்த இந்த அநீதிகளைக் கேட்டதும்  ஒட்டுமொத்தமாக எல்லா மக்களின் பொறுமையும் உடைந்து போய் விட்டது. அதே நேரத்தில் கேரள சட்டசபையில் பெரியாறு அணையை உடைப்பதும், புதிய அணை கட்டுவதும் தான் ஒரே தீர்வு என்றும் அதுவரை நீர்மட்டத்தை 120 அடிகளாக குறைத்து விடுவது என்றும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுகிறது.

இந்த விஷயங்களைக் கேள்விப்படும் மக்கள் ஆத்திரம் அடைகிறார்கள். இது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. வலுவாக இருக்கும் ஒரு அணையை உடைத்து இங்கேயிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வயிற்றிலடித்து விட்டு கேரளாவில் மின்சார உற்பத்திக்கு அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டு வீணாக கடலில் கலக்க விடப்போகிறார்கள் என்பதும், இதற்காக வேலைக்குச் செல்லும் அப்பாவிக் பெண்களைக் கூட விட்டு வைக்காத அளவுக்கு எல்லைக்கு அந்தப்புறம் மலையாள இனவெறி தலைவெறித்து ஆடுவதும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆவேசத்தின் உச்சிக்கே தள்ளுகிறது.

இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அணையைக் கைப்பற்றுவது தான் என்கிற முடிவுக்கு மக்கள் வருகிறார்கள். இப்பகுதியில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) ஏற்கனவே ஒவ்வொரு கிராமத்திலும் மக்களைக் கொண்டே “முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழு” அமைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளனர்.

தற்போது பிழைப்புவாதத்திலும் சந்தர்பவாதத்திலும் ஊறித் திளைக்கும் உள்ளூர் அளவிலான ஓட்டுக் பொறுக்கிக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் ரவுடிகளை ஒதுக்கித் தள்ளி விட்டு மக்களாகவே அணை மீட்புக் குழுக்களை அமைத்து வருகிறார்கள்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (10.12.2011) ” முல்லைப் பெரியாறு அணையை மீட்போம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து பெரியாறு அணையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுருளிப்பட்டி கிராமத்திலிருந்து  முதலில் சுமார் 5000 விவசாயிகள் அணிதிரண்டு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி நடை பயணம் ஒன்றைத் துவக்கினர். செல்லும் வழியெங்கும் இருந்த கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள 40,000 ஆயிரத்துக்கும் மேலாகத் திரண்டு விட்ட அந்தக் கூட்டம் 144 தடையுத்தரவைக் கிழித்துக் குப்பைத் தொட்டியிலெறிந்து விட்டு அணையை நோக்கி முன்னேறியது.

இடையில் ஆறு இடங்களில் போலீசு அமைத்திருந்த  தடுப்பரண்களைத் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறிய அந்த மக்கள் படை, தம்மை பின்புறத்திலிருந்து போலீசு நெருங்கி விடுவதை தாமதப்படுத்த கற்களாலும் மரங்களாலும் தடுப்புகளை அமைத்தவாறே தொடர்ந்து முன்னேறி அணையிலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை நெருங்கிச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டுக் கலைந்தது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (11.12.2011), முந்தைய தினம் கூடியதை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் ஒன்று திரண்டு மீண்டும் ஒரு பேரணியை நடத்தினர். சுமார் 70,000க்கும் அதிகமாக கூடிய மக்களில் பெண்கள் கணிசமான அளவு கலந்து கொண்டனர். தங்களைத் தடுக்கக் காத்திருக்கும் போலீசுப் பட்டாளத்திற்கு தகுந்த பதிலை அளிக்க பெண்கள் கையில் கிடைத்த விளக்குமாறு, பிய்ந்த செருப்பு உள்ளிட்ட ‘பேரழிவு’ ஆயுதங்களையும் ஆண்களோ கையில் கிடைத்த கத்தி கடப்பாறை உள்ளிட்ட சாதாரண ஆயுதங்களையும் ஏந்திச் சென்றனர்.

மக்கள் அணையை நெருங்குவதைத் தடுக்க, போலீசு கூடலூருக்கும் லோயர் கேம்புக்கும் இடையில் இருந்த குறுவனூற்றுப் பாலத்தில் தடுப்பரண் அமைத்துள்ளது. அதைத் தகர்த்து மக்கள் முன்னேறிச் சென்றனர். சுமார் 30 கிலோமீட்டர்களுக்கும் மேல் கால் நடையாகவே பேரணியில் நடந்து வந்த மக்கள் எந்தச் சோர்வுமின்றி ஆவேசமாக மத்திய அரசையும் கேரள அரசியல் கட்சிகளையும் எதிர்த்து கோஷங்களை எழுப்பியவாறு முன்னேறிச் சென்றனர்.

அணையை நோக்கி முன்னேறிச் சென்ற மக்களின் பேரணியை குமுளி-கேரள எல்லையில் வைத்து மறித்தது தமிழக டி.ஐ.ஜி தலைமையிலான போலீசு படை. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைகள் நியாயமாகத் தீர்க்கப்படும் வரை தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் 13 நெடுஞ்சாலைகளையும் அரசே மூட வேண்டுமென்றும், இந்தக் கோரிக்கையை அரசு உடனே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை தாம் கலைந்து செல்ல முடியாதென்றும் மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையே அங்கே தனது அடிப்பொடிகளுடன் விஜயம் செய்தார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். போராடும் மக்களிடையே சமரசம் பேசி கலைந்து போகச் செய்து விடலாமென்ற நப்பாசையில் வந்த பன்னீர்செல்வத்துக்கு செருப்பாபிஷேகம் செய்து தகுந்த மரியாதை அளித்தனர் மக்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளை போராட்டத்தில் தலையிட அனுமதிக்க மாட்டொமென்று கோஷமிட்ட மக்கள், “ஏழு நாளா போறாடுகிறோம், இப்ப கேரளாக்காரனுக்கு பிரச்சினைன்னு சொன்னதும் எங்களை சமாதானம் செய்ய வந்தியா” என்று அர்ச்சனை செய்து விரட்டியடித்துள்ளனர்.

மக்களின் ஆவேசம் கண்டு பீதியடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடிபட்ட கையோடு, குமுளியில் இருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார். அமைச்சருக்கு கிடைத்த மரியாதைக் கண்டு கொதித்த தமிழக போலீசு தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தது. இதற்கிடையே கீழே இருக்கும் மக்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டு கூடலூர் அருகே அமைச்சரின் வாகன பவனியைத் தடுத்து நிறுத்தினர். “திரும்பிப் போ திரும்பிப் போ கேரளாவுக்கே திரும்பிப் போ” என்று கோஷமிட்டு போர்கோலம் பூண்டு நின்றிருந்த மக்களிடமிருந்து எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோமென்று அமைச்சரும் அடிப்பொடிகளும் பின்னங்கால் பிடறியில் பட  ஓட்டம் பிடித்தனர்.

தற்போது கேரளத்தில் காங்கிரசு, பாரதிய ஜனதா, சிபிஎம் மட்டுமின்றி மாநில அளவில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் எந்த வேறுபாடுமின்றி ஸ்தாபன ரீதியில் ஒருங்கினைந்து மலையாள இனவெறியை உயர்த்திப் பிடித்து, கேரள மக்களிடையே அச்சமூட்டும் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். 200 கிலோ மீட்டர்களுக்கு மனிதச் சங்கிலி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று வரிசையாக அணைக்கும் தமிழர்களுக்கும் எதிராக நடத்தப்படும் பயபீதியூட்டும் பிரச்சாரங்களுக்கு கணிசமான அளவு கேரள மக்கள்ஆட்பட்டுள்ளனர்.

தமிழகத்திலோ, ‘தேசியக்’ கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசு, பாரதிய ஜனதா மற்றும் போலிகம்யூனிஸ்டு கட்சிகள் வெண்டைக்காயை வெளக்கெண்ணையில் கழுவிக் கொட்டுவது போல் வழவழா கொழகொழாவென்று மென்று முழுங்குகிறார்கள். அணை பாதுகாப்பானது என்பதை முன்னிறுத்தி தமது கேரளக் கூட்டாளிகளிடையே பேச துப்பில்லாத இவர்கள் தமிழர்களிடம் ஒருமுகமும் மலையாளிகளிடம் ஒருமுகமும் காட்டி இரண்டு பக்கமும் பொறுக்கித் தின்ன வாய்ப்புகள் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.

கேரள மக்களின் வயிற்றுப்பாடும் வாழ்க்கையும் தமிழகத்தின் விவசாய விளைச்சலில் தான் அடங்கியிருக்கிறது என்பதை முன்வைத்து கேரள மக்களின் தேவையற்ற அச்சத்தை விளக்குவதை விடுத்து இனவெறி அரசியலில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் முங்கி முத்தெடுக்கப் பார்க்கிறார்கள். இருந்தாலும், இப்போதைக்கு அதில் முன்னணியில் இருப்பது போலி கம்யூனிஸ்டுகள் தாம்.

இந்த சந்தர்ப்பவாத முகமூடிகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் தமிழக விவசாயிகளோ தெளிவாக இவர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக அணையைக் காக்க அணிதிரண்டு வருகிறார்கள். தங்கள் சொந்த அனுபத்தினூடாகவே துரோகிகளை இனங்கண்டு விலக்கியுள்ள விவசாயிகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டியது இரு மாநிலங்களிலும் இருக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

கூடன்குளம் போராட்டத்தை தணிப்பதற்க்காக நாடகமாடிய பாசிச ஜெயா அதே பாணியில் முல்லைப் பெரியாறு போராட்டத்தை ஆப்பு வைப்பதற்க்காக, வரும் 15.12.2011 அன்று சட்டசபையைக் கூட்டி தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று தீர்மானம் போட இருக்கிறார். மூவர் தூக்கிற்கும் இப்படித்தான் தீர்மானம் போட்டு பின்னர் அதை அவரே காறித்துப்பினார் என்பது நினைவு கூறத்தக்கது. ஐந்து காசுக்கு கூட மதிப்பில்லாத இந்த தீர்மானங்களால் எந்த பயனுமில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெயாவின் நோக்கம் போராடும் மக்களின் கோபத்தை தணித்து நீர்த்து போகச் செய்வதுதான். அதிலும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடிவாங்கிய பிறகு ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது.

ஆனால் மக்கள் போராட்டம் அத்தனை சுலபத்தில் தணியப் போவதில்லை. இன்றும் 12.12.2011 – கூடலூர் பகுதியில் மக்கள் திரண்டு செல்லப்போகிறார்கள். தற்போது இந்த போராட்டத்தில் சேர்ந்து கொள்ளும் மக்களின் புவிப்பரப்பு அதிகரித்து வருகின்றது. இன்றைய போராட்டத்தில் சிவகங்கையிலிருந்தும் விவசாயிகள் வரப்போவதாக எமது தோழர்கள் கூறுகிறார்கள். ஆனால் இருநாள் அனுபவத்தை பார்த்து போலீசு இன்றுமுதல் வன்முறை நடவடிக்கையையும், முன்னணியாளர்களை கைது செய்து சிறையிலடைக்கும் என்றும் தெரிகிறது.

அப்படி தடியடி அல்லது துப்பாக்கி சூடு மூலம் கூட்டத்தை கலைத்து விடலாமென்று இருமாநில போலீசு நினைத்தாலும் வரும் நாட்களில் மக்கள் கூட்டம் சில பல இலட்சங்களுக்கு மாறும் போது யார் என்ன செய்ய முடியும்? அரசுகளும், ஓட்டுக்கட்சிகளும், நீதிமன்றங்களும் செயலற்று போகும் போது மக்களுக்கான உரிமையை அவர்களே மீட்டெடுப்பார்கள். அதற்கு முன்னறிவுப்புதான் இந்த அணை காக்கும் போர்!

__________________________________________________________

–          வினவு செய்தியாளர்
–            தகவல் உதவி: வி.வி.மு, கம்பம்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. அணை பாதுக்காப்பானது என்று எடுக்கப்பட்ட வீடியோ அனைத்து டிவி சேனல்களிலும் ஒளிபரப்பபட வேண்டும். இன்னும் தமிழகத்திலே பலர் அணை பாதுக்காப்பற்றது என்று நினைத்து கொண்ருக்கின்றனர். இம்மக்கள் போராட்டத்தில் நச்சு கிருமிகள் நுழைந்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிட கூடாதே என்று கவலையாக இருக்கிறது.

    • தமிழக தியேட்டர்கள் ஒரு நாள் அடையாள திரை அரங்கு மூடுதலை அறிவித்துள்ளனர். அதற்க்கு மாறாக ‘கேரளா’ அரசியல் வியாதிகளின் அட்டூழியத்தையும், நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியுமான வீடியோ பதிவை குறிப்பிட நாளில் அனைத்து தியேட்டர்களும் இலவசமாக அன்று முதல் அனைத்து தமிழனுக்கு போட்டு காட்ட வேண்டும்.

  2. கேரளத்தில் வாழும் தமிழர்களின் சொத்து பத்துக்களை சில மலையாள அமைப்புக்கள் கணக்கெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி ஆராய்ந்து செய்தி வெளியிட்டால் பெரிய உபகாரமாக இருக்கும். மேலும் தமிழக பெண் கூலி தொழிலாளர்களிடம் மலையாள வெறியர்கள் காம சேட்டை செய்ததாகவும் செய்திகளில் படிக்கிறோம். இது பற்றியும் புலனாய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும்.

    • ஏமாற்றி பிழைப்பவனுக்கே இழப்புகள் அதிகம். அவனாவது கணக்கெடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் அது ஏற்க்கனவே எடுத்தாகி விட்டது. முடிக்க வேண்டியது தான் பாக்கி.

  3. தமிழ்நாட்டின் பக்கம் நியாயம் உள்ளது. அதை எப்படி சட்டபூர்வமாக நிலைநாட்டுவது என்று பார்க்கவேண்டுமே தவிர, மக்கள் போர்க்கோலம் பூணுவதால் தற்காலத்தில் பயன் இல்லையே, வினவு. ஈழத் தமிழர்களின் போர்க்கோலத்தை விடவா? அது எப்படி உலகநாடுகளின் அமைதியான ஒத்துழைப்போடு ஒடுக்கப்பட்டது? புலிகளின் வீரம், தியாகம், உழைப்பு அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரானது.

    தற்காலத்தில், அரசுகளைத் தவிர, தனிப்பட்ட அமைப்புகளின் வன்முறைக்கு, அது எவ்வளவு நியாயமான காரணத்துக்காக என்றாலும், லெஜிட்டிமஸி இல்லை. அத்தகைய வன்முறை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். தேவைப்பட்டால் விமானப்படையையே அனுப்புவார்கள்! அதுவும் போதவில்லையென்றால் வெளிநாட்டிலிருந்து விமானங்களை வாங்குவார்கள்! இவ்வாறு ஒடுக்கப்படும்போது சும்மா வீர வசனம் பேசி என்ன புண்ணியம்?

  4. தமிழ் நாட்டில் உள்ள சதுரகிரி மலையில் பெரியாறு உற்பத்தியாகிறது. அங்கேயே ஏன் பெரியாறை தமிழ்நாட்டிற்கு திருப்பிவிடகூடாது? நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இது முடியாத காரியமாக இருக்கலாம். இன்றைய தொழில்நுட்பத்தில் இது முடியும்!! பிறகு, மலையாளிகள் வெள்ளம், நிலநடுக்கம் என்று பயப்படதேவையில்லை! தமிழ் நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு!! மலையாளிகளின் சூழ்ச்சி பரப்புரையை வைத்தே அவர்களை கவிழ்க்கவேண்டும்!!!

    • ஏற்கனவே நல்ல நிலையில் அணை இருக்கும்போது புதிதாக எதற்கு நாம் கட்ட வேண்டும்?! உரிமையை எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்?

      இதில் தமிழக அரசியல்வாதிகள் உதவவில்லை என்றால் தனியாகத் ‘தென் தமிழக’ மாநிலம் கேட்டு மதுரைக்குத் தெற்கே உள்ள 9 மாவட்டங்கள் போராட வேண்டும். காவிரியில் காட்டுகிற அக்கறையை முல்லைப்பெரியாறில் எவனாவது காட்டுகிறானா பாருங்கள்!

      • அப்போதும் பிரச்சனை தான் அண்ணே….!!! நதி நீரை பொறுத்த வரை கடை கோடியில் இருப்பவனுக்கு தான் முதல் உரிமை என்று உலக நீர் சட்டங்கள் சொல்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்தியா பாகிஸ்தான் கூட நீரை பிரித்துகொல்கின்றன. இந்த சட்டத்துக்கு மாறாக எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதில் ஐ.நா தலையிடும். நமக்கு ஏன் இந்த பிரச்சனை? நாம் நாடு அல்ல. இந்தியா என்ற ஒரு போலி நாட்டின் ஒரு பகுதி. இதே நாம் நாடாக இருந்திருந்தால் ‘பாதுகாப்பு படையை’ அனுப்பு என்று ஒன்றுக்கும் உதவாத இந்தியாவையா கேட்டுக் கொண்டு இருப்போம்? நமது நீண்ட கால தேவை ‘தனி தமிழ் நாடு’ என்பது என் தாழ்மையான கருத்து.

  5. Already Supreme Court confirmed the Safety and Strenth aspects of Mullaiperiyaar Dam; It is Kerala Government to act as per directions of Supreme Court else Central Govt. shall intervene and ensure legitimate rights of Tamilnadu is protected; But, as usual, Congress ruled Central Govts NEVER acted to Safe guard
    TAMILS interest.

  6. வாழ்த்துக்கள்! உங்களைப் போன்ற அமைப்புகள் முன் நின்று நடத்தினால்தான் இந்தப் போராட்டம் வெல்லும். ஓட்டுப் பொறுக்கிகளால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. மக்களின் எழுச்சி வரவேர்க்கத்தக்கது, மகிழ்ச்சியளிக்கக்கூடியது. ஈரமுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க நினைக்கும் கேரள அரசியல்வியாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேன்டும்.

  7. மனமார வாழ்த்துக்கள்.. உங்களை போன்ற அமைப்புக்கள் தான் காலத்தின் தேவை..
    உழைப்போருக்கு உம்மை போன்று அமைப்புக்கள் இருக்கும் வரை அவர்கள் வாழ்வில் நம்பிக்கையை இழந்துவிட மாட்டார்கள்..
    முன்னெடுத்து செல்லுங்கள் உழைப்போரின் கரங்கள் உயரட்டும்.
    நன்றி.

  8. சவுக்கு,
    பென்னிகூக் முயற்சியில் கட்டப்பட்ட (அயர்லாந்துகாரர்)அனைக்கு ,ஆபத்து என்று கேரளா சொல்வது வீம்பு.சமசுகிரதம்,தமிழை கலந்த மொழியினர் சோத்துக்கு அய்யப்பனை காட்டி அரிசி எடுத்து வர வைத்து (தமிழனின் தலையிலேயே அதையும் )சேட்டனும்,சேச்சியும் கொழுத்துவிட்டு வச்சார்கள் வெள்லத்திற்கு ஆப்பு(அதான்க தண்ணி)

    சோனியாதான் மனசு வைக்கனும்,யில்லன்னா அந்தோனியை விட்டு சுட்டுவிடுவார் அச்சுவும்,உம்மனும்.

    ன்னாயர் கடையில டீ குடிச்சிட்டு வேற வேலய பாருங்கநண்பா.

    —– மெய்த்தேடி…

  9. முல்லை பெரியார் நீர்தேக்க பகுதிகளில் பல அரசியல்வாதிகளின் ரிசார்ட்டுகள் , கெஸ்ட் ஹவுஸ்கள் அமைந்துள்ளன. முல்லைபெரியாரில் தேங்கும் நீர்மட்ட அளவை கூட்டினால் அந்த ரிசார்ட்டுகள் , கெஸ்ட் ஹவுஸ்கள் மூழ்கி போய்விடும் , அந்த ஒரு காரணத்தினால் தான் 155 அடி நீரை தேக்க மறுக்கிறார்கள் . தற்போது வதந்தியை கிளப்பி விடுபவர்களும் அந்த சொகுசு மாளிகையின் அதிபர்களாகவும் அரசியல் வாதிகளாகவும் இருப்பவர்கள் தான். இன்று கேரளா மக்களிடையே பயத்தினை தூண்டுவதற்கு காரணம் அந்த முதலாளிகள் தான் என்பதை நாம் கேரளா மக்களுக்கு விளக்க வேண்டும்.

  10. மக்களின் விழிப்புணர்வால் எழும் போராட்டத்திற்கு விலை மதிப்பே கிடையாது.

    அதனால் மட்டுமே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    போராடும் குணம் தொடர்ந்து எழட்டும்.

    போராட்டம் வெல்லட்டும்.

  11. மக்கள் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை.இதை முன்னெடுத்து செல்லும் உங்கள் அமைப்புகளுக்கு சல்யூட்.

  12. December 17, 2011 EPW வெளியிட்ட கடிதத்தின் தமிழாக்கம்

    பிரதமருக்கு ஒரு திறந்த மடல்,

    நீர் பங்கீடுப் பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தைக்கான கொள்கை மன்றம் (The Forum for Policy Dialogue on Water Conflicts in India) முல்லைபெரியாறு விவகாரத்தை பல ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வருகிறது. முல்லைபெரியாறு குறித்த மாறுபட்ட பார்வைகள் சில ஆண்டுகளாக கடினமடைந்து வருகின்றது. அணை பாதுகாப்பானது என்பதும், நீர் மட்டத்தை ஒப்பந்தப்படி அதிகபட்ச உயரம் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்துகிறது. தற்போதுள்ள அணை பாதுகாப்பானது அல்ல என்பதும், அதனால் புதிய அனையொன்று கட்டப்பட வேண்டுமென்று கேரள அரசு வற்புறுத்துகிறது. அணைப்பகுதியை மையமாக கொண்ட சமீபத்திய நிலநடுக்கங்களும், இரு தரப்பினரிடையில் பெருகி வரும் அவநம்பிக்கையும், அச்சமும், தோற்றுவித்துள்ள கடுமையான சூழ்நிலையில் உங்கள் சமரச முயற்சி வரவேற்கதக்கது.

    ஆனால் இரு அரசுகளின் நிலைப்பாடும் தவறானது என்பதும், நீண்ட கால சிந்தனை அவசியம் என்பதும் எங்கள் கருத்து. காலத்தின் சீற்றத்தினால் ஏற்பட்ட அடையாளங்கள் 115 ஆண்டுகள் பழமையான அனையில் வெளிப்படுகிறது. பாதுகாப்பு குறித்த வல்லுனர் கருத்துகளும் மாறுபடுகின்றன; பழுது பார்க்கும் பணிகள் செய்துவிட்டால் அணை பாதுகாப்பாக இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். வேறு சில வல்லுனர்கள் நீரியல் ஆய்வுகள், கட்டுமான பொருள்கள், மற்றும் நூறாண்டுகளுக்கு முன்பிருந்த தொழில்நுட்பம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது அணை பாதுகாப்பில்லாதது என்று கருதுகிறார்கள். அணை, நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடத்தில் அமைந்திருப்பதுடன், சமீபத்தில் தொடர்ச்சியாக அனைப்பகுதியை மையமாக கொண்டு பல நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. மறுபுறத்தில், 400 மீட்டர் தாழ்வான இடத்தில் கேரள அரசு அமைக்க திட்டமிடும் புதிய அணை, கடும் பொருளாதார சுமையை தோற்றுவிக்கும் என்பதோடு, பெரியாறு புலிகள் சரணாலயத்தின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிடும் அபாயமும் கொண்டது. கட்டுமான காலத்தில் பெரும் சூழல் கேட்டை விளைப்பதுடன், இப்போதிருக்கும் நிலநடுக்க அபாயம் புதிய அனைக்கும் பொருந்தும். தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்காக கேரள மாநிலம் கூடுதலான சூழல் கேட்டினை ஏற்க வேண்டியிருக்கும்.

    அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆழ்ந்த அச்சத்தையும், பாதுகாப்பின்மை உணர்வினையும் கருதி முன்னெச்சரிக்கை அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்.

    120 அடி நீர்மட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும். தமிழகம் இயன்ற அளவு தண்ணீரை திருப்பி விடவும், வேறு இடங்களில் சேமித்து வைக்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    கீழ்காணும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்:
    1) கேரளம் தற்பொழுது வழங்கி வரும் தண்ணீரின் அளவு எதிர் வரும் காலங்களிலும் வழங்கப்படும் என்று உறுதி செய்ய வேண்டும். இதை கேரள அரசு ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்துவிட்டது.
    2) முல்லைபெரியாறு அணை ஒரு “வழிமாற்று அனை” (diversion dam) மட்டுமே, “தேக்கிவைக்கும் அணை” (storage dam) அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் தேவைக்கான நீர்தேக்க கொள்ளளவை தமிழகம் தனது எல்லைக்குள் மத்திய அரசின் உதவியுடன் ஏற்படுத்திக் கொள்ளா வேண்டும்.
    3) (அ)தமிழகத்தின் எல்லைக்குள் தேவையான நீர்தேக்க கொள்ளளவு எவ்வளவு என்பது பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்
    (ஆ) நீரின் போக்கை மாற்றி, தமிழகத்திற்கு கொண்டு வரும் வடிவமைப்பை மறு ஆய்வு செய்யவேண்டும்.
    (இ) மேற்கண்ட ஆய்வுகள், தற்பொழுதுள்ள அணையில் குறைந்தபட்ச அளவு தண்ணீரை தேக்கி வைப்பதன் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.
    (ஈ) இந்த குறைந்தபட்ச கொள்ளளவில் அணையை பலப்படுத்தத் தேவையான செயல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
    (உ) அணைப்பகுதியில் நீரியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றும் தேக்க அளவு கால அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.
    (ஊ) இந்த மாற்றங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
    4) அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தாலும், தமிழக, கேரள, மத்திய அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு முத்தரப்பு குழு (துங்கபத்ரா போர்டைப் போல்) நீர்தேக்க இயக்கம் குறித்த திட்டத்தை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் மாற்றியமைக்கவும் வேண்டும் என்று பரிந்துரை செய்கிறோம்.

    இது பொருளாதார மற்றும் நிதியியல் சாத்தியமான , அனைத்து தரப்புக்கும் நியாயமான உகந்த தீர்வு என்று நாங்கள் நம்புகிறோம். பிரச்சனையை தீர்ப்பதற்கு மேற்கண்ட செயல்கள் குறைந்தபட்சம் எடுக்கப்படவேண்டும்.
    இப்பிரச்சினையைக்கு இதர மாற்று தீர்வுகளும் உண்டு. உதாரணமாக, உள்ளூர் நீர் அறுவடை முறைகள், பாசன முறைகளில் திறனை அதிகரித்தல், படிப்படியாக முல்லைபெரியாறு நீரைச் சார்ந்திருப்பதைக் குறைத்து இறுதியில் அணையை நிராகரித்தல். ஆற்றுப்படுகை சூழல் திட்டத்தை நோக்கி நகர்வதே நம் இறுதி லட்சியமாக இருக்கவேண்டும்.

    அனையின் கொள்ளளவை குறைப்பது, அணையை பலப்படுத்துவது ஆகிய குறுகிய கால திட்டங்கள் மக்களின் அச்சத்தை தவிர்ப்பதற்கும், புதிய அணை திட்டத்தை கைவிடுவதும், முன்னெச்சரிக்கை அடிப்படையில் நம்பிக்கையை உருவாக்க எடுக்கப்படவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்..

    இப்படிக்கு,
    அமிதா பவிஸ்கர், பாரத் பட்நாகர், பிக்ஷம் குஜ்ஜா, சந்தன் மஹந்தா, துலால் சந்திர கோஸ்வாமி, ஏக்லவ்ய பிரசாத், ஜயந்த பந்தோபாத்யாயா, கே.ஜே. ஜாய், மேதா பாட்கர், பார்த்தா தாஸ், பிலிப் கல்லெட், பிரணாப் செளத்ரி, எம்.கே. பிரசாத், ரோஹிணி நிலேகனி, ஸ்ரீபாத் தர்மாதிகாரி, ஷ்ருதி விஸ்புடே, சுனிதா நந்தமுனி, வினோத் கௌட், ஒய்.கே. அலாக், ஏ. வைத்தியநாதன், பி.என். யுகாந்தர்.

    • \\இப்பிரச்சினையைக்கு இதர மாற்று தீர்வுகளும் உண்டு. உதாரணமாக, உள்ளூர் நீர் அறுவடை முறைகள், பாசன முறைகளில் திறனை அதிகரித்தல், படிப்படியாக முல்லைபெரியாறு நீரைச் சார்ந்திருப்பதைக் குறைத்து இறுதியில் அணையை நிராகரித்தல். ஆற்றுப்படுகை சூழல் திட்டத்தை நோக்கி நகர்வதே நம் இறுதி லட்சியமாக இருக்கவேண்டும்.//

      \\அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தாலும், தமிழக, கேரள, மத்திய அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு முத்தரப்பு குழு (துங்கபத்ரா போர்டைப் போல்) நீர்தேக்க இயக்கம் குறித்த திட்டத்தை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் மாற்றியமைக்கவும் வேண்டும் என்று பரிந்துரை செய்கிறோம்.//

      பூனைக்குட்டி வெளியே வருகிறது.என்னதான் நடுநிலை வேடம் கட்டி ஆடினாலும் நுணல் தன வாயாலேயே தன இருப்பிடத்தை சொல்லி விடுகிறது.அடாவடியாகவோ,நைச்சியமாக பேசி ஏமாற்றியோ எப்படியாவது அணையை தமிழக மக்களிடமிருந்து பிடுங்கி விடவேண்டும். [இதற்குத்தானே ஆசைப்படுகிறாய் பாலகுமாரா].அது நடக்காது.நடக்க விட மாட்டார்கள் தமிழக மக்கள்.

      \\) கேரளம் தற்பொழுது வழங்கி வரும் தண்ணீரின் அளவு எதிர் வரும் காலங்களிலும் வழங்கப்படும் என்று உறுதி செய்ய வேண்டும். இதை கேரள அரசு ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்துவிட்டது.//

      அதாவது எழுதிக் கொடுத்த ஒப்பந்தத்தையே மதிக்காத கேரள அரசு வெற்று வாக்குறுதியை நிறைவேற்றும் என தமிழக மக்கள் நம்ப வேண்டும்.

      \\120 அடி நீர்மட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும். தமிழகம் இயன்ற அளவு தண்ணீரை திருப்பி விடவும், வேறு இடங்களில் சேமித்து வைக்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.//

      பெரியார் அணையின் பயன்படா கொள்ளளவு [dead storage] என்னவென்று தெரிந்து கொண்டு இதற்கு ”சிங்கி” தட்டுவதா இல்லையா என முடிவு செய்யுங்கள்.அது 104 அடி.

      \\முல்லைபெரியாறு அணை ஒரு “வழிமாற்று அனை” (diversion dam) மட்டுமே, “தேக்கிவைக்கும் அணை” (storage dam) அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தின் தேவைக்கான நீர்தேக்க கொள்ளளவை தமிழகம் தனது எல்லைக்குள் மத்திய அரசின் உதவியுடன் ஏற்படுத்திக் கொள்ளா வேண்டும்.//

      இந்த ஈர வெங்காயம் யாருக்காக உரிக்கப்படுகிறது என்பதும் புரிகிறது.ஒப்பந்தம்,உரிமை என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கொடுப்பதை வாங்கிக்கொள்,அதை உன் பகுதியில் ஒழுங்காக தேக்கி வைக்கும் வழியை பார்.இதுதானே இதன் மறைபொருள்.

      இந்த மாயமாலங்களுக்கு மயங்கி தங்கள் உரிமையை விட்டுத்தர தமிழக மக்கள் ஏமாளிகளல்ல. ராம் காமேசுவரன்கள் இதை புரிந்து கொள்ள இன்னும் நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை.

    • // 120 அடி நீர்மட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும். //

      எப்படி முடியும் என்று EPW-ஐ கேட்டுச் சொல்லுங்கள்.

  13. அணை மீட்பு என்பது ‘தனித் தமிழ்நாடு’ உருவாவதற்கான ஒரு முன் ஏற்பாடாக இருந்தால் எதிர் காலத்தில் தமிழன் பிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்றுக்கும் உதவாத இந்தியாவை விடுத்து அமேரிக்கா,சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் கணிசமான தமிழக மக்கள் ஐ.நாவை அணுகினால் ‘தனித் தமிழ்நாடு’ அடைவது உறுதி. உலகளாவிய நீர் சட்டங்கள் தமிழனுக்கு சாதகமாக இருந்த போதும், அதை உதாசீனம் செய்து வரும் கேரளா,கர்னாடக,ஆந்திர மாநிலங்களுக்கு பதிலடி கொடுக்க ‘தனி தமிழ்நாடே’ ஒரே தீர்வு…!!!

  14. theriyamaa kekaren……….kudan kulam nuclear plant, ippo mullai periyar dam issuenu thamizh nattai serndha graamathu manushaa elaam thadikki vizhundha kamba yeduthundu poradaraalaame? avaalukku yelaam office kadayaadho? delivery timeline kadayaadhaa? jollyaa 365 naalum kadaya elaam saathi vachundu irundhaa vyaabaaram epdi nadakum? elaam kaili dressaa kattindu, bikaa yeduthundu thadi thadiyaa vandhurardhugale? vera worke kadayaadhaa?

    naan oru naal leave kekaa, avlo vendaam one day trainingla irukka evlo plan panna vendirkku? ivaal ennadaanaa eppa paarthalum kadai adaippu, maanankattinu alayaraale? andha timeaa usefulaa oru dhyaanam, yogam or agriculture technologynu selavu panna pdaadhaa?

    perumaalukku dhaan velicham

    sonnaa maatum kovam varum………….ipdi Ayyappa bhakthaalukku thadai yerpaduthi enna saadhika poradhugal? kandhu alayaraa……………..poradraalaam….

  15. தின(ம)சனியின் நேற்றைய தலையங்கத்தை பாருங்கள் . இம்மக்கள் கூட்டத்தின் பின்னணியில் எதோ சதிகாரர்கள் இருப்பது போல பற்றவைக்கும் பாங்கை பாருங்கள். அதற்கு எதிரான நமது பின்னூட்டங்களை இவர்கள் என்றுமே வெளியிடுவதில்லை.

  16. மூணாறில் தமிழர்கள் முல்லைப்பெரியார் அணை காக்கவும், புதிய அணையை எதிர்த்தும்,
    இடுக்கி மாவட்டத்தில் பெரும்பான்மையான தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான
    தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் இணைத்தலையும் வலியுறுத்தி பெருந்திரளாக ஊர்வலம்.

    ( http://tamil.oneindia.in/news/2011/12/14/tamilnadu-tamils-hold-rally-against-kerala-munnar-aid0091.html )

  17. “தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்”- விஜயகாந்த்

    கேரள அரசியல்வாதிகள் தங்களுக்குள் கட்டிபிடிவைத்தியமும்,

    நம் அரசியல் வாதிகள் தங்களுக்குள் குடிமி பிடி சண்டைபோட்டு கொண்டிருக்கிறார்களே ?

    தேவுடா! இவர்களிடமிருந்து எங்களை காப்பாத்து!

  18. சில தமிழர்கள் வெளியில் தமிழ் தாய்மொழியாகவும், அவருடைய வீட்டில்
    அண்டைமாநில மொழி உள்ள அக் மார்க் தமிழர்களாக இருப்பது,
    அவர்கள் தரப்பிலும்,தமிழ் கலா ரசிகர்கள், தரப்பிலும் சரியென்றே அவர்களுக்கு படுகிறது.

    தமிழர்கள் தன்னைத்தானே ஏமாற்றி கொள்ளாமலிருக்க கடைபிடிக்கவேண்டிய :

    1)நாம் முதலில் தமிழன், பிறகு இந்தியன் என்று நினைத்தல் வேண்டும்.

    2) திராவிடம்/ திராவிடர் என்று சொல்வதை நீக்கி விட்டு எல்லோரும் தமிழர்கள் என்று நினைக்க வேண்டும்.

    3)ஆதிக்கம்/நாத்திகம் அவரவர் மனதளவில் இருக்க வேண்டும், அது நமது தமிழ் ஒற்றுமையைக் கெடுத்து விடக்கூடாது.

    4)வரிசெலுத்தும் நாம்,வரிச்சலுகை பெற்று நடத்தும் எல்லா நிறுவனங்களில்- தமிழ் மக்களின் பங்கு எவ்வளவு என்று தெரிந்து, அந்நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும்.

    5) தமிழ் வளர்க்க பயன்படாத மீடியாக்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.

    6)காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதன் பொருளுணர்ந்து நடக்க வேண்டும்.

    மேல் குறிப்பிட்ட இவைகளை கடைபிடிக்க முடியாவிட்டால், நாம் இம்மண்ணில் ROYAL கொத்தடிமைகளாக வாழும் நாள் வெகு தொலைவில் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க